சிறுகதை – ஒளி

அழகுக்கடைக்கு முன்னால் ஒரு ஆண்பிள்ளை இவ்வளவு நேரமா நிற்பது? ஃபிலோமினா பொறுமையிழந்தாள். கூட்டத்திலிருந்து நகர்ந்து பத்ரகாளிக்கு அடியில் போய் கைகட்டிக்கொண்டு நின்றாள். அவள் தலைக்கு மேல் தூணின் பொந்தில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த அகல்விளக்கின் தீ காற்றில் படபடத்தது. எதிரே ஊர்த்வதாண்டவர் ஒரு காலை தூக்கி மறந்துவிட்டவர்போல் கனவில் ஆழ்ந்திருந்தார்.

ஆரன் உடைந்த தமிழில் உற்சாகமாக பேரம்பேசிக்கொண்டிருந்தான். ஃபிலோமினா அங்கு இல்லை என்று உணர்ந்ததும் சுற்றும் முற்றும் பார்த்து அவளை கண்களால் அடைந்து, “உனக்கு எதுவுமே வேண்டாமா? நிச்சயமா?” என்று கேட்பது போல் ஒரு புருவத்தை உயர்த்தினான். ஒன்றும் தேவையில்லை, சீக்கிரம் வா என்று அவள் நெற்றி சுருக்கி தலையசைத்தாள். இன்னும் விரைப்பாக கைகளை கட்டிக்கொண்டு தலையை திருப்பிக்கொண்டாள்.

பாய்ந்துகொண்டிருந்த குதிரைவீரர்களைத்தாண்டி மண்டபத்தின் உள்ளே வரிக்கோடுகளாக வெளிச்சம் கற்தரையில் விழுந்தது. வேறு வெளிச்சம் இல்லை. கல்லும் நிழலும்தான். பித்தளைப் பாத்திரங்களும் ஜவுளிகளும் செறிந்த கடைகளைச் சுற்றி எல்லோருமே பெண்கள். எல்லோரும் ஆரனை கொஞ்சம் வேடிக்கையாய் பார்ப்பதுபோலத்தான் இருந்தது. கடைக்காரரே, அவன் ‘அண்ணா இது என்ன’ என்று ஒரு புசுபுசு குஞ்சலத்தை பந்துகள் ஆட கையில் எடுத்து கேட்டபோது சிரிக்கத்தொடங்கிவிட்டார்.

தன்னைநோக்கித்தான் சிரிக்கிறார் என்று தெரிந்தாலும்  சட்டைசெய்யாமல் அவனும் அவருடன் சேர்ந்து முகத்தை சாய்த்து நாணத்துடன் சிரித்தான். சற்றே நகர்ந்தபோது கடைக்கூரையிலிருந்து தொங்கிய ஒற்றை பல்ப்பின் ஒளி நேரடியாக அவன் முகத்தில் விழுந்தது. ஃபிலோமினா நின்ற இடத்திலிருந்து மீண்டும் அவனை பார்த்தாள். ஒரு வாரத்துக்கு முன் புதிதாக பார்த்தவள் போல்.

பொன்னும் தவிட்டுமாக சுருள்சுருளாக தலைமுடி. திறந்த முகம். இளஞ்சிவப்பு நிறம். கூர்மையான மூக்கு. பேசும்போது மேலும் கீழும் வேடிக்கையாக ஏறி இறங்கிய மரவட்டை புருவங்கள்.  ஆனால் அவளுக்கு அவன் கண்களை நோக்கித்தான் அப்போதும் பார்வை போனது. கன்றுகுட்டிக் கண்கள். தேன் நிறமானவை.

ஃபிலோமினா சட்டென்று கடைமுகப்புக்குச்சென்று “போதும், வா,” என்ற உத்தரவுடன் அவன் கையைப் பிடித்து இழுத்தாள். சுற்றியிருந்த பெண்களை கண்டுகொள்ளாதவளாக பொந்துபோல் நீண்ட கற்தெருவின் இருளுக்குள் அவனை இட்டுச்சென்றாள். “ஃபான்சி ஸ்டோரில் ஆம்பிளைக்கு என்ன வேலை?” என்று அதட்டினாள். “ஃபான்சி ஸ்டோரா? அப்படின்னா?” என்றான் ஆரன். அய்யோ இதுகூட தெரியாதா, என்னத்த இங்க்லீஷ் பேசி வளர்ந்தியோ, என்று சலிப்புத்தட்டும் குரலில், “அழகுசாதனபொருட்கள விற்குற கடைகள எங்க ஊர்ல அப்படித்தான் சொல்வாங்க,” என்றாள்.

ஆரனுக்கு அந்த வார்த்தையைக் கேட்டதும் ஒரே பரவசம். “நிஜமாவா! நிஜமாவா!” என்று கேட்டுக்கொண்டே வந்தான். அவனை அது என்னவோ செய்தது. சொக்கிப்போனவன் போல அந்த வார்த்தையை சொல்லிக்கொண்டே வந்தான். “ஃபான்ஸி ஸ்டோர்! நிஜமாவே அப்படியொரு பேரா?” கருங்கல் இருளிலிருந்து துலங்கி வந்த வெள்ளி அம்மன் முகங்களைப் பார்த்து, “இதுவும் ஃபான்ஸி ஸ்டோரா?” என்றான். ஜடை அலங்காரங்களும் ரவிக்கை பார்டர்துணிகளும் விளக்கொளியில் மின்னி மறைந்தன. “எத்தனை நிறங்கள்! எவ்வளவு அழகு!”

“எல்லாம் ஜிகினாப்பா,” என்றாள் ஃபிலோமினா. பொறுமையிழக்கவா சிரித்துவிடவா என்று தெரியவில்லை அவளுக்கு. “இங்க இந்துக்கள் வீட்ல அவுங்க சாமிய அலங்காரம் செய்றதுக்காக வாங்கிக்குவாங்க.” “மேடம் எதுவும் பாக்குறீங்களா?” என்று இருளுக்குள்ளிருந்து ஒரு குரல். “அண்ணா, இது என்ன?” என்று ஆரன் தனக்குத்தெரிந்த ஒரே தமிழ் சொற்றொடருடன் நிற்க அவன் தோள்வரைகூட வராத ஃபிலோமினா அவன் கையில் அடித்து, “நீ சிற்பம் பாக்கணும்னுதான புதுமண்டபத்துக்கு கூட்டிகிட்டு வந்தேன்? கடைக்குக் கடை இதப்பாரு, அதப்பாருன்னு நின்னா, அப்புறம் எங்கிட்டு? வா, இங்க ஒரு பெரிய நந்தி இருக்கு அத ஒக்காந்து வர,” என்றாள்.

ஏழுகடல் தெருவுக்குள் பீறிட்டு வழிந்த ஒளிக்கு எதிராக வந்து அவர்கள் நின்றபோது, கடகடவென்று கால்கள் முன்னும் பின்னும் ஆட ஓடிக்கொண்டிருந்த தையல் மிஷின்களின் ஒலி ஒரு கணம்  நிற்க  தையல்காரர்கள் அனைவரும் அவர்கள் இருவரையும் தலைதூக்கி பார்த்தார்கள். மீனாட்சியம்மன் கோயிலின் சந்தடியில்தான் பிழைப்பு என்பதால், மானுடத்தின் பற்பல அரிய மாதிரிகளை பார்த்துப்பழகி ஓய்ந்த கண்கள்தான் என்றாலும், இந்தக்காட்சி அவர்களுக்கே சற்று புதுமையாக இருந்தது.

ஆறடி உயரத்துக்கு நளினமான உடற்கட்டுடன்,  இளஞ்சிவப்பு குர்த்தாவும் ஜீன்ஸும் தோளில் ஜோல்னா பையுமாக, விரல்களை மடித்து மடித்து பேசிய ஒரு வெள்ளைக்கார இளைஞன். சாம்பல் நிறச் சுடிதாரும், வயிறுவரை வழிந்த நைலான் ஷாலும், கறுத்த முகமும், வழித்துவாரிய பின்னலுமாக அவன் அருகே குட்டையான தட்டையான உள்ளூர்ப் பெண்.

அவர்களுடைய பார்வையை உணராதவளாக ஃபிலோமினா அங்கிருந்த சிற்பங்களை சுட்டிக்காட்டினாள். இரண்டாள் உயரத்துக்கு ஒரு வாராகி. ஒரு துவாரபாலகன். வெளியே கூசும் வெயிலில் நின்றாலும் தவம்போல் அசையாமலிருந்த நந்தி. “இவ்வளவு இருக்கு பாரு,” என்றாள்.

ஆரன் வாராகியின் சிற்பத்தை அண்ணாந்து பார்த்தான். அவன் தலைதாழ்த்தியபோது அப்படியொரு சிலையின் இருப்பையே கண்டுகொள்ளாதவர்போல அதன் அடியில் ஒரு தையற்காரர் அமர்ந்திருப்பதை கண்டான். தடித்த கண்ணாடியும் காதில் கடுக்கனும் காதிடுக்கில் பென்சிலுமாக இருந்தவர் தையல் மெஷீனில் நூல் பொருத்திக்கொண்டிருந்தார். ஆரன் பைக்குள்ளிருந்து ஒரு வரைபுத்தகத்தை உருவி கிட்டத்தட்ட அவர் காலடியில் முட்டி மடக்கி அமர்ந்தான். முதுகை வசதியான தூண் ஒன்றில் தோய்வாக சாய்த்துக்கொண்டு வரையத்தொடங்கினான்.

அவன் தூணையும் சிற்பத்தையும் வெறும் கோட்டோவியமாகத்தான் வரைந்தான் என்று ஃபிலோமினா பார்த்தாள். தலைக்குமேல் எங்கோ மேகத்துக்குள் உறைந்த கனவுபோல். அந்தச் சிற்பத்தின் காலடியில் யாரோ படைத்திருந்த ஒற்றைச் செண்பகப்பூவை மட்டும் தெளிவாக தங்கமும் சிவப்புமாக வரைந்தான். ஒரு தீமொட்டு. அந்த நிறத்தின் நிழல் கல்லில் விழுந்தது. கல்லே சிவப்பும் மஞ்சளுமாக கமழ்வதுபோல்.

அந்தக் கல்லின் ஒளியில் தையற்காரரை வரைந்தான். ஃபிலோமினாவும் அருகேயே அமர்ந்து உள்ளங்கையில் கன்னத்தைத்தாங்கி தாளில் நகர்ந்த பென்சில்முனையை பார்த்துக்கொண்டிருந்தாள். கீழிருந்து மேல்நோக்கி வரைந்ததால் மெஷீனை ஓட்டிய அவர் பாதங்கள் பெரிதாகவும், உச்சந்தலை சிறிதாகி கல்லோடு மேலே கரைந்துவிட்டது போலவும் தோன்றியது.

ஏதோ ஒரு கணத்தில் அவள் நிமிர்ந்து பகல் ஒளியின் பின்னணியில் தையல்மெஷீனை ஓட்டிக்கொண்டிருந்தவரை பார்த்தாள். பின் மறுபடியும் தாளை பார்த்தாள். தாளில் பார்த்தால் அவரை யாரோ அதே கல்லில் செதுக்கிவைத்ததுபோல் இருந்தது. தூசுபடிந்த கால்நகங்கள், வளைந்த விரல்கள், ஒடுங்கிய மார்பு,  கண்ணாடிவிளிம்பு, எல்லாம் படத்திலிருந்து புடைத்து வந்தன. அதுவரை அங்கு நிகழ வாய்ப்பளிக்கப்படாத ஒரு சிற்பம் போல. புதிதாய்த் தோன்றிய தெய்வம் போல.

எங்கு போனாலும் இப்படித்தான். நேற்று மீனாட்சியம்மன் கோயிலுக்கு கூட்டிச்சென்றிருந்தாள். அவளுக்குத்தெரிந்த வரலாற்றுத்துணுக்குகளை சொல்வதுவரை தலையை ஆட்டி ஆட்டித்தான் கேட்டுக்கொண்டிருந்தான். பார்த்தால் சிற்பங்களை விட்டுவிட்டு அங்கு வந்தவர்களைத்தான் விதவிதமாக வரைந்து வைத்திருந்தான். கைகூப்பி கண்மூடி கும்பிட்டவர்கள். தோள்களில் சோர்ந்து தூங்கிய குழந்தைகள். அரட்டையடித்துக்கொண்டிருந்த பட்டர்கள். கைவளை அடுக்கி நடக்கமுடியாமல் இடுப்பைப்பிடித்த நிறைமாதக்காரி. நெற்றிக்குறிகள். நகைகள். புடவை மடிப்புகள். பூக்கூடைகள். நெய்விளக்குகள். ஊதுபத்திச்சுருள்கள். சிவகாமியம்மையின் உதட்டோர புன்னகையை பார்த்துக்கொண்டிருந்த ஃபிலோமினாவுக்குக்கூட அந்த வண்ண வரைபடத்தில் இடம் இருந்தது.

“ஏதோ சிற்பம் வரையணும்னுதானே வந்த? அத விட்டுட்டு எல்லா வேலையும் செய்யுற நீயி,” என்று மற்றொருநாள் ஃபிலோமினா சொன்னாள். அழகர்கோயில் போய்விட்டுவரும் வழியில் ஆனைமலை பக்கம் வற்றிய கண்மாயைப் பார்த்து அதை வரைய வேண்டும் என்று ஆரன் கேட்க, நடுப்பாதையில் பேருந்தை நிறுத்தச்சொல்லி ஓட்டுனரிடம் திட்டுவாங்கி இறங்கிச்சென்றிருந்தார்கள். ஒரு உடைந்த பாலத்தின் மீது தொற்றி உட்கார்ந்து அவன் வரைந்துகொண்டிருந்தான். ஃபிலோமினா பின்னால் நின்று இப்படி சலித்துச்சொண்டிருந்தாள்.

“தெக்கால கேரளா பக்கமா போனா அழகழகான ஊரெல்லாம் இருக்கு. இல்ல நார்த்ல பனிமலை பாலைவனம்னு எங்கியாச்சும் போ. இந்த ஊர்ல என்ன இருக்குன்னு இப்படி வளச்சு வளச்சு வரையுற? எல்லாம் வறண்டு போன பூமி,” என்றாள்.

“இல்ல, உங்க ஊரோட ஒளி ரொம்ப அழகாயிருக்கு,” தாளிலிருந்து கண்ணை எடுக்காமல் அதற்கு பதில சொன்னான் ஆரன். அவன் விரலுக்கடியிலிருந்து வண்ணம் ஒழுகிக்கொண்டிருந்ததுபோல காணும் நொடியில் தாள் நீலமாகிக்கொண்டிருந்தது.

வானில் பொட்டு மேகமில்லை. நீலப்புடவையை யாரோ ஒருகணம் உதறியதுபோல் கானலாக படபடத்தது. ‘உஷ்’ஷென்று பின்மதிய வெய்யில் கொட்டியது. ஃபிலோமினா ஷால்நுணியை தலையில் போர்த்திக்கொண்டாள். வெயிலுக்கெதிராக கண்களை மறைத்துக்கொண்டாள்.

வெயிலை சுத்தமாக உணராதவன் போல் இருந்தான் ஆரன். “ஒளிய இப்படி வண்ணமா வரையறதெல்லாம் ஒண்ணுமே இல்ல. ஒளிய வெறும் ஒளியா வரையணும். அதிலேயே எல்லா நிறங்களையும் கொண்டுவரமுடியும் தெரியுமா…” நிமிர்ந்து புன்னகைத்து, “நம்மால இப்ப பார்க்கமுடியாத வண்ணமெல்லாம் கூட அதுல வரும்…”

“அக்னி நட்சத்திரம் வெயில் காயுது, ஒளியாம் ஒளி” என்று ஃபிலோமினா மூச்சுக்கடியில் சிடுசிடுத்தாள். ஆனால் படம் விரிய விரிய அவள் முகம் மாறியது. மீண்டும் அந்த வியப்பு. அவன் கண்முன்னால் தெரிந்ததைத்தான் தாளில் வரைந்துகொண்டிருந்தான். ஆனால் தாளில் இன்னொன்றும் இருந்தது. அது என்ன, அது என்ன என்று கண்கள் தாளை துழாவின.

வானைத் தொட்டு விளையாட ஆசைப்படும் சிறுவன் குதிகாலெழ நிலத்தில் எம்புவதுபோல் எழுந்த மலைகள். அலையலையாக கண்ணை வந்து அடைந்த கண்மாய் நிலம். வற்றிய கண்மாயை தாளில் பார்க்க வானையே கிண்ணமாக கவிழ்த்து வைத்தாற்போல் இருந்தது. வானத்தின் விரிவையும் விசாலத்தையும் கனிவையும் காத்திருப்பையும் அவன் நிலத்துக்கு சூட்டியிருந்தான். மேகங்களுக்குக் காத்திருக்கும் வானுக்குப் புரியாதா நீருக்குக் காத்திருக்கும் நிலத்தின் ஏக்கத்தை? இரண்டு கண்களைப்போல் அவை குரல் எழாத காதல் பார்வையை நீட்டித்துக்கொண்டிருந்தன. அந்தக் காத்திருப்பின் கண்ணியத்தையெல்லாம் தன் தலையில் சூட்டிக்கொண்டு பசுமையற்ற வெளியில் ஒற்றைப் பனைமரம் நிமிர்வுடன் நின்றுகொண்டிருந்தது.

சுற்றிவர கைவிடப்படுதலின் அத்தாட்சிகள். ஆபாசமாக வானை மறித்த ஃபிளக்ஸ்போர்டுகள். உடைந்த பாலங்கள். கைவிடப்பட்டிருந்த கிணறு. அதிலிருந்து ஏதோ காலத்தில் தண்ணீர் இறைத்து நிறைத்து இப்போது வடிவிழந்த குடம். எங்கும் படபடக்கும் பிளாஸ்டிக். ஒரு மனிதமுகம் கூட இல்லாத வெற்றுவெளி. எல்லோரும் ஒட்டுமொத்தமாக கைவிட்டுச்சென்ற நிலம்.

ஆனால் எல்லாவற்றையும் விளக்குபோல் ஏற்றிவைத்தது அந்த ஒளி. வெளியே இல்லாத, ஓர் ஊற்றுக்கண் திறந்ததுபோல் எங்கிருந்தோ சரிந்து வந்த, அந்த மாய ஒளி. எங்கிருந்து வந்தது அது? சாதாரண வெயில் அல்ல. சூரிய வெளிச்சம் அல்ல. வானிலிருந்து வரும் ஒளியே அல்ல.

சட்டென்று ஒரு கணத்தில் ஃபிலோமினா அதனை கண்டுகொண்டாள். இல்லை, அந்தப் படத்தில் அவன் கொண்டுவந்திருந்தது நிலத்தின் ஒளியை. கீழிருந்து மேல்நோக்கி எழுந்த வெளிச்சம் அது. நிலத்தையே கலமாக்கி அவன் படத்தில் ஒரு விளக்கை ஏற்றி வைத்திருந்தான்.

அன்று பேருந்தில் திரும்பிச்செல்லும்போது ஃபிலோமினா வெகுநேரம் பேசாமலே வந்தாள். நகர நெரிசலின் தூசு மூக்கை குடைந்தது. அவள் கண்கள் நீர்படிந்தே இருந்தன. சிம்மக்கல்லின் தட்டுமுட்டைத் தாண்டி மெஜுரா காலேஜின் பாலம் ஏறி இறங்கி பழங்காநத்தம் தாண்டி மூலக்கரையின் விரிந்த வயல் வெளிகளுக்கு வந்தபோதுதான் அவள் தன் குரலை கண்டுகொண்டாள். முன்சீட் ஜன்னலோரத்திலிருந்து புதுக்காற்று புசுபுசுவென்று அடித்துக்கொண்டிருந்தது. காற்றில் ஆரனின் கூந்தல் படபடத்தது. ஃபிலோமினாவின் ஷால் பறந்தது. தூரத்தில் ஜோடிக்குன்றுகள் எழுந்து வந்தன.

“எங்க ஊரு உண்மையிலேயே நீ வரஞ்ச மாதிரி அவ்வளவு அழகாவா இருக்கு?” ஃபிலோமினா அவளுக்குள்ளேயே கேட்டுக்கொள்வதுபோல் சின்னக்குரலில் கேட்டாள்.

“அதிலென்ன சந்தேகம்?” என்றபடி முன்சீட்டிலிருந்து திரும்பினான் ஆரன். வெயிலில் அலைந்ததில் முகம் நன்றாக சிவந்திருந்தது. கண்கள் சூட்டில் தகதகத்துக்கொண்டிருந்தன. “சத்தியமா சொல்றேன். நான் பார்த்த ஊர்களிலேயே உங்க ஊர்தான் அழகு.” புன்னகையுடன் அவள் கையை விளையாட்டாக தட்டினான். இரண்டு வாரம்கூட ஆகவில்லை. அவர்கள் பேசிக்கொள்ளும்போது கைதட்டிக்கொள்வது வழக்கமாகிவிட்டிருந்தது.

அப்புறம் ஏதோ தோன்ற, “இத நான் போற எல்லா ஊர்லையும் சொல்லுவேன்னு நினைக்காதே,” என்றான். வெட்க பாவனையில் சிரிப்பை பொத்தினான். விரல்கள் சங்குப்பூவைப்போல் நளினமாக பூத்து கவிழ்ந்தன.

அவளும் சிரித்தாள். கன்னங்கள் குன்றுகளாகி நின்றன. முகத்தில் அம்மைத்தழும்புகள் குழிந்தன. சிரித்தபோது வாயிலிருந்து தெற்றிச் சிதறிவிழுந்த முன்பற்கள் அவள் முகத்தை இடமிருந்து வலம் குறுக்காக வெட்டியது. முக அமைப்பை ஒரு கணம் குடைசாய்த்தது. குதூகலத்தில் நாய்குட்டியைப்போல இருந்தாள். பருத்த உருவம் சிரிப்பில் குலுங்கியபோது ஓட்டுச்சக்கரத்தை சுழற்றிக்கொண்டிருந்த டிரைவரும் அந்தக்காட்சியை திரும்பிப்பார்த்து புன்னகைத்தார்.

இங்கு ஒன்றைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. ஃபிலோமினா தேவதாஸ் அழகியல்ல. நான் சொல்லவில்லை. இது அவளைச்சார்ந்தவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுவிட்ட உண்மையாக இருந்தது. இருளிலிருந்து ஒளியை பிரித்து, அண்டகோடிகளை வானில் அமைத்து, எண்ணற்ற பேதங்களை சமைத்த ஒருவனின் இருப்பை எப்படி உண்மையென்றும், இயல்பென்றும், அவர்கள் ஏற்றுக்கொண்டார்களோ, அப்படியே ஃபிலோமினாவின் அழகின்மையையும் ஏற்றுக்கொண்டார்கள்.

அதெப்படி சொல்லலாம்? அழகையெல்லாம் அளவெடுத்துப்பார்க்க மீட்டர் ஏதாவது இருக்கிறதா என்ன? என்று நாம் உடனே பதிலுக்கு கேட்கலாம். அவரவர் கண்ணுக்கு அதுஅது அழகு, என்று சமாதானம் சொல்லலாம்.

இருந்தாலும் அழகென்று ஒன்று நம்மை மீறி அத்துவானவெளியில் எங்கேயோ இருக்கத்தான் செய்கிறது. ஃபிலோமினாவுக்கு சாந்தமேரி அம்மா. பெற்ற தாயேதான். அவர்களுக்கே “பாப்பா இன்னுங்கொஞ்சம் அழகா பெறந்திருக்கலாம் இல்ல?” என்ற விசனம் இருந்தது. பிறகு நாம் ஏது சொல்ல?

விஷயம் இதுதான். ஃபிலோமினா டிகிரி முடித்து ஐந்து வருடங்கள் ஆகிறது. வரன் அமையவில்லை. இத்தனைக்கும் திருநகர் அமைதிச்சோலை பூங்காவைச் சேர்ந்த திருவாளர் எம்.எஸ்.தேவதாஸ் எம்.ஈ. அப்போதே நூறு பவுன் நகை போடக்கூடியவர்தான். இருபது வருடங்களுக்கு முன்னால் நூறு பவுன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்?

குடும்பம் தரமான குடும்பம். சொக்கத்தங்கம் என்று ஃபாதர் ஜெபராஜ் எங்கு வேண்டுமென்றாலும் பைபிளில் அறைந்து சத்தியம் செய்வார். ஆனால் உள்ளூரில் மாப்பிள்ளை அமையவில்லை. திருச்செந்தூரிலிருந்தும் தூத்துக்குடியிலிருந்தும்கூட வந்து பார்த்துவிட்டார்கள். என்ன காரணம் என்றால் என்ன சொல்ல முடியும்? அமையவில்லை, அவ்வளவுதான்.

குடும்பத்தாரும் முதலில் மனதுக்குள் தான் சொல்லிக்கொண்டார்கள். பின்பு ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போது உனக்கும் தெரிந்ததுதானே என்பதுபோல் சொன்னார்கள். பிறகு வெளிப்படையாகவே “பாப்பா இன்னும் கொஞ்சம் அழகா பிறந்திருக்கலாமில்ல?” என்றார்கள்.

இவ்வளவு ஆணித்தரமாக சொல்ல ஃபிலோமினாவுக்கு உருவத்திலோ உடலிலோ ஏதாவது குறைபாடு இருந்ததா என்றால் அதுவும் இல்லை. ஆனால் அவளிடம் ஏதோ பொருந்தாமல் இருந்தது. ஏதோ ஒன்று கூடக்குறைய இருப்பதுபோல். சாந்தமேரியே அதை உணர்ந்து அடிக்கடி சொல்வாள். “ஏய், நேரா நட! கூன் போடாம நில்லு! அப்படி விழிச்சு விழிச்சு பாக்காத!” ஆனால் சரியாக என்னவென்று அவளாலும் சொல்லமுடியவில்லை.

ஃபிலோமினாவின் தங்கை பிரிசில்லா வளர வளரத்தான் அது என்னவென்று அவர்கள் ஓரளவேனும் கண்டுகொண்டார்கள். குறிப்பாக இருவரையும் சேர்த்துவைத்து பார்க்கும்போது. பிரிசில்லாவும் கருப்பு, குள்ளம்தான் என்றாலும் பதினான்கு வயதிலேயே அவளுக்கு வளர்ந்த பெண்ணுக்கான முதிர்ச்சி வந்துவிட்டது. கருவண்டு முகம். அப்பாவின் கோலிக்குண்டு கண்கள். அம்மாவின் திருத்தமான களை.  வளர்த்தியான உடல். அதை கரகம்போல் பாங்காக எடுத்துச்செல்லத் தெரிந்திருந்தது அவளுக்கு. மேரிமாதா குழந்தை ஏசுவை தூக்கிவைத்திருக்கும் பாந்தத்துடனே எப்போதும் இருந்தாள். கண்ணசைவும் கையசைவும் உடலசைவும் ஒரு பாதியை மறுபாதி சரியாக சமன் செய்தது. அவளை நோக்கி எல்லா நல்வார்த்தைகளும் வந்தன. லட்சணம், திருத்தம், களை, அழகு, நேர்த்தி, பூர்த்தி என்று. இவளுக்கு வரன் தேட எந்த சிரமமும் இருக்காது என்று சாந்தமேரி இரகசியமாக பெருமூச்சு விட்டாள்.

பிரிசில்லாவின் உடலில் இருந்த இயல்பான சமன்பாடு ஃபிலோமினாவில் என்றுமே தோன்றியதில்லை. பாந்தமில்லாமல் பருமனாக இருந்தாள். சுழலும் பரிசலைப்போல் நடந்தாள். என்னேரமும் ஏதோ ஒரு பக்கத்திலிருந்து ஒரு பறவைக்கூட்டம் படபடபடவென்று வெடித்துவெளிவரும் என்பதுபோல் அவள் உடலில் ஒரு ததும்பல் இருந்துகொண்டே இருந்தது.

உடலில் குடிகொண்ட அந்த சமனின்மை முகத்தில் இன்னும் கூர்மையாக வெளிப்பட்டது. களைகளைப்போல் பிசுறுபிசுறாக வடிவமற்ற புருவங்கள். சற்றே ஒற்றைக்கண் பார்வை. இடதுபக்க யானைக்காது. சிரிக்கும்போது முந்தியடித்து தெறித்த முன்பற்கள். எல்லாம் சேர்ந்ததில் அவள் முகம் ஒரு கியூபிஸ்ட் ஓவியத்தைப் போல் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட விந்தையான உணர்வை அளித்தது. குடும்பத்திலும் பெண்கள் முகத்தை திருத்தி அழகுபடுத்திக்கொள்வது பாவம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆகவே அவள் தன்னை அழகாக்கிக்கொள்ள எந்தப் பெரிய பிரயத்தனமும் எடுத்துக்கொள்ளவில்லை.

சரி, தான் அழகியல்ல என்ற பிரக்ஞை ஃபிலோமினாவுக்கு இருந்ததா? சங்கடமான கேள்வி. அதற்கு யார் பதில் சொல்வது? ஃபிலோமினாவிடமே சென்று நாம் அதை கேட்கக்கூடாதல்லவா?

இவ்வளவு வேண்டுமென்றால் சொல்லலாம். பள்ளி நாடகத்தில் ஃபிலோமினா என்றுமே பாரதமாதா வேடத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. குழந்தையாய் இருந்தபோதும் யாரும் அவள் கன்னத்தைக் கிள்ளி அவளுக்கு மட்டுமென்று ஒரு சாக்லேட்கூட கொடுத்ததில்லை. அவளுக்கு யாரும் காதல் கடிதங்கள் எழுதியதில்லை. அவள் காதுபடவே சொந்த வீட்டு மனிதர்கள் “பாப்பா இன்னும் அழகா பிறந்திருக்கலாமில்ல?” என்று வாரத்துக்கொருமுறையாவது சொல்லாதவர்களும் இல்லை.

எல்லாவற்றையும்விட வருடத்தில் எட்டு மாதங்கள் அவள் தலைக்கு மேல் ஒரு பொட்டு மேகமில்லாமல் சலனம் மாறாத நீலமாய் வானம் விரிந்திருந்த நிலத்தில் அவள் வாழ்ந்தாள். ஒவ்வொரு நாளும் மாலைச்சூரியன் சிவந்து சிவந்து சப்பாத்திக்கள்ளி காயாகி அவள் கண்முன்னால் கண்மாய்க்குள் மறைந்தான். அப்போது வான் எருக்கம்பூவாக, பின் செவ்வரளியாக, பின் பவளமல்லியின் மருதாணி விரலாக நெகிழ்ந்து நிறம் மாறி இருண்டது. அரிதான மழைநாட்களில் நீர்பரப்பில் சாரல் தெறிக்க கண்மாய்க்குள் கெண்டைமீனும் கொக்குகளும் ஊறின. குன்றும் மேகமும் கலந்தன. அவள் வாழ்ந்த நிலத்தில் நிலவுகூட தங்கமானது. பாப்பாவும் இன்னும் சற்று அழகாக பிறந்திருக்கலாம்.

ஆனால் அப்படிப்பார்த்தால் ஃபிலோமினாவின் சுற்றத்தில் வாழ்ந்த பெண்களும் அப்படியொன்றும் பேரழகுப்பிறவிகள் இல்லை. எங்கும் இருப்பது போலத்தான். சாதாரண உலகில் அசாதாரண கனவுகளை பொருத்திக்கொண்டு வாழ முடியுமா என்று சோதனைசெய்துகொண்டிருந்தவர்கள். பெரும்பாலும் தோல்வியுற்றார்கள். தோல்வியுற்றாலும், பரவாயில்ல, என்ன இப்ப? நீதானே ஜெயிச்ச? இருந்துட்டு போக, என்று எதிரே இருப்பவனிடம் “காய்” விடாமல் சோழிமுத்துப்பற்கள் தெரிய சிரித்தவர்கள். ஃபிலோமினாவும் அப்படித்தான். திருமணம் ஆகவில்லை என்பதற்காக சிரிப்பு வந்தால் வராதே என்றா சொல்ல முடியும்?

அப்போதுதான் ஒருநாள் ஃபாதர் ஜெபராஜ் ஆரனை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வருவதாக சொன்னார். ஆரன் பாஸ்டரான தன்னுடைய அமெரிக்க நண்பரின் மகன். கல்லூரி முடித்த கையுடன் இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்திருந்தான். கலைக்கல்லூரியில் படித்திருந்தான். மூன்று வாரம் பசுமலை காட்டேஜில் தன்னுடன் தங்கி மதுரைக்கோயில் சிற்பங்களை பார்க்க ஆசைப்படுகிறான். ஃபிலோமினா வரலாறு டிகிரிதானே படித்திருக்கிறாள்? அவள் சும்மாதானே இருக்கிறாள்? கூட்டிச்சென்று ஊரில் எல்லாவற்றையும் காட்டினால் என்ன, என்றார்.

சாந்தமேரியும் தேவதாசுக்கும் அந்த நெட்டையான வெள்ளைக்கார இளைஞனை பார்த்தபோது முதலில் விந்தையாக இருந்தது. மதுரை புறநகருக்கு வெள்ளைக்காரர்களெல்லாம் வருவதில்லை. கிட்டத்தட்ட ஒரு புது ஜீவி. அவனிடம் எப்படி பேசவேண்டும், அவன் என்ன சாப்பிடுவான், எங்கு உட்காருவான், அவர்களுடைய பின்கட்டு அவனுக்கு சரிவருமா என்று ஒரே பரபரப்பு. சாந்தமேரி தனக்குத்தெரிந்த நான்கு ஆங்கிலச் சொற்றொடர்களை நாளெல்லாம் மறுபடியும் மறுபடியும் சொல்லிப்பார்த்துக்கொண்டிருந்தாள். ஃபாதருடன் ஆரன் ஒருவழியாக விஜயம் செய்தபோது பக்கத்துவீட்டார்முதல் பாங்க் காலனி ஐயர்மார்கள் வரை கூடி நின்று கூச்சப்படாமல் அவனை விழித்து விழித்து வேடிக்கை பார்த்தார்கள்.

ஆனால் வந்த முதல் நாளிலேயே அவர்களுக்கு ஆரனை பிடித்துப்போய்விட்டது. அவன் அதிகம் பேசவில்லை. கழுத்தைக் குழைத்து, கண்ணில் குழிவிழ சிரித்து, நெற்றியில் விழுந்த பொன்நிற சுருள்முடியை விரல்களால் அழகாக விலக்கி, கன்றுக்குட்டி கண்கள் வழியாக அவர்களைப் பார்த்து புன்னகைத்துகொண்டே இருந்தான். அந்த வீடு அவனுக்கு குகைபோல் சிறியதாக இருந்தாலும் குறையில்லாதவன்போல் பாந்தமாக அமர்ந்து சாந்தமேரி சுட்ட தோசைகளை வெள்ளைக்காரத்தனமாக இரண்டுகைகளாலும் பிய்த்துத் தின்றான். இரண்டு ‘சுவீட்’ட்டுகள் வைத்தாலும் அலுத்துக்கொள்ளாமல் சாப்பிட்டான். அவளுடன் அடுப்பறைக்குச்சென்று நின்று தலைகுனிந்து பேசினான். அவள் அலறுவதை பொருட்படுத்தாமல் பாத்திரங்களை கழுவிக்கொடுத்தான்.

“பக்கத்து வீட்லையும் பாத்திரம் வெளக்க ஆளு கேக்கறாங்களாம்,” என்று ஃபிலோமினா குரலில் சிரிப்பைப் பொத்தியபடி சொன்னாள். “இவ உங்கள கிண்டல் பன்றா பாருங்க,” என்று உடனே பிரிசில்லா சத்தமாக சொன்னாள். இரண்டு பெண்களும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரன் தட்டை துடைத்துக்கொண்டே அவர்களுடன் சேர்ந்து சிரித்தான்.

அந்தக்காலத்தில் தானும் கொஞ்சம் வரைகலை பழக்கம் உடையவர் என்று அன்று தேவதாஸ் ஆரனிடம் சொல்லிக்கொண்டிருந்தார். எஞ்சினியரிங் மாணவராக இருந்தபோது மதுரையின் பழைய கட்டடங்கள் சிலவற்றை நகலாக வரைந்து வைத்திருந்தார். பூச்சி அரித்த பழைய தாள்களை பரணிலிருந்து எடுத்து தன்னுடைய சிறந்த படைப்பென்று கருதிய புனித மேரி தேவாலயத்தின் படத்தை காட்டிக்கொண்டிருந்தார். “எங்க? வேலையில சேர்ந்ததும் எல்லாம் விட்டுப்போச்சு. அப்புறம் கல்லியாணமும் ஆச்சு… மொத்தமா போச்சு,” என்று சலித்தார்.

“தம்பிக்கு கல்யாணம் ஆயிடிச்சா?” என்றாள் சாந்தமேரி. ஆரனின் முகம் சிவப்பானது.

“அவுரு பாக்க சின்னப்பையனால்ல இருக்காரு, இப்பத்தான் படிப்பையே முடிச்சிருக்காரு, நீயென்ன?” என்றார் தேவதாஸ். “நீங்க என்ன அப்பா மாதிரி சர்ச்சு தொழிலுக்கு வராம ஓவியம் சிற்பம்னு இந்தப்பக்கம் வந்துட்டீங்க?”

அந்தக் கேள்விக்கும் ஆரன் நெளிந்தான். ஃபாதர், “அவங்கெல்லாம் அமெரிக்காகாரங்க. இண்டிபெண்டெண்ட். அப்பா ஒண்ணு சொன்னா இவுங்க நேர் எதிரா ஒண்ணுலதான் போய் நிப்பாங்க. நம்மாளு இப்போதைக்கு எல்லாத்தையுமே சந்தேகிக்குற தாமஸ்” என்றபடி ஆரன் முதுகில் தட்டினார். ஆரனிம் முகம் இனி சிவக்க முடியாது என்பது போல் பழுத்திருந்தது.

“ஆமா, அந்தப் படத்த பாத்ததும் நீங்க உண்மையிலேயே இஞ்சினியர்தானான்னு அவருக்கும் சந்தேகம் வந்திருச்சுப்பா,” என்றாள் ஃபிலோமினா. எல்லோரும் சிரித்தார்கள்.

ஃபாதர் ஆரனிடம், “நீங்க ஏன் ஃபோட்டோகிராஃபி பன்றதில்ல?” என்றார்.

அந்தக்கேள்விக்கும் முதலில் வெறுமனே புன்னகைத்தான். பின், “ஃபோட்டோகிராஃபி முயற்சி பண்ணி பாத்தேன். பிடிக்கல. கையால வரையறதுதான் பிடிச்சிருக்கு. நான் கொஞ்சம் பழைய ஆளுன்னுதான் நினைக்கறேன்,” என்றான். ஆங்கிலத்தில் அவன் சொன்ன வார்த்தைகள் ஃபிலோமினாவுக்கு பிடித்திருந்தது. “ஐ திங்க் ஐ அம் அன் ஓல்ட் சோல்.”

“ஃபோட்டோகிராஃபிக்கும் பெயிண்டிங்குக்கும் என்ன வித்தியாசம்?” என்றாள்.

“ம்ம்… நிறைய வித்தியாசம் இருக்கு…” ஆரனின் பார்வை பட்டாம்பூச்சியாய் படபடத்து அவள் மேல் வந்து நிலைத்தது. “ஆனா முக்கியமான்னு பாத்தா ஒளி தான்.”

“காமராவுல லைட் டிடெக்டர் இருக்கு. அது வெளிய இருக்குற ஒளியால தான் படத்த உருவாக்குது. அதுக்கும் ஒரு அளவு இருக்கு. ஒரு தற்செயல்த்தன்மை இருக்கு. இயற்கையில ஒளி எங்க விழுதுன்னு நாம தீர்மானிக்கமுடியாதில்ல?

“ஆனா பெயிண்டிங்ன்றப்ப நாம பாக்குறதுதான். நாம வரையறதுதான். அதுக்குள்ள நாமளே நமக்கான ஒளிய உருவாக்கிட முடியும்.” பேசப்பேச அவன் கண்களுக்குப்பின்னால் மெழுகுவர்த்திச்சுடர் போல் ஒன்று அசைந்துகொண்டிருந்ததை அவள் கண்டாள்.

“‘உலகிற்கு ஒளிதரும் விளக்கு நீங்களே’,” என்று தான் உட்கார்ந்த இடத்திலிருந்து ஃபாதர்  சன்னமாக சொன்னார். ஆரன் அவர் பக்கம் சொடுக்கென்று திரும்பினான். ஃபிலோமினா மீண்டும் அவனைக்கண்டபோது அவன் தலை குனிந்திருந்தது.

“சரியான அப்பாவி. உனக்கே தம்பி மாதிரில்ல இருக்கான்,” அன்றிரவு படுத்துக்கொண்டதும் ஃபிலோமினாவே பிரிசில்லாவிடம் அவனைபற்றிய பேச்சை எடுத்தாள்.

“அம்மா ரொம்ப நம்பிக்கையோட இருக்காங்க, நீயென்னன்னா இப்படி சொல்ற?” சிரிப்பை அடக்கமுடியாமல் கேட்டாள் பிரிசில்லா. “‘தம்பிக்கு கல்யாணம் ஆயிடிச்சா?” அம்மாவைப்போலவே பேசிக்காட்டினாள்.

பெரியப் பேச்சாடீ பேசுற, என்று அதட்ட வாயெடுத்த ஃபிலோமினா, “ஐயோ அவன் என்னவிடயும் சின்னப்பையன். சரியான தம்பிப்பாப்பா,” என்று போர்வையை இழுத்துவிட்டுக்கொண்டு சுவர்பக்கமாகத் திரும்பி கண்களை மூடிக்கொண்டாள்.

“ரொம்ப காலம் முன்னால இந்த ஊர்ல மலையத்துவஜ பாண்டியன்னு ஒரு ராஜா இருந்தான். அவனுக்கு ஒரே மக. அவ பேரு மீனாட்சி. மகன் இல்லாத குறைய தீக்க ராஜா மகளையும் மகனாட்டமே வளத்தானாம். அவ மொரட்டுத்தனமா ஆம்பளகணக்கா வில்லும் வீரமுமா வளந்தா. சுத்தியிருக்கற ஊரையெல்லாம் சண்டைபோட்டு அடக்கினா. அவளுக்கேத்த மாப்பிள்ளன்னு உள்ளூருல யாருமில்ல. தூரதேசத்துலர்ந்துதான் வருவான்னு குறி சொன்னாங்க.

‘சொன்னதுபோலவே சிவனும் வந்தாரு. அழகன்னா அழகன் அப்படியொரு அழகன். எந்த பிராந்தியத்திலும் பார்க்க முடியாது. கைலாசத்துல என்னவோ சடமுடியும் கப்பரையும் பாம்பும் கணங்களுமா ஜாலியாத்தான் இருக்குறவரு. இந்தம்மாளுக்கு அப்படி வந்தா ஆகுமா? அதுனால அழகனா கோலம் தரிச்சு வராரு.

‘வந்து நின்னா, ஊருக்குள்ள வடிவா, சொக்கா, சுந்தரான்னு ஒரே ஆரவாரம். யார்ரா அது புதுசா எம் ஊருக்குள்ள? உங்கொட்டத்த அடக்குறேன் பாருன்னு பாஞ்சு போனா மீனாட்சியம்ம.

‘அவரு ஆயுதம் எதையும் எடுக்கல. சும்மா இவளையே பாக்குறாரு. அத அவ பாக்கறா. வில்லையும் வேலையும் எடுக்கலாம்னா அவளுக்குக் கை வெளங்கவேயில்ல. கண்ணும் அவன் பார்வைக்கு முன்னால எழும்பமாட்டேங்குது. வெட்கம்! ஒரு வழியா கண்ண ஒசத்தி பாத்தா அவன் அப்பவும் அப்படியே கண்வாங்காம பாத்துக்கிட்டிருக்கான். அவ்வளவு அழகு. அவ சிரிச்சுபுடறா.

‘சிவன் அவள இங்க வெச்சு கல்யாணம் பண்ணிகிட்டாரு. அப்புறம் இங்கேயே தங்கிட்டாரு. இப்பவும் அந்த ஐதீகம் இருக்கு… இந்தூரப் பொறுத்தவரையில இப்பவும் அவதான் மகாராணி.’

கம்பத்தடி மண்டபத்தில் மீனாட்சி திருக்கல்யாண சிற்பத்தை வரைந்துகொண்டிருந்த ஆரனைப் பிடித்து ஒரு முதியவர் நீ யார், எந்த ஊர், என்ன செய்கிறாய் என்று விசாரித்து, ஃபிலோமினாவை ஏற இறங்கப் பார்த்து, “ஓ க்றிஸ்டியன்ஸா?” என்று தெளிவுபடுத்திக்கொண்டு, சினேகபாவத்துக்கு வந்ததும் தானே முன்வந்து கோயிலின் ஐதீகக் கதையை சொல்லிக்கொண்டிருந்தார். ஃபிலோமினாவுக்கு நன்கு தெரிந்த கதைதான். இருந்தாலும் கேட்டாள். முதியவர் நன்றாகத்தான் ஆங்கிலம் பேசினார். ஆனால் அந்தக்கதையை மட்டும் குழந்தைத்தனமாக சொல்லிக்கொண்டிருந்த பாணி புன்னகை வரவழைத்தது.

“இந்துக்கதைகளெல்லாமே கல்யாணத்தப்பத்தியதா இருக்கே?” என்றான் ஆரன்.

“ஆமா தம்பி. கல்யாணம், கோலாகலம், திருவிழா, இதெல்லாம் இல்லாம என்னத்த வாழ்க்கை?” என்றார் தாத்தா. “மீனாட்சியோட கல்யாணத்தையே இங்க நாங்க ஒவ்வொரு வருஷமும் கொண்டாடுவோம்.”

உடனே பொறிதட்டியவன்போல், “இவங்க பேருகூட அதுதான். ஃபிலோ-மீனா!” என்றான் ஆரன். ஃபிலோமினா முகம்பிளக்க சிரித்தாள்.

“இந்த ஊருல பொறந்த அத்தன பொண்ணுங்களுமே எங்களுக்கு மீனாட்சியம்மதான் தம்பி,” என்றார் தாத்தா. அவளைப் பார்த்து புன்னகைத்து, “இதுல மதமெல்லாம் வராது” என்றார்.

கடைசி வாரத்தில் ஒரு நாள் அவனே அந்தப் பேச்சை எடுத்தான். “ஃபிலோமினா, உங்க ஊர்லல்லாம் எப்படி, ஏற்பாட்டு கல்யாணம்தானே? உங்களுக்கு கல்யாணம் ஏற்பாடாகலையா?”

அவர்கள் மேல ஆடி வீதியில் கல்லில் சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். ஆரன் மேலை கோபுரத்தை வண்ணஓவியமாக வரைந்துகொண்டிருந்தான். சரியாக வரவில்லை. பக்கங்களைத் திருப்பி மீண்டும் மீண்டும் வரைந்தான். கோபுரக்காற்றில் மரங்கள் சலசலத்தன. ஒரு வட இந்தியப் பயணக்குழு நிறத்தொகையாக கோபுரத்தின் பிம்பம்போல அவர்கள் அருகே அமர்ந்திருந்தது. பெரியவர்கள் குறுகுறுப்பாகப் பார்க்க குழந்தைகள் சுற்றி ஓடிஓடி விளையாடினார்கள்.

ஃபிலோமினா காலை மடக்கி சுடிதாரை இழுத்துவிட்டுக்கொண்டாள். “பாத்துட்ருக்காங்க… ஒண்ணும் அமையல,” என்றாள். “போன வாரம்கூட ஒருத்தங்க வந்தாங்க. சிவகாசிக்காரங்க. இந்து குடும்பம். இப்ப யாரும் அப்படி கொடுக்கறதில்லன்னு அப்பா யோசிச்சாரு… ஆனா அவங்களே வேண்டாம் சரி வராதுன்னு பதில் எழுதிட்டாங்க.” ஃபிலோமினா தோளை குலுக்கினாள். “அது கெடக்குது. நீ சொல்லு. உனக்கு கெர்ள்ஃபிரெண்ட்ஸெல்லாம் கிடையாதா?” விளையாட்டுத்தனமாக மாறியது அவள் குரல்.

அவன் முகம் சிவந்து தூரிகையை கீழே வைத்து அப்பாலே பார்த்தான். கழுத்து நெளிந்தது. “இல்ல, எனக்கு பெண்களை பிடிக்காது,” என்றான்.

“ஐய்யோ!” என்று ஃபிலோமினா கருத்த முகத்தில் பல் தெறிக்க கடகடவென்று சிரித்தாள். “என்னைக் கூடவா?”

அவன் சட்டென்று திரும்பி அவள் கையை பிடித்தான். திடீரென்று அப்படி செய்வான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. யாரும் பார்க்கப்போகிறார்களே என்று சுற்றிப்பார்ப்பதற்குள் அவனுடைய கண்களில் இருந்த நெகிழ்வின் தீவிரம் அவளை கலங்கவைத்தது. “உன்னையா?” அவன் பார்வை நாய்குட்டியின் ஈரமூக்கைப்போல் இருந்தது. “உன்னை சொல்வேனா? உன்னைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்குமே?” என்றான்.

அன்றிரவு அதை பிரிசில்லாவிடம் சொன்னபோது, “ஏதாவது லவ் ஃபெயிலியர் கேஸா இருக்குங்க்கா,” என்று உலகைப் பார்த்துசலித்த பாட்டியைப்போல் சொன்னாள்.

ஒருநாள் கோயில் மண்டபத்தின் கல்குளிர்ச்சியில் அமர்ந்தபடி, தன்னுடைய சொந்த ஊரில் தான் வரைந்த படங்களை ஃபிலோமினாவுக்கு காண்பித்தான் ஆரன். வெளியே காய்ந்த வெயில் ஒளிச்சிதறல்களாகவே மண்டபத்திற்குள் நுழைந்தது. அவ்விடங்கள் மட்டும் சற்றே வெம்மையுடன் இருந்தன. மற்றபடி கோயில்கல்லில் இதமான குளிர் உறைந்திருந்தது.

அமெரிக்காவின் வடகிழக்கு எல்லையின் வெர்மாண்ட் மாகாணத்தில் ஸ்ப்ரிங்ஃபீல்ட் என்ற ஊரில்தான் ஆரன் பிறந்தான். அந்த ஊரில் வருடத்தில் முக்கால் பகுதி நாட்கள் ஒளியே கிடையாது என்றான் ஆரன்.

அவர்களுடையது மிகப்பெரிய வீடு. கிட்டத்தட்ட மாளிகை. அப்பா பாஸ்டர். பாதிநாள் ஊரில் இருக்கமாட்டார். அம்மா நோயாளி. பாதிநாள் படுக்கையை விட்டு எழும்பமாட்டார். வேலைக்காரர்களிடமிருந்து ஒளிந்துகொள்ள வசதியாக நிறைய இடங்கள் இருந்த வீடு அது. குளிர் உறைந்த, இருட்டான இடங்கள். “பெரிய சிலுவைவடிவில் ஒரு சவப்பெட்டிகூட இருக்கும், அதில்தான் நிறைய ஒளிந்துகொள்வேன்,” என்றான் ஆரன்.

அங்கு நிறைய காடுகளும் வருடத்தில் பாதிநாள் பனியும் இருக்கும். பனிக்காலத்தில் நாளெல்லாம் இரவெல்லாம்  பனி பொழிந்துகொண்டே என்றான். நில்லாமல் பொழியும் நிசப்த இசை. அப்போது வானில் ஒளியே இருக்காது. சாம்பல்நிற கோட்டு போர்த்தியதுபோல் இருக்கும் உலகம். நிறங்கள் இருக்காது. ஒளியில்லாததால் நிழல்களும் இருக்காது. நிழல்கள் இல்லாததால் காட்சியிலும் ஆழம் இருக்காது.

அம்மா இறந்தபிறகு வீட்டில் இருக்கப்பிடிக்காமல் சுற்றியிருக்கும் காடுகளில் அலைகையில் பனியேந்திய மேப்பிள் மர வரிசைகளை வரைந்து வரைந்து ஓவியம் கற்றுக்கொண்டான். பிறகு பல ஊர்களை வரைந்திருந்தான். பிட்ஸ்பர்கின் கரிச்சுரங்கங்கள். நியூ யார்க் நகரின் சப்வேக்கள். தென்பிராந்திய கருப்பினத்தவர்களின் பொந்துவீடுகள். இந்த ஊரில் அவன் கண்ட ஒளியையும் வண்ணங்களையும் அவன் இதற்கு முன்னால் கண்டதுமில்லை, வரைந்ததுமில்லை. “உங்க ஊர் மொத்தமுமே ஒரு ஃபான்சி ஸ்டோர்!” என்றான்.

ஃபிலோமினா அவன் உற்சாகத்தைக்கேட்டு புன்னகைத்தாள். உண்மைதான். அவன் எங்கு நிறங்கள் செறிந்திருப்பதைக்கண்டாலும் நின்றுவிடுவான். சித்திரை வீதியை ஒரு முறை சுற்றி வர மூன்று மணி நேரமாகும் என்று பிரிசில்லாவிடம் பெருமூச்சுவிட்டபடி சொன்னாள். வெங்கலம், குங்குமம், பறக்கும் ஹெலிகாப்டர் பொம்மை, வெற்றிலை, மயில் இறகு, சுங்குடி சேலை, கரும்பு, மருதாணி, மல்லிகைப்பூ, காதில் மாட்டும் தொங்கட்டான் என்று எதைக்கண்டாலும் நின்றுவிடுவான். நாகப்பட்டினம் அல்வா கடையில் அல்வாவின் நிறத்தை வைத்து ஒரு ஆராய்ச்சி. கடைவீதியில் செண்பகப்பூவின் நிறத்தையும் மணத்தையும் வைத்து இன்னொரு ஆராய்ச்சி.

அன்று பேருந்தில் திரும்பி வரும்போது ஜன்னலிலிருந்து ஃபிலோமினா அதைப்பார்த்து உற்சாகமாக சுட்டிக்காட்டினாள். தென்கரை கண்மாய் நிரம்பியிருந்தது. மாலைச்சூரியன் சிவந்த பிழம்பாக அதில் இறங்கிக்கொண்டிருந்தது. கண்மாய்நீர் தீயின் வண்ணத்தில் அலையடித்தது. மேமாதம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, ஆகவே கண்மாய்க்கு தண்ணீரை திறந்துவிட்டிருக்கவேண்டும். அப்படியென்றால் மேற்கே மழை தொடங்கிவிட்டது. இன்னும் இரண்டு நாட்களில் மதுரைக்கு வந்துவிடும். ஆரன் கிளம்புவதற்குள் வரவேண்டும்.

“ஃபிலோமினா, நீ ஏன் எப்பவுமே கருப்பு சாம்பல் தவிட்டுநிறம் இதுல மட்டும் டிரெஸ் பண்ற? ஏன், வண்ணம் பிடிக்காதா?” என்றான் ஆரன்.

ஃபிலோமினா அஸ்தமன ஒளி முகத்தில் பட்டதுபோல் சிவந்தாள். பின் உடனே அவனை நோக்கித்திரும்பி அவன் கையைத் தட்டி, “ஆமா. உனக்கு எப்பப்பாரு நிறங்கள்தான்,” என்றாள்.

ஆரன் சிரித்தான். “இன்னிக்கி உங்க வீட்ல சாப்பிட சொல்லி உங்க அம்மா சொன்னாங்க. இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பறேன்ல, அதான் எல்லோருக்கும் ஒரு சின்ன அன்பளிப்பு வாங்கியிருக்கேன். அதான் உன்கிட்ட முன்கூட்டியே கேட்டுகிட்டேன்…” என்றான்.

சாந்தமேரிக்கு சிவப்பு நிறத்திலும், பிரிசில்லாவுக்கு பச்சை நிறத்திலும், ஃபிலோமினாவுக்கு வான்நீல நிறத்திலும், மஞ்சள் புள்ளிகள் வைத்து சுங்குடிச்சேலைகள் வாங்கியிருந்தான். தேவதாசுக்கும் ஃபாதருக்கும் வேட்டிசட்டை. “எங்கணப்போயி வாங்கினிங்க? நல்லா ஏமாத்தியிருப்பாக. பாப்பாவ கூட்டிப்போக வேண்டியதுதான?” என்று சாந்தமேரி அங்கலாய்த்தாள்.

அன்று விருந்துச்சாப்பாடு. சாப்பிட்டு எழுந்து கைகழுவ வெளியே செல்கையில் எதிரில் ஃபிலோமினா வந்தாள். “புடவை பிடிச்சிருக்கில்ல?” என்று கேட்டான். “எதுக்கிதெல்லாம்? சும்மா பெரியதனம்…” என்றாள் ஃபிலோமினா. தன் கைமூட்டால் அவன் கையை இடித்தபடி சென்றாள்.

கடைசி நாளன்று மதியம் அவன் கேட்டதுபோல் பரங்குன்ற மலையடிவாரத்துக்கு கூட்டிச்சென்றாள்.  வழிகேட்டு இருவரும் மலையின் மேற்கு முகத்தில் ஏறினார்கள். மரங்கள் செறிந்திருந்த மலைப்பாறைப்பாதை. கற்படிகள். ஆட்களே இல்லை.

அன்று வானம் மேகம் செறிந்திருந்தது. காற்றில் ஈரம். நாசியில் மண்வாசம். தூரத்தில் எங்கேயோ மழை. ஏற ஏற தூரத்தில் நாகமலையின் கோட்டுக்கப்பால் மேகங்களையும் மழைச்சரிவுகளையும் ஒளிக்கோடுகளாக பார்க்கமுடிந்தது.

படிகளைவிட்டு மலையின் முகத்திலேயே நேரடியாக ஏறினார்கள். எதிரே தென்கரைக்கண்மாய் ராட்சத முகமொன்றில் பதித்த நீலக்கண் ஏதோ சொல்ல வருவதுபோல் அவர்களை கீழிருந்து கண்கொட்டாமல் நோக்கியது. ஆரன் வரைந்துகொண்டிருந்தான். மேலே குன்றின் முகத்தில் ஒரு படையாக குரங்குகள் இறங்கி வந்தன. குட்டிகள் அம்மாக்களின் அடிமடியை பற்றியிருந்தன. ஃபிலோமினா மிரண்டு நகர்ந்தாள். ஆனால் அவை ஒன்றும் செய்யாமல் ஒதுங்கிச் சென்றன. ஆரன் அங்கேயே அமர்ந்து அவற்றை வரையத்தொடங்கினான்.

காற்று மாறியது. மழை நெருங்குவதுபோல் இருந்தது. “வா, இறங்கலாம், மழை வரும்,” என்றாள் ஃபிலோமினா. ஆரன் தன்னுடைய தாள்களை நேர்த்தியாக நளினமாக அடுக்கி கவனமாக தோல்பைக்குள் செறித்து வைத்து கைப்பையில் போட்டுக்கொண்டான். பையிலிருந்து இன்னும் மெல்லிய செண்பகவாசம் வந்தது.

அவன் ஒரு நீளமான காகிதக்குழாயை எடுத்தான். அதை ஃபிலோமினாவிடம் கொடுத்தான். “இது உனக்காக,” என்றான்.

மழை பொட்டுப்பொட்டாகத் தொடங்கியது. ஃபிலோமினாவுக்கு அதை திறந்துபார்க்க நேரமில்லை. தலையை ஷாலால் போர்த்தியபடி மரங்கள் செறிந்த கற்படிகளை நோக்கி வேகமாக நகர்ந்தாள். ஆரன் பின்தொடர்ந்தான்.

மலையின் அடிவாரத்துக்கு வந்தபோது மெல்லிய சாரலாகியிருந்தது மழை. கோடைமழையின் வருகையை அறிவிக்கும் நீர்ப்பதக்காற்றும் குளிரும் கிளம்பியிருந்தது. மெல்லிய பனிமூட்டம். ஆரன் ஃபிலோமினாவை பார்த்துக்கொண்டிருந்தான்.

“நாள காலையிலேயே புறப்படணுமில்ல?” என்றாள் ஃபிலோமினா.

“ஆமா, ஆறு மணிக்கெல்லாம் ரயில். சென்னைக்கு. அங்கிருந்து தில்லி. எட்டாம்தேதி டேராடூன் போறேன்.”

“சரி, அப்போ பார்க்கலாம்.” ஃபிலோமினா மெல்ல அவன் கையை தட்டினாள். “ஏதாச்சும் வேணும்னா வீட்டுக்கு ஃபோன் பண்ணு.” சம்பிரதாயமான விடைபெறும் வார்த்தைகள். வேறென்ன சொல்வது? இருவரும் முழித்து முழித்து பார்த்தார்கள்.

அவன் பார்வை மாறவே மாறாதா என்று ஃபிலோமினா வியந்தாள். நாய்குட்டியின் மூக்கைப்போல ஒரு பார்வை. பின்னால் நின்ற அசைவு அறியாத மலைக்குன்றின் நிறத்தில் கண்கள். கல்லும் தேனும் கலந்ததுபோல்…

ஏதோ ஒரு கணத்தில் அவன் “சரி, பார்க்கலாம்,” என்று சொல்லி புன்னகைத்து திரும்பி கூட்டத்துக்குள் மறைந்தான். அவள் சற்று நேரம் அங்கேயே நின்றாள். பின் அவளும் திரும்பி வீட்டுக்குப்போனாள்.

அன்று இரவு ஃபிலோமினா உடனே தூங்கிவிட்டாள்.

அதிகாலையில் முழித்தபோது, தான் எங்கே இருக்கிறோம் என்று ஒருகணம் நினைவுதப்பினாள். காற்றுவெளியில் விழித்துக்கொண்டதுபோல். கட்டிலிலிருந்து காலை கீழே ஊன்றினால் அது  மேகப்பஞ்சில் பதியும் என்பதுபோல். அது தன்னுடைய அறைதான், தன் படுக்கைதான் என்ற பிரக்ஞை வர கொஞ்ச நேரம் பிடித்தது. எழுந்தபோது வெளியே மழை சாற்றிக்கொண்டிருந்தது. இருட்டாகவே இருந்தது.

குளிக்கும்போதுதான் ஆரன் அன்று கிளம்பிக்கொண்டிருப்பான் என்றும், உடனே அவன் முந்தைய நாள் கொடுத்த படக்குழாயும் நினைவுக்கு வந்தது. கூந்தலைக்கூட சரியாக உலர்த்தாமல் நைட்டியில் கைகளைத் துடைத்தபடி தன்னுடைய அறைக்குச்சென்று அந்தக்குழாயை திறந்தாள்.

பிரிசில்லா பக்கத்து கட்டிலில் எழுந்து உட்கார்ந்து இந்த வேளையில் இவள் என்ன செய்கிறாள் என்று கண்களிலிருந்து தூக்கத்தைத் துடைத்தபடி பார்த்தாள். ஃபிலோமினா குழாயிலிருந்து எடுத்த தாளை படுக்கையில் விரித்ததை அவள் முதுகு மறைத்தது. அவள் மூச்சை உள்ளிழுக்கும் சப்தத்தைக் கேட்டுத்தான் பிரிசில்லா முழுவதுமாக முழித்துக்கொண்டாள். “அக்கா? என்னக்கா? என்னாச்சுக்கா?” பாய்ந்து எழுந்து வந்து அவள் தோளைப் பிடித்து கன்னத்தோடு கன்னம் வைத்து அந்தக் காட்சியை பார்த்தாள். அவளும் பேச்சறுந்து நின்றாள்.

ஃபிலோமினாவின் படுக்கை அளவுக்கே பெரிய தாளில் வரையப்பட்டிருந்தது அந்த ஓவியம். கண்ணை நிறைக்கும் வான்நீலப்பின்னணி. அதிலிருந்து தாளைக் கிழித்து பாய்ந்து எழுந்து வருவதுபோல், மண் நிறத்தில் ஒரு குதிரை.

அந்தக்குதிரை தன் தலையை கம்பீரமாக பின்னால் தள்ளியிருந்தது. ஏதோ அரிய நறுமணத்தை நுகர்வதுபோல் மூக்கை உயர்த்தியிருந்தது. அன்பு மிகுதியில் கைகளை விரித்து பாய்ந்தோடி வருவதுபோல முன்னங்கால்களை ஒன்றின்மேல் ஒன்று தூக்கியபடி உடலே ஓர் அசைவென நிகழ்த்தி நிறுத்தியிருந்தது. அந்த அசைவுடன் குதிரையின் ஒவ்வொரு பாகமும் எப்படியோ ஒத்திசைந்து சமன் கொண்டிருந்தது.

தன்னுடைய வெளிப்பாட்டை தானே கண்டு ஆச்சரியப்படுவதுபோல் இருந்தது அதன் முகபாவம். பாதி கனைப்பில் தலை திருப்பி சிலுப்பி வாய் திறந்து ஐயோ! என்று களிப்புடன் சிரித்தது. பல்வரிசை அதன் முகத்தை இரு துண்டுகளாக வெட்டியது.

அந்தக் குதிரை தன் முகத்தைத்திருப்பி ஃபிலோமினாவின் கண்களை சந்தித்தது. மின்மினிக்கண்கள். பொன்நிறத்தில் இரண்டு ஒளிப்புள்ளிகள். பிரிசில்லா மெதுவான குரலில், “ஓ!” என்றாள். அவள் குரல் வண்ணத்துப்பூச்சிபோல் படபடத்தது. “அக்கா! அக்கா! உனக்கு தெரியல?” என்றாள். “பாரு! பாரு!” ஃபிலோமினா அப்போது அதை பார்த்துவிட்டிருந்தாள்.

அதன் பிடரி மயிர் பின்னலாக நீண்டது. விலாப்பகுதியில் பளபளக்கும் தோல் நெளிநெளியாக வழிந்தது, அவள் அணியும் ஷாலைப்போலவே. மினுமினுக்கும் கண்களும் விளையாட்டில் சுழலும் வாலும் சிரிப்பில் திறந்த வாயும் தெறித்த குதிரைப்பற்களும் அவள் நன்கு அறிந்தவை. கண்ணாடிகளுக்கப்பால், நீர்பிம்பங்களுக்கப்பால், மலைகளுக்கப்பால், மேகங்களுக்கப்பால், ஒரு முகம், எங்கேயோ வாழும் ஒன்று…

ஃபிலோமினா நிமிர்ந்தாள். “உன் மஞ்ச பிளௌஸ் எங்கடீ?” என்றாள். பிரிசில்லா புரியாமல் திக்கினாள் “அக்கா… என்ன கேட்ட?”

ஆனால் ஃபிலோமினா காத்திருக்கவில்லை. எழுந்து போய் அவள் அலமாரியை திருப்பிப்போட்டாள். தேடி பிரிசில்லாவின் ரவிக்கை ஒன்றை எடுத்தாள்.

தேன் நிறமா? செண்பகப்பூ நிறமா? அல்லது மின்மினியின் ஒளிநிறமா? அவள் அந்த மஞ்சள் ரவிக்கையை கைகளில் ஏற்றி அணிந்து கண்ணாடியில் சரிபடுத்திக்கொள்வதை பிரிசில்லா என்ன சொல்வதென்று தெரியாமல் பார்த்துக்கொண்டு பதைபதைக்க நின்றாள்.

ஃபிலோமினா நீலநிறப்புடவையை எடுத்துப் பிரித்து விறுவிறுவென்று உடுத்தினாள். ஆகாயநீலம். மஞ்சள் நிறத்தில் ஒளிப்புள்ளிகள். மடிப்புகள் சரியாக விழாதபோது பிரித்து மீண்டும் கட்டினாள். பொறுமையின்றி உச் என்றாள். பிரிசில்லா அவளையறியாமலேயே ஓடிவந்து காலருகே அமர்ந்து அடிமடிப்புகளை சரிசெய்தாள்.

நீவி மடிப்புகளை சீராக அடுக்கி முந்தானையிட்டதுமே ஃபிலோமினா வேறொருத்தியாக வளர்ந்துவிட்டது போலிருந்தாள். அந்த வேறொருத்தி கைகளில் வளையல் அடுக்கினாள். கண்ணுக்கடியில் மையிட்டுக்கொண்டாள். கூந்தலை காதோரம் எடுத்துச் சுருட்டி பின்தலையில் ஒருநொடியில் பொருத்திக்கொண்டாள்.

குரல் கம்ம, “அக்கா அல்லிப்பூ மாதிரி இருக்க தெரியுமா,” என்றாள் பிரிசில்லா. அந்த வார்த்தைகள் தன் வாய்க்குள் எங்கிருந்து வந்தது என்று அவளே வியந்தாள். அங்கு நடப்பது எல்லாமே தன் வயதை மீறிய ஒன்று என உணர்ந்தாள்.  ஃபிலோமினாவுக்கு எதுவுமே காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.

மிகுந்த யோசனைக்குப் பிறகு, இன்னும் மெதுவாக, “அக்கா, இந்நேரத்துக்கு அந்தப் பையனோட டிரெயின் கிளம்பியிருக்கும்னு நினைக்குறேன்,” என்றாள் பிரிசில்லா. ஃபிலோமினா கண்ணாடிக்குள்ளிலிருந்து, “ம்?” என்றாள்.

நிறைவடைந்ததும், பிரிசில்லா நோக்க, அவள் நிதானமாக வீட்டின் நீளத்தைக் கடந்து நடந்து வந்தாள். வாசல் கதவைத் திறந்து போட்டு நிலைப்படியில் நீலப்புடவை சரசரக்க நின்றாள். சாரல் நின்று மேகங்கள் பிரிந்துசென்றுகொண்டிருந்தன. மழை புத்துயிர் புகட்டியிருந்த சாலையில் அவள் பாதத்தை வைத்தபோது மேகங்களுக்கு இடையே ஒரு ஒளிக்கீற்று பிளந்து வந்து பேரழகியாகத் தெரிந்த ஃபிலோமினாவைத் தொட்டது.