வைரமுத்துவும் தமிழ் இந்துவும் – 2.

கலைஞர்களும் ஒழுக்கமும்

இந்த விவகாரத்தை ஒட்டி ஒரு கேள்வி மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது.

அவர் ஒரு புகழ்பெற்ற பாடலாசிரியர். கவிஞர். அவர் பங்களிப்பை கொண்டாடும் முகமாக ஒரு சிறப்புப்பக்கம் வெளியானால் என்ன?

அவர் தனி வாழ்க்கை, ஒழுக்க நியமக்குறைகள், எப்படிப் பட்டதாகவென்றாலும் இருக்கட்டுமே? கலைஞர்கள் தாம் அராஜக வாழ்க்கைமுறை கொண்டவர்களாயிற்றே? அது அவருடைய கலைசார் பங்களிப்பை குறைப்பதில்லையே? பாப்லோ நெரூதா உள்ளிட்ட எத்தனையோ பெருங்கலைஞர்கள் செய்யாததையா வைரமுத்து செய்துவிட்டார்? அதற்காக அவர் கலைப்பங்களிப்பு இல்லாமல் ஆகிவிடுமா? – இவ்வாறு கேட்கிறார்கள்.

அதாவது –

கலைஞன் என்பவன் சற்று காமவெறியனாகத்தான் இருப்பான். அதற்காக அவர் கலைப்பங்களிப்பை நிராகரிப்பாயா? – என்பதுதான் கேள்வி.

இது இலக்கியத் தகைமை பற்றிய விவாதம் அல்ல என்று முன்பே சொல்லியாகிவிட்டது.

இருந்தாலும், இங்குத் தெளிவுபடுத்த மற்றொரு அம்சம் இருக்கிறது. அது ஒரு கலைஞரின் தனிமனித ஒழுக்கத்துக்கும், அவர் கலை ஆகிருதிக்குமான உறவு. அந்தப்புள்ளியில் முன்னெடுத்து சில சொற்கள்.

*

முதலில் ஒருவரின் தனிவாழ்க்கை ஒழுக்கத்தை முன்னிட்டு அவருடைய படைப்புகள் அளவிடப்படவேண்டும் என்று யாரும் சொல்லவரவில்லை.

ஒருவர் எத்தனை அராஜகமான அலங்கோலமான தனிவாழ்வை மேற்கொண்டாலும், அதை வைத்துக்கொண்டு என்னதான் பாவலா செய்து போலிகெத்துக் காட்டி சுழல் வந்தாலும், அதனால் மட்டும் அவர் படைப்பாற்றல் மேம்பட்டுவிடுமா என்ன? மது, போதை, பாலியல் சுதந்திரம், யோகம், தாந்திரீகம், தியானம், அரசியல் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும். அதில் ஈடுபடுவது அவரவர் தனி விருப்பம் சார்ந்தது. வினோதமான வாழ்க்கையமைப்புக்கும், அது சார்ந்த பாவனைகளுக்கும், படைப்பாற்றலுக்கும் நேரடியான சம்பந்தம் இல்லை. அளவுகோல் என்றால் அங்கு படைப்பு மட்டுமே செல்லுபடியாகும்.

இதை யாரும் மறுக்கவில்லை.

*

அப்படியென்றால் கலைஞனின் ஆளுமையும், பண்புக்குறைகளும் மாண்புக்குறைச்சல்களும் ரசிகனுக்கு ஒரு பொருட்டே கிடையாதா?

பொருட்டுதான்.

நுண்ணுணர்வு கொண்ட ரசிகர்கள் தங்களைப் பாதித்த கலைக்கும், அதைப் படைத்த கலைஞனின் தனிப்பட்ட வாழ்வுக்குமான உறவை எப்போதும் பரிசீலிக்கக்கூடியவர்கள். ஒரு வகையில் இது மேலதிகமான வாசிப்பு. கலைஞனின் வாழ்வு படைப்பின் இலட்சியங்களுடன் முறண்படுவதனாலேயே ரசிகனுக்குள் பெரிய நகர்வுகள் அமைய வாய்ப்புள்ளது.

போன வருடம் மீடூ விவகாரம் உலகெங்கும் சூடுபிடித்த சமயத்தில், The Paris Review சிற்றிதழில் ஒரு கட்டுரை வெளிவந்தது. “What do we do with the art of monstrous men?” என்ற அந்தக் கட்டுரை, எழுத்தாளர் கிளேர் டிடேரோவால் (Claire Diderot) எழுதப்பட்டது.

அதில் அவர் கலையையும் கலைஞனையும் நம்மால் பிரித்தறிய முடியுமா என்ற கேள்வியை எழுப்புகிறார். நாம் ரசிக்கும், வழிபடும் மேன்மை பொருந்திய கலையாளுமைகள் பலரும் மோசமான, அருவருக்கத்தக்க மனிதர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் கலையில் பேரழகு வெளிப்படும் அதே நேரத்தில் தனி வாழ்வில் கீழ்த்தனமாக வெளிபட்டிருக்கிறார்கள். இந்தச் சகதியிலிருந்தா அந்தத் தூய்மையான உண்மையான ஒன்று வெளியாகிறது என்று நுண்ணுணர்வுள்ள ரசிகன் அல்லல்படுகிறான். அந்தக் கலை நிகழ்வை இனி எவ்வாறு உள்வாங்கிக்கொள்வது, தனதாக்கிக்கொள்வது என்று துடிக்கிறான்.

“A man must be a very great genius to make up for being such a loathsome human being.” ஹெமிங்வேயின் காதலி மார்த்தா கெல்ஹார்ன் அங்கதமாகச் சொன்னது இது.

மேதமை ஒருபக்கம். தனிமனிதனின் அருவருக்கத்தக்க நிலைப்பாடுகள், செயல்பாடுகள், மறுப்பக்கம்.

எப்படி ஒரு மேதையின் பங்களிப்பை அவர் தனிவாழ்வை வைத்து மதிப்பிடக்கூடாது என்று சொல்கிறார்களோ, அதே போல் அவர் தனிமனித அருவருப்புகளை அவர் மேதமையை வைத்துக் கழித்துவிடவேண்டும் என்று கோறுவதும் சரியாகப் படவில்லை. கலைப்பிரியர்களுக்கு இது சிக்கலான உணர்ச்சிதான்.

*

என் பிரிய தால்ஸ்தாயே சிறந்த உதாரணம். அன்றைய, இன்றைய ஒழுக்கவியலில் வைத்து பார்க்கும் போது ஒழுங்கற்ற வாழ்வுகளை மேற்கொண்டவர் தான் அவர். தால்ஸ்தாயின் ஆக்கங்களிலேயே அது பதிவாகியிருக்கிறது. திருமணத்திற்கு முன் தன் நிலத்தில் வேலைசெய்த பெண்ணுக்கு பிள்ளையைக் கொடுத்து விலகிவிடுகிறார். மார்பில் சீழ்கட்டி வலியில் துடிப்பதால் பால் கொடுக்க முடியாமற்போன தன் மனைவியை நல்ல குடும்பத்துப்பெண்ணா நீ என்று ஏசுகிறார். பழமைவாதியாக, காமாந்தகராக, சகமனிதருடன் என்னேரமும் உரச்சலிடுபவராகவே அவர் இருக்கிறார். ஒரு மனிதனாக ஐந்து நிமிடம் அவரைச் சகித்துக்கொள்ளமுடியுமா என்று தெரியவில்லை.

ஆனால் அவர் என்னுடைய எழுத்தாளர். என் ஆழத்தில், என் கற்பனையில் அவர் வகிக்கும் இடம் என்ன என்று நான் அறிவேன். அவர் ஆக்கங்களை அவர் தனிவாழ்வையோ, ஆளுமையையோ கொண்டு எவராலும் நிராகரிக்க முடியாது.

அதே நேரம், அவருடைய தனிமனித நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதோ, அக்கலைஞனின் மேதமைக்குக் கொடுக்கப்படும் ‘சின்ன விலை’ என்று நியாயப்படுத்துவதோ, ஏற்கத்தக்கதாகத் தோன்றவில்லை.

பாதிக்கப்பட்ட ஒருவரிடம், ‘அவர் மேதை, ஆகவே அவர் கோணல்களைச் சகித்துக்கொள்’ என்று நான் ஒருநாளும் அறிவுறுத்த மாட்டேன். அந்த எண்ணத்தில் உள்ள அநீதியை அசிங்கமானதாக உணர்கிறேன்.

தல்ஸ்தாயின் குழந்தைக்குத் தாயான பெண் ஒரு நவீன வழக்குமன்றத்தில் தோன்றி அவர் செய்த செயலுக்கு நியாயம் கோரினால், அதை அவள் பெற வேண்டும் தானே?

அவன் கலை ஆளுமை எப்படிபட்டதாக இருந்தாலும், அவன் செய்த செயல்களின் பலனை அனுபவிக்காமல் போனால் என்ன நியாயம் அது?

இதனால் தால்ஸ்தாய் கலங்கமாட்டார் என்பது இதன் மறுபக்கம். எல்லா மகத்தான கலைஞர்களுக்கும், தங்கள் மீறல்களையும் சரிவுகளையும் நேருக்கு நேராக நோக்கிப் பரிசலிக்கும் மன அமைப்பு உள்ளது என்பது வரலாறு. தால்ஸ்தாயின் எழுத்தே அதற்குச் சான்று. அவர் எழுத்தில் உண்மை நிற்பதற்கும் அதுவே அடிப்படை விசை.

*

வைரமுத்து தல்ஸ்தோய் போன்ற மேதையல்ல. அவருக்கு ஆதரவாக வரும் குரல்களே அதை ஏற்றுக்கொள்வார்கள்.

தல்ஸ்தாய் போன்று தன் தனிவாழ்க்கையை மறுசிந்தனையில்லாமல் திறந்து வைக்கும் பேராண்மையும் அவரிடத்தில் இல்லை என்பது அடுத்தது.

ஆனால் தால்ஸ்தாயாக இருந்தாலும் சரி, வைரமுத்துவாக இருந்தாலும் சரி. அவர்களுடைய தனிமனித ஒழுக்கத்தரத்தால் – அது வாசகருள் என்ன வகையான உணர்வுகளை உருவாக்கினாலும் – அவர்களுடைய படைப்புத்தரம் மேம்படவில்லை, குறையவுமில்லை.

*
இறுதியாக, வைரமுத்துவுக்கு எதிரான குற்றச்சாட்டு, அவர் ‘ஒழுக்கம்கெட்டவர்’ என்பதல்ல. அதெல்லாம் அவருக்கும் அவர் மனசாட்சிக்கும் இடையிலானது..

அவர் இலக்கியத்தகைமை அல்லது மேதமையும் இங்கே விவாதப்பொருள் அல்ல. அதற்கும் அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கும் சம்பந்தம் இல்லை.

1 thought on “வைரமுத்துவும் தமிழ் இந்துவும் – 2.

  1. Pingback: வைரமுத்துவும் தமிழ் இந்துவும் | ஆகாசமிட்டாய்

Comments are closed.