ஆசிரியர் குறிப்பு –
அக்டோபர் 2018-ல் மீ டூ என்ற இயக்கத்தின் வாயிலாக, கலைத்துறை உள்ளிட்ட பல பொதுத்துறைகளில் இயங்கும் பெண் உறுப்பினர்கள், தங்கள் பணி நிமித்தமாக தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை பகிர்ந்துகொண்டார்கள். இவ்வகை தொந்தரவுகளும் சிக்கல்களும் பெரும்பாலும் தனிமையில், சாட்சிகளில்லாமல் நடைபெறுபவை. நாசூக்காக நிகழ்த்தப்படுபவை. சட்டத்தின் முன்னால் நிறூபணம் செய்யக் கடினமானவை. ஆனால் பெண் ஊழியர்களின் வேலைச் சுதந்திரத்தை ஆழமாக குறிவைத்து முறியடிக்கும் வல்லமை கொண்டவை.
இந்த அலையின் பகுதியாக பல பெயர்கள் வெளிவந்தன. கவிஞர் வைரமுத்து அவர்களின் பெயர் கிட்டத்தட்ட 13 வெவ்வேறு நபர்களால் சுட்டப்பட்டது. தன்னை விட வயதிலும் வாழ்வனுபவத்திலும் புரஃபெஷனலாகவும் இளைய இடத்தில் இருக்கும் பெண்களை இவர் குறிவைத்து வேட்டையாடியதாக குற்றச்சாட்டுகள் வெளிவந்தன. அதிகாரப்பூர்வமாக எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை, ஆகவே எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதே நேரம், பெரும்பாலும், அவருடைய சக ஊழியர்களும் நண்பர்களும் பொதுவாக அவர் பணிப்புரியும் தமிழ்ச் சினிமா சூழலும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பெரிதாக எடுத்துக்கொண்டதாகவோ, கேள்விக்கு உட்படுத்தியதாகவோ தெரியவில்லை. அப்படி செய்ய வேண்டிய நிர்பந்தமோ தார்மீகக் கடமையோ தங்களுக்கு உள்ளதா என்ற பரிசீலனையும் நடந்ததாகத் தெரியவில்லை. அதைப் பற்றிய விவாதங்களை நாசூக்காக தவிர்த்ததாகவே தோன்றுகிறது.
ஆகவே இது ஒரு சிக்கலான பிரச்சனை. நமக்கு முன்னால் தனித்தனியாக இத்தனை பெண்களின் வாக்குமூலங்கள் இருக்கின்றன. அவை நம் சட்டத்துடன் உரையாடும் இடத்தில் இல்லை, நம் மனசாட்சியுடன் உரையாடும் வகையில் மட்டுமே உள்ளன. இந்த பிரச்சனையில் செய்யக்கூடியது, இது மறக்கப்படாமல் மீண்டும் மீண்டும் நம் கூட்டு மனசாட்சி முன்னால் திறந்து வைக்கப்படவேண்டும் என்பது மட்டும் தான். ஒரு வகையில் இவ்வகை சிக்கல்களை பொறுத்தவரை தீர்வுகள் இல்லாத இந்த நிர்பந்தமே நம் கையறு நிலையின் அத்தாட்சி. “நியாயமார்களே நியாயமார்களே” என்று பொது மனசாட்சி முன்னால் கைநீட்டி நியாயம் கோர வேண்டியதிருக்கிறது.
போன மாதம் தமிழ் இந்துவில் வைரமுத்து அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு சிறப்புப்பக்கம் வெளியிடப்பட்டது (இப்பொழுது நீக்கப்பட்டுள்ளது). அதன் கட்டுரைகள் அவர் பணி சார்ந்த புகழ்ச்சிக்கோவைகளாகவே இருந்தன. இந்த குற்றச்சாட்டுகளை பெயருக்காகக்கூட அந்த இதழ் குறிப்பிடவில்லை. இது சார்ந்த விவாதம் எந்தத் தமிழ் mainstream media விலும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. ஆகவே இந்த சிறப்புப்பக்கம் குறித்துத் தொடங்கிய விவாதம் பிரதானமாக இதை சுட்டிக்காட்டி, மீண்டும் இந்த குற்றச்சாட்டுகள் மீது வெளிச்சமும் விவாதமும் கொண்டுவர எத்தனித்தன.
அதன் பகுதியாக எழுதப்பட்ட குறிப்புகள் இவை. முகநூலில் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
இந்த வலைத்தளத்தை இலக்கியம், கலை, தத்துவம் குறித்த என் பகிர்வுகளை மட்டுமே வெளியிடும் இடமாக பேணவேண்டும் என்று நினைத்திருந்தேன். பொதுசமூக நிகழ்வுகளை, அரசியல் சார்ந்த கருத்துகள் வேண்டாம் என்றும்.
ஆனால் இந்த விவாதத்தை பொறுத்தவரை என்னை உந்துவது ஒன்று, ஒரு தார்மீகப் பொறுப்புணர்வு, அதைத் தட்ட முடியவில்லை. இரண்டு, குறிப்பாக கலைத்துறையில் இந்நிகழ்வுகள் தொடர்வதை பற்றிய என் தனிப்பட்ட ஆர்வம். கலைத்துறையைக் குறித்து ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உள்ளது. இந்நிகழ்வுகள் இத்துறையில் நிகழும் இன்றியமையாத ஆணவமோதல்களின் ஒரு வெளிப்பாடு. ஆகவே இதைக் கடந்துபோக முடியவில்லை. இந்தக் குறிப்புகளையும் இங்கே பதிவிட்டு வைக்கிறேன்.
பொதுவாழ்வில் இயங்கும் எல்லா ஆளுமைகளையும் ஒற்றைப்படையாக அணுகாமல் முழுமையாக தொகுத்தே பார்க்கவேண்டும் தான். வைரமுத்து அவர்களை ஒரு எடுத்துக்காட்டாக எடுத்தால் அவர் சினிமாப்பணிகளை, இலக்கிய இடத்தை, மேடைப்பேச்சை, தமிழ்க்கவிஞர் என்ற பொது அடையாளத்தை கருத்தில் கொள்ளாமல் அவர் மொத்த இடத்தை வகுக்க முடியாது.
ஆனால் இந்த ஒட்டுமொத்தத்தில் அந்த பதிமூன்று நபர்களின் குற்றச்சாட்டு எங்கே நிற்கிறது, அதன் இடம் என்ன, அந்த வெளிச்சத்தில் அவர் பணிகளின் அர்த்தம் என்னவாகிறது, என்பது முக்கியமான கேள்வி. நம்முடைய ஊடகங்களை பார்த்தால், “அதனால் எதுவுமே ஆகவில்லை” என்று சொல்வதாகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது. அப்படித்தானா என்று கேள்விகேட்கும் முயற்சியாக எழுப்பப்பட்ட கேள்விகள், தர்க்கங்கள் இவை.
– சுசித்ரா, 18.8.2020
வைரமுத்துவும் தமிழ் இந்துவும் – 1
இது வைரமுத்துவின் இலக்கியத் தகைமை சார்ந்த விவாதமா?
வைரமுத்துவும் தமிழ் இந்துவும் – 2
கலைஞர்களும் ஒழுக்கமும்
வைரமுத்துவும் தமிழ் இந்துவும் – 3
வைரமுத்து மீதான குற்றச்சாட்டு என்ன?
சில்வர்ஸ்க்ரீன் இந்தியா இதழில் வெளியான கட்டுரை (ஆங்கிலத்தில், ஆசிரியர்: கிருபா கே)