பதின்பருவத்தின் ஒரு முதிராக் காதலின் நினைவு போல என் முதல் சிறுகதைத் தொகுப்பு எனக்குள் உள்ளது. பதின்பருவத்து காதலைப்பற்றி எண்ணும் போது அப்போதைய முதிர்ச்சியின்மையின் நினைவுகளால் உருவாகும் ‘கிரிஞ்ச்’ உணர்வை அடைந்தாலும் அந்நினைவுகளில் ஓர் உவகையும் இல்லாமல் இருக்காது. அதைப்போலத்தான் முதல் தொகுப்பும். இது நடந்திராமல் இருக்கலாம் என்று தோன்றுகிறது. சரி அதுதான் நடந்துவிட்டதே, போகட்டும் என்ன குறைந்துவிட்டது என்று அடுத்தக்கணமே தோன்றுகிறது. பிறகு அது நிகழ்ந்தபோது அனுபவமான இனிமைக்கணங்களை – இனிமைக்கணங்களை மட்டும் – ஒவ்வொன்றாக மெல்ல மெல்ல நினைவு தீண்டித் திறந்துப் பார்க்கிறது. உவகை, லஜ்ஜை, அசட்டுச்சிரிப்பு. முதல் தொகுப்பை பற்றி எண்ணும்போதெல்லாம் இந்த பரிதவிப்பும் பரவசமும் தான் மாறி மாறித் தோன்றுகின்றன. இன்று நீலி இதழில் என் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘ஒளி’யைப் பற்றி நண்பர் சக்திவேல் எழுதியிருக்கும் குறிப்பை வாசித்தபோது இவ்வுணர்வுகளை என் மனம் உருவகித்து வளர்த்த விதத்தை சற்று ஆச்சரியத்துடன் பின் தொடர முடிந்தது. சொல்லப்போனால் அதுவே ஓர் இனிமையான அனுபவமாக இருந்தது.
2013-ல் ஒரு வாசகராக நவீன தமிழ் இலக்கியச் சூழல் எனக்கு அறிமுகம் ஆனது. 2017-ல் ஒரு புதிய வாசகர் சந்திப்பில் ஜெயமோகனை சந்தித்த பிறகு தமிழில் கதைகள் எழுதத் தொடங்கினேன். ‘ஒளி’ தொகுப்பு 2019 இறுதியில் வெளியானது. அப்போது அத்தொகுப்பில் சில கதைகள் பேசப்பட்டன. ‘ஒளி’ என்ற கதை பரவலாக படிக்கப்பட்டது. ‘யாமத்தும் யானே உளேன்’ என்ற கதை அரூ இணைய இதழ் நடத்திய அறிவியல் சிறுகதை போட்டியில் பரிசு பெற்றது. ‘ஒளி’ தொகுப்புக்கு கவனம் கிடைத்தது. வாசகசாலை அமைப்பின் விருது ஒன்றிற்கு தேர்வானது.
ஆனால் முக்கியமான விமர்சனங்களும் வந்தன. கதைகளின் கலைக்குறைப்பாடுகள், போதாமைகள் சுட்டிக்காட்டப்பட்டன. ‘ஒளி’ சிறுகதை பலராலும் கொண்டாடப்பட்ட போது ஜெயமோகன் அதை விமர்சித்து வடிவக்குறைபாடுகளை உணர்த்தி ஒரு கடிதம் எழுதினார். கதை கட்டமைப்பின் அடிப்படைக் கூறுகளான வடிவக்கச்சிதம், காட்சிக்கோணம் போன்ற விஷயங்களில் நல்ல பிடியில்லாததை அப்போது தான் கண்டுகொண்டேன்.
அப்படிப்பட்ட தருணங்கள் அரிதானவை, அருமையானவை. ஏனென்றால் நம் அறியாமை நம் கண்ணுக்குத் தெரியாது. ஆனால் சரியான நேரத்தில் சரியான ஒரு சொல்லால் அது உணர்த்தப்பட்டப் பிறகு நம் உலகப்பார்வையே மாறிவிடுகிறது. அதன் பிறகு வாசிக்கும் அனைத்திலும் அந்த புதிய அறிவு திறந்துகொள்கிறது. அடையவேண்டியது என்ன என்பது தெளிவாகிறது.
‘ஒளி’ தொகுப்பு வெளியான பின் அதை முகாந்திரமாக வைத்து அப்படிப்பட்ட கற்றல் தருணங்கள் சில எனக்கு வாய்த்ததே அந்த நூல் எனக்குக் கொடுத்த ஆகப்பெரும் கொடை என்று சொல்வேன். அவை பெரும்பாலும் நேர் உரையாடல்களில், என் விடாப்பிடியான கோரிக்கையின் பெயரில் தான் நிகழ்ந்தன என்பதையும் இங்கே சொல்ல வேண்டும். யுவன் சந்திரசேகரை ஒரு முறை சந்தித்தது என் எழுத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று சொல்லச்சொல்லி கேட்டேன். ஒரு கதையை எடுத்து வரிக்கு வரி எப்படி செம்மை படுத்தலாம் என்று வகுப்பெடுத்தார். இந்த கற்றல்களுக்கெல்லாம் ஆசிரியர்களுக்கு நான் கடமைபட்டிருக்கிறேன்.
ஆனால் விமர்சனங்களை என்னத்தான் தன்னம்பிக்கையின் பெருத்த பாவனையோடு ‘பாறைநெஞ்சைத்’ தட்டி கேட்டு வாங்கி பெற்றுக்கொண்டாலும் அவை விமர்சனங்கள் என்பதாலேயே, நம்முடைய போதாமைகளையும் பலவீனங்களையும் நாம் மட்டுமே உள்ளூர அறிந்த சுய-சந்தேகங்களை நுண்மையாக தொடுகின்றன என்பதனாலேயே அவற்றை ஏதோ ஒரு விதத்தில் தவிர்க்கத்தான் மனம் பிரயத்தனப்படும். கலையை பொறுத்தவரை விமர்சகர் எவராயிருந்தாலும் சாராம்சத்தில் சொல்லும் கருத்து ஒன்று தான் – ‘படைப்பாளி மேலும் நுட்பமடையவேண்டும் – பண்படவேண்டும் – முதிரவேண்டும்‘. தான் முதிரவில்லை என்ற விமர்சனம் எந்த முதிரா இளைஞனுக்குள்ளும் உருவாக்கும் எரிச்சலை நாம் கற்பனை செய்து கொள்ளலாம்.
அதிலும் புனைவெழுத்தாளருக்கு மேலும் ஓர் சங்கடம் உள்ளது. புனைவெழுத்து என்பதே அகத்தை எழுதுவது தான். ஆனால் மறைத்து எழுதுவது. அந்த ஒளிவு-மறைவு விளையாட்டு எவ்வளவு கச்சிதமாக, அழகாக, வசீகரமாக ஆடப்படுகிறதோ அதுவே அதன் மதிப்பு. அதில் உள்ள ஓட்டைகள் சுட்டிக்காட்டப்படுவதற்கும் மற்ற தொழில்களில் அந்தந்த வித்தைசார் போதாமைகள் உணர்த்தப்படுவதற்கும் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது – புனைவெழுத்தாளன் மறைத்து வெளிப்படுத்த நினைப்பது தன்னைத் தான். ஆகவே அந்த வெளிப்பாடு சரியாக அமையவில்லை என்ற புரிதல் ஆடை நழுவுதலுக்கு சமானமான கூச்சத்தை உண்டாக்க வல்லது. ஆம், ஒரு முதிராக் காதலின் வெளிப்பாட்டில் என்னென்ன தன்மானப் பிரச்சனைகளையும் அவஸ்தைகளையும் மனம் கட்டமைத்துக்கொள்ளுமோ அத்தனையும் இதிலும் உள்ளது!
அந்த அவஸ்தையை நான் சமாளித்த விதமும் ஒரு முதிராக் காதலின் நினைவை முதிர்ச்சியற்ற இளையவர் கையாள்வதுப் போல் தான். அலமாரியின் கடைசி ‘டிராயரில்’ பழைய பாடப்புத்தகங்கள், பிரயோஜனமில்லாத சீ.டி. தட்டுகள், நண்பர்கள் பரிசளித்த நினைவேக்க வஸ்துக்கள், என்றாவது சுருணைத்துணியாக பயன்படுத்தலாம் என்று சேமித்துவைத்த ஓட்டிவிழுந்த காலுரைகள் என்ற கலவைக்குப் பின்னால் என்னிடம் இருந்த அந்த புத்தகத்தின் ஒரே ஒரு பிரதியை செருகி ‘டிராயரை’ அழுத்தி மூடி சாவியைத் திருப்பி சாவித்தொட்டிக்குள் போட்டுவிட்டேன். அதன் பிறகு என்னை பொறுத்தவரை அந்த புத்தகம் இல்லை. புத்தம்புதியதாக உணர்ந்து நெஞ்சை விரித்துக்கொண்டு என் படிப்பு மேஜைக்கு வந்தேன்.
அதன் பிறகு மீண்டும் பாலபாடத்திலிருந்து வாசித்தேன். ஏதேதோ அலைந்து கற்றுக்கொண்டேன். பயிற்சிகள். வீழ்ச்சிகள். எழுதிப்பார்த்தேன் – எழுதியவை பிரசுரிக்கத் தகுந்தவை அல்ல என்ற உடனடி அறிதலோடு. என்ன எழுத வேண்டும் – எப்படி எழுத வேண்டும் – எழுத முடியுமா என்ற தவிப்புகள். அந்த பழைய தொகுப்பை பற்றி நினைத்துக்கூட பார்ப்பதில்லை. யாராவது அதைப்பற்றிப் பேசினால் தொடர விரும்ப மாட்டேன். என் பிரியத்துக்குறிய தோழியும் வாசகியுமான இந்துமதி அவளுக்குப் பிடித்த ‘ஒளி’ சிறுகதையை என் பிறந்தநாள் அன்று அவள் நடத்தும் வானொலி நிகழ்ச்சியில் வாசித்தாள். அதன் ஒலி வடிவை எனக்கு அனுப்பி நான் கேட்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டாள் – அவள் கோரிக்கை எதுவானாலும் அது என்வரையில் ஆணை தான். ஆனால் அதை மட்டும் என்னால் நிறைவேற்ற முடியாமலானது. இரண்டு வரிகளுக்கு மேல் என் கூச்ச உணர்வைத் தாண்டி அதைக் கேட்க முடியவில்லை. அவளை தொலைப்பேசியில் அழைத்து அந்தக் கதையில் உள்ள வடிவக்கோளாறுகளை புள்ளிப்புள்ளியாக அடுக்கி அதை நல்ல கதை என்று மயங்காதே என்று கண்டிப்புடன் போதனை செய்தேன். எழுத்தாளரின் தோழி என்ற விதி அவளுக்கு, ஆகவே கேட்டுக்கொண்டாள். இன்று கேட்டால் அந்தத் தொகுப்பில் 70% கதைகளை அதன் வடிவக்குறைப்பாடு சார்ந்து disown செய்வதாகத்தான் சொல்வேன்.
ஆனால் நானே அவ்வப்போது அந்தக் கதைகளை நினைத்துக்கொள்வேன். சோர்வுறும்போது. மனம் இளகும் போது. ‘இதையெல்லாம் ஏன் செய்துகொண்டிருக்கிறோம்’ என்ற இருத்தலியல் எண்ணங்கள் மேலோங்கும் போது. அப்போது அந்தக் கதைகளை எழுதிய பொழுதுகளை நினைத்துப் பார்ப்பேன். எதுவானாலும், எழுதும் சமயத்தில், ஒளி சூழ, வானம் சூடி, மேகத்தில் அமர்ந்துகொண்டிருப்பது போன்ற உணர்வு ஒன்று உண்டு. அந்த போதைக்காகத்தான் எந்த படைப்பிலக்கியவாதியும் எழுதுகிறார் என்று நினைக்கிறேன். காதலின் போதை காதலரை காதலிக்கவைப்பது போல் எழுத்தின் போதை தான் எழுதவைக்கிறது.
சோர்வுறும்போது அப்படி எழுத்தின் போதையை உணர்ந்த பொழுதுகளை மட்டும் எண்ணிப்பார்ப்பேன். பெரும்பாலும் இயற்கை காட்சிகளை எழுதிய தருணங்கள். அந்த காட்சியை மீண்டும் பார்த்தபடி சிறிதுநேரம் அமர்ந்திருப்பேன். உதடு புன்னகைத்துக்கொண்டிருக்கும் – அதை எப்போதோ விழித்துக்கொள்ளும்போது உணர்வேன். மனதில் பரவியிருக்கும் இனிமையும் அப்போது புலனாகும்.
அப்போது வார்த்தை எனக்குள் இருக்காது. வார்த்தைக்கு முந்தையக் கணம் – ஒரு காட்சி – ஓர் உணர்வு – அது மட்டும் தான். அதைச் சொல்ல வேண்டுமென்ற தவிப்பு. அந்தத் தவிப்பு எல்லாமாக என் மேல் பொழிந்துகொண்டேயிருக்கும். சொல்லேயில்லாமல். அந்த தவிப்பையே மீட்டிக்கொண்டிருப்பேன். அவ்வப்போது அதிலிருந்து சொற்கள் மலரும். வேறு வேறு சொற்கள். எதுவும் நிற்காது. நிறைவுறாது. மீண்டும். மீண்டும். ஒரு முதிராக் காதலின் பித்தைச் சொல்ல என்ன சொல் இருக்கிறது இவ்வுலகில்? தவிப்பு மட்டும் தான் அல்லவா அது? சொல்லாக்கி நிறுத்தும்போது அது முதிர்ந்திருக்கும் அல்லவா?
சொல்லாக வேண்டும். சொற்சேகரமும் வடிவபோதமும் மொழியும் முடிவற்ற பயிற்சியும் எல்லாம் அதற்குத்தான். காதல் முதிர்ந்தால் தான் அதற்கு அழகு. பயன் கூடுவது. ஆனால் அதற்கு முதிரா இளமையின் சொல்லற்ற செயலற்ற குமிழிக் காதல் சிறிதளவாவது மனதில் முதற்கருவாக இருக்க வேண்டும் அல்லவா.
இன்று திரும்பிப் பார்க்கையில் என் எழுத்து வளர்ச்சியில் என் முதல் தொகுப்புக்கு இரண்டு முக்கியமான பங்குகள் உள்ளதாக சொல்வேன். ஒன்று, என் முதிரா தவிப்புகள் அதில் இருப்பதை நான் அடையாளம் காண்கிறேன். ‘எழுதிப்பார்த்த’ கதைகள் என்று சில அந்தத் தொகுப்பில் இருந்தாலும் என் உண்மையான தவிப்பு ஊடுறுவாத கதை ஒன்று கூட இல்லை. என்னை அறியாமலேயே என் ஆழத்தின் விதைகள் சிலவற்றை இந்த பக்கங்களில் பதிவாகியுள்ளன.
அது ஏன் துல்லியமாக தெரிகிறது என்றால் அந்த விதைகள் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் படைப்புகளில் வேறு வகைகளில், மேலும் வடிவச்செம்மையோடு வெளிப்படுவதை காண்கிறேன். இவ்வகையில் என் ஆழ்மனதின் ரகசிய ஊடுபாதைகளை அறிவதற்காகவே நான் படைப்பிலக்கியம் எழுதுகிறேன் – எழுதுவதில் எனக்கு இருக்கும் முதன்மையான களிப்பு இது. ஏனென்றால் என்னை நான் அறிவது தான் அது. அந்தத் தொடர்ச்சி எனக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதால் தான் நான் அசலான படைப்பாளி என்ற நம்பிக்கை வலுப்பட்டு இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
இரண்டு, அந்தத் தொகுப்பில் பல்வேறூவகையான கலைப்பிழைகளை ‘செய்துபார்த்து’விட்டேன். அதன் வழியாக அவற்றைப்பற்றிய தெளிவான போதத்தையும் அடைந்தேன். இது ஒரு கவசம். ஒரு வேளை வருங்காலத்தில் மேலும் பிழைகள் நிகழலாம், சொல்வதற்கில்லை. ஆனால் கலைக்கல்வியை பொறுத்தவரை, கலைக்கணங்களை கண்டுகொண்டே இருப்பதென்பது கணக்குகளையும் ஒழுங்குகளையும் மனதில் தொடர்ச்சியாக நம்மையே அறியாமல் ஏற்றிக்கொள்வது தான். அது எனக்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். அந்த பயிற்சி துணை நிற்க வேண்டும் என்று கைக்கூப்பி வணங்கி வெற்றுப்பக்கத்தை தொடுவது மட்டும் தான் ஓர் இளம் எழுத்தாளருக்குச் செய்யக் கடவது.
கலைக்கான தவிப்பும் காதலுக்கான தவிப்பும் ‘தவிப்பு’ என்ற புள்ளியில் ஒன்றாவதாக – அல்லது அவை இரண்டும் அந்த ஒற்றிப்புள்ளியிலிருந்து உதிப்பதாக – உணர்கிறேன். ஆனால் ஒரு முக்கியமான இடத்தில் அவை இரண்டும் வேறுபடுகின்றன. காதலில் முதிர்ச்சியின்மைக்கு ஓர் இடம் உள்ளது. ஒரு வயதில் அது அழகான விஷயமும் கூட. ஆனால் கலையில் முதிர்ச்சியின்மைக்கான இடமே இல்லை. முதிராக் காதலில் தொட்டவுடன் மறையும் வண்ணம் போல் ஓர் அழகு உண்டு. நல்ல கலையிலும் அப்படிப்பட்ட அழகு வெளிப்பகிறது. ஆனால் அந்த அழகு அமைய கலை தன்னுடைய கண்ணுக்குத் தெரியாத கட்டுமானத்தில் – அதன் எண்ணத்தில், வடிவத்தில் – கச்சிதமாக இருக்க வேண்டும். அதுவே கலையின் முதிர்ச்சி. அந்த முதிர்ச்சியின் துலங்கலே கலையில் அழகாக வெளிப்படுகிறது. முதிர்ச்சியற்ற கலை கலையே அல்ல. ஆகவே கலைக்கல்வி மொத்தமும் முதிர்ச்சியடைவதைத்தான் தன் இலக்காகக் கொண்டுள்ளது.
அப்படியென்றால் முதிரா உணர்வுகளுக்கு கலையில் ஏதாவது இடம் உள்ளதா?
அவ்வுணர்வுகள் படைப்பாளியின் மனதில் ஆதியில் தோன்றிய சலனம் என்பது தான் அதன் இடம். அதுவே முதற்காதல். அதை வெளிப்படுத்தவே படைப்பாளியை வேகம் கொண்டு எழுதுகிறார். முதல் தொகுப்பை வெளியிடுகிறார். பிறகு எழுதிக்கொண்டே இருக்கிறார்.
அவ்வுணர்வுகள் பண்பற்றவை. ஆனால் உண்மையானவை. முதிராதவை. முதிர்ச்சி இல்லாததால் அவற்றுக்கு வயோதிகம் இல்லை, சாவும் இல்லை. கலையில் அமரப்பகுதியாக இருப்பதெல்லாம் அது தான்.
*