மானிடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்பு கட்டாவிடினும் அன்றி நீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர் தருமேல் மண் மீது மரங்கள்
வகை வகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்குமன்றே
யானெதற்கும் அஞ்சுகிலேன் மானிடரே நீவிர்
என் மதத்தைக் கைக்கொண்மின், பாடுபடல் வேண்டா
ஊனுடலை வருத்தாதீர் உணவு இயற்கை கொடுக்கும்
உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்!