அசோகமித்திரன் ஜெயமோகனைப்பற்றி 2006-ஆம் ஆண்டில் எழுதிய ஒரு மதிப்புரையில் [சுட்டி] ஜெயமோகனின் கதைகளில் அடிக்கடி தோன்றும் ‘அருவருப்பு’ அல்லது ‘பீபத்சம்’ என்ற அம்சத்தை சுட்டிக்காட்டுகிறார். அந்த அம்சத்தின் சரடு நம் மரபில் என்றும் இருந்துள்ளது என்றும் கதா சரித சாகரம் போன்ற நூல்களில் வெளிப்படுவதாகவும் ஆனால் அதற்கு இங்கு தொடர்ச்சி கிடையாது என்றும் கூறுகிறார். இந்தக்கூறுகளின் தொடர்ச்சி ஜெயமோகனில் வெளிப்படுவதாக சொல்கிறார்.
ஜெயமோகனின் புனைவுகளை வாசித்தவர்களுக்கு தொடர்ந்து அவருடைய கதைகளிலும் நாவல்களிலும் இடம்பெறும் பீபத்சச் சுவை கூடிய பல இடங்கள் நினைவுக்கு வரலாம். விஷ்ணுபுரத்தில் விஷ்ணுவின் பாதத்தைக் கண்ட அடுத்தக்கணத்திலேயே தெருவில் கிடக்கும் குஷ்டநோயாளியின் அழுகிய பாதம் தோன்றும் இடம் ஓர் உதாரணம். வியப்பு, பக்தி, உடனே அருவருப்பு.
நாவலில் அவை ஒன்றின்பின் ஒன்றாக தோன்றுவதாலேயே ஒன்றை ஒன்று சமன் செய்கின்றன. அது செவ்வியலின் பண்பு. செவ்வியல் உத்தேசிக்கம் அமைதியில் எல்லா மெய்ப்பாடுகளுக்கும் அவற்றுக்கான இடங்களை மிகச்சரியான அளவில் வகிக்கின்றன. பொதுவாக செவ்வியலில் ஒரு ரஸம் மேலோங்குவதில்லை. அதற்கு மாறாக, ஜெயமோகனின் ஆக்கங்களிலேயே முற்றிலும் பீபத்சச்சுவையில் வார்க்கப்பட்ட படைப்பு என்றால் அது ஏழாம் உலகம் என்று சொல்லலாம்.
ஏழாம் உலகம் பிச்சையெடுப்பவர்களின் வாழ்க்கை அவலத்தை எந்த பாவனைகளும் பூசல்களும் இல்லாமல் வெளிப்படையாக சொல்கிறது. இந்த நாவல் வெளிவந்த காலம் முதலே ஒரு சமூக யதார்த்த நாவலாக, விளிம்புநிலை மனிதர்களின் இதுவரை வெளிதெரியாத வாழ்க்கையின் நேரடியான சித்தரிப்புகளை காட்டும் நாவலாகத்தான் பெரும்பாலும் வாசிக்கப்பட்டது. அசோகமித்திரன் ஜெயமோகனின் பீபத்சச் சித்தரிப்பைப் பற்றிக் கூறுகையில் வாசகர் அவற்றை இப்படியும் உண்டா என்று திடுக்கிடலோடு அணுகுவதாகக் கூறுகிறார். நாவலை வாசித்த என் நண்பர் ஒருவரும் அதே கருத்தை தெரிவித்தார். “இப்படியெல்லாமும் லைஃப் இருக்கான்னு பிரம்மிப்பா இருக்கு” என்றார்.
சமீபத்தில் நான் ஏழாம் உலகம் நாவலை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்து முடித்தேன். ஒரு மூன்று மாதக்காலம் இந்த நாவலுக்குள்ளேயே குடிபுகுந்தது போன்ற நிலை ஆனது. முதல் முறையாக ஏழாம் உலகத்தை 2015-ல் படித்த போது எனக்கும் அதன் மறைவுகளே இல்லாத வாழ்க்கைச் சித்தரிப்பு என்னை அதிர வைத்தது அது. அதன் இருட்டும் ஓங்கிய அருவருப்புச் சுவையும் என்னை சற்று வெளியே தள்ளியது.
ஆனால் மொழியாக்கம் செய்வதற்கு முன்பாக மீண்டும் வாசித்தபோது இந்த நாவல் எனக்கு முற்றிலும் புதுவிதமாக திறந்துகொண்டது. விஷ்ணுபுரம் நாவலில் சித்தனும் காசியபனும் சின்ன சதுரத்தின் ஒளிக்குள் விஷ்ணுபுர கோயில் கோபுரத்தின் தலைகீழ் சித்திரத்தை காணும் ஓர் இடம் இருக்கிறது. கோபுரத்தின் அத்தனை அழகான சிலைகளும் சின்னச்சின்னதாக, தலைகீழாக, விபரீதமான வடிவங்கள் கொண்டு விழுகின்றன. முழு கோபுரத்தையும் அந்த மாற்று வடிவில் கண்டு இருவரும் ரசிக்கிறார்கள். ஏழாம் உலகமும் அது போல் ஒரு தலைகீழ் சித்திரம் என்ற அவனாதம் எனக்குள் உருவானது. இவ்வுலகத்தின் எல்லா பிம்பங்களும் அவ்வுலகத்தில் சாராம்சப்படுத்தப்பட்ட வடிவில், விபரீதமாக விகாரமாக தலைகீழ் பிம்பங்களாக விழுகின்றன. நம் மாபெரும் மானுட வாழ்வின் மினியேச்சரான தலைகீழ் உருவாக்கம் தான் இந்த நாவல்.
கதையின் முக்கியான கதாபாத்திரங்களின் சித்தரிப்பில் இந்தத் தலைகீழ் அம்சத்தைத் தெளிவாகக் காண முடிகிறது. முத்தம்மையை மீண்டும் மீண்டும் பல ஆட்களுடன் இணையவிட்டு அவளைப்போலவே உடல் சிதைந்த குழந்தைகளை ஈன வைக்கிறார்கள். ஆனால் அந்த நிறைக்கு அவள் தான் பேரன்னை. பேரன்னை இங்கே படிக்கட்டுகளில் பெரிய உடலும் ஒற்றை முலையுமாகக் கிடக்கிறாள் என்பது ஒரு வித ஆழமான மனச்சலனத்தை உருவாக்கக்கூடிய கருப்பு அங்கதம். அதேபோல் அபார ரசனை கொண்ட ராமப்பன் ஒரு குஷ்ட ரோகி. விரலும் முகமும் மழுங்கிப்போனவன். ஆனால் கலைஞனுக்கே உரிய நுண்மையுடையவன். முதுகெலும்பு ஒடிந்த எருக்கு ஒரு கற்புக்கரசி. அறிவுஜீவி அகமதுக்கு விதைப்பைகள் வீங்கிப்போன கோளாறு உள்ளது. அது ஒரு வகையில் எல்லா அறிவுஜீவிகளுக்கும் உள்ள கோளாறு அல்லவா?
எதிர்ப்பாராத தருணத்தில் ஓர் அற்புதத்தைக் கண்ட புன்னகையுடன் இந்தச் சித்தரிப்புகளை இம்முறை வாசித்தேன். ஒவ்வொரு மனிதமாதிரிகளின் சாராம்சமான குணங்கள் இங்கே சற்று கோணல்படுத்தி, அங்கதமாக விழவைத்திருக்கிறார் ஆசிரியர். ‘மேல்’ உலகத்தவரின் செறிவாக்கப்பட்ட பிம்பங்கள் தான் இவர்கள். ஆகவே இந்த உலகில் நின்றுகொண்டு ‘மேலே’, ‘நம்’ உலகத்தை நிமிர்ந்து பார்த்து புன்னகைக்காமல் இருக்கமுடியவில்லை. இதில் நம் உலகத்தை நோக்கிய சின்ன கிண்டலின் அம்சமும் உள்ளது. குறிப்பாக விதை வீங்கிப்போன அறிவுஜீவியின் சித்திரம். ஆனால் அதுவும் மனிதனின் தோளில் கைபோட்டு செய்யும் புன்னகை தான். அந்த சினேகபாவம் இந்த நாவல் முழுவதும் வெளிப்பட்டு வெளிச்சமூட்டுகிறது.
இதில் மேலும் நுட்பமான விஷயம், எப்படி இந்த மனிதர்களுக்கு தங்கள் இழிவிலிருந்து மீட்பு சாத்தியமாகிறது என்பது. அந்த மீட்பும் ஒவ்வொருவரின் சாராம்சமான குணங்களிலிருந்தே தோன்றுகிறது. உதாரணமாக, விரல் மழுங்கிப்போன ராமப்பனுக்கு தான் உச்சபட்ச அழகுணர்வு உள்ளது. அழகை தொட்டுவிடமுடியுமா என ஏங்கும் அவன் விரல்முனைகளின் தவிப்பு இங்கே ஒவ்வொரு கலைஞனின் விதியும் கூட. ராமப்பன் விரலும் கண்ணும் தடியுமாகவே உருவகப்படுத்தப்படுகிறார். புலன்களால் ஆன கொச்சைப்பேச்சு ஆளுமையாக. ஆனால் சாராம்சத்தில் மகத்துவபூர்வமான வெளிப்படுகிறார். அது மானுடத்தின் மகத்துவம். எந்த கடைநிலையிலும் மலரச் சாத்தியமாகக்கூடியது.
அதே போல் எருக்கு. பண்டாரத்தின் உதவியாளரால் ஓர் அவல நிகழ்வில் தாலி கட்டப்பட்டு, பிறகு அவரையே கணவராக வரிக்கிறாள். முதுகெலும்பு உடைந்தவளின் அசைக்கமுடியாத நம்பிக்கை அங்கதமாக, பரிதாபமாக வெளிப்படுகிறது. ஆனால் சாராம்சத்தில் இது மீராவின், ஆண்டாளின் ஆன்மீகம். அதன் ஆணிவேர் மானுடப்பொதுவானது. காரணமற்றது, சிரிக்கத்தக்கது, அதனாலேயே அந்த நம்பிக்கையின் தீவிரம் அச்சமூட்டக்கூடிய தீவிரத்துடன் வெளிப்படுகிறது [நாவலில் தாலி கட்டியவன் பெயர் மாதவப்பெருமாள். இது தற்செயல் அல்ல என்று நினைக்கிறேன்] அதுபோலவே தன் அறிவையும் போனாவின் வலிமையையும் நம்புவதே அகமதின் மீட்பாகிறது. ஆக கலை, பக்தி, ஞானம், எல்லாம் இங்கும் உள்ளது. எந்தக் கடைநிலையிலும் ஆதாரமானது. இதைக் காண்கையில் எத்தனை இருண்மையை எழுதினாலும் அடிப்படையில் ஜெயமோகன் ஒரு கிளாசிசிஸ்ட், செவ்வியலாளர் தான், என்று தோன்றியது.
ஆகவே இந்த வாசிப்பில் ஏழாம் உலகமும் எனக்குள் விஷ்ணுபுரம் போலவே ஒருவகையான கிளாசிக் நாவலாகவே திரண்டுகொண்டது. ஆனால் மறுவலான கிளாசிக். தலைகீழ் கிளாசிக். ஏனென்றால் ஒட்டுமொத்த வாழ்க்கையும், அதன் அத்தனை படிநிலைகளையும் இந்த நாவல் அந்த தலைகீழ் மினியேச்சர் சட்டகத்துக்குள் பேசிவிடுகிறது. எளிமையான மொழியில், பல குரல்களின் சின்ன சின்ன தீற்றல்கள் வழியாக, குறைந்த இடத்துக்குள், இத்தனை கதாபாத்திரங்கள் தெளிவாக துலக்கம் பெற்று வருகிறார்கள். யதார்த்த சித்தரிப்புகள் ஆழமாக தீவிரமாக இருந்தாலும் குறைத்து அளந்து சொல்லப்பட்டதிலேயே கலையமைதி கூடியதாக ஆகிறது. நிகழ்வுகள் செவ்வியலின் சமநிலையை அடைகின்றன.
*
நாவலில் இரண்டு மைய இழைகள். ஒன்று முத்தம்மைக்கு குழந்தை பிறந்து, ஒரு வயது வரை அது வளர்ந்து, விற்கப்பட்டு, அவள் அடுத்த கருவை பெற்றுக்கொள்ளும் நொடிவரையிலான வாழ்க்கை. இன்னொன்று போத்திவேலு பண்டாரம் மாங்காண்டி சாமியை விற்று, அவரை திரும்பப் பெரும் வரையில் அவர் வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகள். இரண்டு இழைகளுமே யதார்த்தமான கதைகளாக சொல்லப்பட்டிருந்தாலும், அடிப்படையில் முத்தம்மையின் சரடு இயற்கை சுழற்ச்சியின் கதை. மாங்காண்டி சாமியின் சரடு தெய்வமும் மனிதனுக்குமான உறவைச்சொல்லும் கதை. ஆக மனிதன், இயற்கை, தெய்வம் என்ற பிரபஞ்ச பின்னலின் மூன்று அலகுகளும் நாவலுக்குச் சட்டகம் அமைக்கின்றன. அவற்றின் மோதல்-விலகல் வழியாக நாவல் அடிப்படையான இருப்பு சார்ந்த ஒரு பயங்கரமான தீர்மானத்தை அடைகிறது. ஆக ஏழாம் உலகம் ‘இப்படியெல்லாம் வாழ்க்கைஇருக்கிறது’ என்று மாதிரி வாழ்க்கைகளை சொல்லும் நாவல் [மட்டும்] அல்ல. ‘வாழ்க்கை என்பது சாராம்சத்தில் இப்படித்தான்’ என்று ஒட்டுமொத்தத்தையும் கணக்கில் கொண்டு வெளிப்படுத்தும் கிளாசிக் நாவலும் கூட. ஆனால் நாவலிலிருந்து சாராம்சமாக திரண்டு வருவது செவ்வியலின் ‘சாந்தம்’ ‘அழகு’ அல்ல. பீபத்சத்திலேயே பயணித்து பயங்கரத்தில், உக்கிரத்தில் உச்சம் பெரும் உன்னத உணர்வு [awe அல்லது sublime].
நாவலுக்குள் இரண்டு தெய்வீக ரூபங்கள் இடம்பெருகின்றன. மாங்காண்டி சாமி தொடர்ந்து ‘சாமி’, ‘சித்தர்’ என்ற அடைமொழிகளாலேயே அழைக்கப்படுகிறார். சாமியாராகவும் வேஷம் கட்டி உட்காரவைக்கப்படுகிறார். அவருடைய தெய்வீகம் என்பது எந்த புள்ளியில் வெளிப்படுகிறது என்பது நாவலுக்குள் அறியமுடியாத ஒன்று. ஒற்றைக்கையும் குரலும் மட்டுமே கொண்ட உடல் அவருக்கு. சாமியால் நடக்க முடியாது. நகர முடியாது. ஆனால் முகத்தில் கல் போல் மாறாத புன்னகை. விரக தாபத்தில் பாடலாக எழும் குரல். மனிதனுக்கும் தெய்வத்துக்குமான ஓர் பாலம் போல எழுவது. அவருடைய நிமிர்வு இந்த நாவலுக்குள் மையமான மர்மமாம ஓர் இருப்பு.
கதைக்குள் இன்னொரு தெய்வாதீத அம்சமாக வருபவள் முத்தம்மை. ஒரு நிலையில் அவள் வெரும் மனித உயிர் அல்லது அது கூட அல்ல. புணர்ந்து புணர்ந்து பிள்ளைகளை பெற்றுப்போட்டுக்கொண்டே இருக்கும் ஓர் உடல். ஆனால் அந்த உடல் வழியாகவே அவளில் தெய்வீகமும் கூடுகிறது. சாங்கியம் தொடங்கி இந்திய மரபில் பிரகிருதி என்று சொல்லப்படும் பருப்பொருள் கருத்தின் ரூபவடிவாக முத்தம்மை தோன்றுகிறாள்.
இந்த நாவலின் இறுதியில் அவள் தன் முதல் மகனாலேயே ஆட்கொள்ளப்படும் நிகழ்வு நேரிடுகிறது. மனிதனுக்கு நிகழ சாத்தியமான கீழ்மைகளில் மிக அவலமானதாகவும் மானுடத்தின் ஓர் உடைவுபுள்ளி என்றும் தான் இதுகாரும் இந்நிகழ்வு வாசிக்கப்பட்டது. ஆனால் நாம் முத்தம்மையை பிரகிருதி என்று கண்டால், அந்நிகழ்வு இப்பிரபஞ்ச இருப்பின் மூலாதாரம் என்றும் மனிதகுலம் காலகாலமாக அடையும் துன்பத்தின் ஊற்றுக்கண் என்றும் அர்த்தம்கொள்கிறது. அதே சமயம் அடுத்த சுழலின், புனர்ஜென்மத்தின், தொடக்கப்புள்ளியாகவும் விளங்குகிறது. வாழ்க்கை சுற்றிச் சுழலும் அச்சென முத்தம்மை தோன்றுகிறாள்.
‘ஊரில் எல்லோரும் சுகபோகத்துடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் அதற்கு ஓர் உயிர் மட்டும் பாதாளத்தில் அடைக்கப்பட்டு முடிவிலி வரை சித்திரவதை படவேண்டும். இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு மனிதன் வாழ முடியுமா?” என்று கரமசாவ் சகோதரர்கள் நாவலில் இவான் கேட்பான். அப்படிப்பட்ட ஓர் உயிராக முத்தம்மையைக் காண முடிந்தது. இந்த ஒட்டுமொத்த வாழ்க்கை நெசவின் அடியே வாழ்ந்து துன்பப்படுபவள். ஒவ்வொரு தலைமுறையிலும் மைந்தர் அன்னையின் மடியிலிருந்தே வாழ்க்கையும் துன்பத்தையும் வேண்டி வேண்டி பெற்றுக்கொள்கிறார்கள்.
இந்த நாவல் நெடுக அந்த வாழ்க்கைத்துன்பத்தின் வெவ்வேறு வெளிப்பாடுகள் வழியாக பயணிக்கிறோம். டாண்டேவின் பயணம் போன்ற ஒரு பயணம். பிச்சைக்காரர்கள் அடைவது உடல் சார்ந்த துன்பம். அவர்களுடைய உடல் விகாரங்கள் முதற்பார்வையில் விலகலை உருவாக்கினாலும் அவர்களில் மீண்டும் மீண்டும் தோன்றும் மானுடம் அவர்களை நெருக்கமானவர்களாக்குகிறது. அவர்களை அருவருக்க முடியவில்லை, மாறாக அவர்களில் நம்மை கண்டுகொள்ளத் தொடங்குகிறோம். ஆனால் அவர்களை வாங்கி விற்பவர்களின் செயல்பாடுகள், அதற்கு அவர்கள் சோடித்துக்கொள்ளும் நியாயங்கள் அனைத்துமே நாற்றமடிப்பதாக, அருவருக்கத்தக்கதாக இருக்கின்றன. அப்படி அவர்கள் இருப்பதே ஆன்மீகமான ஒரு துன்ப நிலை. அவர்களுடைய மதிப்பீடுகளில் நம்முடைய அன்றாடத்தின் மதிப்பீடுகளை கண்டுகொள்கையில் துணுக்குறுகிறோம். வெட்குகிறோம். அப்படி வெவ்வேறு துன்பங்கள் வழியாக பயணித்து பாதாள முனையில் முத்தம்மையை அடைகிறோம்.
ஆனால் சென்று சேர்ந்த பாதை உச்சக்கட்ட அருவருப்பு வழியானதாக என்றாலும், அந்த உக்கிரமான இறுதிக்கணத்தை அடையும் போது ஒரு சுத்தீகரணத்தையே உணரமுடிகிறது. கங்கையைக் காணும் போது ஏற்படுவதுபோல. கங்கை சாக்கடை. ஆனால் அது கங்கை. பிரகிருதி ரூபமாக சொல்லப்படும் தேவிக்கு பீபத்சரூபிணி என்ற ஒரு பெயரும் உண்டு என்பதை இத்துடன் இணைத்துக்கொள்ளத்தகது.
பீப்த்சம் வழியாகவே இந்த நாவல் ஒட்டுமொத்த வாழ்க்கையை சொல்லி அதன் சாராம்சத்தை அடைகிறது. பீபத்சம் என்பது தனி ஒரு சுவையாக நின்றுவிடவில்லை. அது ஒரு முழுமுதல் தரிசனமாகவே இதில் வெளிப்படுகிறது. இங்குள்ள வாழ்க்கை பற்றிய ஒரு ஸ்டேட்மெண்ட் போல. பீபத்சத்தின் கண்ணாடி வழியாகவே எல்லா உணர்வுகளும் வடிகட்டி வருகின்றன. இது ஒட்டுமொத்தமாக வாழ்க்கையிலிருந்து விலக்கம் ஒன்றை உருவாக்குகிறது. அதன் சாரத்தின் உக்கிரத்தை உன்னதமாக (sublime) உணரவைக்கிறது.
*
இந்த நாவலில் மாங்காண்டி சாமியும் முத்தம்மையும் தெய்வீகத்தின் இரண்டு துருவங்களாக வெளிப்படுகிறார்கள். ஆனால் இதை மீறிய மூன்றாவது தெய்வீகம் ஒன்றும் நாவலுக்குள் தெளிந்து வருகிறது. இதை மிக நேரடியாக, வாழ்க்கையிலிருந்து அறிந்துகொண்டேன். ‘ஏழாம் உலகம்’ நாவலை மொழியாக்கம் செய்துகொண்டிருந்த நாட்களில் ஒரு வயதான என் குழந்தை வீட்டில் வளர்ந்துகொண்டிருந்தது. நாவல் இறுதியில் முத்தம்மையின் குழந்தை அடையும் வயது தான் கிட்டத்தட்ட அவனுக்கு. ஒவ்வொரு நாளும் புதிய சாகசங்கள், சிரிப்பு, கும்மாளம். மழலை மொழியாகிக்கொண்டிருந்தது. நடை பழகிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் குளிப்பாட்டும்போது அவன் உடைகளை கழற்றிவிட்டு பளபளக்கும் வெறும் உடம்பை காணும்போது ‘மனிதக்குட்டி! மனிதக்குட்டி!’ என்று என் மனம் பொங்கும். மனித உடலின் அமைப்பில் இயல்பிலேயே ஓர் உன்னதம் இருப்பதாகத் தோன்றுகிறது. இரண்டு கால்களில் எழுந்து நின்று உலகை கண்களால் தொலைதூரத்துக்கு பார்க்க சாத்தியப்பட்ட உயிரினம். கைகால்களில் தவழ்ந்தாலும், கண் குருடானாலும், தூக்கிச்செல்லப்பட வேண்டிய நிலை என்றாலும், மனிதன் எப்போதுமே அந்த சாராம்சமான உன்னதம் நிறைந்தவன். ஏழாம் உலகம் நெடுக உடல்களாக வருகிறது. வெவ்வேறு நிலைகளில், வெவ்வேறு காட்சிகளாக. படுக்கும், சுருளும், நிமிரும், தொங்கும், குனியும் உடல்கள். அவை அனைத்தையும் என் குழந்தையின் ஆடை மறைக்காத உடம்பின் சித்திரம் வழியாக ஒரு தொகுப்பென ஆக்கிக்கொண்டேன். அந்தத் திரள் மொத்தமும், இந்தச்சிறு உடலின் வழியாக, மனிதன் என்று. இத்தனையும் மீறி ஒங்கி நிற்கிறது, ஒளி நிறைந்த மனிதக்குழந்தை.
ஐரோப்பிய மரபில் செவ்வியலுக்கு எதிராக கற்பனாவாதம் எழுந்தது. அழகு, சமநிலை போன்ற செவ்வியல் பண்புகளுக்கு எதிராக உணர்வெழுச்சி மற்றும் உக்கிரத்தை முன்வைத்தது கற்பனாவாதம். ஜெயமோகனின் இந்த நாவலில் வெளிப்படுவது செவ்வியல், கற்பனாவாதம் இரண்டுக்கும் அப்பால் உள்ள ஒன்று. இதில் வெளிப்படும் பீபத்சத்தின் தீவிரத்துக்குளேயே மொத்த வாழ்க்கையும் நிகழ்கிறது. வாழ்க்கையை பற்றி உக்கிரம் நிறைந்த ஒரு தரிசனமும் அதன் வழியாகவே மனிதனின் மகத்துவமும் ஒரே சமயம் வெளிப்படுகிறது. இந்த வடிவம் மேலை இலக்கிய வடிவங்களையும், நம்முடைய சித்தர், காவிய, அவைதீக கதை மரபு இலக்கியங்களையும் உள்வாங்கி அடைந்த மிகுந்த தனித்துவமான ஒரு வடிவம் என்று கூறலாம்.
**