இது வைரமுத்துவின் இலக்கியத் தகைமை சார்ந்த விவாதமா?
வைரமுத்து மீது பாலியல் தொந்தரவு சார்ந்த குற்றச்சாட்டுகள் சக கலைஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ள வேளையில், அவரைப் பற்றித் தமிழ் இந்துவில் அவர் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு சிறப்புப் பக்கங்கள் வெளியிடப்பட்டன.
அது அவரை கௌரவிக்கும், புகழும் விதமாக அமைந்திருந்தன.
இதை பற்றி கவிஞர் பெருந்தேவியின் பதிவு வாயிலாக என் பார்வைக்கு வந்தது.
எதிர்ப்பு எழுந்ததன் பெயரில் தற்போது அவை பின்வாங்கப்பட்டுள்ளன.
தமிழ் இந்து ஒரு வெகுஜன பத்திரிக்கை. பல லட்சப்பிரதிகள் விற்பது. எல்லா தளத்து மக்களால் படிக்கப்படுவது. ஐந்து நிமிடம் பத்திரிக்கையைப் புரட்டிப்பார்க்கும் ஒருவருக்குள் ஓர் ஆளுமையின் இடம், மாண்பு, ஆதிக்கம் குறித்த ஒரு விரைவுச்சித்திரத்தை உருவாக்க வல்லது.
வைரமுத்து அவர்களின் புலமையைப் பற்றிய சார்புகளற்ற ஆழமான திறனாய்வு விவாதம் ஒன்றும் இந்து தமிழில் நடைபெறவில்லை. அவரைக் கௌரவிப்பதே, பொதுச்சமூகத்தின் முன் அவர் இடத்தை மேலும் அடிக்கோடிட்டு சுட்டுவதே அந்தச் சிறப்புப்பகுதியால் செய்யக்கூடியது, அதுதான் செய்யப்பட்டது. புகழாரம், encomium தான் அது.
இந்து தமிழ் சிறப்புப்பகுதியில் இடம்பெருவதொன்றும் இலக்கியத் தகைமைக்கான சான்றல்ல.
வாழும் நவீனக் கவிஞர்கள் யாருக்காகவாவது (ஏன், கடந்த மார்ச் 15 மனுஷ்யபுத்திரன் பிறந்தநாள் கூடத் தாண்டிப்போனதே?) வருடா வருடம் சிறப்புப்பக்கம் வெளியிடுகிறதா என்ன? அல்லது தமிழ் இந்துவில் சிறப்பிக்கப்பட்டதனால் வைரமுத்துவின் இடம் தன் இடத்தை விடப் பெரியது என்று எந்த நவீனக்கவிஞரும் சொல்ல முன்வருவாரா?
ஆகவே இது இலக்கியத் தகைமை சார்ந்த விவாதம் அல்ல.
அப்படி ஆக்கப்படுவது இதன் மையப்பேச்சுப்பொருளிலிருந்து திசைநகர்வையே உருவாக்குகிறது என்று நினைக்கிறேன். மற்ற அஜெண்டாக்களை இதன்மூலம் விவாதமாக்கி தீர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பமல்ல இது.
அவர் பாலியல் குற்றம் புரிந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டார் என்பதைவைத்து ஒரு கவிஞராக அவர் இலக்கியத்தகைமை தீர்மானமாகிறது என்பதல்ல இங்கே சங்கதி.
அவர் பாலியல் குற்றம் புரிந்ததாகக் பதிமூன்று தனித்தனி நபர்களால் குற்றம்சாட்டப்பட்டார் என்பதைவைத்து ஒரு மனிதனாக, ஓர் ஆணாக அவர் சமூக மாண்பும் அந்தஸ்தும் மதிப்பிடப்படவேண்டும் என்பதே இங்கே கோரிக்கை.
அவரைப்போன்றோருடைய அதிகார அராஜகங்கள் கேள்விக்குள்ளாக்கப்படவேண்டும். இதற்கும், அவருடைய இலக்கிய இடம் மற்றும் மேதமை (அல்லது அதன் இன்மை)க்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை.
Pingback: வைரமுத்துவும் தமிழ் இந்துவும் | ஆகாசமிட்டாய்