(ஆங்கில மூலம்: ஐசக் டினேசன் – The Blank Page)
புராதன ஊர்வாயில் ஒன்றின் வெளியே, காபி நிறத்தோலும் கருப்பு முக்காடுமாக அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி, போகிற வருகிறவர்களுக்குக் கதை சொல்லி தன் பிழைப்பை நடத்திக்கொண்டிருந்தாள்.
அவள் சொன்னாள்:
“கனிவான அம்மையே, அய்யனே, ஒரு கதை கேட்கிறீர்களா? என் வாழ்நாள் முழுவதும் நான் நிறைய கதைகள் சொல்லியிருக்கிறேன், ஆயிரத்தியொரு கதைகள் சொல்லியிருக்கிறேன். என்னை நோக்கி, எனக்கே எனக்காக, ஒரு சிவப்பு ரோஜாவின் கதையையும் இரண்டு மிருதுவான அல்லி மொட்டுகளின் கதைகளையும் பட்டிழையென பின்னிப்பிணைந்த நான்கு கொடிய விஷசர்ப்பங்களின் கதைகளையும் சொல்ல இளைஞர்களை நான் அனுமதிக்கத் தொடங்கிய காலம் தொட்டு நான் கதை சொல்லி வருகிறேன். என்னுடைய அம்மையின் அம்மை – கருவிழிகள் கொண்ட நடனமங்கை, அக்காலத்தில் அடிக்கடி முயங்கப்பெற்றவள் – அவள்தான் தன் இறுதி நாட்களில் – அப்போது அவள் பனிக்காலத்து ஆப்பிள் பழத்தை போலச் சுருங்கி முக்காட்டின் கருணைக்கடியில் தஞ்சம் புகுந்து விட்டிருந்தாள் – அவள்தான் எனக்குக் கதையாடலின் கலையைக் கற்பிக்க முற்பட்டாள். அவளுடைய அம்மையின் அம்மை அவளுக்கு அதைக் கற்பித்திருந்தாள்; அவர்கள் இருவரும் என்னை விடப் பெரிய கதைசொல்லிகள். ஆனால் இப்போது அதெல்லாம் பழைய கதை ஆகிவிட்டது – மக்களைப் பொறுத்தவரை நானும் அவர்களும் ஒன்றாகிவிட்டோம். என் கொடுப்பினையே அதுதான் – இருநூறு வருடங்களாகக் கதை சொல்லி வருபவள் நான்.”
இத்தருணத்தில், அவளுக்குச் சேரவேண்டிய சன்மானம் வழங்கப்பட்டு, அவள் உற்சாகமான மனநிலையில் இருந்தாளென்றால், கதையைத் தொடர்வாள்.
“என்னுடைய பாட்டியின் பயிற்சி முறை ரொம்பவும் கடுமையானது,” என்றாள். “‘கதைக்கு விசுவாசமாக இரு,’ என்று அந்தக் கிழவி என்னை எப்போதுமே அதட்டிக்கொண்டே இருப்பாள். ‘என்ன இடர் வந்தாலும், ஒரு நொடிகூடத் தவறாமல் உன் கதைக்கு மாறாப்பற்றுடன் இரு.’ ‘நான் ஏன் அப்படி இருக்கவேண்டும் பாட்டி?’ என்று நான் அவளைக் கேட்பேன். ‘காரணங்களா கேட்கிறாய், பொதிமூட்டையே?’ அவள் கூவுவாள். ‘இதில் உனக்கு கதை சொல்ல வேறு ஆசையா? அது சரி, நீ எப்படியும் கதைசொல்லியாகத்தான் வரப்போகிறாய், அதனால் தொலைகிறது – கேள்! – இவைதான் என் காரணங்கள். கதைசொல்லி கதைக்கு மாறாப்பற்றுடன் – எப்போதும், எந்நிலையிலும், நித்தியமான மாறாபற்றுடன் இருப்பாரென்றால், அங்கு, கதை முடிவில், மௌனத்தின் குரல் பேசும். கதைக்கு துரோகம் இழைக்கப்பட்டிருந்ததென்றால், அங்குக் குடிகொள்ளும் மௌனம் வெறுமையின் மௌனம் மட்டுமே. ஆனால் நாம், மாறாபற்றுடையவர்களான நாம், நம்முடைய இறுதி சொல்லை உரைத்த பின் மோனத்தின் குரலை அங்கு கேட்போம். மூக்கொழுகும் சிறுமிகளுக்கு இதெல்லாம் புரிகிறதோ இல்லையோ, அதுதான் உண்மை.’”
“அப்போது நம் யாரையும் விட மகத்தான கதையைச் சொல்வது யார்?’ என்று மூதாட்டி தொடர்ந்தாள். “மௌனமே அக்கதையைச் சொல்கிறது. உலகத்திலேயே மகத்தான புத்தகத்தில் மிகச்சிறப்பாக அச்சிடப்பட்ட பக்கத்தில் இருக்கும் கதையை விட ஆழமான கதையை எங்கு வாசிக்க முடியும் தெரியுமா? வெற்று பக்கத்தில் மட்டுமே. ஒரு கம்பீரமான, துணிச்சலான பேனாவால், தன் படைப்பூக்கத்தின் உச்சத்தின் உச்சியில் நின்றுகொண்டு, அண்டம் முழுவதும் தேடினாலும் கிடைப்பதற்கரிய மையுடன் எழுதப்படும் கதையைவிட, ஆழமான, இனிமையான, வேடிக்கையான, குரூரமான, கதையை எங்கு வாசிக்க முடியும் தெரியுமா? வெற்று பக்கத்தில்.”
கிழவி சிறிது நேரம் ஏதும் சொல்லாமல், அவ்வப்போது இளித்தபடியும், பற்களற்ற வாயை மென்றபடியும் இருக்கிறாள்.
“நாங்கள்,” என்று இறுதியில் முடிக்கிறாள், “கதைசொல்லும் கிழவிகளான நாங்கள், எங்களுக்கு தெரியும், வெற்று பக்கத்தின் கதை என்னவென்று. ஆனால் இக்கதையை சொல்ல நாங்கள் கொஞ்சம் தயங்குவதுண்டு. இக்கலைக்குள்ளே வராதவர்களுக்கு இக்கதையைச் சொன்னால் எங்கள் மதிப்பீடு குறையக்கூடும். இருந்தாலும், தாராள மனமுடைய இனிய, அழகான அய்யனே, அம்மையே, உங்களுக்கு, விதிவிலக்காக உங்களுக்கு மட்டும், இந்தக் கதையைச் சொல்கிறேன்.
“போர்த்துகல் நாட்டின் நீல மலைகளின் உச்சியில் கார்மலைட் பிரிவைச் சேர்ந்த கன்னியாஸ்திரீகள் வசிக்கும் ஒரு பழைய கன்னிமடம் உள்ளது. எளிமையான வாழ்க்கையும் கடும் முறைமைகளும் கடைபிடிக்கும் பழம்பெருமைக்குரிய பிரிவு அது. பழங்காலத்தில் செல்வமும் செழிப்புமாக இருந்தது அம்மடம். அங்கு இருந்த கன்னியாஸ்திரீகள் அனைவரும் உயர்குடி மகளிர்; அங்கு பல அற்புதங்கள் நிகழ்ந்தன. ஆனால் நூற்றாண்டுகள் கடந்து செல்ல, உயர்குடி பெண்களுக்கு நோன்பு நோற்பதிலும் பிரார்த்தனை செய்வதிலும் ஆர்வம் குறைந்தது. அதுவரை மடத்தின் கருவூலத்திற்குள் வழிந்துகொண்டிருந்த ஸ்த்ரீதனங்கள் வற்றத்தொடங்கின. இடிந்து சரிந்து கொண்டிருக்கும் அம்மாபெரும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் ஏழ்மையும் எளிமையுமாகச் சில கன்னியாசகோதரிகள் இன்றும் வசித்து வருகிறார்கள். அந்தக் கட்டிடமே அது கட்டப்பட்டுள்ள சாம்பல் நிற பாறைகளோடு ஒன்றாகிவிடவேண்டும் என்ற பேராவல் கொண்டுள்ளது போல நொருங்கிகொண்டிருக்கிறது. இதையெல்லாம் மீறி, அவர்கள் பூரிப்பும் செயலூக்கமும் கொண்ட கன்னியாசகோதரிகளாக வாழ்கின்றனர். புனித ஜெபம் செய்வதில் அவர்களுக்கு பேரின்பம். அதைத்தவிர, மகிழ்ச்சியுடன் அவர்கள் தங்களை மூழ்கடித்துக்கொள்ளும் மற்றொரு செயல், பழம்பெரும்காலத்தில் அந்த மடத்துக்குத் தனித்துவமான, விசித்திரமான ஒரு சிறப்புரிமையை அளித்த செயல். அவர்கள் போர்த்துக்கல் நாட்டிலேயே ஆகச்சிறந்த சணலை விளைவித்துச் சாகுபடி செய்து, அதைக் கொண்டு அந்நாட்டின் மிக மிருதுவான லினன் துணியை உற்பத்தி செய்கிறார்கள்.
“மென்விழி ஒளிரும் பால்நிறக் காளைகள் மடத்தின் அடிவாரத்தில் உள்ள நீள்நிலத்தை உழுகின்றன. உழைப்பினால் காய்ந்து நகத்தடியில் மண்புகுந்த கன்னி விரல்கள், விதைகளைத் திறம்பட விதைக்கின்றன. சணல் பூக்கள் பூக்கும் பருவத்தில், அந்தப் பள்ளத்தாக்கே வான்-நீலமாக மாறுகிறது. பெருந்தேவதை கேப்ரியல் தன் வலுமிக்கச் சிறகுகளை அசைத்தபடி புனித ஆனின் முற்றத்தில் இறங்கினாரே, அப்போது அங்கு முட்டை எடுக்க வந்த அன்னை மேரி அணிந்துகொண்டிருந்த மேலங்கியின் நிறம் அது. அப்போது வானுச்சியில் ஒரு புறா, கழுத்திறகுகள் சிலிர்க்க, சிறகுகள் அதிர, சிறிய, தெளிவான, வெள்ளி நட்சத்திரத்தைப் போல் நின்றது. சணல்பூ பூக்கும் இம்மாதத்தில் மடத்தின் அடிவாரத்தைச் சுற்றி விரியும் கிராமங்களின் மக்கள் அனைவரும் தங்கள் கண்களைச் சணல் விளையும் நிலத்துக்கு தூக்கி, “இந்த மடம்தான் தேவலோகத்துக்குத் தூக்கிச் செல்லப்பட்டுவிட்டதா? அல்லது நம்முடைய அன்புச் சகோதரிகள்தான் தேவலோகத்தையே இங்கு இழுத்துக் கொண்டுவந்துவிட்டார்களா?” என்று கன்னத்தில் கைவைத்து வினவுவார்கள்.
“உரிய காலத்தில் சணல் இழுத்து, அடித்து, திரிக்கப்படுகிறது. அதன் பின் மெல்லிய நூலாக நூற்கப்பட்டு, லினன் நெய்யப்பட்டு, துணிகள் வெளுக்க புல்வெளிகளில் பரப்பப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் அவற்றின் மேல் நீர்ப்பாய்ச்சி விடும்போது மடத்தைச் சுற்றி பனி பொழிந்து விட்டதாகவே நம்பத் தோன்றும். அம்மடத்தின் பிரத்தியேக மந்தணப் பாடல்களும் துதிகளும் நித்தம் ஒலிக்க, இச்செயல்கள் அனைத்தும் துல்லியத்துடனும் நுட்பத்துடனும் பக்தியுடனும் நிறைவேற்றப்படுகின்றன. இக்காரணத்தால் அங்கு உற்பத்தியாகும் லினன், சிறிய பழுப்பு நிற கழுதைகளின் முதுகுகளில் கத்தை கத்தையாக அடுக்கப்பட்டு, மடத்தின் வாயிலின் வெளியே, கீழே, மேலும் கீழே என்று ஊரூராகச் செல்லும்போது, அவை என்றென்றும் தும்பைப்பூ நிறமாக, மிருதுவாக, எழில் நயத்துடன், பதினான்கு வயதில் என் கிராமத்தில் ஒரு நடனநிகழ்வுக்குச் செல்வதற்கு முன்னால் என் சிறு கால்களைச் சிற்றோடையில் கழுவியபோது என் பாதம் வெளிர்ந்ததே, அப்படியே காலமெல்லாம் வெளிர்ந்திருக்கும் என்பது ஐதீகம்.
“அய்யனே, அம்மையே, செயலூக்கம் நல்ல விஷயம் தான், மதமும் நல்ல விஷயம் தான், ஆனால் ஒரு கதையின் முதல் கருவென்பது கதைக்கு வெளியே குடிகொண்டிருக்கும் ஏதோ ஒரு மாயமான இடத்திலிருந்து தான் வருகிறது. அதேபோல, வெல்ஹோ மடத்தின் லினன் இப்பேற்பட்ட புனிதத்தன்மையை அடைவது, அதனுடைய முதல் விதை புனித நிலத்திலிருந்து ஒரு சிலுவைப்போராளியால் கொண்டுவரப்பட்டது என்பதால்தான்.
“படிப்பறிவு உள்ளவர்கள் பைபிளில் லோச்சா மற்றும் மரீசா என்ற சணல் வளரும் நிலங்களைப் பற்றிப் படிக்கலாம். எனக்குப் படிக்கத்தெரியாது. இவ்வளவு பேசப்படும் இந்நூலை நான் கண்ணால்கூட பார்த்ததில்லை. ஆனால் என் பாட்டியின் பாட்டி சிறுமியாக இருந்தபோது வயதான ராப்பி ஒருவருக்குச் செல்லமாக இருந்தாள். அவரிடமிருந்து அவர்கள் கற்ற கல்வி எங்கள் குலத்தில் வழிவழியாக வந்துள்ளது. காலேபின் மகள் அஃஸா தன்னுடைய கழுதையை விட்டிறங்கி தந்தையை நோக்கி, ‘எனக்கொரு வரம் தாருங்கள்! நீங்கள் எனக்கு நிலத்தைப் பரிசளித்தீர்கள், எனக்கு நீரையும் பரிசாக அளியுங்கள்’ என்று கூவிக் கேட்டதாக நீங்கள் பழைய ஏற்பாட்டில் யோசுவாவின் நூலில் படிப்பீர்கள். அவளுக்கு அவர் மேல் உலகத்து நீரையும் கீழ் உலகத்து நீரையும் வழங்கினார். அவர்களின் சந்ததியினர்தான் லோச்சா மற்றும் மரீசா நிலங்களில் வாழ்ந்து வந்தனர்; அவர்கள் அங்கு உலகத்திலேயே மிகச்சிறந்த லினனை உற்பத்தி செய்தனர். தோமர் நகரைச் சேர்ந்த பெரிய லினன் நெசவாளர் குடும்பத்தில் தோன்றிய நம்முடைய போர்த்துகிய சிலுவைப் போராளி ஒருவன், அந்த நிலத்தின் வழியே குதிரையேறி சென்றபோது அங்கு வளர்ந்த சணலைக் கண்டு ஈர்க்கப்பட்டு, ஒரு விதை மூட்டையைத் தன் சேணத்தில் கட்டிக்கொண்டு திரும்பினான்.
“இந்தச் சம்பவத்தின் பலனாகத் தோன்றியதுதான், இம்மடத்திற்கே பெரிதும் பெருமை சேர்க்கும் முதற் சடங்கு – அதாவது, அரச குடும்பத்தின் இளவரசிகளுக்கு, அவர்களின் மண இரவுக்கான படுக்கை விரிப்புகள் இங்கிருந்துதான் செல்லும்.
“அம்மையே, அய்யனே, நான் கூற விரும்புவது என்னவென்றால், போர்த்துக்கல் நாட்டின் பழங்குடும்பங்களில் ஒரு மகத்தான சடங்கு காக்கப்படுகிறது. அந்தக் குடும்பத்தில் பிறந்த மகள் ஒருத்தியின் மணம் நடந்த மறுநாள் காலை, விடியலுக்கு முன், அந்த அரண்மனையின் முக்கிய காரியஸ்தர் அந்த இரவின் விரிப்பை உப்பரிகையிலிருந்து தொங்கவிட்டு , ‘இப்பெண்ணை கன்னியென்று அறிவிக்கிறோம்,’ என்று கம்பீரமாக லத்தின் மொழியில் அறிவிப்பார். அந்த படுக்கைவிரிப்பு அதன் பிறகு கழுவப்படுவதும் இல்லை, பிறகு உபயோகிக்கப்படுவதும் இல்லை.
“காலத்தில் பதிந்து விட்டிருந்த இச்சடங்கு அரச குடும்பத்தில் மிகக் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட்டது. இன்று வாழ்பவர்களின் நினைவில் நிலைக்கும் விதத்தில், மிகச்சமீபத்திய நாட்கள் வரைக்கூட அதுவே வழக்கமாக இருந்தது.
“பலநூறு ஆண்டுகளாக, அவர்கள் அளித்த அசாத்திய தரமுடைய லினனுக்குப் பாராட்டாக, மலையில் நின்ற கன்னிமடத்துக்கு இரண்டாவது பெருமையும் இருந்தது. அந்த இரவில் அரசமகள் மகிமைக்குச் சான்றாகிய பனிவெண்மையான படுக்கை விரிப்பின் நடுப்பகுதி மட்டும், அவர்களுக்கே திரும்ப அனுப்பி வைக்கப்பட்டது.
“கன்னிமடத்தின் பிரதானமான, உயரமான பகுதி மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் நோக்கியவாறு கட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில், கருப்பு-வெள்ளை பளிங்கு தரையுடைய நீண்ட தாழ்வாரம் ஒன்றுள்ளது. அந்தத் தாழ்வாரத்தின் சுவர்களில், ஒன்றை ஒட்டி ஒன்றாக, கனமான தங்க முலாம் பூசப்பட்ட சட்டகங்கள் வரிசையாக மாட்டப்பட்டுள்ளன. ஒவ்வொன்றின் அடியிலும் நல்ல பொன்னில் ஒரு தகடு பதிக்கப்பட்டு, அதில் ஒரு கிரீடமும், அதற்கடியில் ஒரு இளவரசியின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது: டோனா கிறிஸ்டினா, டோனா இனீஸ், டோனா ஜெசிந்தா லெனோரா, டோனா மரியா. ஒவ்வொரு சட்டகமும் அரச படுக்கை விரிப்பிலிருந்து வெட்டப்பட்ட ஒரு சதுரத்தை தாங்கி நிற்கிறது.
“கொஞ்சம் கற்பனையும் உள்ளுணர்வும் உள்ளவர்கள் கித்தான்களில் தெரியும் மங்கிய குறிகளில் அத்தனை ராசிகளையும் கண்டு விட முடியும் – துலாம், விருச்சிகம், சிம்மம், மிதுனம். அல்லது அவர்கள் தங்கள் சொந்த கற்பனையுலகத்திலிருந்து சித்திரங்களைக் கண்டுகொள்ள முடியும் – ஒரு ரோஜா மலர், ஒரு இதயம், ஒரு வாள் – அல்லது வாளால் துளைக்கப்பட்ட இதயம்.
“பழங்காலத்தில், ஆடம்பரமான வண்ணங்கள் மிளிரும் நீள் ஊர்வலங்கள் கல்-நிற மலை முகடுகள் மீது மெல்ல மெல்ல ஏறி, கன்னிமாடத்தை அடையும். போர்த்துக்கல் நாட்டின் பழைய இளவரசிகள் – இப்போது அவர்கள் மற்ற நாடுகளின் அரசிகள், ராஜமாதாக்கள், அரசபதவியினரின் மனைவிகள் – தங்களுடைய மகத்தான குழுக்கள் பின்தொடர யாத்திரையாக இங்கு வந்தனர். அவர்களுடைய யாத்திரைகள் இயல்பாகவே புனிதமானவை, அதே நேரத்தில் ரகசிய பூரிப்புடையவையும்கூட. சணல் வளரும் நிலங்களிலிருந்து பாதை செங்குத்தாக மேலேறும். வண்டியிலிருந்து இறங்கி இறுதி தூரத்தை அதற்கெனப் பிரத்யேகமாகக் கன்னிமடத்தில் வைக்கப்பட்டிருந்த பல்லக்கில்தான் அவ்வரசகுலப்பெண் கடந்தாக வேண்டும்.
“பல வருடங்கள் கழிந்து, நம்முடைய காலத்தில் நடந்தது இது. காகிதம் ஒன்று எரியும்போது மற்ற பொறிகள் பக்கத்தின் விளிம்பில் ஓடிச்சென்று அணைந்த பிறகு, சிறிய, தெளிவான ஒரு பொறி மட்டும் இறுதியாகத் தோன்றி அவர்களுக்குப் பின்னால் ஓடும். அது போல, ஒரு மூதாட்டி – அவள் உயர்குடி குடும்பம் ஒன்றைச் சேர்ந்த முதுகன்னி – அவள் வெல்ஹோ கன்னிமாடத்துக்கு யாத்திரை மேற்கொள்கிறாள். பற்பல வருடங்களுக்கு முன்னால், அவள் போர்த்துக்கல் நாட்டின் இளவரசி ஒருத்திக்கு விளையாட்டுத் தோழியாகவும் சினேகிதியாகவும் பணிப்பெண்ணாகவும் இருந்திருந்தாள். அவள் கன்னி மடம் நோக்கி மேலே ஏற ஏற தன்னைச்சுற்றி நிலப்பரப்பு விரிந்து விரிந்து செல்வதைக் கண்டாள். மடத்தின் உள்ளே ஒரு கன்னியாசகோதரி அவளைத் தாழ்வாரத்துக்குக் கூட்டிச்சென்று, அவள் பணி செய்த இளவரசியின் பெயர் தாங்கிய சட்டகத்துக்கு முன்னால் அவளை நிறுத்தி, அவள் தனியே இருக்க விருப்பப்படுவாள் என்று தெரிந்து விடைபெற்றுக் கொள்கிறாள்.
“மெதுவாக, மிக மெதுவாக, நினைவுகள், அந்தச் சிறிய, முதிய, கருப்பு லேஸ் முக்காடு மூடிய, ஓடு போன்ற மண்டை வழியே ஊர்வலமாகச் செல்கின்றன. அவற்றை நட்புடனும் பரிவுடனும் கண்டுகொண்டு அந்த தலை மெல்ல அசைகிறது. இளவரசிக்கு விசுவாசமான தோழியாகவும், ரகசியங்களை நம்பிக்கையுடன் பாதுகாத்த சினேகிதியாகவும் இருந்தவள். அந்த இளைய மணப்பெண்ணின் உயர்ந்த மணவாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறாள். மகிழ்ச்சியான நிகழ்வுகள், ஏமாற்றங்கள், முடிசூட்டு விழாக்கள், கொண்டாட்டங்கள், சதிகள், போர்கள், அரசணையில் அடுத்து அமரப்போகிறவர்களின் பிறப்புகள், இளைய தலைமுறையினரின் திருமண ஒப்பந்தங்கள், வம்சங்களின் வளர்ச்சிகள், வீழ்ச்சிகள். அந்தக் கிழவி நினைத்துப் பார்ப்பாள், எப்படி அந்நாளில் அந்த விரிப்பில் தெரிந்த குறிகளைக்கொண்டு கணிப்புகள் குறிக்கப்பட்டன என்று. இப்போது அவளால் கணிப்பையும் நடந்ததையும், அவ்வப்போது புன்னகைத்தபடி, அவ்வப்போது நீள்மூச்சு விட்டபடி, ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. அந்த அறையில் ஒவ்வொரு விரிப்பும் அதன் கிரீடம் பொருந்திய தகடும் ஒரு கதையைச் சொல்கிறது, ஒவ்வொன்றும் கதைக்கு மாறாப்பற்றுடன் நிறுவப்பட்டுள்ளது.
“ஆனால் அந்த நீள்வரிசைக்கு நடுவே ஒரே ஒரு விரிப்பு மட்டும் வித்தியாசமானது. அதன் சட்டகத்தில் எந்த வேறுபாடும் இல்லை – மற்றதை போலவே சிறப்பானது, கனமானது. மற்ற எல்லா விரிப்புகளைப் போல அதுவும் கிரீடம் பொறிக்கப்பட்ட தங்கத்தகட்டை தாங்குகிறது. ஆனால் இந்தத் தகட்டில் பெயர் பொறிக்கப்படவில்லை. அந்தச் சட்டகத்தில் உள்ள லினன் விரிப்பு மூலைக்கு மூலை பனிவெண்மையாக, வெற்று காகிதமாக உள்ளது.
“கதை கேட்க வேண்டும் என்று ஆவலுடன் நிற்கும் நல்லுள்ளங்களே, உங்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்: இந்தப் பக்கத்தைப் பாருங்கள். என்னுடைய பாட்டி முதலிய கதைசொல்லி கிழவிகள் அனைவரின் ஞானத்தை உணருங்கள்!
“என்ன ஒரு நித்தியமான, நிலையுணராத மாறாப்பற்று இருந்தால் மட்டுமே இந்த விரிப்பு இந்த வரிசையில் பொருத்தப்பட்டிருக்கும்! கதைசொல்லிகளே இங்கு இதற்கு முன்னால் நிற்கும்போது முக்காடை முகத்துக்கு மேல் போர்த்திக்கொண்டு சொல்லிழக்கின்றனர். ஏனென்றால் எந்த அரச குடும்பத்து அம்மாவும் அப்பாவும் இந்த விரிப்பு இங்கே மாட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்களோ, அவர்களுக்கு விசுவாசத்தின் மரபு குருதியோடு பிணையவில்லை என்றால், அவர்கள் இதை இங்கே மாட்டாமலேயே இருந்திருப்பார்கள்.
“அதிதூய வெண்மை ஒளிரும் இக்கித்தானின் முன்புதான் போர்த்துகல் நாட்டின் பழைய இளவரசிகள் – உலகம் அறிந்த, கடமை உணர்ந்த, துன்பத்தில் சுழன்ற அரசிகள், மனைவிகள், அன்னைகள் – மற்றும் அவர்களுடைய சிறுவயது சினேகிதிகள், மணப்பெண் தோழிகள், மூத்த பணிப்பெண்கள் – அனைவரும் அதிக நேரம் அமைதியாக நிற்பார்கள்.
“இந்த வெற்று பக்கத்துக்கு முன்னால் நிற்கும்போது, முதிய, இளைய கன்னியாஸ்திரீகள், மடத்தின் பேரன்னையும்கூட, சிந்தனையின் ஆழத்தில் மூழ்குகிறார்கள்.”
(நன்றி: பதாகை)