மேலங்கி – ஐசக் தினேசன் (மொழியாக்க சிறுகதை)

(வல்லினம் இதழில் வெளியான சிறுகதை)

மலைகளின் சிங்கம் என்று அறியப்பட்ட மூத்த சிற்பியான லியோனிடாஸ் அல்லோரி ராஜதுரோக குற்றச்சாட்டின் பெயரால் கைதுசெய்யப்பட்டு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டபோது அவருடைய மாணவர்கள் கலங்கிப்போய் அழுது ஓலமிட்டார்கள். அவர்களுக்கு அவர் ஞானத்தந்தை. தேவதூதர். காலத்தை வென்ற அமரத்துவர். ஊருக்கு வெளியே பியெரினோவின் விடுதியில் சிலரும் கலைக்கூடங்களில் சிலரும் வீட்டுப்பரன்களில் சிலரும் என்று மறைவான இடங்களாக பார்த்து அல்லோரியின் மாணவர்கள் சிலர் கூடிக்கூடி அழுதார்கள். மற்றவர்கள் சேர்ந்து தங்கள் பிரியத்துக்குறிய ஆசிரியருக்கு விடுதலையும் பழியீடும் வேண்டி புயலில் விண் நோக்கி கை நீட்டும் வெற்றுக்கிளைகளுடைய பெருமரம்போல தங்கள் முறுக்கிய முஷ்டிகளை வான் நோக்கி ஆட்டி ஆரவாரம் செய்தார்கள்.

இந்த கொடூரமான செய்தியைப்பற்றி கேள்விப்படாதது போலவும் அப்படியே கேட்டிருந்தாலும் புரியாதது போலவும் இருந்தவன் சீடன் ஏஞ்சலோ சாண்டாசிலியா மட்டும்தான். அவனைத்தான் அனைவருக்கும் மேலாக நேசித்தார் ஆசிரியர். தன்னுடைய மகன் என்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார். சீடர்களில் அவன் மட்டும்தான் ஆசிரியரை ‘தந்தையே’ என்று அழைத்தவன். ஏஞ்சலோ சாண்டாசிலியாவின் மௌனத்தை அவனுடைய சக மாணவர்கள் தாளமுடியாத துயரின் வெளிப்பாடென்றே எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் அவனுடைய வேதனையை மதித்து அவனை தனிமையில் விட்டார்கள். ஆனால் ஏஞ்சலோவின் விலக்கத்துக்கான உண்மையான காரணம் அவன் ஆசிரியரின் இளம் மனைவி லுக்ரீசியாவின் மீது கொண்டிருந்த பெரும் மோகம் தான். அப்போது அவர்களுக்கிடையே காதல் முற்றிக் கனியத் தொடங்கியிருந்த வேளை. தன்னை முழுமையாக அவனுக்கு அளிப்பதாக அவள் வாக்குறுதி அளித்திருந்தாள்.

விசுவாசம் மீறிய மனைவியின் தரப்பிலிருந்து ஒன்றைச்சொல்ல வேண்டும். அவளை ஆட்படுத்திய தெய்வீகமான கருணையற்ற வலிமையை அவள் பல காலமாக மிகுந்த கலகத்துடனும் மன அவஸ்தையுடனும் எதிர்த்து நின்றாள். புனிதமான எல்லா நாமங்களையும் சாட்சியாகக் கொண்டு அவள் சத்தியம் செய்திருந்தாள். ஆசிரியர் மகிழாதபடிக்கு வார்த்தையோ பார்வையோ அவர்களுக்கிடையில் எப்போதைக்கும் பரிமாரப்படமாட்டாது என்று தன் காதலனையும் சத்தியம் செய்ய வைத்திருந்தாள். இருவராலும் அந்த சத்தியத்தைக் காக்க முடியாது என்று அறிந்த போது அவனிடம் பாரிஸுக்குப் போய் படிக்கச் சொல்லி கெஞ்சினாள். அவன் புறப்பாடுக்கு எல்லா ஆயத்தங்களும் நடந்தது. ஆனால் அந்த உறுதியையும் கடைப்பிடிக்கமுடியாது என்று புரிந்தபோதுதான் அவள் தன்னைத் தன் விதியின் வசத்துக்கே விட்டுக்கொடுக்க முடிவெடுத்தாள்.

நடுவர் மன்றங்களும் நீதிமான்களும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்தான். ஆனால் நம்பிக்கைமீறிய மாணவனும் அவன் சூழ்நிலையை காரணமாக சுட்டியிருக்கமுடியும். ஏஞ்சலொ அதுவரையிலான தன்னுடைய சிறிய வாழ்வில் பல காதல் விவகாரங்களில் சிக்கியிருந்தான். ஒவ்வொன்றிலும் முழுமுற்றாக தன் காமத்தின் விசைக்கு சரணடைந்திருந்தான். ஆனால் இந்த சாகசங்கள் எதுவுமே அவன் மனத்தில் ஒரு சிறு தடையத்தைக் கூட விட்டுச்செல்லவில்லை. இந்த விவகாரங்களில் ஏதோ ஒன்று அனைத்துக்கும் மேலாக முதன்மையானதாக வேண்டும் என்பது தவிர்க்கமுடியாத விஷயம். அப்படி முதன்மையாகிப்போன காதலியானவள் தன்னுடைய ஆசிரியரின் மனைவி என்பதும் மிக இயல்பான, ஒரு வேளை தவிர்க்கவே முடியாத, விஷயமாகவும் இருக்கலாம். மாணவன் ஏஞ்சலோ தன் ஆசிரியர் லியோனிடாஸ் அல்லோரியை விரும்பிய அளவுக்கு எந்த மனித உயிரையும் விரும்பியதில்லை. அவரைப்போல் எப்போதைக்கும் எந்த மனித உயிரையும் முழுமனதாக ஆராதித்ததில்லை. ஆதாம் கடவுளின் கரங்களால் சிருஷ்டிக்கப்பட்டதுபோல் தன்னுடைய ஆசிரியரின் கரங்களால் தான் சிருஷ்டிக்கப்பட்டதாக ஏஞ்சலோ நினைத்தான். அதே கைகளால்தான் அவன் தன் துணையையும் பெற விதிக்கப்பட்டிருந்தான்.

ஸ்பெயின் ராஜியத்தின் ஆல்பா நகர பிரபு பேரழகர், பேரறிவாளர். அவர் அதிகம் அழகோ அறிவோ இல்லாத சபை பணிப் பெண்ணை மணந்து அவளுக்கு எல்லா வகையிலும் விசுவாசமாக வாழ்ந்தார். இதைக்கண்டு ஆச்சரியப்பட்டு கேள்வி எழுப்பிய நண்பர்களிடம் பிரபு சொன்னாராம், “ஆல்பா நகரத்தின் சீமாட்டி என்ற பட்டத்தோடு ஒருத்தி இருந்தால் அவள்தான் இந்த உலகத்திலேயே மிகவும் விரும்பத்தக்க பெண்ணாக இருப்பாள். சீமாட்டியாக அமர்ந்திருக்கும் அந்தப்பெண்ணின் தனிப்பட்ட அழகுக்கோ அறிவுக்கோ அதனுடன் சம்பந்தம் இல்லை,” என்று. அதேபோலத்தான் நம்பிக்கைமீறிய மாணவனுக்கும். தனக்குள் இருந்த உக்கிரமான காமத்தின் விசையுடன் தனக்கு அனைத்துக்கும் மேலான லட்சியமாக இருந்த உயர்கலை இணைந்தபோது, அதனுடன் ஆசிரியரிடம் அவனுக்கிருந்த தனிப்பட்ட ஆராதனையும் கலந்தபோது அது உருவாக்கிய தீயை அவனே நினைத்தாலும் கட்டுப்படுத்தியிருக்க முடியாது.

இளையவர்கள் இருவரின் இந்த விவகாரத்தில் மூத்த சிற்பி லியோனிடாசுக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறிவிடமுடியாது. ஒவ்வொரு நாளும் தன்னுடைய பிரியத்துக்குறிய மாணவனுடனான உரையாடல்களில் அவர் லுக்ரீசியாவின் அழகை பிரத்யேகமாக முன்னிறுத்திப் பேசினார். ‘விளக்குடன் இருக்கும் சைக்கீ’ என்ற அழகான செவ்வியல் சிற்பத்தை அந்த இளம் பெண்ணை மாதிரியாக நிறுத்திச் செதுக்கியபோது அவர் ஏஞ்சலோவையும் தன் அருகே அழைத்துக்கொண்டார். அவனையும் அந்தச் சிற்பத்தை வடிக்கச் சொன்னார். அவன் உளியை தூக்கியபோது அவரே அவனுக்கு அவர்கள் முன் நின்ற உயிரும் மூச்சும் வெட்கமும் கொண்ட உடலின் அழகுகளை எடுத்துறைத்தார். செவ்வியல் கலைச் சிற்பம் ஒன்றின் முன்னால் நிற்கும் பரவசத்தோடும் உத்வேகத்தோடும் இரண்டு கலைஞர்களும் அவள் முன்னால் நின்றனர்.

மூத்த சிற்பிக்கும் இளைய சிற்பிக்கும் இடையே இருந்த இந்த வினோதமான புரிதலை பற்றிய போதம் இருவருக்குமே இல்லை. மூன்றாவது ஆள் ஒருவர் எடுத்து சொல்லியிருந்தாலும் அவர்கள் அதனை கண்டுகொண்டிருக்கமாட்டார்கள். அல்லது ஏதாவது உளருகிறான் என்று நினைத்திருப்பார்கள். அவர்களுக்குள் இப்படிப்பட்ட புரிதல் இருந்ததை அனுமானித்த ஒரே உயிர் அந்த பெண் லுக்ரீசியா மட்டும் தான். கலைஞர்களான ஆண்களின் மனத்தில் உருவாகக்கூடிய ஒரு வகையான விலகிய குரூரத்தை சற்று கிளர்ச்சியுடனும் கலகத்துடனும் அவள் கண்டுகொண்டாள். மிகவும் விருப்பத்திற்குறிய மனிதர்களைக் கூட அப்படித்தான் அவர்கள் அணுகுவார்கள் என்று ஊகித்தாள். தன் மேய்ப்பவனாலேயே கசாப்புக்கு கொண்டுசெல்லப்படும் ஆடு ஓலமிடுவதுபோல் அவளுடைய மனம் அப்போது முற்றான தனிமையில் ஓலமிட்டது.

அன்றாட வாழ்வின் போக்கில் தனக்கு நேர்ந்த சில விசித்திர நிகழ்வுகளை இணைத்து லியோனிடாஸ் அல்லோரி யாரோ தன்னை வேவு பார்க்க பின் தொடர்வதாக அறிந்துகொண்டார். தனக்கு பெரிய இடர் காத்திருக்கிறது என்று புரிந்தது அவருக்கு. அதன் பிறகு தன்னுடைய மரணத்தை பற்றியும், தன்னுடைய கலை வாழ்க்கை முடிவுக்கு வரப்போவதைப் பற்றியும் மட்டுமே அவரால் சிந்திக்க முடிந்தது. அந்த எண்ணங்களால் முழுவதும் ஆட்கொள்ளப்பட்டார். தனக்கு வரப்போகும் ஆபத்தைப்பற்றி அவர் தன்னைச்சுற்றியிருந்த எவரிடமும் பேசவில்லை. அந்தச்சில வாரங்களில் மனிதர்கள் அனைவரும் அவரிலிருந்து மிகவும் தொலைவுக்கு சென்றுவிட்டதாகவும், ஆகவே காட்சிக்கோண அளவுகளின் விதிப்படி மிகச்சிறியவர்கள் ஆகிவிட்டதாகவும் அவருக்குத் தோன்றியது. அப்போது அவர் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியையாவது முடித்திருக்கலாம். ஆனால் பணியும் கூட ஒரு திசைத்திருப்பலாகவே அப்போது தோன்றியது. அவர் கைதாவதற்கு சில நாட்களுக்கு முன்னால் தன் தனிமையிலிருந்து வெளியே வந்தார். சுற்றியிருந்த அனைவரிடத்திலும் மிக அன்பாக கனிவாக நடந்துகொண்டார். இத்தருணத்தில் அவர் தன் மனைவி லுக்ரீசியாவை ஊருக்கு வெளியே மலை மேலே திராட்சைத்தோட்டம் வைத்திருந்த தன் நண்பனின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். தான் இருந்த ஆபத்தான நிலைமையை பற்றி அவளிடம் சொல்ல அவர் விரும்பவில்லை. இருந்தாலும் அவளை அனுப்ப ஏதாவது காரணம் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. ஆகவே அவள் வெளிறி இருந்ததாகவும் அவள் உடல் நலம் தேரவேண்டும் என்றும் அதற்காகத்தான் அவளை தோட்டவீட்டுக்கு அனுப்புவதாகவும் அவளிடம் சொன்னார். அது அந்த நேரத்துக்காக உருவாக்கப்பட்ட காரணம் தான். ஆகவே அவள் அவர் சொற்களை தீவிரமாக கேட்டுக்கொண்ட விதம் அவரை புன்னகைக்க வைத்தது.  

அவள் உடனே ஆஞ்செலோவை வரச்சொல்லி தன் கணவரின் முடிவை தெரிவித்தாள். அதுவரை தங்கள் இணைவு எப்படி சாத்தியமாகப்போகிறது என்ற ஏக்கத்தில் தவித்துக்கொண்டிருந்த காதலர்கள் இருவரும் இப்போது கண்கள் வெற்றிக்களிப்பில் மின்ன ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.  தங்கள் காதல் எல்லாவற்றையும் தன் வசம் இழுத்து சுற்றி அடுக்கிவைத்துக்கொள்ளும் அரிதான காந்தக்கல் என்றும் இனிமேல் பிரபஞ்சத்தின் சகல சக்திகளும் அவர்களை இணைக்கவே செயல்படும் என்றும் அவர்கள் நம்பத்தொடங்கினார்கள். லுக்ரீசியா முன்பே அந்த தோட்ட வீட்டுக்குச் சென்றிருந்தாள். மலை வழியாக அந்த வீட்டுக்கு ஏறி வர ஒரு ரகசியப் பாதை இருக்கும் விஷயத்தை அவள் ஆஞ்செலோவிடம் சொன்னாள். அந்தப்பாதை வழியாக ஏறி அவன் நேரடியாக அவள் அறையின் சாளரத்துக்குக் கீழேயே வந்துவிடலாம். அந்த சாளரம் மேற்கை நோக்கித் திறந்திருக்கும். வளர்பிறை இரவு என்பதால் அவளால் அவன் உருவத்தை திராட்சைக் கொடிகளுக்கு இடையே கண்டுகொள்ள முடியும். அவன் கீழிருந்து ஒரு கூழாங்கல்லைத்துக்கி மேலே சாளரக்கண்னாடியில் எறிவான். அவள் ஜன்னலைத் திறப்பாள்.

பேச்சு இந்த இடத்தை அடைந்தபோது இருவரின் குரல்களும் இடரின. சமநிலையை மீட்டுக்கொள்ள ஆஞ்செலோ அந்த இரவுப்பயணத்துக்கென்றே பிரத்யேகமாக தன் நண்பனிடமிருந்து வாங்கி வந்திருந்த மேலங்கியை பற்றிச் சொன்னான். ஊதா நிறத்தில் ஆட்டின் மென்முடியால் செய்யப்பட்ட பழுப்பு நிற நூல்வேலைப்பாடுகள் அமைந்த அருமையான மேலங்கி அது. கைகளில்லாத பெரிய சால்வைப்போன்ற அந்த மேலங்கியை தோள் மீது அணிந்துகொண்டால் கண்டாமணி மாதிரி உடலைச்சுற்றி விழும். அவன் பேசப்பேச லுக்ரீசியா கேட்டுக்கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும்  லுக்ரீசியாவின் அறையில் நின்றபடியே தான் பேசினார்கள். அது ஆசிரியரின் பணியறைக்குப் பக்கத்து அறை. நடுவே இருந்த கதவு அப்போது திறந்துதான் இருந்தது. அன்றிலிருந்து இரண்டாவது சனிக்கிழமை இரவு அவர்கள் சந்திப்பது என்று முடிவானது.

இருவரும் பிரிந்தார்கள். அடுத்த ஒரு வாரத்திற்கு எப்படி ஆசிரியரின் மனம் முழுவதும் மரணம் கடந்த காலாதீதத்தின் சிந்தனைகளால் நிரம்பியிருந்ததோ அப்படி இளம் சீடனின் மனம் முழுவதும் லுக்ரீசியாவின் உடலை கொள்வதன் பற்றிய சிந்தனைகளால் நிரம்பியிருந்தது. ஒரு கணம் கூட உண்மையில் அவனை விட்டுப்போகாத அந்த எண்ணம் ஒவ்வொரு கணமும் புதிதென எழுவது போலத் தோன்றியது. மறந்து போன மகிழ்ச்சி ஒன்று திரும்ப நினைவில் எழுவதுபோன்ற தித்திப்பு. “என் சகோதரியே, அன்பே, வெள்ளைப்புறாவே, எனக்காக திறந்துகொள். என் மனம் பனித்துளிகளால் நிறைந்திருக்கிறது. என் கூந்தல் இழைகளில் இரவின் தூரல் எஞ்சியிருக்கிறது. அன்பே, நீ முழுக்க முழுக்க வெண்மையானவள். உன்னில் ஒரு சிறு மருவும் இல்லை. என் தூயவளே! ஆம், அவளுக்குறியவன் நான். என்னுடையவள் அவள்.”

முதல் ஞாயிறு காலை லியோனிடாஸ் அல்லோரி கைதாகி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த வாரம் முழுவதும் விசாரணை நடந்தது. குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தேசாபிமானியான மூத்தவர் பல வாதங்களை முன்வைத்திருக்கலாம். ஆனால் முதல் விஷயம், அரசு அவரைப்போன்ற ஆபத்தான எதிரியை இந்த முறை கண்டிப்பாக ஒழித்துவிடவேண்டும் என்று முடிவாக இருந்தது. இரண்டு, குற்றம்சாட்டப்பட்டவர் தான் அடைந்த உன்னதமான மனச்சமநிலையை குலைக்கச் சித்தமாக இல்லை. ஆகவே முதல் நாளிலிருந்தே வழக்கு எப்படி முடிவாகும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. தீர்ப்பு வந்தது. அடுத்த ஞாயிறு காலை அந்த மக்களின் தலைமகனாக விளங்கியவர் சிறைச்சுவரோடு முதுகுசாய்த்து நிற்கவைக்கப்படுவார். நெஞ்சில் ஆறு குண்டுகளை பெற்றுக்கொள்வார். குண்டுபட்ட அவர் உடல் உருளைக்கல் பாதையின் மீது சரிந்து விழும்.

வார இறுதியில் அந்த மூத்தக் கலைஞர் தனக்கு பன்னிரெண்டு மணிநேர ஜாமீன் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தன்னுடைய மனைவியை சென்று பார்க்க வேண்டும் என்றும் அவளிடம் விடை பெற வேண்டும் என்றும் சொன்னார்.

கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால் அவருடைய சொற்கள் அதை செவிமடுத்தவர்களின் காதுகளிலிருந்து எளிதாக மறையவில்லை.  அந்த மாமனிதருடைய ஆன்மபலமே அதற்குக் காரணம். அவரது அடிப்படையான நேர்மையும் அவர் அடைந்த புகழும் பேரொளியுடன் அவரைச் சூழ்ந்திருந்தது. சாகவிதிக்கப்பட்ட மனிதரே நம்பிக்கை இழந்துவிட்டப் பிறகும் அவர் கடைசி கோரிக்கையை நீதிபதிகள் மீண்டும் மீண்டும் விவாதித்தார்கள்.

கார்டினல் சால்வியாட்டியின் முன்னிலையில் அந்த பேச்சு எழ நேர்ந்தது.

“ஆம், சந்தேகமே இல்லாமல் இந்த இடத்தில் நாம் நெகிழ்ந்து போனால் அது பின்னால் வரும் சந்ததியினருக்கு தப்பான முன்னுதாரணமாக அமையும்,” என்றார் அந்த பெரியவர். “ஆனால் இந்த நாடு அல்லோரிக்கு கடன்பட்டிருக்கிறது. அரச மாளிகையிலேயே அவருடைய சிற்பங்கள் சிலது இருக்கிறதல்லவா? மக்களுக்கு தங்கள் மீதான நம்பிக்கையை அல்லோரி தனது கலையால் பல முறை வலுப்பெற செய்திருக்கிறார். இப்போது மக்கள் அவர் மீது சற்று நம்பிக்கையுடன் நடந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.”

அவர் மேலும் யோசித்தார். “மலைகளின் சிங்கம் என்று அவருக்கு ஒரு பெயர் இருக்கிறதல்லவா? அவர் மாணவர்கள் அவர் மேல் ஆழமான பற்று கொண்டுள்ளவர்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். மரணத்தை விடவும் ஆழமான பற்றை அவர் தன் மாணவர்களில் எழுப்பக்கூடியவரா என்று கண்டுபிடிப்போமே? ஒரு பழைய விதி உள்ளது, அதை இங்கே உபயோகிக்கலாம். தன் இடத்தை எடுத்துக்கொள்ள இன்னொரு மனிதன் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் கைதி சிறையிலிருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு வெளியே போகலாம். சொன்ன நேரத்துக்கு அவர் திரும்பவில்லையென்றால் அவர் இடத்தை எடுத்துக்கொண்டவன் சாகத் தயாராக இருக்க வேண்டும்.”

கார்டினல் தொடர்ந்தார், “போன வருடம் அல்லோரி ஆஸ்கொலியில் இருக்கும் என் இல்லத்தில் சில புடைப்புச்சிற்பங்களை செய்து தர சம்மதித்திருந்தார். அப்போது அவருடன் அவருடைய அழகான இளம் மனைவியும் பேரழகனான இளம் சீடனும் வந்திருந்தனர். சீடனின் பெயர் ஆஞ்செலோ. அல்லோரி அவனை தன் மகன் என்றார். நாம் அல்லோரியிடம் அவருக்கு பன்னிரெண்டு மணிநேர விடுதலை உண்டு என்று சொல்லலாம். அவர் சென்று தன் மனைவியை பார்த்து வரட்டும். ஆனால் அவர் சிறையிலிருந்து வெளியே வரும் அதே சமயத்தில் அந்த இளைஞன் ஆஞ்செலோ உள்ளே போக வேண்டும். பன்னிரெண்டு மணிநேர கெடு முடியும் வேளையில் என்ன நடந்தாலும் அங்கே ஒரு மரணதண்டனை விதிக்கப்படும் என்று மூத்தவர் இளையவர் இருவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.”

வழக்கத்திற்குப் புறம்பான ஓர் முடிவே இந்தச்சூழ்நிலையில் உகந்ததாக இருக்கும் என்று அங்கே கூடியிருந்த அதிகாரம் படைத்த கணவான்கள் அனைவரும் உணர்ந்தார்கள். அவர்கள் கார்டினலின் யுக்தியை ஒப்புக்கொண்டார்கள். சிறையிலிருந்தவரிடம் அவர் கோரிக்கை ஏற்கப்பட்டதென்றும் என்ன நிபந்தனைகளின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படும் என்றும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. லியோனிடாஸ் அல்லோரி ஆஞ்சலோவுக்கு செய்தி அனுப்பினார்.

இளம் சிற்பியின் சக மாணவர்கள் அந்தச் செய்தியை கொண்டுவந்தபோது அவன் தன் அறையில் இல்லை. நண்பர்களின் துயரத்தை அவன் பெரிதாக கவனிக்கவில்லையென்றாலும் அவர்களின் சோர்வு அவனை பாதித்தது. மொத்த பிரபஞ்சமும் அழகும் ஒத்திசைவும் இணைந்த இயக்கமாக, வாழ்க்கை என்பதே எல்லையற்ற கருணை கொண்ட ஒன்றாக அவனுக்குத் தோன்றிக்கொண்டிருந்த வேளை அது. நண்பர்கள் அவனிடமிருந்து ஒரு மரியாதைக்காக விலகியிருந்தது போல் அவனும் அவர்களிடமிருந்து விலகியே இருந்தான். சமீபத்தில் பூமிக்கடியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட கிரேக்கக் கடவுள் டயோனிஸசின் சிற்பத்தைக் காண அவன் வெகு தூரத்தில் இருந்த மிராண்டாவின் பிரபு மாளிகை வரை நடந்தே சென்றிருந்தான். உலகம் தெய்வீகமானது என்று அவன் அப்போது அடைந்திருந்த தீவிரமான நம்பிக்கையை உறுதிபடுத்தும் வகையில் ஓர் ஆற்றல்மிக்கக் கலை படைப்பை அக்கணம் கண்டுவிட அவன் மனம் அவனே அறியாமல் விழைந்திருக்கலாம்.

ஆகவே அவனுடைய சக மாணவர்கள் நெரிசலான சாலையின் மேல் அமைந்திருந்த அவனுடைய சிறிய அறையில் வெகுநேரம் காக்க  நேர்ந்தது. அவன் ஒரு வழியாக திரும்பி வந்தவுடன், நாலா பக்கத்திலிருந்தும் அவர்கள் அவனைச் சூழ்ந்து விஷயத்தை சொன்னார்கள்.

மூத்தவரின் பிரியத்துக்குறியவனான இளைய சிற்பிக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் எதிலும் கவனம் செலுத்தாமல் இருந்திருந்தான். அங்கே நிகழ்ந்துகொண்டிருந்த சம்பவங்களின் தீவிரத்தை அவன் அதுவரை அறிந்திருக்கவில்லை. செய்தி கொண்டுவந்தவர்கள் அதை மீண்டும் மீண்டும் அவனிடம் சொல்லவேண்டியிருந்தது. விஷயம் அவனுக்குப் புரிந்தபோது சற்று நேரம் துயரம் தாளாது அப்படியே திகைத்து நின்றான். தூக்கத்தில் நடப்பவன் போல தண்டனை எப்போது என்று கேட்டான். கண்ணீர் நிரம்பிய கண்களுடன் நண்பர்கள் பதில் சொன்னார்கள். லியோனிடாசின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றதை பற்றியும் லியோனிடாஸ் ஏஞ்சலோவை வரச்சொன்னது பற்றியும் அவர்கள் சொல்லச்சொல்ல இளையவனின் கண்களில் ஒளியும் கன்னங்களில் நிறமும் திரும்பியது. ஏன் இதை முதலிலேயே சொல்லவில்லை என்று நண்பர்களிடம் கோபமாக கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் உடனே சிறைச்சாலைக்குச் செல்லக் கிளம்பினான்.

ஆனால் தன் அறைவாயிலில் ஒரு கணம் நின்றான். அந்த நொடியின் கனம் முழுவதும் அவனில் சூழ்ந்துகொண்டது. வெகுதூரம் நடந்து வந்திருந்தான். புல்லில் படுத்து உறங்கியிருந்தான். அவனுடைய ஆடைகள் முழுவதும் தூசு படிந்திருந்தன. சட்டைக் கை கிழிந்திருந்தது. ஆசிரியர் முன்னால் அந்த நாளில் அப்படி சென்று நிற்க அவன் மனம் ஏற்கவில்லை. கதவருகே கொக்கியில் மாட்டப்பட்டிருந்த அவனுடைய புத்தம்புதிய மேலங்கியை எடுத்துத் தன் தோள்களில் அணிந்துகொண்டான்.

சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஏஞ்சலோ வரப்போகும் விஷயம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவன் மரணதண்டனை விதிக்கப்பட்டவரின் அறைக்கு கொண்டுசெல்லப்பட்டான். கதவு திறக்கப்பட்டது. ஏஞ்சலோ ஓடிப்போய் ஆசிரியர் மேல் விழுந்தான். அவரை இறுகி அணைத்துக்கொண்டான்.

லியோனிடாஸ் அல்லோரி அவனைச் சமாதானப்படுத்தினார். இளைஞனின் மனத்தை நிகழ்காலத் துயரிலிருந்து திசைதிருப்ப அவர் பேச்சை வானத்து நட்சத்திரங்களை நோக்கிக் கொண்டு போனார். மகனிடம் அவர் அதிகமும் வானத்தை பற்றித்தான் எப்போதும் பேசுவது வழக்கம். வானின் அத்தனை ஞானங்களையும் அவர் இளம் மாணவனுக்குப் புகுட்டியிருந்தார். வெகு சீக்கிரத்திலேயே அவருடைய தீர்க்கமான பார்வை மற்றும் தெலிவான ஆழ்ந்த குரல் வழியாக மாணவனை அவருடன் எழும்பச் செய்தார். இருவரும் கைகோர்த்து பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றார்கள். லௌகீக அக்கரைகள் ஏதுமற்ற அந்த உயரமான உலகத்தில் சற்றுநேரம் சஞ்சரித்தார்கள். வெளிர்ந்த இளம் முகத்தில் கண்ணீர் உலர்வதைக் கண்ட பிறகு தான் ஆசிரியர் அவனை திரும்ப பூமிக்குக் கொண்டு வந்தார். சீடனிடம் நீ உண்மையிலேயே இந்தச்சிறையில் இன்றிரவை எனக்காக கழிக்க சித்தமாக இருக்கிறாயா என்று கேட்டார். ஆம், என்றான் ஆஞ்செலோ.

“மகனே, நான் உனக்குக் கடன் பட்டிருக்கிறேன்,” என்றார் லியோனிடாஸ். “இந்த பன்னிரெண்டு மணி நேரம் எனக்கு எல்லையில்லா முக்கியத்துவம் கொண்டது. அதை நீ எனக்குத் தந்திருக்கிறாய்.”

“ஆம், ஆன்மாவின் அழிவின்மையை நான் நம்புகிறேன்,” அவர் தொடர்ந்தார். “ஒரு வேளை அது ஒன்றுதான் நிலையான உண்மையாக இருக்கலாம். தெரியவில்லை. நாளை தெரிந்துவிடும். ஆனால் நம்மைச்சுற்றி இந்த பருப்பொருட்களாலான உலகு இருக்கிறதே, மண்ணும் நீரும் காற்றும் நெருப்புமான உலகம், அது உண்மையில்லையா?  என் உடல்… மஜ்ஜை நிரம்பிய எலும்புகள், நாளங்களில் நிற்காமல் ஓடும் குருதி, ஒளிமிக்க என் ஐந்து புலன்கள் என்றான இந்த உடல், இது தெய்வீகமாது இல்லையா? இதில் நிலைத்த உண்மை இல்லையா? மற்றவர்கள் என்னை முதியவன் என்று நினைக்கிறார்கள். ஆனால் நான் விவசாயக் குடியில் பிறந்தவன். என் மூதாதையர்கள் நிலத்தில் இறங்கி வேலை செய்தவர்கள். எங்கள் மண் எங்களை பேணி வளர்த்த தாதி. கண்டிப்பான, குறைவைக்காமல் அள்ளி அள்ளி ஊட்டிய தாதி. உண்மையைச்சொன்னால் இளமையில் இருந்ததை விட என் தசைகள் இப்போது தான் வலுகொண்டு இருக்கின்றன. என் தலைமுடி இப்போதும் அடர்த்தியாகவே இருக்கிறது. கண்பார்வை சிறிதும் மங்கவில்லை. இனி என் ஆன்மா புதிய பாதைகளை கண்டடைந்து செல்லப்போகிறது. ஆனால் என் உடலின் இந்த வலிமைகளையெல்லாம் நான் இங்கேயே விட்டுச்செல்லப்போகிறேன். என் ஆன்மா கிளம்பலாம், ஆனால் ஒளிவுமறைவுகளற்ற என் திறந்த உடலை இந்த மண், என் பிரியத்திற்க்குறிய காம்பானியா மண், தன் திறந்த கரங்களால் அள்ளிக்கொண்டு தனதாக்கிக்கொள்ளப் போகிறது. என் உடலை மண் பெற்றுக்கொள்வதற்கு முன்னால் நான் இயற்கையை நேருக்கு நேராக ஒரு முறை சந்திக்கவேண்டும். பழைய நண்பர்களுக்கு இடையே நிகழும் கனிவான ஆழமான உரையாடலைப்போல் முழு பிரக்ஞையுடன் என் உடலை நான் அவளிடம் அளிக்க வேண்டும். 

“நாளை நான் என் எதிர்காலத்தை சந்திக்கச் சித்தமாவேன். ஆனால் இன்று இரவு நான் வெளியே செல்ல வேண்டும். சுந்தந்திரமான உலகில் சுதந்திரமாக இருக்க வேண்டும். எனக்கு நன்கு தெரிந்த விஷயங்களின் மத்தியில் இருக்க வேண்டும்.  முதலில் அஸ்தமனத்தின் ஒளி விளையாட்டுகளை காண்பேன். அதன் பின் நிலவின் தெய்வீகமான தெளிவை, அவளைச்சுற்றி ஒளிரும் புராதனமான நட்சத்திரக்கோவைகளை பார்ப்பேன். ஓடும் நீரின் பாடலைக் கேட்பேன். அதன் புத்தம்புதிய ருசியை சுவைப்பேன். இருட்டில் மரங்களின் புற்களின் இனிமையை, கசப்பை அனுபவிப்பேன். கால்களுக்கடியில் மண்ணையும் கல்லையும் உணர்வேன். எத்தனை அற்புதமான இரவு காத்திருக்கிறது எனக்கு! எனக்கென்று அளிக்கப்பட்ட அத்தனை கொடைகளையும் இத்தருணத்தில் நான் நன்றியுடன், ஆழமான புரிதலுணர்வுடன், திரும்பக்கொடுக்க திரட்டிக்கொள்கிறேன்.”

“அப்பா,” என்றான் ஏஞ்சலோ. “மண்ணும் நீரும் காற்றும் நெருப்பும் உங்களை பரிபூரணமாக நேசிப்பதுதான் இயல்பு. அவைகள் உங்களுக்கு அளித்த வரங்களில் ஒரு துளிக்கூட நீங்கள் வீணடித்ததில்லை.”

“உண்மை தான்,” என்றார் லியோனிடாஸ். “எனக்கு எப்போதுமே அந்த நம்பிக்கை இருந்துள்ளது. கிராமத்தில் நான் சிறுவனாக இருந்த காலம் முதலாகவே. கடவுள் என்னை எப்போதும் பரிபூரணமாக நேசித்துக்கொண்டு தான் இருந்திருக்கிறார்.

“இப்போது அவகாசம் இல்லை. கடவுளுக்கு என் மேல் உள்ள எல்லையில்லா விசுவாசத்தை நான் எப்படி, எந்த பாதை வழியாக உணர்ந்துகொண்டேன் என்று என்னால் உனக்குச் சொல்லி புரியவைக்க முடியாது. மகனே, பிரபஞ்சத்தை ஆளும் முதன்மையான தெய்வீக விசையே விசுவாசம்தான் என்று எனக்கு இப்போது தெரிகிறது. என் மனசாட்சி மீது சத்தியமாக நான் இந்த மண்ணுக்கும் எனக்கு அளிக்கப்பட்ட இந்த வாழ்க்கைக்கும் விசுவாசமாக இருந்திருக்கிறேன். அவற்றிடம் போய் நான் சொல்ல வேண்டும். நம் பிரிவும் ஒரு விசுவாச ஒப்பந்தம் தான் என்று. அதற்காகத்தான் இன்று வெளியே செல்ல அனுமதி கோரினேன்.

“அப்படிச்செய்தேன் என்றால் நாளை மரணத்துடனான ஒப்பந்தத்தையும் அதற்கு பின் வரவிருக்கும் விஷயங்களையும் என்னால் முழுமனதுடன் நிறைவேற்ற முடியும்,” மெதுவாக போசிக்கொண்டிருந்தவர் இப்போது புன்னகைத்தார். “நிறைய பேசிவிட்டேன். என்னை பொறுத்துக்கொள்,” என்றார். “மிகவும் விரும்பும் ஒருவரிடம் நான் பேசி ஒரு வாரம் ஆகிறது”

ஆனால் அவர் மறுபடியும் பேசத்தொடங்கிய போது அவருடைய முகமும் குரலும் மிகத் தீவிரமானதாக இருந்தன.

“மகனே, நீ இத்தனை நாளும் என்னிடத்தில் முழு விசுவாசத்தோடு இருந்திருக்கிறாய். இன்றும் கூட. அதற்கு நன்றி. எத்தனை நீண்ட மகிழ்வான நாட்கள்! இனி வரும் நாட்களிலும் நீ எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். இந்த நான்கு சுவர்களுக்குள் வந்த பிறகு ஒவ்வொரு நாளும் உன்னை பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறேன். உன்னை பார்க்க வேண்டும் என்று என் மனம் துடித்தபடியே இருந்தது. எனக்காக அல்ல. உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்பதற்காக. ஆம், எத்தனையோ சொல்ல நினைத்திருந்தேன், ஆனால் நேரமில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டும். இது மட்டும் தான். மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். மகனே, எப்போதும் அளவீட்டின் தெய்வீக விதியான பொன் விகிதத்தை நீ உன் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்,” என்றார்.

“நான் இந்த இரவை இங்கே கழிப்பதில் எனக்கு மகிழ்ச்சி தான்,” என்றான் ஏஞ்சலோ. “ஆனால் முன்புபோல் இன்றும் இரவெல்லாம் உங்களுடன் பேசிக்கொண்டே வெட்டவெளியில் நடக்க வாய்த்திருந்தால் இன்னும் சந்தோஷமாகக் கிளம்பியிருப்பேன்.”

லியோனிடாஸ் மறுபடியும் புன்னகைத்தார். “நட்சத்திரங்களுக்கடியில் பனிபடிந்த புல் வேய்ந்த மலைப்பாதைகள் வழியாக நான் இன்று போகப்போகும் வழி என்னை ஓர் இடத்திற்கு மட்டுமே கொண்டு செல்லும். ஒரு முறை, இறுதியாக, இந்த இரவில், நான் என் மனைவி லுக்ரீசியாவுடன் இருக்கப்போகிறேன். ஏஞ்சலோ, ஒன்று சொல்கிறேன். மனிதன்… மனிதன் யார்? கடவுளின் பிரதான சிருஷ்டி. அவரே தன் மூச்சை நாசியில் ஊதி உயிர்பித்த ஜீவன். அந்த மனிதன் மண்ணையும் கடலையும் காற்றையும் நெருப்பையும் அறிந்து அவற்றுடன் ஒன்றாக வேண்டும் என்றே கடவுள் அவனுக்கு பெண்ணை கொடுத்தார். நான் விடைபெறவிருக்கும் இந்த வேளையில் இவை அனைத்துடனான என் ஒப்பந்தத்தை லுக்ரீசியாவின் கரங்களுக்குள் இருந்தபடி புதுப்பித்துக்கொள்வேன்.” அவர் சில கணங்கள் பேசாமல் அசைவில்லாமல் இருந்தார்.

“லுக்ரீசியா இங்கிருந்து சில மைல்கள் தள்ளி ஒரு வீட்டில் என் நண்பர்களின் பாதுகாப்பில் இருக்கிறாள். அவளுக்கு நான் கைது செய்யப் பட்டதோ எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதோ தெரியாது. என் நண்பர்களை நான் ஆபத்தில் சிக்கவைக்க விரும்பவில்லை. ஆகவே நான் அங்கே போகும் விஷயம் அவர்களுக்கு தெரியலாகாது. அவளிடம் நான் கல்லரையின் வாசம் வீசும் ஒருவனாக, மரணத்திற்காக காத்திருப்பவனாகச் செல்லவும் விரும்பவில்லை. எங்கள் சந்திப்பு எங்கள் முதல் இரவு போல் இருக்க வேண்டும். இந்தச்சந்திப்பின் ரகசியம் அவளுக்கு ஓர் இளைஞனின் தீவிரத்தையும், ஓர் இளம் காதலனின் மூர்க்கத்தனத்தையும் உணர்த்த வேண்டும்.”

“இன்று என்ன நாள்?” ஏஞ்சலோ திடீரென்று கேட்டான்.

“என்ன நாள் என்றா கேட்டாய்?” என்றார் லியோனிடாஸ். “நித்தியகணத்தை எண்ணி எண்ணி வாழ்ந்துகொண்டிருக்கும் என்னிடமா அந்த கேள்வியை கேட்டாய்?  எனக்கு இந்த நாள் – இறுதி நாள், அவ்வளவுதான். ஆனால் இரு, யோசிக்கிறேன். குழந்தை, நீயும், உன்னைப்போன்றவர்களுக்கும், இன்றைய நாளை சனிக்கிழமை என்று சொல்வீர்கள். நாளை ஞாயிறு.”

“பாதை எனக்கு நன்றாகவே தெரியும்,” லியோனிடாஸ் தொடர்ந்தார். அப்போது அந்த பாதையில் ஏறிக்கொண்டிருந்தவர் போல் மெல்ல, ஒவ்வொரு வார்த்தையாக யோசித்து யோசித்துப் பேசினார். “மலைப்பாதை வழியாக, தோட்ட வீட்டின் பின் பக்கமாக ஏறி, அவள் ஜன்னலை அடைவேன். மண்ணிலிருந்து ஒரு கூழாங்கல்லை பொறுக்கி அவள் ஜன்னல் கண்ணாடி மீது வீசுவேன். அவள் விழிப்பாள். இந்த நேரத்தில் யார் என்று எழுந்து வருவாள். ஜன்னலுக்கு வெளியே என் உருவத்தை கொடிகளுக்கிடையில் கண்டுகொள்வாள். ஜன்னலைத் திறப்பாள்.” மூச்சை உள்ளிழுத்தபோது அவருடைய விரிந்த வலிமைமிக்க மார்பு அசைவு கொண்டது.

“குழந்தை, என் நண்பனே!” லியோனிடாசின் குரல் உணர்ச்சிகரமாக எழுந்தது. “உனக்கு இந்தப்பெண்ணின் அழகு எப்படிப்பட்டது என்று தெரியும். நீ எங்கள் வீட்டில் தங்கியிருக்கிறாய், எங்கள் உணவு மேஜையில் அமர்ந்து உணவுண்டிருக்கிறாய். அவள் எத்தனை கனிவானவள், குதூகலம் மிக்கவள் என்று நீ அறிவாய். குழந்தைகளுக்கே உரிய நிச்சலனமும், நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு களங்கமின்மையும் உடைய மனம் அவளுக்கு. அதுவும் உனக்குத் தெரியும். ஆனால் உனக்குத் தெரியாதது ஒன்று உண்டு. இவ்வுலகத்தில் என்னைத்தவிர யாருக்குமே தெரியாத ஒன்று உண்டு. அவளுடைய உடலும் ஆன்மாவும் எல்லையில்லாமல், நிபந்தனையே இல்லாமல் சரணடையக்கூடியது. அந்தப் பனி எப்படி எரியும் தெரியுமா! உலகத்தில் உள்ள மகத்தான கலைச்செல்வங்கள் அனைத்துமாக அவள் எனக்கு இருந்தாள். ஒரு பெண்ணின் உடலில் அத்தனையும்! இரவுகளில் அவள் அணைப்பின் வழியாக பகலுக்கான என் படைப்பு சக்தி முழுவதையும் பெற்றுக்கொண்டேன். மைந்தா, உன்னிடம் அவளைப்பற்றி பேசும் போதே என் குருதி அலை போல் எழுகிறது. ‘என் சகோதரியே, அன்பே, வெள்ளைப்புறாவே, எனக்காக திறந்துகொள். என் மனம் பனித்துளிகளால் நிறைந்திருக்கிறது. என் கூந்தல் இழைகளில் இரவின் தூரல் எஞ்சியிருக்கிறது. அன்பே, நீ முழுக்க முழுக்க வெண்மையானவள். உன்னில் ஒரு சிறு மருவும் இல்லை. என் தூயவள் நீ!’ சில கணங்களுக்குப் பிறகு கண்களை மூடினார். “நாளை நான் திரும்பி வரும் போதும் என் கண்களை மூடிக்கொண்டே வருவேன்,” என்றார். “வாசலிலிருந்து என்னை இங்கே கொண்டு வருவார்கள். இங்கிருந்து வெளிச்சுவர் வரை ஒரு சிறு நடை. அங்கே என் கண்களை ஒரு துணியால் கட்டிவிடுவார்கள். கண்களால் இனி எனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. பாதையின் கரிய கற்களையோ, துப்பாகி முனைகளையோ நான் இந்த அற்புதமான கண்களில் கடைசி காட்சியாக விட்டுச்செல்ல மாட்டேன்.” அவர் மீண்டும் அமைதியானர். பிறகு சன்னமான குரலில், “இந்த ஒரு வாரத்தில் அவள் முகத்தை மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டு வர முயற்சித்தேன். காதிலிருந்து தாடை வரை அவள் முகத்தின் வளைவு எப்படி இருக்கும் என்று எனக்குச் சுத்தமாக ஞாபகமில்லை. நாளை அதிகாலை கடைசியாக அதை பார்த்துவிட்டுக் கிளம்புவேன்,” என்றார். “இனி எப்போதும் மறக்க மாட்டேன்.”

அவர் மீண்டும் கண்களை திறந்த போது அவருடைய ஒளிமிக்க பார்வை இளைஞனின் பார்வையை சந்தித்தது. “இத்தனை வேதனையுடன் என்னை பார்க்காதே,” என்றார். “என் மேல் பரிதாபம் கொள்ளாதே. நீ என்னை பரிதாபப்படக் கூடாது. இன்று இரவு நான் பரிதாபத்துக்குறியவனும் அல்ல, உனக்கு அது புரியும் என்று நினைக்கிறேன். மகனே, தவறாக சொல்லிவிட்டேன். நாளை காலை ஒரே ஒரு முறை கண்களை மீண்டும் திறப்பேன். என் பிரியத்திற்க்குறிய உன் முகத்தை பார்ப்பதற்காக. அப்போது உன் முகம் மகிழ்ச்சையாக, அமைதியாக, நாம் இணைந்து பணியாற்றிய போது இருந்தது போலவே இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.”

அந்தத் தருணத்தில் சிறையின் காவலாளி கதவில் பெரிய சாவியை திருப்பி உள்ளே நுழைந்தார். சிறையின் மணிக்கூண்டு கடிகாரம் ஆறு மணி அடிக்க பதினைந்து நிமிடங்கள் இருப்பதாக காட்டியது என்றார். கால் மணி நேரத்தில் இருவரில் ஒருவர் அந்தக் கட்டிடத்திலிருந்து வெளியே செல்ல வேண்டும். அல்லோரி தான் தயாராக இருப்பதாக பதிலளித்தார். இருந்தும் ஒரு கணம் தயங்கினார்.

“என்னை அவர்கள் கைது செய்தபோது நான் என் பணியறையில் இருந்தேன்,” என்று அவர் ஏஞ்சலொவிடம் சொன்னார். “அப்போது அணிந்திருந்த கசங்கிய பருத்தி ஆடையைத்தான் இப்போதும் அணிந்திருக்கிறேன். ஆனால் மலைகளில் நான் ஏறிச்செல்கையில் காற்றில் குளிர் ஏறும். உன்னுடைய மேலங்கியை நீ எனக்குக் கடனாகத் தருவாயா?”

ஏஞ்சலோ அந்த ஊதா நிற மேலங்கியை தன் தோள்களிலிருந்து எடுத்து ஆசிரியரிடம் கொடுத்தார். ஆசிரியருக்கு அதை கழுத்தில் மாட்டும் கொக்கி அமைப்பு புதுமையாக இருந்தது. தடுமாறிய அவர் விரல்களுக்கு உதவ ஏஞ்சலோ தன்னிச்சையாக அருகே வந்தான். தனக்கு உதவ எழுந்த இளம் கரங்களை ஆசிரியர் பற்றிக்கொண்டார்.

குரல் தழுதழுக்க, “ஏஞ்சலோ, இக்கணம் நீ எத்தனை கம்பீரமானவனாத் தோன்றுகிறாய் தெரியுமா!” என்றார். “உன்னுடைய இந்த மேலங்கி புதியது. விலையுயர்ந்தது. இதை நீ எனக்குத் தந்திருக்கிறாய். என்னுடைய சொந்த ஊரில் ஒரு மணமகன் தன் திருமண நாளன்று இப்படியொரு மேலங்கியை அணிவான்.”

மேலங்கியை முழுவதுமாக அணிந்துகொண்டு புறப்படத் தயாராக அவர் எழுந்தார். “உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நாம் ஒரு நாள் இரவு மலைகளில் ஏறி வரும் போது வழி தவறிவிட்டோம். உனக்கு குளிர் தாங்கவில்லை. உடல் சோர்ந்துவிட்டாய். ஒரு கட்டத்தில் அப்படியே விழுந்துவிட்டாய். இனி ஒரு அடி எடுத்துவைக்க முடியாது ஆசிரியரே என்றாய். அப்போது, நீ செய்தாயே இப்போது, அதே மாதிரி நான் என் மேலங்கியை கழற்றி நம் இருவரையும் சுற்றி போர்த்தி இறுக்கிக்கொண்டேன். நாம் அந்த இரவு முழுவதும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி கிடந்தோம். என் மேலங்கிக்குள் நீ குழந்தை போல உடனே உறங்கிவிட்டாய். இன்று இரவும் நீ உறங்க வேண்டும்.”

ஏஞ்சலோவுக்கு ஆசிரியர் சொன்ன இரவு நன்றாக நினைவில் இருந்தது. ஆசிரியருக்கு அவனை விட மலையேற்றத்தில் பயிற்சி இருந்தது. ஆம், ஆசிரியருக்கு அவனை விட உடல் வலிமையும் எப்போதும் அதிகம் தான். அன்றிரவு அவன் கைகால்கள் குளிர்ந்து போயிருந்தன. அந்த இரவு முழுக்க இருட்டில் லியோனிடாஸ் அல்லோரியின் பெரிய உடலின் வெப்பத்தை அவன் தன்னுடைய குளிர்ந்த உடல் மீது உணர்ந்துகொண்டே இருந்தான். பெரிய, அன்பான விலங்கின் அருகே இருப்பது போன்ற உணர்வு. அவன் எழுந்த போது சூரியன் உதித்திருந்தது. மலைச்சரிவுகள் அத்தனையும் அதன் கதிர் வெளிச்சத்தில் ஒளிர்ந்தன. அவன் எழுந்து அமர்ந்து ஒரு நொடி திகைத்து பிறகு கூவினான். “தந்தையே! இவ்விரவு நீங்கள் என் உயிரை காப்பாற்றினீர்கள்!” ஏஞ்சலோவின் நெஞ்சிலிருந்து சொல்லென்றாகாத ஓர் ஓசை வெளிப்பட்டது.

“நாம் இன்று இரவு விடைப்பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை,” என்றார் லியோனிடாஸ். “ஆனால் நாளைக் காலை நான் உன்னை முத்தமிடுவேன்.”

காவலர் சிறைக்கதைவை திறந்தார். அந்த உயரமான நிமிர்ந்த உருவம் நிலைப்படியைத் தாண்டியது. கதவு மீண்டும் சாற்றப்பட்டது. சாவி கதவில் திரும்பியது. ஏஞ்சலோ தனிமையில் விடப்பட்டான்.

முதல் சில நொடிகளுக்கு ஏஞ்சலோ அதை ஒரு மாபெரும் கருணையென்றே எடுத்துக்கொண்டான். ஆனால் அடுத்த நொடியே அவன் உருளும் பாறையால் அடித்து நசுக்கப்பட்டவன் போல் கீழே சுருண்டு விழுந்தான்.

அவன் செவிகளில் ஆசிரியரின் குரல் எதிரொலித்தது. கண்கள் முன்னால் ஆசிரியரின் உருவம். மேல் உலகம் ஒன்றின், கலையின் எல்லையில்லா வெளியின் ஒளி பொருந்திய உருவம். தந்தை அவனுக்குத் திறந்து கொடுத்திருந்த அந்த ஒளியுலகிலிருந்து அப்போது அவன் அந்தர இருளுக்குள் தூக்கி எரியப்பட்டிருந்தான். அவனால் நம்பிக்கைதுரோகம் செய்யப்பட்டவர் அங்கிருந்து போனபிறகு அவன் முழுத்தனிமையில் இருந்தான். அவனால் அப்போது வானத்து நட்சத்திரங்களை பற்றியோ மண்ணை பற்றியோ கடலை பற்றியோ நதிகளை பற்றியோ  அவன் நேசித்த பளிங்கு சிற்பங்களை பற்றியோ யோசிக்க முடியவில்லை. அந்த நொடி லியோனிடால் அல்லோரியே அவனை ரட்சிக்க நினைத்திருந்தாலும் அது சாத்தியமாகியிருக்காது. ஏனென்றால் விசுவாச துரோகம் என்பது முற்றழிவுக்கு சமானமானது.

கல்லெறிப்படுபவன் மீது எறியப்படும் சல்லிக்கற்களைப்போல் ‘விசுவாச துரோகி’ என்ற பதம் அவன் மீது நாலாபுறத்திலிருந்தும் வந்து விழுந்தது. அதன் விசையை தாங்கமுடியாமல் மண்டியிட்டு கைகள் தொங்க அவன் அந்த அடிகளை மௌனமாக பெற்றுக்கொண்டான். மெல்ல புயல்மழை ஓயவும், ஒரு சிறு அமைதி. அப்போது மௌனத்திலிருந்து மென்குரல் ஒன்று காத்திரமாக எழுந்தது. “பொன் விகிதம்” என்று அது சொன்னது. அந்தச்சொற்கள் அவனைச்சுற்றி எதிரொலிக்க ஏஞ்சலோ கைகளை உயர்த்தி காதுகளை அழுத்தி மூடிக்கொண்டான்.

“விசுவாச துரோகம். அதுவும் எதற்கு? ஒரு பெண்ணிற்காக. பெண்! பெண் என்பவள் யார்? கலைஞர்களான நாம் அவளை உருவாக்கும் வரை அவளுக்கு இருப்பு இல்லை. நம்மை அன்றி அவளுக்கு உயிர் இல்லை. உடலைத்தவிர அவள் ஒன்றுமே இல்லை, ஆனால் நாம் அவளை பார்க்கவில்லை என்றால் அவள் உடல் கூட இல்லை. அவள் உயிர் பெற்று வர நம்முடைய ஆன்மாக்கள் நிலைக்கண்ணாடிகளாக வேண்டும் என்று கோருகிறாள். அதில் அவள் தன்னை அழகுபார்த்துக்கொள்வாள். ஆம், நான் அழகுடையவள், நான் இருக்கிறேன், என்பாள். அவள் வாழ வேண்டும் என்றால், அவள் தன்னை அழகுடையவள் என்று நம்பவேண்டுமென்றால், அதற்கு நாம் எரிந்து நடுங்கி மடியவேண்டும். நாம் கண்ணீர் சிந்தும்போது அவளும் கண்ணீர் சிந்துவாள் – ஆனால் மகிழ்ச்சியுடன், ஏனென்றால் நம்முடைய அந்தக் கண்ணீரும் அவள் அழகுக்கான சான்று. அவளை உயிருடன் வைத்திருக்க நாம் ஒவ்வொரு கணமும் எரிந்து துடிதுடிக்க வேண்டும்.”

அவன் சிந்தனைகள் மேலும் தொடர்ந்தன. “அவள் நினைத்தபடி நடந்திருந்தால் என்னுடைய படைப்பு சக்தி முழுவதையும் அவளை படைப்பதில், அவளை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் செலவழித்திருப்பேனே! ஆம், பெருங்கலை என்று ஒன்றை என்னால் எந்நாளும், எப்போதும், உருவாக்கியிருக்க முடியாது. அதை நினைத்து நான் வருந்தி கண்ணீர் உகந்திருப்பேன். அப்போதும் அவளுக்கு புரிந்திருக்காது. “ஏன், உனக்குத்தான் நான் இருக்கிறேனே!” என்று சொல்லியிருப்பாள். ஆனால் அவருடன் இருக்கையில்? அவருடன் இருக்கையில் நான் மகா கலைஞன் அல்லவா!”

அப்போது அவனால் லுக்ரீசியாவை பற்றி நினைக்க முடியவில்லை. தான் விசுவாச துரோகம் செய்த தந்தைக்கு அப்பால் அவனுக்கு அந்த நொடி உலகில் இன்னொரு மனித உயிர் இல்லை.

“நான் ஒரு மகத்தான கலைஞனாக ஆகக்கூடியவனென்று உண்மையிலேயே நினைத்தேனா? பெரும் வல்லமையும் ஒளிர்வும் கொண்ட சிற்பங்களை படைக்கப்போகும் சிற்பியென உண்மையிலேயே எப்போதாவது நம்பினேனா? நான் கலைஞன் இல்லை. ஒரு நாளும் நான் ஒரு மகத்தான சிற்பத்தை படைக்கப்போவதில்லை. ஆம், ஆணித்தனமாக அது எனக்கு இப்போது தெரிகிறது. என் கண்கள் போய்விட்டன. நான் குருடன். நான் குருடன்!”

இன்னும் சற்று நேரத்தில் அவன் எண்ணங்கள் நித்தியகாலத்திலிருந்து சமகாலத்துக்குத் திரும்பி வந்தன.

ஆசிரியர் அப்போது மலைப்பாதை வழியாக நடந்து கொடிகளுக்கு இடையே உள்ள தோட்டவீட்டை அடைந்திருப்பார். கீழிருந்து ஒரு கூழாங்கல்லைத் தூக்கி ஜன்னலின் மேல் வீசி எரிவார். அவள் ஜன்னலை திறப்பாள். ஊதா நிற மேலங்கி உடுத்தி அங்கே நிற்பவனை அவள் எப்போதும் அழைப்பது போல், “ஏஞ்சலோ” என்று அழைப்பாள். அப்போது அவனுடைய பேராசானுக்கு நண்பனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட சாவே இல்லாத அந்த மாமனிதனுக்கு எல்லா உண்மையும் புலப்படும். தன் சீடன் தனக்கு விசுவாச துரோகம் இழைத்துவிட்டான் என்று புரிந்துகொள்வார்.

முந்தைய நாள் முழுவதும் ஏஞ்சலோ சாப்பிடவில்லை. தூங்கவும் இல்லை. இப்போது உடல் மிகவும் களைத்து சோற்வுற்றிருந்தது. ஆசிரியர் அவனிடம் “இன்று இரவு நீ உறங்க வேண்டும்” என்று சொன்னது அவன் நினைவுக்கு வந்தது. லியோனிடாசின் உத்தரவுகள் – அவற்றை அவன் பின்பற்றினானென்றால் – எப்போதும் அவனை சரியான பாதையிலேயே இட்டுச்செல்பவை என்று அறிந்திருந்தான். அவன் மெல்ல எழுந்து தடுமாறி நடந்து ஆசிரியர் படுத்திருந்த வைக்கோல் பரப்பின் மீது விழுந்தான். படுத்தவுடன் உறங்கிவிட்டான்.

ஆனால் உறக்கத்தில் கனவுகள் வந்தன.

மீண்டும் அவன் முன்னால் அந்த காட்சி விரிந்தது. இந்த முறை இன்னும் தெளிவாக. ஊதா நிற மேலங்கி அணிந்த அந்த பெரிய உருவம் மலைப்பாதையின் மேல் நடக்கிறது. குனிந்து ஒரு கூழாங்கல்லுக்காக துழாவுகிறது. கண்ணாடி ஜன்னலின் மேல் விட்டெறிகிறது. ஆனால் கனவு அவனை அடுத்தக்கட்டத்துக்குக் கூட்டிச்சென்றது. அவன் அந்த ஆடவனின் கைகளில் இருந்த பெண்ணைக் கண்டுவிட்டான். லுக்ரீசியா!

படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான். அவன் உலகத்தில் உயர்வான, புனிதமான எதுவுமே எஞ்சியிருக்கவில்லை. அப்பட்டமான பொறாமையின் தீ அவன் நாளங்களை சுட்டெறித்துப் பறவியது. அவனை மூச்சடைக்க வைத்தது. சீடனுக்கு ஆசிரியர் மேல் அந்த மகா கலைஞன் மேல் இருந்த பற்று பெருமதிப்பு பக்தி எல்லாம் போனது, அந்தர இருட்டில் மகன் தந்தையை பார்த்து பல்லை கரகரவெனக் கடித்தான். கடந்தகாலம் மறைந்து விட்டது, எதிர்காலம் என்று இனி ஏதும் வரப்போவதில்லை. இளையவனின் எண்ணங்களெல்லாம் அந்த ஒரே புள்ளியில் சென்று குவிந்தன. அங்கே, சில மைல்களுக்கு அப்பால் அங்கே, அந்த அணைப்பு.

அவன் ஒருமாதிரியாக போத நிலைக்கு வந்தான். மீண்டும் உறங்கக்கூடாது என்று நினைத்தான்.

ஆனால் மீண்டும் உறங்கினான். இம்முறையும் அதே கனவு வந்தது. மேலும் உக்கிரமாக மேலும் உயிர்ப்பாக மேலும் நுண்விவரங்கள் கொண்டதாக. இல்லை, இல்லை, இது நான் இல்லை என்று பேரச்சத்துடன் ஒவ்வொன்றையும் நிராகரித்தான். தன் மீதிருந்த சுயகட்டுப்பாடு உறக்கத்தில் அவிழ்ந்த பிறகு தான் அவன் கற்பனையாற்றல் அதையெல்லாம் அவனுக்கு உருவாக்கித்தந்திருக்கக்கூடும்.

மீண்டும் விழித்தான். உடம்பெல்லாம் குளிர்வாக வியர்த்துக் கொட்டியது. அறையின் மறுபுறம் கணப்படுப்பில் சில கரித்துண்டுகள் அப்போதும் ஒளிர்வுடன் எரிந்துகொண்டிருந்தது. எழுந்து அருகே சென்று ஒரு பாதத்தை அதன் மேல் வைத்து அழுத்தி அப்படியே சில நிமிடங்களுக்கு வைத்திருந்தான். கரித்துண்டுகளில் நெருப்பு அணைந்தது.

அடுத்தக் கனவில் அவன் அமைதியாக ஓசையே எழாதவாரு மலைப்பாதையில் ஏறிச்சென்றவரை பின் தொடர்ந்தான். அவர் பின்னாலேயே ஏறி ஜன்னல் வழியாக உள்நுழைந்தான். கையில் கத்தி இருந்தது. அங்கே இருவர் அணைத்தபடி கிடக்க, பாய்ந்து கத்தியை முதலில் அந்த ஆணின் நெஞ்சில் பாய்ச்சினான். இழுத்து அதை அந்தப் பெண்ணின் நெஞ்சில் இறக்கினான். அவர்களின் ரத்தம் சேர்ந்து ஒழுகி ஒன்றாக கலந்து படுக்கைவிரிப்பு மீது சிவந்து கனற்றும் இரும்புத்துண்டால் சுட்ட புண் போல ஆழமான சிவப்புக் கரையாக ஊறியது. அதைப்பார்க்கப்பார்க்க அவன் கண்கள் எரிந்து எரிந்து அவன் குருடானான். பாதிவிழிப்பில் எழுந்து “ஆனால் நான் அவர்களை கத்தியால் குத்தவேண்டியதில்லையே. வெறும் கைகளால் கழுத்தை நெரித்தே கொல்லலாமே,” என்று யோசித்தான். அப்படியாக இரவுக் கழிந்தது.

சிறைக்காவலர் அவனை எழுப்பியபோது விடிந்திருந்தது. “உன்னால் தூங்க முடிந்ததா?” என்றான் அவன். “அந்த கிழட்டு நரியை நீ உண்மையிலேயே நம்புகிறாயா? என்னைக்கேட்டால் அவன் உன்னை நன்றாக ஏமாற்றிவிட்டான் என்று தான் சொல்வேன். இப்போது மணி ஐந்தே முக்கால். ஆறடிக்கும்போது சிறைப்பாதுகாவலரும் கர்னலும் வருவார்கள். கூண்டில் எந்த பறவை இருக்கிறதோ அதைக் கொண்டு போவார்கள். பாதிரியார் பிறகு தான் வருவார். ஆனால் உன் கிழட்டுச்சிங்கம் வரப்பொவதில்லை. உண்மையைச்சொல், அவர் இடத்தில் நீயோ நானோ இருந்தால் திரும்பி வருவோமா என்ன?”

ஏஞ்சலோவுக்கு சிறைக்காவலரின் வார்த்தைகள் புரிந்தபோது அவன் மனம் விவரிக்கமுடியா மகிழ்ச்சியில் நிறைந்தது. இனி பயப்பட ஒன்றும் இல்லை. கடவுள் அவனுக்கு ஒரு பாதையை திறந்துவிட்டார். மரணம். எளிமையான மகிழ்ச்சியான வழி. ஏஞ்சலோவின் தவிக்கும் மனத்தில் அப்போது ஒரு எண்ணம் மட்டும் மங்கலாக ஓடியது. “சாதாரண மரணம் அல்ல. அவருக்காக சாகப்போகிறேன்!”  ஆனால் அந்த எண்ணம் மறைந்தது. அவன் உண்மையில் அப்போது லியோனிடாஸ் அல்லோரியை பற்றியோ வேறு எந்த மனிதரை பற்றியோ யோசிக்கவில்லை. அவனுக்கு ஓர் எண்ணம்தான். இப்போது, இந்த இறுதிக்கணத்தில், எனக்கு மன்னிப்பு அருளப்பட்டுவிட்டது.

அவன் எழுந்து சிறைக்காவலர் கொண்டு வந்த தண்ணீர்க் கிண்ணத்தில் முகத்தை நன்றாகக் கழுவிக்கொண்டான். தலையை சீவினான். காலில் சூடு பட்ட இடம் எரிந்தது. நன்றியுணர்வால் நிறைந்தான். அப்போது அவன் ஆசிரியர் கடவுளின் விசுவாதத்தை பற்றி சொன்ன வார்த்தைகளை நினைவுகூர்ந்தான்.

சிறைக்காவலர் திரும்பி அவனைப் பார்த்தார். “நேற்று உன்னைக் பார்த்தபோது நீ இளைஞன் என்று நினைத்தேன்,” என்றார்.

சில நொடிகளில் கற்கள் பதிக்கப்பட்ட வெளிப்பாதையில் காலடியோசைகள் கேட்கத் தொடங்கின. டகடகவென்று ஒரு சத்தம். “வீரர்கள் துப்பாக்கிகளுடன் வருகிறார்கள்,” என்று ஏஞ்சலோ நினைத்தான். கனமான பெரிய கதவு நிறந்தது. இரண்டு சிப்பாய்கள் கைகளை பிடித்து நடத்தி வர அல்லோரி உள்ளே நுழைந்தார். அவர் முந்தைய நாள் மாலை சொன்னதுபோலவே அவர் கண்கள் மூடியே இருந்தன. ஆனால் ஏஞ்சலோ நின்ற திசையை ஊகித்து அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தார். அவன் முன் ஒரு கணம் மௌனமாக நின்றார். பிறகு தன் மேலங்கியின் கொக்கியை அவிழ்த்து, தன் தோள்களிலிருந்து அதை எடுத்து, இளைஞனின் தோளில் அதை போர்த்தி அணிவித்து விட்டார். அந்த சிறு அசைவில் அவர்கள் இருவரும் உடலோடு உடல் அருகே வர நேர்ந்தது. “ஒருவேளை அவர் கண்களைத் திறந்து என்னை பார்க்காமலே செல்லக்கூடும்,” என்று அப்போது ஏஞ்சலோ நினைத்துக்கொண்டான். ஆனால் அல்லோரி என்றாவது சொன்ன சொல்லை தவறவிடுபவரா? மேலங்கியை போர்த்திவிட்டக்கரங்கள் ஏஞ்சலோவின் கழுத்தில் ஒரு கணம் படிந்து அதை சற்று முன்னால் கொண்டுவந்தது. பெரிய இமைகள் நடுங்கி படபடத்து விரிந்தன. ஆசிரியர் மாணவனின் கண்களுக்குள் ஆழமாக பார்த்தார். ஆனால் மாணவனால் பிறகு எப்போதும் அந்த பார்வையை நினைவுகூற முடியவில்லை. அடுத்தக் கணமே அவன் அல்லோரியின் உதடுகளை தன் கன்னத்தில் மேல் உணர்ந்தான்.

“ஓஹோ!” என்றார் சிறைக்காவலர் ஆச்சரியத்துடன். “வாருங்கள்! நீங்கள் திரும்பி வருவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சரி, உங்களுக்கான விருந்து காத்திருக்கிறது. நீ…” என்று ஏஞ்சலோ பக்கம் திரும்பினார். “நீ கிளம்பலம். இன்னும் ஆறு மணி அடிக்க சில நிமிடங்கள் உள்ளன. அதன் பிறகு என் மேலதிகாரிகள் வருவார்கள். பாதிரியார் பிறகு தான் வருவார்.  இங்கு எல்லாமே மிகச்சரியான விதத்தில், அளவெடுத்தது போல் தான் நடக்கும். அதுதானே நியாயம்?”

*

ஆங்கில மூலம்: ஐசக் தினேசென்

தமிழில்: சுசித்ரா

பின்குறிப்பு 

‘Cloak’ என்ற சொல்

ஆங்கிலத்தில் இந்தக் கதையின் தலைப்பு ‘க்ளோக்’ [The Cloak]. அதை ‘மேலங்கி’ என்று மொழியாக்கம் செய்திருக்கிறேன். கண்டாமணி போன்ற வடிவம் உடையதால் clocca என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து அந்த வார்த்தை உருவானதாக சொல்லப்படுகிறது. லத்தீனில் clocca என்றால் மணி, ஃபிரெஞ்சு மொழியில் cloche இதற்கு நிகரான சொல். ஆங்கிலத்தில் cloak என்று மாறியது.

ஆனால் மேலைப்பண்பாட்டில் cloak என்ற வார்த்தைக்கு மேலும் ஆழமான பல அர்த்தங்கள் உள்ளன.

குளிருக்கு அணிந்துகொள்ளும் மேலங்கி என்பது அதன் சாதாரண அர்த்தம். 

Cloak என்பது மேலும் மறைவை குறிக்க பயன்படுத்தப்படும் சொல். மறைவுச்செயல்பாடுகளையும் ரகசியங்களையும் குற்றங்களையும் கூட குறிக்கிறது. Under the cloak, cloak and dagger, invisibility cloak போன்ற பதங்களில் இதைக் காணலாம். 

ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பொறுப்புகள் கடத்தப்படுவதையும் cloak என்ற படியம் வழியாக உணர்த்தும் வழக்கம் உள்ளது. Passing the cloak, passing the mantle போன்ற சொற்கட்டுகளில் இதைக் காணலாம். விவிலிய பழைய ஏற்பாட்டில் தீர்க்கதர்சி எலியா (Elijah) தன் மாணவன் எலிசா (Elisha) தன் வாரிசாக தொடர்வான் என்பதை குறிக்க தன் மேலங்கியை அவனுக்கு அணிவிப்பார்.

கிறிஸ்துவ மதத்தில் cloak என்பதற்கு வேறொரு அர்த்தமும் உண்டு. அது எளியவர்களும் பிச்சைக்காரர்களும் அணியும் உடை. ஒரு விவிலியக்கதையில் கிறிஸ்து அந்த வழியாகச் செல்வதை அறிந்து பார்ட்டிமேயஸ் என்ற குருட்டுப் பிச்சைக்காரர் தன் cloak-ஐ கழற்றி வீசி ‘இனிமேல் நான் எளியவன் அல்ல பிச்சைக்காரன் அல்ல, நான் கிறிஸ்துவின் தொண்டன்’ என்று அவரை பின் தொடர்ந்து செல்கிறார். 

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s