அசோகம்

போன வருடத்தின் டைரியை புரட்டிக்கொண்டிருந்தேன். பிப்ரவரி 8, 2024, அன்று எழுதிய குறிப்பு கண்ணில் தென்பட்டது. ‘அசோக மரம் பூத்திருக்கிறது’ என்று எழுதியிருக்கிறேன்.

இன்று வளாக எல்லைகளில் நடப்படும் நெடிய அலங்கார மரத்தைத்தான் அசோகா என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. நீளமான, நெளிந்த விளிம்புகளுடைய இலைகள் கொண்ட மரம்.

ஆனால் செவ்வியல் பழமை கொண்ட அசோகமரம் இதுவல்ல. Saraca asoka என்று பெயருடைய அந்த மரம் மிக நளினமான தோற்றம் கொண்டது. அதன் அடிமரம் மெலிதானது. கிளைகள் மேலும் மெலிதானவை. அடர்பச்சை நிறத்தில் கீழ்வாக்கில் தொங்கும் இலைக்கொத்துக்கள் உடையவை. இளவேனிலில் மரம் பூக்கத் தொடங்கும்போது கொம்புகளிலிருந்தே மலர்க்கொழுந்துகள் கிளம்பும். ரத்தச்சிவப்பும் ஆரஞ்சும் இளம் மஞ்சளும் கலந்து இதழ்விரியும் பூக்குவை முழுமலர்வில் கொழுந்தெனவே தோன்றும். அஸ்தமனத்துக்கு சில கணங்களுக்கு முன்பு செஞ்சுடரென தீப்பிழம்பென உருண்டு திரளும் சூரியனைப்போல் ஒளிவீசும்.   

இப்போது நம் வீடு அமைந்துள்ள பெங்களூர் JNCASR என்ற அறிவியல் நிறுவன வளாகத்தை ஒரு குறுங்காடு போல பராமரித்து வருகிறார்கள். மருத மரங்கள், புங்கை மரங்கள் ஏறாளாம். கூடவே செண்பகம், நாகலிங்கம், மா, பலா வகைகள். ஆங்காங்கே சிறிய மூங்கில் தோட்டங்களும் உண்டு. ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவை அலங்கார விருட்சங்களும் பூச்செடிகளும் தான். அதன் பகுதியாக Saraca asoka மரங்களை சிறு தோப்புகளாக நட்டு பராமரிக்கிறார்கள். ஆனால் இந்தத் தொகுதியில் Saraca asoka தனித்துவமானது. பூமரம் தான் என்றாலும் அசோகம் அலங்கார மரம் மட்டுமல்ல. பண்பாட்டு ஆழம் கொண்ட அரிய விருட்சம். 

பழைய சம்ஸ்கிருத காவியங்களில் ஒரு நயம் மிக்கச் சடங்கு விவரிக்கப்படுகிறது. இளவேனிலின் தொடக்கத்தில் பூக்கும் பருவத்தை அடைந்தும் பூக்காமல் நிற்கும் மரங்களைப் பூக்கவைக்க ஓர் இளங்கன்னியை அழைத்து வருவார்கள். அதன் அடிமரத்தை அவள் தன் காலால் சிறிதாக உந்தி உதைக்கவேண்டும். அந்தத் தீண்டலுக்கு மரம் பூத்துவிடும் என்பது மரபு. நம் ஆலையங்களில் விரவிக்கிடக்கும் எண்ணற்ற சாலபஞ்சிகை சிலைகளுக்குப் பின்னால் உள்ளது இந்தக் கற்பனை தான். சாலம் என்று பெயர் இருந்தாலும் அது அசோகமரத்தையே குறிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். காவியத்திலும் சிற்பத்திலும் இந்த நிகழ்வு ஒரு படிமமென்றே கையாளப்படுகிறது. ஒரு கன்னிகையின் தொடுகைக்குக் கொழுந்தென வெடித்து மலரும் மரம். இது வளத்தின் குறியீடென்றே பொதுவாக புரிந்துகொள்ளப்படுகிறது. 

ஆனால் அம்மலர்களின் வடிவ மென்மையும் வண்ண ஆழமும் தன்னளவிலேயே பொருள் கொண்ட ஓர் இயற்கை நிகழ்வு என்றும் எனக்குத் தோன்றியதுண்டு. காற்றில் அசையும்போது அதன் வண்ணபேதத்தால் தானே ஒளி கமழ்வது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் அடுத்த நொடியே தான் ஒளி அல்ல, வண்ணம் மட்டும்தான் என்று அவ்வசைவே தன்னைக் காட்டிக்கொடுக்கிறது. ஒரு மென்சோகமென இவ்வசைவு உள்ளத்தில் பரவுவதை உணர்ந்திருக்கிறேன். மரபு அதற்கு போட்டிருக்கும் பெயரோ, அசோகம். நம் மரபில் உள்ள பல அரிய விஷயங்களைப்போல் இதுவும் ஓர் அரிய முரண் தான். An enigma. 

அசோகத்தின் அடியில் தான் புத்தரை மாயாதேவி ஜனித்தாள் என்ற தொன்மம் உள்ளது. அசோகம் சூழ்ந்த வனத்தில் தான் ஆதிகவி சீதையை அமரவைத்தான். அவன் எப்பேர்ப்பட்ட கவி என்பதை அசோகத்தைக் கண்ட பிறகே நான் உணர்ந்தேன்.

பெங்களூர் வந்த பிறகு தான் நான் அசோகத்தை முதன்முதலாகக் கண்டேன். என் படிப்பரையில் அமர்ந்தால் ஜன்னல் வழியாக சற்று தூரத்தில் ஒரு வரிசை மரங்களைக் காண முடியும். நாங்கள் 2023 நவம்பர் மாதம் வந்த போது மரம் மலர்ந்திருக்கவில்லை. ஆனால் 2024 ஜனவரியிலேயே மொட்டுகளைக் கண்டிருந்தேன். எப்போது பூக்கும் என்று எதிர்நோக்கியிருந்தேன். பிப்ரவரி 8 அன்று பூத்ததாக டைரியில் எழுதியிருக்கிறேன்.

*

எழுத்தாளர்கள் டைரி எழுத வேண்டும் என்று தன் ஆசிரியர் சுந்தர ராமசாமி கூறியதாக என் ஆசிரியர் ஜெயமோகன் பல முறை எடுத்துக் கூறியிருக்கிறார். ஆனால் அந்த அறிவுறையை சென்ற ஆண்டு தான் செயலாக்கத் தொடங்கினேன். அதுவும் மிகச்சிறிய அளவில். சென்ற வருட டைரியில் பல நாள் கட்டங்கள் காலியாக உள்ளன. ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் எழுதாமல் மேலும் பல கட்டங்கள் உள்ளன. ஆனாலும் என்னை பரிசீலித்துக்கொள்ள பல சுவாரஸ்யமான புள்ளிகளைக் காண்கிறேன். 

உதாரணம், பல குறிப்புகள் அன்று கண்ட ஓர் இயற்கை நிகழ்வைப்பற்றியாக உள்ளது. ‘இன்று அசோகம் பூத்தது’ என்று ஃபிப்ரவரியிலேயும், ‘இன்று கடம்பம் பூத்தது’ என்று ஜூன் மாதத்திலும், ‘பருந்துகள் திரும்பிவந்துவிட்டன’ என்று நவம்பரிலும் எழுதியிருக்கிறேன். இயற்கைக்குள், இயற்கையின் பகுதியாக இருந்திருக்கிறேன் என்ற உணர்வு சட்டென்று ஏற்பட்டது. அது பெரும் நிறைவாக உள்ளத்தை நிறைத்தது.

எழுத்து சார்ந்தும் பல தெளிவுகள் உருவாயின. முதல் விஷயம், எழுத்துக்கு எவ்வளவு மெனக்கடல் தேவைப்படுகிறது என்று தெரிந்தது. மற்றவர்களுக்கு எழுத்து சுலபமாக அமையும் வித்தையாக இருக்கலாம். ஆனால் எனக்கு மெனக்கடலுடனேயே நிகழ்கிறது. அந்த மெனக்கடலுக்கான அவகாசம் பதிவாகும்போது புரிகிறது. ‘ஆம், முயன்றுகொண்டு இருக்கிறேன், தொடர்ந்து, நேரத்தை விரயம் செய்யவில்லை’ –  இந்த உணர்வு தன்னம்பிக்கை கொடுக்கிறது என்று சொன்னால் எழுத்துக்கு வெளியே இருப்பவர்களுக்கு ஒருவேளை புரியாமல் இருக்கலாம். இலாபம் வராமல் மெனக்கடுவதில் என்ன இருக்கிறது என்று கேட்பார்கள். ஆனால் எழுத்து என்ன கோருகிறது என்பதை அறிந்தவர்கள், அதற்காக தொடர்ச்சியாக கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை ஒருவர் உணர்வதில் உள்ள ஊக்கத்தை புரிந்துகொள்வர். இசையில் தேர்ச்சியுடைய ஒரு நண்பர் கூறியது நினைவுக்கு வருகிறது. அவருக்கு மேடையில் பாடுவதை விட அன்றாட சாதகமே மேலும் நிறைவை அளிக்கிறது என்று சொன்னார். ‘மியூசிக் எவ்வளவு பெரிசுங்கற கான்ஷியஸ்னஸ் தனியா இருக்கறப்பத்தான் கிடைக்கிறது,’ என்றார். அத்தனைப் பெரிய ஒன்றின் பகுதியாக இருப்பதே நிறைவு தான். மகிழ்ச்சி தான்.

இரண்டாவது, பெரும்பாலும் நேரத்தை விரையமாக்கவில்லை என்ற உணர்வு வந்தது. அது ஒரு நிமிர்வை கொடுத்தது. தொலைக்காட்சி அநேகமாக பார்க்கவில்லை. சென்ற ஆண்டு தொலைக்காட்சி, தொடர்கள், படங்கள் பார்த்த அவகாசத்தை கணக்கிட்டால் மொத்தம் ஒன்றரை நாட்களுக்கு மேல் தேரவில்லை. குழந்தையுடனும் குடும்பத்துடனும் நேரம் செலவழித்திருக்கிறேன். வாரத்தில் மூன்று நாட்களாவது சிறிய ‘இயற்கை நடைகள்’ சென்றுள்ளோம். குழந்தைக்கு சிறிய அளவில் இசையும் கோயில்களையும் அறிமுகம் செய்திருக்கிறேன். 

மூன்றாவது, உண்மையிலேயே நேரம் எங்கே போகிறது என்ற துல்லியமான பார்வை கிடைத்தது. நான் விரும்பும் அளவுக்கான விரிவுடன் சென்ற ஆண்டு வாசிக்கவில்லை. தேவைக்கேற்பவே வாசித்தேன். அந்தக் குறை உள்ளது. இப்போது இயங்கிக்கொண்டிருக்கும் தளங்கள் பல்வேறு திசைகளில் என்னைச் சிதறடிக்கின்றன. ஆகவே ஒன்றில் மட்டும் குவிந்து இருக்கமுடியாமல் ஆனது. பணி, குடும்பம், குழந்தை என்று அனைவருக்கும் இருக்கும் வாழ்க்கைச்சுழலின் அழுத்தங்களையும், நுண்ணுணர்வுள்ளவர்களுக்கு சமயத்தில் வரும் மன அவஸ்தைகளையும் கவனித்துக் கையாள வேண்டியிருந்தது. 

ஆனால் அனைத்தையும் மீறி, பெரும்பாலான நேரம் மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது. மனம் பெரும்பாலும் விரிவுடனும், துல்லியத்துடனும் இருந்தது. உடல் ஆரோக்கியமாக இருந்தது. சிந்தனையும் கற்பனையும் இந்த ஓராண்டில் மேம்பட்டுள்ளதை உணர்கிறேன். என் திறமைகளையும் எனக்கு முன் இருக்கும் சவால்களையும் பிரித்தறிய முடிகிறது. கனவுகள் திறக்கத் தொடங்கிவிட்டன. இவை எல்லாமே வரம் தான்.

*

சென்ற ஆண்டு எழுத்து சம்பந்தமாக என்னென்ன செய்தேன்? 

ஜனவரி மாதத் தொடக்கத்தில் அஜிதனின் மருபூமி நாவல் வெளியீட்டில் பேசினேன். பாவண்ணன் அவர்களும் நண்பர்கள் தமிழ் பிரபா, அகரமுதல்வன் ஆகியோரும் உடனிருந்தனர். அன்று எல்லா உரைகளுமே நன்றாக அமைந்தன. அஜிதன் தன் நிறைவுரையில் Transmodernism பற்றிப் பேசினார். 

அதன் தூண்டுதலில் ஜனவரி மாதம் முழுவதும் transmodernism-ஐ பின் தொடர்ந்து வாசித்தேன். நண்பர் ஐஸ்வர்யா (மொழிபெயர்ப்பாளர், ஆங்கிலப் பேராசிரியர்) உடன் விவாதித்தேன். 

ஜனவரி மாதம் நண்பர் அணில் சர்வேபள்ளி தன்னுடைய ‘ஹர்ஷனீயம்’ என்ற podcast-ல் என்னை பேட்டிக் கண்டார். அணிலின் தாய்மொழி தெலுங்கு. ஹைத்ராபாதில் வசிக்கிறார். என் மொழியாக்கத்தில் ஏழாம் உலகம் நாவலை வாசித்து அந்நாவலால் பெரிதும் கவரப்பட்டார். ஆகவே என்னை பேட்டி எடுத்தார். பிறகு ஜெயமோகனையும் பேட்டி எடுத்தார் — அது ஒரு கிளாசிக். தொடர்ந்து ஓராண்டில் உலகெங்கிலுமிருந்து நூறு மொழிபெயர்ப்பாளர்களை வாசித்துப் பேட்டி எடுத்து பகிர்ந்தார். ஏழாம் உலகம் நாவலை ஆங்கிலம் வழியாக தெலுங்குக்கு மொழியாக்கம் செய்துள்ளார். அதோ லோகம் என்ற பெயரில் இவ்வருடம் வெளியாகவுள்ளது.

ஜனவரியில் தான் லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் ‘அக்னிசாட்சி’ நாவலையும் வாசித்தேன். ஆங்கில மொழியாக்கத்தில். அதன் பிறகு சிற்சில பகுதிகளாக எழுத்துக்கூட்டி மலையாளத்தில். அக்னிசாட்சியை கச்சிதமான அமைப்புக்கொண்ட நாவல் என்று சொல்லிவிடமுடியாது. ‘ஒரு பெருங்கட்டடத்தின் வரைபடத் துண்டுகள்’ என்று என் முதல் அபிப்பிராயத்தை புத்தகத்தின் முதல் பக்கத்தில் கிறுக்கியுள்ளேன். ஆனால் அந்த கட்டடத்தின் கனவு என்னை ஆட்கொண்டது. அந்த பாதிப்பில் நிறைய வாசித்தேன். எழுதினேன்.

ஜனவரி இறுதி வாரத்தில் கிளம்பி ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவுக்குச் சென்றேன், மொழிபெயர்ப்பாளராக. ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ நாவலை மொழியாக்கம் செய்ததால் கிடைத்த வாய்ப்பு.  

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் ஆடம்பரத்தை கேள்வித்தான் பட்டிருந்தேன். பார்வையாளராகக்கூட சென்றதில்லை. முதல் முறையே பேசுபவராகச் சென்றதால் அதன் உள்வட்டங்களை அருகிருந்துக் காண வாய்ப்புக் கிடைத்தது. 

சற்று திகைப்பாக இருந்தது. செயற்கையானச் சூழல் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் அதுவும் ஒரு எதிர்வினை உணர்வு தான். உண்மையில் அங்கே வந்திருந்தவர்கள் அனைவருமே வாசகர்கள். நல்லெண்ணம் கொண்டவர்கள். ஆனால் அவர்கள் அங்கே பறைசாற்றிய அறிவு எல்லைக்குட்பட்டது, மேம்போக்கானது. அறிவுஜீவி எப்படி அறியாமையுடன் சமரசம் செய்துகொள்ள முடியும் என்ற வியப்பும் திகைப்பும் தோன்றியது. மேலும் மேலும் என்று சென்றுகொண்டே இருக்கும் தாகம் அங்கே காணக்கிடைக்கவில்லை. எல்லோருக்கும் அவரவர்கள் ஆசனங்கள் போதுமானதாக இருந்தது.

இந்தச் சூழலில் ஆசிரியர் ஜெயமோகனுடன் உடனிருந்தது மிகப்பெரிய மன எழுச்சியை அளித்தது. பொய்யும் பகட்டும் கலக்காத அறிவு கொடுக்கும் நிதானத்தை அவருடைய  புன்னகையில் கண்டுகொண்டே இருந்தேன். அவருடைய பார்வை விரிவு அனைத்தையும் ஊடுருவி நிதமனாகத், துல்லியமாக, வகுத்தது. என் திகைப்பு குறைந்து வருவதை உணர்ந்தேன். ஜெயமோகனுடன் உடனிருப்பது பார்வைக்கான, சிந்தனைக்கான நேரடிப் பயிற்சியே தான். அவருடைய விரிவும் நிதானமும் நம்மை ஆட்கொள்கின்றன. நாம் அவ்வகையில் நம் சிந்தனைகளை நிகழ்த்தத் தொடங்குகிறோம். அந்த ஐந்து நாட்களில் என் இடம் என்ன, என் எதிர்காலம் என்ன, அந்தப் பாதையில் என் போதாமைகள் என்னென்ன, அவற்றைக் கடக்க என்ன செய்ய வேண்டும் என்ற புரிதல்கள் தெளிவுற்றன என்றால் மிகை அல்ல. 

மேலும், ஜெ கனவுகளால் பொங்கிக்கொண்டே இருப்பவர். ஓர் ஆசிரியராக ஜெயமோகனின் மிகச்சிறந்த கூர் என்ன? நம் மனதில் தளிரென்று கூட இன்னும் அரும்பாத கனவுகளின் முளைகளை எழுப்பிவிடும் அவருடைய ஆற்றல் தான் அது என்று இன்று  சொல்வேன். நண்பர்கள் சொன்னதுண்டு. ஒவ்வொருவரிலும் ஒவ்வொன்றை தீண்டியிருக்கிறார். அதை எவ்வாறு கண்டுகொண்டார் என்பது மர்மம் தான். அதை முற்றிலும் உத்தேசித்துத், திட்டம்போட்டு, போதப்பூர்வமாக செய்கிறார் என்று எனக்குத் தோன்றவில்லை. 

இந்த நாட்களில் ‘மொழி’ இணையதளம் சார்ந்த என் கனவுகள் முளை கண்டன. பிரியம்வதாவும் நானும் விவாதித்துக்கொண்டிருந்தோம். ஆனால் ஜெயமோகனிடம் பேசியபோது எங்கள் செயல்திட்டத்தின் சாத்தியங்களை மேலும் விரிவுபடுத்திக்கூறினார்; மேலும் கூராக்கினார். 

அவற்றைக் கனவுகள் என்றே விவரித்தார். கனவுகள் உலகையே விரிவுகொள்ளச் செய்கின்றன. அதன் முன் நாம் சிறியவர்களாகின்றோம். ஆனால் சிறியவற்றுக்குறிய சுருசுருப்பும் வேகமும் நம்மில் அமைந்துவிடுகிறது. பெருமாள் முன் தொண்டரென. அந்த விவாதங்களின் அடிப்படையில் எங்கள் திட்டங்களையும் தளத்தையும் வடிவமைத்தோம். இன்று வெளிப்பாடு கண்டுள்ளது.

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் ‘The Abyss’ நூலைப்பற்றி எழுத்தாளர் அஞ்சும் ஹஸன் ஜெயமோகனையும் அதன் மொழிபெயர்ப்பாளரான என்னையும் பேட்டிக்கண்டார். நான் மொழி அமைப்பின் செயல்பாடுகளைப் பற்றி மற்றோரு அரங்கில் பேசினேன். சாகித்ய அகாதமியின் Indian Literature பத்திரிக்கையின் தொகுப்பாளர் சுகிர்தா பால், தொகுப்பாளர் மினி கிருஷ்ணன், மற்றும் மொழிபெயர்ப்பாளர் டெய்சி ராக்வெல் ஆகியோர் உடனிருந்தனர். ஆர். சிவப்ரியா தொகுத்தார். 

ஜெய்ப்பூரில் கிடைத்த மற்றொரு அபாரமான அனுபவம் பண்டித் விஷ்வ மோகன் பட் அவர்களின் வீணை இசை. மோகன்வீணா என்ற slide guitar தான் அவர் வாத்தியம். அவரே உருவாக்கியது. குளிர்ந்த இரவில் அபாரமான இசை. ஜெய்ப்பூரில் காவல் துறை உயரதிகாரியாக பணி வகிக்கும் ஜெயமோகனின் நண்பர் மொழிபெயர்ப்பாளர் செங்கதிர் அவர்கள் ஆமேர் கோட்டையையும் ஹவா மெகலையும் காண ஏற்பாடு செய்து உடன் வந்தார். அதுவும் இனிய நாளாக அமைந்தது. 

ஃபிப்ரவரி மாதம் அஜிதனுடன் transmodernism பற்றி ஒரு இணைய உரையாடலில் கலந்துகொண்டேன். இச்சிந்தனைகள் இன்றைய சூழலில் தாக்கம் ஏற்படுத்துவதைக் காண முடிகிறது. இதைப் பற்றி அஜிதன் ஒரு புத்தகத்தை தற்போது தயாரித்துக் கொண்டிருப்பதாக சொன்னார். அதே மாதம் அஜிதன் – தன்யா திருமணம் கோவையில் நடந்தது. ஆசிரியர் இல்லத்து மங்கலம். நண்பர்கள் சூழ இணக்கமான சூழலாக அமைந்தது. 

மார்ச் மாதம் கலவையாக வாசித்தேன். என்னுடைய ‘மதுரம்’ சிறுகதை, ஜனவரியில் எழுதியது, அகழ் இதழில் பிரசுரமானது. மார்ச் மாத இறுதியில் ‘ஒரு தலைமுறையின் விதி’ எழுதத் தொடங்கினேன். அதில் உள்ள செய்திகளை பல வருடக் காலமாக வாசித்து நினைவில் இருந்ததால் மேற்படி படிக்க வேண்டியிருக்கவில்லை. மொழியை, எழுத்தின் அமைப்பை சீரமைக்க மட்டும் கவனம் தேவைப்பட்டது.

ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் டெல்லி செல்ல திட்டம் இருந்தது. ஜக்கர்நாட் பதிப்பகத்தின் ஆசிரியர் சிக்கி சர்கார் அவர்களுடன் ஒரு சந்திப்பு. ஜெயமோகன், பிரியம்வதா, எங்கள் முகவர் கனிஷ்கா குப்தா ஆகியோருடன் நானும் அவர்களை சந்திப்பதாக இருந்தது. மொழியாக்கங்களை ஆங்கிலத்தில் பதிப்பிக்கும் செயல்பாடின் பகுதியாக இத்தகைய சந்திப்புகளுக்கும் நேரம் அமைக்க வேண்டியுள்ளது. 

ஆனால் அந்த வாரம் என் மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனது. மருத்துவமனையில் சேர்க்க வேண்டி வந்தது. டெல்லி செல்லவில்லை. மருத்துவமனையில் இருந்தபடி நேரம் கிடைத்தபோது எழுதினேன். அந்த மாதம் வேறென்ன செய்தேன் என்று டைரியில் குறிப்பிடவில்லை. ஆனால் எழுதினேன். இப்போது நினைத்துப்பார்க்கும் போது ஆஸ்பத்திரியின் நோய்ச்சூழல் நினைவில்லை. அங்கே இங்கும் அங்கும் அமர்ந்து எழுதிய இடங்கள் துல்லியமாக நினைவிருக்கின்றன. 

ஏப்ரல் மாத இறுதியில் இந்திய தத்துவம் மூன்றால் நிலை வகுப்பில் பங்கேற்க வெள்ளிமலை சென்றேன்.

மே முதல் வாரம் ‘ஒரு தலைமுறையின் விதி’ பிரசுரமானது. நல்ல வரவேற்புப் பெற்றது. முதல்முறை எனக்கு என் எழுத்து சார்ந்து ஒரு பெருமிதம் உண்டானது. சொல்ல ஒன்று உள்ளது, அதைச் சொல்வேன் என்ற தன்னம்பிக்கை உருவானது. 

அந்த கட்டுரைக்கு ஓர் இரண்டாம் பாகம் உள்ளதென்று அறிந்தேன். ஆனால் அதன் வடிவம் அமையவில்லை. மே மாதம் சற்று எழுதிப் பார்த்தேன். கைகூடவில்லை. அந்த மாதம் டாண்டேயின் டிவைன் காமெடி காவியத்தை வாசித்தேன். அதைப்பற்றி வெள்ளிமலை காவிய முகாமில் பேசி நேரம் அதிகமானபடியால் திட்டும் வாங்கினேன். வடிவப்பிரக்ஞை பற்றி மறக்கமுடியாத பாடமாக அந்த அனுபவம் அமைந்தது.

மே மாதம் பிரியம்வதாவும் நானும் பெங்களூரில் சந்தித்தோம். சங்கம் ஹவுஸ் என்ற இலக்கிய அமைப்புக்குச் சொந்தமான ‘தி ஜாமுன்’ என்ற இல்லத்தில் எழுத்தாளர்களை விடுதி போல் தங்க அனுமதிக்கிறார்கள். இனிமையான இடம். மரங்கள் சூழ்ந்தது. நல்ல நூலகம் உள்ளது. உணவும் அளிக்கப்பட்டது. அங்கே இரண்டு நாட்கள் தங்கி நாங்கள் மொழி அமைப்புக்கான திட்டங்களை விவாதித்தோம். 

ஜூன் மாதம் கடம்பம் பூக்கும் பருவம். தன் அமெரிக்கப் பதிப்பாளரைச் சந்திக்க ஜெயமோகன் பெங்களூரு வந்திருந்தார். எங்கள் முகவர் கனிஷ்காவும் வந்திருந்தார். ஜூன் மாதத்திலேயே வெள்ளிமலையில் மற்றொரு தத்துவ வகுப்பில் கலந்துகொண்டேன். சாங்கியம், யோகம் சார்ந்து. முறையான விவாதத்துக்கான முதற்கட்டப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. பட்டாம்பூச்சிகள் சூழ அருமையாக இருந்தது வெள்ளிமலையின் சூழல்.

ஜூன் தொடக்கத்தில் ஒரு வரலாற்று நாவலுக்கான உந்துதல் தோன்ற சற்று எழுதிப் பார்த்தேன். வாசிக்கத் தேவை இருந்தது தெரிந்தது. ஜூன், ஜூலை தொடர்ச்சியாக அது சார்ந்து வாசித்தேன். 

ஜூலை மாதம் மூன்று நாட்கள் பாலக்காடு ஶ்ரீகிருஷ்ணாபுரத்தில் தங்கி மலையாள இதழாளர், விமர்சகர் கே.சி.நாராயணன் அவர்களை மொழி அமைப்புக்காக ஒரு நேர்காணல் கண்டோம். பிரியம்வதா, நான், கூடவே நண்பர் அழகிய மணவாளன். வெளியே தங்க ஏற்பாடுகள் செய்திருந்தோம். ஆனால் முதல் நாள் உரையாடல் முடிவிலேயே கே.சி. அவர் குடும்ப வீட்டிலேயே எங்களைத் தங்கிக்கொள்ள அழைத்தார். அது அபாரமான ஓர் அனுபவமாக அமைந்தது.  

அது இருநூறாண்டு பழமை கொண்ட பழைய நம்பூதிரி இல்லத்தின் ஒரு பகுதி. கிழியேடம் என்று பெயர். முன்பகுதி முழுவதும் மரத்தால் ஆனது. நாங்கள் பெரும்பாலும் அமர்ந்திருந்த பூமுகத்துக்கு முன்னால் ஒரு பழங்காலத்துக் குளம். இல்லம் முழுவதும் நிறைந்திருந்த பழைய உடைசல்கள், வெண்கலப் பாத்திரங்கள். கரையான் அரித்துக் கிடந்த மர ஏணி போன்ற படியில் ஏறி மேற்தளத்துக்குச் சென்றால் பழைய அலமாரிகளுக்குள் ரிக் வேதத்தின் பிரதிகள். இல்லத்துக்குப் பின்னால் சற்று தூரத்தில் பெண்களுக்கான குளம். வரலாற்றுக்குள் ஓர் அடி வைத்தது போல் இருந்தது. 

அழகிய மணவாளன் ஒரு கேரளப்பிரியர். Keralophile. கேரள இலக்கியம், வரலாறு, நிகழ்த்துக்கலை மரபுகள் ஆகியவற்றில் அவருக்கு ஆர்வம் உண்டு. கதகளிப்பிராந்தும். கே.சி. அவர்களுக்குக் கதகளியில் பெரிய பாண்டித்யம் உண்டு. இந்த நாட்களில் இவ்விருவருடன் கல்யாண சௌகந்திகம் கதகளியைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. என் முதல் நேர்காட்சி அனுபவம். அந்த மூன்று நாட்களும் ஆழமும் தீவிரமும் கொண்ட அற்புதமான அனுபவமாக உள்ளத்தில் நிலைக்கின்றன.

ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் பெங்களூர் புக் பிரம்மா அமைப்பு ஜெயமோகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கவிருப்பதாகத் தெரிவித்தனர். அதை ஒட்டி அந்த விழாவில் அவரோடு ஓர் உரையாடல் நிகழ்த்தினேன். 

இப்படிப்பட்ட உரையாடல்களை நிகழ்த்துவது பெரிய கற்றல் அனுபவமாக அமைகின்றன. இத்தகைய உரையாடல்களுக்குக் கேள்விகள் தயாரிப்பது எப்படி என்பதை ஒட்டி சில புரிதல்களை இவ்வாண்டு அடைந்துள்ளேன். கேள்விகள் எழுத்தாளரைப் பேசத் தூண்டுவதாக, Open-ended-ஆக அமைந்திருந்தால் நல்லது. கேள்விகளுக்குள் ஒரு தொடர்ச்சி அமைந்தாலும் நல்லது.  சில நேரம் எழுத்தாளரின் பதிலிலிருந்தே புதிய கேள்விகள் எழலாம். 

அதன் வழியாக அந்த அமர்வே ஒரு வடிவத்துக்கு வந்தால் மேலும் நல்லது. ஒரு சிந்தனைத் தொடர்ச்சியை பின் தொடர்வது போல் ஆகிவிடும். ஜெயமோகனிடம் ஆசிரியரென்று உரையாடிக் கற்றவற்றின் நீட்சியாகவே இந்த உரையாடல்கள் அமைவது எனக்கு மேலும் உவகையாக உள்ளது.

புக் பிரம்மா நிகழ்வில் என் ஆதர்சம் பண்டிட் வெங்கடேஷ் குமாரின் இசையைக் கேட்கும் அனுபவம் வாய்த்தது. வாழ்க்கையில் முதன்முதலாக யட்சகானம் காணும் அனுபவமும் பெற்றேன். சிவானந்த ஹெக்டேவின் குழு. குருகு இதழில் அவர்களுடனான நெர்காணலை வாசித்திருந்தாலும் அரங்கில் நிகழ்த்தியவர்கள் அவர்கள் தான் என்னும் புள்ளியை பிறகு தான் இணைத்தேன். ராமாயணத்தில் சூர்ப்பனகைப் படலம். செவ்வியலும் ஃபோக்கும் பாதிக்குப்பாதி கலந்த கலைவடிவம். சுநீல் கிருஷ்ணன் அந்த நிகழ்வைப் பற்றி நல்ல அவதானிப்புகளுடன் ஒரு கட்டுரை எழுதினார். 

ஆகஸ்ட் மாதம் தூரன் விழாவில் ஒரு நாள் மட்டுமே கலந்துகொள்ள முடிந்தது. சுவடியியல் வகுப்பை தவரவிட்டதில் வருத்தம். என் தோழி இந்துமதி கனடாவிலிருந்து வந்திருந்தாள். அந்த நாள் முழுவதையும் அவளுடன் செலவழித்தத் திருப்தியுடன் திரும்பினேன்.

செப்டம்பார் மாதம் குடும்பத்துடன் கர்னாடகத்தின் குடகு பகுதியில் ஒரு சுற்றுலா. விடுதியாக்கப்பட்ட பழைய பிரிட்டிஷ் பாணி காட்டு பங்களாவில் தங்கினோம். அதன் உயரமான மரக்கூரைகளும் மஞ்சள் வெளிச்சமிட்ட உள்ளரைகளும் சுவற்றில் தொங்கிய துப்பாக்கிகளும் பழைய புகைப்படங்களும் வாசித்த பேய்க்கதைகளையெல்லாம் நினைவுக்குக் கொண்டு வந்தன. 

குழந்தையை அந்த வீடு பாதித்தது தெரிந்தது. ‘வீடு இவ்வோ பெரிசா இருக்கு, நா இவ்வோ குட்டியா இருக்கேன்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தான். அவன் தோட்டத்திலேயே ஓடிக்கொண்டிருந்தான். மத்திகோடு யானைகள் சரணாலயத்தில் காலையும் மாலையும் யானைகளை பார்த்தோம். நம்டிரோலிங் திபெத்திய மடாலயத்துக்குச் சென்று உக்கிரமான பௌத்தக் கடவுள்களின் சுவர் ஓவியங்களைக் கண்டோம். காவிரியைப் பார்த்தோம். ஒரு நாள் குடகுமலைகளுக்குள் சென்று வயநாட்டில் உள்ள திருநெல்லி ஆலயத்தை தரிசித்துவிட்டு வந்தோம். நீல மலைகள் சூழ அழகான, பழைய ஆயலம். 

செப்டம்பர் மாதம் மொழி அமைப்பு ஆண்டுதோறும் நடத்தும் மொழி பரிசுப் போட்டிக்கு அனுப்பப்பட்டக் கதைகள் கையில் கிடைத்தன. 120 கதைகளை வாசிக்க வேண்டும். அதனுடன் சர்வதேச மொழியாக்க நாளை ஒட்டி சில நிகழ்வுகளில் பேச அழைப்பு வந்தது. ஐஸ்வரியாவின் கல்லூரியில் ஒரு வகுப்பு எடுத்தேன். பெங்களூர் கதே இன்ஸ்டிட்யூட்டில் ஒரு கலந்துரையாடலில் பேசினேன். கன்னட எழுத்தாளர் வசுதேந்திரா, ஜெர்மானிய மொழியிலிருந்து கன்னடத்துக்கு மொழியாக்கம் செய்யும் ஹர்ஷா ஆகியோர் பங்கேற்றனர். இந்து பத்திரிக்கைக்காக பிரியம்வதாவும் நானும் இணைந்து ஒரு கட்டுரை எழுதினோம்.

இம்மாதம் மொழியாக்கப் பதிப்பு சார்ந்த சில அலைக்கழிப்புகளும் நிகழ்ந்தன. சென்ற ஆண்டு நேரம் விரயமானது இப்படிப்பட்ட அல்லல்களால் தான். ஆனால் அனைத்தும் அனுபவங்கள். ஒன்றைக் கடந்த பின் அது எளிமையாகிறது என்பது இந்த ஆண்டு முழுவதும் எனக்கு திரும்பத் திரும்ப கிடைத்துக்கொண்டிருந்த பாடம்.

அக்டோபர் மாதம் எல்லாவற்றையும் ஓரம்கட்டி வைத்து ஜெயமோகனின் ‘குமரித்துறைவி’ நாவலின் மொழியாக்கத்தை முடிக்க முற்பட்டேன். அந்த மாதம் முழுவதும் அதிலேயே சென்றது. அக்டோபரில் மூன்று நாட்கள் குருஜி சௌந்தர் வெள்ளிமலையில் நடத்திய யோக முகாமில் கலந்து கொண்டேன். அங்கே கற்ற பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். என் மன அமைப்பிலும் நாள் ஒழுங்கிலும் மிகப்பெரிய மாற்றத்தை இந்தப் பயிற்சிகள் கொண்டு வருவதைக் காண்கிறேன். என் மனத்தையும் கவனத்தையும் மேலும் கூர்மையாகக் கையாள முடிகிறது. அக்டோபர் இறுதியில் ஜெயமொகனின் ‘பிரதமன்’ சிறுகதை என் மொழியாக்கத்தில் South Parade என்ற சிற்றிதழில் பிரசுரமானது. ‘The Abyss’ அமெரிக்காவின் ALTA நிறுவனத்தின் First Translation Prize-ன் இறுதிப்பட்டியலுக்குத் தேர்வானது. அதை ஒட்டி இதழாளர் சிந்தன் மோடி என்னிடம் நடத்திய உரையாடல் ஹிந்துஸ்தான் டைம்ஸில் வெளியானது.

அக்டோபர் மாதம் நண்பர் ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் மொழியாக்கம் தொடர்பாக ஓர் உரையாடலுக்காக என்னை ஈரோடுக்கு  அழைத்திருந்தார். ‘மொழியாக்கமும் படைப்பாக்கமும்’ என்ற தலைப்பில் பேசினேன். முப்பது நண்பர்களுக்கு மேல் வந்திருந்தனர். அந்த உரை சிறப்பாக அமைந்தது. என் சிந்தனை பக்குவமடைவதை பற்றிய  நம்பிக்கைத் தோன்றியது. மிக நிறைவான நாள். 

நவம்பர் மாதத்தில் நண்பர் ஜெயக்குமார் வெள்ளிமலையில் நடத்தும் ஆலையக்கலை வகுப்பில் கலந்துகொண்டேன். அதனைத் தொடர்ந்து ஐந்தாம் இந்திய தத்துவ வகுப்பில் கலந்துகொண்டேன். நடுவே ஒரு வாரம் வெள்ளிமலையில் தனியாகத் தங்கி குமரித்துறைவி நாவலின் மொழியாக்கத்தை முடித்தேன். தீவிரமாக செயல்படும்போது தனிமை என்னை சற்றும் தொந்தரவுசெய்யவில்லை என்பது அந்த அனுபவத்தின் முக்கியமான பாடம்.

வெள்ளிமலை வகுப்புகளைப் பற்றி இத்தருணத்தில் ஒன்று சொல்ல வேண்டும். முழுமையறிவு என்று பெயரிடப்பட்டுள்ள இவ்வகுப்புகள் இன்று இந்திய அளவில் மிகப் படைப்பூக்கம் கொண்ட பாடதிட்டமுடைய ஒரு குட்டிப் பல்கலைக்கழகமெனச் செயல்படுகிறது. அனைத்திலும் கலந்துகொள்ள பெருவிருப்பு இருந்தாலும் இப்போதைக்கு நேரமும் சூழலும் இல்லை. நான் இந்த ஓராண்டில் மூன்று இந்தியத் தத்துவ வகுப்புகளிலும், யோக வகுப்பிலும் ஆலையக்கலை வகுப்பிலும் மட்டுமே கலந்துகொண்டேன். ஆனால் இவற்றின் வழியாக என் இலக்கிய வாசிப்பும் எழுத்தும் சிந்தனையும், பல படி மேம்பாட்டுள்ளதைக் காண்கிறேன். ஏன், அன்றாட வாழ்க்கைப் போக்கே மேம்பட்டுள்ளது.  நான் இசை கேட்கும் விதம் மேம்பட்டுள்ளது. என் இயற்கை ரசனை மேம்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் கற்றவை ஒன்றை ஒன்று நிரப்பிக்கொண்டு உருவாக்கும் பெருஞ்சித்திரத்துக்காகத்தான் என் வாழ்நாள் முழுவதும் நான் தேடிக்கொண்டிருந்தேன்.  என் வரையில் இந்த வகுப்புகள் ஒரு பொக்கிஷம். 

டிசம்பார் மாதம் பெங்களூர் இலக்கிய விழாவில் மீண்டும் ஜெயமோகனுடன் ஓர் உரையாடல். சலிப்பே இல்லாமல் இவற்றை நிகழ்த்த முடிவதற்குக் காரணம் ஜெயமோகன் தான். ஒவ்வொரு முறையும் புத்தம்புதியதாக ஒன்று நிகழ்கிறது. இந்த நிகழ்வுக்கு சைதன்யா மற்றும் கிருபா வந்திருந்தார்கள். அவர்களுக்கு ஆங்கிலத்தில் பெண்ணெழுத்து சார்ந்து ஒரு பதிப்பகம் தொடங்கும் எண்ணம் இருக்கிறது. அது சார்ந்து பேசினோம். 

டிசம்பம் 16 என் முப்பத்தி ஏழாவது பிறந்த நாள். அன்று ஜெயமோகனை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. தத்துவ வகுப்பு சமயத்தில் பெண் எழுத்துக்களைப்பற்றி ஒரு விவாதம் நிகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக, நீலி இதழைத் தொடர்ந்து, பெண்களின் படைப்புகளை விவாதிக்க ஓர் இதழ் ஆரம்பித்தால்  என்ன என்ற எண்ணம் தோன்றியது. நவம்பர், டிசம்பர் இரண்டு மாதங்களும் பெண்ணெழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து ஓர் இதழுக்கான முன் வரைவை திட்டமிட்டேன். சுரபி என்ற பெயர் அமைந்தது. அந்த எண்ணத்தை ஜெயமோகனிடம் பகிர்ந்துகொண்டேன். 

டிசம்பதில் குடும்பத்துடன் கோலாரில் சில ஆலையங்களைக் காண சிறு பயணம் சென்றோம். சோழர்களுக்குச் சமகாலத்தவரான நோளம்பர்களின் கட்டடக்கலை. நந்திமலை போகநந்தீஸ்வரர் ஆலையம் நாங்கள் அடிக்காடி செல்லும் ஒன்று. கோலாரில் சோமேஸ்வரர் ஆலயத்துக்கும் கோலாரம்மன் கோயிலுக்கும் சென்றோம். 

டிசம்பரில் மதுரைக்குச் சென்றேன். அம்மா மருதாணி வைத்தார்கள். பிடித்த பண்டங்களைச் செய்தார்கள். குழந்தையுடன் கொஞ்சல், விளையாட்டு. இரண்டே நாள். இந்த முறை மீனாட்சியைக்கூட பார்க்க அமையவில்லை. கோவை விஷ்ணுபுரம் விழாவுக்குச் சென்றேன். திரும்ப மதுரைக்கு. குடும்பத்துடன் தென் தமிழகத்தில் குலதெய்வக் கோயில் பயணம். திருவட்டாறு, நாகர்கோவில், கன்யாகுமரி, நாங்குநேரி. குழந்தைக்குப் பழங்கோயில்கள் மேல் தானாகவே ஒரு பிரியம் உருவாவதைக் காண்கிறேன்.  

அங்கிருந்து மீண்டும் வெள்ளிமலை. பிரியம்வதாவும் நானும் தலா ஒரு மொழியாக்க நூலின் வரைவை முடித்திருந்தோம். புத்தாண்டை ஒட்டி அவற்றைப் பற்றி ஜெயமோகனுடன் ஒரு விவாதம். 2024-ல் தொடர்ச்சியாக ஜெயமொகனை சந்தித்துக்கொண்டே இருந்ததைக் காண்கிறேன். வெள்ளிமலை வகுப்புகள், இலக்கிய விழாக்கள், மொழியாக்கம் சார்ந்த சந்திப்புகள் என்று  மொத்தமாக கணக்கிட்டால் ஏறத்தாழ முப்பது நாட்கள். இந்த ஒரு வருடத்தில் ஒரு மாத காலம் ஆசிரியரின் அருகாமையில் இருந்தது நல்லூழ் தான். 

*

இந்த புத்தாண்டில் ஒரு முடிவெடுத்தேன். இவ்வாண்டு முடிந்த அளவு பயணங்களை குறைக்க வேண்டும். மேலும் தீவிரமாக எழுத வேண்டும். புனைவு எழுதவேண்டும். நேரத்தை மேலும் கச்சிதமாகக் கையாளவேண்டும், என்று. குமரித்துறைவி மொழியாக்கத்தை முடித்துக் கொடுக்கும் பணி சற்று மிச்சமுள்ளது. மொழி அமைப்பின் வலைத்தளம் ஒரு வருட கால உழைப்புக்குப் பின் நிறைவடைந்தது. 2024 மொழி பரிசின் முடிவுகள் வெளியாகின. அவற்றின் பிரசுர வேலைகள். 

முதலாம் ஆண்டு மொழி பரிசில் தேர்வான கதைகளின் தொகுப்பு ஹைதரபாத் புக் டிரஸ்ட் – சவுத் சைட் புக்ஸ் வழியாக வெளியாகவுள்ளது. அதற்கான ஆயுத்தங்கள். நடுவே தொடர்ச்சியாக எழுதிக்கொண்டும் மொழியாக்கம் செய்துகொண்டும் இருக்கிறேன். சுரபிக்கான ஆயுத்தங்கள் ஒரு பக்கம். இவற்றுக்கு வெளியே வேலைமாற்றத்துக்கான முயற்சிகள். 

யோசித்தால் வாழ்க்கையை மிகப் பரபரப்பாக ஆக்கிக்கொண்டுவிட்டேன். ஆனால் என்னைக் கலையின் அருங்கை சூழ்ந்துள்ளதை ஒவ்வொரு கணமும் உணர்கிறேன். அந்த விரிவு என்னை நிதானப் படுத்துகிறது. 

ஒவ்வொரு நாளும் யோகப்பயிற்சிகள் செய்கிறேன். இயற்கை நடைகள் செல்கிறேன். இப்போது பெங்களூரில் இளவேனிற்காலம். எங்கும் மலர்களை மட்டும் ஏந்தி நிற்கும் மரங்கள் தென்படுகின்றன. 

மீண்டும் பூத்திருக்கிறது அசோகம். என் படிப்பரைக்கு வெளியே, தூரத்தில் வரிசையாக, குருதியும் நெருப்பும் ஒளியும் சூடியதுபோல். அவற்றைப் பார்க்கிறேன். தீராமல் புகைப்படம் எடுக்கிறேன். திரையில் நிறம் சொட்டுகிறது. எத்தனை பாவனைகள். எத்தனைத் தீவிரம். எத்தனை ஆழம். எத்தனை அழகு. ஒளியும் வண்ணமும் அன்றி என்ன பொருளுள்ளது இவற்றுக்கெல்லாம்?

ஆனால் நிதானமாகப் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் அவற்றை நின்று நோக்கும் அளவுக்கு நிதானம் இருக்கிறது மனதில். 

*

Pradhaman

Jeyamohan’s classic Tamil short story ‘Pradhaman’ (பிரதமன்) was recently published in translation in a print-only little magazine called South Parade. The story is reprinted here with their permission.

About South Parade:

Edited by Arshia Sattar, Indira Chandrasekhar, Rahul Soni, Sohini Basak and Trupti Prasad, South Parade is a twice-yearly print-only magazine of contemporary literature, arts and culture from the global south. Although the global south has often been the focus of different publications from different continents and cultures, it has rarely been done in a sustained fashion through the lens of literature. South Parade’s editorial mission is to showcase important voices – emerging, established, overlooked – from the region.

Continue reading

மொழியாக்கமும் படைப்பாக்கமும் [உரை]

[நன்றி: ஜெயமோகன்.இன் தளம்]

(21 அக்டோபர் அன்று ஈரோடு நண்பர்கள் சந்திப்பில் பேசப்பட்ட உரையின் எழுத்து வடிவம்)

நண்பர்களுக்கு வணக்கம்.

இந்த சந்திப்புக்கு நண்பர் கிருஷ்ணன் அவர்கள் அழைத்தபோது, மொழியாக்கம் தொடர்பாக ஒரு சிறிய நண்பர் உரையாடல் என்ற அளவில் அமையும் என்று சொன்னார். ஆனால் எதிர்பார்த்ததை விட நண்பர்கள் பதிவுசெய்ததால், ஓர் உரையுடன் தொடங்கலாம் என்று முடிவானது. நம்முடைய நண்பர் சந்திப்புகளின் இயல்பு தீவிரமான ஒரு விஷயத்தை செறிவாகப் பேசி அதன் மேல் விவாதம் மேற்கொள்ளுதல். அந்த வகையில், தன்வயமான உரையாக அல்லாமல், புறவயமாக, மொழியாக்கம் என்றால் என்ன, மொழியாக்கத்தை தத்துவார்த்த படுத்த முடியுமா என்ற கேள்வியை இங்கே சற்று பரிசீலித்துப் பார்க்க இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம் என்று நினைத்தேன். இதைப்பற்றி இதுவரை வெளிப்படுத்தாத சற்று தயக்கம் மிகுந்த சில எண்ணங்கள் என்னிடம் உள்ளன. அணுக்க நண்பர் கூடுகை என்பதால் இந்தச் சபையில் அவற்றை வெளிப்படுத்தத் துணிகிறேன். மொழியாக்கத்தில் உள்ள ஆக்கச் செயல்பாடு என்ன, அதன் படைப்பூக்கம் எப்படிப்பட்டது என்று இந்த பேச்சு வழியாக ஒரு சிந்தனைப் பயணம் மேற்கொண்டு சற்று விசாரிக்கலாம் என்று எண்ணுகிறேன்.

Continue reading

ஒரு முதிராக் காதல்

பதின்பருவத்தின் ஒரு முதிராக் காதலின் நினைவு போல என் முதல் சிறுகதைத் தொகுப்பு எனக்குள் உள்ளது. பதின்பருவத்து காதலைப்பற்றி எண்ணும் போது அப்போதைய முதிர்ச்சியின்மையின் நினைவுகளால் உருவாகும் ‘கிரிஞ்ச்’ உணர்வை அடைந்தாலும் அந்நினைவுகளில் ஓர் உவகையும் இல்லாமல் இருக்காது. அதைப்போலத்தான் முதல் தொகுப்பும். இது நடந்திராமல் இருக்கலாம் என்று தோன்றுகிறது. சரி அதுதான் நடந்துவிட்டதே, போகட்டும் என்ன குறைந்துவிட்டது என்று அடுத்தக்கணமே தோன்றுகிறது. பிறகு அது நிகழ்ந்தபோது அனுபவமான இனிமைக்கணங்களை – இனிமைக்கணங்களை மட்டும் – ஒவ்வொன்றாக மெல்ல மெல்ல நினைவு தீண்டித் திறந்துப் பார்க்கிறது. உவகை, லஜ்ஜை, அசட்டுச்சிரிப்பு. முதல் தொகுப்பை பற்றி எண்ணும்போதெல்லாம் இந்த பரிதவிப்பும் பரவசமும் தான் மாறி மாறித் தோன்றுகின்றன. இன்று நீலி இதழில் என் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘ஒளி’யைப் பற்றி நண்பர் சக்திவேல் எழுதியிருக்கும் குறிப்பை வாசித்தபோது இவ்வுணர்வுகளை என் மனம் உருவகித்து வளர்த்த விதத்தை சற்று ஆச்சரியத்துடன் பின் தொடர முடிந்தது. சொல்லப்போனால் அதுவே ஓர் இனிமையான அனுபவமாக இருந்தது. 

Continue reading

ஒரு தலைமுறையின் விதி

[நன்றி: நீலி இணைய இதழ்]

பகுதி – 1

தூரங்கள்

1

தமிழகத்தின் கலை வரலாறை நன்கு அறிந்தவர்களில் கூட அநேகம் பேர் அறியாத சம்பவம் இது. 1933-ஆம் ஆண்டில் சென்னையில் அப்போது தொடங்கி சில வருடங்களே ஆகியிருந்த மியூசிக் அகாடெமி என்ற சங்கீத வித்வத் சபையில் பலத்த எதிர்ப்பை மீறி ஒரு நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வின் நோக்கம் ஒன்று தான் — சதிர் என்றும் தாசியாட்டம் என்றும் அப்போது அழைக்கப்பட்ட நடன வடிவை ஒரு கலையென மக்கள் முன் அறிமுகப்படுத்தி அரங்கேற்றுவது. 

ஈ. கிருஷ்ண ஐயர்
Continue reading

சிறுகதை: மதுரம்

[நன்றி: அகழ்]

“தேனுன்னா?” ராதிகாவின் கண்கள் விரிந்தன.

“தேனுன்னா தேன், இனிப்பா” என்றார் பெரியம்மா.

மலர்களில் ஊரும் தேனை மட்டுமே உண்டு பட்டாம்பூச்சிகள் உயிர்வாழ்கின்றன என்ற தகவல் ராதிகாவுக்கு அன்று தான் தெரியவந்திருந்தது. நான்கு வயதான அவளுக்கு பட்டாம்பூச்சிகளை தெரியும். மலர்களையும் தெரியும். ஆனால் அவற்றுக்கிடையே தேன் என்ற கண்ணுக்குத்தெரியாத பொருள் ஊடாடியது அப்போது தான் தெரிந்தது. அன்று பெரியம்மாவின் நந்தவனத்தில் மலர்களையும் பட்டாம்பூச்சிகளையும் பார்த்தபோது அவற்றுக்கிடையே தங்க ரிப்பன் இழைகள் போல தேன் பறந்ததாக அவளுக்குத் தோன்றியது. அந்த நினைப்பு அவளை நிலைகொள்ளாமல் செய்தது. உலகமே தங்க இழைகளால் ஆனதாகத் தோன்றியது. எல்லாவற்றின் மீதும் டிசம்பர் மாதத்தின் இளம் மஞ்சள் வெயில் இதமான வெதுவெதுப்போடு படிந்திருந்தது. அவ்வெளிச்சத்தில் பூக்களும் சிறு பூச்சிகளும் ரத்தினக்கல் போல மெருகோடு ஒளிகொண்டிருந்தன.

அன்று முழுவதும் ராதிகாவுக்கு உள்ளுக்குள்ளே தேன் தேன் என்றது. அவள் பெரியம்மாவின் பூஜையறைக்குள் எட்டிப்பார்த்தாள். அங்கே எப்போதும் போல காமாட்சி விளக்கு முன்னால் நைவேத்தியத்துக்கு தயாராக பூவன்பழமும் தாழம்பூவும் வைக்கப்பட்டிருந்தது. பக்கத்திலேயே சின்ன பித்தளைச்சிமிழில் பொட்டுத் தோடு போல தேன். அந்த குளுமையான அறையில் அது சிவந்த பொன்நிறத்தில் உருண்டு மின்னியது. பெரியம்மா அருகில் இல்லையே என்று உறுதிசெய்துவிட்டு சுண்டுவிரல் நுணியால் அதன் ஒரே ஒரு துளியை தொட்டு நாவில் வைத்தாள். தித்திப்பில் கண்களை மூடி உப்பு ஊறுவது வரை நாவையும் உதட்டையும் சுவைத்தாள். கண்களை திறந்தபொது எதிரே அம்பாள் அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள். பயத்தில் சுட்டுவிரலை திருப்பி “இவ்ளூண்டுதான்” என்பதுபோல் அவளிடம் காட்டிவிட்டு ராதிகா திரும்பி வேகமாக வெளியில் மஞ்சள் வெளிச்சத்துக்குள் ஓடினாள். அவள் விரல் நுனியில் இன்னும் தேனின் பிசுபிசுப்பு எஞ்சியிருந்தது.

சட்டென்று அவளுக்கு அந்த தோட்டத்துடன் மிக அணுக்கமானது போல் இருந்தது. மலரில் தயங்கித் தொற்றி நீலவண்ண இறகுகளை ஒருமுறை கைவிரிப்பதுபோல் திறந்து மூடிய பட்டாம்பூச்சியை பார்த்தபோது அதைச்சென்று உடனே தொடவேண்டும் என்று இருந்தது. பயப்படாதே, நான்தான், என்று அணுகி சொல்லவேண்டும் என்று தோன்றியது. ஆனால் அது பயந்துவிடும் என்ற உள்ளுணர்வோடு அவள் மிகுந்த ஜாக்கிரதையுடன் கண்ணுக்கு புலனாகாத, உடலால் உணரமட்டுமே முடிந்த அந்த எல்லையை கடக்காமல் நின்றாள். பட்டாம்பூச்சியின் கால்கள் கண்ணுக்குத்தெரியாத தாளத்திற்கு நிற்கமுடியாமல் ஆடிக்கொண்டிருந்தன. அதன் மிருதுவான உணர்கொம்புகள் வளைந்து எழுந்து “எனக்குத்தா! எனக்குத்தா!” என்று குழந்தை போல ஆவேசத்துடன் எதையோ கேட்டன. அதன் உறிஞ்சும் குழல் மெல்ல சுருளவிழ்ந்து மலருக்குள் நுழைந்தது. மகரந்தத்தை கண்டுகொண்டு அதை கண நேரம் தொட்டு மீண்ட நொடியில் அவள் பார்வையை உணர்ந்தது போல் சிறகடித்து எழுந்தது. அது பறந்துசென்ற திசையை நோக்கி ராதிகா மெல்லிய பிசுபிசுப்புடன் பொற்படலம் படர்ந்த தன் விரலைத் தூக்கிக் காட்டினாள்.

அம்மா அவளை கூட்டிப்போக வந்தபோது அவள் மனது முழுவதும் தேனின் நினைப்பால் நிறம்பியிருந்தது. அந்த பரவசத்தை யாரிடமும் அவளால் சொல்ல முடியவில்லை. ரிக்ஷாவில் போகும்போது மாலையின் எதிர்வெளிச்சத்தில் அம்மாவின் முகம் எப்போதையும் விட அழகாக, பொன் பூத்ததுபோல் மேலும் பொலிவாக இருந்ததாக அவளுக்குத் தோன்றியது. அம்மா எப்போதும் அம்மா செய்வதைப்போல அவளை “ராதுக்குட்டி!” என்று நெருக்கி அவள் சிறு விரல்களில் முத்தமிட்டுக் கொஞ்சினாள். ஆனால் ராதிகாவுக்கு அம்மா சட்டென்று தூரமாக போய்விட்டதாகத் தோன்றியது. மிக உயரமாக இடத்துக்கு, தொடமுடியாத இடத்துக்கு, சூரியன் மாதிரி, நிலா மாதிரி. அம்மாவுக்குத்தான் எல்லாம் தெரியும், தனக்கு ஒன்றுமே தெரியாது, என்பது போல். அல்லது தனக்குத்தான் எல்லாம் தெரியும், அம்மாவுக்கு ஒன்றுமே தெரியாது என்பதுபோல். அம்மாவின் அணைப்பில் ஒடுங்கிக்கொண்டு அவள் “அம்மா, தேன்னா என்னம்மா?” என்றாள். “தேன்னா தேன் தான்.” அம்மாவும் அதையே சொன்னாள். சற்று நேரம் யோசித்து “Honey,” என்றாள்.

“ஹ – ன் -னி,” ராதிகா உச்சரித்தாள். ஹா…! விஸ்மயத்தோடு எழுந்து உயர பறந்தது. ரீங்கரித்தது. பிறகு நாவில் திரண்டு அமர்ந்தது. ஒரு சொட்டு. ஒரே ஒரு சொட்டு. அது மட்டும். அவள் அம்மாவை திரும்பி ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

“ஹன்னின்னா?”

“Honey-ன்னா அம்ரிதம்.”

“அமிழ்தம்ன்னா?”

“மருந்து மாதிரி ஒண்ணு. பாற்கடலைக் கடஞ்சு எடுத்த கதையில வருமே?”

“கடல் நிறைய்யவா…?”

வீட்டுக்குப் போனதும் அம்மா ஒரு சிவப்பு நிற மூடி போட்ட பெரிய பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துக் காட்டினாள். அதில் தேனி படமும் தேனடை படமும் போட்டிருந்தது. அதை பார்க்க கொஞ்சம் பயமாக இருந்தது. அதைத் திருப்பித் திருப்பி அதிலிருந்த சிவந்த திரவம் கனமாக திரண்டு சுழல்வதை மௌனமாக பார்த்தாள். கடற்கரையில் அலைகள் மெதுவாக புரண்டு எழுந்த கடலை அது அவளுக்கு நினைவு படுத்தியது.

ராதிகா வீட்டுக்கும் பால்கனிக்கும் மாறிமாறி உலாவிக்கொண்டிருந்தாள். பகலின் பொன்மஞ்சள் மங்கி மாலையொளி சிவப்பேறி அணைந்துகொண்டிருந்தது. அந்த நிறமடர்ந்த வெளிச்சத்தில் அவள் ஒரு பட்டாம்பூச்சியைப் பார்த்தாள். ராதிகாவின் வீடு அபார்ட்மெண்டின் மூன்றாம் மாடியில் இருந்தது. பெரியம்மாவின் வீட்டைப்போல விஸ்தாரமான பெரிய தோட்டத்துக்கான இடம் இல்லை. ஆனால் பால்கனியில் அம்மா ஆசைக்கு நான்கைந்து பூந்தொட்டிகளில் பவளமல்லி, செம்பருத்தி, நந்தியாவட்டை என்று நட்டு வைத்திருந்தாள். பட்டாம்பூச்சி அங்கே தான் வந்திருந்தது. மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் சிறிய உருவம். அது அந்த செடிகளில் நான்கைந்து மலர்களின் மேல் தாவித்தாவி அமர்ந்துகொண்டிருந்தது. ஒரு மலர் மேல் ஊன்றி, அதில் தேன் இல்லை என்ற ஏமாற்றத்துடன் சிறகடித்து இன்னொரு பூவில் சென்று அமர்ந்தது. அவள் பார்த்துக்கொண்டே இருந்தாள். பால்கணியின் அகலமான வெள்ளைக் கம்பிகளை தாண்டித் பறந்து மீண்டும் சுழன்று உள்ளே வந்ததே தவிர, வெளியே எங்கேயும் போகவில்லை. வழியெல்லாம் மூடிவிட்டது போல் அந்த நான்கு பூக்களை மட்டும் அது மாறி மாறி நிறைவில்லாத சுழற்சியில் வட்டமடித்துக்கொண்டிருந்தது.

ராதிகா உள்ளே சென்றாள். அலமாரியில் இருந்த பழைய முறுக்கு பாக்கெட் ஒன்றை எடுத்து அகலத் திறந்து அதில் இருந்த மிச்சத்தை வெளியே கொட்டி குழாயில் காட்டி நன்றாக கழுவினாள். ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு ஏறி ஃப்ரிட்ஜின் மேல் இருந்த சிவப்பு மூடி போட்ட டப்பாவை எடுத்துத் திறந்தாள். மிகுந்த கவனத்துடன் ஒரு துளி கூட வீணாகாமல் பிளாஸ்டிக் பை கொள்ளும் வரை தேனால் நிறைத்தாள். கையில் தேன் பையை ஜாக்கிரதையாக பிடித்தபடி மீண்டும் வெளியே வந்தாள். பாதை வகுக்கப்பட்ட கோள் போல சுற்றிக்கொண்டிருந்த பட்டாம்பூச்சி ஒரு மலர் மீது அமர்ந்ததும் மறு கையால் அதை இலாகவமாக பிடித்தாள். அது இரு முறை துடித்து. பிறகு அவள் தொடுகைக்கு பழக்கப்பட்டதுபோல் அடங்கி அமைதியானது.

“ஷ்ஷ்… என் செல்லக்குட்டில்ல? பசிக்குதா? தேன் கொண்டு வந்திருக்கேன் பார் உனக்கு…” என்று மெல்ல பிளாஸ்டிக் பையில் இருந்த தேனின் மேல் அந்த சிறு உயிரை வைத்தாள்.

பட்டாம்பூச்சியின் சிறகுகள் வண்ணமயமான மலரைப்போல் இருக்கும்போது அதன் உடல் அச்சு அசலான ஒரு பூச்சியின் உடல் என்பதை அவள் அப்போது துல்லியமாகக் கண்டாள். அதன் ஆறு கால்கள் துடுப்புகளைப்போல் தேனுக்குள் அடித்துக்கொண்டன. அதன் மெல்லிய உணர்கொம்புகள் தேனுக்குள் விழுந்து அசைவை இழந்து கனத்துத் தொங்கின. உருண்ட தலை வெடுக் வெடுக்கென்று இருமுறை தூக்கியது. மெரினா கடலில் ஒரு முறை தூரத்தில் பார்த்த ஒரு கட்டுமரப்படகு ராதிகாவுக்கு நினைவு வந்தது. அது தன்னந்தனியாக கடலில் நீந்துவது போல் அப்போது தோன்றியது அவளுக்கு. எவ்வளவு தனியாக! ஆனால் இங்கே நான் இருக்கிறேனே? “குடி,” என்று அதை உந்தினாள். அதனால் சரியாக பருக முடியவில்லை என்று எண்ணி அதன் முன் பகுதியை சற்று முக்கினாள் தேனினுள். சிறகுகள் விரல்களுக்கிடையே படபடபடவென்று அடித்துக்கொண்டன. விரல்களை மீறித் திமிரின. அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் அறியாத ஒரு நொடியில் கைவிடுப் பட்டது. பட்டாம்பூச்சி தேனுக்குள் முங்கிச் செல்வதை தடுக்கமுடியாமல் பார்த்தாள். சிறகடித்தது – ஒரு முறை – இரண்டு முறை. பிறகு தேன் எழுந்து அதைச் சுற்றி சிவந்த பொன்னிறமாக அதை மெல்ல விழுங்குவது போல மூடியது. தேனின் கனமான திரவ திரட்சிக்குள் பட்டாம்பூச்சி மூழ்கி மூழ்கிச் செல்வதை ராதிகா கண்ணாடி போன்ற பிளாஸ்டிக் தாள் வழியாக பார்த்துக்கொண்டிருந்தாள். சதை போல தேன் அதை உள்ளிழுத்துக்கொண்டது. அது அமிழ்ந்து சென்று கடலாழத்து அடிமணலில் என நிலைத்தது. அசைவே இல்லை.

வா சாப்பிடு, என்று அம்மா கூப்பிடும் வரை ராதிகா அந்த அசைவின்மையையே பார்த்துக்கொண்டிருந்தாள். அம்மாவின் குரல் அவளை மின்சாரம் போல் உலுக்கியது. புதிதாக பார்ப்பது போல் அந்த அசைவின்மை அவள் புலனின் உறைத்தது. அவள் விறுவிறுவென்று பால்கணி குழாயடியில் சென்று பிளாஸ்டிக் பாக்கெட்டில் இருந்த தேனையெல்லாம் கொட்டினாள். மெல்ல ஒழுகி வடிந்த தேன் வந்துகொண்டே இருந்ததாகத் தோன்றியது அவளுக்கு. அந்த ஒழுகல் நிற்கவே நிற்காது என்பதுபோல். கொழகொழவென்று தண்ணீருடன் கலந்து சல்லடைக்குள் புகுந்து மறைந்தது. கடைசி துளிகளையும் வடித்தப்பின் உள்ளே மென்பச்சை நிறத்தில் பட்டாம்பூச்சி மட்டும் எஞ்சியிருந்தது.

ஆள்காட்டிவிரலையும் கட்டை விரலையும் உள்ளே விட்டு ராதிகா அதை மெல்ல பிடித்து வெளியே எடுத்தாள். அதன் உடல் முழுவதும் தேனின் பிசிபிசுப்போடு இருந்தது. விரல்களுக்கடியில் முன்பு உணர்ந்த துடிப்பேதும் இல்லை. ராதிகா அதை உள்ளங்கையில் வைத்து மெல்ல சுட்டு விரலால் தொட்டு நகர்த்தினாள். அவளால் அதை நகர்த்த முடிந்தது. ஆனால் அது, அசையவேயில்லை. அதன் உணர்கொம்புகள் கீழ்பக்கமாக வளைந்து அசைவில்லாமல் கிடந்தன.

அவள் திடீரென்று அது தன் கையில் இருந்ததை பயந்தாள். அருவருப்பான ஏதோ வஸ்துவதை கைத்தவறுதலாக தொட்டதுவிட்டதுபோல் விரல்களை உதறினாள். அது பறந்து சென்று ஒரு பூந்தொட்டிக்குள் மண் மீது விழுந்தது. கிளை அருகே கிடந்த அந்த சிற்றுடலை சிறிது நேரம் பார்த்துக்கொண்டு நின்றாள். இறகுகள் தேனின் மெருகோடு அந்தி வெளிச்சத்திலும் பளீர் என்று மணிக்கல்லின் நிறம் கொண்டு ஒளிர்ந்தது. தேனெல்லாம் அதன் ஓருடலின் சிறிய பச்சை முக்கோணத்தில் திரண்டு செறிந்ததுபோல். அத்தனை அழகாக, துளி கூட அசைவில்லாமல்.

அன்று மாலை முழுவதும் ராதிகா மீண்டும் மீண்டும் பால்கனிக்குச் சென்று நின்றுகொண்டிருந்தாள். தெளிவான ராத்திரி. நட்சத்திரங்களின் ஒளியில் வானமே மெல்லிய ஊதா நிற வெளிச்சத்தை பொழிவது போல் இருந்தது. கடற்காற்றின் உப்புவாசம் சிறிய அலைகளென அவ்வப்போது உணர்வில் வந்து சேர்ந்தது. சங்குபுஷ்பத்தின் இறுக்கி முறுக்கிய மொட்டுக்கள் கொடிமீது ஒளிச்செறிந்த நீலமணிகளைப்போல் ஆயுத்தமாயிருந்தன, ஒரு சிறு தொடுகையில் இதழவிழ்ந்து நிறமெல்லாம் சிந்தி மலர்ந்துவிடும் என்பதுபோல். முல்லை அரும்புகள் காற்றின் சிறிய அசைவுக்கும் சிலிர்த்தன. பவளமல்லிச் செடியில் மலர்க்காம்புகள் ஆரஞ்சு நிறத்தில் மேதமையின் திகழ்வோடு எழுந்து நின்றன. அதன் முனையில் வெண்முகைகள் கொழுத்திருந்தன. அதனடியில் கிடந்த அசைவற்ற பச்சைநிற முக்கோணத்தை ராதிகா பார்த்துக்கொண்டு நின்றாள்.

அது செடியிலிருந்து மண்ணில் விழுந்த இலை போலத்தான் இருந்தது. இரவில் அதன் பச்சை நிற மேற்பரப்பு பொன்னின் ஒளி கொண்டிருந்தது. அது அசையவே இல்லை. அதன் மேல் வலைப்பின்னல் போல கொப்பளித்தபடி இன்னொன்று பரவியிருந்தது. சற்றே ஆழமான தங்க நிறத்தில். சிறிய எறும்புகள். நெளிகோலம் போல அவை அந்த ஒளிரும் பச்சைப்பரப்பின் மீது வழிந்தோடின. ஒழுகிக்கொண்டே இருந்தன, மண்ணிலிருந்து மண்ணுக்கு. ராதிகா அதன் சிறிய கொழுத்த வயிறுகளை கண்டாள். ஒவ்வொன்றும் குன்றுமணியென ஒளிகொண்டிருந்தன, சரியாக ஒரு துளி அமுதை உட்கொண்டது போல.

இரவு தூங்கப்போக அம்மா சொல்ல கடைசியாக ஒரேஒருமுறை வெளியே சென்றபோது தான் ராதிகா அதைக் கண்டாள். அந்த முக்கோணம் சிறிதாகியிருந்தது. அடிப்பாகத்தில் புடவையின் சரிகை ஓரமென அகலமாக அமைந்திருந்த பகுதி இப்போது இல்லை. ஒருவேளை பெருகிக்கொண்டிருந்த எறும்புக்கூட்டத்துக்கு அடியில் மறைந்திருந்ததா? ராதிகா அருகே குனிந்து உற்றுப்பார்த்தாள். அம்மாவின் பழைய புத்தகம் ஒன்றில் தாள்களுக்கிடையே வெகுகாலம் கிடந்து லேஸ் போல ஆகியிருந்த அரசமர இலை அவள் நினைவுக்கு வந்தது. சணல் நிறத்தில் மெல்லிய வலையென தெரிந்தது அங்கே முன்பிருந்ததன் சுவடா? அல்லது அந்த வலையை உருவாக்கியதே எறும்புகள் தானா? பொடிக்கோலத்தின் கலைந்த வண்ணங்கள் மாதிரி, சிந்திய மகரந்தம் மாதிரி சிதறிப்பரவிய சிற்றெறும்புகள்… ராதிகாவுக்குத் தெரியவில்லை. ஒரு மிகத்தேர்ந்த கைவேலைக்காரனின் திறனிலிருந்து உருவாகி வந்துகொண்டிருந்த சல்லாத்துணி போலத் தெரிந்தது அந்தக் காட்சி. ஆனால் முக்கோணத்தில் எஞ்சிய பகுதி, மாறாத பொன்மஞ்சள் ஒளியுடன், பச்சைக்கல் பதித்த கிரீடம் போல் அதன் மேல் கூர்ந்து இருந்தது. அதன் உச்சியில் ஒரு கண்ணும், ஓர் உணர்கொம்பும் அந்த வண்ண ஒளிர்வை பட்டாம்பூச்சி என்று அடையாளப்படுத்தியது. அது மிகப்பொருமையாக, மிகுந்த கண்ணியத்துடன் காத்திருப்பது போல் ராதிகாவுக்குத் தோன்றியது.

அன்றிரவு ராதிகாவின் கனவில் எறும்புகள் வந்தன. அவை ஏறி வர வர அவள் கால்கள் ஒவ்வொன்றும் இல்லாமல் ஆகிப்போவதை அவள் மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தாள். அது அவளுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. அவள் கைவிரல்கள் ஒவ்வொன்றாக மறைந்து போயின. உள்ளங்கைகளும் மெலிந்த கரங்களும் கைமுட்டிகளும் மேல்கைகளும் தோள்களும் மறைந்தன. எறும்புகள் அவள் நெஞ்சில் ஏறிக் குழுமிய போது அவற்றின் வயிறுகள் கொழுத்திருந்ததையும் அவை பொன்னால் நிறைந்திருந்தன என்பதையும் கண்டாள்.

விழித்தபோது தன்னிலிருந்து முளைத்திருந்த உடலுக்குள் ராதிகாவால் இயல்பாக இறங்கிக்கொள்ள முடிந்தது. ஓசையில்லாமல் கால்வைத்து பால்கனிக்கு சென்றாள்.

காலை ஒளி பனிக்காற்று வழியாக வடிந்துகொண்டிருந்தது. அழகான மஞ்சள் நிற வெளிச்சம். தேன் போன்ற வெளிச்சம். அது ஒவ்வொன்றையும் தொட்டெழுப்பியது. அந்த வெளிச்சத்தில் இலைகள் அடர்பச்சையாக தெரிந்தன. தளிர்கள் ஒளியை வாங்கி ஒழுகவிட்டன. பிறகு வெளிச்சம் ஏற ஒவ்வொன்றும் பச்சையின் பல்வேறு பேதங்களை வெளிக்காட்டின. மலர்கள் ஒவ்வொன்றிலும் அதனதன் வண்ணத்தின் ஆழம் முழுவதுமாக வெளிப்பட்டது. ராதிகா பவளமல்லிச் செடியைப் பார்த்தாள். அடியில் மண் ரத்தசிவப்பில், மெழுகித்துடைத்த வாசல் போல, சீராக, புத்தம்புதியதாக இருந்தது. இலேசான ஈரப்பதமென, ஒரு நிறபேதம். மற்றபடி அசைவுகளே இல்லை. தழல்நிறத்தில் காம்புகளுடன் இரண்டு பூக்கள் மட்டும் அதன் மேல் உதிர்ந்து கிடந்தன.

ராதிகா அதை நெடுநேரம் நோக்கிகொண்டிருந்தாள். பிறகு இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு, ஓடி அருகே குனிந்து, சுண்டுவிரல் நுணியால் மண்ணின் ஒரே ஒரு துளியை மட்டும் தொட்டு நாவின் மேல் வைத்துச் சுவைத்தாள்.

000

ரோம், கிரேக்கம், உலகம் — ஒரு விவாதம்

[நன்றி: ஜெயமோகன்.இன் தளம்]

அன்புள்ள ஜெ,

ரோம் பயணம் முடிந்தது. மீண்டுக்கொண்டிருக்கிறேன். மிக அரிய கண்டடைதல்கள் சிலவற்றை இந்தப் பயணம் வழியாக அடைந்தேன் என்று சொல்லத் துணிவேன். அதை என்னவென்று ஒரு கடிதத்தில்  சொல்லமுடியுமா தெரியவில்லை. தீவிரம் பற்றிக்கொண்டு  எழுதிக்கொண்டிருக்கிறேன். விரிவாகவே பதிவுகள் வருகின்றன. காலம், வரலாறு, கலை, தெய்வீகம்… எழுத எழுத அந்த ஏழு நாள் கனவிலிருந்து நானே விரவி விரவி எழுந்து வளர்வது போன்ற உணர்வை அடைகிறேன்.

*

இந்தப் பயணத்தில் என்னை மிகவும் சலனத்துக்குறுவாக்கிய ஒரு விவாதம் நடந்தது. பழைய கிரேக்க பாணி ரொமானிய பளிங்கு சிற்பங்களையும் அதன் தாக்கத்தின் உருவான ராஃபேல்  மைக்கலாஞ்செலோ உள்ளிட்டோரின் கலை பெருக்குகளையும் நேரில் தரிசிப்பதென்பது என் நெடுநாள் கனவுகளில் ஒன்று. பல இடங்களில் நின்று காலம் இடம் மறந்து கண்ணீர் மல்கினேன். அந்த உணர்வெழுச்சியின் தாக்கத்தை எனக்குள் ஆறாத் தீவிரத்துடன் சுமந்துகொண்டிருந்த வேளையில் ஒரு பழைய நண்பனை சந்திக்க நேர்ந்தது.

அமெரிக்காவில் என் அறிவியல் நாட்களில் அறிமுகமானவன். அவனும் இந்தியன். இப்போது ரோமின் புறநகரில் ஓர் ஆய்வகத்தில் பணியில் இருக்கிறான். அவனுக்கு சிந்தனையில் ஆர்வம் உண்டு. பௌத்தத்தின் சில பகுதிகளை முறையாக படித்திருக்கிறான். நாங்கள் முன்பு விவாதித்திருக்கிறோம். அவன் சிந்தனைப்பாணியில் எப்போதுமே ஒரு இறுக்கத்தை நான் உணர்ந்ததுண்டு. அதை என்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. புரியவில்லை என்பதனாலேயே நான் அதில் சென்று உற்சாகமாக மோதியிருக்கிறேன்.

பிறகு தொடர்பு விட்டுப்போனது. அதன் பின்னரே நான் தீவிரமாக வாசிக்க எழுதத் தொடங்கினேன். சென்ற வாரம் சந்தித்தபோது அன்றைய மனநிலையின் உச்சத்தில் நான் என் பரவசங்களை எல்லாம் சொல்லத் தொடங்கினேன். அல்லது என்னை மீறி அவை வெளிப்பட்டன.

ஆனால் நான் பேசப்பேச அவனுக்கு நான் சொல்வதில் ஏதோ கடுமையாக உவக்கவில்லை என்பதை கவனித்தேன். ஒற்றை வார்த்தைகளில் பதில் சொன்னான் கண்களை திருப்பிக்கொண்டே இருந்தான். என் உற்சாகம் வற்றியது. ஏதும் தவறாக சொல்கிறோமா என்று புரியவில்லை.

பேச்சை சமூகமாக்க “நீ இங்கே தானே இருக்கிறாய்? கலைக்கூடத்துக்கு நிறைய வருவதுண்டா?” என்று கேட்டேன்.

அவன் “நான் ரோம் நகரத்துக்குள்ளேயே வருவதில்லை. எனக்கு இந்த நகரமே பிடிப்பதில்லை,” என்றான்.

“ஏன்?” என்றேன்.

அவன் சொன்னான். “இந்த நகரம் என்னை மிகவும் அசௌகரியப்படுத்துகிறது. கிரேக்க ரோமானிய கலாச்சாரமும் அதை அடுத்து உருவான கலை அறிவியல் வளர்ச்சிப்பாடுகளும் சாராம்சத்தில் மனிதனுக்கு என்ன நன்மையை செய்ததென்று எனக்கு விளங்கவில்லை. மனிதனை வலிமையானவன் என்று அது கட்டமைக்கிறது. சரி. ஆனால் தன் பலத்தை உணரத் தொடங்கியதும் மனிதன் அதிகாரத்துக்கு ஆசைப்படத் தொடங்குகிறான்.  அராஜகங்களை செய்கிறான். அது மிக அசிங்கமான ஒரு நிலை, உண்மையில் அது மனிதனுக்கு ஒரு வீழ்ச்சி தான். இங்கே சுற்றி விரவிக் கிடக்கும் இந்த மாபெரும் இடிபாடுகளைப் பார். நீ சிலாகிக்கும் மைக்கெலாஞ்செலோ கட்டி வைத்திருக்கும் ராட்சச உருவங்களைப் பார். ஆபாசமாக இல்லை?

“மனிதனின் அதீதங்களை அராஜகங்களை அடிமை போல் போற்றும் இந்த பண்பாடை விட கிறித்துவமே மனிதனுக்கு மேலும் பல மடங்கு உதவியிருக்கிறது. ஏன், உன் கிரேக்க ரோமானிய புத்துயிர்ப்புக்கால பேராசான்களை விட உண்மையான புதிய புரட்சி கருத்தை மனிதனுக்கு கொடுத்தவர் யார் என்றால் கிறிஸ்து என்று தான் சொல்வேன். தன்னை சித்திரவதை செய்ய வருபவனை,  கொல்ல வரும் ஒருவனைப் பார்க்கிறான். ‘தந்தையே அவனை மன்னியும், அவன் செய்வதறியாது பாவம் செய்கிறான்’ என்று அவன் மீட்புக்காக மன்றாடுகிறான். அதுவல்லவா வலிமை? அதுவல்லவா புரட்சி? மாறாக கிரேக்க ரொமானிய கலாச்சாரம் மனிதனுக்கு அப்படி என்ன புதுமை செய்தது? அவனை அராஜதத்துக்கும் அழிவுக்கும் தானே கொண்டு போனது? உடனே கலை என்பாய். கலை மனிதனின் உணர்ச்சிகளால் உருவாகி உணர்ச்சிகளை தூண்ட மட்டுமே உதவுகிறது. அதனால் ஆன்மீகமாக அவனுக்கு ஏதாவது பயன் உண்டா?” என்றான்.

அவன் பேசப்பேச எனக்குள் இனம் புரியாத வெறி மூள்வதை உணர்ந்தேன். மூச்சு வாங்கியது. நாங்கள் வெண்ணிற மேஜை விரிப்புகள் கொண்ட சிறிய மெழுகுவர்திகள் ஏற்றப்பட்ட உயர்குடி இத்தாலிய உணவகத்தில் இருந்தோம். ஃபோர் கோர்ஸ் மீலில் இரண்டு கோர்ஸ் முடிந்திருந்தது. மஞ்சள் வெளிச்சத்தில் மேஜைக்கரண்டிகளின் மெல்லிய கிண்கிணி ஒலிகளுக்கு மத்தியில் நேர்த்தியாக உடையணிந்த ஐரோப்பியர்கள் சின்னஞ்சிறு மிடர்களில் வைன் பருகியபடி பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பேச்சுக்குரல்கள் ஏரிக்கரையில் அவ்வப்போது வந்து உடையும் சிறிய அலைகளைப் போல இதமாக ஒலித்தன. எனக்கோ கத்த வேண்டும் போல இருந்தது.

என்னை மிகுந்த பிரயத்தனத்தோடு சமநிலைபடுத்திக்கொண்டு பதில் சொன்னேன். “நீ சொல்வதை என் தலைவன் டால்ஸ்டாய் நூற்றியைம்பது வருடங்களுக்கு முன்னாலேயே சொல்லிவிட்டான். அதெல்லாம் பழைய விவாதம்,” என்றேன். அது வெறும் தட்டிக்கழிக்கும் கூற்று பதில் அல்ல என்று சொல்லும் போதே உணர்ந்தேன். அவன் தலைக்குனிந்து சாலட்டை குத்திக் குத்தி வாயில் அடக்கிக்கொண்டிருந்தான். சொற்கள் எனக்குள் பீரிக்கொண்டு வந்தன. அவன் உபயோகித்த மொழி என்னை மிகவும் சீண்டியிருந்தது.

“என்ன சொன்னாய், கிரேக்க ரோமானிய பண்பாடு மனிதனுக்கு என்ன கொடுத்தது என்றா. நீ அறிவியல்வாதி தானே. அறிவியலின் முறைகள் எங்கிருந்து வந்தது? கிரேக்க கலாச்சாரம் தானே மனிதனுக்கு அறிவுவாதத்தை – ரேஷனலிசத்தை – புகுட்டியது? சாக்ரெட்டிக் டையலாக் என்பதே ஒரு விஷயத்தை பகுத்து ஆராயும் முறை தானே? அப்புறம் ஜனநாயகம்? அது பண்டைய கிரேக்கர்களின் கொடை இல்லையா? ஒரு விஷயத்துக்கு ஓர் ஐடியல் வடிவமுண்டு என்ற பிரக்ஞையை யார் அளித்தது? ஒரு பொருளை தூய அழகனுபவமாக்கி அதை அறியலாம் என்பது மனிதனுக்கு எவ்வளவு பெரிய வரம்? ப்ளாட்டோ தானே அதைச் சொன்னார்? இந்த பிரபஞ்சத்தை கால-வெளியில் அருவமாக உருவகிக்கக் கற்றுக்கொடுத்த கணித மேதைகள் – பித்தகோரஸ், யூக்ளிட், சீனோ – எல்லாம் எந்த பண்பாட்டில் வந்தவர்கள்? எப்படி ஒட்டுமொத்தமாக மனிதனுக்கு என்ன கொடுத்தது என்று உன்னால் கேட்க முடிகிறது?” – இப்படிப் பொறிய வேண்டும் என்று தோன்றியது. சூழல் கருதி கொஞ்சம் நாகரீகப்பூச்சோடு சொன்னேன். ஆனால் சொல்லச்சொல்ல எனக்குள் கோபம் மேலும் மூண்டது. “டெமாகிரசியும் தியரி ஆஃப் ஃபார்ம்ஸும் உன் தகப்பனா கண்டு புடுச்சான்?” என்று தான் எனக்கிருந்த கோபத்துக்கு நான் நியாயமாக கேட்டிருக்க வேண்டும்.

அவன் என் கண்களை சந்திக்கவில்லை. நிதானமாக, “நீ சொல்லும் விஷயங்கள் எதுவும் எந்த ஒரு பண்பாட்டின் சொத்து இல்லை. மனிதன் வெவ்வேறு பண்பாடுகள்ல தனித்தனியா இந்த விஷயங்களை எல்லாம் கண்டடஞ்சிருக்கான். மெசப்பொடேமியாவுல, பண்டைய இந்தியாவுல எல்லாம் ப்ரோட்டோ-டெமாகிரசியோட வடிவங்கள் இருந்திருக்கு. தர்க்கம், ரேஷனல் தாட், எல்லாமும் மற்ற பண்பாடுகள்ல இருந்ததே. பௌத்தர்களோட நியாயவாதம் மிக நுட்பமானது இல்லையா? அதான் நான் சொல்றேன். இதெல்லாம் மனுஷனோட சக்தி. மேதமை. சூழல் சரியா இருந்தா  உபரி வளம் இருந்தா எந்த பண்பாட்டிலும் அந்த மேதமை வெளிப்படும். ஆனால் அதைக் கட்டுப்படுத்த மனுஷன்ட்ட ஒண்ணுமில்ல. அதனாலே அப்படியே மேலப்போய் அதையே பலமாக்கி அராஜகங்கள பண்ணி தன்னையே அழிச்சுக்குவான். ஆனால் கிறிஸ்து சொன்னது மாதிரி ஒரு இன்சைட் உலகத்துல வேற எங்கேயும் உருவாகல இல்ல? அது மாதிரி ஒண்ணு தானே மனுஷன தன்னோட அராஜகத்துலேருந்து காக்குற வல்லமையோட இருக்கு? அது வெறும் மேதமை இல்ல. ஒப்புநோக்க இந்த கிரேக்கோ ரோமானிய கலாச்சாரத்துலயோ வேற எந்த கலை அறிவு சித்தாந்தத்திலேயோ எனக்கு பெரிய அப்பீல் தெரியல. அததான் சொல்றேன்,” என்றான்.

நான் பேசாமல் ஆனேன். அவன் சொன்ன விஷயங்கள் எனக்குள் ஒரு புயலைக் கிளப்பத் தொடங்கியிருந்தது.

“அராஜகம் என்றால் அதில் கிறித்துவ திருச்சபை தானே முதலிடம் வகிக்கிறது?” என்றேன். “இங்கே ரோமில் மட்டும் என்னென்ன அராஜகங்கள் நடந்துள்ளது என்று பட்டியலிட்டாலே போதுமே? கிறிஸ்துவின் ஞானம் கிறித்துவ மத அமைப்புக்கே உதவவில்லை என்பது துரதிருஷடவசமானது.” என்னிடம் வேறு ஆயுதங்கள் இல்லை ஆகவே என் குரலில் ஏளனம் நுழைந்தது. ஆனால் அவன் அதற்கும் நிதானமாக பதில் சொன்னான்.

“உண்மை தான் அதை மறுக்கவில்லை. ஆனால் அதற்கும் மருந்து கிறிஸ்து மாதிரி தூய்மையான ஓர் ஆன்மீக நிலை தான். அதை அவர்களே தீண்டவில்லை என்பது ஓர் அவலம். ஆனால் அதனால் அந்த உயர் விழுமியத்துக்கு எந்த கேடும் உருவாகவில்லை. மாறாக அதன் விழுமியங்கள் அங்கே தான் உள்ளன. நாம் அவற்றை தியானிக்கிறோமா கடைப்பிடிக்கிறோமா நம் வாழ்வை அதன் படி அமைத்துக்கொள்கிறோமா என்பதில் தான் நாம் நிற்கிறோம்,” என்றான்.

நண்பன் கிறித்துவன் அல்ல, இந்து. ஆகவே அவன் சொன்னவை மதப்பற்றின் விளைவு என்று நான் நினைக்கவில்லை. மேலும் இத்தனை ஆண்டுகளில் அவன் அனுபவங்கள் என்ன சிந்தனை எப்படி மாறியிருக்கிறது என்று எதுவும் தெரியாது. இருந்தாலும் நான் இருந்த மனநிலையில் அவன் பேசியவை என்னை மிகவும் பாதித்தது.

அன்று மாலை மீண்டும் அந்த விஷயத்தை பேசவில்லை. எனக்கு மேலும் அந்த பேச்சை வளர்க்க விருப்பமில்லை. ஆனால் அவன் கேள்வி எனக்குள் வளர்ந்துகொண்டே இருந்தது. இரவெல்லாம் தூங்கவில்லை. மறுநாள் காலை கீட்ஸ் மற்றும் ஷெல்லியின் கல்லறைகளைச் சென்று பார்த்தேன். அது எனக்கு கிட்டத்தட்ட ஒரு புனிதயாத்திரை. உண்மையில் என் ரோம்பயணமே அந்த ரொமாண்டிக் காலக் கவிஞர்களின் காலடிக்ளை பின் தொடரும் ஒரு முயற்சி என்று கூட சொல்லலாம். வரலாறையும் கலையின் அழகுச்சங்களையும் கண்டடைய மேற்கொண்டது. ஆனால் என் நண்பனின் கேள்வி மொத்தமாக எல்லாவற்றையும் கலைத்துப்போட்டுவிட்டது.

*

நண்பன் சொன்னதில் ஒரு மிடர் உண்மை இருந்ததா? ஒரு வகையில் இந்தக் கேள்வியை நானும் எதிர்கொண்டிருக்கிறேன். தூய அறிவியல்வாதத்தோடும் டெக்னாலஜி போக்கோடும் எனக்கு இருந்த பிணக்கின் புள்ளி இது தான். ஆனால் கலை? கலையை அப்படி ஒதுக்கிவிட முடியுமா? அவதானம் வழியாக தூய உள்ளுணர்வு வழியாக பெறப்படும் அறிவு எதுவாக இருந்தாலும் அது தன்னளவிலேயே ஓர் ஆன்மீகத்தை கொண்டதல்லவா?

எனக்கு பின் தொடரும் நிழலின் குரல் நினைவுக்கு வந்தது. அந்த நாவலை படித்த நாட்களில் இவன் கிறிஸ்துவின் இடத்தைப் பற்றிச் சொன்ன தர்க்கங்களை தர்க்கமாக அல்லாமல் உணர்வுகளாக அடைந்திருக்கிறேன். அந்த நாவலில் கிறிஸ்து வெளிப்படும் உணர்ச்சிகரமான இடங்களை நினைத்துக்கொண்டேன். ஆம், இது சரி, இது சரி என்று எந்த தர்க்கத்தை விடவும் வலுவான ஒரு குரலாக எனக்குள் ஆமோதிப்பை கண்டுகொண்ட பொழுதுகள் அவை. அதைப்போல் எத்தனை கிறிஸ்துக்கள். தஸ்தாயேவ்ஸ்கியின் கிறிஸ்து, தல்ஸ்தாயின் கிறிஸ்து, செல்மா லாகர்லொஃபின் ஜார்ஜ் எலியட்டின் கிறிஸ்து. மிகச்சிறிய வயதில் என்னுடைய அம்மா அவர் சொன்ன படுக்கைய்றைக் கதைகள் வழியாக எனக்கு கிறிஸ்துவை அறிமுகப்படுத்தினார். அம்மாவுக்கு விவிலியத்தின் சிலப்பகுதிகள் மனப்பாடமாகத் தெரியும். அந்த பழைய வார்த்தைகள் என் இளம் மனதில் அவர் தொடுகையின் ஸ்பரிசத்தோடு இணைந்து வரைந்த கனவாக ஒரு கிறிஸ்து எனக்குள் இருக்கிறான். குழந்தையாக இளைஞனாக தேவனாக.

ஆனால் அந்த பிம்பங்கள் ஒவ்வொன்றும் கதைகள் கலைகள் வழியாகத்தானே என்னை வந்து அடைந்தன? மானுடக் கற்பனையின் மேதமை என்று ஒன்று இல்லையென்றால் கிறிஸ்து இவ்வளவு பெரிய உருவாக எனக்குள் வளர்ந்திருப்பானா? நம் அகத்தின் ஆடியில் அல்லவா அவனை கண்டுகொள்கிறோம்?

அவனை இந்த ரோம் நகரில் எங்கே கண்டேன்? மைக்கெலாஞ்சலோவின் ‘தி லாஸ்ட் ஜட்ஜ்மெண்ட்’ ஓவியத்தின் மைய்யத்தில் வலிய அரசனாக. அந்த ஓவியத்தின் பிரபஞ்ச சுழலுக்கு அடியில் சிலுவையில் அறையப்பட்ட மெல்லிய இளைஞனாக. பியெட்டாவில் மரியன்னையின் கரங்களில் சிசுவைப்போல் ஏந்தப்பட்ட நெடிய நொருங்கக்கூடிய மனித உடலாக.

அவனை விட மேரியை மேலும் அணுக்கமாகக் கண்டேன். ரோமில் அவள் தான் எங்கும் வீற்றிருக்கும் அரசி – மடோனா, ரெஜினா, விக்டோரியா. ஒவ்வொரு தேவாலயத்திலும் ஒவ்வொரு ரூபம் சூடுகிறாள். கிரேக்கர்களின் மினர்வாவைப்போல் அவள் வலிமையின், மேதமையின் தெய்வமாக கருதப்படுகிறாள். எகிப்தியர்களின் ஐசிஸ் போல் அவளே வான் நட்சத்திரங்களை சூடிக்கொண்ட ஆதித்தாயாக விளங்குகிறாள்.

காலம் காலமாக கலைஞர்கள் அவனையும் அவளையும் வடிவங்களிலிருந்து வடிவங்களாக உருமாற்றித் திரட்டிக் கண்டடைந்திருக்கிறார்கள். கலையின் ஆன்மா வழியாகவே தெய்வங்களும் அவை சுட்டும் உயர் விழுமியங்களும் என்னை வந்துத் தீண்டியுள்ளன. கலைஞன் ஞானியரிடமோ, இறையியலாளனிடமோ அல்லது தத்துவவாதியிடமோ தன் தரிசனத்தைப் பெறலாம். ஆனால் என் வரையில் கலைஞனே உயிரை அளித்து பூமியில் ஒரு தெய்வத்தை – அல்லது விழுமியத்தை – படைக்கிறான்.

“தந்தையே அவர்களை மன்னியும்” என்று சொன்னது இயேசுவா அவரை எழுதிய கவிஞனா என்று நாம் பிரித்தறிய முடியுமா என்ன? ஒரு கவிஞனால் அந்த கூற்றின் ஆற்றலை அடைய முடியுமென்றால் அது எவ்வளவு பெரிய நிலை?  ஆம் அது வலிமை தான் ஆனால் வலிமை என்பதாலேயே அது ஆன்மீகமற்றதாக ஆகிவிடுமா? ஆன்மீகம் என்றாலே எளிமையும் சரணாகதியும் சுய ஒடுக்குதலும் சுத்தீகரணமும் மட்டும் தானா? ஆன்மீகத்தின் நிறம் தூய வெள்ளையாக அன்றி இருக்க முடியாதா?

இப்படியே கேள்விகள் எனக்குள் சுழன்றன.

*

ஏன் எனக்குள் இத்தனை போறாட்டம்? நான் வலிமையை வழிபடுகிறேனா? சிந்தித்துப்பார்த்தேன். கிரேக்க ரொமானிய பாணி சிற்பங்களில் உள்ள நாட்டம் என்பது என்ன? மிகத்துல்லியமான மனித வடிவத்தை மிக வலிமையான உச்சக்கணங்களில் தசைகள் முறுக்கி வெளிப்படும் வடிவமாகவே அந்த காலத்து மாஸ்டர்கள் வனைந்திருக்கிறார்கள். அந்த ஒருமையும் தீவிரமுமே அழகாக வெளிப்படுகிறது.

ஆம் வலிமையான அனைத்துமே அழகானவை. ஆபத்தாக அராஜகமாக இருக்கும்போதும் அழகானவை. நாகப்பாம்பின் படம் அழகானது. பாயும் புலியின் இறுகிய தசைகள் அழகானவை. இரவின் அத்தனை மர்மங்களும் அழகானவை. அதைத்தான் சப்ளைம் என்கிறோம் அல்லவா? அதன் ஆபத்தை மீறியும் அதன் அழகில் என் மனம் லயிக்கும் கணம் நான் தூய ஒன்றை காண்கிறேன். அங்கில்லாமல் ஆகிறேன், உயர்த்தப்படுகிறேன். இயற்கையின் முன்னாலும் பெருங்கலைகள் அளிக்கும் தூய அனுபவம் முன்னாலும் என் உள்ளம் ஸ்தம்பிப்பதை எப்போதும் ஓர் உயர்ந்த நிலை என்றே அடையாளப்படுத்தியிருக்கிறேன்.

அது ஓர் ஆன்மீகமான நிலை தான் என்றால் அந்த ஆன்மீகத்துக்கும் கிறிஸ்துவின் ஆன்மீகத்திற்கும் என்ன வேறுபாடு?

*

வலிமையில் ஆன்மீகம், அராஜகம் இரண்டும் இருப்பதாகத் தோன்றுகிறது.

என் நண்பன் சொன்னது போல் வலிமையும் அராஜகமும் பல சமயம் ஒன்றிப்போகத்தான் செய்கின்றன. ரோமானிய இடிபாடுகளை சொன்னான். அவற்றை பூதங்கள் கட்டியது என்று மத்தியக்கால ஐரோப்பியர்கள் எண்ணியதாக ஒரு கூற்று உண்டு. எனக்கு புனித பீட்டர் தேவாலயத்தைக் கண்டபோதும் அதே உணர்வு தான் ஏற்பட்டது. இது ராட்சசர்கள் கட்டிய கூடம் என்று. அதன் பூதாகர நிர்மாணத்தில் என் தேவனை என்னால் காண முடியவில்லை. அது ரோம் நகரின் இயல்பு. ரோமின் அமைப்பில், அதன் கலை வெளிப்பாடுகளில், அந்த ராட்சசத்தனம் கண்டிப்பாக உள்ளது.

அந்த இணைப்பை உணர்ந்தபோதெல்லாம் நானும் அசௌகரியம் அடைந்திருக்கிறேன். மானுட மனத்தில் அதிநிலை வெளிபட்ட மனங்கள் பலதும் ஃபாசிசத்துக்கு நெருக்கமாக இருந்துள்ளது என்ற அசௌகரியமான வரலாற்றுப் பாடம் கண் முன்னால் உள்ளது. ஆகவே தான் நண்பனின் தடித்தனமான “ஆட்டிடியூட்” என்று நான் உணர்ந்ததை மீறி அவன் சொன்ன புள்ளியோடு இவ்வளவு தீவிரமாக மல்லுக்கட்டுகிறேன்.

உண்மையைச் சொன்னால் ரோமின் அந்த ராட்சசத்தனம் எனக்குள் இரண்டு எதிரெதிரான உணர்வுகளை மாறி மாறித் தீண்டியது. ஒரு பக்கம் அந்த அப்பட்டத்தன்மை, அராஜகமான அளவிலான மிகை வெளிப்பாடு, என்னை அருவருக்கவே செய்தது. எத்தனை நிர்மாணங்கள் எத்தனை கட்டடங்கள் எத்தனை இடிபாடுகள். பிளந்து ரத்தம் வழிகிற காயத்தோடு மல்லாந்து விழுந்து கிடக்கும் பூதாகர உடல் போல அந்நகர் தோன்றியது.

ஆனால் மறுப்பக்கம் அதன் அளவும் எடையும் வயதும் “இதோ நான்” என்ற கம்பீரமும் என்னை ஸ்தம்பித்து நிலையிழக்கச் செய்தது. எத்தனை பார்த்துவிட்டது. எவ்வளவு பெரிய சாட்சி. மகத் என்ற வார்த்தை எனக்குள் விழுந்துகொண்டே இருந்தது. Magnificent. எத்தனை மகத்தானது. எத்தனை மகத்தானது.

விவிலிய மரபில் நகரங்களை பரத்தையர் என்று கூறும் வழக்கமிருந்ததாக பின்பு வாசித்தேன்.

*

இதுவரை சொன்னதை தொகுத்து சொல்வதென்றால் –

கிரேக்க-ரொமானிய மரபையும் அதன் வரலாற்றையும் கலைச்செல்வங்களையும் அறியும் பிரதானமான நோக்குடன் நான் ரோம் போனேன். அதன் வழியாக மனிதனை, ‘மானுடம்’ என்று நான் கூட்டாக சொல்லும் ஒன்றை புரிந்துகொள்ள எண்ணினேன். “We are all pilgrims in search of Rome” என்று கதே சொன்ன ஒரு வாக்கு உண்டு. அவர் “We” என்று கலைஞர்களை சொல்கிறார். பழங்கால தீர்த்தயாத்திரீகர்கள் புனிதர்களின் relic-களை தரிசிக்கச் செல்வது போல் ஒரு கலை மாணவியாக நான் ரோமின் ஆன்மாவை அதன் கலை வெளிப்பாடுகள் வழியாக தரிசிக்கச் சென்றேன். அந்த நகரின் பழமையை அனுபவ ஆழத்தை தொட்டுணர முற்பட்டேன்.

அங்கே நண்பன் கேட்ட கேள்வி என்னை நிலையிழக்கச் செய்தது. அவன் கேள்வி கலையின் இடத்தையே கேள்விக்குள்ளாக்கியது. அவன் மானுடத்துக்கு எந்த கலை அறிவியல் அரசியல் தரிசனத்தை விட கிறிஸ்துவின் தரிசனமே முக்கியமானது என்றான். கலை உட்பட மானுடத்தில் மற்ற மேதமைகள் அராஜகங்களையே உருவாக்கும் என்றும் கிறிஸ்துவின் தரிசனமே (அல்லது அதற்கு நிகரான ஓர் ‘ஆன்மீகமே’) இறுதிச்சொல்லாக மீட்புக்கு வழிவகுக்கும் என்றான்.

இதில் ‘ஆன்மீகம்’ என்ற விஷயமே என்னை தொந்தரவு செய்கிறது. எனக்குத் தெரிந்த ஆன்மீகம் கலை வழியாக அழகு வழியாக வெளிப்படும் ஒன்று. கிறிஸ்துவின் தரிசனத்தையே கூட நான் கலை வெளிப்பாடுகள் வழியாகவே அடைந்தேன்.

அப்படி இருக்க ஆன்மீகமாகச் செல்ல அப்படி இரண்டு பாதைகள் இருப்பதாக சொல்லப்படுவது – அவை ஒன்றுடன் ஒன்று பொருந்தா பயணங்கள் என்று உணர்த்தப்படுவது – என்னை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இவற்றை ஒருங்கிணைந்து புரிந்துகொள்ள வழி உள்ளதா என்ற கேள்வி நோக்கி நகர்த்துகிறது.

நண்பனின் சிந்தனைப் பாணியில் எப்போதுமே ஓர் இறுக்கத்தை உணர்ந்ததாக சொன்னேன் அல்லவா? அவன் கேள்வியே அந்த இறுக்கத்தின் வெளிப்பாடென இப்போது தோன்றுகிறது. அந்த இறுக்கத்தை புரிந்துகொள்வதும் முக்கியம் என்று நினைக்கிறேன்.

அந்த சிந்தனை முறையை ஒருவித மரபுவாதம் (traditionalism) என்று தான் சொல்ல வேண்டும். மதம் சார்ந்த ஆசாரவாதம் அல்ல நான் சொல்வது. மிகக்கூர்மையான, தர்க்க ஒழுங்குடைய சிந்தனை. ஆனால் ஓர் இறுகிய தன்மை உடையது.  அது கவிதையின் உண்மையை சந்தேகிக்கும் பியூரிட்டன் நோக்கு என்று சொல்லலாம். தர்க்கத்தின் அடிப்படையில் ஒன்றை கூர்மையாக சொன்னால் ஏற்றுக்கொள்ளும். உருவகமாக, கவித்துவமாக ஒன்றை வெளிப்படுத்தினால் அதை அதன் முழுமையில் ஏற்றுக்கொள்ளாது. வெட்டிப் பிளந்து ஆராய முற்படும். சில சமயம் சிந்தனையில் கவித்துவமான ஒரு தாவல் வழியாக மேலும் விரிவாக ஒன்றின் தரிசனம் நமக்கு அமையப்பெறும் அல்லவா? அதை இவ்வகை சிந்தனை ஏற்றுக்கொள்ளாது. எப்போதும் சந்தேகத்துடன் பார்க்கும். இந்த ‘கவிதைச்சந்தேகப்’ போக்கு மரபுவாதிகளிடம் மட்டும் அல்ல, யோசிக்கையில் நவீன அறிவியல்வாதிகளிடமும் அநேகம் உள்ளது. நண்பனின் கூற்று எங்கிருந்து வந்திருக்கக்கூடும் என்று சற்று உணர முடிகிறது.

*

இந்த போக்கை இந்தியச் சிந்தனையாளர்களிடமும் வேறு வகையில் உணர்ந்திருக்கிறேன்.

இந்தியாவில் பெரும்பாலும் ‘ஆன்மீகம்’ என்று பேசுவோர் தூய மனம் பக்தி சரணாகதி என்றோ அல்லது தத்துவம் தர்க்கம் தியானம் என்றோ அதை வரையறுப்பதை கண்டிருக்கிறேன். இன்று காலை கூட ஒரு சாமியார் ‘அன்வய-வியதிரேக’ தர்க்கத்தை தியானிப்பது வழியாக எப்படி விடுதலை அடைய முடியும் என்று போதிப்பதை காதுபோக்கில் கேட்டேன். எது இவ்வுலகத்திலானது, எது நிரந்தரமானது என்று பிரித்தறியும் முறை என்று அவர் சொன்னார். அந்த வழி என்பது ஒவ்வொரு நொடியும் பூரண போத விழிப்போடு ரேசர் பிளேடை வைத்து கோடு போட்டுக்கொண்டே இருப்பது என்று தோன்யது.

அப்படிப்பட்ட முறைகளை நான் சந்தேகிக்கவில்லை. அவை மெய்மையை பகுத்தறிகின்றன என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் அவற்றை நான் அறிந்த கலையின் உயர்வுகளோடு எப்படி இணைத்துக்கொள்வது?

*

இன்னொரு சாமியாரிடம், மற்றொரு சமயத்தில், நான் கேட்டேன். நீங்கள் இலக்கியம் வாசித்ததுண்டா என்று. அவர், “நான் என் பதினாறாம் வயதில் தாகூரில் கோரா நாவலை வாசித்தேன். அதை வாசித்து ஒரு வாரம் நான் தூங்கவில்லை. அந்த நாவலின் துக்கங்களையும் சந்தோஷங்களையும் நான் எனக்குள் மீண்டும் மீண்டும் நடித்துப் பார்த்துக்கொண்டே இருந்தேன். என்னால் அதிலிருந்து விடுபடவே முடியவில்லை. பிறகு தோன்றியது. இந்த உலகத்தில் இத்தனை நடிப்புகளைக் கடந்து செல்லவேண்டியவன் அதன் மாயைகளிலிருந்து விடுபட வேண்டியவன் மேலும் நடிப்புகளை தன் மேல் சுமத்திக்கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் என்று. அதன் பிறகு நான் இலக்கியம் படிக்கவில்லை,” என்று சொன்னார்.

*

எனக்கு இவ்வாரு தோன்றுகிறது.

தர்க்கம் வழியாகவோ சேவை வழியாகவோ நாம் விலக்கத்தையும் உயர்மனநிலையும் அடையலாம். அகங்காரம் தீண்டாமல் வாழலாம். ஆனால் நம் அனுபவங்களின் சாராம்சத்தை அடையும் அந்த பேரனுபவமானது வெறுமனே ஒரு தர்க்கப் புதிரின் பதிலாக இருக்குமா? அதில் துளிக்கூட உச்ச அனுபவம் – ஒளி, விரிவு, பறத்தல் – இருக்காதா? நம் ஞானியரின் அனுபவங்களை படிக்கையில் அப்படித் தோன்றவில்லை. அதை அவர்கள் ஆனந்தம் என்றே சொல்கிறார்கள். பித்தையும் மாளாக்காதலையும் பேரின்பத்தையும் தான் திரும்பத்திரும்ப சொல்கிறார்கள். அந்த பெருநிலைகளை சற்றேனும் நான் அனுபவித்திருக்கிறேன் என்றால் அது கலையின் ஊடாகத் தானே?

சென்ற தத்துவ வகுப்பில் நீங்கள் வேதங்களை பற்றிச் சொன்னதை சிஸ்டீன் தேவாலயத்தின் கூரையைக் கண்டபோது எண்ணிக்கொண்டே இருந்தேன். சிருஷ்டி கீதம் கேட்டபோது ஏற்பட்ட அதே எழுச்சி அங்கே உருவானது. வேதங்களின் எழுச்சி. அங்கே கவிதையும் தெய்வ உணர்வும் பிரபஞ்ச உணர்ச்சியும் வெவ்வேறானது அல்ல. ஒவ்வொரு முறை ஒரு புதிய வேதத்தை இயற்றும் போதும் மனிதன் அந்த ஆதி நிலையை அடைகிறான். அதை நடித்துப்பார்த்து அதுவாக ஆகிறான்.

அந்த எழுச்சி எங்கிருந்து உருவாகிறது?

மண்ணிலிருந்து. கலை பூமியிலிருந்தும் வாழ்க்கையிலிருந்து இயற்கையிலிருந்தும் எழுவது. நம் உச்சங்கள் அனைத்தும் வெளியிலிருந்து வானத்திலிருந்து அருள்பாலிப்புகளாக வருபவையல்ல. பூமியைத் தொட்டு நம் புலன்கள் வழியாக நாம் பெற்றவற்றை வானம் வரை உயர்த்தி ஏற்றும் ஒரு மனப்பாங்கு நம்மில் செயல்படுவதனால் வருவது.

*

இவ்வளவு சொன்ன பிறகு கடைசியாக ஒன்று. இந்த பயணம் வழியாக நான் பெற்ற ஓர் அனுபவம். அதை என்னால் விளக்கவோ ஆராயவோ முடியவில்லை. சொன்னவற்றுடன் தொகுக்க முடியவில்லை. இப்போது நான் முன்வைத்த குழப்பங்களை எல்லாம் மீறிய ஓர் அனுபவமாகவே எனக்குள் அது இருக்கிறது. அதை வெறும் நம்பிக்கையென்றோ கலை உணர்வு என்றோ விளக்க முடியவில்லை. ஆனால் கலையும் அழகுணர்வும் இல்லாதிருந்தால் அந்த அனுபவம் என்னை தீண்டியிருக்காது என்று உறுதியாக நம்புகிறேன்.

எளிய சொற்களில், வெறும் அனுபவமாகவே சொல்ல முயற்சிக்கிறேன்.

நாங்கள் தங்கியிருந்த விடுதி Saint Maria Maggiore என்ற தேவாலயத்துக்கு மிக அருகே இருந்தது. இந்த தேவாலயம் ரோமில் மேரிக்கென்று கட்டப்பட்ட முதல் தேவாலயம். மைய அமைப்பு 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அந்த காலகட்டத்தைச் சேர்ந்த mosaic வகை ஓவியங்களை அந்த தேவாலயத்தில் பார்க்கலாம். பிற்காலத்தில் மேலும் விரித்துக் கட்டப்பட்டது. ரோமில் வீதிக்கு வீதி அப்படி நிறைய மரியன் தேவாலயங்கள் உள்ளன. அவள் அந்நகரின் அரசி போல் வீற்றிருக்கிறாள். எளிய மக்களின் தஞ்சம் அவள்.

ரோமில் மேரியின் வழிபாடு தொடங்கிய வரலாறு சுவாரஸ்யமானது. நான்காம் நூற்றாண்டில் கிறித்துவ மதம் ரோமில் ஓர் வழிப்பாட்டு மதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பிறகு கிறிஸ்து மனிதனா தெய்வமா என்ற விவாதம் உருவானது. கிறிஸ்துவின் பிறப்பின் இயல்பு என்ன, அவர் பிதாவின் சாரத்தைக் கொண்டு தொடர்பவரா அல்லது தனி இருப்பாக படைக்கப்பட்டாரா போன்ற கேள்விகள் விவாதிக்கப்பட்டன. தெய்வமும் மனிதனும் எப்படி அவனில் இணைந்து இருக்க முடியும் என்று ஆராயப்பட்டது. அவன் ரத்தமும் சதையுமாக உடல் எடுத்துப் பிறந்தான் ஆனால் அவன் தேவனின் சாரத்திலிருந்து வேரல்ல என்று முடிவு செய்யப்பட்டது.

ஐந்தாம் நூற்றாண்டில் அந்த விவாதங்கள் மேரியின் இயல்புகளை நோக்கித் திரும்பின. மேரி இறைவனின் அன்னையா? அல்லது கிறிஸ்து என்ற மனிதனின் அன்னையா? அவள் இறைவனின் அன்னை என்றால் அவள் இயல்பு என்ன? போன்ற கேள்விகள் எழுந்தன. அவளை முக்கால கன்னி என்றும் இறைவனின் தாய் என்றும் வகுத்தார்கள். முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த இறைவிகளின் இயல்புகள் அவளுடன் இணைந்துகொண்டன. அவளை ‘விண்ணக அரசி’ என்று அழைத்தனர். ‘கடல் விண்மீன்’ என்று அழைத்தனர். அவை எகிப்திய இறைவி ஐசிஸின் பட்டங்கள். ஐசிஸும் சேயை கையில் வைத்திருந்த தாய் தெய்வம். விண்ணகத்தை ஆண்டவள்.

மேரி அதன் பின் நட்சத்திரங்களை சூடியவளாக நீல வண்ண ஆடையால் சூழப்பட்டவளாக ஓவியங்களில் தோன்றத் தொடங்கினாள். மேரி எப்போதும் நீல ஆடைக்குள் சிவப்பு ஆடை உடுத்தியபடி காட்சிப்படுத்தப் பட்டாள். சிவப்பு அவள் மகனான இயேசுவை குறித்தது. நீலத்துக்குள் சிவப்பு என்பது போல் விண்ணக அரசியான அவள் அவனை ரத்தமும் சதையுமாக ஈன்றாள். பிற்கால ஓவிய மரபுகளில் இயேசு அதற்கு நேர்மாராக மேல் ஆடை சிவப்பும் உள் ஆடை நீலமும் என்று தோன்றலானார். அது மனித ரூபத்தில் தோன்றிய இறைவனை குறிப்பதாக சொல்லப்படுகிறது.

உண்மையில் பிதாவுக்கும் சுதனுக்குமான உறவை கிறித்துவ இறையியல் ஒருவாராக வகுத்துக் கூறிவிட்டது. ஆனால் மாதாவுக்கும் சுதனுக்குமான உறவு இன்னும் மர்மம் நிறைந்ததாகவே உள்ளது. அது விண்ணக இறைக்கும் மண்ணில் நிற்கும் மனிதனுக்குமான (மனுஷிக்குமான) உறவு அல்லவா? எது அவ்வுலகத்திலானது எது இவ்வுலகத்திலானது எது விண் எது மண் என்ற இனிமையான மாயம் மரியத்துக்கும் இயேசுவுக்குமான உறவில் நிறைந்திருக்கிறது. நீலம் சிவப்பு இவ்விறு நிறங்களின் ஊடாட்டமே இறைவனுக்கும் மனிதனுக்குமான மிஸ்டிக்கான உறவை உணர்த்துவதாக எனக்குத் தோன்றியது. இறைவனை ஏந்திய மனிதன் இறைவனுக்குள் சென்று இறைவனாகும் மாய உருமாற்றத்தை சுட்டுகிறது.

ஆனால் இதெல்லாம் பிறகு வாசித்தது. இந்த பயணத்தில் நான் மேரியை அடைந்த விதம் வேறு. ஒரு வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் Saint Maria Maggiore-யில் வெவ்வேறு வழிப்பாடுகளை காணச் சென்றேன். ஒரு பயணத்தில் எப்போதுமே அப்படி அன்றாட வழக்கத்தின் ஒரு துளியை வைத்துக்கொள்வது எனக்குப் பிடிக்கும். ஒரு நாவலில் ஒரு சிறிய உபகதை நிகழ்வது மாதிரி அதற்கென்று ஓர் எடுப்பும் தொடுப்பும் முடிவும் உருவாவதை கண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் நான் வேடிக்கை பார்க்கத்தான் சென்றேன். வழிபாடு நடந்த அந்த விசாலமான சாப்பெலுக்குள் ஏனோ என்னால் காலடி எடுத்து வைத்துச் செல்ல முடியவில்லை. இத்தனைக்கும் தேவாலயம் முழுவதும் அலைந்தேன். அதன் கட்டுமானத்தைப் பார்த்தேன் ஓவியங்களை பார்த்தேன் சிற்பங்களைப் பார்த்தேன். ஆனால் சாப்பெலுக்குள் மட்டும் என்னால் புக முடியவில்லை. அது மிகப்புராதானமான, புனிதமான ஓர் அமைப்பாக எனக்குத் தோன்றியது. நம்பிக்கையாளர்களால் அவர்களுடைய நம்பிக்கையின் பெயரால் எழுப்பப்பட்ட கனவு. என் சந்தேகங்களுடன் குழப்பங்களுடன் அந்த பரிசுத்தமான இடத்தில் நுழைய எனக்கு அருகதை இல்லை என்ற எண்ணம் என் கால்களை பாதித்தது. ஒவ்வொரு நாளும் உள்ளே செல்வோம் என்று நினைத்தும் ஒவ்வொரு நாளும் கருப்பு உலோகத்தில் அலங்கார வேலைப்பாடு செய்யப்பட்ட மூடிய வாயிலுக்கு வெளியே நின்றபடி அதன் இடைவெளிகள் வழியாக உள்ளே பார்த்துக்கொண்டிருந்தேன்.

எனக்கு வழிபாடை பார்ப்பதை விட அங்கே வரும் மக்களை பார்ப்பதே மேலும் சுவாரஸ்யமாக இருந்தது. மூன்றாம் நாளில் அந்த வேளையில் யாரெல்லாம் வருவார்கள் என்று தெரியத் தொடங்கியது. எப்போதுமே இணைந்து வந்து சன்னமான குரலில் பாடும் மூன்று இத்தாலிய முதியவர்கள். சுருட்டைத்தலை மேல் ஊதா நிற மேலாடை போர்த்தி முன்னிருக்கையில் மண்டியிடும் இளம் ஆஃபிரிக்க இனப் பெண். கஞ்சி போட்டு கரகரப்பாக உறைந்த வெள்ளை ஆடைகளும் வெள்ளை ஸ்டாக்கிங்கும் ஷுவும் அணிந்த இரண்டு குண்டான கன்னியாஸ்திரீகள். துதிபாடல் புத்தகங்களை அடுக்கி விளையாடும் சிறுவன். அவனை கோழி போல் மேய்த்த ஃபிலிப்பீனோ தாய். அனைவரையும் தோரணையாக உத்தரவிட்டு அணிவகுத்து அமரச்செய்த ஒரு கருப்பு ஆசாமி, அங்கே அதிகாரப்பூர்வமற்ற சட்டாம்பிள்ளை அவர் தான்

அதில் ஓர் இளைஞன். மிக அழகானவன். ஏதோ அலுவலகத்தில் வேலை பார்ப்பவன் போல் எப்போதும் நேர்த்தியான உடையில் இருந்தான். ஒவ்வொரு நாளும் சரியாக நான்கு மணி அடிக்கும் போது அவசரமாக வந்து அலங்கார ஜாலிவேலை செய்யப்பட்ட இரும்பு வாயிலை திறந்து சென்று வழிப்பாட்டில் இணைந்து கொள்வான்.

சில நாட்களில் அவன் இயல்பு பிடிகிடைத்தது திரும்பி அவன் வருவதை எதிர்நோக்கத் தொடங்கினேன். ஓடி வருவான். என்னைக் கடந்து இரும்பு வாயிலைத் திறந்து வாசலில் அவசரமாக குனிந்து மண்டியிட்டு சென்று கடைசி வரிசையின் ஓரத்தில் அமர்வான். அவன் சென்றதும் சட்டாம்பிள்ளை கண் காட்ட நான் மெல்ல வெளியிலிருந்து அலங்கார இரும்பு வாயிலைச் சாற்றிக்கொள்வேன்.

அந்த வாரம் முழுவதும் கடந்தது. ஒவ்வொரு நாளும் நான் வெளியே நின்றபடி வழிபாட்டைப் பார்த்தேன். ஒவ்வொரு நாளும் தன் சுழற்சியை இயல்பாகக் கண்டுகொண்ட ஓர் இயற்கை நிகழ்வு போல வழிபாடு நடைபெற்றது. நட்சத்திரங்களின் நகர்வைப்போல், பருவங்களைப்போல். முதலில் திருவசனம். பிறகு நறுமணப்புகை. இறுதியாக இசை. ‘ஆமென்’ என்றதும் பெருமூச்சுடன் சிலுவையிட்டுக்கொண்டு அந்த வழிபாட்டுச் சுழலிலிருந்து மனிதர்கள் தனித்தனியாகி எழுந்து வந்தார்கள்.

இரவெல்லாம் நான் கத்தோலிக்க திருச்சபையின் வரலாறைப்பற்றி அவர்களுடைய சடங்கு முறைகளை பற்றி தத்துவங்களைப்பற்றி வாசித்தேன். ஆனால் மாலைகளில் அந்த அலங்கார இரும்புச்சுவருக்கு வெளியிலேயே நின்றேன்.

இப்படி ஐந்து நாள் கடந்தது.

ஆறாம் நாள். நான்கு மணி அடித்து சில நிமிடங்கள் ஆகியிருந்தது. பாதிரியார் வழிபாட்டைத் தொடங்கியிருந்தார். சிறு புயல் போல அவன் என்னக் கடந்து ஓடிக் கதவைத் தள்ளி மண்டியிட்டான். அவன் வலக்கையை நெஞ்சில் வைத்துத் தலைகுனிவதைக் கண்டேன். அந்த வேகத்திலும் அந்த பொழுதில் முழு சமர்ப்பணத்தின் தூய அசைவோடு அவன் தலை தாழ்ந்தது. அவன் முழு பிரக்ஞையும் அந்த அசைவில் குவிய அவன் காலடியில் அவன் நிழல் விழுந்தது. அந்த அசைவில் அவன் தலைமுடி மஞ்சள் வெளிச்சத்தில் பொன்னின் ஒளி கொண்டது.

அது ஒரு கணம் தான். பிறகு அவன் எழுந்து ஓரத்து இருக்கைக்குச் சென்றான். இரும்பு வாயிலை மூட உத்தரவு வர எப்போதும் போல் நான் வெளியே நிறுத்தப்பட்டேன்.

ஆனால் அன்றைய நாளில் எல்லாம் மாறிவிட்டிருந்தது. அந்த இளைஞன் மண்டியிட்டபோது அவன் சிறு அசைவு, அந்த அசைவில் அவன் கூந்தல் கொண்ட பொன்னிறம், அந்த பொன்னின் ஒளி அறை முழுதும் நிறம்பி ஒவ்வொன்றையும் தொட்டுக்காட்டியது போல் அன்று நான் கண்ட அசைவுகள் ஒவ்வொன்றும் துல்லியமான உருவும் அர்த்தமும் கொண்டிருந்தன.  வசனங்களை சன்னமாக வாசித்த பாதிரியாரின் புராதான லத்தீன் தனித்தனி உருண்ட சொற்களாக செவியில் தோன்றியது. கூழாங்கற்களை கையில் உருட்டுவது போல் சின்னஞ​சிறிய மலைப்பாறைகள் மேல் ஏறி இறங்குவதைப்போல் அவற்றுடன் விளையாட வேண்டும் என்று நா தவிதவித்தது. தூபக்கலம் பெரும் அர்த்தத்தோடு கனமாக அசைந்தது. அதிலிருந்து நறுமண கந்தம் பேரழகுடன் பொழிந்தது. அப்போது படர்ந்த புகையில் தேவாலயமே நிறங்கள் குழைந்து கனவின் சாயல் கொண்டது.

சடங்குகளின் இறுதிக்கட்ட நிசப்தத்துக்குப் பின்னால் பியானோவின் இசை மெல்ல, குழந்தை நடை பழகுவது போல், பரிசுத்தமான படிகள் எடுத்து வைத்தது. குரல்கள் ஒவ்வொன்றாக அதில் சன்னமாக கூடி இணைந்தன. கோடைகாலக் காலையொன்றில் சிற்றோடை பொன்னொளிர ஒழுகிச்செல்வது போல அந்தக் குரல்களின் மனிதர்கள் அனைவரும் அவர்கள் மட்டுமே அறிந்த புனித யாத்திரை ஒன்றில் சேர்ந்து புறப்பட்டார்கள். அவர்கள் தலைகளெல்லாமே அந்த இளைஞனின் அதே அசைவில் குனிந்திருந்தன. ஆம், அதே அசைவு. அதே பொன்னிற அசைவு. ஒரு கணத்தில் அங்கே நான் மட்டும் தான் இருக்கிறேன், அனைத்துமே எனக்குள் நிகழும் என் கனவு என்று தோன்றலானது.

இரவெல்லாம் அதை எண்ணி எண்ணிப் பார்த்தேன். அந்த இளைஞனின் அசைவு ஏன்  அவ்வளவு தெய்வீகமாகத் தோன்றியது? அது அவன் அழகினாலோ அது மாதாவின் சன்னிதி என்பதாலோ மட்டும் உருவாகவில்லை. அங்கே தன்னை சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த இளைஞனின் உள்ளம் ஓர் உணர்வை அடைந்தது. அந்த சிறு அசைவு அதன் வெளிப்பாடு தான். அதை விட முக்கியமாக அது அவனில் நிகழ அவன் அனுமதித்தான். அது தான் அவன் தெய்வீகம்.

வழிபாட்டுணர்வு என்றால் “நான்” உன்னை வணங்குகிறேன் என்பதல்ல. அதில் “நீ” மட்டும் தான் இருக்கிறாய். நீ, உன் பாதம். இது தலை வைக்கும் இடம் தலை கொடுக்கும் இடம் இங்கே அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டதென்ற பிரக்ஞை. அங்கே மண்டியிடாமல் இருக்க முடியாது. மிகச் சுதந்திரமான இயல்பான செயல் அது மட்டும் தான். The most perfect natural freedom. அதை அவன் அடைந்திருந்தான். அது தான் அவன் தெய்வீகம்.

ஆனால் அப்படி தலை வைக்க தலை கொடுக்கும் இடம் எது? அங்கே இருப்பது யார்? யார் அந்த “நீ”? என்னால் அந்தப் புதிரை அவிழ்க்க முடியவில்லை. அப்படியே உறங்கிவிட்டேன்.

ஏழாம் நாள் நான்கு மணிக்கு சற்று முன்னால் தேவாலயம் சென்றேன். இரும்புக்கதவுக்கு வெளியே நின்று கரிய அலங்கார இடைவெளிகள் வழியாகப் பார்த்தேன். வழிபாடுகளுக்கான ஆயுத்தங்கள் நடந்துகொண்டிருந்தன. தூபக்கலன் மேஜை மேல் இருந்தது. அதன் சங்கிலிகள் ‘என்னை தூக்கிக்கொள்’ என்பதுபோல் கீழே துவண்டிருந்தன. சாப்பலின் மையமாக பொறிக்கப்பட்டிருந்த பைசண்டைன் பாணி படத்தில் இரவின் ஆகாசத்தை உடுத்தியது போல ஆழமான நீல நிற ஆடையில் மாதாவும் அவர் கரங்களில் ரத்தச்சிவப்பு ஆடையில் சிசுவும் வீற்றிருந்தார்கள்.

அந்த இளைஞன் இன்னும் வர நேரமிருந்தது.

நான் இரும்புக் கதவை மெல்லத் திறந்தேன். எளிதாகத் திறந்தது.

அந்த இளைஞனின் அனுதின காலடிகளில் என் பாதங்களை பதித்து வைப்பது போல வாசலைக் கடந்து நடந்தேன். அவன் தினந்தோரும் மண்டியிடும் இடத்துக்கு வந்தேன். என் கால்கள் மண்டியிட்டன. முகம் கவிழ்ந்தது. இமைகள் மூடின.

ஆம், அவனை நடிக்க முடியுமா என்றே நான் முற்பட்டேன். அவனாக ஆக வேண்டும் என்ற பெரும் விருப்பம் எனக்குள் மூண்டது. அதுவே என் கால்களையும் கைகளையும் இயக்கியது. அவனாக நடிப்பதன் வழியாகவாவது அவன் பார்த்ததை நான் பார்க்க முடியுமா, அந்தத் தொடுகையின் ஒரு கணத்தை அடைய முடியுமா என்று என் உள்ளம் ஏங்கியது. நடித்து நடித்தே அங்கே செல்ல முடியும் வேறு வழியே இல்லை என்ற வலுவான எண்ணமே என்னை அந்த பொழுதில் மிகச்சிறப்பான நடிகை ஆக்கியது. ஆகவே அவனைப்போலவே நுழைந்தேன். மண்டியிட்டேன். முகம் கவிழ்த்தேன். முகம் கவிழ்ந்த அந்தக் கணத்தில் நான் நடிக்கவில்லை என்பதை உணர்ந்தேன்.

அந்த இருட்டில் எதையும் பார்க்கவில்லை எதையும் நினைக்கவில்லை. எண்ணமே இல்லை. சுற்றிச் சூழ்ந்து பெரிதாக மிகமிகப் பெரிதாக… எது? நீலம் வானம் நட்சத்திரம். எனக்குள் கண்ணீர் பெருகிப் பெருகி வந்தது.

எதற்காக? எதற்காக இத்தனை பேரழகு? இதை எப்படிச்சொல்வது?

இதோ, இப்படி, நடிப்பை நீட்டிக்கொண்டே, நடிப்பு அழியும் கணங்களுக்காக ஏங்கிக்கொண்டபடி சொல்லிப்பார்க்கிறேன். நடிப்பைத் தவிர இதெல்லாம் பேச என்னிடம் வேறு பாஷை இல்லை.

அன்புடன்

சுசித்ரா

நீலி நேர்காணல்: ”இலக்கியத்தின் ரகசிய ஓடைகளை நம்பித்தான் எழுத்தும் மொழியாக்கமும் செய்யப்படுகிறது”: சுசித்ரா

[நேர்காணல் : நீலி]

(தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பு உலகம் & The Abyss சார்ந்து உரையாடல்)

(போஸ்டர்: கீதா)

சுசித்ரா தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். 2020-ல் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘ஒளி’ வெளியானது. தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார். 2017-ல் Asymptote புனைவு மொழியாக்கத்துக்கான சர்வதேச பரிசை “பெரியம்மாவின் சொற்கள்” சிறுகதை மொழியாக்கத்திற்காக பெற்றார். இந்திய இலக்கியங்களுக்கிடையேயான உரையாடலை மொழிபெயர்ப்பு மூலமாக முன்னெடுத்துச் செல்ல மொழிபெயர்ப்பாளர் ப்ரியம்வதாவுடன் இணைந்து “மொழி” தளத்தை நிறுவியுள்ளார். அருணவா சின்ஹாவை ஆசிரியராகக் கொண்ட South Asia Speaks மொழிபெயர்ப்பு சார்ந்த பட்டறைக்கான குழுவில் மாணவராக இருந்தார். இதன் மூலம் ஏப்ரல் 2023-ல் எழுத்தாளர் ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலை மொழிபெயர்ப்பு செய்து ஜாகர்னட் பதிப்பகம் வெளியீடாக வெளியிட்டுள்ளார். ஜெயமோகனின் விஷ்ணுபுரம், குமரித்துறைவி ஆகிய நாவல்களின் மொழிபெயர்ப்பில் உள்ளார்.

முதன்மையாக சுசித்ரா இயங்கிக் கொண்டிருக்கும் மொழிபெயர்ப்பு உலகம் சார்ந்தும், அவரின் முதல் முழு நீள மொழிபெயர்ப்பான ”The Abyss” சார்ந்தும் நீலிக்காக ஒரு உரையாடல்.

எழுத்தாளர் ஜெயமோகன், எழுத்தாளர் சுசித்ரா

முதன்மையாக ஏழாம் உலகம் நாவலின் மொழிபெயர்ப்பான ”The Abyss” -க்கு வாழ்த்துக்கள் சுசித்ரா. எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் சிறுகதைத் தொகுப்பின் மொழிபெயர்ப்பான “Stories Of The True”-க்குப் பின் வந்திருக்கும் இரண்டாவது மொழிபெயர்ப்பு இது. ஏழாம் உலகம் தன்னளவில் ஒரு கனமான நாவல். அதனை இயக்குனர் பாலா ‘ நான் கடவுள்’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து தன் வாழ்வின் மன நெருக்கடியான காலகட்டத்தைக் கடந்ததாக ஜெ குறிப்பிட்டுள்ளார். ஜெ -வின் படைப்புகளில் ஏழாம் உலகம் நாவலை நீங்கள் மொழிபெயர்ப்பு செய்ததற்கான காரணம் பற்றி சொல்லுங்கள்.

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ரம்யா. இந்த நாவலை மொழியாக்கம் செய்வதற்கான முக்கியமான காரணம் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் ஐயா தான். பெரியம்மாவின் சொற்கள் சிறுகதை மொழிபெயர்த்து வெளிவந்தபோது அ. முத்துலிங்கம் வாழ்த்து தெரிவித்ததோடு ஜெயமோகனின் எழுத்துக்களில் முதன்மையாக மொழிபெயர்க்கப்பட வேண்டியது ஏழாம் உலகம் தான் என்றார். அது உலக வாசகர்களுக்கு போய்ச்சேர வேண்டும் என்றும் அதை பரிசீலிக்குமாறும் அப்போதே என்னிடம் சொல்லியிருந்தார். பிறகு 2021-ல் மீண்டும் கேட்டார்.

2015-ல் ஏழாம் உலகம் வாசித்தேன். முதன்முதலில் வாசித்தபோது அந்த உலகம் எனக்கு அந்நியமாக இருந்தது. என்னால் அதனுள் நுழைய முடியவில்லை. ஏழாம் உலகம் போன்ற நாவல்கள் வாசகர்களுக்கு முகப்பில் ஒரு சவாலை வைத்துவிட்டே தொடங்குகின்றன என்று நினைக்கிறேன். தீட்சை பெறுவது போன்ற சவால். அந்த வாசலைத்தாண்டும் வாசகனுக்கே நாவல் தன் கதவுகளை திறக்கும் போலும்.  2021 ஆண்டில் அ.முத்துலிங்கம் அவர்கள் என்னை மீண்டும் கேட்டபோது திரும்ப வாசித்தேன். அப்போது அந்த நாவலின் முழு அர்த்தத்தளமும் எனக்குத் திறந்துகொண்டது. அதன் பீபத்சத்தின் உள்ளே உள்ள அழகும் அறிவார்ந்ததனமும் தெரிந்தது. அதை மொழிபெயர்க்க முடியும் என்ற நம்பிக்கையும், மொழிபெயர்க்க வேண்டும் என்ற உத்வேகமும் பிறந்தது.

முழுவதுமாக வட்டார மொழியில் எழுதப்பட்ட நாவல். ஆகவே மொழிபெயர்க்கவே முடியாத நாவல் என்று பல நண்பர்கள் கருதினார்கள். அந்த வட்டார மொழிக்கு அடியில் ஒரு அந்தரங்க மொழி ஒன்று அந்த நாவலில் உள்ளது. அதை என்னால் கண்டடைய முடியுமா என எழுதிப்பார்த்து அது சாத்தியமானபோது அதை மொழிபெயர்ப்பு செய்யலாம் என முடிவெடுத்தேன்.

ஒட்டுமொத்தமாக இந்த மொழியாக்கத்திற்கு முக்கியக்காரணம் அ.முத்துலிங்கமும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும். ஒரு தனி நபரை ஊக்கப்படுத்தி உதவித்தொகையும் அளித்து மொழியாக்கம் செய்வதற்கு உதவுவது தமிழ்ச்சூழலில் வரவேற்கத்தக்க ஒன்று.

தமிழ்ச்சூழலில் ஏழாம் உலகம் நாவல் மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் என்ன?

ஒரு நாவலை மொழிபெயர்க்கும்போது அதை மறுவாசிப்பு செய்யும் சூழலை உருவாக்குகிறோம். ஏழாம் உலகம் வந்து இருபது வருடங்கள் ஆகின்றன. அது தமிழ்ச்சூழலில் இன்னும் சரியாக வாசிக்கப்படாத நாவல் என்றே இப்போது கருதுகிறேன். அதன் சமூகச்சித்திரங்கள் தாண்டி, அதன் ஆன்மீக தரிசனமோ நகைச்சுவை வழியாக அது அடையும் உச்சங்களோ இன்னும் அதிகம் பேசப்பட இடம் உள்ளது. இன்று ஒரு மொழிபெயர்ப்பு வருவதால் அது மீள் வாசிப்பு செய்யபடுகிறது. திரும்பத்திரும்ப நல்ல ஆக்கங்கள் பேசும் சூழல் ஏற்படுவது முக்கியமானது. ஒரு ஆக்கம் பல மொழிகளில் சென்று அடைவது அந்தப்படைப்பு புத்துணர்வாக இருப்பதற்கு உதவுகிறது.

மொழிபெயர்ப்பு என்பது வாசிப்பை விட ஒரு படி மேலே போய் ஆசிரியருடன் இணையாகப் பயணம் செய்யும் அனுபவம் இல்லயா. ஜெயமோகனின் படைப்புகளில் நீங்கள் ஏழாம் உலகத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது உங்கள் தேடலையும் சொல்கிறது. அதைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஐரோப்பிய மறுமலர்ச்சி காலகட்டத்தில் இத்தாலியில் பழைய கிரேக்க சிற்பங்களை மறுகண்டடைவு செய்தார்கள். அவை மண்ணுக்கடியில் புதைந்திருந்தன, காலத்தால் மறக்கப்பட்டிருந்தன. அவை மறுகண்டிபிடிப்பு செய்யப்பட்டபோது தான் ஐரோப்பாவில் மறுமலர்ச்சியே தொடங்கியது. அந்த சிற்பங்களால் உத்வேகம் கொண்டு, அதன் தாக்கத்தில் கலை படைக்க அது போன்ற சிற்பங்களை செய்ய வேண்டுமென ஒரு படையே கிளம்பி வந்தது. அதில் தான் டானடெல்லோ, மைக்கேல் அஞ்சலோ, லியணார்டோ டாவின்சி போன்றவர்கள் வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மாஸ்டர். அவர்கள் செய்வதை மாணவர்கள் ஜன்னல் வழியாகப் பார்ப்பதும் அவர்கள் செய்வதைப் பட்டறையில் சென்று பயிற்சி செய்வதும் நடந்தது. இன்றைய காலகட்டத்தில் ஜெயமோகன் அப்படிப்பட்ட மாஸ்டர் தான். மொழியாக்கம் என்பது அப்படி ஒரு பயிற்சியை அடைவதற்கான ஒரு சாத்தியம் தான்.

மொழிபெயர்ப்பு செய்யும் போது அதன் ஆசிரியர் அங்கு இருப்பதில்லை. அப்படி இருப்பதும் ஒரு வகையில் சுமை. சில மொழிபெயர்ப்பாளர்கள் அந்தந்த எழுத்தாளர்களுடன் வார்த்தைக்கு வார்த்தை உடனிருந்து மொழிபெயர்த்ததாகச் சொல்வார்கள். என்னால் அது இயலாது. ஒரு முன் வரைவை முடித்தபின், சில இடங்களில் இதை உத்தேசித்தீர்களா என சந்தேகம் கேட்டுக் கொள்ளலாம். அவ்வளவு தான். ஒரு மொழிபெயர்ப்பாளராக என் உரையாடல் படைப்புடன் தான். படைப்பின் உச்சகணத்தில் இருக்கும் ஆசிரியர் மனத்துடன் தான்.  அதன் வழியாக ஒரு கல்வி நிகழ்கிறதென்றால் அதுவே எனக்கு பிரதானம். 

மொழியாக்கம் முடிந்த பிறகு ஜெயமோகனுடன் ஓரிரு மணிநேரங்கள் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அது படைப்பு உருவான விதத்தை பற்றி சில தெளிவுகளை அளித்தது. அந்த உரையாடலின் பகுதியை அவர் ஒப்புதலோடு ஒரு நேர்காணலாக புத்தகத்தில் இணைத்திருக்கிறேன்.

அப்படியானால் மொழிபெயர்ப்பு என்பது ஒரு வகையான மிகக்கூரிய வாசிப்பு தானே? அப்படி வாசிக்கும் போது வாசகர்கள் அதுவரை கண்டறியாத அல்லது அதிகம் பேசாத விஷயங்களைக் கூட மொழிபெயர்ப்பாளர்கள் கண்டறியலாம் இல்லயா. அப்படியாக நீங்கள் இந்த மொழிபெயர்ப்புப் பயணத்தில் கண்டடைந்த முக்கியமான இடம் பற்றி…

அமாம். அது கோயிலில் அதிகம் பேர் கவனிக்காத சிற்பத்தை கண்டுகொள்ளும் பரவசத்துக்கு இணையானது. ஏழாம் உலகில் அகம்மது குட்டி என ஒரு கதாப்பாத்திரம். அவரால் எழுந்து நடக்க முடியாது. ஆனால் பெரிய படிப்பாளி. துண்டுகள், காகிதங்கள் ஒன்றுவிடாமல் படிக்கக்கூடியவர். ஒரு நாள் நாளிதழில் நவீன ஓவியம் ஒன்றை பார்த்துக்கொண்டிருக்கும் போது ராமப்பன் என்ற தொழு நோயாளி இணைந்துகொள்வார். இது என்னையா கை கால் மூக்கு எல்லாம் உருதெரியாத மாதிரி வரஞ்சு வச்சிருக்காங்க என்று கேட்பார். மாடர்ன் பெயிண்டிங்கில் அது தான் அழகு என்று அகமதுகுட்டி விவரிப்பார். ராமப்பன் தொழுநோய் வந்து மழுங்கின தன் விரலால் காகிதத்தை சுரண்டி கிரண்டி பார்ப்பார். அவருக்கு ஒன்றும் புரியாது. இறுதியில், ‘சரி மனுஷனுக்கு ஓரோ களி’ என்று முடிப்பார். அந்த இடம் பெரிய புன்னகையை வரவழைத்தது. விவாதங்களிலெல்லாம் யாரும் அதிகம் பேசாத இடம் அது. அந்த இடம் மொழியாக்கம் செய்யும் போது தான் திறந்து கொண்டது. வாசகனாக இருந்து கண்டடைவதை விட மொழிபெயர்ப்பாளனாக கண்டடையும் ஒரு இடம் மேலும் பரவசத்தை அளிக்கிறது.

ஏழாம் உலகம்

ஏழாம் உலகம் நாவலின் மொழி வட்டார வழக்கில் உள்ளது. ஜெயமோகன் தான் பயன்படுத்தும் வட்டார மொழியைப் பற்றி சொல்லும்போது அது வட்டார வழக்கு என்பதைத்தாண்டியும் தான் தன் புனைவுக்கு உருவாக்கிக் கொண்ட தனித்துவமான மொழி என்பார். ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் போது அந்தச் சவாலை எப்படி எதிர்கொண்டீர்கள்? மூலத்தை கடத்த மொழி தடையாக இல்லயா?

வட்டார வழக்கு என்பது ஒரு நாவலின் அந்தரங்கமான மொழி வெளிப்படுத்த கையாளப்படும் ஒரு வண்ண வடிவம் என்று சொல்லலாம். நாவலின் தனித்துவமான அழகுக்கு அது முக்கியம். ஆனால் அதை மொழிபெயர்ப்பில் நேரடியாக கொண்டு வர முடியாது. ஏனென்றால் அது தமிழ் மொழியின் வண்ணம். அந்த வண்ணம் வழியாக துலங்கி வரும் அந்தரங்க மொழியை தான் பிரதானமாக மொழிபெயர்ப்பில கொண்டு வர முடியும். உதாரணமாக டால்ஸ்டாயின் ஆக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஒரு பிரெஞ்ச் பேசக்கூடிய ரஷ்யனுக்கும் ஒரு குடியானவன் பேசக்கூடிய ரஷ்யனுக்கும்  சின்னச்சின்ன மொழி வேறுபாடுகளையும் டால்ஸ்டாய் கையாண்டிருப்பதாக சொல்கிறார்கள். அது மொழிபெயர்ப்பில் நம்மை அடைய சாத்தியமில்லை. அவர் சொல்ல வருகிற ”விஷன்”அந்தச் சின்ன மொழிவேறுபாடுகள் இல்லையானாலும் புலப்படும் திறனுள்ள மொழிபெயர்ப்பு தான் முதல் தேவை. இந்த நாவலை பொறுத்தவரை அதன் அந்தரங்கமான மொழியைப் பிடிப்பது தான் அதிலுள்ள சவாலாக இருந்தது. மேலதிகமாக வட்டாரவழக்கின் பிரத்யேக வண்ணத்தின் சில சாயைகளை மொழிபெயர்ப்பில் கொண்டு வரலாம். பேச்சு வழக்கின் சில பிரயோகங்களை நேரடியாக ஆங்கிலத்தில் கொண்டு வருவது வழியாக, சொலவடைகள், நகைச்சுவைகளை நேரடியாக மொழிபெயர்ப்பது வழியாக, பாடல் வரிகளை அப்படியே கையாள்வது வழியாக. இவை எல்லாம் இலக்கண சுத்தமான ஆங்கிலமாக வாசிக்கக் கிடைக்காது. அறியாத சிலர் அதை குறையாகவும் கூறுவர். ஆனால் அது அப்படி அல்ல. அது வேறொரு ஆங்கிலம். புதிய ஆங்கிலம். இலக்கிய ஆங்கிலம். இந்த செயல்பாடுகள் வழியாக அந்த மொழி உரம் பெருகிறது. அதில் புதிய சாத்தியங்கள் உருவாகிறது. இப்படித்தான் மொழிகள் மொழியாக்கங்கள் வழியாக வளம் பெறுகின்றன.

ஜெயமோகனின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் போது எதையெல்லாம் கணக்கில் கொள்வது அவசியம் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு படைப்பிலக்கியத்தை மொழிபெயர்ப்பதென்பது வெறுமே நாளிதழின் ஒரு பத்தியை மொழிபெயர்ப்பது போன்ற விஷயம் அல்ல. சவாலானது. முதலில் மூல மொழியின் நுண்மைகள் கவனித்து உள்வாங்கும் திறமை இருக்க வேண்டும். அதே அளவு ஆங்கிலத்தில் புலமை வேண்டும். படைப்பின் உள் ஆழங்களையெல்லாம் முடிந்த அளவு கணக்கில் கொண்டு அதை கடத்த வேண்டும். அப்போது மொழியும் படைப்பூக்கத்துடன், மூல மொழியின் வீச்சைப் பெற்று தனித்துவமான நடை (style) உடன் அமைந்திருக்க வேண்டும். இவ்வளவு சவால் உள்ளது.

இதில் ஜெயமோகனின் படைப்புகள் தனிச்சிறப்பு மிக்கவை. இன்று வெளிவரும் பெரும்பாலான நாவல்களைப்போல் சமூக அரசியல் சித்திரங்களையோ, உறவு விஷயங்களையோ பேசுவதோடு அவை நிற்பதில்லை. அவற்றில் எப்போதும் கண்டடைவுக்கான ஒரு quest உள்ளது. மொழிபெயர்ப்பாளர் அந்த நுண்தளத்தை எப்போதும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. 

ஒரு கதைக்களம், அல்லது இமேஜ் கையாளப்படுகிறதென்றால், அது ஏன் அவ்வாறு இருக்கிறது, அப்படி அமைப்பதன் மூலம் எதையெல்லாம் உத்தேசிக்கிறார் என்று மொழிபெயர்ப்பாளர் தன் கற்பனையைக் கொண்டு உணர வேண்டும். அந்த உணர்வுகள் மொழிபெயர்ப்பில் கடத்தப்படுகின்றனவா என்று கவனமாக இருக்க வேண்டும். உதாரணம் இந்த நாவலில் மலை மேல் பக்தர்கள் காவடி எடுத்து ஏறும் போது வண்டிமலையும் பெருமாளும் முத்தம்மையை தூளிகட்டி தூக்கிச்செல்லும் இடம். அந்த விவரிப்பின் காட்சித்துல்லியம் அந்த உணர்வை உருவாக்க முக்கியமானது. அப்போது அந்த கவனம் இருந்தது. 

எழுத்தாளர் ஜெயமோகன்

குறிப்பாக ஏழாம் உலகம் நாவலை மொழிபெயர்க்கும்போது நீங்கள் சந்தித்த சவால் பற்றி சொல்லுங்கள்.

மொழி, பண்பாடு, தரிசனம் சார்ந்த சவால்கள் இருந்தன. ஆங்கிலம் முற்றிலும் அந்நியமான மொழி, அதில் இந்த பண்பாட்டின் களத்தை உருவாக்க வேண்டியிருந்தது.  வட்டார வழக்கை மொழிநடையில் உணர்த்துவதும் ஒரு சவால் தான். கெட்ட வார்த்தைகளைப் பற்றி தனியாக சொல்ல வேண்டும். இந்த மொழியாக்கம் மூலம் ஜெயமோகன் ஆங்கிலத்திற்கு சில தரமான கெட்ட வார்த்தைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார் [சிரிக்கிறார்]. பண்பாடு ரீதியாக முருகன் கோவில் வழிபாடு, பண்டாரங்களின் வாழ்க்கை ஆகியவற்றை கடத்துவதில் இருந்த சிக்கலைச் சொல்லல்லாம். மாங்காண்டி சாமியின் பாடல்களை மொழியாக்கம் செய்வதற்கு சித்தர் பாடல்களை பற்றி கொஞ்சம் உள்ளே போய் வாசித்தேன்.

இவை எல்லாம் ‘வாசகர் யார்’ என்ற கேள்வியில் மையல் கொள்கிறது. தமிழ்ச்சூழலில், அல்லது இந்தியச்சூழலில் வாழ்ந்த ஒருவருக்கு இந்த மொழி, பண்பாடு, தரிசனம் எல்லாம் திறந்துகொள்ள சாத்தியம் அதிகம். ஆனால் முற்றிலும் வேறு பண்பாட்டில் உள்ள ஒருவருக்கும் இந்த நூல் தொடர்புற வேண்டும் என்று எண்ணி மொழிபெயர்த்தேன். தேவைப்பட்ட இடங்களில் சில பின்னணி விவரிப்புகளை இணைத்துக்கொண்டேன். ‘முருகன்’ என்றால் நமக்குத் தெரியும். நாவலில் படிமமாக வாசிப்போம். மொழியாக்கத்தில் முருகன் என்னும் போது அவனுடைய அழகான உருவம், இளமை, பழனியில் அவன் ஆண்டியாக இருக்கும் விஷயம், இவ்வளவையும் கதையில் ஊடுருவாமல் அறிமுகப் படுத்த வேண்டியிருந்தது.

ஒரு எழுத்தாளராக இருந்து கொண்டு மொழிபெயர்ப்பு செய்வது உங்கள் படைப்பூக்கத்திற்கு எவ்வகையில் உதவுகிறது?

நான் என்னை ஒரு தொழில்முறை மொழிபெயர்ப்பாளராகப் பார்க்கவில்லை. என்னுடைய பிரதானமான குறிக்கோள் ஒரு இலக்கிய ஆசிரியராக உருவாவது தான். அந்த படைப்பிலக்கியம் எழுதுவதற்கான கருவிகள் கற்றுக்கொள்ளும் பயணத்தில் இருக்கிறேன். அந்தப்பயணத்தில் கற்றுக்கொள்வதற்கான எந்த விஷயத்தையும் விட்டுவிடக்கூடாது என்ற முனைப்பு என்னிடம் உள்ளது. அதற்குத்தேவையான எல்லாவற்றையும் செய்து பார்த்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன். மொழிபெயர்ப்பை அப்படியான ஒரு கருவியாகத்தான் பார்க்கிறேன். மொழிபெயர்ப்பு செய்யும் போது ஒரு படைப்பின் ஆசிரியருடன் இணையாக பயணம் செய்து பார்க்கக் கூடிய அனுபவம் கிடைக்கிறது. மொழிபெயர்ப்பு இல்லாமலும் அது நடக்கலாம்.

எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு பேட்டியில் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. அவர் “போரும் வாழ்வும்” நாவலை வரிக்கு வரி பார்த்து திரும்ப எழுதியதாய் சொல்லியிருந்தார். மொத்தமாகத் திரும்ப எழுதுவது ஒரு சக்திவாய்ந்த கருவி தான். அப்படிச் செய்வது ஒரு மகத்தான ஆசிரியரின் பாதையில் பயணிக்கும் ஒழுக்கை உணரச் செய்யும். அது சில தடங்களை நம்மில் நமக்கே தெரியாமல் விட்டுச் செல்லும். மொழியாக்கம் என்பது அதற்கு நிகரான ஒரு செயல் தான்.

ஒரு ஆசிரியரின் இலக்கிய மொழியைக் கற்றுக் கொள்வது என்பது அவன் ஆழத்தின் சிந்தனை முறையை, அதை அவன் மொழியில் வார்க்கும் விதத்தை கற்றுக்கொள்வது என்று சொல்லலாம். ஒரு விதமான தொடுப்பை/பின்னலைக் கற்றுக் கொள்வது அது. அதாவது அந்தப்படைப்பு காலத்தை, நிகழ்வுகளை எப்படி அடுக்குகிறது. அப்படி அடுக்குவதன் வழியாக எப்படி உணர்வுகளை வாசகனில் கடத்துகிறது. ஒரு எழுத்தின் கலைத்தன்மை என்பது இந்த அடுக்கில் தான் உள்ளது. அது மனதிற்குள் படிய வேண்டும். அதை உருவாக்க முடியாது. அந்த உள்ளுணர்வை நாம் அடைய அந்த படைப்பிற்குள் நாம் வாழும் அனுபவம் நிகழ வேண்டும். தொடர்ந்த வாசிப்பு நமக்கு அளிப்பது அதைத்தான். ஒரு நூலைத்திரும்ப எழுதுவது போன்ற செயல்பாடும் அதற்கு இணையான செயல்பாடு தான். ஆனால் மொழிபெயர்ப்பு என்பது இரு மொழிகளுக்கிடையேயான உரையாடலுக்கு அடியில் இருக்கக் கூடிய ஒரு அந்தரங்கமான கதியை பிடிப்பதை நோக்கிய அனுபவம் தான்.

எடித் வார்டன் என்ற பெண் நாவல் ஆசிரியர் மூன்று முக்கியமான நாவல்கள் எழுதியிருக்கிறார். அதில் ”House of mirth” என்ற நாவலும் ஒன்று. தமிழில் ”களி வீடு” எனலாம். அந்த நாவலின் சில பகுதிகளை மொழியாக்கம் செய்து பார்த்திருக்கிறேன்.  அது ஒரு பெண்ணின் சரிவின் கதை. அவ்வளவு பெரிய சரிவை நாம் எதிர்நோக்க மாட்டோம், அதற்கான பெரிய அறிகுறிகள் ஏதும் ஆசிரியர் வெளிப்படுத்த மாட்டார். நிகழ்வுகளை மட்டுமே அடுக்கி வந்துகொண்டே இருப்பார். ஏதோ ஒரு கட்டத்தில் திரும்பிப் பார்க்கும் போது இவ்வளவு தொலைவு வந்துவிட்டோமே என்று திடுக்கென்று தோன்றும். அதை எப்படி அவர்கள் உருவாக்குகிறார்கள் என்பது பெரிய கலை. அதை நாம் திட்டமிட்டு உருவாக்க முடியாது. ஆனால் அதன் சில சூட்சமங்களை மொழியாக்கத்தின் வழி கற்றுக் கொள்ள முடியும். மொழிக்கு அடியில் பின் தொடர்வதன் வழி கற்றுக் கொள்ள முடியும். அதை தான் மொழியாக்கத்தின் வழி அடைய நினைக்கிறேன். 

பிறகு ஃபன்(fun) என்று ஒன்று உள்ளதல்லவா. மொழியுடன் விளையாடுதல். பெரியம்மாவின் சொற்கள் கதையை நான் மொழியாக்கத்திற்கு எடுக்கக் காரணம் அதிலுள்ள நகைச்சுவை தான். இரண்டு மொழிகளுக்கு இடைப்பட்ட இடத்தில் தான் அது நிகழ்கிறது. அதை வேறு மொழியில் சொல்ல முடியுமா என பார்ப்பதிலுள்ள ஒரு ஜாலியான சவாலை தான் நான் எதிர் கொள்கிறேன்.

உங்கள் சிறுகதைகளில் ஒரு தத்துவார்த்த தேடல் உண்டு. அதுவும் கூட இத்தகைய கனமான நாவலின் அடியோட்டத்துடன் பயணிக்கும் ஆசையைத் தூண்டியதா? இந்தப்பயணம் வழியாக அது சாத்தியமானதா என அறிய ஆவல்.

ஆம், எழுத அப்படிப்பட்ட விஷயங்கள் உள்ளன. ஆனால் எப்படி எழுதுவது என்பது புலப்படாமல் இருந்தது. தத்துவார்த்தமான கேள்வி இருக்கும் பட்சத்தில் தத்துவ நூலை படிக்கலாம். ஆனால் அதை இலக்கியமாக்க முடியாது. வாசகனை அது வார்த்தையால் அடிப்பது போல இருக்கும். இனிமையான வாசிப்பனுபத்தைக் கொடுக்காது. அவனோடு உரையாடாது. கலை அனுபவத்திலிருந்து வரவேண்டும்.  விவரிப்புகள் வழியாக அழகான, அல்லது பேரனுபவமான ஒரு ஞானத்தை உருவாக்கவேண்டும். அதன் வழியாக தத்துவார்த்தமான ஒரு புள்ளியை தொட்டால் அது ஒரு விடை. ‘ஏழாம் உலகம்’ போன்ற ஒரு நாவல் அந்த வகையில் ஒரு மாஸ்டர்பீஸ். படைப்பில் தத்துவம் வருவதில்லை. மனிதன் ஒவ்வொருவனுக்குள் இருக்கும் தத்துவார்த்தமான ஒரு தவிப்பு, ஏக்கம், அது மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது. அப்படி ஒரு நாவலை ஆழமாக பயில்வதன் வழியாகவே நிறைய கற்றுக்கொள்ளலாம். இமேஜ், உருவகம் எப்படி பயன்படுத்தபடுகிறது? இடமும் வெளியும் எப்படி அந்த நேரத்தின் உணர்வுக்கேற்ப உருமாருகிறது? நகைச்சுவையில், அவலத்தில், பகடியில், பாரடாக்ஸில் எல்லாம் அந்த உணர்வு எப்படி வெளிப்படுகிறது? இப்படி நிறைய கவனிக்க உள்ளது. இவ்வளவுக்கு பிறகும் ஒரு ஆசியருக்கு அது கைவருவதும் வராததும் அவரவர் திறன் சார்ந்தது. ஆனால் இதையெல்லாம் கவனித்து கற்பதே பெரிய இன்பம்.

இப்படி ஆழ்ந்து வாசிக்கும் போது இந்த நாவல் எனக்கு அணுக்கமானது. அதை நான் மீள கட்டிப்பார்ப்பது என்பது இனிமையான அனுபவம். அதை செய்வதன் வழியாக அந்த நாவலின் உலகம் எனக்கு நேரடியான அனுபவமானது. அதன் வழியாக நான் ஏதோவொன்று அடைந்தேன். அந்த அடைதல் முக்கியமானது. எந்தவிதத்தில் என்று சொல்லத்தெரியவில்லை. ஒரு பெரிய நிறைவை அளிக்கிறது.

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட மொழியாக்கங்கள், ஆசிரியர்கள் அந்த உலகம் பற்றிய சித்திரத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தமிழில் படைப்புகளும் அதிகம். அதற்கு ஈடுகொடுக்க அதிக எண்ணிக்கையில், ரசனையுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் வேண்டும். ஆனால் ஆரம்பத்திலிருந்தே தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாகக்ம் செய்பவர்கள் குறைவாகத்தான் இருந்து வந்துள்ளனர். முக்கியமான பெயர்கள் என்றால் பத்மா நாராயணன், லட்சுமி ஹோம்ஸ்ட்ராம், என். கல்யாண் ராமன் ஆகியோரை சொல்லலாம். இவர்களைத்தவிரவும் மொழிபெயர்ப்புகள் செய்தவர்கள் உண்டு. ஆனால் அதிகம் அறியப்படவில்லை. அறியப்படாததற்கும் மொழிபெயர்ப்பாளரின் தரத்துக்கும் சம்பந்தம் இல்லை. கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாகத்தான் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்தில் அதிகம் வாசிக்கப்படுகின்றன. ஆகவே வாசகர்கள் குறைவு. மொழிபெயர்ப்புகளை பற்றி பத்திரிக்கைகளில் எழுதக்கூடியவர்கள் குறைவு.  ஆகவே நூல்கள் பிரசுரமானாலும் பல்கலைக்கழக நூலகங்களுக்குப் போய் சேர்ந்ததே தவிர அவை பொது வாசகர்களிடம் பெரிய அளவில் சென்று சேரவில்லை. விவாதிக்கப்படவில்லை. 

அதற்கு ஒரு காரணம், சென்ற நூற்றாண்டில் ஆங்கிலத்தில் வெளிவந்த புனைவுகளை எழுதியவர்களும் அதற்கு அமைந்த வாசகர்களும் நவீனத்துவ மதிப்பீடுகள் கொண்டவர்கள் என்பதாக இருக்கலாம். அவர்கள் உலகத்தை நோக்கியே எழுதினார்கள், உலகத்தால் ஏற்கப்படவேண்டும் என்று விரும்பினார்கள். அதையே ‘இந்திய இலக்கியம்’ என்று கொண்டுசென்றார்கள். மொழிபெயர்ப்புகளில் வெறும் சில சமூக யதார்த்த சித்திரங்களும் வறுமை நிகழ்வுகளும் இருப்பதாகவும் அவை இரண்டாம் நிலை படைப்புகள் என்றும் சொன்னார்கள். வெளிநாட்டு ஆங்கில ஊடகங்கள் நம்முடைய மொழிபெயர்ப்பு இலக்கியம் நோக்கி எந்த ஆர்வமும் காட்டவில்லை. அவர்களுக்கு இந்திய இலக்கியம் என்றால் இந்திய-ஆங்கில இலக்கியம் தான் என்ற பிம்பம் இருந்தது. சல்மான் ருஷ்டி போன்றவர்கள் அந்த நம்பிக்கையை அங்கே நிலைநிறுத்தினார்கள்.

ஆனால் சென்ற பத்து ஆண்டுகளில் இந்த நிலைமை மாறியுள்ளது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உலக இலக்கியங்கள் சார்ந்த ஓர் ஆர்வம் உருவாகியுள்ளது. மக்கள் அவரவர் பேசும் மொழிகளில் அவரவர் கதைகளை சொல்ல வேண்டும், அவை மொழியாக்கம் மூலம் தம்மை அடையவேண்டும் என்ற விருப்பம் உள்ள ஒரு வாசகர் தரப்பு அமெரிக்காவில் உருவாகியுள்ளது. 2008-ல் ராசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் சாட் போஸ்ட் (Chad W Post) என்ற ஆய்வாளர் அமெரிக்காவில் பிரசுரமாகும் புத்தகங்களில் 3% மட்டுமே மொழிபெயர்ப்பு இலக்கியம் என்று கண்டடைந்தார். அந்த எண்ணிக்கையை உயர்த்த பல செயல்பாடுகள் தொடங்கப்பட்டன. இன்று மொழியாக்கங்களை பிரசுரிக்கும் Tilted Axis Press, Open Letter, Fitzcarraldo போன்ற பதிப்பகங்கள் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உருவாகியுள்ளன.

அதன் அலையை நாம் இந்தியாவிலும் உணரத் தொடங்கினோம். இன்று மொழிபெயர்ப்புகள் இந்தியா முழுவதும் ஆர்வத்துடன் வாசிக்கப்படுகின்றன. பதிப்பாளர்களும் புத்தகங்களை பிரசுரிக்க, வணிகப்படுத்த ஆர்வமாக உள்ளனர். வெளிநாட்டினர் மத்தியிலும் ஆர்வம் வலுத்துள்ளது. சென்ற ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசு ஒரு ஹிந்தி நாவலின் மொழியாக்கத்துக்கு வழங்கப்பட்டது (கீதாஞ்சலி ஶ்ரீயின் ரேட் சமாதி – Tomb of Sand). பெருமாள் முருகனின் பூக்குழி நாவலின் மொழியாக்கம் இந்த ஆண்டு சர்வதேச புக்கரின் நெடும்பட்டியலில் இடம்பெற்றது. பெரும்பாலும் அரசியல், அடையாளச்சிக்கல்களை பேசும் நாவல்கள், மத-சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நாவல்கள் பிரபலமடைகின்றன. இவை அனைத்துமே மிகமிக தொடக்கநிலை நிகழ்வுகள் என்றாலும் வரவேற்கத்தக்கது.

மொழிபெயர்ப்பாளர் நந்தினி கிருஷ்ணன்

இங்கே இன்னொன்றையும் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இந்த செயல்பாடுகள் மேலும் கவனத்துடன் நிகழ்த்தப்படலாம். இதையெல்லாம் முன்னெடுப்பவர்கள் மேலும் ஆன்மசுத்தியுடன் நடந்துகொள்ளலாம். தங்கள் இலக்கிய அளவுகோள்கள் என்னவோ அவற்றை தயக்கமே இல்லாமல் முன்னிறுத்தலாம். சமீபத்தில் ஆர்மரி ஸ்க்வேர் என்ற நிதி நிறுவனம் தெற்காசிய அளவில் ஒரு மொழியாக்க போட்டியை நடத்தியது. உலக அளவில் இன்று தலை சிறந்து விளங்கும் மொழிபெயர்ப்பாளர்கள் அதன் நீதிபதிகள். முதல் பரிசு பெறும் நூல் ராச்செஸ்டர் பல்கலையின் சாட் போஸ்ட் நடத்தும் ஓப்பன் லெட்டர் பதிப்பகம் வழியாக வெளியிடப்படும் என்று அறிவித்தார்கள். இந்த போட்டியில் சாரு நிவேதிதாவின் ராஸ லீலா – ஒரு  தமிழ் புத்தகம் – முதல் பரிசுக்கு தேர்வானது (மொழிபெயர்ப்பாளர் நந்தினி கிருஷ்ணன்). பிறகு அந்த புத்தகத்தில் under-age sex சார்ந்து ஒரு கதாபாத்திரத்தின் பேச்சு இடம்பெறுவதால் சட்டச்சிக்கல் வரலாம் என்று சொல்லி அறிவிக்கப்பட்ட பரிசு திரும்ப பெறப்பட்டது. இந்த விவகாரத்தை பற்றி ஏன் சொல்கிறேன் என்றால், இதில் அந்த நிறுவனமும் நடுவர்களும் அந்த நூலின் மொழிபெயர்ப்பாளரையும் ஆசிரியரையும் நடத்திய விதம் ரசனைக்குறியதாக இல்லை. ஒரு புத்தகத்தை பதிப்பிப்பதும் பதிப்பிக்காமல் இருப்பதும் ஒரு பதிப்பாளரின் சுதந்திரம். ஆனால் எழுத்தாளர் மேல் மதிப்பும் நன்னம்பிக்கையும் கொண்டவர்கள் என்றால் ஓர் இலக்கிய பிரதி என்ற அளவில் – அவர்களே தங்கள் ரசனையின் அடிப்படையில் பரிசுக்கு தேர்வு செய்த நூல் என்ற அளவில் –  அந்த சிக்கலான பகுதிகளைப்பற்றி அவர்களிடம் மேலும் ஆலோசித்திருக்கலாம். அதைச் செய்யவில்லை. குறைந்த பட்சம் பரிசை திரும்பப்பெறும் போது வருத்தம் தெரிவிக்கும் தொனி இருந்திருக்கவேண்டும். அது இல்லை. இந்த மேட்டிமைநோக்கை, நுண்மையின்மையை, இத்தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதற்கு எதிராகவே இங்கே மொழியாக்கச் செயல்பாடுகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. 

ஆங்கில மொழிபெயர்ப்பின் உலகம் மைய தமிழ் இலக்கிய உரையாடலிலிருந்து சற்று தள்ளி இருக்கிறது. ஆகவே பெரும்பாலான எழுத்தாளர் வாசகருக்கு இந்த பின்னணிகள் தெரியாது இத்தருணத்தில் முன்வைக்கிறேன்.

ஜெயமோகன் போன்ற முக்கியமான தமிழ் ஆளுமையின் படைப்புகள் அவர் எழுத ஆரம்பித்து 35 வருடங்கள் கழித்து தான் மொழிபெயர்க்க முடிகிறது என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்.

இன்று ஆங்கிலத்தில் வாசிக்கும் இந்திய வாசகர்களுக்கு தங்கள் வரலாற்றை, பூர்வீகத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் பெருகியிருக்கிறது. அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆங்கிலம் வழி கல்வி கற்றவர்கள். ஆனால் இந்தியாவில் வளர்ந்தவர்கள். ஒரு வயதில் தங்கள் பள்ளிப்பாடங்களைத் தாண்டி தங்கள் சுற்றுச்சூழல், வரலாற்றைப் பற்றிய கேள்விகளுடன் வருகிறார்கள். குறிப்பாக எழுதப்பட்ட வரலாறுக்கு மறுபுரமாக பழம் இலக்கியங்களையும் நாட்டார் கதைகளையும் அறிந்துகொள்ள விருப்பம் கொண்டுள்ளனர். பிராந்திய மொழி சார்ந்த அறிவியக்கங்களில் ஈடுபாடு கொண்டுள்ளனர். இது ஓர் அலை. ஆங்கிலத்தில் இன்று இந்த நோக்கில் எழுதப்படும் பல புத்தகங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. பிரபல சினிமாவிலும் இதைக் காண்கிறோம்.

இந்த அலையின் பகுதியாகவே ஜெயமோகன் இன்று மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படுகிறார். ஜெயமோகனின் புனைவுகளைப் போலவே அபுனைவுகள் பெரிய தாக்கம் உருவாக்கும். புனைவை மொழியாக்கம் செய்ய கவனமான மொழியாக்கக்காரர்கள் அவசியம். இப்போது பிரியம்வதா, ஜெகதீஷ், மேலும் சிலர் அவர் புனைவுகளை பிரசுரித்து வருகிறோம். அபுனைவுகளும் விரைவில் ஆங்கிலத்தில் வந்தால் நன்றாக இருக்கும்.

எழுத்தாளர் ஜெயமோகன்

ஏழாம் உலகத்தை நீங்கள் புதிய கலாச்சார பண்பாட்டு புலம் சார்ந்த வாசகர்கள் முன் வைக்கிறீர்கள்அவர்களுக்கு இதை என்ன சொல்லி அறிமுகப்படுத்துவீர்கள்நம் ஆன்மிகமும் மெய்யியலும் அங்கு சென்று சேர்வதற்கான சூழல் அங்கு உள்ளதா?

முதலில் “அங்கு” என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதலில் தமிழ்நாட்டில் ஆங்கில வழியில் படித்து, அங்கிருந்து இலக்கியத்துக்கு வரும் இளைய தலைமுறை வாசக சூழல் ஒன்றுள்ளது. அவர்கள் புனைவு வாசிப்பது அதிகமும் ஆங்கிலத்தில் தான். இதுபோன்ற நூல்கள் முதலில் அவர்களுக்கே படிக்க கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இன்று ஆங்கிலத்தில் வெளிவரும் ஆக்கங்கள் ஒரு போதும் நம் வாழ்க்கையிலுள்ள ஆழமான பிரச்சனைகள் பற்றி பேசுவதில்லை. இன்று நகரத்தில் படித்து வேலையில் இருக்கும் ஒரு முப்பது வயது இளைஞனுக்கோ பெண்ணுக்கோ இருக்கும் உண்மையான பிரச்சனை என்ன? நவீன உலகம், அதன் பல்வேறு அழுத்தங்கள், அதனால் உருவாகும் கவனக்குறைவு, ஆழமின்மை, அதிலிருந்து வரும்  நிறைவின்மை. பிறகு மரபு. முப்பது வயது வரை மரபை பற்றி யோசிக்காமல் ஒரு மயக்கத்தில் வாழ முடியும். ஒரு குழந்தை வரும் போது – அல்லது ஒரு தந்தை இறக்கும் போது – மரபு மீண்டும் வந்து முதுகில் ஏறிக்கொள்கிறது. அதை எதிர்கொள்ளும் கருவிகள் பெரும்பாலும் அவனிடமோ (அவளிடமோ) இல்லை. சாதி பழமைவாதத்துக்குள்ளும் மத நிர்மாணங்களுக்குள்ளும் அரசியலுக்குள்ளும் புகுந்துகொள்கிறார்கள். அல்லது மறுபக்கம், மரபெதிர்ப்பு, அதன் அரசியல். இன்று அன்றாடத்தில் எதிலும் இலட்சியவாதம் இல்லை. தீவிரம் இல்லை. கனவுகளே இல்லை. இன்றைய உலகின் பொத்தாம்பொதுவான உணர்வுநிலையை சலிப்பு-சோம்பல் என்று சொல்லத்தோன்றுகிறது.  இப்படி இருப்பவர்கள் பெரும்பாலானவர்களுக்கு என்ன பிரச்சனை என்ற பிரக்ஞையே இல்லாததை கண்டிருக்கிறேன். ஆனால் தொடர்ந்து ஒரு நிறைவின்மையை உணர்கிறார்கள். 

உன் பிரச்சனை என்ன என்று கதைசொல்லி காண்பிக்க ஒரு புனைவெழுத்தாளன் இங்கு அவசியமாகிறான். அந்த அவகையில் தான் அறம், ஏழாம் உலகம் போன்ற நூல்கள் முக்கியம் என்று நினைக்கிறேன். இந்தியாவில் வாழ்ந்த ஒரு வாசகன் இந்த நூல்கள் பேசும் விஷயங்களை ஒரு சிறு தடையைத் தாண்டினால் எளிதில் வந்தடைந்து விடுவான் என்றே நம்புகிறேன். ஏனென்றால் அவன் மேல் மனம் சிதறலற்றிருந்தாலும் ஆழ் மனதில் கனவுகளின் ஊற்று பரிசுத்தமாகவே இருக்கின்றன. அதை எழுப்புகின்றன இந்த புத்தகங்கள். 

தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்தியா முழுவதிலும் இந்த மனநிலையில் உள்ள வாசகர்கள் இருக்கிறார்கள். ஒரு சிறு அறிமுகம் போதும். மாங்காண்டி சாமியையும் கெத்தேல் சாஹிப்பையும் அவர்கள் எளிதில் கண்டுகொள்வார்கள். அவர்களுள் உறையும் கலாச்சார அலகுகள் அவர்களுக்கு தொடர்புறுத்தும். பிறகு உரையாடவும் செய்வார்கள். Stories of the True வந்தபோது டிவிட்டரில் ஒரு இளைஞர் ஷேர் செய்திருந்தார். அவர் பிஹாரில் இருக்கிறார். போட்டித்தேர்வு மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர். அவரை அணுகி பேசியபோது அவருக்கு மலையாள நண்பர் ஒருவர் இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தியதாகச் சொன்னார். இலக்கியத்தின் ரசகிய ஓடைகளை நம்பித்தான் நல்ல எழுத்தும் மொழியாக்கமும் செய்யபப்டுகிறது.  

நல்ல வாசகர்கள் எங்கிருந்தாலும் இவ்வகைக் கதைகளின் அடிப்படை விழுமியங்களை நோக்கி வந்துவிடுவார்கள் என்றே தோன்றியது. அமெரிக்காவின் ஓஹாயுவிலுள்ள வெண்டி என்பவர் – பேரப்பிள்ளைகளை கண்டவர் – ப்ரியம்வதாவிற்கு Stories of the True பற்றி எழுதியிருந்தார். ஆனால் அந்த தொடர்புறுத்தலில் ஆச்சரியமில்லை. ஒரு கதையின் சில லோக்கலான தகவல்கள் தொடர்புறாமல் போகலாம். ஆனால் அறத்தை, மானுட இலட்சியங்களை பேசும் கதைகள் எதுவானாலும் அவை தேடல் கொண்ட மனங்களில் போய்ச் சேறும்.

ஒரு மொழிபெயர்ப்பாளராக இந்த தொடர்புறுத்தலில் என் பங்கை நான் இப்படி வரையறுப்பேன். நான் கதையின் உணர்ச்சியையே மையமாகக் கடத்துகிறேன். அதற்கு மொழி ஒரு கருவி. மொழியின் அடுக்கில், ஓசை நயத்தில், அவை மனதில் எழுப்பும் படிமங்களில் அந்த உணர்ச்சி உருவாக வேண்டும். பண்பாடு குறிப்புகளை எதிர்கொள்ளும்போது அவற்றை “விளக்க” நான் முற்படுவதில்லை. அடிக்குறிப்புகளோ புத்தகத்துக்குப் பின்னால் பட்டியலிடுவதோ நான் செய்வதே இல்லை. மாறாக கதைப்போக்கில் அதை இன்னொரு புலன் அனுபவமாக எடுத்துறைக்கமுடியுமா என்றே பார்ப்பேன். அதுவே இயல்பான வாசக அனுபவமாக அமையும். ஏழாம் உலகத்தில் வரும் காவடி வர்ணனை ஓர் உதாரணம். தமிழில் காவடி என்றாலே புரியும். ஆங்கிலத்தில் காவடியின் வளைந்த வடிவத்தையும் வண்ணமயத்தையும்  ஆட்டத்தையும் சில கூடுதல் சொற்களால் உணர்த்தியிருக்கிறேன். அந்த சுதந்திரத்தை எடுப்பதன் வழியாக கதையின் உணர்வுதளத்துக்கு மேலும் விசுவாசமாக இருப்பதாக நினைக்கிறேன்.

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்வதன் தேவையை பாரதி.நா.சு தொடங்கி நம் முன்னோடிகள் சொல்லி வந்திருக்கிறார்கள்அதை சாத்தியப்படுத்தியுமிருக்கிறார்கள்ஒரு தமிழ்ஆங்கில மொழிபெயர்ப்பாளராக இதன் தேவையைப் பற்றி உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பாரதி உலக மொழிகள் யாவையும் இங்கு கொண்டு வந்து சேர்ப்போம் என்றும் சொல்லியுள்ளார். அதே போல் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நாட்டமும் அவருக்கு இருந்தது. இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்ற எண்ணமே இப்போது உள்ளது. ஒரு ‘யுனிவர்சல் மைண்ட்’ உள்ள அனைவருக்குமே அவ்விரு எண்ணங்களும் இருக்கும் என்று தான் நினைக்கிறேன். ஏனென்றால் அது இனங்களை மொழி அடையாளங்களைக் கடந்து ஓர் ஒருமைக்கான ஏக்கம் அல்லவா. மொழி என்பது ஒரு வண்ணம், ஓர் அழகான நிற வேறுபாடு. அடுத்த தேசத்தில் இருப்பவரை விடுங்கள், நம் வீட்டில் உள்ள சின்னஞ்சிறு குழந்தை நாம் பேசும் மொழியையா பேசுகிறது? இல்லையல்லவா? அதன் மழலை மொழியில் எத்தனை பேதம், எத்தனை சுவை? ஆனால் அதை மீறி அது சொல்வதை நாமும் நாம் சொல்வதை அதுவும் புரிந்துகொள்ளும்போது நெஞ்சு இனிமையில் அதிர்கிறதே? அந்த இனிய அதிர்வை –  செம்புலப்பெய்நீர் போல் இரண்டு வெவ்வேர் இயல்புடையவை ஒரு புள்ளியில் ஒன்றாவதன் இனிமையை – எண்ணித்தான் நாம் மொழிப்பெயர்க்கிறோம்.  

க.நா.சு “இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்” புத்தகத்தில் உலக இலக்கியங்கள் எல்லாமுமே இங்கு தமிழில் கொண்டு வரப்பட வேண்டும் விவாதிக்கப்பட வேண்டும் என்கிறார். அந்த அறிவுப்பசி அவர்களுக்கு இருந்ததால் தான் நம் இலக்கியம் இன்று இவ்வளவு செழிப்பாக உள்ளது. நம்முடைய முன்னோர்கள் – க.நா.சு, புதுமைப்பித்தன், சு.ரா. எல்லோருமே படைப்பியக்கத்தின் பகுதியாக மொழியாக்கம் செய்து நம் மொழியின் உயிர்ப்பை போஷித்தவர்கள். 

ஒரு மரபாக கைமாற்றப்பட்டு இந்தச் சிந்தனை இன்னும் உயிர்ப்போடு தான் உள்ளது. நல்ல படைப்புகள் உடனேயே நமக்கு மொழிபெயர்ப்புகளாகக்  கிடைத்துவிடுகின்றன. உலக மொழிகள் மட்டுமல்ல, இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகள் விரைவாகவே தமிழுக்கு வருகின்றன. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவதை விட விரைவாக தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்படுகிறது. இது ஆரோக்கியமான விஷயம். அர்ப்பணிப்புள்ள மொழிபெயர்ப்பாளர்களும் நுண்மையும் தேடலும் கொண்ட வாசகர்களுமே நமது சொத்து. லாபம் கருதாது இச்செயல்களில் ஈடுபட்டு நம் கனவுகளை ஆழமாக்குபவர்கள். அவர்கள் எப்போதும் நம் வணக்கத்துக்குறியவர்கள். 

அதே போல, நாம் இங்கு கண்டடையும் அழகு, மெய்மை என்று ஒன்று உள்ளதல்லவா? அதை வெளியில் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் ஒரு வீரியமுள்ள மனதுக்கு இருக்கும். இதில் நம்முடையது உயர்வு, அவர்களுடையது தாழ்வு என்ற எண்ணமெல்லாம் இல்லை. எதோவொரு புள்ளியில், உன்னிடம் புதிதாக சொல்ல என்னிடம் ஒன்று உள்ளது, சொல்லட்டுமா? என்ற பரவசம் தான் அதைச் செய்யத் தூண்டுகிறது. அது தான் பாரதியை அப்படிச் சொல்ல வைத்தது, அதனால் தான் நானும் ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்கிறேன். என்னை பாதித்த, என்னை முழுமை செய்த விஷயங்களை இன்னொருவருக்குச் சொல்கிறேன். “என்” கலாச்சாரம், “என்” மொழியைக் கொண்டு போகிறேன் என்ற மார்த்தட்டல் அல்ல. ஒரு இனிப்பை பகிர்ந்துண்ணுவது போல் தான் அது. நான் அடைந்த அழகனுபவத்தை, உண்மையை என்னைப்போலவே சுவைக்க விருப்பமுள்ளவனுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

ஆங்கிலத்தில் தமிழ் ஆக்கங்களைக் கொண்டு போவதிலுள்ள பயன் மதிப்பு என்ன?

நம் மனதைத்தொட்ட ஆசிரியர்களை வேற்றுமொழியினர் அடைவார்கள் என்ற நிறைவு தான் முதன்மையான நோக்கம்.  வரலாற்றுக் காரணங்களால் ஆங்கிலம் உலகமெங்கும் பேசப்படும் மொழியாக விளங்குகிறது. ஆங்கிலத்தில் வந்தால் அதன் வழியாக மற்ற மொழிகளுக்கு நூல் செல்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது. 

பிறகு உலகளவில் விருதுகளும் அங்கீகாரங்களும் நம் ஆசிரியர்களுக்குக் கிடைக்க வழி செய்கிறது. ஆனால் இது மிகவும் சிக்கலான விஷயம். ஒரு புத்தகத்துக்கு அங்கீகாரம் என்றால் என்ன? புத்தகம் உரிய முறையில் வாசிக்கப்படுவதும், தாக்கம் ஏற்படுத்துவதுமே. தன் புத்தகம் அழகியலில், சிந்தனையில், சமூகத்தில் செல்வாக்கு செலுத்துமென்றால் அதையே ஆசிரியன் முதன்மையாக விரும்புவான். 

விருதுகள் போன்றவை அதற்கு உறுதுணை. இன்று ஒரு தமிழ் புத்தகம் மொழியாக்கமாகி புக்கர் பரிசு வென்றால் அது முற்றிலும் புதிய நோக்கில் தமிழில் மீள்வாசிப்புக்கு வரும். விவாதமாகும். அந்த புத்தகம் தன் சமூகத்துடன் எப்படி உரையாடுகிறது என்பதைத்தாண்டி உலகத்துடன் எப்படி உரையாடுகிறது என்ற புள்ளியில் அதன் அர்த்தத்தளம் மேலும் விரிவடையும். ஆசிரியருக்கும் புத்தகத்துக்கும் அதன் வழியாக கிடைக்கும் கவனமும் பணமும் முக்கியமானது. 

ஆனால் இதன் அரசியலும் கவனிக்கப்பட வேண்டியது. ஒரு நூல் ஆங்கிலத்தில் வருகிறது, சர்வதேச பரிசுகளுக்கு தேர்வாகிறது என்பதாலேயே அது அந்த அங்கீகாரங்களுக்கு தகுதியான நூல் என்று ஆகிவிடுமா? ஆங்கில மொழியாக்கங்களே அருகியிருக்கும் நம் சூழலில் எந்த நூல்கள் மொழியாக்கம் செய்யப்படுகின்றன, எப்படி முன்வைக்கப்படுகின்றன, அவற்றுக்குப் பின்னால் உள்ள நிர்வாக அமைப்பு, கருத்தியல் அமைப்பு எப்படிப்பட்டது என்பது போன்ற பல உட்சிடுக்குகள் உள்ளன. இவை இங்கே வெளிப்படையாக விவாதிக்கப்பட வேண்டும். 

இன்னொரு அரசியலும் உள்ளது. சர்வதேச விருதுகளின் அரசியல். அந்த விருதுகளின் அளவுகோல்கள் என்ன? அவற்றை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? அவை உருவாக்கும் கவனம் நமக்கு ஒரு நலனை உண்டுபண்ணுகிறது, சரி. விருதோடு பணமும் புகழும் கிடைக்கிறது, சரி. ஆனால் இன்று பெரும்பாலான இலக்கிய விருதுகள் தங்களை ‘உலகளாவிய விருதுகள்’ என்று அறிவித்துக்கொண்டாலும் ‘உலகளாவிய தரம்’ சார்ந்து அளிக்கப்படுவதில்லை. சர்வதேச புக்கருக்கு தேர்வாகும் நூல்கள் அனைத்துமே அதற்கு முந்தைய ஆண்டில் பிரிட்டனில் வெளியாகியிருக்க வேண்டும் என்று நிபந்தனை. பிரிட்டனிலோ ஒரு வருடத்தில் வெளியாகும் மொழிபெயர்ப்பு நூல்களே 3%க்கு கீழ். அதிலும் பெரும்பான்மை ஐரோப்பிய மொழிகள். மற்ற மொழி நூல்களை பிரசுரிக்கவே பதிப்பாளர்கள் யோசிக்கிறார்கள். அன்னிய கலாச்சாரங்களை பற்றிய கதைகளை வாசகர்கள் வாங்குவார்களா என்ற பயம். அப்படியிருக்க, எங்கணம் ‘உலகளாவிய’? 

இருந்தாலும், நம் மனதைத் தொட்ட ஆசிரியர்களை உலகுக்கு அறிமுகப் படுத்த நாம் முயற்சி செய்யலாம்.. தமிழின் மாபெரும் படைப்பாளிகளில் ஒருவர் அசோகமித்திரன். அவருடைய நூல்களின் நல்ல ஆங்கில மொழியாக்கங்கள் உள்ளன. அவர் நவீனத்துவர், அழகான ‘ஸ்டைல்’ மற்றும் ‘எகானமி’ உடைய நடை கொண்டவர். அவரை உலக வாசகர்கள் அறியச்செய்ய வேண்டியது நம் கடமை என்று சொல்வேன். அதற்கு வெறுமனே பதிப்பு நிறுவனங்களோ புத்தக வணிகர்களோ போதாது. தமிழில் விரிவாக வாசிக்கிற, ஆங்கிலத்தில் சமகால விமர்சன மொழியை அறிந்த, அதன் வழியே ஒரு படைப்பின் நுண்தளத்தை கூர்மையாக முன்வைக்கக் கூடிய மொழிபெயர்ப்பாளர்களும் புத்தகரசனையாளர்களும் உருவாக வேண்டும். இது தூதுரவு போன்ற ஒரு தொடர்புப் பணி.  அப்புறம் நோபல் பரிசு கிடைத்தால் தான் அசோகமித்திரன் பெரிய எழுத்தாளர் என்று நான் சொல்ல வரவில்லை. அவரை கொண்டு செல்வது அங்கீகாரத்திற்காக அல்ல. வெள்ளையன் குனிந்து பார்த்து தலையைத்தட்ட வேண்டும் என்பதற்காக அல்ல. என்னிடம் இத்தனை பெரிய அருமணி உள்ளது. உங்களால் அதை பார்ப்பதற்கான கண் இருந்தால் பாருங்கள் என்பதற்காகத்தான். ருசிகளைப் பெருக்குவது தான் கலைஞனின் வேலை. மொழிபெயர்ப்பு ரசனை விமர்சனம் என்பது, நம் ருசிகளை உலகத்துக்கு கற்பிப்பதும் தான்.

இன்றைய இந்தியஆங்கில வாசிப்பு சூழல் எப்படியுள்ளது?

க.நா.சுவின் இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் நூலை வரிக்கு வரி இந்திய ஆங்கில சூழலை நோக்கி சொல்ல முடியும் என்ற நினைப்பு வந்துகொண்டே இருக்கிறது. இன்று இந்திய ஆங்கில சூழல் வீரியமற்றுப்போனதாக உள்ளது. அங்குள்ள போக்கு என்பது எல்லாரும் சமம் தான். எல்லாரும் எழுதுவது இலக்கியம் தான். எழுதுபவனை ஊக்குவிப்போம். எல்லோரும் சேர்ந்து எழுதி ஊக்கப்படுத்தி புத்தகங்களை விற்று மகிழ்ச்சியாக இருப்போம். இதுவே பொதுப்போக்கு. 

அப்புறம் எதற்கெடுத்தாலும் அரசியல். கள அரசியல் அல்ல. மக்களிடமிருந்து உருவாகும் அரசியல் அல்ல. மேலிருந்து, பல்கலைக்கழகங்கள் விதைத்துப் பரப்பும் கருத்தரசியல். அல்லது கட்சிகள் விதைக்கும் கருத்தரசியல். ஆங்கிலத்தில் வாசிப்பவர்கள் ஊடகம் வழியாக அவற்றை அறிந்துகொண்டு ஒப்பிப்பதே மிகுதியாக உள்ளது. மேலும்  இன்று அரசியல் சுத்தம் என்று ஒன்று உருவாகிவந்துள்ளது. எல்லோரும் தீட்டு பார்க்கிறார்கள். அச்சச்சோ நான் எவ்வளவு சுத்தமானவள் தெரியுமா என்று சொல்லிக்கொள்வதற்காகவே புத்தகம் தேர்ந்தெடுத்து படிக்கீறார்களோ என்று தோன்றுகிறது. இந்த மாமித்தனம் இந்திய ஆங்கிலச் சூழலில் ஒரு பெரிய சாபக்கேடு.

ரசனையுள்ளவர்களே இல்லை என்று சொல்ல மாட்டேன். துடிப்பும் நெருப்பும் உள்ள சில எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். நுண்ணுணர்வு மிக்க வாசகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் குரல் பெரிதாக கேட்கவில்லை. அவர்கள் இந்தியாவெங்கும் எங்கே இருக்கிறார்கள் என்று பரஸ்பரம் தெரியாமல் இருக்கிறது. ரசனை அடிப்படையில் இலக்கியத்தை பற்றிப் பேச தீவிரமான களங்கள் இல்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆகையினால் அப்படி வாசிப்பவர்கள் வாசித்து பேசாமல் இருக்கலாம். ஆனால் இது ஒரு மொழிச்சூழலுக்கு ஆரோக்கியமானது அல்ல. பேசவேண்டும். கநாசு சொல்வது போல் ஊர்க்கு 1000-2000 பேர் என்று ஒரு கோஷ்டி உருவாக வேண்டும். புத்தகம் என்பது பண்டம் இல்லை. நல்வாழ்க்கை நல்கும் உபதேசம் அல்ல. தன்னுடைய அரசியல்சரிகளை பிரஸ்தாபித்துக்கொள்ளும் fashion accessory அல்ல. இலக்கியத்தின் நோக்கம் என்பது அழகை உருவாக்குவது. சிந்தனையை உருவாக்குவது லட்சியங்களை உருவாக்குவது. கனவுகளை பெருக்குவது. இந்த உணர்வு உருவாக வேண்டும்.

மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போது வந்தது. உங்களுக்கு ஆதர்சமான மொழிபெயர்ப்பாளர் பற்றி சொல்லுங்கள்.

ஆதர்சமாக குறிப்பிடத்தக்க ஒரு பெயர் என்றால் அசோகமித்திரனைத்தான் சொல்ல வேண்டும். அசோகமித்திரன் மொழிபெயர்ப்பாளராக அறியப்பெற்றவர் அல்ல. ஆனால் நான் வாசித்ததில் மிகச்சிறந்த சில மொழியாக்கங்களை அவர் செய்திருக்கிறார். சமீபத்தில் வண்ணநிலவனின் எஸ்தர் கதையை அவர் மொழியாக்கத்தில் ஆங்கிலத்தில் வாசித்தேன். Indian Literature என்ற இதழில் பல தசாப்தங்களுக்கு முன் வெளியானது. அந்த கதையின் அனைத்து நுண்தளங்களையும் உணர்வுகளையும் அவரால் மொழிபெயர்ப்பில் கடத்திவிட முடிந்திருந்தது. மிகச்சரளமான எழுத்து நடை. ஒரு வார்த்தை கூடுதல் குறைவு இல்லை. அது ஓர் இலட்சிய மொழிப்பெயர்ப்பு.  அது தான் தர நிர்ணயப்புள்ளி என் வரையில். 

இலக்கிய ஆசிரியர்கள் மொழிபெயர்க்கலாமா என்ற ஐயம் எனக்கு இருந்துள்ளது. அசோகமித்திரனின் மொழிபெயர்ப்பை வாசித்தபோது அது அகன்றது. அதில் இருந்தது வண்ணநிலவனின் மொழி தான். ஆனால் அசோகமித்திரன் என்ற படைப்பாளியால் எடுத்தாளப்பட்டிருந்தது. மொழியாக்கம் என்பது வெறுமனே வார்த்தைமாற்றல் விளையாட்டு என்று நான் நினைக்கவில்லை. கொஞ்சம் interpretation – எடுத்தாள்கைக்கான சுதந்திரம் உள்ள கலை தான் அது என்று நினைக்கிறேன். ஒரு மாஸ்டர் கம்போஸரின் இசையை ஒரு கண்டக்டர் எடுத்தாள்வது போல. எடுத்தாளும் போது மூலத்தின் அழகு மேலும் துலக்கம் பெற வேண்டும், படைப்பு மேலும் உயிர்ப்புடன் எழ வேண்டும். அவ்வளவு தான் நியதி. அந்த அற்புதமான கலவை அந்தப் பிரதியில் நிகழ்ந்திருந்தது.மற்றபடி நுண்ணுணர்வுடைய தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்புகள் சொர்ப்பம் தான். தி.ஜா வின் அம்மா வந்தாள் நாவலின் ஒரு மோசமான மொழிபெயர்ப்பை ஒரு காலத்தில் படிக்க நேர்ந்தது. இதை விடத் தரமாக நாமே செய்யலாமே என்று தோன்றலானது. அங்கிருந்து தான் என் பயணம் தொடங்கியது என்று நினைக்கிறேன்.

இலக்கிய மொழிபெயர்ப்பாளர்களிடம் இருக்க வேண்டிய தரம் என்ன?

இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள் முதலில் நல்ல வாசகர்களாக இருக்க வேண்டும். இரு மொழிகளிலும் புனைவு மொழியை லாவகமாக கையாளும் கலை தெரிந்திருக்க வேண்டும். ஓர் ஆசிரியரை மொழிபெயர்க்கிறார் என்றார் அவர் படைப்பு மனநிலையை ஊகிப்பவர்களாக, பின் தொடர்பவர்களாக இருப்பது அவசியம் என்று கருதுகிறேன். போன பதிலில் சொன்ன ‘எடுத்தாள்கை’ என்ற கருத்தின் நீட்சி தான் இது. மரச்சிற்பத்தைப் பார்த்து கற்சிற்பம் செய்வது போல் தான். மரமும் கல்லும் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டவை. அந்த குணாதிசயங்களை கணக்கில் கொண்டு தான் ஒன்றில் நிகழ்ந்துள்ளதை இன்னொன்றில் நிகழச்செய்ய வேண்டும். இதற்கு மேல் ஒரு மொழிபெயர்பபளர் ஒரு சூழலில் ஒரு விமர்சனப்பணியையும் செய்கிறார். அவர் மொழிபெயர்க்கும் நூல்கள் மேலும் கவனம் பெறுகின்றன. தன் ரசனையையை அதற்கு அளவுகோளாக பயன்படுத்துகிறார். ஆகவே மொழிபெயர்பபளர் விமர்சகராக, ரசனை மதிப்பீடுகளின் அடிப்படையில் புனைவுகளை பற்றிப் பேசக்கூடியவராக இருப்பதும் அவசியம் என்று நினைக்கிறேன்.

THE ABYSS

ஏழாம் உலகம் மொழிபெயர்ப்பு செய்ய எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது

நான்கு மாதங்களில் அந்த மொழிபெயர்ப்பை செய்து முடித்தேன். நவம்பர் 2021 தொடங்கி மார்ச் 2022-ல் முடித்தேன். அதன் பின் அதற்கு ஒரு பதிப்பக நிறுவனத்தைக் கண்டறிந்து அதை பிரசுரிக்க ஒரு வருடம் ஆகியுள்ளது.

தமிழ் பதிப்பகங்கள் இன்னும் தமிழ்ஆங்கிலம் மொழிபெயர்ப்பு முயற்சிகளை எடுக்க வேண்டுமா?

இரு பக்கங்களிலிருந்தும் ஆர்வம் எழ வேண்டும் என்று நினைக்கிறேன். நான் இப்போது ஐரோப்பாவில் இருக்கிறேன். இது ஒரு கண்டம். ஆனால் இங்கு ஒரு ஜெர்மன் மொழியில் நாவல் வந்தால் உடனே பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படுகிறது. எழுத்துக்கலையுடன் பிற கலைகளும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் பல மொழிகள் பேசினாலும் ஒற்றைப்பண்பாடு, ஒற்றை அறிவியக்கம் என்ற உணர்வு அவர்களுக்கு உள்ளது. நமக்கு அப்படியல்லாதது வருத்தமளிக்கிறது. 

இன்று தமிழ், ஆங்கிலம், இரண்டு பதிப்புச் சூழல்களும் ஒன்று மற்றொன்றை சந்தேகத்துடன் காண்பதாக ஊகிக்கிறேன். ஏனென்றால் அவை உரையாடிக்கொள்வதற்கான வெளிகளே இல்லை. மேட்டிமைநோக்கு, அப்படி ஒரு நோக்கு இருக்கக்கூடுமோ என்ற ஐயம் போன்றவை திறந்த மனமுடைய உரையாடலை தடைசெய்கின்றன. இந்த பனிச்சுவர்கள் உடைய வேண்டும். பரஸ்பரம் மரியாதையும் நன்மதிப்பும் உருவாக வேண்டும்.

தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்கு இன்று இந்திய அளவில் இருக்கும் பதிப்பகங்கள் பற்றி சொல்லுங்கள்.

இன்று இந்திய அளவில் மையத்தில் இருக்கும் எல்லா பதிப்பாளர்களும் மொழியாக்கங்களை வெளியிடுகிறார்கள். Penguin, Harper Collins, Hachette, Bloomsbury, Juggernaut என்று முக்கியமானவர்கள் எல்லோரும் இந்தக் களத்தில் இருக்கிறார்கள். இது கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்த முக்கியமான வரவேற்க்கத்தக்க விஷயம். வெளிநாடுகளை பொறுத்தவரை மொழியாக்கங்களை, குறிப்பாக தெற்காசிய மொழிகளிலிருந்து வரும் நூல்களை வெளியிடுவதில் கொஞ்சம் தயங்குகிறார்கள் என்பது உண்மை. ஆனால் முன்பை விட நிலைமை மேம்பட்டுள்ளது. Tilted Axis Press போன்ற பதிப்பகங்கள் மொழியாக்கங்களை வெளியிடுவதையே மையச் செயல்பாடாக கொண்டுள்ளது. சமீபத்தில் வெளிவந்த சல்மாவின் ‘Women Dreaming’ (தமிழில்: மனாமியங்கள்) புத்தகத்தை வெளியிட்டவர்கள் இவர்கள் தான் (மொழிபெயர்ப்பாளர்: மீனா கந்தசாமி). 

ஆனால் இவ்வகை பதிப்பகங்கள் மொழியாக்கத்தை ஆதரிப்பதை பெரும்பாலும் ஓர் அரசியல் நிலைப்பாடாகக் காண்கிறார்கள். அவர்கள் பதிப்பிக்கும் புத்தகங்களும் அந்த அளவுகோல்களின் படியே தேர்வுசெய்யப்படுகின்றன. மொழிபெயர்ப்புகளை பதிப்பிப்பதும் வாசிப்பதும் குரல் அல்லாத மொழிக்காரர்களுக்கு குரல் கொடுக்கும் ‘நற்செயல்’ என்ற நினைப்பிலிருந்து இந்த மனநிலை எழுவதாக எண்ணுகிறேன். இதில் உள்ள ரட்சிக்கும் மனநிலையையும் (saviour complex) புரவலத்தன்மையும் (patronizing tone) சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பதிப்பகங்களுக்கு வியாபார நோக்கமும் சில இலட்சியங்களும் இருக்கலாம். ஆனால் உலகத்தின் பிறமொழி எழுத்தாளர்களை எழுத்தாளர்களாக சமநிலையில் வைத்து உறவாட வேண்டும். யாரும் யாரையும் வியக்கவும் வேண்டாம் இகழவும் வேண்டாம் ரட்சிக்கவும் வேண்டாம்.

மொழிபெயர்ப்பாளர் ப்ரியம்வதா

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்ய நுழையும் ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு இன்று தமிழ்ச்சூழலில் இந்திய அளவில் உலக அரங்கில் உள்ள வாய்ப்புகள் என்ன? உங்களுக்கு ஊக்கத்தொகை கிடைத்ததாகச் சொல்லியிருந்தீர்கள். ப்ரியம்வதா தமிழிலிருந்து முதல் முறையாக வெள்ளையானை மொழிபெயர்ப்பு பணிக்காக PEN-Heim grant பெற்றுள்ளார்இந்தச்சூழல் நேர்மறையாக உள்ளது. இது போல மொழிபெயர்ப்பாளர்களுக்கு இருக்கும் பிற வாய்ப்புகள் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

வாய்ப்புகள் என்றால்… முதன்மையாக ஒருவர் தன் சொந்த ஆர்வத்தால் ஒரு நூலை மொழியாக்கம் செய்து பதிப்பாளரை அணுகி பதிப்பிக்கவேண்டும் என்றால் அதை அவர் செய்யலாம். அதற்கான எல்லா வாய்ப்புகளும் இன்று திறந்திருக்கின்றன. 

ஊக்கத்தொகை இருந்தால் ஒருவர் மேலும் நேரத்தை ஈட்டி கவனமெடுத்து மொழிபெயர்ப்புகளை உருவாக்கலாம். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை – தமிழைப் பொறுத்தவரை – மொழியாக்க ஊக்கத்தொகைகள் என்று எதுவும் இல்லை. ‘ஏழாம் உலகம்’ நாவலை மொழியாக்கம் செய்ய அ. முத்துலிங்கம் அவர்கள் தனிப்பட்ட முறையில் என்னை commission செய்தார். அந்த உதவியோடு ஓராண்டுக்குள் வேலைகளெல்லாம் முடிந்து நூல் வெளிவந்தது. அந்த உதவியில்லாமல் அவ்வளவு விரைவில் அது நிகழ்ந்திருக்குமா என்பது சந்தேகம். இன்று மொழிபெயர்ப்பாளர்களுக்கு மட்டுமல்ல, தமிழில், பிராந்திய மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களுக்கும் grants, commissions கிடைக்கவேண்டும், அதற்கான அமைப்புகள் உருவாக வேண்டும் என்று நினைக்கிறேன். இன்றைய பொருளாதார சூழல் அப்படி. வேலைச்சூழலும் அப்படி. 

நான் சுவிட்சர்லாந்தில் வசிக்கிறேன். இங்கே ஜெர்மன் மொழிக்கு உலக மொழிகளிலிருந்து ஒரு நூலை கொண்டு வர ஒருவர் உத்தேசித்தால் அவ்வளவு உதவித்தொகைகள் கொட்டிக்கிடக்கின்றன. ஜெர்மன் மொழிபெயர்ப்பு செய்ய இயன்றவர்கள் அதை ஒரு முழு நேர வேலையாக செய்யுமளவு சூழல் உள்ளது. அதை ஊக்குவிப்பது ஜெர்மன் அரசு, அவர்ளுடைய கலாச்சார அமைப்பு. அதே போல் ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கோ வேறு மொழிகளுக்கோ புத்தகங்களை கொண்டு செல்லவும் நிதியளிக்கிறார்கள். 

தமிழைப் பொறுத்தவரை ஆங்கில மொழியாக்கத்துக்காவது கொஞ்சம் உதவி கிடைக்கிறது. பணம் பெற முடிகிறது. தமிழுக்கு மொழிபெயர்ப்பவர்களுக்கு என்ன கிடைக்கிறது? நமது அரசு தமிழ் வளர்க்க நினைத்தால் கொரியன், ஜெர்மன், அரபி, சீன மொழிகளைப்போல் நமக்கும் வலுவான கலாச்சார அமைப்புகளை உருவாக்கி இருவழிகளிலும் மொழியாக்கத்தை ஊக்குவிக்க நிதி செலவிட வேண்டும். அல்லது தனியார் ஆர்வலர்கள் எடுத்துச் செய்ய வேண்டும்.

இது இந்திய நிலமை. உலகளவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ய சில ஊக்கத்தொகைகள் உள்ளன. அவை ஐரோப்பாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் அளிக்கப்படுபவை. பிரியம்வதா வென்ற PEN-Heim ஊக்கத்தொகை அதில் முக்கியமானது. 

ஆனால் PEN-Heim-ஐத்தவிர பெரும்பான்மையானவை (அமெரிக்காவின் National Endowment for the Arts உக்கத்தொகை போன்றவை) அந்தந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கே அளிக்கப்படுகின்றன. அதாவது அதற்கு ஒருவர் அமெரிக்காவில் வசிக்க வேண்டும், அல்லது அந்த நாட்டின் குடிமகனாக இருக்க வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆனால் மொத்தமாக பார்த்தால் லாபநோக்கிலான வாய்ப்புகள் குறைவு தான். பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்கள் லாபநோக்கத்துக்காக இந்த வகை நிதியுதவிகளை நாடுவதும் இல்லை. இன்று உலகத்தரத்தில் பெயர்ப்பெற்ற மொழிப்பெயர்ப்பாளர் என்றால் இத்தனை ஊக்கத்தொகைகளை வென்றவர், இத்தனை விருதுகளை வென்றவர் என்று ஒரு கணக்கு வந்துவிட்டது. அவை ஒருவித தரச்சான்றுகளைப் போல் ஆகிவிட்டன. அதன் அடிப்படையிலேயே ஒரு ‘நல்ல’ மொழிபெயர்ப்பாளராக உலகளவில் அறியப்படுவதும், வெளிநாட்டு பதிப்பு வாய்ப்புகளும், புத்தக விற்பனையும் நிர்ணையிக்கப்படுகின்றன. ‘நல்ல’ மொழிபெயர்ப்பாளராக அறியப்படுவது நாம் மொழிபெயர்க்கும் எழுத்தாளர்களுக்கும் வாசல்களை திறக்கிறது. ஆகவே முயற்சி செய்கிறோம. நமக்கிருக்கும் குறைவான வாய்ப்புகளுக்குள் ஏதாவது தேருமா என்று. மற்றபடி இன்று இந்தியாவில் ஒரு சராசரி மொழிபெயர்ப்பாளர் வேலையில் இருந்துகொண்டு தன்னார்வத்தில் செய்யும் ஒரு பணியாகவே மொழிபெயர்ப்பு உள்ளது.

நீங்கள் THE ABYSS -ஐ மொழிபெயர்த்தபின் பதிப்பு செய்து அதை கொண்டு போய் வாசகர்களிடம் சேர்க்கும் ஒட்டுமொத்த தொடர் சங்கிலியில் இருப்பதைப் பார்க்கிறேன். அது தொடர்பாக நிறைய கட்டுரைகள் எழுதுகிறீர்கள். ஆசிரியரை நேர்காணல் செய்து வெளியிடுகிறீர்கள். தொடர்ந்து ஆங்கில இதழ்களில் வெளிவரும் THE ABYSS-க்கான ரசனை விமர்சனக் கட்டுரைகளை பகிர்கிறீர்கள். வாசகர்களுடன் பல தளங்களில் உரையாடுகிறீர்கள். இந்த செயலைப்பார்க்கும்போதே மலைப்பாக உள்ளது. இந்த PROCESS-ன் தொடக்கம் மற்றும் முடிவுப்புள்ளி வரை எங்களுக்கு ஒரு அறிமுகம் கொடுக்க முடியுமா.  

நீங்கள் கேட்பதில் இரண்டு கேள்விகள் உள்ளன. முதலில், மொழியாக்கத்தை பதிப்பித்து கொண்டு சேர்க்கும் “Process”. இரண்டாவது கட்டுரைகள் எழுதுவது, நேர்காணல்கள் செய்வது வழியாக தமிழ் இலக்கியத்தை ஆங்கில வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் செயல்பாடு. 

முதலில் மொழிபெயர்ப்பின் செயல்பாடு பற்றி. ஆங்கில மொழியாக்கத்தின் பெரிய சிக்கல் என்னவென்றால் நமக்கு வாசகன் யாரென்று தெரியாமல் இருப்பது. இங்கே தமிழில் ஒரு நூல் வெளிவந்தால் அதன் வாசகர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்ற ஊகம் நம்மிடம் இருக்கும் அல்லவா. அங்கே அது கிடையாது. அவன் எந்த ஊரைச் சார்ந்தவன், அவனின் உணர்வுகள், ரசனை எப்படிப்பட்டது என நம்மால் உணர முடியாது. அந்த அனாமதேய வாசகனை நோக்கிச் செல்வது தான் நம் சவால்.

ஆகவே ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தபின் நல்ல பதிப்பு கொண்டு வர வேண்டும். அனாமதேய வாசகனை ஈர்க்கும் வகையில் தலைப்பு, முகப்புப்படம், பின்னட்டை, மதிப்புரைகள் என்று அமைந்திருக்க வேண்டும். அந்த படைப்புக்குள் உள் நுழைய வாசகனுக்கு உதவும் வகையில் முன்னுரை இருக்க வேண்டும். வார்த்தைப்பட்டியல் இருக்கவேண்டும். பிறகு நூலைப்பற்றி கவனம் குவியும் வகையில் மீடியாவில் அது சில காலம் பேசப்பட வேண்டும். இதையெல்லாம் கவனமெடுத்துச் செய்யும் பதிப்பகம் அமைய வேண்டும். 

அப்படி ஒரு பதிப்பகத்தை நாம் அடைய ஏஜெண்ட் என்று ஒரு மனிதர் உதவுவார். இந்த ஏஜெண்ட் என்பவர் ஆசிரியர்/மொழிபெயர்ப்பாளருக்கும், பதிப்பகத்துக்கும், பொது இலக்கியச் சூழலுக்கும் இடையே ஒரு தொடர்பு மையமாக செயல்படுவார். சரியான பதிப்பாளரிடம் நம்மை கொண்டு சேர்ப்பார். நம் புத்தகத்தைப் பற்றிப் பேசி கவனத்தை உருவாக்குவார். 

ஆகவே இங்கே செயல்பாடு என்பது – ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், ஏஜெண்ட், பதிப்பாளர், விற்பனையாளர், வாசகர் என்று நீள்கிறது. அங்கே ஆசியரை வாசகர் நேரடியாக அணுகுவது குறைவு தான்.

இது ஆங்கிலச் சூழல் இன்று இருக்கும் விதம். தமிழில் ஒரு புத்தகத்தை பதிப்பிக்க நினைத்தால் நான் பதிப்பாளரை நேரடியாக அழைத்துப் பேசலாம். அங்கே அப்படி இல்லை. எல்லோரும் தங்களை அணுகமுடியாத இடத்தில் கொண்டு போய் வைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் ஒரு ஜும் உரையாடல் நடந்தால் கூட அங்கே மையப்பேச்சாளரிடம் நாம் நேரடியாக ஒரு கேள்வியை கேட்டுவிட முடியாது. மாடரேட்டர் வாயிலாகத்தான் செல்லும். அவர்களுடைய அழுத்தங்கள் அப்படிப்பட்டதாக இருக்கலாம் – நிறைய நச்சரிப்புகள் இருக்கலாம் – ஆனால் உண்மையான இலக்கிய உரையாடலை தடுக்கும் வகையில் தான் அது உள்ளது. எதற்கு சொல்கிறேன் என்றால் – ஒரு ‘பிராசஸ்’ இருப்பதே அரசாங்கத்தனமான விஷயம். அது ஒரு நிர்வாக யதார்த்தம். 

இந்த பிராசஸை வாசிக்கும் தமிழ் வாசகருக்கு ஒருவேளை ஒவ்வாமை ஏற்படலாம். ஆனால் வேறு வழியில்லை. இலக்கிய லட்சியங்கள் கொண்ட ஒருவர் இதை நம் ஆசிரியர்களை உரிய வகையில் அறிமுகப்படுத்தவும் லட்சிய வாசகர்களை அடையவும் ஒரு நல்வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம், அவ்வளவுதான். 

ஒரு மொழிபெயர்ப்பாளராக எனக்கு என்னை இந்த பிராசஸுக்குள் ஓர் அங்கமாக மட்டும் வைத்துக்கொள்ளும் எண்ணமில்லை. தொடர்ந்து எல்லா நிலையில் இருப்பவர்களிடமும் இலக்கியத்தை பற்றி சுதந்திரமாக பேசவே நினைக்கிறேன். இலக்கியவாதி என்பவர் வாசகர் எவராலும் அணுகக்கூடியவராகத்தான் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையை தமிழின் அறிவியக்கத்திலிருந்து பெற்றிருக்கிறேன். அந்த மதிப்பீடுகளை தொடர்ந்து ஆங்கிலத்திலும் முன்வைக்கவேண்டும் என்றும் அதன் படி செயல்பட வேண்டும் என்றும் நினைக்கிறேன். அதன் பகுதியாகத்தான்  ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதுவது நேர்காணல் செய்வது எல்லாம். அவை உரையாடலை உருவாக்கும் என்ற நம்பிக்கை.

சென்ற விஷ்ணுபுரம் விழா 2022-ல் கனிஷ்கா குப்தாவை விஷ்ணுபுர அமர்வு வழியாக அறிமுகம் செய்து கொண்டோம். ”Publishing  Agent” என்ற சொல்லே புதுமையாக இருந்தது. விளம்பரங்கள் வணிகம் சார்ந்து இயங்கும் இலக்கியத்துறை என்று பார்க்கும்போது முதலில் ஒவ்வாமை வந்தது. பின் நண்பர்களுடன் பேசும்போது கலையை செல்வத்தை அடையும் வாயிலாக பார்ப்பதிலுள்ள ஒரு மரபின் ஒவ்வாமை தான் அப்படித் தோன்றச் செய்கிறது எனப் புரிந்தது. ஆங்கிலச் சூழல் வணிகமாக்கப்பட்ட சூழலாகவும் விமர்சனங்களின்மையால் தரம் குறைபாடு நிகழ்வதாகவும் தோன்றுகிறது. தமிழிலும் வணிகப்புத்தகங்கள் இந்த முறையைப் பின்பற்றுவதைப் பார்த்திருக்கிறேன். ஒரு தீவிர இலக்கிய வாசகருக்கு/எழுத்தாளருக்கு இச்சூழல் தரும் அதிர்ச்சி உள்ளது. அப்படியிருக்க  நல்ல மொழிபெயர்ப்பு, நல்ல படைப்பு என்பதைக் கூட கூவி விற்கவேண்டியிருக்கும் இந்தச் சூழலை எப்படிப்பார்க்கிறீர்கள்.

உங்கள் ஒவ்வாமையும் ஐயமும் புரிகிறது. உங்கள் உணர்வுகளை ஓரளவுக்கு நானும் பகிர்ந்துகொள்கிறேன்.

ஆனால் ஒன்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இன்று நாம் அனைவருமே – உலகம் முழுக்க – கவனச்சிதறலால் பீடிக்கப்பட்டுள்ளோம். ஆகவே எல்லா கலைத்துறைகளிலும் ரசிகர்களை கவரவேண்டியுள்ளது. விளம்பரம் இன்றியமையாததாகிவிட்டது. தமிழிலும் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பை விட இப்போது புத்தகங்கள் அதிகம் விளம்பரம் செய்யப்படுகிறதே? 

பிறகு இது பழுத்த முதலாளித்துவ யுகம். எல்லோரும் பணமீட்டவும் பணம் செலவிடவும் ஊக்கப்படுத்தப் படுகிறார்கள். ஒரு சராசரி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவே முன்பை விட இந்நாட்களில் பன்மடங்கு உழைப்பைப் போட வேண்டியுள்ளது. ஆகவே அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் எழுத்தும் ஒரு வருவாய்த்துறையாக பரிணமித்துவிட்டது. இந்திய ஆங்கிலச் சூழலில் அந்த மாடலை நகலெடுக்கிறார்கள். 

இதில் சாதக பாதகங்கள் உண்டு. எழுத்தாளர்கள் புரவலர்களையோ வேறு அமைப்பையோ நம்பி செயல்படத் தேவையில்லை. பொருளாதாரச் சமநிலையை எழுத்தே பெற்றுத்தரும் நிலைமை உருவாகலாம். அதே சமயம் முதலாளித்துவச் சூழல் எழுத்தின் மீது ஓர் நிபந்தனையை வைக்கிறது. சந்தையில் வெல்லவே அனைவரும் எழுத ஆரம்பிக்கிறார்கள். இது நல்லதேயல்ல. 

இதற்கிடையில், மொழிபெயர்ப்பு வழியாகவோ சொந்த எழுத்தாகவோ, நாம் நம்பும் ஓர் அழகியலை, சிந்தனை முறையை முன்வைக்க வேண்டுமென்றால், வேறு வழியே இல்லை – இந்த விளம்பர வணிகம் சார்ந்த அமைப்பை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதைத் தவிர. இல்லையென்றால் நம் குரல் கவனிக்கப்படாமல் போகும் அபாயமே மிகுதி. நல்ல வாசகர்க் கோவை ஒன்று நம்மை நோக்கித் தேடி வரும் என்ற நம்பிக்கை மட்டுமே இதில் உருவாகும் சோர்வுகளை மீறி என்னைப்போன்றவர்களை செயல்பட வைக்கிறது.

நமக்கு முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் பசி கொண்டவர்களாக இருந்தார்கள். பாணர்கள் போல அலைந்து திரிந்து எழுதியவர்களாக இருந்திருக்கிறார்கள். இன்று புதிதாக எழுதவருபவர்களிடம் முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் முதலில் சொல்வது சோறு திண்ண ஏதுவான பொருளாதாரத்தை அடைந்தபின் எழுதினால் போதும் என்ற அறிவுரையைத்தான். புதிய தலைமுறை எழுத்தாளர்களைப் பார்த்தாலும் அவர்கள் ஏதாவது ஒருவகையில் மாத வருமானம் தரும் தொழிலில் இருந்து கொண்டு தான் எழுதுகிறார்கள் என்பதும் புரிகிறது. இந்த தமிழ்ச்சூழலுடன் ஆங்கிலச் சூழலை எப்படி ஒப்பிடுகிறீர்கள்? தமிழ்ச்சூழலில் இன்னும் பழைய மதிப்பீடுகள் செயல்படுவதாக நினைக்கீறீர்களா?

நான் கவனித்த வரை இளம் தமிழ் எழுத்தாளர்கள் ‘இன்னும் சற்று பொருளாதாரச் சமநிலை இருந்தால் மேலும் சிறப்பாக எழுதுவேனே’ என்று உணர்கிறார்கள். அதை முற்றாக புரிந்துகொள்கிறேன். இன்று இணையம் போல வாசிக்க எழுத உரையாட பல வசதிகள் வந்துவிட்டன. ஆனால் சாதாரணமாக அரசாங்கத்திலோ ஐடியிலோ வேலைப்பளு அதிகம். விலைவாசி எல்லாமே அதிகம். குடும்பத்திலும் பொருளாதாரம் சார்ந்த அழுத்தங்கள் மிகுந்துவிட்டன. எழுத்தாளருக்கு  எழுத மனவிரிவும் நேரமும் தனிமையும் வாய்ப்பதில்லை. பணம் ஓரளவுக்கு அதையெல்லாம் மீட்டிக்கொள்ள ஒரு வழி தான். 

ஆகவே முன்பு சொன்னது மாதிரி தனியார் அமைப்புகள் எழுத்தாளர்களுக்கு சிறு உதவித்தொகைகளை போட்டி அடிப்படையில் அளிக்க முன்வரலாம். அவை எழுத்தாளர்களுக்கு அங்கீகாரமாகவும் அமையும். குடும்பத்தின் முன்னே சமூகத்தின் முன்னே ‘எழுத்தாளனின் பணி மதிக்கப்படுகிறது’ என்ற செய்தியை அவை அழுத்தமாக முன்வைக்கின்றன.

 அதே சமயம் பணம் இருந்தால் தான் எழுதுவேன் செயல்படுவேன் என்ற சூழலும் இலக்கியத்திற்கு ஆபத்து. அந்த நிலைக்கு நாம் செல்லக் கூடாது. இந்த இரண்டு உலகங்களிலும் ஒரு சேர பயணிப்பவள் என்ற முறையில் சில நேரங்களில் எனக்கு சிரிப்பாக இருக்கும். தமிழில் வெண்முரசு போன்ற ஒரு நாவல் எழுத எழுத நேரடியாக வலையேற்றப்பட்டது. அதன் பல்லாயிரம் பக்கங்களை ஒவ்வொரு நாளும் இருவர் திருத்தி வெளிவந்தது. இதில் லாபநோக்கமென்பதே இல்லை. இலக்கியம் மட்டுமே லாபம். இதை ஆங்கிலத்தில் சொன்னால் வியக்கிறார்கள்.

நாம் அனைவருமே பிரசுரமாகாத கதைகளை வாசித்து நண்பர்களிடம் கருத்து சொல்கிறோம். இணைய சந்திப்புகளில் பேச்சாளர்களாக கலந்துகொள்கிறோம். நாவல்களை தொகுத்துக் கொடுக்கிறோம். ஆங்கிலச் சூழலில் இதையெல்லாம் செய்ய பணம் எதிர்பார்க்கிறார்கள். அல்லது அதற்கீடான பரோபகாரம். ஆம், நண்பர்களே என்றாலும். ‘ஒன்றை சிறப்பாக செய்தால் அதை பணம் வாங்காமல் செய்யாதே, உன் வித்தை மேல் உனக்கே மதிப்பில்லை என்று அது காட்டுகிறது’ என்பது தான் அங்கே தாரக மந்திரம். 

பார்க்க பார்க்க எனக்கு குழப்பமே எஞ்சுகிறது. அறுதியாக எதுவும் சொல்லத் தெரியவில்லை. இப்படிச்சொல்வேன் –  “பசி இருப்பவன் தான் நல்ல எழுத்தாளன்” போன்ற ரொமாண்டிசிசம்களை நாம் கடந்து வரலாம். அதே சமயம் எழுதவேண்டியதை எழுத சூழலை அமைத்துக்கொள்வதே எழுத்தாளரின் கடமை. சொகுசு நல்ல எழுத்தை குலைக்கிறதென்றால் சொகுசுக்கு பழகாமல் இருப்பதும் எழுத்தாளனின் கடமையே. அதை அவன் (அல்லது அவள்) தனக்குறிய வழிகளில் தேற வேண்டும். அதற்கு அமைப்புரீதியான உதவிகள் கௌரவங்கள் கிடக்குமானால் சிறப்பு.

சமீபத்தில் நீங்கள் Scroll.in -ல் திருக்குறள் மொழிபெயர்ப்பு பற்றி எழுதிய கட்டுரை முக்கியமானது. மொழிபெயர்ப்பு செய்யும் அதே நேரம் தமிழிலிருந்து சரியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதா என்ற பதற்றத்தை வெளிப்படுத்திய கட்டுரை அது. இது போன்றவைகளை இன்று உங்களால் அழுத்தமாக முன்வைக்க முடியும் இடத்திற்கு இந்த மொழிபெயர்ப்பு பணி உதவியுள்ளதாக எண்ணுகிறீர்களா?

என் கட்டுரையின் நோக்கம் எது “சரியான மொழிபெயர்ப்பு” என்று ஆராய்வது அல்ல. கவிதை மொழிபெயர்ப்பை அப்படி சரி, தவறு என்று பார்க்க முடியாது. மொழிபெயர்ப்பில் அது கவிதையாக நிலைபெறுகிறதா, அழகாக உள்ளதா என்றே நான் கேட்கிறேன். அவ்வாறு அல்லாத ஒரு மொழிபெயர்ப்பு பரவலாக கொண்டாடப்படும் போது அதை சுட்டிக்காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் அழகான படைப்பூக்கம் மிக்க மொழிபெயர்ப்பை முன்வைத்து ‘இதை வாசியுங்கள், இதில் கற்றுக்கொள்ள கொண்டாட மேலும் விஷயங்கள் உள்ளன’ என்று சொல்கிறேன். 

தாமஸ் ப்ருக்ஸ்மாவின் குறள் மொழியாக்கம் மிக்க அழகுடனும் கவனத்துடனும் செய்யப்பட்டுள்ளது. குறளின் அழகு அதன் குறைந்த வார்த்தைக்கட்டில் உள்ளது. economy, precision என்பார்கள். பிறகு ஓசைநயம். இரண்டையும் தாமஸ் அவர் மொழியாக்கத்தில் அடைந்திருக்கிறார். மீனா கந்தசாமியின் மொழியாக்கம் இந்த அம்சங்களை முற்றிலும் தவறவிடுகின்றன. தாமஸ் குறளின் பாடல்களின் அர்த்தத்தளத்தை விரித்து வாசிக்க முற்பட்டுள்ளார். குறளின் இயல்பான பறந்தமனப்பான்மை அவர் மொழியாக்கத்தில் ஆழமாக வெளிப்படுகிறது. ஆகவே மிக புத்துணர்வு மிக்க, நவீனமான ஒரு வாசிப்புக்கு வழிவகுக்கிறது. மீனா கந்தசாமியின் மொழியாக்கம் அரசியல் நோக்கோடு செய்யப்பட்டதென்றாலும் சில பழமைவாத க்ளீஷேகளுக்குள் மாட்டிக்கொள்கிறார். ஆகவே சில இடங்களில் அவர் முன்வைக்கும் பெரியாரிய-பெண்ணிய அரசியலுக்கு எதிரான தொனி வந்துவிடுகிறது. திராவட அரசியலின் நோக்கம் கொண்டவர்களால் திராவிட அழகியலை அவ்வளவு எளிதாக கைவிட முடியவில்லை என்பதை இது காட்டுகிறது. இதுதான் என் கட்டுரையின் சாராம்சம்.

இதை ஆங்கிலத்தில் சொல்வது வழியாக என் ரசனையை முன்வைத்து அங்கே ஒரு ரசனை மதிப்பீட்டை உருவாக்க முயற்சிக்கிறேன்.

சமீபத்தில் நீங்கள் ப்ரியம்வதாவுடன் இணைந்து தொடங்கிய மொழி” தளம் முக்கியமான முன்னெடுப்பு. மொழிபெயர்ப்புக்கான போட்டி வைத்து அவற்றை பிரசுரிக்கவும் ஏற்பாடு செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். அதன் எதிர்கால நோக்கம் என்ன? இன்னும் அதை எப்படி எடுத்துச் செல்லலாம் என்று நினைக்கிறீர்கள்?

வாழ்த்துக்களுக்கு நன்றி ரம்யா. இந்த நேர்காணல் முழுவதும் சொல்லி வரும் சிந்தனைகள் தான் இந்த தளத்தைத் தொடங்க பின்னணி காரணம். உலக அளவில் இந்திய இலக்கியம் என்றால் இந்திய ஆங்கில இலக்கியம் என்ற பிம்பம் உள்ளது. அதற்கு முதல் காரணம், இந்திய மொழி இலக்கியங்கள் ஆங்கிலத்தில் போதிய அளவுக்கு விவாதிக்கப்படுவதில்லை. அழகியல் நோக்கில் விமர்சிக்கப்படுவதில்லை. அந்தந்த மொழிக்கு ஓர் அறிவுத்தளம் உள்ளது, வளமான அறிவியக்கங்கள் உள்ளன. இவை மைய விவாதமாக வேண்டும். அந்த நோக்கத்திலேயே “மொழி” தொடங்கப்பட்டது.

“மொழி”யை நாங்கள் இந்திய மொழிகளுக்கிடையே ஒரு பாலமாக, ‘மொழிகளுக்கு இடையேயான ஒரு வெளி’யாக உருவகிக்கிறோம். நாங்கள் உத்தேசித்திருக்கும் செயல்பாடுகள் – வெவ்வேறு மொழிகளிலிருந்து கதைகள் கட்டுரைகள் விமர்சனங்களை  ஆங்கில மொழியாக்கத்தில் வெளியிடுவது, அவற்றைப்பற்றிய விவாதம் உண்டுபண்ணுவது; ஆங்கிலம் அல்லாமல், மற்ற இந்திய மொழிகளுக்கிடையில் மொழிபெயர்ப்புகளை வெளியிட ஒரு தளமாக அமைவது; இந்திய மொழி எழுத்தாளர்களை மொழிபெயர்ப்பாளர்களை கவனப்படுத்தி ஓர் உரையாடல் வெளியை உருவாக்குவது; இந்திய இலக்கியத்தை ரசனை அடிப்படையில் விமர்சனப்பூர்வமாக அணுகும் விமர்சனங்களை முன்வைப்பது; அடுத்தத் தலைமுறை மொழிபெயர்ப்பாளர்களை கண்டடைந்து அவர்கள் வெளிப்பட உதவுவது.

இது மிகவும் நீண்டகால தொடர்ச்செயல்பாடு வழியாக நிகழவேண்டிய ஒன்று என்பதை உணர்கிறோம். இப்போது தான் தொடங்கியிருக்கிறோம்.

இந்தச்செயல்பாடு இன்னும் தீவிரமடைவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

மொழிகளுக்கு இடையில் நின்று பேசக்கூடிய நல்ல திரளை நாம் உருவாக்க வேண்டும். நம் இலக்கியங்களை பற்றி தொடர்ந்து ஆங்கிலத்திலும் உரையாடும் ஒரு வாசலை நாம் திறந்து வைக்க வேண்டும்.அறிவுத்துறையிலிருக்கும் நாம் அந்த முனைப்போடு தான் செயல்பட வேண்டும். அது நம் கடமை. இன்று ஆங்கிலத்தில் தனி மனிதனின் ரசனை என்பதற்கு பதிலாக ஊடகவியலாளர்களால் வடிவமைக்கப்படும் பிம்பங்களே மலிந்து கிடக்கின்றன. இது மாற வேண்டும். ஓரளவு ஆங்கிலத்தில் எழுதும் திறமையுள்ளவர்கள் ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதி பிரசுரிக்கலாம். விவாதங்களை உருவாக்கலாம். இலக்கியக் குழுக்களை ஒருங்கிணைக்கலாம். விடுதலைக்கு முன் காந்தி, தாகூர் எழுதியவை மற்ற இந்திய மொழிகளுக்கெல்லாம் சென்றது. மிகத்தீவிரமாக பரப்பப்படுவதற்கு விடுதலை வேட்கை காரணமாக இருந்தது. இன்றைக்கு அந்தத் தீ இல்லை. அந்த அறிவுக் கலாச்சாரம் இல்லை. இதை மாற்ற நம்மளில் சிலர் முன் வர வேண்டும். இந்த வெளியை விரிவாக்க வேண்டும்.

பெண்களுக்கு கிரியேடிவிட்டி குறைவு என்பதால் அதிக எண்ணிக்கையில் மொழிபெயர்க்கிறார்கள் என்ற கருத்து உள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அது அவரவர் கருத்து. உலக அளவில் பெண்கள் தான் அதிக எண்ணிக்கையில் மொழியாக்கம் செய்கிறார்கள் என்பதே உண்மையா என்று எனக்குத் தெரியவில்லை.

ஆனால் இரண்டு விஷயம். ஒன்று, நல்ல புனைவு மொழியாக்கம் செய்ய மொழிசார்ந்த நுண்ணுணர்வும் படைப்புணர்ச்சியும் அவசியம். கூடவே, ஓர் அன்னிய கதைக்களனை தனதாக்கிக்கொண்டு அதை மீண்டும் நிகழ்த்திப்பார்க்க வேண்டும்  என்ற ஒருவித விடாப்பிடித்தனம். ஆண்களோ பெண்களோ நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இவ்விரு குணங்களும் கொண்டவர்கள். இவை இரண்டுமே creative impulses – படைப்பாக்க தூண்டுதல்கள் தான்.

ஒரு வேளை தமிழில் நிறைய பெண்கள் மொழியாக்கம் செய்கிறார்கள் என்பதை ஒட்டி உங்கள் கேள்வி வருகிறதா? அதை அவர்கள் இலக்கியத்தில் இருப்பதற்கான ஒரு வழியாக வைத்துக்கொள்கிறார்கள் என்று ஊகிக்கிறேன். இன்று நிறைய பெண்கள் காணொலிகளில் ரேடியோவில் கதை வாசிக்கிறார்கள். அவர்களுக்கு இலக்கியம் மேல் காதல் உள்ளது. ஆனால் ஒரு வலுவான படைப்பாளியாக உருவாக குடும்பச்சூழல் இல்லாத நிலையில் இருக்கிறார்கள். ஆகவே இப்படியெல்லாம் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்துகிறார்கள். இது ஒருவித சிதறுண்ட வெளிப்பாடு தான். ஆனால் ‘பெண்களுக்கு கிரியேட்டிவிட்டி குறைவு’ என்று இல்லை. அது ஒரு blanket statement, அதை எவரும் சொல்லலாம். கிரியேட்டிவிட்டியை குவித்து (focussed) வெளிப்படுத்த தமிழ்ப்பெண்களுக்கு வெளிகள் குறைவு என்பதே நிதர்சனம்.

எழுத்தாளர் சுசித்ரா

இறுதியாக… தமிழ்ச்சூழலில் நல்ல மொழிபெயர்ப்புகள் கொண்டு வர வேண்டிய பொறுப்பு யாரிடம் உள்ளதாக நினைக்கிறீர்கள்?

பதிப்பகங்கள் தான் நல்ல மொழிபெயர்ப்புகள் கொண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்ச் சூழலில் எடிட்டரின் பங்கு மிகவும் குறைவு அல்லவா? அது மாற வேண்டும். இந்த விஷயத்தில் ஆங்கிலச்சூழல் மேலும் சிறப்பாக செயல்படுகிறது என்று நினைக்கிறேன். தமிழில் வாசிக்கமுடியாத மொழிபெயர்ப்புகள் நிறைய வருவதைப் பார்க்கிறேன். அவற்றை தரம் மேம்படுத்தாமல் பிரசுரிக்க வேண்டாமே?  ஒரு பியர் ரிவ்யூ குழுவை வைத்தாவது இதைச் செய்யலாம்.

அடிப்படையில் ஓர் இலக்கியச் சமூகமாக நாம் மொழிபெயர்ப்பாளர்களின் படைப்பூக்கத்தை பங்களிப்பை உணர்ந்து அங்கீகரிக்கும் இடத்துக்கு வர வேண்டும். நல்ல மொழிபெயர்ப்பாளன் மொழியின் பண்பாட்டின் சொத்து.

(நிறைவு)

*

விண்ணினும் மண்ணினும் (தொடர்)

நீலி பத்திரிக்கையில் காலத்தில் உருவாகி வந்துள்ள பெண் எழுத்து வகைகளை பற்றிய என் கட்டுரைத்தொடர்.

  1. இணைக்கும் கயிறுகள்
  2. கடலாழத்து மொழி