அரூ போட்டி, யுவன் விமர்சனங்கள்

அரூ அறிவியல் புனைவு சிறுகதை போட்டி முடிவுகள்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் பதிவு

ஃபேஸ்புக்கில் சில எதிர்வினைகள்

என் எதிர்வினை

நண்பர்களே, நான் பொதுவாக ஃபேஸ்புக்கில் இயங்குவதில்லை. ஆனால் இந்தப்பதிவில் ஒரு கமெண்ட் இடவேண்டுமென்று தோன்றியது. நண்பர் ராதாகிருஷ்ணனின் பதிவு சற்றே அளித்த நெருடல் – கோபிக்காதீர்கள், உங்களை தனியாகச் சொல்லவேண்டும் என்று இல்லை 🙂 ஆனால் இது ஒரு மனநிலையாகவே இங்கே தங்கிவிடக்கூடாது என்ற ஆதங்கம் எனக்கு நிறைய இருக்கிறது, அதனால்தான். எழுத்தாளராக சாதித்த, நடுவராக நின்றவருடைய கருத்துக்களை ‘பொறாமை’ என்று ஒரு வார்த்தையில் நாம் ஓரம்தள்ளிவிடுவது, விளையாட்டாக சொன்னாலும் கூட, சரியென்று எனக்குத் தோன்றவில்லை. அவர் விமர்சனத்திலிருந்து கிளைக்கொண்டு எழும் சாத்தியங்களை நமக்கு நாமே மட்டுப்படுத்திக்கொள்ள அது வழிவகுத்துவிடக் கூடாதே?

எனக்கும் யுவனின் கட்டுரையை நேற்று படித்ததிலிருந்து உள்ளே ஒரு துருதுருப்பும் முரண்டும் இருந்துகொண்டே இருந்தது – பாதி ஈகோ தான். அவர் கூர்மையாகவே விமர்சனங்களை சொல்லியிருக்கிறார். யுவன் அறிதாகவே இன்று எழுந்துவரும் எழுத்தைப்பற்றிய கருத்தைச்சொல்கிறார் என்று நினைக்கிறேன் – இன்றைய சூழலில் நமக்கு இத்தகைய வாசிப்பு கிடைப்பதே அரியதொரு நிகழ்வல்லவா? அதில் சொல்லப்பட்டுள்ள சில விஷயங்கள் அறிபுனையைத்தாண்டி செல்லுபடியாகும் விமர்சனக்கருத்துகள் – உதாரணம், மொழிபற்றாக்குறை பற்றிச் சொன்னது. இலக்கியக்காரன் grammarian அல்ல என்றெல்லாம் சொல்லலாம் தான், ஆனால் படைப்பூக்கத்துக்காக ஒரு கொள்கையை உடைக்க, முதலில் அந்தக்கொள்கையை ஐயம் திரிபட அறிந்திருப்பது அவசியம் என்பதே என் எண்ணம். இதை நாம் பரிசீலிக்க இடம் நிறைய உள்ளதென்றே நினைக்கிறேன்.

ஜெவின் எழுத்தின் தாக்கம் இருப்பதைப்பற்றி சொன்ன கருத்தும் கூர்மையாக முன்வைக்கப்பட்டது தான். அறிபுனையைத் தாண்டி வெளிவரும் எழுத்துக்கும் இந்த விமர்சனம் செல்லுபடியாகும் என்றே நினைக்கிறேன். இதில் எனக்குச் சொல்ல ஒன்றிரண்டு சமாசாரங்கள் இருக்கின்றன – என் எழுத்திலும் ஜெ. மொழியின் தாக்கம் உள்ளதென்ற வகையில். கண்டிப்பாக நண்பர்கள் சொல்வதுபோல முன்னோடிகளின் தாக்கம் இல்லாமல் வருகிறவர்கள் எழுதமாட்டார்கள், அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. அதிலும் வெண்முரசின் வீச்சு திகழும் இந்நாட்களில். ஒவ்வொரு எழுத்தாளரும் தன்னுடைய முன்னோடிகளிலிருந்து கிளைபிரித்துத் தனக்கான மொழியொன்றை தன் தேவைகளுக்கேற்ப உருவாக்கத்தான் வேண்டும், அதுதான் அறைகூவல்.

இது புதுமொழியைக் கண்டடைவதற்காக மட்டுமல்ல. புது சிந்தனாபாணியை கண்டடைவதற்க்காகவும் தான். மொழி என்பதே சிந்தனை தானே? ஒருவர் ஜெவின் மொழியில் எழுதுகிறார் என்றால் அந்த மொழி உள்ளே ஓடும்போது அவர் ஜெ போலவே சிந்திக்கிறார் என்று தானே அர்த்தம்? – புனைவுப்பாதையும் ஒரு சிந்தனைதான். ஒருவருக்கு சிந்தனைமுறை மாறுபட மொழியும் இயல்பாக மாறுபடும்தானே?  வேறு மொழிகளில் வாசித்து, மொழியாக்கங்களைச்செய்து, நாம் அடைவதும் influence தான் – இன்னொரு வகை தாக்கம். நாம் யாரும் சிந்தனைப்பாணியில் முற்றிலும் தனித்துவர்கள் அல்ல, மிக்சிங் தான் டிஃப்பரெண்ட் 🙂 அந்த மாற்றம் ஆழத்தில் சிரிதாக இருக்கலாம், ஆனால் மொழியில், வெளிப்பாட்டில், அழகியல் தேர்வுகளில் குறிப்பிடத்தக்கத் தனித்துவத்தை அளிக்கும் என்று நினைக்கிறேன். ஆக அதுதான் சவால்.  இந்த வளர்ச்சி ஆக்கப்பூர்வமாகவே இருக்கும், ஆகவே இதில் விசனப்பட ஏதுமில்லை என்று என்னிடம் சொல்லிக்கொள்வேன்..

அரூ இதழில் இரண்டு வருடங்கள் முன்னால் வெளியான என்னுடைய கதையில் வெண்முரசின் சாயல் நிறைய இருந்தது. ஆனால் அது ஏன் என்று இன்று தெளிவாகப் புரிகிறது. அதில் நான் முயற்சித்தது ஒரு மாதிரியான செவ்வியல்பாணி கதைசொல்லல்முறை. அந்தக்கதையே ஒரு புராண மறு ஆக்கம் தான். ஆனால் அதற்கான மொழியை நான் உருவாக்கவில்லை. நேரடியாகவே சூழலிலிருந்து அந்த மொழியை பயன்படுத்திக்கொண்டேன். அதில் அறிவியலை ஒரு கவித்துவக்கருவியாக மட்டும் கையாண்டேன். அறிவியல் புனைவென்ற வகையில் அது புதுமையான உத்திதான்.

அதன் பிறகு நான் எழுதிப்பார்த்த அறிவியல் புனைகதைகளெல்லாமே அறிவியலை கவித்துவ உருவகமாக பயன்படுத்தும் கதைகளாக அமைந்துள்ளன. அறிவியல் ஊகங்களை முன்வைத்து வளர்த்தெடுப்பதில் ஏனோ இதுவரை என் ஆர்வம் செல்லவில்லை. இந்த முறை வெளிவந்த கதையிலும் அறிவியல் உருவகமாகவே வருகிறது. வேண்டுமென்றே எளிமையான மொழியில் எழுதிப்பார்த்தேன் [ஆனால் திருநெல்வேலி வட்டார வழக்கை ஒளியாண்டுப்பயணம் இடம்பெரும் கதையில் பயன்படுத்தியதை யுவன் விமர்சிக்கிறார். நல்லா கேளுங்க சார்.]

இன்று வெளிவரும் பல கதைகள் வெண்முரசு மொழியை கையாள ஒரு காரணமென்று நினைப்பது, நாம் அறிவியல்புனைகதையை தத்துவார்த்தமான கேள்விகளை எழுப்பிக்கொள்ள ஓர் ஊடகமாக பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதால் தான் என்று நினைக்கிறேன். அது ஆரோக்கியமானதும் கூட என்பது என் எண்ணம் – அறிவியல் கருக்களுக்கு இயல்பாகவே அந்த சாத்தியம் உள்ளது. கவித்துவமான விரிவுகொள்ளவும் சாத்தியம் உள்ளது. ஆனால் இதை நாம் ஒரு லிமிடேஷனாக வைத்துக்கொள்ளவும் வேண்டியதில்லை. யுவனின் விமர்சனம் ஒருவகையில் நம்மை கூட்டாக இந்த மனோநிலையிலிருந்து [அறிவியல் கதை = தத்துவ விசாரம், கவித்துவம்] வெளிக்கொண்டுவரலாம் அல்லவா?

நேற்று சற்று சீண்டப்பட்டாலும், இன்று காலை எழுந்ததும் ஷெர்லொக் ஹோம்ஸ் பாணியில் ஒரு துப்பறியும் கதையில் அறிபுனையை ஊடுருவச்செய்து எழுதிபார்த்தால் என்ன என்று தோன்றியது. தமிழ்நாடே பாழ்வெளிப் பாலைவனமாக வரண்டுவிடும் எதிர்காலத்தில் ஓர் அரிய மருந்துக்காக கௌபாய்ச் சண்டை நடந்தால்? இந்தவகை genre mixing ஏற்படும்போது மொழி கொள்ளும் சாத்தியங்கள் விரிய ஆரம்பிக்கின்றன. கலைச்சொல் உருவாக்கம் பற்றியும் யுவன் சொல்லியிருந்தார். ஹாரி பாட்டர் கதைகளை இன்று வரை வாசிக்கிறேன், அதில் என்னை எப்போதுமே பரவசப்படுத்தும் ஒன்று ஆசிரியர் இயல்பாக லத்தினிலிருந்து உருவாக்கும் புதியபுதிய சொற்கள். அப்படி தமிழிலும் உருவாக்க முடியுமா என்று சிந்தனை ஓடுகிறது. தமிழே செவ்வியல் மொழி, இதில் தெலுங்கு, உருது, சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளைக்கலந்தால் பற்பல சாத்தியங்கள் வெளிப்படுகின்றனவே? அறிவியல் புனைகதைகளில் ஒரு சிறப்பம்சமே பலநேரங்களில் அவை உருவாக்கும் பிரத்யேக பேச்சுமொழிகள் – தமிழில் நான் இன்னும் அந்த சாத்தியங்களை அதிகம் கையாளாமல் போய்விட்டோமோ என்று தான் இன்று காலையிலிருந்து உண்மையாகவே தோன்றிக்கொண்டிருக்கிறது. ஆக இவை எல்லாமே அதிஅற்புதமான மொழிவிளையாட்டுச் சாத்தியங்களை அளிக்கக்கூடுவதுதானே? தமிழ் இலக்கிய மொழியின் வெளியையை மாற்றியமைக்கக்கூடுவது என்று கூட தோன்றுகிறது. அது தமிழுக்கு நல்லதுதானே? இவையெல்லாம் செய்ய எனக்குத் திறன் உள்ளதா என்று தெரியவில்லை, ஆனால் நண்பர்கள் தூண்டுபெற்றாலும் அற்புதம் என்று இதை எழுதினேன். ஒரு நல்ல விமர்சனம் சில சமயம் இப்படிப் பல பூதங்களை கிளப்பிவிடுகிறது… தமிழ் மொழியின் அத்தனை dialect, register-களில் ஒரு மாஸ்டரான யுவனை இதை வேறு யார் சொல்ல முடியும்? ஆகவே பயங்கரக் கடுப்பாக இருந்தாலும் நன்றி யுவன்.