ஒன்று.

உன் வன்மையும்
என் வன்மையும்
ஒரே வன்மை.

உன் குரூரமும்
என் குரூரமும்
ஒரே குரூரம்.

உன் கீழ்மையும்
என் கீழ்மையும்
ஒரே கீழ்மை.

உன் கோழைத்தனமும்
என் கோழைத்தனமும்
ஒரே கோழைத்தனம்.

உன் சோர்வும்
என் சோர்வும்
உன் சோகமும்
என் சோகமும்
உன் வதையும்
என் வேதனையும்
நீ வீறிட்டு அழுதாலும்
நான் மண்டியிட்டு விசும்பினாலும்,

உன் மீட்சியும்
என் மீட்சியும்
ஒரே மீட்சி.

உன் முக்தியும்
என் முக்தியும்
ஒரே முக்தி.

உன் அன்பும்
என் அன்பும்
ஒன்றே.

*

(25-6-2016)

துழாவுதல்.

தூங்குமூஞ்சி மரத்தின் குருட்டு இலைகள் யாரை தேடுகின்றன?
தூங்குமூஞ்சி மரத்தின் பிரியமான விரல்கள் யாரை வருடக்கோருகின்றன?
தூங்குமூஞ்சி மரத்தின் தவிக்கும் கைகள் யாரை தழுவப்பார்க்கின்றன?

அதன் அமைதியற்ற துடுப்புகள்
எந்தக்கடலை கடக்க விழைகின்றன?

விசும்பு நிறைந்த வெளியெல்லாம்
அதன் விரல் நுனிகளில்!
என்று
அதற்கு தெரியாதோ?

இரவு வெளியில் எல்லாம் புரிந்து
அமைதி கண்டு அடங்கி உறங்கும் மரம்,
பகல் வந்ததும் எல்லாம் மறந்து
மறுபடியும் துழாவத் தொடங்குகிறது.

(24-6-2016)