நான் சேற்றில் மலர்ந்த வெண்தாமரைப்பூ.
வெட்கி நாணிக் கோணி சிவந்து தலை குனியும் என் தோழிகளுக்கு நடுவிலே பளபளப்பாக வெண்ணிறத்தில் தோன்றும் நான், ஒரு கரும்புள்ளி.
நான் மட்டும் ஏன் இப்படிப் பிறந்தேன்? சிலர் சொல்கிறார்கள், சூரியனுக்கு என் மீது வெறுப்பு என்று. என் பக்கம் அவன் பார்க்கவே மட்டேன் என்கிறானாம். அதான் எனக்கு இந்த நிறக்குறையாம். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எனக்குத் தான் அவன் மீது வெறுப்பு. அவன் என்ன தான் என்னைப் பார்த்து பல்லைக் காட்டி இளித்தாலும், நான் மசிய மாட்டேன். என் வெண்மையும் பெண்மையும் யாருக்கும் விட்டுத்தர மாட்டேன். அவனை வேண்டும் என்றால் என் தோழிகளிடம் சென்று பேச்சு கொடுக்கச்சொல்லுங்கள். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறாள் சூரியகாந்தி. காத்திருக்கும் கன்னி.
“இதுவா பேசும் முறை?” தாய் என்னை அதட்டுகிறாள். அவளுக்கு அடிக்கத்தெரியாது. இதமாகத் தடவி கொடுக்கிறாள். என் மீது அவள் ஸ்பரிசம் அலை அலையாக தழுவிச்சென்றது. “உனக்குத் தலை கனம்!” அந்தக் குரல் என் சிந்தனையை சிதறடித்தது. சிரித்தேன். “ஒரு நாள் இல்லை ஒரு நாள் என்னை விட்டுப் போக வேண்டியவள் தானே நீ.” அம்மாவின் பாசம், மறுபடியும். அலை அலையாய்.
நான் போய்த்தான் ஆக வேண்டுமா? அப்படியே இருக்கட்டும். என்னை இங்கேயே
வாட விட்டு விடாதீர்கள். ஆனால் ஒரு விண்ணப்பம்.
போகும் போது என்னை ஒரு குடம் நீரில் ஏந்தி எடுத்துச்செல்லுங்கள். அம்மாவைப் பிரிய அவ்வளவு எளிதாக மனம் வரவில்லை.
உங்கள் வீதிகளில் என்னை விலை பேசி விற்று விடாதீர்கள், கல்யாண சந்தைகளில் உங்கள் பெண்களை பேசுவதுபோல். என் நிறத்துக்கும் நறுமணத்திற்கும் மதிப்பு இல்லை; அது என்னுடன் வரும் இலவச இணைப்பு. எனக்கு விலை கிடையாது.
உங்கள் தெய்வங்களுக்கு என்னைக் காணிக்கை ஆக்காதீர்கள். நான் அழுதுவிடுவேன். கல்லுடன் எனக்குப் பேசவும் சிரிக்கவும் தெரியாது, அது தெய்வக்கலே ஆனாலும். சாம்பிராணி புகை எனக்கு ஒத்துக்கொள்ளாது; நான் சீக்கிரம் வாடிவிடுவேன். ’பிரசாதம்’, என்று பெண்கள் என் இதழ்களைச் சுருட்டிக்கொண்டு தலையில் சொருகிக்கொள்வார்கள். ஈருக்கும் பேனுக்குமா நான் முத்தம் கொடுப்பது? கோவில் வேண்டாம்; எனக்கு அப்படி ஒரு சமாதியும் வேண்டாம்.
கலைமகளுக்கு உட்கார்ந்து வீணை வாசிக்க வேறு இடமா கிடைக்கவில்லை? மடி வலிக்கிறது. கலைமகளை மடியில் சுமத்தி, என்னை அவளுக்கே தாய் ஆக்காதீர்கள். நான் சிறுமி.
உங்கள் பெண்கள் கூந்தலுக்கு நான் அலங்கார பொருளாக இருக்க முடியாது. அங்கு நான் இருந்தாலும், நீங்கள் “உன் கூந்தல் அழகு” என்று அவளைத்தான் புகழ்வீர்கள். ஒரு பெண்ணின் முன்னால், இன்னொரு பெண்ணின் அழகை பாடிப் புகழ்வது அநாகரீகம்; உங்களை அந்த அநாகரீகத்துக்கு உட்படுத்த நான் விரும்பவில்லை.
பின் என்னைப் போன்ற அடங்காப் பெண்ணை என்ன செய்வது என்று கேட்கிறீர்களா? என்னை உங்கள் ஊர்க் கவிஞன் ஒருவனிடம் அறிமுகப்படுத்துங்கள். அவன் கண்ணுக்குள்ளே ஒரு நொடியாவது நான் இருக்க வேண்டும். அவன் கவிதைகள் என்னைப் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும், கண்டுகொள்ளாமல் இருக்காது.
அது போதும், என் முக்தி.
(14-08-2008)
You must be logged in to post a comment.