வைரமுத்துவும் தமிழ் இந்துவும் – 3.

வைரமுத்து மீதான குற்றச்சாட்டு என்ன?

தன்னுடைய துறையில் வேலை பார்க்கும் ஒரு ஊழியரை, வேலை நேரத்தில், அவருடைய விருப்பமின்றி, பாலியல் தொந்தரவு செய்து வற்புறுத்தி, அது பலிக்காதபோது மிரட்டியும் இருக்கிறார். இதுதான் அவர் பெயரில் உள்ள குற்றச்சாட்டு.

இதை ஒன்றல்ல, இரண்டல்ல, பதிமூன்று நபர்கள் வாக்குமூலமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர்கள் அனைவரும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் இல்லை. வெவ்வேறு பின்புலங்களைச் சேர்ந்தவர்கள். ஒருவருக்கொருவர் முன் தொடர்பு இல்லாதவர்கள். சிலர் பாடகிகள். சிலர் அவருக்கு சொந்தமான பெண்கள் விடுதியில் தங்கிப் படித்த நபர்கள். ஒவ்வொருவராகக் குறி பார்த்து நேரம் பார்த்து காத்து அணுகியிருப்பதாகத் தோன்றுகிறது. இது எந்தக் கலைச்செயல்பாட்டில் அடக்கம்? கவிதைக்கும் இந்தச்செயலுக்கும் என்ன தொடர்பு?

பொய் சொல்கிறார்கள், இது சதிவேலை என்கிறார்கள் அவருக்கு வரிந்து கட்டி வருபவர்கள். சரி தான், அவர் மானத்தைக் காத்தாகவேண்டுமே, அப்படித்தான் சொல்வார்கள். ஆனால் சந்தேகம் என்று வந்துவிட்டதே? அதுவும் இத்தனை பல்குரல்தன்மையோடு?

பெண் என்றால், இந்நேரத்திற்கு, ‘அப்படிப் பேச்சு எழாத விதமாக நீ நடந்திருக்க வேண்டும்’ என்று யாராவது அறிவுரை கூறியிருப்பார்கள். இவருக்கும் இதையே தான் சொல்லத் தோன்றுகிறது. ஒழுக்கக்கேடு, வெட்கக்கேடு. இப்படிப் பேச்சு வரும்படியாகவா உங்கள் நடத்தை இருந்திருக்கவேண்டும்? 🙂

சரி, குற்றம்சாட்டப்பட்டவரின் தரப்பில் இது வெறும் ஒழுக்கப்பிரச்சனையா?

ஒழுக்கப்பிரச்சனை என்றால் அது அவர், மிஞ்சிப்போனால் அவர் குடும்பம் மட்டுமே சார்ந்தது.

பாடகி சின்மயி முதலியோர் இந்தப்பிரச்சனைகளை வெளியிட்ட மீடூ இயக்கம் நடந்து இந்த அக்டோபர் வந்தால் இரண்டு வருடம் ஆகப்போகிறது.

இவ்விரண்டு வருடங்களில் தனக்குத் தமிழ்ப்படங்களில் பாடும் வாய்ப்புகள் குன்றிவிட்டதாகவும், இப்பிரச்சனையைத் தொடர்ந்து டப்பிங் யூனியனிலிருந்து வெளியேற்றப்பட்டதால், தமிழ்ப்படங்களுக்கு டப்பிங் பேச வாய்ப்புகள் அரவே இல்லையென்றும் அவர் பதிவுசெய்திருக்கிறார்.

ஆக இது யாரோ தனியொரு ஆளின் ஒழுக்கம் சார்ந்தது அல்ல. அது அவன் பாடு.

ஒரு கலைஞனின் காம ஈடுபாடோ, கட்டற்ற வாழ்க்கையமைப்போ அல்ல. அதுவும் அவன் பாடு.

இது இன்னொருவரின் உரிமைகளை, வாய்ப்புகளைப் பரிப்பது.

தன்னுடைய வெறியை தீர்த்துக்கொள்ளும் வேட்கையில், முன்னால் யார் இருக்கிறார், நம் செயலின் விளைவுகள் சம்பந்தப்பட்டவரை எந்தளவு பாதிக்கும் என்று சற்றும் அக்கறையில்லாது கூர்கெட்டத்தனமாகச் செயல்பட்டது தான் குற்றம்.

சின்மயியையோ, வேறெந்த பெண்ணையோ அடைய முயற்சித்ததால், மிரட்டியதால், வைரமுத்துவின் பணிகளுக்கோ கலைச்சயல்பாடுகளுக்கோ பெரிதாக எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆனால் ஒரு பெண்ணுக்கு, குறிப்பாகக் கலைத்துறையில் ஈடுபட எண்ணமுள்ள பெண்ணுக்கு, தன்னுடைய ஆரம்பகட்டத்தில் இப்படிப்பட்ட அனுபவங்கள் அவளை அந்தத்துறையிலிருந்தே துரத்தி அடிக்க வல்லது.

ஒருவன் தொடர்ந்து தொந்தரவு கொடுக்கிறான் என்றால், அவனுடன் வேலை பார்க்க முடியாது. அல்லது சகித்துக்கொண்டு வேலை பார்த்தாகவேண்டிய கட்டாயம் இருந்தால் அது உருவாக்கும் மன உளைச்சல் சாதாரணமானதல்ல.

ஒரு கலைஞன் தன் மனதின் இடைவெளிகளுக்குள் காற்றாய் உலவாமல் அசலாக எதனை வெளியே கொண்டுவருவது?

கலை வெளிப்பாடு என்பதே கட்டற்றதாக இருக்கவேண்டும், அப்போதுதான் நிஜமானவை, ஆத்மார்த்தமானவை வெளிவரும் என்று எத்தனை பேச்சுக்கள் எழுகின்றன இங்கே!

கலைஞன் என்பவன் வடிகட்டிகளில்லாமல் வெளிப்படையாகப் பேசுவான், கோபப்படுவான், ஆவேசமடைவான், இங்கிதமற்றவனாக இருப்பான், தன் இச்சைகளில் திளைப்பான் என்றெல்லாம் லட்சணம் கூறப்படுகிறதே. அப்போதுதான் அவன் கட்டற்ற படைப்பு மனநிலையில் இருப்பான் என்று நியாயங்கள் பேசப்படுகிறதே.

இந்த அளவுகோல்கள் அத்தனை புனிதமானவையென்றால் அவை பெண் கலைஞர்களுக்கும் செல்லுபடியாக வேண்டும்தானே?

மாறாக நம் சூழலில் பெண் கலைஞர்கள் ஒவ்வொரு நொடியும் இந்தக் காரணத்தால், தங்களை மனதார ஒடுக்கிக்கொள்ளவேண்டியுள்ளது. யாரிடம், எதை, எவ்வளவு, எப்படிப் பேசவேண்டும், எந்த உடையை எங்கு எப்படி அணிய வேண்டும், கொஞ்சம் பேதையாக நடந்துகொள்வதே இந்தச் சூழ்நிலையில் பாதுகாப்பானதா, குரலை சற்று உயர்த்தினால் அவன் கோபித்துக்கொள்வானா, அப்போதே இன்னும் கடுமையாக ‘நோ’ சொல்லியிருக்க வேண்டுமா, ‘நோ’ சொன்னாலும் ‘யெஸ்’ என்று எடுத்துக்கொள்கிறானே, நான் தான் இன்னும் நிதானமாக இருந்திருக்கவேண்டுமோ என்றெல்லாம் கணக்கு வைத்துக்கொண்டே இருந்தால் – கலை எங்ஙனம்?

எழுதவோ பாடவோ படம் பிடிக்கவோ வரும் பெண்கள் ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்ய அத்துறையில் நிலைபெற்றவர்களுடன் உரையாடாமல் அது சாத்தியமாவதில்லை – இளம் ஆண்களைப்போலத்தான். ஆனால் என்னேரமும் தன் பாதுகாப்பை நோக்கிய கவனம் இருந்துகொண்டே இருந்தால் அவர்களால் இயல்பாக இருக்க முடியாது. இளமையும் கனவும் வேகமும் கொண்டு வருபவர்கள் ஆளும் பெயரும் தெரியாமல் காணாமற்போவதற்கு இவ்வகை அனுபவங்கள் பெரிய காரணம்.

நம்முடைய அரதப்பழைய கண்ணகி மாதவி டெம்பிளேட்டில் கலை ஈடுபாடு கொண்ட பெண்கள் எப்போதும் மாதவிகளாகவே பார்க்கப்படுகிறார்கள். இங்கு நிகழும் மொத்த உரையாடலும் இந்த ஊகத்தின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது.

கலைஞனின் உரிமைகள், அவன் கலையை அளவிட எது அளவுகோல் என்று பொங்கி வரும் கவிஞர்கள், சின்மயி போன்ற ஒரு இசைக்கலைஞர் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்ததற்காக, ஒவ்வொரு நாளும் “நீ மட்டும் ஒழுக்கமா?” என்று கேட்கப்படுவதை என்றாவது எதிர்த்திருக்கிறார்களா?

கலைஞர்களின் ஒழுக்க நிர்ணயங்களைப் பற்றி நீட்டி முழக்கும் ஆசாமிகள், கலைஞர்களின் அராஜக வாழ்வுகளைக் கொண்டாடும் குடிமைந்தர்கள், ஒவ்வொரு முறையும் ஒரு பாடகியின், நடிகையின், எழுத்தாளரின் ஒழுக்கம் கேள்விக்குள்ளாக்கப்படும்போது எங்கே போகிறது உங்கள் தர்க்கநியாயங்கள்?

ஆண் கலைஞன் ஒழுக்கம்கெட்டவன், அயோக்கியன், காமவெறியன் என்று எப்படியும் இருக்கட்டும், அவன் கலைஞன், அவன் கலையைப்பார் என்கிறீர்.

பெண் கலைஞரோ முதலில் பெண். தன் கலைச்செயல்பாடு நிமித்தமாகச் சந்தித்த ஒருவர் தன்னைத் தொந்தரவுபடுத்தினாலும், அங்கே தான் கற்புடையவள் என்று தன்னை முதலில் நிறுபித்துக்கொள்ளும்படி நிர்பந்திக்கப்படுகிறாள்.

கலை கொண்டவருக்குக் கலை ஒன்றே கற்பு, காப்பு எல்லாம்.

ஆனால் நம் சமூகமோ ஒரு பெண் கலைஞர் ஒவ்வொரு நொடியும் தன் முந்தானையை விரித்து ‘நான் கற்புள்ளவள்! நான் கற்புள்ளவள்!’ என்று மடிப்பிச்சை கோரவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. எத்தனைப்பெரிய அவலம் அது.

ஆகவேதான் கலைஞர், பாடகி சின்மயி ஒரு குற்றச்சாட்டைப் பொதுவில் கூறியதற்க்காக தனக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் பறிக்கப்பட்டு ஒதுக்கிவைக்கப்படுகிறார். வைரமுத்துவின் பிறந்த நாள் வாழ்த்துக்களில் ஒரு கிளுகிளுப்புக்காக அவர் ‘டாக்’ செய்யப் படுகிறார். “ஏன் அப்போதே சொல்லவில்லை? உங்கள் இருவருக்கு நடுவே என்ன நடந்தது” என்று சமூக ஊடகங்களில் சரமாரியாகக் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறார்.

மாறாக சின்மயி உட்படப் பலரால் குற்றம்சுமத்தப்பட்டவர் எந்தப் பாதிப்பும் அடையாமல் சகல அதிகாரங்களுடன் வலம் வருகிறார். பழைய ஆதரவுகள், தொடர்புகள், செல்வாக்குகள் அப்படியே நீடிக்கின்றன. பிரபல நாளிதழ் அவருக்கு முழுப்பக்க சிறப்பப்பகுதிகளை வெளியிட்டு அவர் மேம்பாட்டுக்கும் புகழுக்கும் உதவுகின்றன. அவருக்கு வக்காலத்து வாங்க சமூக ஊடகப் பிரபலங்கள், பின்னால் கட்சி ஆதரவு. இதில் உள்ள அதிகாரச் சமநிலையின்மை உங்களுக்குப் புரியவில்லை என்றால் கண்ணை மூடிக்கொண்டே தூங்குகிறீர்கள் என்று பொருள்.

கவனிக்க – இது அவர் ‘இலக்கிய இடம்’ சார்ந்த விவாதமே அல்ல. முழுக்க முழுக்க இப்படிப்பட்ட அயோக்கியத்தனத்தைச் சகித்து, வருடிக்கொடுத்து, circlejerk செய்யும் அதிகார ஆணவ வட்டங்கள் – தமிழ் இந்து, அவரை ஆதரிக்கும் கட்சிப்பின்னணிக்கொண்டவர்கள், ஃபேஸ்புக் அறிவுஜீவிகள் – சார்ந்த விமர்சனம்.

1 thought on “வைரமுத்துவும் தமிழ் இந்துவும் – 3.

  1. Pingback: வைரமுத்துவும் தமிழ் இந்துவும் | ஆகாசமிட்டாய்

Comments are closed.