சிறுகதை: மதுரம்

[நன்றி: அகழ்]

“தேனுன்னா?” ராதிகாவின் கண்கள் விரிந்தன.

“தேனுன்னா தேன், இனிப்பா” என்றார் பெரியம்மா.

மலர்களில் ஊரும் தேனை மட்டுமே உண்டு பட்டாம்பூச்சிகள் உயிர்வாழ்கின்றன என்ற தகவல் ராதிகாவுக்கு அன்று தான் தெரியவந்திருந்தது. நான்கு வயதான அவளுக்கு பட்டாம்பூச்சிகளை தெரியும். மலர்களையும் தெரியும். ஆனால் அவற்றுக்கிடையே தேன் என்ற கண்ணுக்குத்தெரியாத பொருள் ஊடாடியது அப்போது தான் தெரிந்தது. அன்று பெரியம்மாவின் நந்தவனத்தில் மலர்களையும் பட்டாம்பூச்சிகளையும் பார்த்தபோது அவற்றுக்கிடையே தங்க ரிப்பன் இழைகள் போல தேன் பறந்ததாக அவளுக்குத் தோன்றியது. அந்த நினைப்பு அவளை நிலைகொள்ளாமல் செய்தது. உலகமே தங்க இழைகளால் ஆனதாகத் தோன்றியது. எல்லாவற்றின் மீதும் டிசம்பர் மாதத்தின் இளம் மஞ்சள் வெயில் இதமான வெதுவெதுப்போடு படிந்திருந்தது. அவ்வெளிச்சத்தில் பூக்களும் சிறு பூச்சிகளும் ரத்தினக்கல் போல மெருகோடு ஒளிகொண்டிருந்தன.

அன்று முழுவதும் ராதிகாவுக்கு உள்ளுக்குள்ளே தேன் தேன் என்றது. அவள் பெரியம்மாவின் பூஜையறைக்குள் எட்டிப்பார்த்தாள். அங்கே எப்போதும் போல காமாட்சி விளக்கு முன்னால் நைவேத்தியத்துக்கு தயாராக பூவன்பழமும் தாழம்பூவும் வைக்கப்பட்டிருந்தது. பக்கத்திலேயே சின்ன பித்தளைச்சிமிழில் பொட்டுத் தோடு போல தேன். அந்த குளுமையான அறையில் அது சிவந்த பொன்நிறத்தில் உருண்டு மின்னியது. பெரியம்மா அருகில் இல்லையே என்று உறுதிசெய்துவிட்டு சுண்டுவிரல் நுணியால் அதன் ஒரே ஒரு துளியை தொட்டு நாவில் வைத்தாள். தித்திப்பில் கண்களை மூடி உப்பு ஊறுவது வரை நாவையும் உதட்டையும் சுவைத்தாள். கண்களை திறந்தபொது எதிரே அம்பாள் அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள். பயத்தில் சுட்டுவிரலை திருப்பி “இவ்ளூண்டுதான்” என்பதுபோல் அவளிடம் காட்டிவிட்டு ராதிகா திரும்பி வேகமாக வெளியில் மஞ்சள் வெளிச்சத்துக்குள் ஓடினாள். அவள் விரல் நுனியில் இன்னும் தேனின் பிசுபிசுப்பு எஞ்சியிருந்தது.

சட்டென்று அவளுக்கு அந்த தோட்டத்துடன் மிக அணுக்கமானது போல் இருந்தது. மலரில் தயங்கித் தொற்றி நீலவண்ண இறகுகளை ஒருமுறை கைவிரிப்பதுபோல் திறந்து மூடிய பட்டாம்பூச்சியை பார்த்தபோது அதைச்சென்று உடனே தொடவேண்டும் என்று இருந்தது. பயப்படாதே, நான்தான், என்று அணுகி சொல்லவேண்டும் என்று தோன்றியது. ஆனால் அது பயந்துவிடும் என்ற உள்ளுணர்வோடு அவள் மிகுந்த ஜாக்கிரதையுடன் கண்ணுக்கு புலனாகாத, உடலால் உணரமட்டுமே முடிந்த அந்த எல்லையை கடக்காமல் நின்றாள். பட்டாம்பூச்சியின் கால்கள் கண்ணுக்குத்தெரியாத தாளத்திற்கு நிற்கமுடியாமல் ஆடிக்கொண்டிருந்தன. அதன் மிருதுவான உணர்கொம்புகள் வளைந்து எழுந்து “எனக்குத்தா! எனக்குத்தா!” என்று குழந்தை போல ஆவேசத்துடன் எதையோ கேட்டன. அதன் உறிஞ்சும் குழல் மெல்ல சுருளவிழ்ந்து மலருக்குள் நுழைந்தது. மகரந்தத்தை கண்டுகொண்டு அதை கண நேரம் தொட்டு மீண்ட நொடியில் அவள் பார்வையை உணர்ந்தது போல் சிறகடித்து எழுந்தது. அது பறந்துசென்ற திசையை நோக்கி ராதிகா மெல்லிய பிசுபிசுப்புடன் பொற்படலம் படர்ந்த தன் விரலைத் தூக்கிக் காட்டினாள்.

அம்மா அவளை கூட்டிப்போக வந்தபோது அவள் மனது முழுவதும் தேனின் நினைப்பால் நிறம்பியிருந்தது. அந்த பரவசத்தை யாரிடமும் அவளால் சொல்ல முடியவில்லை. ரிக்ஷாவில் போகும்போது மாலையின் எதிர்வெளிச்சத்தில் அம்மாவின் முகம் எப்போதையும் விட அழகாக, பொன் பூத்ததுபோல் மேலும் பொலிவாக இருந்ததாக அவளுக்குத் தோன்றியது. அம்மா எப்போதும் அம்மா செய்வதைப்போல அவளை “ராதுக்குட்டி!” என்று நெருக்கி அவள் சிறு விரல்களில் முத்தமிட்டுக் கொஞ்சினாள். ஆனால் ராதிகாவுக்கு அம்மா சட்டென்று தூரமாக போய்விட்டதாகத் தோன்றியது. மிக உயரமாக இடத்துக்கு, தொடமுடியாத இடத்துக்கு, சூரியன் மாதிரி, நிலா மாதிரி. அம்மாவுக்குத்தான் எல்லாம் தெரியும், தனக்கு ஒன்றுமே தெரியாது, என்பது போல். அல்லது தனக்குத்தான் எல்லாம் தெரியும், அம்மாவுக்கு ஒன்றுமே தெரியாது என்பதுபோல். அம்மாவின் அணைப்பில் ஒடுங்கிக்கொண்டு அவள் “அம்மா, தேன்னா என்னம்மா?” என்றாள். “தேன்னா தேன் தான்.” அம்மாவும் அதையே சொன்னாள். சற்று நேரம் யோசித்து “Honey,” என்றாள்.

“ஹ – ன் -னி,” ராதிகா உச்சரித்தாள். ஹா…! விஸ்மயத்தோடு எழுந்து உயர பறந்தது. ரீங்கரித்தது. பிறகு நாவில் திரண்டு அமர்ந்தது. ஒரு சொட்டு. ஒரே ஒரு சொட்டு. அது மட்டும். அவள் அம்மாவை திரும்பி ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

“ஹன்னின்னா?”

“Honey-ன்னா அம்ரிதம்.”

“அமிழ்தம்ன்னா?”

“மருந்து மாதிரி ஒண்ணு. பாற்கடலைக் கடஞ்சு எடுத்த கதையில வருமே?”

“கடல் நிறைய்யவா…?”

வீட்டுக்குப் போனதும் அம்மா ஒரு சிவப்பு நிற மூடி போட்ட பெரிய பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துக் காட்டினாள். அதில் தேனி படமும் தேனடை படமும் போட்டிருந்தது. அதை பார்க்க கொஞ்சம் பயமாக இருந்தது. அதைத் திருப்பித் திருப்பி அதிலிருந்த சிவந்த திரவம் கனமாக திரண்டு சுழல்வதை மௌனமாக பார்த்தாள். கடற்கரையில் அலைகள் மெதுவாக புரண்டு எழுந்த கடலை அது அவளுக்கு நினைவு படுத்தியது.

ராதிகா வீட்டுக்கும் பால்கனிக்கும் மாறிமாறி உலாவிக்கொண்டிருந்தாள். பகலின் பொன்மஞ்சள் மங்கி மாலையொளி சிவப்பேறி அணைந்துகொண்டிருந்தது. அந்த நிறமடர்ந்த வெளிச்சத்தில் அவள் ஒரு பட்டாம்பூச்சியைப் பார்த்தாள். ராதிகாவின் வீடு அபார்ட்மெண்டின் மூன்றாம் மாடியில் இருந்தது. பெரியம்மாவின் வீட்டைப்போல விஸ்தாரமான பெரிய தோட்டத்துக்கான இடம் இல்லை. ஆனால் பால்கனியில் அம்மா ஆசைக்கு நான்கைந்து பூந்தொட்டிகளில் பவளமல்லி, செம்பருத்தி, நந்தியாவட்டை என்று நட்டு வைத்திருந்தாள். பட்டாம்பூச்சி அங்கே தான் வந்திருந்தது. மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் சிறிய உருவம். அது அந்த செடிகளில் நான்கைந்து மலர்களின் மேல் தாவித்தாவி அமர்ந்துகொண்டிருந்தது. ஒரு மலர் மேல் ஊன்றி, அதில் தேன் இல்லை என்ற ஏமாற்றத்துடன் சிறகடித்து இன்னொரு பூவில் சென்று அமர்ந்தது. அவள் பார்த்துக்கொண்டே இருந்தாள். பால்கணியின் அகலமான வெள்ளைக் கம்பிகளை தாண்டித் பறந்து மீண்டும் சுழன்று உள்ளே வந்ததே தவிர, வெளியே எங்கேயும் போகவில்லை. வழியெல்லாம் மூடிவிட்டது போல் அந்த நான்கு பூக்களை மட்டும் அது மாறி மாறி நிறைவில்லாத சுழற்சியில் வட்டமடித்துக்கொண்டிருந்தது.

ராதிகா உள்ளே சென்றாள். அலமாரியில் இருந்த பழைய முறுக்கு பாக்கெட் ஒன்றை எடுத்து அகலத் திறந்து அதில் இருந்த மிச்சத்தை வெளியே கொட்டி குழாயில் காட்டி நன்றாக கழுவினாள். ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு ஏறி ஃப்ரிட்ஜின் மேல் இருந்த சிவப்பு மூடி போட்ட டப்பாவை எடுத்துத் திறந்தாள். மிகுந்த கவனத்துடன் ஒரு துளி கூட வீணாகாமல் பிளாஸ்டிக் பை கொள்ளும் வரை தேனால் நிறைத்தாள். கையில் தேன் பையை ஜாக்கிரதையாக பிடித்தபடி மீண்டும் வெளியே வந்தாள். பாதை வகுக்கப்பட்ட கோள் போல சுற்றிக்கொண்டிருந்த பட்டாம்பூச்சி ஒரு மலர் மீது அமர்ந்ததும் மறு கையால் அதை இலாகவமாக பிடித்தாள். அது இரு முறை துடித்து. பிறகு அவள் தொடுகைக்கு பழக்கப்பட்டதுபோல் அடங்கி அமைதியானது.

“ஷ்ஷ்… என் செல்லக்குட்டில்ல? பசிக்குதா? தேன் கொண்டு வந்திருக்கேன் பார் உனக்கு…” என்று மெல்ல பிளாஸ்டிக் பையில் இருந்த தேனின் மேல் அந்த சிறு உயிரை வைத்தாள்.

பட்டாம்பூச்சியின் சிறகுகள் வண்ணமயமான மலரைப்போல் இருக்கும்போது அதன் உடல் அச்சு அசலான ஒரு பூச்சியின் உடல் என்பதை அவள் அப்போது துல்லியமாகக் கண்டாள். அதன் ஆறு கால்கள் துடுப்புகளைப்போல் தேனுக்குள் அடித்துக்கொண்டன. அதன் மெல்லிய உணர்கொம்புகள் தேனுக்குள் விழுந்து அசைவை இழந்து கனத்துத் தொங்கின. உருண்ட தலை வெடுக் வெடுக்கென்று இருமுறை தூக்கியது. மெரினா கடலில் ஒரு முறை தூரத்தில் பார்த்த ஒரு கட்டுமரப்படகு ராதிகாவுக்கு நினைவு வந்தது. அது தன்னந்தனியாக கடலில் நீந்துவது போல் அப்போது தோன்றியது அவளுக்கு. எவ்வளவு தனியாக! ஆனால் இங்கே நான் இருக்கிறேனே? “குடி,” என்று அதை உந்தினாள். அதனால் சரியாக பருக முடியவில்லை என்று எண்ணி அதன் முன் பகுதியை சற்று முக்கினாள் தேனினுள். சிறகுகள் விரல்களுக்கிடையே படபடபடவென்று அடித்துக்கொண்டன. விரல்களை மீறித் திமிரின. அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் அறியாத ஒரு நொடியில் கைவிடுப் பட்டது. பட்டாம்பூச்சி தேனுக்குள் முங்கிச் செல்வதை தடுக்கமுடியாமல் பார்த்தாள். சிறகடித்தது – ஒரு முறை – இரண்டு முறை. பிறகு தேன் எழுந்து அதைச் சுற்றி சிவந்த பொன்னிறமாக அதை மெல்ல விழுங்குவது போல மூடியது. தேனின் கனமான திரவ திரட்சிக்குள் பட்டாம்பூச்சி மூழ்கி மூழ்கிச் செல்வதை ராதிகா கண்ணாடி போன்ற பிளாஸ்டிக் தாள் வழியாக பார்த்துக்கொண்டிருந்தாள். சதை போல தேன் அதை உள்ளிழுத்துக்கொண்டது. அது அமிழ்ந்து சென்று கடலாழத்து அடிமணலில் என நிலைத்தது. அசைவே இல்லை.

வா சாப்பிடு, என்று அம்மா கூப்பிடும் வரை ராதிகா அந்த அசைவின்மையையே பார்த்துக்கொண்டிருந்தாள். அம்மாவின் குரல் அவளை மின்சாரம் போல் உலுக்கியது. புதிதாக பார்ப்பது போல் அந்த அசைவின்மை அவள் புலனின் உறைத்தது. அவள் விறுவிறுவென்று பால்கணி குழாயடியில் சென்று பிளாஸ்டிக் பாக்கெட்டில் இருந்த தேனையெல்லாம் கொட்டினாள். மெல்ல ஒழுகி வடிந்த தேன் வந்துகொண்டே இருந்ததாகத் தோன்றியது அவளுக்கு. அந்த ஒழுகல் நிற்கவே நிற்காது என்பதுபோல். கொழகொழவென்று தண்ணீருடன் கலந்து சல்லடைக்குள் புகுந்து மறைந்தது. கடைசி துளிகளையும் வடித்தப்பின் உள்ளே மென்பச்சை நிறத்தில் பட்டாம்பூச்சி மட்டும் எஞ்சியிருந்தது.

ஆள்காட்டிவிரலையும் கட்டை விரலையும் உள்ளே விட்டு ராதிகா அதை மெல்ல பிடித்து வெளியே எடுத்தாள். அதன் உடல் முழுவதும் தேனின் பிசிபிசுப்போடு இருந்தது. விரல்களுக்கடியில் முன்பு உணர்ந்த துடிப்பேதும் இல்லை. ராதிகா அதை உள்ளங்கையில் வைத்து மெல்ல சுட்டு விரலால் தொட்டு நகர்த்தினாள். அவளால் அதை நகர்த்த முடிந்தது. ஆனால் அது, அசையவேயில்லை. அதன் உணர்கொம்புகள் கீழ்பக்கமாக வளைந்து அசைவில்லாமல் கிடந்தன.

அவள் திடீரென்று அது தன் கையில் இருந்ததை பயந்தாள். அருவருப்பான ஏதோ வஸ்துவதை கைத்தவறுதலாக தொட்டதுவிட்டதுபோல் விரல்களை உதறினாள். அது பறந்து சென்று ஒரு பூந்தொட்டிக்குள் மண் மீது விழுந்தது. கிளை அருகே கிடந்த அந்த சிற்றுடலை சிறிது நேரம் பார்த்துக்கொண்டு நின்றாள். இறகுகள் தேனின் மெருகோடு அந்தி வெளிச்சத்திலும் பளீர் என்று மணிக்கல்லின் நிறம் கொண்டு ஒளிர்ந்தது. தேனெல்லாம் அதன் ஓருடலின் சிறிய பச்சை முக்கோணத்தில் திரண்டு செறிந்ததுபோல். அத்தனை அழகாக, துளி கூட அசைவில்லாமல்.

அன்று மாலை முழுவதும் ராதிகா மீண்டும் மீண்டும் பால்கனிக்குச் சென்று நின்றுகொண்டிருந்தாள். தெளிவான ராத்திரி. நட்சத்திரங்களின் ஒளியில் வானமே மெல்லிய ஊதா நிற வெளிச்சத்தை பொழிவது போல் இருந்தது. கடற்காற்றின் உப்புவாசம் சிறிய அலைகளென அவ்வப்போது உணர்வில் வந்து சேர்ந்தது. சங்குபுஷ்பத்தின் இறுக்கி முறுக்கிய மொட்டுக்கள் கொடிமீது ஒளிச்செறிந்த நீலமணிகளைப்போல் ஆயுத்தமாயிருந்தன, ஒரு சிறு தொடுகையில் இதழவிழ்ந்து நிறமெல்லாம் சிந்தி மலர்ந்துவிடும் என்பதுபோல். முல்லை அரும்புகள் காற்றின் சிறிய அசைவுக்கும் சிலிர்த்தன. பவளமல்லிச் செடியில் மலர்க்காம்புகள் ஆரஞ்சு நிறத்தில் மேதமையின் திகழ்வோடு எழுந்து நின்றன. அதன் முனையில் வெண்முகைகள் கொழுத்திருந்தன. அதனடியில் கிடந்த அசைவற்ற பச்சைநிற முக்கோணத்தை ராதிகா பார்த்துக்கொண்டு நின்றாள்.

அது செடியிலிருந்து மண்ணில் விழுந்த இலை போலத்தான் இருந்தது. இரவில் அதன் பச்சை நிற மேற்பரப்பு பொன்னின் ஒளி கொண்டிருந்தது. அது அசையவே இல்லை. அதன் மேல் வலைப்பின்னல் போல கொப்பளித்தபடி இன்னொன்று பரவியிருந்தது. சற்றே ஆழமான தங்க நிறத்தில். சிறிய எறும்புகள். நெளிகோலம் போல அவை அந்த ஒளிரும் பச்சைப்பரப்பின் மீது வழிந்தோடின. ஒழுகிக்கொண்டே இருந்தன, மண்ணிலிருந்து மண்ணுக்கு. ராதிகா அதன் சிறிய கொழுத்த வயிறுகளை கண்டாள். ஒவ்வொன்றும் குன்றுமணியென ஒளிகொண்டிருந்தன, சரியாக ஒரு துளி அமுதை உட்கொண்டது போல.

இரவு தூங்கப்போக அம்மா சொல்ல கடைசியாக ஒரேஒருமுறை வெளியே சென்றபோது தான் ராதிகா அதைக் கண்டாள். அந்த முக்கோணம் சிறிதாகியிருந்தது. அடிப்பாகத்தில் புடவையின் சரிகை ஓரமென அகலமாக அமைந்திருந்த பகுதி இப்போது இல்லை. ஒருவேளை பெருகிக்கொண்டிருந்த எறும்புக்கூட்டத்துக்கு அடியில் மறைந்திருந்ததா? ராதிகா அருகே குனிந்து உற்றுப்பார்த்தாள். அம்மாவின் பழைய புத்தகம் ஒன்றில் தாள்களுக்கிடையே வெகுகாலம் கிடந்து லேஸ் போல ஆகியிருந்த அரசமர இலை அவள் நினைவுக்கு வந்தது. சணல் நிறத்தில் மெல்லிய வலையென தெரிந்தது அங்கே முன்பிருந்ததன் சுவடா? அல்லது அந்த வலையை உருவாக்கியதே எறும்புகள் தானா? பொடிக்கோலத்தின் கலைந்த வண்ணங்கள் மாதிரி, சிந்திய மகரந்தம் மாதிரி சிதறிப்பரவிய சிற்றெறும்புகள்… ராதிகாவுக்குத் தெரியவில்லை. ஒரு மிகத்தேர்ந்த கைவேலைக்காரனின் திறனிலிருந்து உருவாகி வந்துகொண்டிருந்த சல்லாத்துணி போலத் தெரிந்தது அந்தக் காட்சி. ஆனால் முக்கோணத்தில் எஞ்சிய பகுதி, மாறாத பொன்மஞ்சள் ஒளியுடன், பச்சைக்கல் பதித்த கிரீடம் போல் அதன் மேல் கூர்ந்து இருந்தது. அதன் உச்சியில் ஒரு கண்ணும், ஓர் உணர்கொம்பும் அந்த வண்ண ஒளிர்வை பட்டாம்பூச்சி என்று அடையாளப்படுத்தியது. அது மிகப்பொருமையாக, மிகுந்த கண்ணியத்துடன் காத்திருப்பது போல் ராதிகாவுக்குத் தோன்றியது.

அன்றிரவு ராதிகாவின் கனவில் எறும்புகள் வந்தன. அவை ஏறி வர வர அவள் கால்கள் ஒவ்வொன்றும் இல்லாமல் ஆகிப்போவதை அவள் மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தாள். அது அவளுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. அவள் கைவிரல்கள் ஒவ்வொன்றாக மறைந்து போயின. உள்ளங்கைகளும் மெலிந்த கரங்களும் கைமுட்டிகளும் மேல்கைகளும் தோள்களும் மறைந்தன. எறும்புகள் அவள் நெஞ்சில் ஏறிக் குழுமிய போது அவற்றின் வயிறுகள் கொழுத்திருந்ததையும் அவை பொன்னால் நிறைந்திருந்தன என்பதையும் கண்டாள்.

விழித்தபோது தன்னிலிருந்து முளைத்திருந்த உடலுக்குள் ராதிகாவால் இயல்பாக இறங்கிக்கொள்ள முடிந்தது. ஓசையில்லாமல் கால்வைத்து பால்கனிக்கு சென்றாள்.

காலை ஒளி பனிக்காற்று வழியாக வடிந்துகொண்டிருந்தது. அழகான மஞ்சள் நிற வெளிச்சம். தேன் போன்ற வெளிச்சம். அது ஒவ்வொன்றையும் தொட்டெழுப்பியது. அந்த வெளிச்சத்தில் இலைகள் அடர்பச்சையாக தெரிந்தன. தளிர்கள் ஒளியை வாங்கி ஒழுகவிட்டன. பிறகு வெளிச்சம் ஏற ஒவ்வொன்றும் பச்சையின் பல்வேறு பேதங்களை வெளிக்காட்டின. மலர்கள் ஒவ்வொன்றிலும் அதனதன் வண்ணத்தின் ஆழம் முழுவதுமாக வெளிப்பட்டது. ராதிகா பவளமல்லிச் செடியைப் பார்த்தாள். அடியில் மண் ரத்தசிவப்பில், மெழுகித்துடைத்த வாசல் போல, சீராக, புத்தம்புதியதாக இருந்தது. இலேசான ஈரப்பதமென, ஒரு நிறபேதம். மற்றபடி அசைவுகளே இல்லை. தழல்நிறத்தில் காம்புகளுடன் இரண்டு பூக்கள் மட்டும் அதன் மேல் உதிர்ந்து கிடந்தன.

ராதிகா அதை நெடுநேரம் நோக்கிகொண்டிருந்தாள். பிறகு இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு, ஓடி அருகே குனிந்து, சுண்டுவிரல் நுணியால் மண்ணின் ஒரே ஒரு துளியை மட்டும் தொட்டு நாவின் மேல் வைத்துச் சுவைத்தாள்.

000

ரோம், கிரேக்கம், உலகம் — ஒரு விவாதம்

[நன்றி: ஜெயமோகன்.இன் தளம்]

அன்புள்ள ஜெ,

ரோம் பயணம் முடிந்தது. மீண்டுக்கொண்டிருக்கிறேன். மிக அரிய கண்டடைதல்கள் சிலவற்றை இந்தப் பயணம் வழியாக அடைந்தேன் என்று சொல்லத் துணிவேன். அதை என்னவென்று ஒரு கடிதத்தில்  சொல்லமுடியுமா தெரியவில்லை. தீவிரம் பற்றிக்கொண்டு  எழுதிக்கொண்டிருக்கிறேன். விரிவாகவே பதிவுகள் வருகின்றன. காலம், வரலாறு, கலை, தெய்வீகம்… எழுத எழுத அந்த ஏழு நாள் கனவிலிருந்து நானே விரவி விரவி எழுந்து வளர்வது போன்ற உணர்வை அடைகிறேன்.

*

இந்தப் பயணத்தில் என்னை மிகவும் சலனத்துக்குறுவாக்கிய ஒரு விவாதம் நடந்தது. பழைய கிரேக்க பாணி ரொமானிய பளிங்கு சிற்பங்களையும் அதன் தாக்கத்தின் உருவான ராஃபேல்  மைக்கலாஞ்செலோ உள்ளிட்டோரின் கலை பெருக்குகளையும் நேரில் தரிசிப்பதென்பது என் நெடுநாள் கனவுகளில் ஒன்று. பல இடங்களில் நின்று காலம் இடம் மறந்து கண்ணீர் மல்கினேன். அந்த உணர்வெழுச்சியின் தாக்கத்தை எனக்குள் ஆறாத் தீவிரத்துடன் சுமந்துகொண்டிருந்த வேளையில் ஒரு பழைய நண்பனை சந்திக்க நேர்ந்தது.

அமெரிக்காவில் என் அறிவியல் நாட்களில் அறிமுகமானவன். அவனும் இந்தியன். இப்போது ரோமின் புறநகரில் ஓர் ஆய்வகத்தில் பணியில் இருக்கிறான். அவனுக்கு சிந்தனையில் ஆர்வம் உண்டு. பௌத்தத்தின் சில பகுதிகளை முறையாக படித்திருக்கிறான். நாங்கள் முன்பு விவாதித்திருக்கிறோம். அவன் சிந்தனைப்பாணியில் எப்போதுமே ஒரு இறுக்கத்தை நான் உணர்ந்ததுண்டு. அதை என்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. புரியவில்லை என்பதனாலேயே நான் அதில் சென்று உற்சாகமாக மோதியிருக்கிறேன்.

பிறகு தொடர்பு விட்டுப்போனது. அதன் பின்னரே நான் தீவிரமாக வாசிக்க எழுதத் தொடங்கினேன். சென்ற வாரம் சந்தித்தபோது அன்றைய மனநிலையின் உச்சத்தில் நான் என் பரவசங்களை எல்லாம் சொல்லத் தொடங்கினேன். அல்லது என்னை மீறி அவை வெளிப்பட்டன.

ஆனால் நான் பேசப்பேச அவனுக்கு நான் சொல்வதில் ஏதோ கடுமையாக உவக்கவில்லை என்பதை கவனித்தேன். ஒற்றை வார்த்தைகளில் பதில் சொன்னான் கண்களை திருப்பிக்கொண்டே இருந்தான். என் உற்சாகம் வற்றியது. ஏதும் தவறாக சொல்கிறோமா என்று புரியவில்லை.

பேச்சை சமூகமாக்க “நீ இங்கே தானே இருக்கிறாய்? கலைக்கூடத்துக்கு நிறைய வருவதுண்டா?” என்று கேட்டேன்.

அவன் “நான் ரோம் நகரத்துக்குள்ளேயே வருவதில்லை. எனக்கு இந்த நகரமே பிடிப்பதில்லை,” என்றான்.

“ஏன்?” என்றேன்.

அவன் சொன்னான். “இந்த நகரம் என்னை மிகவும் அசௌகரியப்படுத்துகிறது. கிரேக்க ரோமானிய கலாச்சாரமும் அதை அடுத்து உருவான கலை அறிவியல் வளர்ச்சிப்பாடுகளும் சாராம்சத்தில் மனிதனுக்கு என்ன நன்மையை செய்ததென்று எனக்கு விளங்கவில்லை. மனிதனை வலிமையானவன் என்று அது கட்டமைக்கிறது. சரி. ஆனால் தன் பலத்தை உணரத் தொடங்கியதும் மனிதன் அதிகாரத்துக்கு ஆசைப்படத் தொடங்குகிறான்.  அராஜகங்களை செய்கிறான். அது மிக அசிங்கமான ஒரு நிலை, உண்மையில் அது மனிதனுக்கு ஒரு வீழ்ச்சி தான். இங்கே சுற்றி விரவிக் கிடக்கும் இந்த மாபெரும் இடிபாடுகளைப் பார். நீ சிலாகிக்கும் மைக்கெலாஞ்செலோ கட்டி வைத்திருக்கும் ராட்சச உருவங்களைப் பார். ஆபாசமாக இல்லை?

“மனிதனின் அதீதங்களை அராஜகங்களை அடிமை போல் போற்றும் இந்த பண்பாடை விட கிறித்துவமே மனிதனுக்கு மேலும் பல மடங்கு உதவியிருக்கிறது. ஏன், உன் கிரேக்க ரோமானிய புத்துயிர்ப்புக்கால பேராசான்களை விட உண்மையான புதிய புரட்சி கருத்தை மனிதனுக்கு கொடுத்தவர் யார் என்றால் கிறிஸ்து என்று தான் சொல்வேன். தன்னை சித்திரவதை செய்ய வருபவனை,  கொல்ல வரும் ஒருவனைப் பார்க்கிறான். ‘தந்தையே அவனை மன்னியும், அவன் செய்வதறியாது பாவம் செய்கிறான்’ என்று அவன் மீட்புக்காக மன்றாடுகிறான். அதுவல்லவா வலிமை? அதுவல்லவா புரட்சி? மாறாக கிரேக்க ரொமானிய கலாச்சாரம் மனிதனுக்கு அப்படி என்ன புதுமை செய்தது? அவனை அராஜதத்துக்கும் அழிவுக்கும் தானே கொண்டு போனது? உடனே கலை என்பாய். கலை மனிதனின் உணர்ச்சிகளால் உருவாகி உணர்ச்சிகளை தூண்ட மட்டுமே உதவுகிறது. அதனால் ஆன்மீகமாக அவனுக்கு ஏதாவது பயன் உண்டா?” என்றான்.

அவன் பேசப்பேச எனக்குள் இனம் புரியாத வெறி மூள்வதை உணர்ந்தேன். மூச்சு வாங்கியது. நாங்கள் வெண்ணிற மேஜை விரிப்புகள் கொண்ட சிறிய மெழுகுவர்திகள் ஏற்றப்பட்ட உயர்குடி இத்தாலிய உணவகத்தில் இருந்தோம். ஃபோர் கோர்ஸ் மீலில் இரண்டு கோர்ஸ் முடிந்திருந்தது. மஞ்சள் வெளிச்சத்தில் மேஜைக்கரண்டிகளின் மெல்லிய கிண்கிணி ஒலிகளுக்கு மத்தியில் நேர்த்தியாக உடையணிந்த ஐரோப்பியர்கள் சின்னஞ்சிறு மிடர்களில் வைன் பருகியபடி பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பேச்சுக்குரல்கள் ஏரிக்கரையில் அவ்வப்போது வந்து உடையும் சிறிய அலைகளைப் போல இதமாக ஒலித்தன. எனக்கோ கத்த வேண்டும் போல இருந்தது.

என்னை மிகுந்த பிரயத்தனத்தோடு சமநிலைபடுத்திக்கொண்டு பதில் சொன்னேன். “நீ சொல்வதை என் தலைவன் டால்ஸ்டாய் நூற்றியைம்பது வருடங்களுக்கு முன்னாலேயே சொல்லிவிட்டான். அதெல்லாம் பழைய விவாதம்,” என்றேன். அது வெறும் தட்டிக்கழிக்கும் கூற்று பதில் அல்ல என்று சொல்லும் போதே உணர்ந்தேன். அவன் தலைக்குனிந்து சாலட்டை குத்திக் குத்தி வாயில் அடக்கிக்கொண்டிருந்தான். சொற்கள் எனக்குள் பீரிக்கொண்டு வந்தன. அவன் உபயோகித்த மொழி என்னை மிகவும் சீண்டியிருந்தது.

“என்ன சொன்னாய், கிரேக்க ரோமானிய பண்பாடு மனிதனுக்கு என்ன கொடுத்தது என்றா. நீ அறிவியல்வாதி தானே. அறிவியலின் முறைகள் எங்கிருந்து வந்தது? கிரேக்க கலாச்சாரம் தானே மனிதனுக்கு அறிவுவாதத்தை – ரேஷனலிசத்தை – புகுட்டியது? சாக்ரெட்டிக் டையலாக் என்பதே ஒரு விஷயத்தை பகுத்து ஆராயும் முறை தானே? அப்புறம் ஜனநாயகம்? அது பண்டைய கிரேக்கர்களின் கொடை இல்லையா? ஒரு விஷயத்துக்கு ஓர் ஐடியல் வடிவமுண்டு என்ற பிரக்ஞையை யார் அளித்தது? ஒரு பொருளை தூய அழகனுபவமாக்கி அதை அறியலாம் என்பது மனிதனுக்கு எவ்வளவு பெரிய வரம்? ப்ளாட்டோ தானே அதைச் சொன்னார்? இந்த பிரபஞ்சத்தை கால-வெளியில் அருவமாக உருவகிக்கக் கற்றுக்கொடுத்த கணித மேதைகள் – பித்தகோரஸ், யூக்ளிட், சீனோ – எல்லாம் எந்த பண்பாட்டில் வந்தவர்கள்? எப்படி ஒட்டுமொத்தமாக மனிதனுக்கு என்ன கொடுத்தது என்று உன்னால் கேட்க முடிகிறது?” – இப்படிப் பொறிய வேண்டும் என்று தோன்றியது. சூழல் கருதி கொஞ்சம் நாகரீகப்பூச்சோடு சொன்னேன். ஆனால் சொல்லச்சொல்ல எனக்குள் கோபம் மேலும் மூண்டது. “டெமாகிரசியும் தியரி ஆஃப் ஃபார்ம்ஸும் உன் தகப்பனா கண்டு புடுச்சான்?” என்று தான் எனக்கிருந்த கோபத்துக்கு நான் நியாயமாக கேட்டிருக்க வேண்டும்.

அவன் என் கண்களை சந்திக்கவில்லை. நிதானமாக, “நீ சொல்லும் விஷயங்கள் எதுவும் எந்த ஒரு பண்பாட்டின் சொத்து இல்லை. மனிதன் வெவ்வேறு பண்பாடுகள்ல தனித்தனியா இந்த விஷயங்களை எல்லாம் கண்டடஞ்சிருக்கான். மெசப்பொடேமியாவுல, பண்டைய இந்தியாவுல எல்லாம் ப்ரோட்டோ-டெமாகிரசியோட வடிவங்கள் இருந்திருக்கு. தர்க்கம், ரேஷனல் தாட், எல்லாமும் மற்ற பண்பாடுகள்ல இருந்ததே. பௌத்தர்களோட நியாயவாதம் மிக நுட்பமானது இல்லையா? அதான் நான் சொல்றேன். இதெல்லாம் மனுஷனோட சக்தி. மேதமை. சூழல் சரியா இருந்தா  உபரி வளம் இருந்தா எந்த பண்பாட்டிலும் அந்த மேதமை வெளிப்படும். ஆனால் அதைக் கட்டுப்படுத்த மனுஷன்ட்ட ஒண்ணுமில்ல. அதனாலே அப்படியே மேலப்போய் அதையே பலமாக்கி அராஜகங்கள பண்ணி தன்னையே அழிச்சுக்குவான். ஆனால் கிறிஸ்து சொன்னது மாதிரி ஒரு இன்சைட் உலகத்துல வேற எங்கேயும் உருவாகல இல்ல? அது மாதிரி ஒண்ணு தானே மனுஷன தன்னோட அராஜகத்துலேருந்து காக்குற வல்லமையோட இருக்கு? அது வெறும் மேதமை இல்ல. ஒப்புநோக்க இந்த கிரேக்கோ ரோமானிய கலாச்சாரத்துலயோ வேற எந்த கலை அறிவு சித்தாந்தத்திலேயோ எனக்கு பெரிய அப்பீல் தெரியல. அததான் சொல்றேன்,” என்றான்.

நான் பேசாமல் ஆனேன். அவன் சொன்ன விஷயங்கள் எனக்குள் ஒரு புயலைக் கிளப்பத் தொடங்கியிருந்தது.

“அராஜகம் என்றால் அதில் கிறித்துவ திருச்சபை தானே முதலிடம் வகிக்கிறது?” என்றேன். “இங்கே ரோமில் மட்டும் என்னென்ன அராஜகங்கள் நடந்துள்ளது என்று பட்டியலிட்டாலே போதுமே? கிறிஸ்துவின் ஞானம் கிறித்துவ மத அமைப்புக்கே உதவவில்லை என்பது துரதிருஷடவசமானது.” என்னிடம் வேறு ஆயுதங்கள் இல்லை ஆகவே என் குரலில் ஏளனம் நுழைந்தது. ஆனால் அவன் அதற்கும் நிதானமாக பதில் சொன்னான்.

“உண்மை தான் அதை மறுக்கவில்லை. ஆனால் அதற்கும் மருந்து கிறிஸ்து மாதிரி தூய்மையான ஓர் ஆன்மீக நிலை தான். அதை அவர்களே தீண்டவில்லை என்பது ஓர் அவலம். ஆனால் அதனால் அந்த உயர் விழுமியத்துக்கு எந்த கேடும் உருவாகவில்லை. மாறாக அதன் விழுமியங்கள் அங்கே தான் உள்ளன. நாம் அவற்றை தியானிக்கிறோமா கடைப்பிடிக்கிறோமா நம் வாழ்வை அதன் படி அமைத்துக்கொள்கிறோமா என்பதில் தான் நாம் நிற்கிறோம்,” என்றான்.

நண்பன் கிறித்துவன் அல்ல, இந்து. ஆகவே அவன் சொன்னவை மதப்பற்றின் விளைவு என்று நான் நினைக்கவில்லை. மேலும் இத்தனை ஆண்டுகளில் அவன் அனுபவங்கள் என்ன சிந்தனை எப்படி மாறியிருக்கிறது என்று எதுவும் தெரியாது. இருந்தாலும் நான் இருந்த மனநிலையில் அவன் பேசியவை என்னை மிகவும் பாதித்தது.

அன்று மாலை மீண்டும் அந்த விஷயத்தை பேசவில்லை. எனக்கு மேலும் அந்த பேச்சை வளர்க்க விருப்பமில்லை. ஆனால் அவன் கேள்வி எனக்குள் வளர்ந்துகொண்டே இருந்தது. இரவெல்லாம் தூங்கவில்லை. மறுநாள் காலை கீட்ஸ் மற்றும் ஷெல்லியின் கல்லறைகளைச் சென்று பார்த்தேன். அது எனக்கு கிட்டத்தட்ட ஒரு புனிதயாத்திரை. உண்மையில் என் ரோம்பயணமே அந்த ரொமாண்டிக் காலக் கவிஞர்களின் காலடிக்ளை பின் தொடரும் ஒரு முயற்சி என்று கூட சொல்லலாம். வரலாறையும் கலையின் அழகுச்சங்களையும் கண்டடைய மேற்கொண்டது. ஆனால் என் நண்பனின் கேள்வி மொத்தமாக எல்லாவற்றையும் கலைத்துப்போட்டுவிட்டது.

*

நண்பன் சொன்னதில் ஒரு மிடர் உண்மை இருந்ததா? ஒரு வகையில் இந்தக் கேள்வியை நானும் எதிர்கொண்டிருக்கிறேன். தூய அறிவியல்வாதத்தோடும் டெக்னாலஜி போக்கோடும் எனக்கு இருந்த பிணக்கின் புள்ளி இது தான். ஆனால் கலை? கலையை அப்படி ஒதுக்கிவிட முடியுமா? அவதானம் வழியாக தூய உள்ளுணர்வு வழியாக பெறப்படும் அறிவு எதுவாக இருந்தாலும் அது தன்னளவிலேயே ஓர் ஆன்மீகத்தை கொண்டதல்லவா?

எனக்கு பின் தொடரும் நிழலின் குரல் நினைவுக்கு வந்தது. அந்த நாவலை படித்த நாட்களில் இவன் கிறிஸ்துவின் இடத்தைப் பற்றிச் சொன்ன தர்க்கங்களை தர்க்கமாக அல்லாமல் உணர்வுகளாக அடைந்திருக்கிறேன். அந்த நாவலில் கிறிஸ்து வெளிப்படும் உணர்ச்சிகரமான இடங்களை நினைத்துக்கொண்டேன். ஆம், இது சரி, இது சரி என்று எந்த தர்க்கத்தை விடவும் வலுவான ஒரு குரலாக எனக்குள் ஆமோதிப்பை கண்டுகொண்ட பொழுதுகள் அவை. அதைப்போல் எத்தனை கிறிஸ்துக்கள். தஸ்தாயேவ்ஸ்கியின் கிறிஸ்து, தல்ஸ்தாயின் கிறிஸ்து, செல்மா லாகர்லொஃபின் ஜார்ஜ் எலியட்டின் கிறிஸ்து. மிகச்சிறிய வயதில் என்னுடைய அம்மா அவர் சொன்ன படுக்கைய்றைக் கதைகள் வழியாக எனக்கு கிறிஸ்துவை அறிமுகப்படுத்தினார். அம்மாவுக்கு விவிலியத்தின் சிலப்பகுதிகள் மனப்பாடமாகத் தெரியும். அந்த பழைய வார்த்தைகள் என் இளம் மனதில் அவர் தொடுகையின் ஸ்பரிசத்தோடு இணைந்து வரைந்த கனவாக ஒரு கிறிஸ்து எனக்குள் இருக்கிறான். குழந்தையாக இளைஞனாக தேவனாக.

ஆனால் அந்த பிம்பங்கள் ஒவ்வொன்றும் கதைகள் கலைகள் வழியாகத்தானே என்னை வந்து அடைந்தன? மானுடக் கற்பனையின் மேதமை என்று ஒன்று இல்லையென்றால் கிறிஸ்து இவ்வளவு பெரிய உருவாக எனக்குள் வளர்ந்திருப்பானா? நம் அகத்தின் ஆடியில் அல்லவா அவனை கண்டுகொள்கிறோம்?

அவனை இந்த ரோம் நகரில் எங்கே கண்டேன்? மைக்கெலாஞ்சலோவின் ‘தி லாஸ்ட் ஜட்ஜ்மெண்ட்’ ஓவியத்தின் மைய்யத்தில் வலிய அரசனாக. அந்த ஓவியத்தின் பிரபஞ்ச சுழலுக்கு அடியில் சிலுவையில் அறையப்பட்ட மெல்லிய இளைஞனாக. பியெட்டாவில் மரியன்னையின் கரங்களில் சிசுவைப்போல் ஏந்தப்பட்ட நெடிய நொருங்கக்கூடிய மனித உடலாக.

அவனை விட மேரியை மேலும் அணுக்கமாகக் கண்டேன். ரோமில் அவள் தான் எங்கும் வீற்றிருக்கும் அரசி – மடோனா, ரெஜினா, விக்டோரியா. ஒவ்வொரு தேவாலயத்திலும் ஒவ்வொரு ரூபம் சூடுகிறாள். கிரேக்கர்களின் மினர்வாவைப்போல் அவள் வலிமையின், மேதமையின் தெய்வமாக கருதப்படுகிறாள். எகிப்தியர்களின் ஐசிஸ் போல் அவளே வான் நட்சத்திரங்களை சூடிக்கொண்ட ஆதித்தாயாக விளங்குகிறாள்.

காலம் காலமாக கலைஞர்கள் அவனையும் அவளையும் வடிவங்களிலிருந்து வடிவங்களாக உருமாற்றித் திரட்டிக் கண்டடைந்திருக்கிறார்கள். கலையின் ஆன்மா வழியாகவே தெய்வங்களும் அவை சுட்டும் உயர் விழுமியங்களும் என்னை வந்துத் தீண்டியுள்ளன. கலைஞன் ஞானியரிடமோ, இறையியலாளனிடமோ அல்லது தத்துவவாதியிடமோ தன் தரிசனத்தைப் பெறலாம். ஆனால் என் வரையில் கலைஞனே உயிரை அளித்து பூமியில் ஒரு தெய்வத்தை – அல்லது விழுமியத்தை – படைக்கிறான்.

“தந்தையே அவர்களை மன்னியும்” என்று சொன்னது இயேசுவா அவரை எழுதிய கவிஞனா என்று நாம் பிரித்தறிய முடியுமா என்ன? ஒரு கவிஞனால் அந்த கூற்றின் ஆற்றலை அடைய முடியுமென்றால் அது எவ்வளவு பெரிய நிலை?  ஆம் அது வலிமை தான் ஆனால் வலிமை என்பதாலேயே அது ஆன்மீகமற்றதாக ஆகிவிடுமா? ஆன்மீகம் என்றாலே எளிமையும் சரணாகதியும் சுய ஒடுக்குதலும் சுத்தீகரணமும் மட்டும் தானா? ஆன்மீகத்தின் நிறம் தூய வெள்ளையாக அன்றி இருக்க முடியாதா?

இப்படியே கேள்விகள் எனக்குள் சுழன்றன.

*

ஏன் எனக்குள் இத்தனை போறாட்டம்? நான் வலிமையை வழிபடுகிறேனா? சிந்தித்துப்பார்த்தேன். கிரேக்க ரொமானிய பாணி சிற்பங்களில் உள்ள நாட்டம் என்பது என்ன? மிகத்துல்லியமான மனித வடிவத்தை மிக வலிமையான உச்சக்கணங்களில் தசைகள் முறுக்கி வெளிப்படும் வடிவமாகவே அந்த காலத்து மாஸ்டர்கள் வனைந்திருக்கிறார்கள். அந்த ஒருமையும் தீவிரமுமே அழகாக வெளிப்படுகிறது.

ஆம் வலிமையான அனைத்துமே அழகானவை. ஆபத்தாக அராஜகமாக இருக்கும்போதும் அழகானவை. நாகப்பாம்பின் படம் அழகானது. பாயும் புலியின் இறுகிய தசைகள் அழகானவை. இரவின் அத்தனை மர்மங்களும் அழகானவை. அதைத்தான் சப்ளைம் என்கிறோம் அல்லவா? அதன் ஆபத்தை மீறியும் அதன் அழகில் என் மனம் லயிக்கும் கணம் நான் தூய ஒன்றை காண்கிறேன். அங்கில்லாமல் ஆகிறேன், உயர்த்தப்படுகிறேன். இயற்கையின் முன்னாலும் பெருங்கலைகள் அளிக்கும் தூய அனுபவம் முன்னாலும் என் உள்ளம் ஸ்தம்பிப்பதை எப்போதும் ஓர் உயர்ந்த நிலை என்றே அடையாளப்படுத்தியிருக்கிறேன்.

அது ஓர் ஆன்மீகமான நிலை தான் என்றால் அந்த ஆன்மீகத்துக்கும் கிறிஸ்துவின் ஆன்மீகத்திற்கும் என்ன வேறுபாடு?

*

வலிமையில் ஆன்மீகம், அராஜகம் இரண்டும் இருப்பதாகத் தோன்றுகிறது.

என் நண்பன் சொன்னது போல் வலிமையும் அராஜகமும் பல சமயம் ஒன்றிப்போகத்தான் செய்கின்றன. ரோமானிய இடிபாடுகளை சொன்னான். அவற்றை பூதங்கள் கட்டியது என்று மத்தியக்கால ஐரோப்பியர்கள் எண்ணியதாக ஒரு கூற்று உண்டு. எனக்கு புனித பீட்டர் தேவாலயத்தைக் கண்டபோதும் அதே உணர்வு தான் ஏற்பட்டது. இது ராட்சசர்கள் கட்டிய கூடம் என்று. அதன் பூதாகர நிர்மாணத்தில் என் தேவனை என்னால் காண முடியவில்லை. அது ரோம் நகரின் இயல்பு. ரோமின் அமைப்பில், அதன் கலை வெளிப்பாடுகளில், அந்த ராட்சசத்தனம் கண்டிப்பாக உள்ளது.

அந்த இணைப்பை உணர்ந்தபோதெல்லாம் நானும் அசௌகரியம் அடைந்திருக்கிறேன். மானுட மனத்தில் அதிநிலை வெளிபட்ட மனங்கள் பலதும் ஃபாசிசத்துக்கு நெருக்கமாக இருந்துள்ளது என்ற அசௌகரியமான வரலாற்றுப் பாடம் கண் முன்னால் உள்ளது. ஆகவே தான் நண்பனின் தடித்தனமான “ஆட்டிடியூட்” என்று நான் உணர்ந்ததை மீறி அவன் சொன்ன புள்ளியோடு இவ்வளவு தீவிரமாக மல்லுக்கட்டுகிறேன்.

உண்மையைச் சொன்னால் ரோமின் அந்த ராட்சசத்தனம் எனக்குள் இரண்டு எதிரெதிரான உணர்வுகளை மாறி மாறித் தீண்டியது. ஒரு பக்கம் அந்த அப்பட்டத்தன்மை, அராஜகமான அளவிலான மிகை வெளிப்பாடு, என்னை அருவருக்கவே செய்தது. எத்தனை நிர்மாணங்கள் எத்தனை கட்டடங்கள் எத்தனை இடிபாடுகள். பிளந்து ரத்தம் வழிகிற காயத்தோடு மல்லாந்து விழுந்து கிடக்கும் பூதாகர உடல் போல அந்நகர் தோன்றியது.

ஆனால் மறுப்பக்கம் அதன் அளவும் எடையும் வயதும் “இதோ நான்” என்ற கம்பீரமும் என்னை ஸ்தம்பித்து நிலையிழக்கச் செய்தது. எத்தனை பார்த்துவிட்டது. எவ்வளவு பெரிய சாட்சி. மகத் என்ற வார்த்தை எனக்குள் விழுந்துகொண்டே இருந்தது. Magnificent. எத்தனை மகத்தானது. எத்தனை மகத்தானது.

விவிலிய மரபில் நகரங்களை பரத்தையர் என்று கூறும் வழக்கமிருந்ததாக பின்பு வாசித்தேன்.

*

இதுவரை சொன்னதை தொகுத்து சொல்வதென்றால் –

கிரேக்க-ரொமானிய மரபையும் அதன் வரலாற்றையும் கலைச்செல்வங்களையும் அறியும் பிரதானமான நோக்குடன் நான் ரோம் போனேன். அதன் வழியாக மனிதனை, ‘மானுடம்’ என்று நான் கூட்டாக சொல்லும் ஒன்றை புரிந்துகொள்ள எண்ணினேன். “We are all pilgrims in search of Rome” என்று கதே சொன்ன ஒரு வாக்கு உண்டு. அவர் “We” என்று கலைஞர்களை சொல்கிறார். பழங்கால தீர்த்தயாத்திரீகர்கள் புனிதர்களின் relic-களை தரிசிக்கச் செல்வது போல் ஒரு கலை மாணவியாக நான் ரோமின் ஆன்மாவை அதன் கலை வெளிப்பாடுகள் வழியாக தரிசிக்கச் சென்றேன். அந்த நகரின் பழமையை அனுபவ ஆழத்தை தொட்டுணர முற்பட்டேன்.

அங்கே நண்பன் கேட்ட கேள்வி என்னை நிலையிழக்கச் செய்தது. அவன் கேள்வி கலையின் இடத்தையே கேள்விக்குள்ளாக்கியது. அவன் மானுடத்துக்கு எந்த கலை அறிவியல் அரசியல் தரிசனத்தை விட கிறிஸ்துவின் தரிசனமே முக்கியமானது என்றான். கலை உட்பட மானுடத்தில் மற்ற மேதமைகள் அராஜகங்களையே உருவாக்கும் என்றும் கிறிஸ்துவின் தரிசனமே (அல்லது அதற்கு நிகரான ஓர் ‘ஆன்மீகமே’) இறுதிச்சொல்லாக மீட்புக்கு வழிவகுக்கும் என்றான்.

இதில் ‘ஆன்மீகம்’ என்ற விஷயமே என்னை தொந்தரவு செய்கிறது. எனக்குத் தெரிந்த ஆன்மீகம் கலை வழியாக அழகு வழியாக வெளிப்படும் ஒன்று. கிறிஸ்துவின் தரிசனத்தையே கூட நான் கலை வெளிப்பாடுகள் வழியாகவே அடைந்தேன்.

அப்படி இருக்க ஆன்மீகமாகச் செல்ல அப்படி இரண்டு பாதைகள் இருப்பதாக சொல்லப்படுவது – அவை ஒன்றுடன் ஒன்று பொருந்தா பயணங்கள் என்று உணர்த்தப்படுவது – என்னை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இவற்றை ஒருங்கிணைந்து புரிந்துகொள்ள வழி உள்ளதா என்ற கேள்வி நோக்கி நகர்த்துகிறது.

நண்பனின் சிந்தனைப் பாணியில் எப்போதுமே ஓர் இறுக்கத்தை உணர்ந்ததாக சொன்னேன் அல்லவா? அவன் கேள்வியே அந்த இறுக்கத்தின் வெளிப்பாடென இப்போது தோன்றுகிறது. அந்த இறுக்கத்தை புரிந்துகொள்வதும் முக்கியம் என்று நினைக்கிறேன்.

அந்த சிந்தனை முறையை ஒருவித மரபுவாதம் (traditionalism) என்று தான் சொல்ல வேண்டும். மதம் சார்ந்த ஆசாரவாதம் அல்ல நான் சொல்வது. மிகக்கூர்மையான, தர்க்க ஒழுங்குடைய சிந்தனை. ஆனால் ஓர் இறுகிய தன்மை உடையது.  அது கவிதையின் உண்மையை சந்தேகிக்கும் பியூரிட்டன் நோக்கு என்று சொல்லலாம். தர்க்கத்தின் அடிப்படையில் ஒன்றை கூர்மையாக சொன்னால் ஏற்றுக்கொள்ளும். உருவகமாக, கவித்துவமாக ஒன்றை வெளிப்படுத்தினால் அதை அதன் முழுமையில் ஏற்றுக்கொள்ளாது. வெட்டிப் பிளந்து ஆராய முற்படும். சில சமயம் சிந்தனையில் கவித்துவமான ஒரு தாவல் வழியாக மேலும் விரிவாக ஒன்றின் தரிசனம் நமக்கு அமையப்பெறும் அல்லவா? அதை இவ்வகை சிந்தனை ஏற்றுக்கொள்ளாது. எப்போதும் சந்தேகத்துடன் பார்க்கும். இந்த ‘கவிதைச்சந்தேகப்’ போக்கு மரபுவாதிகளிடம் மட்டும் அல்ல, யோசிக்கையில் நவீன அறிவியல்வாதிகளிடமும் அநேகம் உள்ளது. நண்பனின் கூற்று எங்கிருந்து வந்திருக்கக்கூடும் என்று சற்று உணர முடிகிறது.

*

இந்த போக்கை இந்தியச் சிந்தனையாளர்களிடமும் வேறு வகையில் உணர்ந்திருக்கிறேன்.

இந்தியாவில் பெரும்பாலும் ‘ஆன்மீகம்’ என்று பேசுவோர் தூய மனம் பக்தி சரணாகதி என்றோ அல்லது தத்துவம் தர்க்கம் தியானம் என்றோ அதை வரையறுப்பதை கண்டிருக்கிறேன். இன்று காலை கூட ஒரு சாமியார் ‘அன்வய-வியதிரேக’ தர்க்கத்தை தியானிப்பது வழியாக எப்படி விடுதலை அடைய முடியும் என்று போதிப்பதை காதுபோக்கில் கேட்டேன். எது இவ்வுலகத்திலானது, எது நிரந்தரமானது என்று பிரித்தறியும் முறை என்று அவர் சொன்னார். அந்த வழி என்பது ஒவ்வொரு நொடியும் பூரண போத விழிப்போடு ரேசர் பிளேடை வைத்து கோடு போட்டுக்கொண்டே இருப்பது என்று தோன்யது.

அப்படிப்பட்ட முறைகளை நான் சந்தேகிக்கவில்லை. அவை மெய்மையை பகுத்தறிகின்றன என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் அவற்றை நான் அறிந்த கலையின் உயர்வுகளோடு எப்படி இணைத்துக்கொள்வது?

*

இன்னொரு சாமியாரிடம், மற்றொரு சமயத்தில், நான் கேட்டேன். நீங்கள் இலக்கியம் வாசித்ததுண்டா என்று. அவர், “நான் என் பதினாறாம் வயதில் தாகூரில் கோரா நாவலை வாசித்தேன். அதை வாசித்து ஒரு வாரம் நான் தூங்கவில்லை. அந்த நாவலின் துக்கங்களையும் சந்தோஷங்களையும் நான் எனக்குள் மீண்டும் மீண்டும் நடித்துப் பார்த்துக்கொண்டே இருந்தேன். என்னால் அதிலிருந்து விடுபடவே முடியவில்லை. பிறகு தோன்றியது. இந்த உலகத்தில் இத்தனை நடிப்புகளைக் கடந்து செல்லவேண்டியவன் அதன் மாயைகளிலிருந்து விடுபட வேண்டியவன் மேலும் நடிப்புகளை தன் மேல் சுமத்திக்கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் என்று. அதன் பிறகு நான் இலக்கியம் படிக்கவில்லை,” என்று சொன்னார்.

*

எனக்கு இவ்வாரு தோன்றுகிறது.

தர்க்கம் வழியாகவோ சேவை வழியாகவோ நாம் விலக்கத்தையும் உயர்மனநிலையும் அடையலாம். அகங்காரம் தீண்டாமல் வாழலாம். ஆனால் நம் அனுபவங்களின் சாராம்சத்தை அடையும் அந்த பேரனுபவமானது வெறுமனே ஒரு தர்க்கப் புதிரின் பதிலாக இருக்குமா? அதில் துளிக்கூட உச்ச அனுபவம் – ஒளி, விரிவு, பறத்தல் – இருக்காதா? நம் ஞானியரின் அனுபவங்களை படிக்கையில் அப்படித் தோன்றவில்லை. அதை அவர்கள் ஆனந்தம் என்றே சொல்கிறார்கள். பித்தையும் மாளாக்காதலையும் பேரின்பத்தையும் தான் திரும்பத்திரும்ப சொல்கிறார்கள். அந்த பெருநிலைகளை சற்றேனும் நான் அனுபவித்திருக்கிறேன் என்றால் அது கலையின் ஊடாகத் தானே?

சென்ற தத்துவ வகுப்பில் நீங்கள் வேதங்களை பற்றிச் சொன்னதை சிஸ்டீன் தேவாலயத்தின் கூரையைக் கண்டபோது எண்ணிக்கொண்டே இருந்தேன். சிருஷ்டி கீதம் கேட்டபோது ஏற்பட்ட அதே எழுச்சி அங்கே உருவானது. வேதங்களின் எழுச்சி. அங்கே கவிதையும் தெய்வ உணர்வும் பிரபஞ்ச உணர்ச்சியும் வெவ்வேறானது அல்ல. ஒவ்வொரு முறை ஒரு புதிய வேதத்தை இயற்றும் போதும் மனிதன் அந்த ஆதி நிலையை அடைகிறான். அதை நடித்துப்பார்த்து அதுவாக ஆகிறான்.

அந்த எழுச்சி எங்கிருந்து உருவாகிறது?

மண்ணிலிருந்து. கலை பூமியிலிருந்தும் வாழ்க்கையிலிருந்து இயற்கையிலிருந்தும் எழுவது. நம் உச்சங்கள் அனைத்தும் வெளியிலிருந்து வானத்திலிருந்து அருள்பாலிப்புகளாக வருபவையல்ல. பூமியைத் தொட்டு நம் புலன்கள் வழியாக நாம் பெற்றவற்றை வானம் வரை உயர்த்தி ஏற்றும் ஒரு மனப்பாங்கு நம்மில் செயல்படுவதனால் வருவது.

*

இவ்வளவு சொன்ன பிறகு கடைசியாக ஒன்று. இந்த பயணம் வழியாக நான் பெற்ற ஓர் அனுபவம். அதை என்னால் விளக்கவோ ஆராயவோ முடியவில்லை. சொன்னவற்றுடன் தொகுக்க முடியவில்லை. இப்போது நான் முன்வைத்த குழப்பங்களை எல்லாம் மீறிய ஓர் அனுபவமாகவே எனக்குள் அது இருக்கிறது. அதை வெறும் நம்பிக்கையென்றோ கலை உணர்வு என்றோ விளக்க முடியவில்லை. ஆனால் கலையும் அழகுணர்வும் இல்லாதிருந்தால் அந்த அனுபவம் என்னை தீண்டியிருக்காது என்று உறுதியாக நம்புகிறேன்.

எளிய சொற்களில், வெறும் அனுபவமாகவே சொல்ல முயற்சிக்கிறேன்.

நாங்கள் தங்கியிருந்த விடுதி Saint Maria Maggiore என்ற தேவாலயத்துக்கு மிக அருகே இருந்தது. இந்த தேவாலயம் ரோமில் மேரிக்கென்று கட்டப்பட்ட முதல் தேவாலயம். மைய அமைப்பு 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அந்த காலகட்டத்தைச் சேர்ந்த mosaic வகை ஓவியங்களை அந்த தேவாலயத்தில் பார்க்கலாம். பிற்காலத்தில் மேலும் விரித்துக் கட்டப்பட்டது. ரோமில் வீதிக்கு வீதி அப்படி நிறைய மரியன் தேவாலயங்கள் உள்ளன. அவள் அந்நகரின் அரசி போல் வீற்றிருக்கிறாள். எளிய மக்களின் தஞ்சம் அவள்.

ரோமில் மேரியின் வழிபாடு தொடங்கிய வரலாறு சுவாரஸ்யமானது. நான்காம் நூற்றாண்டில் கிறித்துவ மதம் ரோமில் ஓர் வழிப்பாட்டு மதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பிறகு கிறிஸ்து மனிதனா தெய்வமா என்ற விவாதம் உருவானது. கிறிஸ்துவின் பிறப்பின் இயல்பு என்ன, அவர் பிதாவின் சாரத்தைக் கொண்டு தொடர்பவரா அல்லது தனி இருப்பாக படைக்கப்பட்டாரா போன்ற கேள்விகள் விவாதிக்கப்பட்டன. தெய்வமும் மனிதனும் எப்படி அவனில் இணைந்து இருக்க முடியும் என்று ஆராயப்பட்டது. அவன் ரத்தமும் சதையுமாக உடல் எடுத்துப் பிறந்தான் ஆனால் அவன் தேவனின் சாரத்திலிருந்து வேரல்ல என்று முடிவு செய்யப்பட்டது.

ஐந்தாம் நூற்றாண்டில் அந்த விவாதங்கள் மேரியின் இயல்புகளை நோக்கித் திரும்பின. மேரி இறைவனின் அன்னையா? அல்லது கிறிஸ்து என்ற மனிதனின் அன்னையா? அவள் இறைவனின் அன்னை என்றால் அவள் இயல்பு என்ன? போன்ற கேள்விகள் எழுந்தன. அவளை முக்கால கன்னி என்றும் இறைவனின் தாய் என்றும் வகுத்தார்கள். முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த இறைவிகளின் இயல்புகள் அவளுடன் இணைந்துகொண்டன. அவளை ‘விண்ணக அரசி’ என்று அழைத்தனர். ‘கடல் விண்மீன்’ என்று அழைத்தனர். அவை எகிப்திய இறைவி ஐசிஸின் பட்டங்கள். ஐசிஸும் சேயை கையில் வைத்திருந்த தாய் தெய்வம். விண்ணகத்தை ஆண்டவள்.

மேரி அதன் பின் நட்சத்திரங்களை சூடியவளாக நீல வண்ண ஆடையால் சூழப்பட்டவளாக ஓவியங்களில் தோன்றத் தொடங்கினாள். மேரி எப்போதும் நீல ஆடைக்குள் சிவப்பு ஆடை உடுத்தியபடி காட்சிப்படுத்தப் பட்டாள். சிவப்பு அவள் மகனான இயேசுவை குறித்தது. நீலத்துக்குள் சிவப்பு என்பது போல் விண்ணக அரசியான அவள் அவனை ரத்தமும் சதையுமாக ஈன்றாள். பிற்கால ஓவிய மரபுகளில் இயேசு அதற்கு நேர்மாராக மேல் ஆடை சிவப்பும் உள் ஆடை நீலமும் என்று தோன்றலானார். அது மனித ரூபத்தில் தோன்றிய இறைவனை குறிப்பதாக சொல்லப்படுகிறது.

உண்மையில் பிதாவுக்கும் சுதனுக்குமான உறவை கிறித்துவ இறையியல் ஒருவாராக வகுத்துக் கூறிவிட்டது. ஆனால் மாதாவுக்கும் சுதனுக்குமான உறவு இன்னும் மர்மம் நிறைந்ததாகவே உள்ளது. அது விண்ணக இறைக்கும் மண்ணில் நிற்கும் மனிதனுக்குமான (மனுஷிக்குமான) உறவு அல்லவா? எது அவ்வுலகத்திலானது எது இவ்வுலகத்திலானது எது விண் எது மண் என்ற இனிமையான மாயம் மரியத்துக்கும் இயேசுவுக்குமான உறவில் நிறைந்திருக்கிறது. நீலம் சிவப்பு இவ்விறு நிறங்களின் ஊடாட்டமே இறைவனுக்கும் மனிதனுக்குமான மிஸ்டிக்கான உறவை உணர்த்துவதாக எனக்குத் தோன்றியது. இறைவனை ஏந்திய மனிதன் இறைவனுக்குள் சென்று இறைவனாகும் மாய உருமாற்றத்தை சுட்டுகிறது.

ஆனால் இதெல்லாம் பிறகு வாசித்தது. இந்த பயணத்தில் நான் மேரியை அடைந்த விதம் வேறு. ஒரு வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் Saint Maria Maggiore-யில் வெவ்வேறு வழிப்பாடுகளை காணச் சென்றேன். ஒரு பயணத்தில் எப்போதுமே அப்படி அன்றாட வழக்கத்தின் ஒரு துளியை வைத்துக்கொள்வது எனக்குப் பிடிக்கும். ஒரு நாவலில் ஒரு சிறிய உபகதை நிகழ்வது மாதிரி அதற்கென்று ஓர் எடுப்பும் தொடுப்பும் முடிவும் உருவாவதை கண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் நான் வேடிக்கை பார்க்கத்தான் சென்றேன். வழிபாடு நடந்த அந்த விசாலமான சாப்பெலுக்குள் ஏனோ என்னால் காலடி எடுத்து வைத்துச் செல்ல முடியவில்லை. இத்தனைக்கும் தேவாலயம் முழுவதும் அலைந்தேன். அதன் கட்டுமானத்தைப் பார்த்தேன் ஓவியங்களை பார்த்தேன் சிற்பங்களைப் பார்த்தேன். ஆனால் சாப்பெலுக்குள் மட்டும் என்னால் புக முடியவில்லை. அது மிகப்புராதானமான, புனிதமான ஓர் அமைப்பாக எனக்குத் தோன்றியது. நம்பிக்கையாளர்களால் அவர்களுடைய நம்பிக்கையின் பெயரால் எழுப்பப்பட்ட கனவு. என் சந்தேகங்களுடன் குழப்பங்களுடன் அந்த பரிசுத்தமான இடத்தில் நுழைய எனக்கு அருகதை இல்லை என்ற எண்ணம் என் கால்களை பாதித்தது. ஒவ்வொரு நாளும் உள்ளே செல்வோம் என்று நினைத்தும் ஒவ்வொரு நாளும் கருப்பு உலோகத்தில் அலங்கார வேலைப்பாடு செய்யப்பட்ட மூடிய வாயிலுக்கு வெளியே நின்றபடி அதன் இடைவெளிகள் வழியாக உள்ளே பார்த்துக்கொண்டிருந்தேன்.

எனக்கு வழிபாடை பார்ப்பதை விட அங்கே வரும் மக்களை பார்ப்பதே மேலும் சுவாரஸ்யமாக இருந்தது. மூன்றாம் நாளில் அந்த வேளையில் யாரெல்லாம் வருவார்கள் என்று தெரியத் தொடங்கியது. எப்போதுமே இணைந்து வந்து சன்னமான குரலில் பாடும் மூன்று இத்தாலிய முதியவர்கள். சுருட்டைத்தலை மேல் ஊதா நிற மேலாடை போர்த்தி முன்னிருக்கையில் மண்டியிடும் இளம் ஆஃபிரிக்க இனப் பெண். கஞ்சி போட்டு கரகரப்பாக உறைந்த வெள்ளை ஆடைகளும் வெள்ளை ஸ்டாக்கிங்கும் ஷுவும் அணிந்த இரண்டு குண்டான கன்னியாஸ்திரீகள். துதிபாடல் புத்தகங்களை அடுக்கி விளையாடும் சிறுவன். அவனை கோழி போல் மேய்த்த ஃபிலிப்பீனோ தாய். அனைவரையும் தோரணையாக உத்தரவிட்டு அணிவகுத்து அமரச்செய்த ஒரு கருப்பு ஆசாமி, அங்கே அதிகாரப்பூர்வமற்ற சட்டாம்பிள்ளை அவர் தான்

அதில் ஓர் இளைஞன். மிக அழகானவன். ஏதோ அலுவலகத்தில் வேலை பார்ப்பவன் போல் எப்போதும் நேர்த்தியான உடையில் இருந்தான். ஒவ்வொரு நாளும் சரியாக நான்கு மணி அடிக்கும் போது அவசரமாக வந்து அலங்கார ஜாலிவேலை செய்யப்பட்ட இரும்பு வாயிலை திறந்து சென்று வழிப்பாட்டில் இணைந்து கொள்வான்.

சில நாட்களில் அவன் இயல்பு பிடிகிடைத்தது திரும்பி அவன் வருவதை எதிர்நோக்கத் தொடங்கினேன். ஓடி வருவான். என்னைக் கடந்து இரும்பு வாயிலைத் திறந்து வாசலில் அவசரமாக குனிந்து மண்டியிட்டு சென்று கடைசி வரிசையின் ஓரத்தில் அமர்வான். அவன் சென்றதும் சட்டாம்பிள்ளை கண் காட்ட நான் மெல்ல வெளியிலிருந்து அலங்கார இரும்பு வாயிலைச் சாற்றிக்கொள்வேன்.

அந்த வாரம் முழுவதும் கடந்தது. ஒவ்வொரு நாளும் நான் வெளியே நின்றபடி வழிபாட்டைப் பார்த்தேன். ஒவ்வொரு நாளும் தன் சுழற்சியை இயல்பாகக் கண்டுகொண்ட ஓர் இயற்கை நிகழ்வு போல வழிபாடு நடைபெற்றது. நட்சத்திரங்களின் நகர்வைப்போல், பருவங்களைப்போல். முதலில் திருவசனம். பிறகு நறுமணப்புகை. இறுதியாக இசை. ‘ஆமென்’ என்றதும் பெருமூச்சுடன் சிலுவையிட்டுக்கொண்டு அந்த வழிபாட்டுச் சுழலிலிருந்து மனிதர்கள் தனித்தனியாகி எழுந்து வந்தார்கள்.

இரவெல்லாம் நான் கத்தோலிக்க திருச்சபையின் வரலாறைப்பற்றி அவர்களுடைய சடங்கு முறைகளை பற்றி தத்துவங்களைப்பற்றி வாசித்தேன். ஆனால் மாலைகளில் அந்த அலங்கார இரும்புச்சுவருக்கு வெளியிலேயே நின்றேன்.

இப்படி ஐந்து நாள் கடந்தது.

ஆறாம் நாள். நான்கு மணி அடித்து சில நிமிடங்கள் ஆகியிருந்தது. பாதிரியார் வழிபாட்டைத் தொடங்கியிருந்தார். சிறு புயல் போல அவன் என்னக் கடந்து ஓடிக் கதவைத் தள்ளி மண்டியிட்டான். அவன் வலக்கையை நெஞ்சில் வைத்துத் தலைகுனிவதைக் கண்டேன். அந்த வேகத்திலும் அந்த பொழுதில் முழு சமர்ப்பணத்தின் தூய அசைவோடு அவன் தலை தாழ்ந்தது. அவன் முழு பிரக்ஞையும் அந்த அசைவில் குவிய அவன் காலடியில் அவன் நிழல் விழுந்தது. அந்த அசைவில் அவன் தலைமுடி மஞ்சள் வெளிச்சத்தில் பொன்னின் ஒளி கொண்டது.

அது ஒரு கணம் தான். பிறகு அவன் எழுந்து ஓரத்து இருக்கைக்குச் சென்றான். இரும்பு வாயிலை மூட உத்தரவு வர எப்போதும் போல் நான் வெளியே நிறுத்தப்பட்டேன்.

ஆனால் அன்றைய நாளில் எல்லாம் மாறிவிட்டிருந்தது. அந்த இளைஞன் மண்டியிட்டபோது அவன் சிறு அசைவு, அந்த அசைவில் அவன் கூந்தல் கொண்ட பொன்னிறம், அந்த பொன்னின் ஒளி அறை முழுதும் நிறம்பி ஒவ்வொன்றையும் தொட்டுக்காட்டியது போல் அன்று நான் கண்ட அசைவுகள் ஒவ்வொன்றும் துல்லியமான உருவும் அர்த்தமும் கொண்டிருந்தன.  வசனங்களை சன்னமாக வாசித்த பாதிரியாரின் புராதான லத்தீன் தனித்தனி உருண்ட சொற்களாக செவியில் தோன்றியது. கூழாங்கற்களை கையில் உருட்டுவது போல் சின்னஞ​சிறிய மலைப்பாறைகள் மேல் ஏறி இறங்குவதைப்போல் அவற்றுடன் விளையாட வேண்டும் என்று நா தவிதவித்தது. தூபக்கலம் பெரும் அர்த்தத்தோடு கனமாக அசைந்தது. அதிலிருந்து நறுமண கந்தம் பேரழகுடன் பொழிந்தது. அப்போது படர்ந்த புகையில் தேவாலயமே நிறங்கள் குழைந்து கனவின் சாயல் கொண்டது.

சடங்குகளின் இறுதிக்கட்ட நிசப்தத்துக்குப் பின்னால் பியானோவின் இசை மெல்ல, குழந்தை நடை பழகுவது போல், பரிசுத்தமான படிகள் எடுத்து வைத்தது. குரல்கள் ஒவ்வொன்றாக அதில் சன்னமாக கூடி இணைந்தன. கோடைகாலக் காலையொன்றில் சிற்றோடை பொன்னொளிர ஒழுகிச்செல்வது போல அந்தக் குரல்களின் மனிதர்கள் அனைவரும் அவர்கள் மட்டுமே அறிந்த புனித யாத்திரை ஒன்றில் சேர்ந்து புறப்பட்டார்கள். அவர்கள் தலைகளெல்லாமே அந்த இளைஞனின் அதே அசைவில் குனிந்திருந்தன. ஆம், அதே அசைவு. அதே பொன்னிற அசைவு. ஒரு கணத்தில் அங்கே நான் மட்டும் தான் இருக்கிறேன், அனைத்துமே எனக்குள் நிகழும் என் கனவு என்று தோன்றலானது.

இரவெல்லாம் அதை எண்ணி எண்ணிப் பார்த்தேன். அந்த இளைஞனின் அசைவு ஏன்  அவ்வளவு தெய்வீகமாகத் தோன்றியது? அது அவன் அழகினாலோ அது மாதாவின் சன்னிதி என்பதாலோ மட்டும் உருவாகவில்லை. அங்கே தன்னை சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த இளைஞனின் உள்ளம் ஓர் உணர்வை அடைந்தது. அந்த சிறு அசைவு அதன் வெளிப்பாடு தான். அதை விட முக்கியமாக அது அவனில் நிகழ அவன் அனுமதித்தான். அது தான் அவன் தெய்வீகம்.

வழிபாட்டுணர்வு என்றால் “நான்” உன்னை வணங்குகிறேன் என்பதல்ல. அதில் “நீ” மட்டும் தான் இருக்கிறாய். நீ, உன் பாதம். இது தலை வைக்கும் இடம் தலை கொடுக்கும் இடம் இங்கே அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டதென்ற பிரக்ஞை. அங்கே மண்டியிடாமல் இருக்க முடியாது. மிகச் சுதந்திரமான இயல்பான செயல் அது மட்டும் தான். The most perfect natural freedom. அதை அவன் அடைந்திருந்தான். அது தான் அவன் தெய்வீகம்.

ஆனால் அப்படி தலை வைக்க தலை கொடுக்கும் இடம் எது? அங்கே இருப்பது யார்? யார் அந்த “நீ”? என்னால் அந்தப் புதிரை அவிழ்க்க முடியவில்லை. அப்படியே உறங்கிவிட்டேன்.

ஏழாம் நாள் நான்கு மணிக்கு சற்று முன்னால் தேவாலயம் சென்றேன். இரும்புக்கதவுக்கு வெளியே நின்று கரிய அலங்கார இடைவெளிகள் வழியாகப் பார்த்தேன். வழிபாடுகளுக்கான ஆயுத்தங்கள் நடந்துகொண்டிருந்தன. தூபக்கலன் மேஜை மேல் இருந்தது. அதன் சங்கிலிகள் ‘என்னை தூக்கிக்கொள்’ என்பதுபோல் கீழே துவண்டிருந்தன. சாப்பலின் மையமாக பொறிக்கப்பட்டிருந்த பைசண்டைன் பாணி படத்தில் இரவின் ஆகாசத்தை உடுத்தியது போல ஆழமான நீல நிற ஆடையில் மாதாவும் அவர் கரங்களில் ரத்தச்சிவப்பு ஆடையில் சிசுவும் வீற்றிருந்தார்கள்.

அந்த இளைஞன் இன்னும் வர நேரமிருந்தது.

நான் இரும்புக் கதவை மெல்லத் திறந்தேன். எளிதாகத் திறந்தது.

அந்த இளைஞனின் அனுதின காலடிகளில் என் பாதங்களை பதித்து வைப்பது போல வாசலைக் கடந்து நடந்தேன். அவன் தினந்தோரும் மண்டியிடும் இடத்துக்கு வந்தேன். என் கால்கள் மண்டியிட்டன. முகம் கவிழ்ந்தது. இமைகள் மூடின.

ஆம், அவனை நடிக்க முடியுமா என்றே நான் முற்பட்டேன். அவனாக ஆக வேண்டும் என்ற பெரும் விருப்பம் எனக்குள் மூண்டது. அதுவே என் கால்களையும் கைகளையும் இயக்கியது. அவனாக நடிப்பதன் வழியாகவாவது அவன் பார்த்ததை நான் பார்க்க முடியுமா, அந்தத் தொடுகையின் ஒரு கணத்தை அடைய முடியுமா என்று என் உள்ளம் ஏங்கியது. நடித்து நடித்தே அங்கே செல்ல முடியும் வேறு வழியே இல்லை என்ற வலுவான எண்ணமே என்னை அந்த பொழுதில் மிகச்சிறப்பான நடிகை ஆக்கியது. ஆகவே அவனைப்போலவே நுழைந்தேன். மண்டியிட்டேன். முகம் கவிழ்த்தேன். முகம் கவிழ்ந்த அந்தக் கணத்தில் நான் நடிக்கவில்லை என்பதை உணர்ந்தேன்.

அந்த இருட்டில் எதையும் பார்க்கவில்லை எதையும் நினைக்கவில்லை. எண்ணமே இல்லை. சுற்றிச் சூழ்ந்து பெரிதாக மிகமிகப் பெரிதாக… எது? நீலம் வானம் நட்சத்திரம். எனக்குள் கண்ணீர் பெருகிப் பெருகி வந்தது.

எதற்காக? எதற்காக இத்தனை பேரழகு? இதை எப்படிச்சொல்வது?

இதோ, இப்படி, நடிப்பை நீட்டிக்கொண்டே, நடிப்பு அழியும் கணங்களுக்காக ஏங்கிக்கொண்டபடி சொல்லிப்பார்க்கிறேன். நடிப்பைத் தவிர இதெல்லாம் பேச என்னிடம் வேறு பாஷை இல்லை.

அன்புடன்

சுசித்ரா

நீலி நேர்காணல்: ”இலக்கியத்தின் ரகசிய ஓடைகளை நம்பித்தான் எழுத்தும் மொழியாக்கமும் செய்யப்படுகிறது”: சுசித்ரா

[நேர்காணல் : நீலி]

(தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பு உலகம் & The Abyss சார்ந்து உரையாடல்)

(போஸ்டர்: கீதா)

சுசித்ரா தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். 2020-ல் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘ஒளி’ வெளியானது. தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார். 2017-ல் Asymptote புனைவு மொழியாக்கத்துக்கான சர்வதேச பரிசை “பெரியம்மாவின் சொற்கள்” சிறுகதை மொழியாக்கத்திற்காக பெற்றார். இந்திய இலக்கியங்களுக்கிடையேயான உரையாடலை மொழிபெயர்ப்பு மூலமாக முன்னெடுத்துச் செல்ல மொழிபெயர்ப்பாளர் ப்ரியம்வதாவுடன் இணைந்து “மொழி” தளத்தை நிறுவியுள்ளார். அருணவா சின்ஹாவை ஆசிரியராகக் கொண்ட South Asia Speaks மொழிபெயர்ப்பு சார்ந்த பட்டறைக்கான குழுவில் மாணவராக இருந்தார். இதன் மூலம் ஏப்ரல் 2023-ல் எழுத்தாளர் ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலை மொழிபெயர்ப்பு செய்து ஜாகர்னட் பதிப்பகம் வெளியீடாக வெளியிட்டுள்ளார். ஜெயமோகனின் விஷ்ணுபுரம், குமரித்துறைவி ஆகிய நாவல்களின் மொழிபெயர்ப்பில் உள்ளார்.

முதன்மையாக சுசித்ரா இயங்கிக் கொண்டிருக்கும் மொழிபெயர்ப்பு உலகம் சார்ந்தும், அவரின் முதல் முழு நீள மொழிபெயர்ப்பான ”The Abyss” சார்ந்தும் நீலிக்காக ஒரு உரையாடல்.

எழுத்தாளர் ஜெயமோகன், எழுத்தாளர் சுசித்ரா

முதன்மையாக ஏழாம் உலகம் நாவலின் மொழிபெயர்ப்பான ”The Abyss” -க்கு வாழ்த்துக்கள் சுசித்ரா. எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் சிறுகதைத் தொகுப்பின் மொழிபெயர்ப்பான “Stories Of The True”-க்குப் பின் வந்திருக்கும் இரண்டாவது மொழிபெயர்ப்பு இது. ஏழாம் உலகம் தன்னளவில் ஒரு கனமான நாவல். அதனை இயக்குனர் பாலா ‘ நான் கடவுள்’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து தன் வாழ்வின் மன நெருக்கடியான காலகட்டத்தைக் கடந்ததாக ஜெ குறிப்பிட்டுள்ளார். ஜெ -வின் படைப்புகளில் ஏழாம் உலகம் நாவலை நீங்கள் மொழிபெயர்ப்பு செய்ததற்கான காரணம் பற்றி சொல்லுங்கள்.

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ரம்யா. இந்த நாவலை மொழியாக்கம் செய்வதற்கான முக்கியமான காரணம் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் ஐயா தான். பெரியம்மாவின் சொற்கள் சிறுகதை மொழிபெயர்த்து வெளிவந்தபோது அ. முத்துலிங்கம் வாழ்த்து தெரிவித்ததோடு ஜெயமோகனின் எழுத்துக்களில் முதன்மையாக மொழிபெயர்க்கப்பட வேண்டியது ஏழாம் உலகம் தான் என்றார். அது உலக வாசகர்களுக்கு போய்ச்சேர வேண்டும் என்றும் அதை பரிசீலிக்குமாறும் அப்போதே என்னிடம் சொல்லியிருந்தார். பிறகு 2021-ல் மீண்டும் கேட்டார்.

2015-ல் ஏழாம் உலகம் வாசித்தேன். முதன்முதலில் வாசித்தபோது அந்த உலகம் எனக்கு அந்நியமாக இருந்தது. என்னால் அதனுள் நுழைய முடியவில்லை. ஏழாம் உலகம் போன்ற நாவல்கள் வாசகர்களுக்கு முகப்பில் ஒரு சவாலை வைத்துவிட்டே தொடங்குகின்றன என்று நினைக்கிறேன். தீட்சை பெறுவது போன்ற சவால். அந்த வாசலைத்தாண்டும் வாசகனுக்கே நாவல் தன் கதவுகளை திறக்கும் போலும்.  2021 ஆண்டில் அ.முத்துலிங்கம் அவர்கள் என்னை மீண்டும் கேட்டபோது திரும்ப வாசித்தேன். அப்போது அந்த நாவலின் முழு அர்த்தத்தளமும் எனக்குத் திறந்துகொண்டது. அதன் பீபத்சத்தின் உள்ளே உள்ள அழகும் அறிவார்ந்ததனமும் தெரிந்தது. அதை மொழிபெயர்க்க முடியும் என்ற நம்பிக்கையும், மொழிபெயர்க்க வேண்டும் என்ற உத்வேகமும் பிறந்தது.

முழுவதுமாக வட்டார மொழியில் எழுதப்பட்ட நாவல். ஆகவே மொழிபெயர்க்கவே முடியாத நாவல் என்று பல நண்பர்கள் கருதினார்கள். அந்த வட்டார மொழிக்கு அடியில் ஒரு அந்தரங்க மொழி ஒன்று அந்த நாவலில் உள்ளது. அதை என்னால் கண்டடைய முடியுமா என எழுதிப்பார்த்து அது சாத்தியமானபோது அதை மொழிபெயர்ப்பு செய்யலாம் என முடிவெடுத்தேன்.

ஒட்டுமொத்தமாக இந்த மொழியாக்கத்திற்கு முக்கியக்காரணம் அ.முத்துலிங்கமும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும். ஒரு தனி நபரை ஊக்கப்படுத்தி உதவித்தொகையும் அளித்து மொழியாக்கம் செய்வதற்கு உதவுவது தமிழ்ச்சூழலில் வரவேற்கத்தக்க ஒன்று.

தமிழ்ச்சூழலில் ஏழாம் உலகம் நாவல் மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் என்ன?

ஒரு நாவலை மொழிபெயர்க்கும்போது அதை மறுவாசிப்பு செய்யும் சூழலை உருவாக்குகிறோம். ஏழாம் உலகம் வந்து இருபது வருடங்கள் ஆகின்றன. அது தமிழ்ச்சூழலில் இன்னும் சரியாக வாசிக்கப்படாத நாவல் என்றே இப்போது கருதுகிறேன். அதன் சமூகச்சித்திரங்கள் தாண்டி, அதன் ஆன்மீக தரிசனமோ நகைச்சுவை வழியாக அது அடையும் உச்சங்களோ இன்னும் அதிகம் பேசப்பட இடம் உள்ளது. இன்று ஒரு மொழிபெயர்ப்பு வருவதால் அது மீள் வாசிப்பு செய்யபடுகிறது. திரும்பத்திரும்ப நல்ல ஆக்கங்கள் பேசும் சூழல் ஏற்படுவது முக்கியமானது. ஒரு ஆக்கம் பல மொழிகளில் சென்று அடைவது அந்தப்படைப்பு புத்துணர்வாக இருப்பதற்கு உதவுகிறது.

மொழிபெயர்ப்பு என்பது வாசிப்பை விட ஒரு படி மேலே போய் ஆசிரியருடன் இணையாகப் பயணம் செய்யும் அனுபவம் இல்லயா. ஜெயமோகனின் படைப்புகளில் நீங்கள் ஏழாம் உலகத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது உங்கள் தேடலையும் சொல்கிறது. அதைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஐரோப்பிய மறுமலர்ச்சி காலகட்டத்தில் இத்தாலியில் பழைய கிரேக்க சிற்பங்களை மறுகண்டடைவு செய்தார்கள். அவை மண்ணுக்கடியில் புதைந்திருந்தன, காலத்தால் மறக்கப்பட்டிருந்தன. அவை மறுகண்டிபிடிப்பு செய்யப்பட்டபோது தான் ஐரோப்பாவில் மறுமலர்ச்சியே தொடங்கியது. அந்த சிற்பங்களால் உத்வேகம் கொண்டு, அதன் தாக்கத்தில் கலை படைக்க அது போன்ற சிற்பங்களை செய்ய வேண்டுமென ஒரு படையே கிளம்பி வந்தது. அதில் தான் டானடெல்லோ, மைக்கேல் அஞ்சலோ, லியணார்டோ டாவின்சி போன்றவர்கள் வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மாஸ்டர். அவர்கள் செய்வதை மாணவர்கள் ஜன்னல் வழியாகப் பார்ப்பதும் அவர்கள் செய்வதைப் பட்டறையில் சென்று பயிற்சி செய்வதும் நடந்தது. இன்றைய காலகட்டத்தில் ஜெயமோகன் அப்படிப்பட்ட மாஸ்டர் தான். மொழியாக்கம் என்பது அப்படி ஒரு பயிற்சியை அடைவதற்கான ஒரு சாத்தியம் தான்.

மொழிபெயர்ப்பு செய்யும் போது அதன் ஆசிரியர் அங்கு இருப்பதில்லை. அப்படி இருப்பதும் ஒரு வகையில் சுமை. சில மொழிபெயர்ப்பாளர்கள் அந்தந்த எழுத்தாளர்களுடன் வார்த்தைக்கு வார்த்தை உடனிருந்து மொழிபெயர்த்ததாகச் சொல்வார்கள். என்னால் அது இயலாது. ஒரு முன் வரைவை முடித்தபின், சில இடங்களில் இதை உத்தேசித்தீர்களா என சந்தேகம் கேட்டுக் கொள்ளலாம். அவ்வளவு தான். ஒரு மொழிபெயர்ப்பாளராக என் உரையாடல் படைப்புடன் தான். படைப்பின் உச்சகணத்தில் இருக்கும் ஆசிரியர் மனத்துடன் தான்.  அதன் வழியாக ஒரு கல்வி நிகழ்கிறதென்றால் அதுவே எனக்கு பிரதானம். 

மொழியாக்கம் முடிந்த பிறகு ஜெயமோகனுடன் ஓரிரு மணிநேரங்கள் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அது படைப்பு உருவான விதத்தை பற்றி சில தெளிவுகளை அளித்தது. அந்த உரையாடலின் பகுதியை அவர் ஒப்புதலோடு ஒரு நேர்காணலாக புத்தகத்தில் இணைத்திருக்கிறேன்.

அப்படியானால் மொழிபெயர்ப்பு என்பது ஒரு வகையான மிகக்கூரிய வாசிப்பு தானே? அப்படி வாசிக்கும் போது வாசகர்கள் அதுவரை கண்டறியாத அல்லது அதிகம் பேசாத விஷயங்களைக் கூட மொழிபெயர்ப்பாளர்கள் கண்டறியலாம் இல்லயா. அப்படியாக நீங்கள் இந்த மொழிபெயர்ப்புப் பயணத்தில் கண்டடைந்த முக்கியமான இடம் பற்றி…

அமாம். அது கோயிலில் அதிகம் பேர் கவனிக்காத சிற்பத்தை கண்டுகொள்ளும் பரவசத்துக்கு இணையானது. ஏழாம் உலகில் அகம்மது குட்டி என ஒரு கதாப்பாத்திரம். அவரால் எழுந்து நடக்க முடியாது. ஆனால் பெரிய படிப்பாளி. துண்டுகள், காகிதங்கள் ஒன்றுவிடாமல் படிக்கக்கூடியவர். ஒரு நாள் நாளிதழில் நவீன ஓவியம் ஒன்றை பார்த்துக்கொண்டிருக்கும் போது ராமப்பன் என்ற தொழு நோயாளி இணைந்துகொள்வார். இது என்னையா கை கால் மூக்கு எல்லாம் உருதெரியாத மாதிரி வரஞ்சு வச்சிருக்காங்க என்று கேட்பார். மாடர்ன் பெயிண்டிங்கில் அது தான் அழகு என்று அகமதுகுட்டி விவரிப்பார். ராமப்பன் தொழுநோய் வந்து மழுங்கின தன் விரலால் காகிதத்தை சுரண்டி கிரண்டி பார்ப்பார். அவருக்கு ஒன்றும் புரியாது. இறுதியில், ‘சரி மனுஷனுக்கு ஓரோ களி’ என்று முடிப்பார். அந்த இடம் பெரிய புன்னகையை வரவழைத்தது. விவாதங்களிலெல்லாம் யாரும் அதிகம் பேசாத இடம் அது. அந்த இடம் மொழியாக்கம் செய்யும் போது தான் திறந்து கொண்டது. வாசகனாக இருந்து கண்டடைவதை விட மொழிபெயர்ப்பாளனாக கண்டடையும் ஒரு இடம் மேலும் பரவசத்தை அளிக்கிறது.

ஏழாம் உலகம்

ஏழாம் உலகம் நாவலின் மொழி வட்டார வழக்கில் உள்ளது. ஜெயமோகன் தான் பயன்படுத்தும் வட்டார மொழியைப் பற்றி சொல்லும்போது அது வட்டார வழக்கு என்பதைத்தாண்டியும் தான் தன் புனைவுக்கு உருவாக்கிக் கொண்ட தனித்துவமான மொழி என்பார். ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் போது அந்தச் சவாலை எப்படி எதிர்கொண்டீர்கள்? மூலத்தை கடத்த மொழி தடையாக இல்லயா?

வட்டார வழக்கு என்பது ஒரு நாவலின் அந்தரங்கமான மொழி வெளிப்படுத்த கையாளப்படும் ஒரு வண்ண வடிவம் என்று சொல்லலாம். நாவலின் தனித்துவமான அழகுக்கு அது முக்கியம். ஆனால் அதை மொழிபெயர்ப்பில் நேரடியாக கொண்டு வர முடியாது. ஏனென்றால் அது தமிழ் மொழியின் வண்ணம். அந்த வண்ணம் வழியாக துலங்கி வரும் அந்தரங்க மொழியை தான் பிரதானமாக மொழிபெயர்ப்பில கொண்டு வர முடியும். உதாரணமாக டால்ஸ்டாயின் ஆக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஒரு பிரெஞ்ச் பேசக்கூடிய ரஷ்யனுக்கும் ஒரு குடியானவன் பேசக்கூடிய ரஷ்யனுக்கும்  சின்னச்சின்ன மொழி வேறுபாடுகளையும் டால்ஸ்டாய் கையாண்டிருப்பதாக சொல்கிறார்கள். அது மொழிபெயர்ப்பில் நம்மை அடைய சாத்தியமில்லை. அவர் சொல்ல வருகிற ”விஷன்”அந்தச் சின்ன மொழிவேறுபாடுகள் இல்லையானாலும் புலப்படும் திறனுள்ள மொழிபெயர்ப்பு தான் முதல் தேவை. இந்த நாவலை பொறுத்தவரை அதன் அந்தரங்கமான மொழியைப் பிடிப்பது தான் அதிலுள்ள சவாலாக இருந்தது. மேலதிகமாக வட்டாரவழக்கின் பிரத்யேக வண்ணத்தின் சில சாயைகளை மொழிபெயர்ப்பில் கொண்டு வரலாம். பேச்சு வழக்கின் சில பிரயோகங்களை நேரடியாக ஆங்கிலத்தில் கொண்டு வருவது வழியாக, சொலவடைகள், நகைச்சுவைகளை நேரடியாக மொழிபெயர்ப்பது வழியாக, பாடல் வரிகளை அப்படியே கையாள்வது வழியாக. இவை எல்லாம் இலக்கண சுத்தமான ஆங்கிலமாக வாசிக்கக் கிடைக்காது. அறியாத சிலர் அதை குறையாகவும் கூறுவர். ஆனால் அது அப்படி அல்ல. அது வேறொரு ஆங்கிலம். புதிய ஆங்கிலம். இலக்கிய ஆங்கிலம். இந்த செயல்பாடுகள் வழியாக அந்த மொழி உரம் பெருகிறது. அதில் புதிய சாத்தியங்கள் உருவாகிறது. இப்படித்தான் மொழிகள் மொழியாக்கங்கள் வழியாக வளம் பெறுகின்றன.

ஜெயமோகனின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் போது எதையெல்லாம் கணக்கில் கொள்வது அவசியம் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு படைப்பிலக்கியத்தை மொழிபெயர்ப்பதென்பது வெறுமே நாளிதழின் ஒரு பத்தியை மொழிபெயர்ப்பது போன்ற விஷயம் அல்ல. சவாலானது. முதலில் மூல மொழியின் நுண்மைகள் கவனித்து உள்வாங்கும் திறமை இருக்க வேண்டும். அதே அளவு ஆங்கிலத்தில் புலமை வேண்டும். படைப்பின் உள் ஆழங்களையெல்லாம் முடிந்த அளவு கணக்கில் கொண்டு அதை கடத்த வேண்டும். அப்போது மொழியும் படைப்பூக்கத்துடன், மூல மொழியின் வீச்சைப் பெற்று தனித்துவமான நடை (style) உடன் அமைந்திருக்க வேண்டும். இவ்வளவு சவால் உள்ளது.

இதில் ஜெயமோகனின் படைப்புகள் தனிச்சிறப்பு மிக்கவை. இன்று வெளிவரும் பெரும்பாலான நாவல்களைப்போல் சமூக அரசியல் சித்திரங்களையோ, உறவு விஷயங்களையோ பேசுவதோடு அவை நிற்பதில்லை. அவற்றில் எப்போதும் கண்டடைவுக்கான ஒரு quest உள்ளது. மொழிபெயர்ப்பாளர் அந்த நுண்தளத்தை எப்போதும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. 

ஒரு கதைக்களம், அல்லது இமேஜ் கையாளப்படுகிறதென்றால், அது ஏன் அவ்வாறு இருக்கிறது, அப்படி அமைப்பதன் மூலம் எதையெல்லாம் உத்தேசிக்கிறார் என்று மொழிபெயர்ப்பாளர் தன் கற்பனையைக் கொண்டு உணர வேண்டும். அந்த உணர்வுகள் மொழிபெயர்ப்பில் கடத்தப்படுகின்றனவா என்று கவனமாக இருக்க வேண்டும். உதாரணம் இந்த நாவலில் மலை மேல் பக்தர்கள் காவடி எடுத்து ஏறும் போது வண்டிமலையும் பெருமாளும் முத்தம்மையை தூளிகட்டி தூக்கிச்செல்லும் இடம். அந்த விவரிப்பின் காட்சித்துல்லியம் அந்த உணர்வை உருவாக்க முக்கியமானது. அப்போது அந்த கவனம் இருந்தது. 

எழுத்தாளர் ஜெயமோகன்

குறிப்பாக ஏழாம் உலகம் நாவலை மொழிபெயர்க்கும்போது நீங்கள் சந்தித்த சவால் பற்றி சொல்லுங்கள்.

மொழி, பண்பாடு, தரிசனம் சார்ந்த சவால்கள் இருந்தன. ஆங்கிலம் முற்றிலும் அந்நியமான மொழி, அதில் இந்த பண்பாட்டின் களத்தை உருவாக்க வேண்டியிருந்தது.  வட்டார வழக்கை மொழிநடையில் உணர்த்துவதும் ஒரு சவால் தான். கெட்ட வார்த்தைகளைப் பற்றி தனியாக சொல்ல வேண்டும். இந்த மொழியாக்கம் மூலம் ஜெயமோகன் ஆங்கிலத்திற்கு சில தரமான கெட்ட வார்த்தைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார் [சிரிக்கிறார்]. பண்பாடு ரீதியாக முருகன் கோவில் வழிபாடு, பண்டாரங்களின் வாழ்க்கை ஆகியவற்றை கடத்துவதில் இருந்த சிக்கலைச் சொல்லல்லாம். மாங்காண்டி சாமியின் பாடல்களை மொழியாக்கம் செய்வதற்கு சித்தர் பாடல்களை பற்றி கொஞ்சம் உள்ளே போய் வாசித்தேன்.

இவை எல்லாம் ‘வாசகர் யார்’ என்ற கேள்வியில் மையல் கொள்கிறது. தமிழ்ச்சூழலில், அல்லது இந்தியச்சூழலில் வாழ்ந்த ஒருவருக்கு இந்த மொழி, பண்பாடு, தரிசனம் எல்லாம் திறந்துகொள்ள சாத்தியம் அதிகம். ஆனால் முற்றிலும் வேறு பண்பாட்டில் உள்ள ஒருவருக்கும் இந்த நூல் தொடர்புற வேண்டும் என்று எண்ணி மொழிபெயர்த்தேன். தேவைப்பட்ட இடங்களில் சில பின்னணி விவரிப்புகளை இணைத்துக்கொண்டேன். ‘முருகன்’ என்றால் நமக்குத் தெரியும். நாவலில் படிமமாக வாசிப்போம். மொழியாக்கத்தில் முருகன் என்னும் போது அவனுடைய அழகான உருவம், இளமை, பழனியில் அவன் ஆண்டியாக இருக்கும் விஷயம், இவ்வளவையும் கதையில் ஊடுருவாமல் அறிமுகப் படுத்த வேண்டியிருந்தது.

ஒரு எழுத்தாளராக இருந்து கொண்டு மொழிபெயர்ப்பு செய்வது உங்கள் படைப்பூக்கத்திற்கு எவ்வகையில் உதவுகிறது?

நான் என்னை ஒரு தொழில்முறை மொழிபெயர்ப்பாளராகப் பார்க்கவில்லை. என்னுடைய பிரதானமான குறிக்கோள் ஒரு இலக்கிய ஆசிரியராக உருவாவது தான். அந்த படைப்பிலக்கியம் எழுதுவதற்கான கருவிகள் கற்றுக்கொள்ளும் பயணத்தில் இருக்கிறேன். அந்தப்பயணத்தில் கற்றுக்கொள்வதற்கான எந்த விஷயத்தையும் விட்டுவிடக்கூடாது என்ற முனைப்பு என்னிடம் உள்ளது. அதற்குத்தேவையான எல்லாவற்றையும் செய்து பார்த்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன். மொழிபெயர்ப்பை அப்படியான ஒரு கருவியாகத்தான் பார்க்கிறேன். மொழிபெயர்ப்பு செய்யும் போது ஒரு படைப்பின் ஆசிரியருடன் இணையாக பயணம் செய்து பார்க்கக் கூடிய அனுபவம் கிடைக்கிறது. மொழிபெயர்ப்பு இல்லாமலும் அது நடக்கலாம்.

எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு பேட்டியில் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. அவர் “போரும் வாழ்வும்” நாவலை வரிக்கு வரி பார்த்து திரும்ப எழுதியதாய் சொல்லியிருந்தார். மொத்தமாகத் திரும்ப எழுதுவது ஒரு சக்திவாய்ந்த கருவி தான். அப்படிச் செய்வது ஒரு மகத்தான ஆசிரியரின் பாதையில் பயணிக்கும் ஒழுக்கை உணரச் செய்யும். அது சில தடங்களை நம்மில் நமக்கே தெரியாமல் விட்டுச் செல்லும். மொழியாக்கம் என்பது அதற்கு நிகரான ஒரு செயல் தான்.

ஒரு ஆசிரியரின் இலக்கிய மொழியைக் கற்றுக் கொள்வது என்பது அவன் ஆழத்தின் சிந்தனை முறையை, அதை அவன் மொழியில் வார்க்கும் விதத்தை கற்றுக்கொள்வது என்று சொல்லலாம். ஒரு விதமான தொடுப்பை/பின்னலைக் கற்றுக் கொள்வது அது. அதாவது அந்தப்படைப்பு காலத்தை, நிகழ்வுகளை எப்படி அடுக்குகிறது. அப்படி அடுக்குவதன் வழியாக எப்படி உணர்வுகளை வாசகனில் கடத்துகிறது. ஒரு எழுத்தின் கலைத்தன்மை என்பது இந்த அடுக்கில் தான் உள்ளது. அது மனதிற்குள் படிய வேண்டும். அதை உருவாக்க முடியாது. அந்த உள்ளுணர்வை நாம் அடைய அந்த படைப்பிற்குள் நாம் வாழும் அனுபவம் நிகழ வேண்டும். தொடர்ந்த வாசிப்பு நமக்கு அளிப்பது அதைத்தான். ஒரு நூலைத்திரும்ப எழுதுவது போன்ற செயல்பாடும் அதற்கு இணையான செயல்பாடு தான். ஆனால் மொழிபெயர்ப்பு என்பது இரு மொழிகளுக்கிடையேயான உரையாடலுக்கு அடியில் இருக்கக் கூடிய ஒரு அந்தரங்கமான கதியை பிடிப்பதை நோக்கிய அனுபவம் தான்.

எடித் வார்டன் என்ற பெண் நாவல் ஆசிரியர் மூன்று முக்கியமான நாவல்கள் எழுதியிருக்கிறார். அதில் ”House of mirth” என்ற நாவலும் ஒன்று. தமிழில் ”களி வீடு” எனலாம். அந்த நாவலின் சில பகுதிகளை மொழியாக்கம் செய்து பார்த்திருக்கிறேன்.  அது ஒரு பெண்ணின் சரிவின் கதை. அவ்வளவு பெரிய சரிவை நாம் எதிர்நோக்க மாட்டோம், அதற்கான பெரிய அறிகுறிகள் ஏதும் ஆசிரியர் வெளிப்படுத்த மாட்டார். நிகழ்வுகளை மட்டுமே அடுக்கி வந்துகொண்டே இருப்பார். ஏதோ ஒரு கட்டத்தில் திரும்பிப் பார்க்கும் போது இவ்வளவு தொலைவு வந்துவிட்டோமே என்று திடுக்கென்று தோன்றும். அதை எப்படி அவர்கள் உருவாக்குகிறார்கள் என்பது பெரிய கலை. அதை நாம் திட்டமிட்டு உருவாக்க முடியாது. ஆனால் அதன் சில சூட்சமங்களை மொழியாக்கத்தின் வழி கற்றுக் கொள்ள முடியும். மொழிக்கு அடியில் பின் தொடர்வதன் வழி கற்றுக் கொள்ள முடியும். அதை தான் மொழியாக்கத்தின் வழி அடைய நினைக்கிறேன். 

பிறகு ஃபன்(fun) என்று ஒன்று உள்ளதல்லவா. மொழியுடன் விளையாடுதல். பெரியம்மாவின் சொற்கள் கதையை நான் மொழியாக்கத்திற்கு எடுக்கக் காரணம் அதிலுள்ள நகைச்சுவை தான். இரண்டு மொழிகளுக்கு இடைப்பட்ட இடத்தில் தான் அது நிகழ்கிறது. அதை வேறு மொழியில் சொல்ல முடியுமா என பார்ப்பதிலுள்ள ஒரு ஜாலியான சவாலை தான் நான் எதிர் கொள்கிறேன்.

உங்கள் சிறுகதைகளில் ஒரு தத்துவார்த்த தேடல் உண்டு. அதுவும் கூட இத்தகைய கனமான நாவலின் அடியோட்டத்துடன் பயணிக்கும் ஆசையைத் தூண்டியதா? இந்தப்பயணம் வழியாக அது சாத்தியமானதா என அறிய ஆவல்.

ஆம், எழுத அப்படிப்பட்ட விஷயங்கள் உள்ளன. ஆனால் எப்படி எழுதுவது என்பது புலப்படாமல் இருந்தது. தத்துவார்த்தமான கேள்வி இருக்கும் பட்சத்தில் தத்துவ நூலை படிக்கலாம். ஆனால் அதை இலக்கியமாக்க முடியாது. வாசகனை அது வார்த்தையால் அடிப்பது போல இருக்கும். இனிமையான வாசிப்பனுபத்தைக் கொடுக்காது. அவனோடு உரையாடாது. கலை அனுபவத்திலிருந்து வரவேண்டும்.  விவரிப்புகள் வழியாக அழகான, அல்லது பேரனுபவமான ஒரு ஞானத்தை உருவாக்கவேண்டும். அதன் வழியாக தத்துவார்த்தமான ஒரு புள்ளியை தொட்டால் அது ஒரு விடை. ‘ஏழாம் உலகம்’ போன்ற ஒரு நாவல் அந்த வகையில் ஒரு மாஸ்டர்பீஸ். படைப்பில் தத்துவம் வருவதில்லை. மனிதன் ஒவ்வொருவனுக்குள் இருக்கும் தத்துவார்த்தமான ஒரு தவிப்பு, ஏக்கம், அது மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது. அப்படி ஒரு நாவலை ஆழமாக பயில்வதன் வழியாகவே நிறைய கற்றுக்கொள்ளலாம். இமேஜ், உருவகம் எப்படி பயன்படுத்தபடுகிறது? இடமும் வெளியும் எப்படி அந்த நேரத்தின் உணர்வுக்கேற்ப உருமாருகிறது? நகைச்சுவையில், அவலத்தில், பகடியில், பாரடாக்ஸில் எல்லாம் அந்த உணர்வு எப்படி வெளிப்படுகிறது? இப்படி நிறைய கவனிக்க உள்ளது. இவ்வளவுக்கு பிறகும் ஒரு ஆசியருக்கு அது கைவருவதும் வராததும் அவரவர் திறன் சார்ந்தது. ஆனால் இதையெல்லாம் கவனித்து கற்பதே பெரிய இன்பம்.

இப்படி ஆழ்ந்து வாசிக்கும் போது இந்த நாவல் எனக்கு அணுக்கமானது. அதை நான் மீள கட்டிப்பார்ப்பது என்பது இனிமையான அனுபவம். அதை செய்வதன் வழியாக அந்த நாவலின் உலகம் எனக்கு நேரடியான அனுபவமானது. அதன் வழியாக நான் ஏதோவொன்று அடைந்தேன். அந்த அடைதல் முக்கியமானது. எந்தவிதத்தில் என்று சொல்லத்தெரியவில்லை. ஒரு பெரிய நிறைவை அளிக்கிறது.

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட மொழியாக்கங்கள், ஆசிரியர்கள் அந்த உலகம் பற்றிய சித்திரத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தமிழில் படைப்புகளும் அதிகம். அதற்கு ஈடுகொடுக்க அதிக எண்ணிக்கையில், ரசனையுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் வேண்டும். ஆனால் ஆரம்பத்திலிருந்தே தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாகக்ம் செய்பவர்கள் குறைவாகத்தான் இருந்து வந்துள்ளனர். முக்கியமான பெயர்கள் என்றால் பத்மா நாராயணன், லட்சுமி ஹோம்ஸ்ட்ராம், என். கல்யாண் ராமன் ஆகியோரை சொல்லலாம். இவர்களைத்தவிரவும் மொழிபெயர்ப்புகள் செய்தவர்கள் உண்டு. ஆனால் அதிகம் அறியப்படவில்லை. அறியப்படாததற்கும் மொழிபெயர்ப்பாளரின் தரத்துக்கும் சம்பந்தம் இல்லை. கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாகத்தான் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்தில் அதிகம் வாசிக்கப்படுகின்றன. ஆகவே வாசகர்கள் குறைவு. மொழிபெயர்ப்புகளை பற்றி பத்திரிக்கைகளில் எழுதக்கூடியவர்கள் குறைவு.  ஆகவே நூல்கள் பிரசுரமானாலும் பல்கலைக்கழக நூலகங்களுக்குப் போய் சேர்ந்ததே தவிர அவை பொது வாசகர்களிடம் பெரிய அளவில் சென்று சேரவில்லை. விவாதிக்கப்படவில்லை. 

அதற்கு ஒரு காரணம், சென்ற நூற்றாண்டில் ஆங்கிலத்தில் வெளிவந்த புனைவுகளை எழுதியவர்களும் அதற்கு அமைந்த வாசகர்களும் நவீனத்துவ மதிப்பீடுகள் கொண்டவர்கள் என்பதாக இருக்கலாம். அவர்கள் உலகத்தை நோக்கியே எழுதினார்கள், உலகத்தால் ஏற்கப்படவேண்டும் என்று விரும்பினார்கள். அதையே ‘இந்திய இலக்கியம்’ என்று கொண்டுசென்றார்கள். மொழிபெயர்ப்புகளில் வெறும் சில சமூக யதார்த்த சித்திரங்களும் வறுமை நிகழ்வுகளும் இருப்பதாகவும் அவை இரண்டாம் நிலை படைப்புகள் என்றும் சொன்னார்கள். வெளிநாட்டு ஆங்கில ஊடகங்கள் நம்முடைய மொழிபெயர்ப்பு இலக்கியம் நோக்கி எந்த ஆர்வமும் காட்டவில்லை. அவர்களுக்கு இந்திய இலக்கியம் என்றால் இந்திய-ஆங்கில இலக்கியம் தான் என்ற பிம்பம் இருந்தது. சல்மான் ருஷ்டி போன்றவர்கள் அந்த நம்பிக்கையை அங்கே நிலைநிறுத்தினார்கள்.

ஆனால் சென்ற பத்து ஆண்டுகளில் இந்த நிலைமை மாறியுள்ளது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உலக இலக்கியங்கள் சார்ந்த ஓர் ஆர்வம் உருவாகியுள்ளது. மக்கள் அவரவர் பேசும் மொழிகளில் அவரவர் கதைகளை சொல்ல வேண்டும், அவை மொழியாக்கம் மூலம் தம்மை அடையவேண்டும் என்ற விருப்பம் உள்ள ஒரு வாசகர் தரப்பு அமெரிக்காவில் உருவாகியுள்ளது. 2008-ல் ராசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் சாட் போஸ்ட் (Chad W Post) என்ற ஆய்வாளர் அமெரிக்காவில் பிரசுரமாகும் புத்தகங்களில் 3% மட்டுமே மொழிபெயர்ப்பு இலக்கியம் என்று கண்டடைந்தார். அந்த எண்ணிக்கையை உயர்த்த பல செயல்பாடுகள் தொடங்கப்பட்டன. இன்று மொழியாக்கங்களை பிரசுரிக்கும் Tilted Axis Press, Open Letter, Fitzcarraldo போன்ற பதிப்பகங்கள் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உருவாகியுள்ளன.

அதன் அலையை நாம் இந்தியாவிலும் உணரத் தொடங்கினோம். இன்று மொழிபெயர்ப்புகள் இந்தியா முழுவதும் ஆர்வத்துடன் வாசிக்கப்படுகின்றன. பதிப்பாளர்களும் புத்தகங்களை பிரசுரிக்க, வணிகப்படுத்த ஆர்வமாக உள்ளனர். வெளிநாட்டினர் மத்தியிலும் ஆர்வம் வலுத்துள்ளது. சென்ற ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசு ஒரு ஹிந்தி நாவலின் மொழியாக்கத்துக்கு வழங்கப்பட்டது (கீதாஞ்சலி ஶ்ரீயின் ரேட் சமாதி – Tomb of Sand). பெருமாள் முருகனின் பூக்குழி நாவலின் மொழியாக்கம் இந்த ஆண்டு சர்வதேச புக்கரின் நெடும்பட்டியலில் இடம்பெற்றது. பெரும்பாலும் அரசியல், அடையாளச்சிக்கல்களை பேசும் நாவல்கள், மத-சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நாவல்கள் பிரபலமடைகின்றன. இவை அனைத்துமே மிகமிக தொடக்கநிலை நிகழ்வுகள் என்றாலும் வரவேற்கத்தக்கது.

மொழிபெயர்ப்பாளர் நந்தினி கிருஷ்ணன்

இங்கே இன்னொன்றையும் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இந்த செயல்பாடுகள் மேலும் கவனத்துடன் நிகழ்த்தப்படலாம். இதையெல்லாம் முன்னெடுப்பவர்கள் மேலும் ஆன்மசுத்தியுடன் நடந்துகொள்ளலாம். தங்கள் இலக்கிய அளவுகோள்கள் என்னவோ அவற்றை தயக்கமே இல்லாமல் முன்னிறுத்தலாம். சமீபத்தில் ஆர்மரி ஸ்க்வேர் என்ற நிதி நிறுவனம் தெற்காசிய அளவில் ஒரு மொழியாக்க போட்டியை நடத்தியது. உலக அளவில் இன்று தலை சிறந்து விளங்கும் மொழிபெயர்ப்பாளர்கள் அதன் நீதிபதிகள். முதல் பரிசு பெறும் நூல் ராச்செஸ்டர் பல்கலையின் சாட் போஸ்ட் நடத்தும் ஓப்பன் லெட்டர் பதிப்பகம் வழியாக வெளியிடப்படும் என்று அறிவித்தார்கள். இந்த போட்டியில் சாரு நிவேதிதாவின் ராஸ லீலா – ஒரு  தமிழ் புத்தகம் – முதல் பரிசுக்கு தேர்வானது (மொழிபெயர்ப்பாளர் நந்தினி கிருஷ்ணன்). பிறகு அந்த புத்தகத்தில் under-age sex சார்ந்து ஒரு கதாபாத்திரத்தின் பேச்சு இடம்பெறுவதால் சட்டச்சிக்கல் வரலாம் என்று சொல்லி அறிவிக்கப்பட்ட பரிசு திரும்ப பெறப்பட்டது. இந்த விவகாரத்தை பற்றி ஏன் சொல்கிறேன் என்றால், இதில் அந்த நிறுவனமும் நடுவர்களும் அந்த நூலின் மொழிபெயர்ப்பாளரையும் ஆசிரியரையும் நடத்திய விதம் ரசனைக்குறியதாக இல்லை. ஒரு புத்தகத்தை பதிப்பிப்பதும் பதிப்பிக்காமல் இருப்பதும் ஒரு பதிப்பாளரின் சுதந்திரம். ஆனால் எழுத்தாளர் மேல் மதிப்பும் நன்னம்பிக்கையும் கொண்டவர்கள் என்றால் ஓர் இலக்கிய பிரதி என்ற அளவில் – அவர்களே தங்கள் ரசனையின் அடிப்படையில் பரிசுக்கு தேர்வு செய்த நூல் என்ற அளவில் –  அந்த சிக்கலான பகுதிகளைப்பற்றி அவர்களிடம் மேலும் ஆலோசித்திருக்கலாம். அதைச் செய்யவில்லை. குறைந்த பட்சம் பரிசை திரும்பப்பெறும் போது வருத்தம் தெரிவிக்கும் தொனி இருந்திருக்கவேண்டும். அது இல்லை. இந்த மேட்டிமைநோக்கை, நுண்மையின்மையை, இத்தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதற்கு எதிராகவே இங்கே மொழியாக்கச் செயல்பாடுகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. 

ஆங்கில மொழிபெயர்ப்பின் உலகம் மைய தமிழ் இலக்கிய உரையாடலிலிருந்து சற்று தள்ளி இருக்கிறது. ஆகவே பெரும்பாலான எழுத்தாளர் வாசகருக்கு இந்த பின்னணிகள் தெரியாது இத்தருணத்தில் முன்வைக்கிறேன்.

ஜெயமோகன் போன்ற முக்கியமான தமிழ் ஆளுமையின் படைப்புகள் அவர் எழுத ஆரம்பித்து 35 வருடங்கள் கழித்து தான் மொழிபெயர்க்க முடிகிறது என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்.

இன்று ஆங்கிலத்தில் வாசிக்கும் இந்திய வாசகர்களுக்கு தங்கள் வரலாற்றை, பூர்வீகத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் பெருகியிருக்கிறது. அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆங்கிலம் வழி கல்வி கற்றவர்கள். ஆனால் இந்தியாவில் வளர்ந்தவர்கள். ஒரு வயதில் தங்கள் பள்ளிப்பாடங்களைத் தாண்டி தங்கள் சுற்றுச்சூழல், வரலாற்றைப் பற்றிய கேள்விகளுடன் வருகிறார்கள். குறிப்பாக எழுதப்பட்ட வரலாறுக்கு மறுபுரமாக பழம் இலக்கியங்களையும் நாட்டார் கதைகளையும் அறிந்துகொள்ள விருப்பம் கொண்டுள்ளனர். பிராந்திய மொழி சார்ந்த அறிவியக்கங்களில் ஈடுபாடு கொண்டுள்ளனர். இது ஓர் அலை. ஆங்கிலத்தில் இன்று இந்த நோக்கில் எழுதப்படும் பல புத்தகங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. பிரபல சினிமாவிலும் இதைக் காண்கிறோம்.

இந்த அலையின் பகுதியாகவே ஜெயமோகன் இன்று மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படுகிறார். ஜெயமோகனின் புனைவுகளைப் போலவே அபுனைவுகள் பெரிய தாக்கம் உருவாக்கும். புனைவை மொழியாக்கம் செய்ய கவனமான மொழியாக்கக்காரர்கள் அவசியம். இப்போது பிரியம்வதா, ஜெகதீஷ், மேலும் சிலர் அவர் புனைவுகளை பிரசுரித்து வருகிறோம். அபுனைவுகளும் விரைவில் ஆங்கிலத்தில் வந்தால் நன்றாக இருக்கும்.

எழுத்தாளர் ஜெயமோகன்

ஏழாம் உலகத்தை நீங்கள் புதிய கலாச்சார பண்பாட்டு புலம் சார்ந்த வாசகர்கள் முன் வைக்கிறீர்கள்அவர்களுக்கு இதை என்ன சொல்லி அறிமுகப்படுத்துவீர்கள்நம் ஆன்மிகமும் மெய்யியலும் அங்கு சென்று சேர்வதற்கான சூழல் அங்கு உள்ளதா?

முதலில் “அங்கு” என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதலில் தமிழ்நாட்டில் ஆங்கில வழியில் படித்து, அங்கிருந்து இலக்கியத்துக்கு வரும் இளைய தலைமுறை வாசக சூழல் ஒன்றுள்ளது. அவர்கள் புனைவு வாசிப்பது அதிகமும் ஆங்கிலத்தில் தான். இதுபோன்ற நூல்கள் முதலில் அவர்களுக்கே படிக்க கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இன்று ஆங்கிலத்தில் வெளிவரும் ஆக்கங்கள் ஒரு போதும் நம் வாழ்க்கையிலுள்ள ஆழமான பிரச்சனைகள் பற்றி பேசுவதில்லை. இன்று நகரத்தில் படித்து வேலையில் இருக்கும் ஒரு முப்பது வயது இளைஞனுக்கோ பெண்ணுக்கோ இருக்கும் உண்மையான பிரச்சனை என்ன? நவீன உலகம், அதன் பல்வேறு அழுத்தங்கள், அதனால் உருவாகும் கவனக்குறைவு, ஆழமின்மை, அதிலிருந்து வரும்  நிறைவின்மை. பிறகு மரபு. முப்பது வயது வரை மரபை பற்றி யோசிக்காமல் ஒரு மயக்கத்தில் வாழ முடியும். ஒரு குழந்தை வரும் போது – அல்லது ஒரு தந்தை இறக்கும் போது – மரபு மீண்டும் வந்து முதுகில் ஏறிக்கொள்கிறது. அதை எதிர்கொள்ளும் கருவிகள் பெரும்பாலும் அவனிடமோ (அவளிடமோ) இல்லை. சாதி பழமைவாதத்துக்குள்ளும் மத நிர்மாணங்களுக்குள்ளும் அரசியலுக்குள்ளும் புகுந்துகொள்கிறார்கள். அல்லது மறுபக்கம், மரபெதிர்ப்பு, அதன் அரசியல். இன்று அன்றாடத்தில் எதிலும் இலட்சியவாதம் இல்லை. தீவிரம் இல்லை. கனவுகளே இல்லை. இன்றைய உலகின் பொத்தாம்பொதுவான உணர்வுநிலையை சலிப்பு-சோம்பல் என்று சொல்லத்தோன்றுகிறது.  இப்படி இருப்பவர்கள் பெரும்பாலானவர்களுக்கு என்ன பிரச்சனை என்ற பிரக்ஞையே இல்லாததை கண்டிருக்கிறேன். ஆனால் தொடர்ந்து ஒரு நிறைவின்மையை உணர்கிறார்கள். 

உன் பிரச்சனை என்ன என்று கதைசொல்லி காண்பிக்க ஒரு புனைவெழுத்தாளன் இங்கு அவசியமாகிறான். அந்த அவகையில் தான் அறம், ஏழாம் உலகம் போன்ற நூல்கள் முக்கியம் என்று நினைக்கிறேன். இந்தியாவில் வாழ்ந்த ஒரு வாசகன் இந்த நூல்கள் பேசும் விஷயங்களை ஒரு சிறு தடையைத் தாண்டினால் எளிதில் வந்தடைந்து விடுவான் என்றே நம்புகிறேன். ஏனென்றால் அவன் மேல் மனம் சிதறலற்றிருந்தாலும் ஆழ் மனதில் கனவுகளின் ஊற்று பரிசுத்தமாகவே இருக்கின்றன. அதை எழுப்புகின்றன இந்த புத்தகங்கள். 

தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்தியா முழுவதிலும் இந்த மனநிலையில் உள்ள வாசகர்கள் இருக்கிறார்கள். ஒரு சிறு அறிமுகம் போதும். மாங்காண்டி சாமியையும் கெத்தேல் சாஹிப்பையும் அவர்கள் எளிதில் கண்டுகொள்வார்கள். அவர்களுள் உறையும் கலாச்சார அலகுகள் அவர்களுக்கு தொடர்புறுத்தும். பிறகு உரையாடவும் செய்வார்கள். Stories of the True வந்தபோது டிவிட்டரில் ஒரு இளைஞர் ஷேர் செய்திருந்தார். அவர் பிஹாரில் இருக்கிறார். போட்டித்தேர்வு மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர். அவரை அணுகி பேசியபோது அவருக்கு மலையாள நண்பர் ஒருவர் இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தியதாகச் சொன்னார். இலக்கியத்தின் ரசகிய ஓடைகளை நம்பித்தான் நல்ல எழுத்தும் மொழியாக்கமும் செய்யபப்டுகிறது.  

நல்ல வாசகர்கள் எங்கிருந்தாலும் இவ்வகைக் கதைகளின் அடிப்படை விழுமியங்களை நோக்கி வந்துவிடுவார்கள் என்றே தோன்றியது. அமெரிக்காவின் ஓஹாயுவிலுள்ள வெண்டி என்பவர் – பேரப்பிள்ளைகளை கண்டவர் – ப்ரியம்வதாவிற்கு Stories of the True பற்றி எழுதியிருந்தார். ஆனால் அந்த தொடர்புறுத்தலில் ஆச்சரியமில்லை. ஒரு கதையின் சில லோக்கலான தகவல்கள் தொடர்புறாமல் போகலாம். ஆனால் அறத்தை, மானுட இலட்சியங்களை பேசும் கதைகள் எதுவானாலும் அவை தேடல் கொண்ட மனங்களில் போய்ச் சேறும்.

ஒரு மொழிபெயர்ப்பாளராக இந்த தொடர்புறுத்தலில் என் பங்கை நான் இப்படி வரையறுப்பேன். நான் கதையின் உணர்ச்சியையே மையமாகக் கடத்துகிறேன். அதற்கு மொழி ஒரு கருவி. மொழியின் அடுக்கில், ஓசை நயத்தில், அவை மனதில் எழுப்பும் படிமங்களில் அந்த உணர்ச்சி உருவாக வேண்டும். பண்பாடு குறிப்புகளை எதிர்கொள்ளும்போது அவற்றை “விளக்க” நான் முற்படுவதில்லை. அடிக்குறிப்புகளோ புத்தகத்துக்குப் பின்னால் பட்டியலிடுவதோ நான் செய்வதே இல்லை. மாறாக கதைப்போக்கில் அதை இன்னொரு புலன் அனுபவமாக எடுத்துறைக்கமுடியுமா என்றே பார்ப்பேன். அதுவே இயல்பான வாசக அனுபவமாக அமையும். ஏழாம் உலகத்தில் வரும் காவடி வர்ணனை ஓர் உதாரணம். தமிழில் காவடி என்றாலே புரியும். ஆங்கிலத்தில் காவடியின் வளைந்த வடிவத்தையும் வண்ணமயத்தையும்  ஆட்டத்தையும் சில கூடுதல் சொற்களால் உணர்த்தியிருக்கிறேன். அந்த சுதந்திரத்தை எடுப்பதன் வழியாக கதையின் உணர்வுதளத்துக்கு மேலும் விசுவாசமாக இருப்பதாக நினைக்கிறேன்.

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்வதன் தேவையை பாரதி.நா.சு தொடங்கி நம் முன்னோடிகள் சொல்லி வந்திருக்கிறார்கள்அதை சாத்தியப்படுத்தியுமிருக்கிறார்கள்ஒரு தமிழ்ஆங்கில மொழிபெயர்ப்பாளராக இதன் தேவையைப் பற்றி உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பாரதி உலக மொழிகள் யாவையும் இங்கு கொண்டு வந்து சேர்ப்போம் என்றும் சொல்லியுள்ளார். அதே போல் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நாட்டமும் அவருக்கு இருந்தது. இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்ற எண்ணமே இப்போது உள்ளது. ஒரு ‘யுனிவர்சல் மைண்ட்’ உள்ள அனைவருக்குமே அவ்விரு எண்ணங்களும் இருக்கும் என்று தான் நினைக்கிறேன். ஏனென்றால் அது இனங்களை மொழி அடையாளங்களைக் கடந்து ஓர் ஒருமைக்கான ஏக்கம் அல்லவா. மொழி என்பது ஒரு வண்ணம், ஓர் அழகான நிற வேறுபாடு. அடுத்த தேசத்தில் இருப்பவரை விடுங்கள், நம் வீட்டில் உள்ள சின்னஞ்சிறு குழந்தை நாம் பேசும் மொழியையா பேசுகிறது? இல்லையல்லவா? அதன் மழலை மொழியில் எத்தனை பேதம், எத்தனை சுவை? ஆனால் அதை மீறி அது சொல்வதை நாமும் நாம் சொல்வதை அதுவும் புரிந்துகொள்ளும்போது நெஞ்சு இனிமையில் அதிர்கிறதே? அந்த இனிய அதிர்வை –  செம்புலப்பெய்நீர் போல் இரண்டு வெவ்வேர் இயல்புடையவை ஒரு புள்ளியில் ஒன்றாவதன் இனிமையை – எண்ணித்தான் நாம் மொழிப்பெயர்க்கிறோம்.  

க.நா.சு “இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்” புத்தகத்தில் உலக இலக்கியங்கள் எல்லாமுமே இங்கு தமிழில் கொண்டு வரப்பட வேண்டும் விவாதிக்கப்பட வேண்டும் என்கிறார். அந்த அறிவுப்பசி அவர்களுக்கு இருந்ததால் தான் நம் இலக்கியம் இன்று இவ்வளவு செழிப்பாக உள்ளது. நம்முடைய முன்னோர்கள் – க.நா.சு, புதுமைப்பித்தன், சு.ரா. எல்லோருமே படைப்பியக்கத்தின் பகுதியாக மொழியாக்கம் செய்து நம் மொழியின் உயிர்ப்பை போஷித்தவர்கள். 

ஒரு மரபாக கைமாற்றப்பட்டு இந்தச் சிந்தனை இன்னும் உயிர்ப்போடு தான் உள்ளது. நல்ல படைப்புகள் உடனேயே நமக்கு மொழிபெயர்ப்புகளாகக்  கிடைத்துவிடுகின்றன. உலக மொழிகள் மட்டுமல்ல, இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகள் விரைவாகவே தமிழுக்கு வருகின்றன. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவதை விட விரைவாக தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்படுகிறது. இது ஆரோக்கியமான விஷயம். அர்ப்பணிப்புள்ள மொழிபெயர்ப்பாளர்களும் நுண்மையும் தேடலும் கொண்ட வாசகர்களுமே நமது சொத்து. லாபம் கருதாது இச்செயல்களில் ஈடுபட்டு நம் கனவுகளை ஆழமாக்குபவர்கள். அவர்கள் எப்போதும் நம் வணக்கத்துக்குறியவர்கள். 

அதே போல, நாம் இங்கு கண்டடையும் அழகு, மெய்மை என்று ஒன்று உள்ளதல்லவா? அதை வெளியில் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் ஒரு வீரியமுள்ள மனதுக்கு இருக்கும். இதில் நம்முடையது உயர்வு, அவர்களுடையது தாழ்வு என்ற எண்ணமெல்லாம் இல்லை. எதோவொரு புள்ளியில், உன்னிடம் புதிதாக சொல்ல என்னிடம் ஒன்று உள்ளது, சொல்லட்டுமா? என்ற பரவசம் தான் அதைச் செய்யத் தூண்டுகிறது. அது தான் பாரதியை அப்படிச் சொல்ல வைத்தது, அதனால் தான் நானும் ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்கிறேன். என்னை பாதித்த, என்னை முழுமை செய்த விஷயங்களை இன்னொருவருக்குச் சொல்கிறேன். “என்” கலாச்சாரம், “என்” மொழியைக் கொண்டு போகிறேன் என்ற மார்த்தட்டல் அல்ல. ஒரு இனிப்பை பகிர்ந்துண்ணுவது போல் தான் அது. நான் அடைந்த அழகனுபவத்தை, உண்மையை என்னைப்போலவே சுவைக்க விருப்பமுள்ளவனுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

ஆங்கிலத்தில் தமிழ் ஆக்கங்களைக் கொண்டு போவதிலுள்ள பயன் மதிப்பு என்ன?

நம் மனதைத்தொட்ட ஆசிரியர்களை வேற்றுமொழியினர் அடைவார்கள் என்ற நிறைவு தான் முதன்மையான நோக்கம்.  வரலாற்றுக் காரணங்களால் ஆங்கிலம் உலகமெங்கும் பேசப்படும் மொழியாக விளங்குகிறது. ஆங்கிலத்தில் வந்தால் அதன் வழியாக மற்ற மொழிகளுக்கு நூல் செல்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது. 

பிறகு உலகளவில் விருதுகளும் அங்கீகாரங்களும் நம் ஆசிரியர்களுக்குக் கிடைக்க வழி செய்கிறது. ஆனால் இது மிகவும் சிக்கலான விஷயம். ஒரு புத்தகத்துக்கு அங்கீகாரம் என்றால் என்ன? புத்தகம் உரிய முறையில் வாசிக்கப்படுவதும், தாக்கம் ஏற்படுத்துவதுமே. தன் புத்தகம் அழகியலில், சிந்தனையில், சமூகத்தில் செல்வாக்கு செலுத்துமென்றால் அதையே ஆசிரியன் முதன்மையாக விரும்புவான். 

விருதுகள் போன்றவை அதற்கு உறுதுணை. இன்று ஒரு தமிழ் புத்தகம் மொழியாக்கமாகி புக்கர் பரிசு வென்றால் அது முற்றிலும் புதிய நோக்கில் தமிழில் மீள்வாசிப்புக்கு வரும். விவாதமாகும். அந்த புத்தகம் தன் சமூகத்துடன் எப்படி உரையாடுகிறது என்பதைத்தாண்டி உலகத்துடன் எப்படி உரையாடுகிறது என்ற புள்ளியில் அதன் அர்த்தத்தளம் மேலும் விரிவடையும். ஆசிரியருக்கும் புத்தகத்துக்கும் அதன் வழியாக கிடைக்கும் கவனமும் பணமும் முக்கியமானது. 

ஆனால் இதன் அரசியலும் கவனிக்கப்பட வேண்டியது. ஒரு நூல் ஆங்கிலத்தில் வருகிறது, சர்வதேச பரிசுகளுக்கு தேர்வாகிறது என்பதாலேயே அது அந்த அங்கீகாரங்களுக்கு தகுதியான நூல் என்று ஆகிவிடுமா? ஆங்கில மொழியாக்கங்களே அருகியிருக்கும் நம் சூழலில் எந்த நூல்கள் மொழியாக்கம் செய்யப்படுகின்றன, எப்படி முன்வைக்கப்படுகின்றன, அவற்றுக்குப் பின்னால் உள்ள நிர்வாக அமைப்பு, கருத்தியல் அமைப்பு எப்படிப்பட்டது என்பது போன்ற பல உட்சிடுக்குகள் உள்ளன. இவை இங்கே வெளிப்படையாக விவாதிக்கப்பட வேண்டும். 

இன்னொரு அரசியலும் உள்ளது. சர்வதேச விருதுகளின் அரசியல். அந்த விருதுகளின் அளவுகோல்கள் என்ன? அவற்றை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? அவை உருவாக்கும் கவனம் நமக்கு ஒரு நலனை உண்டுபண்ணுகிறது, சரி. விருதோடு பணமும் புகழும் கிடைக்கிறது, சரி. ஆனால் இன்று பெரும்பாலான இலக்கிய விருதுகள் தங்களை ‘உலகளாவிய விருதுகள்’ என்று அறிவித்துக்கொண்டாலும் ‘உலகளாவிய தரம்’ சார்ந்து அளிக்கப்படுவதில்லை. சர்வதேச புக்கருக்கு தேர்வாகும் நூல்கள் அனைத்துமே அதற்கு முந்தைய ஆண்டில் பிரிட்டனில் வெளியாகியிருக்க வேண்டும் என்று நிபந்தனை. பிரிட்டனிலோ ஒரு வருடத்தில் வெளியாகும் மொழிபெயர்ப்பு நூல்களே 3%க்கு கீழ். அதிலும் பெரும்பான்மை ஐரோப்பிய மொழிகள். மற்ற மொழி நூல்களை பிரசுரிக்கவே பதிப்பாளர்கள் யோசிக்கிறார்கள். அன்னிய கலாச்சாரங்களை பற்றிய கதைகளை வாசகர்கள் வாங்குவார்களா என்ற பயம். அப்படியிருக்க, எங்கணம் ‘உலகளாவிய’? 

இருந்தாலும், நம் மனதைத் தொட்ட ஆசிரியர்களை உலகுக்கு அறிமுகப் படுத்த நாம் முயற்சி செய்யலாம்.. தமிழின் மாபெரும் படைப்பாளிகளில் ஒருவர் அசோகமித்திரன். அவருடைய நூல்களின் நல்ல ஆங்கில மொழியாக்கங்கள் உள்ளன. அவர் நவீனத்துவர், அழகான ‘ஸ்டைல்’ மற்றும் ‘எகானமி’ உடைய நடை கொண்டவர். அவரை உலக வாசகர்கள் அறியச்செய்ய வேண்டியது நம் கடமை என்று சொல்வேன். அதற்கு வெறுமனே பதிப்பு நிறுவனங்களோ புத்தக வணிகர்களோ போதாது. தமிழில் விரிவாக வாசிக்கிற, ஆங்கிலத்தில் சமகால விமர்சன மொழியை அறிந்த, அதன் வழியே ஒரு படைப்பின் நுண்தளத்தை கூர்மையாக முன்வைக்கக் கூடிய மொழிபெயர்ப்பாளர்களும் புத்தகரசனையாளர்களும் உருவாக வேண்டும். இது தூதுரவு போன்ற ஒரு தொடர்புப் பணி.  அப்புறம் நோபல் பரிசு கிடைத்தால் தான் அசோகமித்திரன் பெரிய எழுத்தாளர் என்று நான் சொல்ல வரவில்லை. அவரை கொண்டு செல்வது அங்கீகாரத்திற்காக அல்ல. வெள்ளையன் குனிந்து பார்த்து தலையைத்தட்ட வேண்டும் என்பதற்காக அல்ல. என்னிடம் இத்தனை பெரிய அருமணி உள்ளது. உங்களால் அதை பார்ப்பதற்கான கண் இருந்தால் பாருங்கள் என்பதற்காகத்தான். ருசிகளைப் பெருக்குவது தான் கலைஞனின் வேலை. மொழிபெயர்ப்பு ரசனை விமர்சனம் என்பது, நம் ருசிகளை உலகத்துக்கு கற்பிப்பதும் தான்.

இன்றைய இந்தியஆங்கில வாசிப்பு சூழல் எப்படியுள்ளது?

க.நா.சுவின் இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் நூலை வரிக்கு வரி இந்திய ஆங்கில சூழலை நோக்கி சொல்ல முடியும் என்ற நினைப்பு வந்துகொண்டே இருக்கிறது. இன்று இந்திய ஆங்கில சூழல் வீரியமற்றுப்போனதாக உள்ளது. அங்குள்ள போக்கு என்பது எல்லாரும் சமம் தான். எல்லாரும் எழுதுவது இலக்கியம் தான். எழுதுபவனை ஊக்குவிப்போம். எல்லோரும் சேர்ந்து எழுதி ஊக்கப்படுத்தி புத்தகங்களை விற்று மகிழ்ச்சியாக இருப்போம். இதுவே பொதுப்போக்கு. 

அப்புறம் எதற்கெடுத்தாலும் அரசியல். கள அரசியல் அல்ல. மக்களிடமிருந்து உருவாகும் அரசியல் அல்ல. மேலிருந்து, பல்கலைக்கழகங்கள் விதைத்துப் பரப்பும் கருத்தரசியல். அல்லது கட்சிகள் விதைக்கும் கருத்தரசியல். ஆங்கிலத்தில் வாசிப்பவர்கள் ஊடகம் வழியாக அவற்றை அறிந்துகொண்டு ஒப்பிப்பதே மிகுதியாக உள்ளது. மேலும்  இன்று அரசியல் சுத்தம் என்று ஒன்று உருவாகிவந்துள்ளது. எல்லோரும் தீட்டு பார்க்கிறார்கள். அச்சச்சோ நான் எவ்வளவு சுத்தமானவள் தெரியுமா என்று சொல்லிக்கொள்வதற்காகவே புத்தகம் தேர்ந்தெடுத்து படிக்கீறார்களோ என்று தோன்றுகிறது. இந்த மாமித்தனம் இந்திய ஆங்கிலச் சூழலில் ஒரு பெரிய சாபக்கேடு.

ரசனையுள்ளவர்களே இல்லை என்று சொல்ல மாட்டேன். துடிப்பும் நெருப்பும் உள்ள சில எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். நுண்ணுணர்வு மிக்க வாசகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் குரல் பெரிதாக கேட்கவில்லை. அவர்கள் இந்தியாவெங்கும் எங்கே இருக்கிறார்கள் என்று பரஸ்பரம் தெரியாமல் இருக்கிறது. ரசனை அடிப்படையில் இலக்கியத்தை பற்றிப் பேச தீவிரமான களங்கள் இல்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆகையினால் அப்படி வாசிப்பவர்கள் வாசித்து பேசாமல் இருக்கலாம். ஆனால் இது ஒரு மொழிச்சூழலுக்கு ஆரோக்கியமானது அல்ல. பேசவேண்டும். கநாசு சொல்வது போல் ஊர்க்கு 1000-2000 பேர் என்று ஒரு கோஷ்டி உருவாக வேண்டும். புத்தகம் என்பது பண்டம் இல்லை. நல்வாழ்க்கை நல்கும் உபதேசம் அல்ல. தன்னுடைய அரசியல்சரிகளை பிரஸ்தாபித்துக்கொள்ளும் fashion accessory அல்ல. இலக்கியத்தின் நோக்கம் என்பது அழகை உருவாக்குவது. சிந்தனையை உருவாக்குவது லட்சியங்களை உருவாக்குவது. கனவுகளை பெருக்குவது. இந்த உணர்வு உருவாக வேண்டும்.

மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போது வந்தது. உங்களுக்கு ஆதர்சமான மொழிபெயர்ப்பாளர் பற்றி சொல்லுங்கள்.

ஆதர்சமாக குறிப்பிடத்தக்க ஒரு பெயர் என்றால் அசோகமித்திரனைத்தான் சொல்ல வேண்டும். அசோகமித்திரன் மொழிபெயர்ப்பாளராக அறியப்பெற்றவர் அல்ல. ஆனால் நான் வாசித்ததில் மிகச்சிறந்த சில மொழியாக்கங்களை அவர் செய்திருக்கிறார். சமீபத்தில் வண்ணநிலவனின் எஸ்தர் கதையை அவர் மொழியாக்கத்தில் ஆங்கிலத்தில் வாசித்தேன். Indian Literature என்ற இதழில் பல தசாப்தங்களுக்கு முன் வெளியானது. அந்த கதையின் அனைத்து நுண்தளங்களையும் உணர்வுகளையும் அவரால் மொழிபெயர்ப்பில் கடத்திவிட முடிந்திருந்தது. மிகச்சரளமான எழுத்து நடை. ஒரு வார்த்தை கூடுதல் குறைவு இல்லை. அது ஓர் இலட்சிய மொழிப்பெயர்ப்பு.  அது தான் தர நிர்ணயப்புள்ளி என் வரையில். 

இலக்கிய ஆசிரியர்கள் மொழிபெயர்க்கலாமா என்ற ஐயம் எனக்கு இருந்துள்ளது. அசோகமித்திரனின் மொழிபெயர்ப்பை வாசித்தபோது அது அகன்றது. அதில் இருந்தது வண்ணநிலவனின் மொழி தான். ஆனால் அசோகமித்திரன் என்ற படைப்பாளியால் எடுத்தாளப்பட்டிருந்தது. மொழியாக்கம் என்பது வெறுமனே வார்த்தைமாற்றல் விளையாட்டு என்று நான் நினைக்கவில்லை. கொஞ்சம் interpretation – எடுத்தாள்கைக்கான சுதந்திரம் உள்ள கலை தான் அது என்று நினைக்கிறேன். ஒரு மாஸ்டர் கம்போஸரின் இசையை ஒரு கண்டக்டர் எடுத்தாள்வது போல. எடுத்தாளும் போது மூலத்தின் அழகு மேலும் துலக்கம் பெற வேண்டும், படைப்பு மேலும் உயிர்ப்புடன் எழ வேண்டும். அவ்வளவு தான் நியதி. அந்த அற்புதமான கலவை அந்தப் பிரதியில் நிகழ்ந்திருந்தது.மற்றபடி நுண்ணுணர்வுடைய தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்புகள் சொர்ப்பம் தான். தி.ஜா வின் அம்மா வந்தாள் நாவலின் ஒரு மோசமான மொழிபெயர்ப்பை ஒரு காலத்தில் படிக்க நேர்ந்தது. இதை விடத் தரமாக நாமே செய்யலாமே என்று தோன்றலானது. அங்கிருந்து தான் என் பயணம் தொடங்கியது என்று நினைக்கிறேன்.

இலக்கிய மொழிபெயர்ப்பாளர்களிடம் இருக்க வேண்டிய தரம் என்ன?

இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள் முதலில் நல்ல வாசகர்களாக இருக்க வேண்டும். இரு மொழிகளிலும் புனைவு மொழியை லாவகமாக கையாளும் கலை தெரிந்திருக்க வேண்டும். ஓர் ஆசிரியரை மொழிபெயர்க்கிறார் என்றார் அவர் படைப்பு மனநிலையை ஊகிப்பவர்களாக, பின் தொடர்பவர்களாக இருப்பது அவசியம் என்று கருதுகிறேன். போன பதிலில் சொன்ன ‘எடுத்தாள்கை’ என்ற கருத்தின் நீட்சி தான் இது. மரச்சிற்பத்தைப் பார்த்து கற்சிற்பம் செய்வது போல் தான். மரமும் கல்லும் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டவை. அந்த குணாதிசயங்களை கணக்கில் கொண்டு தான் ஒன்றில் நிகழ்ந்துள்ளதை இன்னொன்றில் நிகழச்செய்ய வேண்டும். இதற்கு மேல் ஒரு மொழிபெயர்பபளர் ஒரு சூழலில் ஒரு விமர்சனப்பணியையும் செய்கிறார். அவர் மொழிபெயர்க்கும் நூல்கள் மேலும் கவனம் பெறுகின்றன. தன் ரசனையையை அதற்கு அளவுகோளாக பயன்படுத்துகிறார். ஆகவே மொழிபெயர்பபளர் விமர்சகராக, ரசனை மதிப்பீடுகளின் அடிப்படையில் புனைவுகளை பற்றிப் பேசக்கூடியவராக இருப்பதும் அவசியம் என்று நினைக்கிறேன்.

THE ABYSS

ஏழாம் உலகம் மொழிபெயர்ப்பு செய்ய எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது

நான்கு மாதங்களில் அந்த மொழிபெயர்ப்பை செய்து முடித்தேன். நவம்பர் 2021 தொடங்கி மார்ச் 2022-ல் முடித்தேன். அதன் பின் அதற்கு ஒரு பதிப்பக நிறுவனத்தைக் கண்டறிந்து அதை பிரசுரிக்க ஒரு வருடம் ஆகியுள்ளது.

தமிழ் பதிப்பகங்கள் இன்னும் தமிழ்ஆங்கிலம் மொழிபெயர்ப்பு முயற்சிகளை எடுக்க வேண்டுமா?

இரு பக்கங்களிலிருந்தும் ஆர்வம் எழ வேண்டும் என்று நினைக்கிறேன். நான் இப்போது ஐரோப்பாவில் இருக்கிறேன். இது ஒரு கண்டம். ஆனால் இங்கு ஒரு ஜெர்மன் மொழியில் நாவல் வந்தால் உடனே பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படுகிறது. எழுத்துக்கலையுடன் பிற கலைகளும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் பல மொழிகள் பேசினாலும் ஒற்றைப்பண்பாடு, ஒற்றை அறிவியக்கம் என்ற உணர்வு அவர்களுக்கு உள்ளது. நமக்கு அப்படியல்லாதது வருத்தமளிக்கிறது. 

இன்று தமிழ், ஆங்கிலம், இரண்டு பதிப்புச் சூழல்களும் ஒன்று மற்றொன்றை சந்தேகத்துடன் காண்பதாக ஊகிக்கிறேன். ஏனென்றால் அவை உரையாடிக்கொள்வதற்கான வெளிகளே இல்லை. மேட்டிமைநோக்கு, அப்படி ஒரு நோக்கு இருக்கக்கூடுமோ என்ற ஐயம் போன்றவை திறந்த மனமுடைய உரையாடலை தடைசெய்கின்றன. இந்த பனிச்சுவர்கள் உடைய வேண்டும். பரஸ்பரம் மரியாதையும் நன்மதிப்பும் உருவாக வேண்டும்.

தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்கு இன்று இந்திய அளவில் இருக்கும் பதிப்பகங்கள் பற்றி சொல்லுங்கள்.

இன்று இந்திய அளவில் மையத்தில் இருக்கும் எல்லா பதிப்பாளர்களும் மொழியாக்கங்களை வெளியிடுகிறார்கள். Penguin, Harper Collins, Hachette, Bloomsbury, Juggernaut என்று முக்கியமானவர்கள் எல்லோரும் இந்தக் களத்தில் இருக்கிறார்கள். இது கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்த முக்கியமான வரவேற்க்கத்தக்க விஷயம். வெளிநாடுகளை பொறுத்தவரை மொழியாக்கங்களை, குறிப்பாக தெற்காசிய மொழிகளிலிருந்து வரும் நூல்களை வெளியிடுவதில் கொஞ்சம் தயங்குகிறார்கள் என்பது உண்மை. ஆனால் முன்பை விட நிலைமை மேம்பட்டுள்ளது. Tilted Axis Press போன்ற பதிப்பகங்கள் மொழியாக்கங்களை வெளியிடுவதையே மையச் செயல்பாடாக கொண்டுள்ளது. சமீபத்தில் வெளிவந்த சல்மாவின் ‘Women Dreaming’ (தமிழில்: மனாமியங்கள்) புத்தகத்தை வெளியிட்டவர்கள் இவர்கள் தான் (மொழிபெயர்ப்பாளர்: மீனா கந்தசாமி). 

ஆனால் இவ்வகை பதிப்பகங்கள் மொழியாக்கத்தை ஆதரிப்பதை பெரும்பாலும் ஓர் அரசியல் நிலைப்பாடாகக் காண்கிறார்கள். அவர்கள் பதிப்பிக்கும் புத்தகங்களும் அந்த அளவுகோல்களின் படியே தேர்வுசெய்யப்படுகின்றன. மொழிபெயர்ப்புகளை பதிப்பிப்பதும் வாசிப்பதும் குரல் அல்லாத மொழிக்காரர்களுக்கு குரல் கொடுக்கும் ‘நற்செயல்’ என்ற நினைப்பிலிருந்து இந்த மனநிலை எழுவதாக எண்ணுகிறேன். இதில் உள்ள ரட்சிக்கும் மனநிலையையும் (saviour complex) புரவலத்தன்மையும் (patronizing tone) சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பதிப்பகங்களுக்கு வியாபார நோக்கமும் சில இலட்சியங்களும் இருக்கலாம். ஆனால் உலகத்தின் பிறமொழி எழுத்தாளர்களை எழுத்தாளர்களாக சமநிலையில் வைத்து உறவாட வேண்டும். யாரும் யாரையும் வியக்கவும் வேண்டாம் இகழவும் வேண்டாம் ரட்சிக்கவும் வேண்டாம்.

மொழிபெயர்ப்பாளர் ப்ரியம்வதா

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்ய நுழையும் ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு இன்று தமிழ்ச்சூழலில் இந்திய அளவில் உலக அரங்கில் உள்ள வாய்ப்புகள் என்ன? உங்களுக்கு ஊக்கத்தொகை கிடைத்ததாகச் சொல்லியிருந்தீர்கள். ப்ரியம்வதா தமிழிலிருந்து முதல் முறையாக வெள்ளையானை மொழிபெயர்ப்பு பணிக்காக PEN-Heim grant பெற்றுள்ளார்இந்தச்சூழல் நேர்மறையாக உள்ளது. இது போல மொழிபெயர்ப்பாளர்களுக்கு இருக்கும் பிற வாய்ப்புகள் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

வாய்ப்புகள் என்றால்… முதன்மையாக ஒருவர் தன் சொந்த ஆர்வத்தால் ஒரு நூலை மொழியாக்கம் செய்து பதிப்பாளரை அணுகி பதிப்பிக்கவேண்டும் என்றால் அதை அவர் செய்யலாம். அதற்கான எல்லா வாய்ப்புகளும் இன்று திறந்திருக்கின்றன. 

ஊக்கத்தொகை இருந்தால் ஒருவர் மேலும் நேரத்தை ஈட்டி கவனமெடுத்து மொழிபெயர்ப்புகளை உருவாக்கலாம். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை – தமிழைப் பொறுத்தவரை – மொழியாக்க ஊக்கத்தொகைகள் என்று எதுவும் இல்லை. ‘ஏழாம் உலகம்’ நாவலை மொழியாக்கம் செய்ய அ. முத்துலிங்கம் அவர்கள் தனிப்பட்ட முறையில் என்னை commission செய்தார். அந்த உதவியோடு ஓராண்டுக்குள் வேலைகளெல்லாம் முடிந்து நூல் வெளிவந்தது. அந்த உதவியில்லாமல் அவ்வளவு விரைவில் அது நிகழ்ந்திருக்குமா என்பது சந்தேகம். இன்று மொழிபெயர்ப்பாளர்களுக்கு மட்டுமல்ல, தமிழில், பிராந்திய மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களுக்கும் grants, commissions கிடைக்கவேண்டும், அதற்கான அமைப்புகள் உருவாக வேண்டும் என்று நினைக்கிறேன். இன்றைய பொருளாதார சூழல் அப்படி. வேலைச்சூழலும் அப்படி. 

நான் சுவிட்சர்லாந்தில் வசிக்கிறேன். இங்கே ஜெர்மன் மொழிக்கு உலக மொழிகளிலிருந்து ஒரு நூலை கொண்டு வர ஒருவர் உத்தேசித்தால் அவ்வளவு உதவித்தொகைகள் கொட்டிக்கிடக்கின்றன. ஜெர்மன் மொழிபெயர்ப்பு செய்ய இயன்றவர்கள் அதை ஒரு முழு நேர வேலையாக செய்யுமளவு சூழல் உள்ளது. அதை ஊக்குவிப்பது ஜெர்மன் அரசு, அவர்ளுடைய கலாச்சார அமைப்பு. அதே போல் ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கோ வேறு மொழிகளுக்கோ புத்தகங்களை கொண்டு செல்லவும் நிதியளிக்கிறார்கள். 

தமிழைப் பொறுத்தவரை ஆங்கில மொழியாக்கத்துக்காவது கொஞ்சம் உதவி கிடைக்கிறது. பணம் பெற முடிகிறது. தமிழுக்கு மொழிபெயர்ப்பவர்களுக்கு என்ன கிடைக்கிறது? நமது அரசு தமிழ் வளர்க்க நினைத்தால் கொரியன், ஜெர்மன், அரபி, சீன மொழிகளைப்போல் நமக்கும் வலுவான கலாச்சார அமைப்புகளை உருவாக்கி இருவழிகளிலும் மொழியாக்கத்தை ஊக்குவிக்க நிதி செலவிட வேண்டும். அல்லது தனியார் ஆர்வலர்கள் எடுத்துச் செய்ய வேண்டும்.

இது இந்திய நிலமை. உலகளவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ய சில ஊக்கத்தொகைகள் உள்ளன. அவை ஐரோப்பாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் அளிக்கப்படுபவை. பிரியம்வதா வென்ற PEN-Heim ஊக்கத்தொகை அதில் முக்கியமானது. 

ஆனால் PEN-Heim-ஐத்தவிர பெரும்பான்மையானவை (அமெரிக்காவின் National Endowment for the Arts உக்கத்தொகை போன்றவை) அந்தந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கே அளிக்கப்படுகின்றன. அதாவது அதற்கு ஒருவர் அமெரிக்காவில் வசிக்க வேண்டும், அல்லது அந்த நாட்டின் குடிமகனாக இருக்க வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆனால் மொத்தமாக பார்த்தால் லாபநோக்கிலான வாய்ப்புகள் குறைவு தான். பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்கள் லாபநோக்கத்துக்காக இந்த வகை நிதியுதவிகளை நாடுவதும் இல்லை. இன்று உலகத்தரத்தில் பெயர்ப்பெற்ற மொழிப்பெயர்ப்பாளர் என்றால் இத்தனை ஊக்கத்தொகைகளை வென்றவர், இத்தனை விருதுகளை வென்றவர் என்று ஒரு கணக்கு வந்துவிட்டது. அவை ஒருவித தரச்சான்றுகளைப் போல் ஆகிவிட்டன. அதன் அடிப்படையிலேயே ஒரு ‘நல்ல’ மொழிபெயர்ப்பாளராக உலகளவில் அறியப்படுவதும், வெளிநாட்டு பதிப்பு வாய்ப்புகளும், புத்தக விற்பனையும் நிர்ணையிக்கப்படுகின்றன. ‘நல்ல’ மொழிபெயர்ப்பாளராக அறியப்படுவது நாம் மொழிபெயர்க்கும் எழுத்தாளர்களுக்கும் வாசல்களை திறக்கிறது. ஆகவே முயற்சி செய்கிறோம. நமக்கிருக்கும் குறைவான வாய்ப்புகளுக்குள் ஏதாவது தேருமா என்று. மற்றபடி இன்று இந்தியாவில் ஒரு சராசரி மொழிபெயர்ப்பாளர் வேலையில் இருந்துகொண்டு தன்னார்வத்தில் செய்யும் ஒரு பணியாகவே மொழிபெயர்ப்பு உள்ளது.

நீங்கள் THE ABYSS -ஐ மொழிபெயர்த்தபின் பதிப்பு செய்து அதை கொண்டு போய் வாசகர்களிடம் சேர்க்கும் ஒட்டுமொத்த தொடர் சங்கிலியில் இருப்பதைப் பார்க்கிறேன். அது தொடர்பாக நிறைய கட்டுரைகள் எழுதுகிறீர்கள். ஆசிரியரை நேர்காணல் செய்து வெளியிடுகிறீர்கள். தொடர்ந்து ஆங்கில இதழ்களில் வெளிவரும் THE ABYSS-க்கான ரசனை விமர்சனக் கட்டுரைகளை பகிர்கிறீர்கள். வாசகர்களுடன் பல தளங்களில் உரையாடுகிறீர்கள். இந்த செயலைப்பார்க்கும்போதே மலைப்பாக உள்ளது. இந்த PROCESS-ன் தொடக்கம் மற்றும் முடிவுப்புள்ளி வரை எங்களுக்கு ஒரு அறிமுகம் கொடுக்க முடியுமா.  

நீங்கள் கேட்பதில் இரண்டு கேள்விகள் உள்ளன. முதலில், மொழியாக்கத்தை பதிப்பித்து கொண்டு சேர்க்கும் “Process”. இரண்டாவது கட்டுரைகள் எழுதுவது, நேர்காணல்கள் செய்வது வழியாக தமிழ் இலக்கியத்தை ஆங்கில வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் செயல்பாடு. 

முதலில் மொழிபெயர்ப்பின் செயல்பாடு பற்றி. ஆங்கில மொழியாக்கத்தின் பெரிய சிக்கல் என்னவென்றால் நமக்கு வாசகன் யாரென்று தெரியாமல் இருப்பது. இங்கே தமிழில் ஒரு நூல் வெளிவந்தால் அதன் வாசகர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்ற ஊகம் நம்மிடம் இருக்கும் அல்லவா. அங்கே அது கிடையாது. அவன் எந்த ஊரைச் சார்ந்தவன், அவனின் உணர்வுகள், ரசனை எப்படிப்பட்டது என நம்மால் உணர முடியாது. அந்த அனாமதேய வாசகனை நோக்கிச் செல்வது தான் நம் சவால்.

ஆகவே ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தபின் நல்ல பதிப்பு கொண்டு வர வேண்டும். அனாமதேய வாசகனை ஈர்க்கும் வகையில் தலைப்பு, முகப்புப்படம், பின்னட்டை, மதிப்புரைகள் என்று அமைந்திருக்க வேண்டும். அந்த படைப்புக்குள் உள் நுழைய வாசகனுக்கு உதவும் வகையில் முன்னுரை இருக்க வேண்டும். வார்த்தைப்பட்டியல் இருக்கவேண்டும். பிறகு நூலைப்பற்றி கவனம் குவியும் வகையில் மீடியாவில் அது சில காலம் பேசப்பட வேண்டும். இதையெல்லாம் கவனமெடுத்துச் செய்யும் பதிப்பகம் அமைய வேண்டும். 

அப்படி ஒரு பதிப்பகத்தை நாம் அடைய ஏஜெண்ட் என்று ஒரு மனிதர் உதவுவார். இந்த ஏஜெண்ட் என்பவர் ஆசிரியர்/மொழிபெயர்ப்பாளருக்கும், பதிப்பகத்துக்கும், பொது இலக்கியச் சூழலுக்கும் இடையே ஒரு தொடர்பு மையமாக செயல்படுவார். சரியான பதிப்பாளரிடம் நம்மை கொண்டு சேர்ப்பார். நம் புத்தகத்தைப் பற்றிப் பேசி கவனத்தை உருவாக்குவார். 

ஆகவே இங்கே செயல்பாடு என்பது – ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், ஏஜெண்ட், பதிப்பாளர், விற்பனையாளர், வாசகர் என்று நீள்கிறது. அங்கே ஆசியரை வாசகர் நேரடியாக அணுகுவது குறைவு தான்.

இது ஆங்கிலச் சூழல் இன்று இருக்கும் விதம். தமிழில் ஒரு புத்தகத்தை பதிப்பிக்க நினைத்தால் நான் பதிப்பாளரை நேரடியாக அழைத்துப் பேசலாம். அங்கே அப்படி இல்லை. எல்லோரும் தங்களை அணுகமுடியாத இடத்தில் கொண்டு போய் வைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் ஒரு ஜும் உரையாடல் நடந்தால் கூட அங்கே மையப்பேச்சாளரிடம் நாம் நேரடியாக ஒரு கேள்வியை கேட்டுவிட முடியாது. மாடரேட்டர் வாயிலாகத்தான் செல்லும். அவர்களுடைய அழுத்தங்கள் அப்படிப்பட்டதாக இருக்கலாம் – நிறைய நச்சரிப்புகள் இருக்கலாம் – ஆனால் உண்மையான இலக்கிய உரையாடலை தடுக்கும் வகையில் தான் அது உள்ளது. எதற்கு சொல்கிறேன் என்றால் – ஒரு ‘பிராசஸ்’ இருப்பதே அரசாங்கத்தனமான விஷயம். அது ஒரு நிர்வாக யதார்த்தம். 

இந்த பிராசஸை வாசிக்கும் தமிழ் வாசகருக்கு ஒருவேளை ஒவ்வாமை ஏற்படலாம். ஆனால் வேறு வழியில்லை. இலக்கிய லட்சியங்கள் கொண்ட ஒருவர் இதை நம் ஆசிரியர்களை உரிய வகையில் அறிமுகப்படுத்தவும் லட்சிய வாசகர்களை அடையவும் ஒரு நல்வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம், அவ்வளவுதான். 

ஒரு மொழிபெயர்ப்பாளராக எனக்கு என்னை இந்த பிராசஸுக்குள் ஓர் அங்கமாக மட்டும் வைத்துக்கொள்ளும் எண்ணமில்லை. தொடர்ந்து எல்லா நிலையில் இருப்பவர்களிடமும் இலக்கியத்தை பற்றி சுதந்திரமாக பேசவே நினைக்கிறேன். இலக்கியவாதி என்பவர் வாசகர் எவராலும் அணுகக்கூடியவராகத்தான் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையை தமிழின் அறிவியக்கத்திலிருந்து பெற்றிருக்கிறேன். அந்த மதிப்பீடுகளை தொடர்ந்து ஆங்கிலத்திலும் முன்வைக்கவேண்டும் என்றும் அதன் படி செயல்பட வேண்டும் என்றும் நினைக்கிறேன். அதன் பகுதியாகத்தான்  ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதுவது நேர்காணல் செய்வது எல்லாம். அவை உரையாடலை உருவாக்கும் என்ற நம்பிக்கை.

சென்ற விஷ்ணுபுரம் விழா 2022-ல் கனிஷ்கா குப்தாவை விஷ்ணுபுர அமர்வு வழியாக அறிமுகம் செய்து கொண்டோம். ”Publishing  Agent” என்ற சொல்லே புதுமையாக இருந்தது. விளம்பரங்கள் வணிகம் சார்ந்து இயங்கும் இலக்கியத்துறை என்று பார்க்கும்போது முதலில் ஒவ்வாமை வந்தது. பின் நண்பர்களுடன் பேசும்போது கலையை செல்வத்தை அடையும் வாயிலாக பார்ப்பதிலுள்ள ஒரு மரபின் ஒவ்வாமை தான் அப்படித் தோன்றச் செய்கிறது எனப் புரிந்தது. ஆங்கிலச் சூழல் வணிகமாக்கப்பட்ட சூழலாகவும் விமர்சனங்களின்மையால் தரம் குறைபாடு நிகழ்வதாகவும் தோன்றுகிறது. தமிழிலும் வணிகப்புத்தகங்கள் இந்த முறையைப் பின்பற்றுவதைப் பார்த்திருக்கிறேன். ஒரு தீவிர இலக்கிய வாசகருக்கு/எழுத்தாளருக்கு இச்சூழல் தரும் அதிர்ச்சி உள்ளது. அப்படியிருக்க  நல்ல மொழிபெயர்ப்பு, நல்ல படைப்பு என்பதைக் கூட கூவி விற்கவேண்டியிருக்கும் இந்தச் சூழலை எப்படிப்பார்க்கிறீர்கள்.

உங்கள் ஒவ்வாமையும் ஐயமும் புரிகிறது. உங்கள் உணர்வுகளை ஓரளவுக்கு நானும் பகிர்ந்துகொள்கிறேன்.

ஆனால் ஒன்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இன்று நாம் அனைவருமே – உலகம் முழுக்க – கவனச்சிதறலால் பீடிக்கப்பட்டுள்ளோம். ஆகவே எல்லா கலைத்துறைகளிலும் ரசிகர்களை கவரவேண்டியுள்ளது. விளம்பரம் இன்றியமையாததாகிவிட்டது. தமிழிலும் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பை விட இப்போது புத்தகங்கள் அதிகம் விளம்பரம் செய்யப்படுகிறதே? 

பிறகு இது பழுத்த முதலாளித்துவ யுகம். எல்லோரும் பணமீட்டவும் பணம் செலவிடவும் ஊக்கப்படுத்தப் படுகிறார்கள். ஒரு சராசரி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவே முன்பை விட இந்நாட்களில் பன்மடங்கு உழைப்பைப் போட வேண்டியுள்ளது. ஆகவே அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் எழுத்தும் ஒரு வருவாய்த்துறையாக பரிணமித்துவிட்டது. இந்திய ஆங்கிலச் சூழலில் அந்த மாடலை நகலெடுக்கிறார்கள். 

இதில் சாதக பாதகங்கள் உண்டு. எழுத்தாளர்கள் புரவலர்களையோ வேறு அமைப்பையோ நம்பி செயல்படத் தேவையில்லை. பொருளாதாரச் சமநிலையை எழுத்தே பெற்றுத்தரும் நிலைமை உருவாகலாம். அதே சமயம் முதலாளித்துவச் சூழல் எழுத்தின் மீது ஓர் நிபந்தனையை வைக்கிறது. சந்தையில் வெல்லவே அனைவரும் எழுத ஆரம்பிக்கிறார்கள். இது நல்லதேயல்ல. 

இதற்கிடையில், மொழிபெயர்ப்பு வழியாகவோ சொந்த எழுத்தாகவோ, நாம் நம்பும் ஓர் அழகியலை, சிந்தனை முறையை முன்வைக்க வேண்டுமென்றால், வேறு வழியே இல்லை – இந்த விளம்பர வணிகம் சார்ந்த அமைப்பை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதைத் தவிர. இல்லையென்றால் நம் குரல் கவனிக்கப்படாமல் போகும் அபாயமே மிகுதி. நல்ல வாசகர்க் கோவை ஒன்று நம்மை நோக்கித் தேடி வரும் என்ற நம்பிக்கை மட்டுமே இதில் உருவாகும் சோர்வுகளை மீறி என்னைப்போன்றவர்களை செயல்பட வைக்கிறது.

நமக்கு முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் பசி கொண்டவர்களாக இருந்தார்கள். பாணர்கள் போல அலைந்து திரிந்து எழுதியவர்களாக இருந்திருக்கிறார்கள். இன்று புதிதாக எழுதவருபவர்களிடம் முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் முதலில் சொல்வது சோறு திண்ண ஏதுவான பொருளாதாரத்தை அடைந்தபின் எழுதினால் போதும் என்ற அறிவுரையைத்தான். புதிய தலைமுறை எழுத்தாளர்களைப் பார்த்தாலும் அவர்கள் ஏதாவது ஒருவகையில் மாத வருமானம் தரும் தொழிலில் இருந்து கொண்டு தான் எழுதுகிறார்கள் என்பதும் புரிகிறது. இந்த தமிழ்ச்சூழலுடன் ஆங்கிலச் சூழலை எப்படி ஒப்பிடுகிறீர்கள்? தமிழ்ச்சூழலில் இன்னும் பழைய மதிப்பீடுகள் செயல்படுவதாக நினைக்கீறீர்களா?

நான் கவனித்த வரை இளம் தமிழ் எழுத்தாளர்கள் ‘இன்னும் சற்று பொருளாதாரச் சமநிலை இருந்தால் மேலும் சிறப்பாக எழுதுவேனே’ என்று உணர்கிறார்கள். அதை முற்றாக புரிந்துகொள்கிறேன். இன்று இணையம் போல வாசிக்க எழுத உரையாட பல வசதிகள் வந்துவிட்டன. ஆனால் சாதாரணமாக அரசாங்கத்திலோ ஐடியிலோ வேலைப்பளு அதிகம். விலைவாசி எல்லாமே அதிகம். குடும்பத்திலும் பொருளாதாரம் சார்ந்த அழுத்தங்கள் மிகுந்துவிட்டன. எழுத்தாளருக்கு  எழுத மனவிரிவும் நேரமும் தனிமையும் வாய்ப்பதில்லை. பணம் ஓரளவுக்கு அதையெல்லாம் மீட்டிக்கொள்ள ஒரு வழி தான். 

ஆகவே முன்பு சொன்னது மாதிரி தனியார் அமைப்புகள் எழுத்தாளர்களுக்கு சிறு உதவித்தொகைகளை போட்டி அடிப்படையில் அளிக்க முன்வரலாம். அவை எழுத்தாளர்களுக்கு அங்கீகாரமாகவும் அமையும். குடும்பத்தின் முன்னே சமூகத்தின் முன்னே ‘எழுத்தாளனின் பணி மதிக்கப்படுகிறது’ என்ற செய்தியை அவை அழுத்தமாக முன்வைக்கின்றன.

 அதே சமயம் பணம் இருந்தால் தான் எழுதுவேன் செயல்படுவேன் என்ற சூழலும் இலக்கியத்திற்கு ஆபத்து. அந்த நிலைக்கு நாம் செல்லக் கூடாது. இந்த இரண்டு உலகங்களிலும் ஒரு சேர பயணிப்பவள் என்ற முறையில் சில நேரங்களில் எனக்கு சிரிப்பாக இருக்கும். தமிழில் வெண்முரசு போன்ற ஒரு நாவல் எழுத எழுத நேரடியாக வலையேற்றப்பட்டது. அதன் பல்லாயிரம் பக்கங்களை ஒவ்வொரு நாளும் இருவர் திருத்தி வெளிவந்தது. இதில் லாபநோக்கமென்பதே இல்லை. இலக்கியம் மட்டுமே லாபம். இதை ஆங்கிலத்தில் சொன்னால் வியக்கிறார்கள்.

நாம் அனைவருமே பிரசுரமாகாத கதைகளை வாசித்து நண்பர்களிடம் கருத்து சொல்கிறோம். இணைய சந்திப்புகளில் பேச்சாளர்களாக கலந்துகொள்கிறோம். நாவல்களை தொகுத்துக் கொடுக்கிறோம். ஆங்கிலச் சூழலில் இதையெல்லாம் செய்ய பணம் எதிர்பார்க்கிறார்கள். அல்லது அதற்கீடான பரோபகாரம். ஆம், நண்பர்களே என்றாலும். ‘ஒன்றை சிறப்பாக செய்தால் அதை பணம் வாங்காமல் செய்யாதே, உன் வித்தை மேல் உனக்கே மதிப்பில்லை என்று அது காட்டுகிறது’ என்பது தான் அங்கே தாரக மந்திரம். 

பார்க்க பார்க்க எனக்கு குழப்பமே எஞ்சுகிறது. அறுதியாக எதுவும் சொல்லத் தெரியவில்லை. இப்படிச்சொல்வேன் –  “பசி இருப்பவன் தான் நல்ல எழுத்தாளன்” போன்ற ரொமாண்டிசிசம்களை நாம் கடந்து வரலாம். அதே சமயம் எழுதவேண்டியதை எழுத சூழலை அமைத்துக்கொள்வதே எழுத்தாளரின் கடமை. சொகுசு நல்ல எழுத்தை குலைக்கிறதென்றால் சொகுசுக்கு பழகாமல் இருப்பதும் எழுத்தாளனின் கடமையே. அதை அவன் (அல்லது அவள்) தனக்குறிய வழிகளில் தேற வேண்டும். அதற்கு அமைப்புரீதியான உதவிகள் கௌரவங்கள் கிடக்குமானால் சிறப்பு.

சமீபத்தில் நீங்கள் Scroll.in -ல் திருக்குறள் மொழிபெயர்ப்பு பற்றி எழுதிய கட்டுரை முக்கியமானது. மொழிபெயர்ப்பு செய்யும் அதே நேரம் தமிழிலிருந்து சரியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதா என்ற பதற்றத்தை வெளிப்படுத்திய கட்டுரை அது. இது போன்றவைகளை இன்று உங்களால் அழுத்தமாக முன்வைக்க முடியும் இடத்திற்கு இந்த மொழிபெயர்ப்பு பணி உதவியுள்ளதாக எண்ணுகிறீர்களா?

என் கட்டுரையின் நோக்கம் எது “சரியான மொழிபெயர்ப்பு” என்று ஆராய்வது அல்ல. கவிதை மொழிபெயர்ப்பை அப்படி சரி, தவறு என்று பார்க்க முடியாது. மொழிபெயர்ப்பில் அது கவிதையாக நிலைபெறுகிறதா, அழகாக உள்ளதா என்றே நான் கேட்கிறேன். அவ்வாறு அல்லாத ஒரு மொழிபெயர்ப்பு பரவலாக கொண்டாடப்படும் போது அதை சுட்டிக்காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் அழகான படைப்பூக்கம் மிக்க மொழிபெயர்ப்பை முன்வைத்து ‘இதை வாசியுங்கள், இதில் கற்றுக்கொள்ள கொண்டாட மேலும் விஷயங்கள் உள்ளன’ என்று சொல்கிறேன். 

தாமஸ் ப்ருக்ஸ்மாவின் குறள் மொழியாக்கம் மிக்க அழகுடனும் கவனத்துடனும் செய்யப்பட்டுள்ளது. குறளின் அழகு அதன் குறைந்த வார்த்தைக்கட்டில் உள்ளது. economy, precision என்பார்கள். பிறகு ஓசைநயம். இரண்டையும் தாமஸ் அவர் மொழியாக்கத்தில் அடைந்திருக்கிறார். மீனா கந்தசாமியின் மொழியாக்கம் இந்த அம்சங்களை முற்றிலும் தவறவிடுகின்றன. தாமஸ் குறளின் பாடல்களின் அர்த்தத்தளத்தை விரித்து வாசிக்க முற்பட்டுள்ளார். குறளின் இயல்பான பறந்தமனப்பான்மை அவர் மொழியாக்கத்தில் ஆழமாக வெளிப்படுகிறது. ஆகவே மிக புத்துணர்வு மிக்க, நவீனமான ஒரு வாசிப்புக்கு வழிவகுக்கிறது. மீனா கந்தசாமியின் மொழியாக்கம் அரசியல் நோக்கோடு செய்யப்பட்டதென்றாலும் சில பழமைவாத க்ளீஷேகளுக்குள் மாட்டிக்கொள்கிறார். ஆகவே சில இடங்களில் அவர் முன்வைக்கும் பெரியாரிய-பெண்ணிய அரசியலுக்கு எதிரான தொனி வந்துவிடுகிறது. திராவட அரசியலின் நோக்கம் கொண்டவர்களால் திராவிட அழகியலை அவ்வளவு எளிதாக கைவிட முடியவில்லை என்பதை இது காட்டுகிறது. இதுதான் என் கட்டுரையின் சாராம்சம்.

இதை ஆங்கிலத்தில் சொல்வது வழியாக என் ரசனையை முன்வைத்து அங்கே ஒரு ரசனை மதிப்பீட்டை உருவாக்க முயற்சிக்கிறேன்.

சமீபத்தில் நீங்கள் ப்ரியம்வதாவுடன் இணைந்து தொடங்கிய மொழி” தளம் முக்கியமான முன்னெடுப்பு. மொழிபெயர்ப்புக்கான போட்டி வைத்து அவற்றை பிரசுரிக்கவும் ஏற்பாடு செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். அதன் எதிர்கால நோக்கம் என்ன? இன்னும் அதை எப்படி எடுத்துச் செல்லலாம் என்று நினைக்கிறீர்கள்?

வாழ்த்துக்களுக்கு நன்றி ரம்யா. இந்த நேர்காணல் முழுவதும் சொல்லி வரும் சிந்தனைகள் தான் இந்த தளத்தைத் தொடங்க பின்னணி காரணம். உலக அளவில் இந்திய இலக்கியம் என்றால் இந்திய ஆங்கில இலக்கியம் என்ற பிம்பம் உள்ளது. அதற்கு முதல் காரணம், இந்திய மொழி இலக்கியங்கள் ஆங்கிலத்தில் போதிய அளவுக்கு விவாதிக்கப்படுவதில்லை. அழகியல் நோக்கில் விமர்சிக்கப்படுவதில்லை. அந்தந்த மொழிக்கு ஓர் அறிவுத்தளம் உள்ளது, வளமான அறிவியக்கங்கள் உள்ளன. இவை மைய விவாதமாக வேண்டும். அந்த நோக்கத்திலேயே “மொழி” தொடங்கப்பட்டது.

“மொழி”யை நாங்கள் இந்திய மொழிகளுக்கிடையே ஒரு பாலமாக, ‘மொழிகளுக்கு இடையேயான ஒரு வெளி’யாக உருவகிக்கிறோம். நாங்கள் உத்தேசித்திருக்கும் செயல்பாடுகள் – வெவ்வேறு மொழிகளிலிருந்து கதைகள் கட்டுரைகள் விமர்சனங்களை  ஆங்கில மொழியாக்கத்தில் வெளியிடுவது, அவற்றைப்பற்றிய விவாதம் உண்டுபண்ணுவது; ஆங்கிலம் அல்லாமல், மற்ற இந்திய மொழிகளுக்கிடையில் மொழிபெயர்ப்புகளை வெளியிட ஒரு தளமாக அமைவது; இந்திய மொழி எழுத்தாளர்களை மொழிபெயர்ப்பாளர்களை கவனப்படுத்தி ஓர் உரையாடல் வெளியை உருவாக்குவது; இந்திய இலக்கியத்தை ரசனை அடிப்படையில் விமர்சனப்பூர்வமாக அணுகும் விமர்சனங்களை முன்வைப்பது; அடுத்தத் தலைமுறை மொழிபெயர்ப்பாளர்களை கண்டடைந்து அவர்கள் வெளிப்பட உதவுவது.

இது மிகவும் நீண்டகால தொடர்ச்செயல்பாடு வழியாக நிகழவேண்டிய ஒன்று என்பதை உணர்கிறோம். இப்போது தான் தொடங்கியிருக்கிறோம்.

இந்தச்செயல்பாடு இன்னும் தீவிரமடைவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

மொழிகளுக்கு இடையில் நின்று பேசக்கூடிய நல்ல திரளை நாம் உருவாக்க வேண்டும். நம் இலக்கியங்களை பற்றி தொடர்ந்து ஆங்கிலத்திலும் உரையாடும் ஒரு வாசலை நாம் திறந்து வைக்க வேண்டும்.அறிவுத்துறையிலிருக்கும் நாம் அந்த முனைப்போடு தான் செயல்பட வேண்டும். அது நம் கடமை. இன்று ஆங்கிலத்தில் தனி மனிதனின் ரசனை என்பதற்கு பதிலாக ஊடகவியலாளர்களால் வடிவமைக்கப்படும் பிம்பங்களே மலிந்து கிடக்கின்றன. இது மாற வேண்டும். ஓரளவு ஆங்கிலத்தில் எழுதும் திறமையுள்ளவர்கள் ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதி பிரசுரிக்கலாம். விவாதங்களை உருவாக்கலாம். இலக்கியக் குழுக்களை ஒருங்கிணைக்கலாம். விடுதலைக்கு முன் காந்தி, தாகூர் எழுதியவை மற்ற இந்திய மொழிகளுக்கெல்லாம் சென்றது. மிகத்தீவிரமாக பரப்பப்படுவதற்கு விடுதலை வேட்கை காரணமாக இருந்தது. இன்றைக்கு அந்தத் தீ இல்லை. அந்த அறிவுக் கலாச்சாரம் இல்லை. இதை மாற்ற நம்மளில் சிலர் முன் வர வேண்டும். இந்த வெளியை விரிவாக்க வேண்டும்.

பெண்களுக்கு கிரியேடிவிட்டி குறைவு என்பதால் அதிக எண்ணிக்கையில் மொழிபெயர்க்கிறார்கள் என்ற கருத்து உள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அது அவரவர் கருத்து. உலக அளவில் பெண்கள் தான் அதிக எண்ணிக்கையில் மொழியாக்கம் செய்கிறார்கள் என்பதே உண்மையா என்று எனக்குத் தெரியவில்லை.

ஆனால் இரண்டு விஷயம். ஒன்று, நல்ல புனைவு மொழியாக்கம் செய்ய மொழிசார்ந்த நுண்ணுணர்வும் படைப்புணர்ச்சியும் அவசியம். கூடவே, ஓர் அன்னிய கதைக்களனை தனதாக்கிக்கொண்டு அதை மீண்டும் நிகழ்த்திப்பார்க்க வேண்டும்  என்ற ஒருவித விடாப்பிடித்தனம். ஆண்களோ பெண்களோ நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இவ்விரு குணங்களும் கொண்டவர்கள். இவை இரண்டுமே creative impulses – படைப்பாக்க தூண்டுதல்கள் தான்.

ஒரு வேளை தமிழில் நிறைய பெண்கள் மொழியாக்கம் செய்கிறார்கள் என்பதை ஒட்டி உங்கள் கேள்வி வருகிறதா? அதை அவர்கள் இலக்கியத்தில் இருப்பதற்கான ஒரு வழியாக வைத்துக்கொள்கிறார்கள் என்று ஊகிக்கிறேன். இன்று நிறைய பெண்கள் காணொலிகளில் ரேடியோவில் கதை வாசிக்கிறார்கள். அவர்களுக்கு இலக்கியம் மேல் காதல் உள்ளது. ஆனால் ஒரு வலுவான படைப்பாளியாக உருவாக குடும்பச்சூழல் இல்லாத நிலையில் இருக்கிறார்கள். ஆகவே இப்படியெல்லாம் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்துகிறார்கள். இது ஒருவித சிதறுண்ட வெளிப்பாடு தான். ஆனால் ‘பெண்களுக்கு கிரியேட்டிவிட்டி குறைவு’ என்று இல்லை. அது ஒரு blanket statement, அதை எவரும் சொல்லலாம். கிரியேட்டிவிட்டியை குவித்து (focussed) வெளிப்படுத்த தமிழ்ப்பெண்களுக்கு வெளிகள் குறைவு என்பதே நிதர்சனம்.

எழுத்தாளர் சுசித்ரா

இறுதியாக… தமிழ்ச்சூழலில் நல்ல மொழிபெயர்ப்புகள் கொண்டு வர வேண்டிய பொறுப்பு யாரிடம் உள்ளதாக நினைக்கிறீர்கள்?

பதிப்பகங்கள் தான் நல்ல மொழிபெயர்ப்புகள் கொண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்ச் சூழலில் எடிட்டரின் பங்கு மிகவும் குறைவு அல்லவா? அது மாற வேண்டும். இந்த விஷயத்தில் ஆங்கிலச்சூழல் மேலும் சிறப்பாக செயல்படுகிறது என்று நினைக்கிறேன். தமிழில் வாசிக்கமுடியாத மொழிபெயர்ப்புகள் நிறைய வருவதைப் பார்க்கிறேன். அவற்றை தரம் மேம்படுத்தாமல் பிரசுரிக்க வேண்டாமே?  ஒரு பியர் ரிவ்யூ குழுவை வைத்தாவது இதைச் செய்யலாம்.

அடிப்படையில் ஓர் இலக்கியச் சமூகமாக நாம் மொழிபெயர்ப்பாளர்களின் படைப்பூக்கத்தை பங்களிப்பை உணர்ந்து அங்கீகரிக்கும் இடத்துக்கு வர வேண்டும். நல்ல மொழிபெயர்ப்பாளன் மொழியின் பண்பாட்டின் சொத்து.

(நிறைவு)

*

விண்ணினும் மண்ணினும் (தொடர்)

நீலி பத்திரிக்கையில் காலத்தில் உருவாகி வந்துள்ள பெண் எழுத்து வகைகளை பற்றிய என் கட்டுரைத்தொடர்.

  1. இணைக்கும் கயிறுகள்
  2. கடலாழத்து மொழி

புத்தக பரிந்துரை – மூச்சே நறுமணமானால்

பெருந்தேவி மொழியாக்கத்தில் வந்துள்ள அக்கமகாதேவியின் வசனங்களின் தமிழ் மொழியாக்க நூல் பற்றி என் அறிமுகக் கட்டுரை.

மைத்ரி – முன்னுரை

அஜிதனின் மைத்ரி நாவலுக்கு நான் எழுதிய முன்னுரை

இயற்கையின் தெய்வீகம்

நித்யசைதன்ய யதி தன் இளம்வயதில் ஆசிரியர் நடராஜ குருவுடன் இமையமலையை காணச்சென்ற நிகழ்வை ‘குருவும் சீடனும்’ என்ற நூலில் பதிவுசெய்துள்ளார். அவர் இமயமலையைக் காண்பது அதுவே முதல் முறை. அவர்கள் முன் கம்பீரமாக எழுந்து நின்றது பனிமலை, வெண்முகில்கள் சூழ்ந்து நின்றன அதன் சிகரங்கள். நித்யாவின் பரவசத்தை கண்ட நடராஜ குரு, “இதோ இந்தப் பேரழகின் தரிசனமே காளிதாசனை கவிஞனாக்கியது” என்றார். “ஒருவன் இந்தக் காட்சியை கண்டபிறகும் அவனுக்குள் தெய்வீகத்தை பற்றிய ஞானம் உருவாகவில்லையென்றால் அவன் மீட்கப்படமுடியாத குருடன். நம் உள்ளங்களில் இந்தக்கணம் பொங்கும் பரவசமே கடவுள்.”

நித்யசைதன்ய யதியின் மாணவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர் ஜெயமோகன். அதேபோல அஜிதன் தன் மகன் மட்டும் அல்ல மாணவரும் கூட என்று ஜெயமோகன் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார். ஆக குருதி உறவுக்கு அப்பால் குருவழி தொடர்ச்சி ஒன்றும் இருக்கிறது, நடராஜ குருவில் தொடங்கி அஜிதன் வரை. அதன் செல்வாக்கு அஜிதனின் முதல் நாவலான ‘மைத்ரி’யில் தெரிகிறது. இது முழுக்க முழுக்க இயற்கையின் பேரழகை ஒரு மனித உள்ளம் சந்திக்கையில் உருவாகும் பரவசத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள நாவல். இயற்கையின் தெய்வீகம் என்று நடராஜ குரு சுட்டிக்காட்டும் பண்பால் நிறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ் இலக்கியத்தில் ‘மைத்ரி’ மிகப்புதுமையான முயற்சி.

அஜிதனை அறிந்த வகையில், அவருடைய நாட்டங்கள் ஒரு புறம் உயர் கலை சார்ந்தவை. குறிப்பாக இசை. அவர் இசைமேதை வாக்னர் மேல் கொண்டுள்ள மாபெரும் ஆராதனையை அவருடன் சற்றேனும் பழகிய அனைவரும் அறிவர். மறுபுறம் கீழை, மேலை தத்துவங்களில் ஆழமான படிப்பு உடையவர். குறிப்பாக ஷோப்பனவரில். அவருடைய விரிந்த கலை-தத்துவார்த்த படிப்புகளின் தாக்கம் இந்த நாவலில் காணக்கிடைக்கிறது.

பொதுவாக தத்துவார்த்தமான தளங்களை ஒரு நாவல் தொட்டுச்செல்லும் போது பல சமயங்களில் அடிவயிற்றில் கல்லை கட்டினாற்போல் தத்துவ மொழியின் கனம் அதில் விழுந்துவிடுகிறது. அப்போது அது அடிப்படையான அனுபவ உணர்ச்சியை சற்று குறைக்கிறது. இந்த நாவலில் அது நிகழவில்லை. ‘மைத்ரி’யின் மிகப்பெரிய பலம் முழுக்கவே புலன்விழிப்பினால், துளித்துளியான அனுபவ சேர்க்கையினால் ஆசிரியர் நமக்கு கதை சொல்வதுதான். ஓங்கும் இமயமலையைக்காணும் பரவசத்தின் வழியே நடராஜகுரு கடவுளை கண்டதுபோல் இந்த நாவல் அளிக்கும் உணர் அனுபவங்களே இதன் ஆழங்களை கடத்துகின்றன.

அதற்கு பெரிய உறுதுணையாக இருப்பது இந்த நாவலில் துடியுடன் வெளிப்படும் ‘இளமை’ என்ற அம்சம். நாவலின் கதைசொல்லி ஹரன் சற்று அறிவுஜீவியான சமகால இளைஞன் ஒருவனின் அமையமுடியாமை, தேடல், கசப்பு, நையாண்டி எல்லாம் வெளிப்படும் கதாபாத்திரம். ஒவ்வொரு கணமும் புலன்களை அகலத் திறந்து சுற்றத்தை துழாவிக்கொண்டே இருப்பவன். அழகுணர்ச்சி, காமம், கற்பனாவாத எழுச்சிகள் கொண்டவன். அதே சமயம் குழந்தைக்கால களங்கமின்மை முற்றாக அழியாத ஒருவன். இவை எல்லாம் அவனில் அலைமோதுகின்றன. இப்படிச்சொல்லலாம், எந்த ஆர்வமும் புலன் கூர்மையும் அழகுணர்ச்சியும் நடராஜ குரு போன்றவரில் கனிந்து ஞானமாகிறதோ, அதே விஷயங்கள் ஹரனில் இளம் ரத்தத்தின் உணர்ச்சிகளோடு கொப்பளிக்கின்றன. இப்படி அலைமோதி நுரைக்கும் இளமையே இந்த நாவலின் துடிப்பான தாளத்தை கட்டமைக்கிறது.

ஹரனில் இந்த வண்ணங்கள் மாறி மாறி வருவது நாவலின் மிக வசீகரமான அம்சங்களில் ஒன்று. உதாரணமாக நாவலில் ஹரன் சௌந்தரியலஹரியை பரவசத்துடன் நினைவுகூரும் ஒரு இடம் வருகிறது. அதற்கு அடுத்த வரியிலேயே ஆதிசங்கரர் மீதான அவனது சிறிய சீண்டல் வெளிப்படுகிறது. சௌந்தரியலஹரிக்கு உரை எழுதிய நடராஜ குருவும் அந்த இடத்தில் சிரித்திருப்பார்.

இறப்பும் பிரிவும் என அகச்சிக்கல்களால் அலைக்கழிக்கப்படும் ஹரன் ஏதோ உள்ளுணர்வால் கங்கையின் ஊற்றுநதிகளில் ஒன்றான மந்தாகினியின் பாதை வழியாக இமயமலை அடுக்குகளுக்குள் ஏறி கேதார்நாத் வரை போக முடிவெடுக்கிறான். வழியில் மைத்ரி பன்வார் என்ற இளம் கட்வாலி பெண்ணை சந்திக்கிறான். அவர்களுக்குள் ஒரு பந்தம் உருவாக, அவள் அவனை மலைகளுக்குள் இருக்கும் தன் மூதாதையர்களின் ஊருக்குக் கூட்டிச்செல்கிறாள்.

மலைகள், வானம், பருவம், பூக்கள் மட்டுமல்லாது, அந்த நிலத்தின் மக்கள், அவர்களுடைய வாழ்க்கை முறை என்று அனைத்தையும் ஆசிரியர் துளித்துளியாக இந்த பயணத்திற்குள் கட்டி வைத்திருக்கிறார். விலங்குகளின் பராமரிப்பு, இசை, மேய்ச்சல் நிலமக்களின் வாழ்வியல், உணவு பண்பாடு, பண்டிகைகள், கொண்டாட்டங்கள், குலதேவதா சடங்குகள் என்று ஒரு முழு பண்பாட்டையே படைக்கிறார்.

இந்தக்கதையை ஆழமாக்குவது மூன்று விஷயங்கள். ஒன்று, ஹரனின் இளமை, தீவிரம். இரண்டு, மைத்ரி, அவளுடனான பயணம் வழியே ஹரன் எதிர்கொள்ளும் இயற்கை. மூன்று, இந்தப் பயணத்திற்கு பின்னால் நிகழும் ஆழமான சுயவிசாரணை சார்ந்த பகுதிகள்.

நாவலில் புறப்பயணத்துக்கு நிகராகவே அகப்பயணம் ஒன்றும் நிகழ்கிறது. புறமும் அகமும், இயற்கையும் காதலும், துடைத்துவைத்த கண்ணாடிகளைப்போல் துல்லியமாக ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன.

மேலோட்டமாக இந்த நாவலுக்கு முன்னோடி வடிவங்கள் என தோன்றுவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் கற்பனாவாத நாவல்கள்தான். கண்டிப்பாக அவற்றின் சாயல் இதில் உள்ளது. கதேயின் ‘காதலின் துயரம்’ (The Sorrows of Young Werther), அலெக்சாண்டர் குப்ரினின் ‘ஒலெஸ்யா’ (Olesya) போன்ற நாவல்களைச் உதாரணமாக சொல்லலாம். அவையும் வயதடைதலை (bildungsroman) சொல்லும் நாவல்களே. ஆகவே அவற்றுடனான ஒப்பீடுகளும் இயல்பானவை தான்.

அந்த நாவல்களிலிருந்து ‘மைத்ரி’ எங்கு வேறுபடுகிறது? ஒன்று, கற்பனாவாத நாவல்களின் முற்றிலும் ஒற்றைப்படையான உணர்வெழுச்சி இதில் இல்லை. உணர்வெழுச்சியை கதைசொல்லியின் அகக்குரலில் வெளிப்படும் தத்துவார்த்தமான மதிப்பீடு சமன்செய்கிறது. அனுபவங்களிலிருந்து சிந்தனைக்கும் இவை இரண்டிலிருந்தும் தரிசனத்துக்குமான  ஒரு பாய்ச்சல் இந்த நாவலில் நடக்கிறது. இரண்டு, இந்த நாவலின் இயல்புவாத யதார்த்தம் இதன் கற்பனாவாதத்திற்கு ஒரு தளத்தை அமைக்கிறதே ஒழிய கற்பனாவாதத்திற்கு எதிராகவோ அதை குலைக்கும் வகையிலேயோ முன்வைக்கப்படவில்லை. ‘கற்பனாவாதத்திற்கு யதார்த்தத்தில் இடம் என்ன’ என்ற கேள்வியை கேட்கவில்லை. நாவல் கற்பனாவாதம், யதார்த்தம் இரண்டையும் தாண்டிய ஒரு ஆன்மீக உன்னதத்தையே எட்ட முயல்கிறது.

அந்த அடிப்படையில் ‘மைத்ரி’யில் ஒரு செவ்வியல் பயண இதிகாசத்தின் தன்மையே மேலோங்கி இருக்கிறது. முக்கியமாக புறப்பயணத்தின் வழியே அகப்பயணத்தை உணர்த்துதல் எனும் அம்சம். இதுவே தொன்மங்களிலிருந்து நவீன கலைஞன் பெறும் படைப்பாற்றல். நோசிகாவை சந்திப்பதன் வழியாக ஒடீசியஸ் உளம் மாறி அமைந்தான். பியாட்ரிஸின் துணையுடன் தாந்தே இன்ஃபெர்னோவில் இருந்து பாரடைஸோவுக்கு எழுந்தார். இந்த நாவலில் மைத்ரியின் இடம் நோசிகாவையும் பியாட்ரிஸையும் ஒத்ததாக இருக்கிறது. நம்முடைய தொன்மங்களில் அர்ஜுனன் இப்படியான பயணங்கள் மேற்கொண்டவன். சௌகந்திக மலரை பெற சென்ற பீமன் மேலும் நெருக்கமானவன். நாவலில் அந்த தொன்மம் ஒரு விதத்தில் மறுஆக்கம் பெறுகிறது. காதலின் பரிசாக நிகழும் அந்த தருணம் நாவலின் உச்சங்களில் ஒன்று.

பயண இதிகாசங்களின் கதாநாயகன் ஒரு கட்டத்தில் தன் அகத்தின் ஓர் அம்சத்துடன் போராடி வென்றால் மட்டுமே மேலே செல்ல முடியும். அது தான் காவிய நியதி. நாவலின் முகப்பாக அமைந்திருக்கும் காஷ்மீரி சைவ கவிஞர் லல்லேஷ்வரியின் வரிகளிலும் அந்தக் கூற்று இருக்கிறது. ஹரன் கதாபாத்திரத்தின் மிகப்பெரிய ஈர்ப்புப் புள்ளியான அவனது இளம் அகத்தின் பற்றிக்கொள்ளும் தன்மையே அவன் போராடி வெல்ல வேண்டியதும் கூட. நாவலின் கடைசி பகுதியில் அது நிகழ்கிறது.

“இமயமலையை காண்கையில் கங்கையில் நீராடுகையில் நம்முடைய பாபங்களெல்லாம் தீரும் என்ற நம்பிக்கை வெறும் ஆசாரமல்ல. மலையையும் நதியையும் காணும் போது அதன் விரிவை உள்வாங்க நம் உள்ளமும் விரிகிறது. அப்படி விரியும் உள்ளத்தால் பரம்பொருளை எளிதாக உணர்ந்துவிட முடியும்” என்கிறார் நடராஜ குரு.

ஓரளவுக்கு மேல் இந்த இடங்கள் நாவல் தரும் அனுபவமாகவே எஞ்ச வேண்டும் என்று நினைக்கிறேன். புறவயமாக வகுத்துக் கூறுவது கடினம். சில சாத்தியங்களை மட்டும் சுட்டிக்காட்டலாம்.

தேவபூமி என்று அழைக்கப்படும் அந்த நிலத்தில் வேரூன்றிய சைவம் சார்ந்த படிமங்களும் தரிசனமும் நாவலில் வெகு இயல்பாக அமைந்துள்ளன. முக்கியமாக லல்லேஷ்வரியில் ஆரம்பித்து இதில் இடம் பெரும் காஷ்மீரி சைவத்தின் தாக்கம். ஹரனின் பயணத்தை மனிதனுள் உறையும் மும்மலங்களான ஆணவம், கர்மம், மாயா ஆகியவற்றை களையும் பயணமாக வாசிக்க சாத்தியம் உள்ளது. காஷ்மீரி சைவத்தின் ‘திரிகா’ தரிசனம் போல அதன் படிநிலைகள் அமைந்துள்ளது. ‘அபரம்,’ ‘பராபரம்,’ ‘பரம்’ என இந்நாவலின் மூன்று பகுதிகளை வாசிக்கலாம். ஆணவ மலமும் கர்ம மலமும் ஒருவனால் சுயமாக கடக்க முடியும், ஆனால் மாயா மலம் கடக்க சக்தியின் அருளாலேயே முடியும் என்கிறது காஷ்மீர சைவம். நாவலில் ஹரன் அதை எதிர்கொள்ளும் தருணம் ‘சப்ளைம்’ஆன பேரனுபவம். அந்த அனுபவத்துக்கு முன் ஒரு சுயமிழப்பு நிலையை எய்துகிறான், அது தன்முனைப்பான சுயம் அழிப்பும் கூட. பனிமலை உச்சியில் ஹரன் கண்டுகொள்வது காஷ்மீர சைவத்தின் ‘பிரத்யபிக்ஞா’ (மறுகண்டடைவு/Re-cognition) என்ற நிலைக்கு மிக நெருக்கமானது. சிவன் தன்னை தான் கண்டடைதல்.

இந்திய நிலத்தின் தொன்மையான தத்துவ தரிசனமான சாங்கியத்தில் தொடங்கி காஷ்மீரி சைவம் வரை நீளும் ஒரு கருத்து உண்டு. அது ‘பிரகிருதி’ என்று சொல்லப்படும் இயற்கையின் இரண்டு பக்கங்கள். ஒரு பக்கம் அது மனிதனுக்கு அனுபவங்களை கொடுக்கிறது. இதை போகம் என்கிறார்கள். மறுபக்கம் அந்த அனுபவங்களிலிருந்து உருவாகும் சுகதுக்கங்களை நிவர்த்தி செய்து வீடுபேறுக்கு வழி வகுக்கிறது. இதை அபவர்கம் என்கிறார்கள். சாங்கியத்தை பொருத்த வரை போகம்-அபவர்கம், அனுபவம்-மோட்சம், இரண்டையுமே அருள்வது இயற்கை தான். காஷ்மீரி சைவத்தில் பிரத்யபிக்ஞா நிலைக்கு இட்டுசெல்வது சக்திபாதை எனப்படுகிறது. இந்த நாவலின் சக்தி தரிசனம் இயற்கையின் புரிந்துகொள்ளமுடியாத இந்த இருமைநிலையை ஒரு பேரனுபவமாக ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ளது.

நாவலின் இறுதியில் ஹரன் முன் ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. எந்த ஆன்மீக அகப்பயணமும் சென்று அடையும் கேள்வி அது. தேடல் அங்கு முடிகிறது. மற்றொன்று துவங்குகிறது.

இந்த உயர்தளத்தில் ஒரு எழுத்தாளரின் முதல் படைப்பு அமைவதென்பது சற்று அபூர்வமானது. அஜிதனுக்கு அது சாத்தியப்பட்டிருக்கிறது. இத்தருணத்தில் இந்த அழகிய படைப்பின் ஆசிரியரான என் நண்பனை மகிழ்ச்சியும் பெருமிதமுமாக எண்ணிக்கொள்கிறேன். அஜிதன் மென்மேலும் சிறந்த கலை ஆக்கங்களை படைக்க வேண்டும். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

சுசித்ரா

பாசல், சுவிட்சர்லாந்து

28.04.2022

மேலங்கி – ஐசக் தினேசன் (மொழியாக்க சிறுகதை)

(வல்லினம் இதழில் வெளியான சிறுகதை)

மலைகளின் சிங்கம் என்று அறியப்பட்ட மூத்த சிற்பியான லியோனிடாஸ் அல்லோரி ராஜதுரோக குற்றச்சாட்டின் பெயரால் கைதுசெய்யப்பட்டு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டபோது அவருடைய மாணவர்கள் கலங்கிப்போய் அழுது ஓலமிட்டார்கள். அவர்களுக்கு அவர் ஞானத்தந்தை. தேவதூதர். காலத்தை வென்ற அமரத்துவர். ஊருக்கு வெளியே பியெரினோவின் விடுதியில் சிலரும் கலைக்கூடங்களில் சிலரும் வீட்டுப்பரன்களில் சிலரும் என்று மறைவான இடங்களாக பார்த்து அல்லோரியின் மாணவர்கள் சிலர் கூடிக்கூடி அழுதார்கள். மற்றவர்கள் சேர்ந்து தங்கள் பிரியத்துக்குறிய ஆசிரியருக்கு விடுதலையும் பழியீடும் வேண்டி புயலில் விண் நோக்கி கை நீட்டும் வெற்றுக்கிளைகளுடைய பெருமரம்போல தங்கள் முறுக்கிய முஷ்டிகளை வான் நோக்கி ஆட்டி ஆரவாரம் செய்தார்கள்.

இந்த கொடூரமான செய்தியைப்பற்றி கேள்விப்படாதது போலவும் அப்படியே கேட்டிருந்தாலும் புரியாதது போலவும் இருந்தவன் சீடன் ஏஞ்சலோ சாண்டாசிலியா மட்டும்தான். அவனைத்தான் அனைவருக்கும் மேலாக நேசித்தார் ஆசிரியர். தன்னுடைய மகன் என்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார். சீடர்களில் அவன் மட்டும்தான் ஆசிரியரை ‘தந்தையே’ என்று அழைத்தவன். ஏஞ்சலோ சாண்டாசிலியாவின் மௌனத்தை அவனுடைய சக மாணவர்கள் தாளமுடியாத துயரின் வெளிப்பாடென்றே எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் அவனுடைய வேதனையை மதித்து அவனை தனிமையில் விட்டார்கள். ஆனால் ஏஞ்சலோவின் விலக்கத்துக்கான உண்மையான காரணம் அவன் ஆசிரியரின் இளம் மனைவி லுக்ரீசியாவின் மீது கொண்டிருந்த பெரும் மோகம் தான். அப்போது அவர்களுக்கிடையே காதல் முற்றிக் கனியத் தொடங்கியிருந்த வேளை. தன்னை முழுமையாக அவனுக்கு அளிப்பதாக அவள் வாக்குறுதி அளித்திருந்தாள்.

விசுவாசம் மீறிய மனைவியின் தரப்பிலிருந்து ஒன்றைச்சொல்ல வேண்டும். அவளை ஆட்படுத்திய தெய்வீகமான கருணையற்ற வலிமையை அவள் பல காலமாக மிகுந்த கலகத்துடனும் மன அவஸ்தையுடனும் எதிர்த்து நின்றாள். புனிதமான எல்லா நாமங்களையும் சாட்சியாகக் கொண்டு அவள் சத்தியம் செய்திருந்தாள். ஆசிரியர் மகிழாதபடிக்கு வார்த்தையோ பார்வையோ அவர்களுக்கிடையில் எப்போதைக்கும் பரிமாரப்படமாட்டாது என்று தன் காதலனையும் சத்தியம் செய்ய வைத்திருந்தாள். இருவராலும் அந்த சத்தியத்தைக் காக்க முடியாது என்று அறிந்த போது அவனிடம் பாரிஸுக்குப் போய் படிக்கச் சொல்லி கெஞ்சினாள். அவன் புறப்பாடுக்கு எல்லா ஆயத்தங்களும் நடந்தது. ஆனால் அந்த உறுதியையும் கடைப்பிடிக்கமுடியாது என்று புரிந்தபோதுதான் அவள் தன்னைத் தன் விதியின் வசத்துக்கே விட்டுக்கொடுக்க முடிவெடுத்தாள்.

நடுவர் மன்றங்களும் நீதிமான்களும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்தான். ஆனால் நம்பிக்கைமீறிய மாணவனும் அவன் சூழ்நிலையை காரணமாக சுட்டியிருக்கமுடியும். ஏஞ்சலொ அதுவரையிலான தன்னுடைய சிறிய வாழ்வில் பல காதல் விவகாரங்களில் சிக்கியிருந்தான். ஒவ்வொன்றிலும் முழுமுற்றாக தன் காமத்தின் விசைக்கு சரணடைந்திருந்தான். ஆனால் இந்த சாகசங்கள் எதுவுமே அவன் மனத்தில் ஒரு சிறு தடையத்தைக் கூட விட்டுச்செல்லவில்லை. இந்த விவகாரங்களில் ஏதோ ஒன்று அனைத்துக்கும் மேலாக முதன்மையானதாக வேண்டும் என்பது தவிர்க்கமுடியாத விஷயம். அப்படி முதன்மையாகிப்போன காதலியானவள் தன்னுடைய ஆசிரியரின் மனைவி என்பதும் மிக இயல்பான, ஒரு வேளை தவிர்க்கவே முடியாத, விஷயமாகவும் இருக்கலாம். மாணவன் ஏஞ்சலோ தன் ஆசிரியர் லியோனிடாஸ் அல்லோரியை விரும்பிய அளவுக்கு எந்த மனித உயிரையும் விரும்பியதில்லை. அவரைப்போல் எப்போதைக்கும் எந்த மனித உயிரையும் முழுமனதாக ஆராதித்ததில்லை. ஆதாம் கடவுளின் கரங்களால் சிருஷ்டிக்கப்பட்டதுபோல் தன்னுடைய ஆசிரியரின் கரங்களால் தான் சிருஷ்டிக்கப்பட்டதாக ஏஞ்சலோ நினைத்தான். அதே கைகளால்தான் அவன் தன் துணையையும் பெற விதிக்கப்பட்டிருந்தான்.

ஸ்பெயின் ராஜியத்தின் ஆல்பா நகர பிரபு பேரழகர், பேரறிவாளர். அவர் அதிகம் அழகோ அறிவோ இல்லாத சபை பணிப் பெண்ணை மணந்து அவளுக்கு எல்லா வகையிலும் விசுவாசமாக வாழ்ந்தார். இதைக்கண்டு ஆச்சரியப்பட்டு கேள்வி எழுப்பிய நண்பர்களிடம் பிரபு சொன்னாராம், “ஆல்பா நகரத்தின் சீமாட்டி என்ற பட்டத்தோடு ஒருத்தி இருந்தால் அவள்தான் இந்த உலகத்திலேயே மிகவும் விரும்பத்தக்க பெண்ணாக இருப்பாள். சீமாட்டியாக அமர்ந்திருக்கும் அந்தப்பெண்ணின் தனிப்பட்ட அழகுக்கோ அறிவுக்கோ அதனுடன் சம்பந்தம் இல்லை,” என்று. அதேபோலத்தான் நம்பிக்கைமீறிய மாணவனுக்கும். தனக்குள் இருந்த உக்கிரமான காமத்தின் விசையுடன் தனக்கு அனைத்துக்கும் மேலான லட்சியமாக இருந்த உயர்கலை இணைந்தபோது, அதனுடன் ஆசிரியரிடம் அவனுக்கிருந்த தனிப்பட்ட ஆராதனையும் கலந்தபோது அது உருவாக்கிய தீயை அவனே நினைத்தாலும் கட்டுப்படுத்தியிருக்க முடியாது.

இளையவர்கள் இருவரின் இந்த விவகாரத்தில் மூத்த சிற்பி லியோனிடாசுக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறிவிடமுடியாது. ஒவ்வொரு நாளும் தன்னுடைய பிரியத்துக்குறிய மாணவனுடனான உரையாடல்களில் அவர் லுக்ரீசியாவின் அழகை பிரத்யேகமாக முன்னிறுத்திப் பேசினார். ‘விளக்குடன் இருக்கும் சைக்கீ’ என்ற அழகான செவ்வியல் சிற்பத்தை அந்த இளம் பெண்ணை மாதிரியாக நிறுத்திச் செதுக்கியபோது அவர் ஏஞ்சலோவையும் தன் அருகே அழைத்துக்கொண்டார். அவனையும் அந்தச் சிற்பத்தை வடிக்கச் சொன்னார். அவன் உளியை தூக்கியபோது அவரே அவனுக்கு அவர்கள் முன் நின்ற உயிரும் மூச்சும் வெட்கமும் கொண்ட உடலின் அழகுகளை எடுத்துறைத்தார். செவ்வியல் கலைச் சிற்பம் ஒன்றின் முன்னால் நிற்கும் பரவசத்தோடும் உத்வேகத்தோடும் இரண்டு கலைஞர்களும் அவள் முன்னால் நின்றனர்.

மூத்த சிற்பிக்கும் இளைய சிற்பிக்கும் இடையே இருந்த இந்த வினோதமான புரிதலை பற்றிய போதம் இருவருக்குமே இல்லை. மூன்றாவது ஆள் ஒருவர் எடுத்து சொல்லியிருந்தாலும் அவர்கள் அதனை கண்டுகொண்டிருக்கமாட்டார்கள். அல்லது ஏதாவது உளருகிறான் என்று நினைத்திருப்பார்கள். அவர்களுக்குள் இப்படிப்பட்ட புரிதல் இருந்ததை அனுமானித்த ஒரே உயிர் அந்த பெண் லுக்ரீசியா மட்டும் தான். கலைஞர்களான ஆண்களின் மனத்தில் உருவாகக்கூடிய ஒரு வகையான விலகிய குரூரத்தை சற்று கிளர்ச்சியுடனும் கலகத்துடனும் அவள் கண்டுகொண்டாள். மிகவும் விருப்பத்திற்குறிய மனிதர்களைக் கூட அப்படித்தான் அவர்கள் அணுகுவார்கள் என்று ஊகித்தாள். தன் மேய்ப்பவனாலேயே கசாப்புக்கு கொண்டுசெல்லப்படும் ஆடு ஓலமிடுவதுபோல் அவளுடைய மனம் அப்போது முற்றான தனிமையில் ஓலமிட்டது.

அன்றாட வாழ்வின் போக்கில் தனக்கு நேர்ந்த சில விசித்திர நிகழ்வுகளை இணைத்து லியோனிடாஸ் அல்லோரி யாரோ தன்னை வேவு பார்க்க பின் தொடர்வதாக அறிந்துகொண்டார். தனக்கு பெரிய இடர் காத்திருக்கிறது என்று புரிந்தது அவருக்கு. அதன் பிறகு தன்னுடைய மரணத்தை பற்றியும், தன்னுடைய கலை வாழ்க்கை முடிவுக்கு வரப்போவதைப் பற்றியும் மட்டுமே அவரால் சிந்திக்க முடிந்தது. அந்த எண்ணங்களால் முழுவதும் ஆட்கொள்ளப்பட்டார். தனக்கு வரப்போகும் ஆபத்தைப்பற்றி அவர் தன்னைச்சுற்றியிருந்த எவரிடமும் பேசவில்லை. அந்தச்சில வாரங்களில் மனிதர்கள் அனைவரும் அவரிலிருந்து மிகவும் தொலைவுக்கு சென்றுவிட்டதாகவும், ஆகவே காட்சிக்கோண அளவுகளின் விதிப்படி மிகச்சிறியவர்கள் ஆகிவிட்டதாகவும் அவருக்குத் தோன்றியது. அப்போது அவர் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியையாவது முடித்திருக்கலாம். ஆனால் பணியும் கூட ஒரு திசைத்திருப்பலாகவே அப்போது தோன்றியது. அவர் கைதாவதற்கு சில நாட்களுக்கு முன்னால் தன் தனிமையிலிருந்து வெளியே வந்தார். சுற்றியிருந்த அனைவரிடத்திலும் மிக அன்பாக கனிவாக நடந்துகொண்டார். இத்தருணத்தில் அவர் தன் மனைவி லுக்ரீசியாவை ஊருக்கு வெளியே மலை மேலே திராட்சைத்தோட்டம் வைத்திருந்த தன் நண்பனின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். தான் இருந்த ஆபத்தான நிலைமையை பற்றி அவளிடம் சொல்ல அவர் விரும்பவில்லை. இருந்தாலும் அவளை அனுப்ப ஏதாவது காரணம் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. ஆகவே அவள் வெளிறி இருந்ததாகவும் அவள் உடல் நலம் தேரவேண்டும் என்றும் அதற்காகத்தான் அவளை தோட்டவீட்டுக்கு அனுப்புவதாகவும் அவளிடம் சொன்னார். அது அந்த நேரத்துக்காக உருவாக்கப்பட்ட காரணம் தான். ஆகவே அவள் அவர் சொற்களை தீவிரமாக கேட்டுக்கொண்ட விதம் அவரை புன்னகைக்க வைத்தது.  

அவள் உடனே ஆஞ்செலோவை வரச்சொல்லி தன் கணவரின் முடிவை தெரிவித்தாள். அதுவரை தங்கள் இணைவு எப்படி சாத்தியமாகப்போகிறது என்ற ஏக்கத்தில் தவித்துக்கொண்டிருந்த காதலர்கள் இருவரும் இப்போது கண்கள் வெற்றிக்களிப்பில் மின்ன ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.  தங்கள் காதல் எல்லாவற்றையும் தன் வசம் இழுத்து சுற்றி அடுக்கிவைத்துக்கொள்ளும் அரிதான காந்தக்கல் என்றும் இனிமேல் பிரபஞ்சத்தின் சகல சக்திகளும் அவர்களை இணைக்கவே செயல்படும் என்றும் அவர்கள் நம்பத்தொடங்கினார்கள். லுக்ரீசியா முன்பே அந்த தோட்ட வீட்டுக்குச் சென்றிருந்தாள். மலை வழியாக அந்த வீட்டுக்கு ஏறி வர ஒரு ரகசியப் பாதை இருக்கும் விஷயத்தை அவள் ஆஞ்செலோவிடம் சொன்னாள். அந்தப்பாதை வழியாக ஏறி அவன் நேரடியாக அவள் அறையின் சாளரத்துக்குக் கீழேயே வந்துவிடலாம். அந்த சாளரம் மேற்கை நோக்கித் திறந்திருக்கும். வளர்பிறை இரவு என்பதால் அவளால் அவன் உருவத்தை திராட்சைக் கொடிகளுக்கு இடையே கண்டுகொள்ள முடியும். அவன் கீழிருந்து ஒரு கூழாங்கல்லைத்துக்கி மேலே சாளரக்கண்னாடியில் எறிவான். அவள் ஜன்னலைத் திறப்பாள்.

பேச்சு இந்த இடத்தை அடைந்தபோது இருவரின் குரல்களும் இடரின. சமநிலையை மீட்டுக்கொள்ள ஆஞ்செலோ அந்த இரவுப்பயணத்துக்கென்றே பிரத்யேகமாக தன் நண்பனிடமிருந்து வாங்கி வந்திருந்த மேலங்கியை பற்றிச் சொன்னான். ஊதா நிறத்தில் ஆட்டின் மென்முடியால் செய்யப்பட்ட பழுப்பு நிற நூல்வேலைப்பாடுகள் அமைந்த அருமையான மேலங்கி அது. கைகளில்லாத பெரிய சால்வைப்போன்ற அந்த மேலங்கியை தோள் மீது அணிந்துகொண்டால் கண்டாமணி மாதிரி உடலைச்சுற்றி விழும். அவன் பேசப்பேச லுக்ரீசியா கேட்டுக்கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும்  லுக்ரீசியாவின் அறையில் நின்றபடியே தான் பேசினார்கள். அது ஆசிரியரின் பணியறைக்குப் பக்கத்து அறை. நடுவே இருந்த கதவு அப்போது திறந்துதான் இருந்தது. அன்றிலிருந்து இரண்டாவது சனிக்கிழமை இரவு அவர்கள் சந்திப்பது என்று முடிவானது.

இருவரும் பிரிந்தார்கள். அடுத்த ஒரு வாரத்திற்கு எப்படி ஆசிரியரின் மனம் முழுவதும் மரணம் கடந்த காலாதீதத்தின் சிந்தனைகளால் நிரம்பியிருந்ததோ அப்படி இளம் சீடனின் மனம் முழுவதும் லுக்ரீசியாவின் உடலை கொள்வதன் பற்றிய சிந்தனைகளால் நிரம்பியிருந்தது. ஒரு கணம் கூட உண்மையில் அவனை விட்டுப்போகாத அந்த எண்ணம் ஒவ்வொரு கணமும் புதிதென எழுவது போலத் தோன்றியது. மறந்து போன மகிழ்ச்சி ஒன்று திரும்ப நினைவில் எழுவதுபோன்ற தித்திப்பு. “என் சகோதரியே, அன்பே, வெள்ளைப்புறாவே, எனக்காக திறந்துகொள். என் மனம் பனித்துளிகளால் நிறைந்திருக்கிறது. என் கூந்தல் இழைகளில் இரவின் தூரல் எஞ்சியிருக்கிறது. அன்பே, நீ முழுக்க முழுக்க வெண்மையானவள். உன்னில் ஒரு சிறு மருவும் இல்லை. என் தூயவளே! ஆம், அவளுக்குறியவன் நான். என்னுடையவள் அவள்.”

முதல் ஞாயிறு காலை லியோனிடாஸ் அல்லோரி கைதாகி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த வாரம் முழுவதும் விசாரணை நடந்தது. குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தேசாபிமானியான மூத்தவர் பல வாதங்களை முன்வைத்திருக்கலாம். ஆனால் முதல் விஷயம், அரசு அவரைப்போன்ற ஆபத்தான எதிரியை இந்த முறை கண்டிப்பாக ஒழித்துவிடவேண்டும் என்று முடிவாக இருந்தது. இரண்டு, குற்றம்சாட்டப்பட்டவர் தான் அடைந்த உன்னதமான மனச்சமநிலையை குலைக்கச் சித்தமாக இல்லை. ஆகவே முதல் நாளிலிருந்தே வழக்கு எப்படி முடிவாகும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. தீர்ப்பு வந்தது. அடுத்த ஞாயிறு காலை அந்த மக்களின் தலைமகனாக விளங்கியவர் சிறைச்சுவரோடு முதுகுசாய்த்து நிற்கவைக்கப்படுவார். நெஞ்சில் ஆறு குண்டுகளை பெற்றுக்கொள்வார். குண்டுபட்ட அவர் உடல் உருளைக்கல் பாதையின் மீது சரிந்து விழும்.

வார இறுதியில் அந்த மூத்தக் கலைஞர் தனக்கு பன்னிரெண்டு மணிநேர ஜாமீன் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தன்னுடைய மனைவியை சென்று பார்க்க வேண்டும் என்றும் அவளிடம் விடை பெற வேண்டும் என்றும் சொன்னார்.

கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால் அவருடைய சொற்கள் அதை செவிமடுத்தவர்களின் காதுகளிலிருந்து எளிதாக மறையவில்லை.  அந்த மாமனிதருடைய ஆன்மபலமே அதற்குக் காரணம். அவரது அடிப்படையான நேர்மையும் அவர் அடைந்த புகழும் பேரொளியுடன் அவரைச் சூழ்ந்திருந்தது. சாகவிதிக்கப்பட்ட மனிதரே நம்பிக்கை இழந்துவிட்டப் பிறகும் அவர் கடைசி கோரிக்கையை நீதிபதிகள் மீண்டும் மீண்டும் விவாதித்தார்கள்.

கார்டினல் சால்வியாட்டியின் முன்னிலையில் அந்த பேச்சு எழ நேர்ந்தது.

“ஆம், சந்தேகமே இல்லாமல் இந்த இடத்தில் நாம் நெகிழ்ந்து போனால் அது பின்னால் வரும் சந்ததியினருக்கு தப்பான முன்னுதாரணமாக அமையும்,” என்றார் அந்த பெரியவர். “ஆனால் இந்த நாடு அல்லோரிக்கு கடன்பட்டிருக்கிறது. அரச மாளிகையிலேயே அவருடைய சிற்பங்கள் சிலது இருக்கிறதல்லவா? மக்களுக்கு தங்கள் மீதான நம்பிக்கையை அல்லோரி தனது கலையால் பல முறை வலுப்பெற செய்திருக்கிறார். இப்போது மக்கள் அவர் மீது சற்று நம்பிக்கையுடன் நடந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.”

அவர் மேலும் யோசித்தார். “மலைகளின் சிங்கம் என்று அவருக்கு ஒரு பெயர் இருக்கிறதல்லவா? அவர் மாணவர்கள் அவர் மேல் ஆழமான பற்று கொண்டுள்ளவர்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். மரணத்தை விடவும் ஆழமான பற்றை அவர் தன் மாணவர்களில் எழுப்பக்கூடியவரா என்று கண்டுபிடிப்போமே? ஒரு பழைய விதி உள்ளது, அதை இங்கே உபயோகிக்கலாம். தன் இடத்தை எடுத்துக்கொள்ள இன்னொரு மனிதன் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் கைதி சிறையிலிருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு வெளியே போகலாம். சொன்ன நேரத்துக்கு அவர் திரும்பவில்லையென்றால் அவர் இடத்தை எடுத்துக்கொண்டவன் சாகத் தயாராக இருக்க வேண்டும்.”

கார்டினல் தொடர்ந்தார், “போன வருடம் அல்லோரி ஆஸ்கொலியில் இருக்கும் என் இல்லத்தில் சில புடைப்புச்சிற்பங்களை செய்து தர சம்மதித்திருந்தார். அப்போது அவருடன் அவருடைய அழகான இளம் மனைவியும் பேரழகனான இளம் சீடனும் வந்திருந்தனர். சீடனின் பெயர் ஆஞ்செலோ. அல்லோரி அவனை தன் மகன் என்றார். நாம் அல்லோரியிடம் அவருக்கு பன்னிரெண்டு மணிநேர விடுதலை உண்டு என்று சொல்லலாம். அவர் சென்று தன் மனைவியை பார்த்து வரட்டும். ஆனால் அவர் சிறையிலிருந்து வெளியே வரும் அதே சமயத்தில் அந்த இளைஞன் ஆஞ்செலோ உள்ளே போக வேண்டும். பன்னிரெண்டு மணிநேர கெடு முடியும் வேளையில் என்ன நடந்தாலும் அங்கே ஒரு மரணதண்டனை விதிக்கப்படும் என்று மூத்தவர் இளையவர் இருவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.”

வழக்கத்திற்குப் புறம்பான ஓர் முடிவே இந்தச்சூழ்நிலையில் உகந்ததாக இருக்கும் என்று அங்கே கூடியிருந்த அதிகாரம் படைத்த கணவான்கள் அனைவரும் உணர்ந்தார்கள். அவர்கள் கார்டினலின் யுக்தியை ஒப்புக்கொண்டார்கள். சிறையிலிருந்தவரிடம் அவர் கோரிக்கை ஏற்கப்பட்டதென்றும் என்ன நிபந்தனைகளின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படும் என்றும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. லியோனிடாஸ் அல்லோரி ஆஞ்சலோவுக்கு செய்தி அனுப்பினார்.

இளம் சிற்பியின் சக மாணவர்கள் அந்தச் செய்தியை கொண்டுவந்தபோது அவன் தன் அறையில் இல்லை. நண்பர்களின் துயரத்தை அவன் பெரிதாக கவனிக்கவில்லையென்றாலும் அவர்களின் சோர்வு அவனை பாதித்தது. மொத்த பிரபஞ்சமும் அழகும் ஒத்திசைவும் இணைந்த இயக்கமாக, வாழ்க்கை என்பதே எல்லையற்ற கருணை கொண்ட ஒன்றாக அவனுக்குத் தோன்றிக்கொண்டிருந்த வேளை அது. நண்பர்கள் அவனிடமிருந்து ஒரு மரியாதைக்காக விலகியிருந்தது போல் அவனும் அவர்களிடமிருந்து விலகியே இருந்தான். சமீபத்தில் பூமிக்கடியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட கிரேக்கக் கடவுள் டயோனிஸசின் சிற்பத்தைக் காண அவன் வெகு தூரத்தில் இருந்த மிராண்டாவின் பிரபு மாளிகை வரை நடந்தே சென்றிருந்தான். உலகம் தெய்வீகமானது என்று அவன் அப்போது அடைந்திருந்த தீவிரமான நம்பிக்கையை உறுதிபடுத்தும் வகையில் ஓர் ஆற்றல்மிக்கக் கலை படைப்பை அக்கணம் கண்டுவிட அவன் மனம் அவனே அறியாமல் விழைந்திருக்கலாம்.

ஆகவே அவனுடைய சக மாணவர்கள் நெரிசலான சாலையின் மேல் அமைந்திருந்த அவனுடைய சிறிய அறையில் வெகுநேரம் காக்க  நேர்ந்தது. அவன் ஒரு வழியாக திரும்பி வந்தவுடன், நாலா பக்கத்திலிருந்தும் அவர்கள் அவனைச் சூழ்ந்து விஷயத்தை சொன்னார்கள்.

மூத்தவரின் பிரியத்துக்குறியவனான இளைய சிற்பிக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் எதிலும் கவனம் செலுத்தாமல் இருந்திருந்தான். அங்கே நிகழ்ந்துகொண்டிருந்த சம்பவங்களின் தீவிரத்தை அவன் அதுவரை அறிந்திருக்கவில்லை. செய்தி கொண்டுவந்தவர்கள் அதை மீண்டும் மீண்டும் அவனிடம் சொல்லவேண்டியிருந்தது. விஷயம் அவனுக்குப் புரிந்தபோது சற்று நேரம் துயரம் தாளாது அப்படியே திகைத்து நின்றான். தூக்கத்தில் நடப்பவன் போல தண்டனை எப்போது என்று கேட்டான். கண்ணீர் நிரம்பிய கண்களுடன் நண்பர்கள் பதில் சொன்னார்கள். லியோனிடாசின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றதை பற்றியும் லியோனிடாஸ் ஏஞ்சலோவை வரச்சொன்னது பற்றியும் அவர்கள் சொல்லச்சொல்ல இளையவனின் கண்களில் ஒளியும் கன்னங்களில் நிறமும் திரும்பியது. ஏன் இதை முதலிலேயே சொல்லவில்லை என்று நண்பர்களிடம் கோபமாக கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் உடனே சிறைச்சாலைக்குச் செல்லக் கிளம்பினான்.

ஆனால் தன் அறைவாயிலில் ஒரு கணம் நின்றான். அந்த நொடியின் கனம் முழுவதும் அவனில் சூழ்ந்துகொண்டது. வெகுதூரம் நடந்து வந்திருந்தான். புல்லில் படுத்து உறங்கியிருந்தான். அவனுடைய ஆடைகள் முழுவதும் தூசு படிந்திருந்தன. சட்டைக் கை கிழிந்திருந்தது. ஆசிரியர் முன்னால் அந்த நாளில் அப்படி சென்று நிற்க அவன் மனம் ஏற்கவில்லை. கதவருகே கொக்கியில் மாட்டப்பட்டிருந்த அவனுடைய புத்தம்புதிய மேலங்கியை எடுத்துத் தன் தோள்களில் அணிந்துகொண்டான்.

சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஏஞ்சலோ வரப்போகும் விஷயம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவன் மரணதண்டனை விதிக்கப்பட்டவரின் அறைக்கு கொண்டுசெல்லப்பட்டான். கதவு திறக்கப்பட்டது. ஏஞ்சலோ ஓடிப்போய் ஆசிரியர் மேல் விழுந்தான். அவரை இறுகி அணைத்துக்கொண்டான்.

லியோனிடாஸ் அல்லோரி அவனைச் சமாதானப்படுத்தினார். இளைஞனின் மனத்தை நிகழ்காலத் துயரிலிருந்து திசைதிருப்ப அவர் பேச்சை வானத்து நட்சத்திரங்களை நோக்கிக் கொண்டு போனார். மகனிடம் அவர் அதிகமும் வானத்தை பற்றித்தான் எப்போதும் பேசுவது வழக்கம். வானின் அத்தனை ஞானங்களையும் அவர் இளம் மாணவனுக்குப் புகுட்டியிருந்தார். வெகு சீக்கிரத்திலேயே அவருடைய தீர்க்கமான பார்வை மற்றும் தெலிவான ஆழ்ந்த குரல் வழியாக மாணவனை அவருடன் எழும்பச் செய்தார். இருவரும் கைகோர்த்து பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றார்கள். லௌகீக அக்கரைகள் ஏதுமற்ற அந்த உயரமான உலகத்தில் சற்றுநேரம் சஞ்சரித்தார்கள். வெளிர்ந்த இளம் முகத்தில் கண்ணீர் உலர்வதைக் கண்ட பிறகு தான் ஆசிரியர் அவனை திரும்ப பூமிக்குக் கொண்டு வந்தார். சீடனிடம் நீ உண்மையிலேயே இந்தச்சிறையில் இன்றிரவை எனக்காக கழிக்க சித்தமாக இருக்கிறாயா என்று கேட்டார். ஆம், என்றான் ஆஞ்செலோ.

“மகனே, நான் உனக்குக் கடன் பட்டிருக்கிறேன்,” என்றார் லியோனிடாஸ். “இந்த பன்னிரெண்டு மணி நேரம் எனக்கு எல்லையில்லா முக்கியத்துவம் கொண்டது. அதை நீ எனக்குத் தந்திருக்கிறாய்.”

“ஆம், ஆன்மாவின் அழிவின்மையை நான் நம்புகிறேன்,” அவர் தொடர்ந்தார். “ஒரு வேளை அது ஒன்றுதான் நிலையான உண்மையாக இருக்கலாம். தெரியவில்லை. நாளை தெரிந்துவிடும். ஆனால் நம்மைச்சுற்றி இந்த பருப்பொருட்களாலான உலகு இருக்கிறதே, மண்ணும் நீரும் காற்றும் நெருப்புமான உலகம், அது உண்மையில்லையா?  என் உடல்… மஜ்ஜை நிரம்பிய எலும்புகள், நாளங்களில் நிற்காமல் ஓடும் குருதி, ஒளிமிக்க என் ஐந்து புலன்கள் என்றான இந்த உடல், இது தெய்வீகமாது இல்லையா? இதில் நிலைத்த உண்மை இல்லையா? மற்றவர்கள் என்னை முதியவன் என்று நினைக்கிறார்கள். ஆனால் நான் விவசாயக் குடியில் பிறந்தவன். என் மூதாதையர்கள் நிலத்தில் இறங்கி வேலை செய்தவர்கள். எங்கள் மண் எங்களை பேணி வளர்த்த தாதி. கண்டிப்பான, குறைவைக்காமல் அள்ளி அள்ளி ஊட்டிய தாதி. உண்மையைச்சொன்னால் இளமையில் இருந்ததை விட என் தசைகள் இப்போது தான் வலுகொண்டு இருக்கின்றன. என் தலைமுடி இப்போதும் அடர்த்தியாகவே இருக்கிறது. கண்பார்வை சிறிதும் மங்கவில்லை. இனி என் ஆன்மா புதிய பாதைகளை கண்டடைந்து செல்லப்போகிறது. ஆனால் என் உடலின் இந்த வலிமைகளையெல்லாம் நான் இங்கேயே விட்டுச்செல்லப்போகிறேன். என் ஆன்மா கிளம்பலாம், ஆனால் ஒளிவுமறைவுகளற்ற என் திறந்த உடலை இந்த மண், என் பிரியத்திற்க்குறிய காம்பானியா மண், தன் திறந்த கரங்களால் அள்ளிக்கொண்டு தனதாக்கிக்கொள்ளப் போகிறது. என் உடலை மண் பெற்றுக்கொள்வதற்கு முன்னால் நான் இயற்கையை நேருக்கு நேராக ஒரு முறை சந்திக்கவேண்டும். பழைய நண்பர்களுக்கு இடையே நிகழும் கனிவான ஆழமான உரையாடலைப்போல் முழு பிரக்ஞையுடன் என் உடலை நான் அவளிடம் அளிக்க வேண்டும். 

“நாளை நான் என் எதிர்காலத்தை சந்திக்கச் சித்தமாவேன். ஆனால் இன்று இரவு நான் வெளியே செல்ல வேண்டும். சுந்தந்திரமான உலகில் சுதந்திரமாக இருக்க வேண்டும். எனக்கு நன்கு தெரிந்த விஷயங்களின் மத்தியில் இருக்க வேண்டும்.  முதலில் அஸ்தமனத்தின் ஒளி விளையாட்டுகளை காண்பேன். அதன் பின் நிலவின் தெய்வீகமான தெளிவை, அவளைச்சுற்றி ஒளிரும் புராதனமான நட்சத்திரக்கோவைகளை பார்ப்பேன். ஓடும் நீரின் பாடலைக் கேட்பேன். அதன் புத்தம்புதிய ருசியை சுவைப்பேன். இருட்டில் மரங்களின் புற்களின் இனிமையை, கசப்பை அனுபவிப்பேன். கால்களுக்கடியில் மண்ணையும் கல்லையும் உணர்வேன். எத்தனை அற்புதமான இரவு காத்திருக்கிறது எனக்கு! எனக்கென்று அளிக்கப்பட்ட அத்தனை கொடைகளையும் இத்தருணத்தில் நான் நன்றியுடன், ஆழமான புரிதலுணர்வுடன், திரும்பக்கொடுக்க திரட்டிக்கொள்கிறேன்.”

“அப்பா,” என்றான் ஏஞ்சலோ. “மண்ணும் நீரும் காற்றும் நெருப்பும் உங்களை பரிபூரணமாக நேசிப்பதுதான் இயல்பு. அவைகள் உங்களுக்கு அளித்த வரங்களில் ஒரு துளிக்கூட நீங்கள் வீணடித்ததில்லை.”

“உண்மை தான்,” என்றார் லியோனிடாஸ். “எனக்கு எப்போதுமே அந்த நம்பிக்கை இருந்துள்ளது. கிராமத்தில் நான் சிறுவனாக இருந்த காலம் முதலாகவே. கடவுள் என்னை எப்போதும் பரிபூரணமாக நேசித்துக்கொண்டு தான் இருந்திருக்கிறார்.

“இப்போது அவகாசம் இல்லை. கடவுளுக்கு என் மேல் உள்ள எல்லையில்லா விசுவாசத்தை நான் எப்படி, எந்த பாதை வழியாக உணர்ந்துகொண்டேன் என்று என்னால் உனக்குச் சொல்லி புரியவைக்க முடியாது. மகனே, பிரபஞ்சத்தை ஆளும் முதன்மையான தெய்வீக விசையே விசுவாசம்தான் என்று எனக்கு இப்போது தெரிகிறது. என் மனசாட்சி மீது சத்தியமாக நான் இந்த மண்ணுக்கும் எனக்கு அளிக்கப்பட்ட இந்த வாழ்க்கைக்கும் விசுவாசமாக இருந்திருக்கிறேன். அவற்றிடம் போய் நான் சொல்ல வேண்டும். நம் பிரிவும் ஒரு விசுவாச ஒப்பந்தம் தான் என்று. அதற்காகத்தான் இன்று வெளியே செல்ல அனுமதி கோரினேன்.

“அப்படிச்செய்தேன் என்றால் நாளை மரணத்துடனான ஒப்பந்தத்தையும் அதற்கு பின் வரவிருக்கும் விஷயங்களையும் என்னால் முழுமனதுடன் நிறைவேற்ற முடியும்,” மெதுவாக போசிக்கொண்டிருந்தவர் இப்போது புன்னகைத்தார். “நிறைய பேசிவிட்டேன். என்னை பொறுத்துக்கொள்,” என்றார். “மிகவும் விரும்பும் ஒருவரிடம் நான் பேசி ஒரு வாரம் ஆகிறது”

ஆனால் அவர் மறுபடியும் பேசத்தொடங்கிய போது அவருடைய முகமும் குரலும் மிகத் தீவிரமானதாக இருந்தன.

“மகனே, நீ இத்தனை நாளும் என்னிடத்தில் முழு விசுவாசத்தோடு இருந்திருக்கிறாய். இன்றும் கூட. அதற்கு நன்றி. எத்தனை நீண்ட மகிழ்வான நாட்கள்! இனி வரும் நாட்களிலும் நீ எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். இந்த நான்கு சுவர்களுக்குள் வந்த பிறகு ஒவ்வொரு நாளும் உன்னை பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறேன். உன்னை பார்க்க வேண்டும் என்று என் மனம் துடித்தபடியே இருந்தது. எனக்காக அல்ல. உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்பதற்காக. ஆம், எத்தனையோ சொல்ல நினைத்திருந்தேன், ஆனால் நேரமில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டும். இது மட்டும் தான். மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். மகனே, எப்போதும் அளவீட்டின் தெய்வீக விதியான பொன் விகிதத்தை நீ உன் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்,” என்றார்.

“நான் இந்த இரவை இங்கே கழிப்பதில் எனக்கு மகிழ்ச்சி தான்,” என்றான் ஏஞ்சலோ. “ஆனால் முன்புபோல் இன்றும் இரவெல்லாம் உங்களுடன் பேசிக்கொண்டே வெட்டவெளியில் நடக்க வாய்த்திருந்தால் இன்னும் சந்தோஷமாகக் கிளம்பியிருப்பேன்.”

லியோனிடாஸ் மறுபடியும் புன்னகைத்தார். “நட்சத்திரங்களுக்கடியில் பனிபடிந்த புல் வேய்ந்த மலைப்பாதைகள் வழியாக நான் இன்று போகப்போகும் வழி என்னை ஓர் இடத்திற்கு மட்டுமே கொண்டு செல்லும். ஒரு முறை, இறுதியாக, இந்த இரவில், நான் என் மனைவி லுக்ரீசியாவுடன் இருக்கப்போகிறேன். ஏஞ்சலோ, ஒன்று சொல்கிறேன். மனிதன்… மனிதன் யார்? கடவுளின் பிரதான சிருஷ்டி. அவரே தன் மூச்சை நாசியில் ஊதி உயிர்பித்த ஜீவன். அந்த மனிதன் மண்ணையும் கடலையும் காற்றையும் நெருப்பையும் அறிந்து அவற்றுடன் ஒன்றாக வேண்டும் என்றே கடவுள் அவனுக்கு பெண்ணை கொடுத்தார். நான் விடைபெறவிருக்கும் இந்த வேளையில் இவை அனைத்துடனான என் ஒப்பந்தத்தை லுக்ரீசியாவின் கரங்களுக்குள் இருந்தபடி புதுப்பித்துக்கொள்வேன்.” அவர் சில கணங்கள் பேசாமல் அசைவில்லாமல் இருந்தார்.

“லுக்ரீசியா இங்கிருந்து சில மைல்கள் தள்ளி ஒரு வீட்டில் என் நண்பர்களின் பாதுகாப்பில் இருக்கிறாள். அவளுக்கு நான் கைது செய்யப் பட்டதோ எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதோ தெரியாது. என் நண்பர்களை நான் ஆபத்தில் சிக்கவைக்க விரும்பவில்லை. ஆகவே நான் அங்கே போகும் விஷயம் அவர்களுக்கு தெரியலாகாது. அவளிடம் நான் கல்லரையின் வாசம் வீசும் ஒருவனாக, மரணத்திற்காக காத்திருப்பவனாகச் செல்லவும் விரும்பவில்லை. எங்கள் சந்திப்பு எங்கள் முதல் இரவு போல் இருக்க வேண்டும். இந்தச்சந்திப்பின் ரகசியம் அவளுக்கு ஓர் இளைஞனின் தீவிரத்தையும், ஓர் இளம் காதலனின் மூர்க்கத்தனத்தையும் உணர்த்த வேண்டும்.”

“இன்று என்ன நாள்?” ஏஞ்சலோ திடீரென்று கேட்டான்.

“என்ன நாள் என்றா கேட்டாய்?” என்றார் லியோனிடாஸ். “நித்தியகணத்தை எண்ணி எண்ணி வாழ்ந்துகொண்டிருக்கும் என்னிடமா அந்த கேள்வியை கேட்டாய்?  எனக்கு இந்த நாள் – இறுதி நாள், அவ்வளவுதான். ஆனால் இரு, யோசிக்கிறேன். குழந்தை, நீயும், உன்னைப்போன்றவர்களுக்கும், இன்றைய நாளை சனிக்கிழமை என்று சொல்வீர்கள். நாளை ஞாயிறு.”

“பாதை எனக்கு நன்றாகவே தெரியும்,” லியோனிடாஸ் தொடர்ந்தார். அப்போது அந்த பாதையில் ஏறிக்கொண்டிருந்தவர் போல் மெல்ல, ஒவ்வொரு வார்த்தையாக யோசித்து யோசித்துப் பேசினார். “மலைப்பாதை வழியாக, தோட்ட வீட்டின் பின் பக்கமாக ஏறி, அவள் ஜன்னலை அடைவேன். மண்ணிலிருந்து ஒரு கூழாங்கல்லை பொறுக்கி அவள் ஜன்னல் கண்ணாடி மீது வீசுவேன். அவள் விழிப்பாள். இந்த நேரத்தில் யார் என்று எழுந்து வருவாள். ஜன்னலுக்கு வெளியே என் உருவத்தை கொடிகளுக்கிடையில் கண்டுகொள்வாள். ஜன்னலைத் திறப்பாள்.” மூச்சை உள்ளிழுத்தபோது அவருடைய விரிந்த வலிமைமிக்க மார்பு அசைவு கொண்டது.

“குழந்தை, என் நண்பனே!” லியோனிடாசின் குரல் உணர்ச்சிகரமாக எழுந்தது. “உனக்கு இந்தப்பெண்ணின் அழகு எப்படிப்பட்டது என்று தெரியும். நீ எங்கள் வீட்டில் தங்கியிருக்கிறாய், எங்கள் உணவு மேஜையில் அமர்ந்து உணவுண்டிருக்கிறாய். அவள் எத்தனை கனிவானவள், குதூகலம் மிக்கவள் என்று நீ அறிவாய். குழந்தைகளுக்கே உரிய நிச்சலனமும், நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு களங்கமின்மையும் உடைய மனம் அவளுக்கு. அதுவும் உனக்குத் தெரியும். ஆனால் உனக்குத் தெரியாதது ஒன்று உண்டு. இவ்வுலகத்தில் என்னைத்தவிர யாருக்குமே தெரியாத ஒன்று உண்டு. அவளுடைய உடலும் ஆன்மாவும் எல்லையில்லாமல், நிபந்தனையே இல்லாமல் சரணடையக்கூடியது. அந்தப் பனி எப்படி எரியும் தெரியுமா! உலகத்தில் உள்ள மகத்தான கலைச்செல்வங்கள் அனைத்துமாக அவள் எனக்கு இருந்தாள். ஒரு பெண்ணின் உடலில் அத்தனையும்! இரவுகளில் அவள் அணைப்பின் வழியாக பகலுக்கான என் படைப்பு சக்தி முழுவதையும் பெற்றுக்கொண்டேன். மைந்தா, உன்னிடம் அவளைப்பற்றி பேசும் போதே என் குருதி அலை போல் எழுகிறது. ‘என் சகோதரியே, அன்பே, வெள்ளைப்புறாவே, எனக்காக திறந்துகொள். என் மனம் பனித்துளிகளால் நிறைந்திருக்கிறது. என் கூந்தல் இழைகளில் இரவின் தூரல் எஞ்சியிருக்கிறது. அன்பே, நீ முழுக்க முழுக்க வெண்மையானவள். உன்னில் ஒரு சிறு மருவும் இல்லை. என் தூயவள் நீ!’ சில கணங்களுக்குப் பிறகு கண்களை மூடினார். “நாளை நான் திரும்பி வரும் போதும் என் கண்களை மூடிக்கொண்டே வருவேன்,” என்றார். “வாசலிலிருந்து என்னை இங்கே கொண்டு வருவார்கள். இங்கிருந்து வெளிச்சுவர் வரை ஒரு சிறு நடை. அங்கே என் கண்களை ஒரு துணியால் கட்டிவிடுவார்கள். கண்களால் இனி எனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. பாதையின் கரிய கற்களையோ, துப்பாகி முனைகளையோ நான் இந்த அற்புதமான கண்களில் கடைசி காட்சியாக விட்டுச்செல்ல மாட்டேன்.” அவர் மீண்டும் அமைதியானர். பிறகு சன்னமான குரலில், “இந்த ஒரு வாரத்தில் அவள் முகத்தை மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டு வர முயற்சித்தேன். காதிலிருந்து தாடை வரை அவள் முகத்தின் வளைவு எப்படி இருக்கும் என்று எனக்குச் சுத்தமாக ஞாபகமில்லை. நாளை அதிகாலை கடைசியாக அதை பார்த்துவிட்டுக் கிளம்புவேன்,” என்றார். “இனி எப்போதும் மறக்க மாட்டேன்.”

அவர் மீண்டும் கண்களை திறந்த போது அவருடைய ஒளிமிக்க பார்வை இளைஞனின் பார்வையை சந்தித்தது. “இத்தனை வேதனையுடன் என்னை பார்க்காதே,” என்றார். “என் மேல் பரிதாபம் கொள்ளாதே. நீ என்னை பரிதாபப்படக் கூடாது. இன்று இரவு நான் பரிதாபத்துக்குறியவனும் அல்ல, உனக்கு அது புரியும் என்று நினைக்கிறேன். மகனே, தவறாக சொல்லிவிட்டேன். நாளை காலை ஒரே ஒரு முறை கண்களை மீண்டும் திறப்பேன். என் பிரியத்திற்க்குறிய உன் முகத்தை பார்ப்பதற்காக. அப்போது உன் முகம் மகிழ்ச்சையாக, அமைதியாக, நாம் இணைந்து பணியாற்றிய போது இருந்தது போலவே இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.”

அந்தத் தருணத்தில் சிறையின் காவலாளி கதவில் பெரிய சாவியை திருப்பி உள்ளே நுழைந்தார். சிறையின் மணிக்கூண்டு கடிகாரம் ஆறு மணி அடிக்க பதினைந்து நிமிடங்கள் இருப்பதாக காட்டியது என்றார். கால் மணி நேரத்தில் இருவரில் ஒருவர் அந்தக் கட்டிடத்திலிருந்து வெளியே செல்ல வேண்டும். அல்லோரி தான் தயாராக இருப்பதாக பதிலளித்தார். இருந்தும் ஒரு கணம் தயங்கினார்.

“என்னை அவர்கள் கைது செய்தபோது நான் என் பணியறையில் இருந்தேன்,” என்று அவர் ஏஞ்சலொவிடம் சொன்னார். “அப்போது அணிந்திருந்த கசங்கிய பருத்தி ஆடையைத்தான் இப்போதும் அணிந்திருக்கிறேன். ஆனால் மலைகளில் நான் ஏறிச்செல்கையில் காற்றில் குளிர் ஏறும். உன்னுடைய மேலங்கியை நீ எனக்குக் கடனாகத் தருவாயா?”

ஏஞ்சலோ அந்த ஊதா நிற மேலங்கியை தன் தோள்களிலிருந்து எடுத்து ஆசிரியரிடம் கொடுத்தார். ஆசிரியருக்கு அதை கழுத்தில் மாட்டும் கொக்கி அமைப்பு புதுமையாக இருந்தது. தடுமாறிய அவர் விரல்களுக்கு உதவ ஏஞ்சலோ தன்னிச்சையாக அருகே வந்தான். தனக்கு உதவ எழுந்த இளம் கரங்களை ஆசிரியர் பற்றிக்கொண்டார்.

குரல் தழுதழுக்க, “ஏஞ்சலோ, இக்கணம் நீ எத்தனை கம்பீரமானவனாத் தோன்றுகிறாய் தெரியுமா!” என்றார். “உன்னுடைய இந்த மேலங்கி புதியது. விலையுயர்ந்தது. இதை நீ எனக்குத் தந்திருக்கிறாய். என்னுடைய சொந்த ஊரில் ஒரு மணமகன் தன் திருமண நாளன்று இப்படியொரு மேலங்கியை அணிவான்.”

மேலங்கியை முழுவதுமாக அணிந்துகொண்டு புறப்படத் தயாராக அவர் எழுந்தார். “உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நாம் ஒரு நாள் இரவு மலைகளில் ஏறி வரும் போது வழி தவறிவிட்டோம். உனக்கு குளிர் தாங்கவில்லை. உடல் சோர்ந்துவிட்டாய். ஒரு கட்டத்தில் அப்படியே விழுந்துவிட்டாய். இனி ஒரு அடி எடுத்துவைக்க முடியாது ஆசிரியரே என்றாய். அப்போது, நீ செய்தாயே இப்போது, அதே மாதிரி நான் என் மேலங்கியை கழற்றி நம் இருவரையும் சுற்றி போர்த்தி இறுக்கிக்கொண்டேன். நாம் அந்த இரவு முழுவதும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி கிடந்தோம். என் மேலங்கிக்குள் நீ குழந்தை போல உடனே உறங்கிவிட்டாய். இன்று இரவும் நீ உறங்க வேண்டும்.”

ஏஞ்சலோவுக்கு ஆசிரியர் சொன்ன இரவு நன்றாக நினைவில் இருந்தது. ஆசிரியருக்கு அவனை விட மலையேற்றத்தில் பயிற்சி இருந்தது. ஆம், ஆசிரியருக்கு அவனை விட உடல் வலிமையும் எப்போதும் அதிகம் தான். அன்றிரவு அவன் கைகால்கள் குளிர்ந்து போயிருந்தன. அந்த இரவு முழுக்க இருட்டில் லியோனிடாஸ் அல்லோரியின் பெரிய உடலின் வெப்பத்தை அவன் தன்னுடைய குளிர்ந்த உடல் மீது உணர்ந்துகொண்டே இருந்தான். பெரிய, அன்பான விலங்கின் அருகே இருப்பது போன்ற உணர்வு. அவன் எழுந்த போது சூரியன் உதித்திருந்தது. மலைச்சரிவுகள் அத்தனையும் அதன் கதிர் வெளிச்சத்தில் ஒளிர்ந்தன. அவன் எழுந்து அமர்ந்து ஒரு நொடி திகைத்து பிறகு கூவினான். “தந்தையே! இவ்விரவு நீங்கள் என் உயிரை காப்பாற்றினீர்கள்!” ஏஞ்சலோவின் நெஞ்சிலிருந்து சொல்லென்றாகாத ஓர் ஓசை வெளிப்பட்டது.

“நாம் இன்று இரவு விடைப்பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை,” என்றார் லியோனிடாஸ். “ஆனால் நாளைக் காலை நான் உன்னை முத்தமிடுவேன்.”

காவலர் சிறைக்கதைவை திறந்தார். அந்த உயரமான நிமிர்ந்த உருவம் நிலைப்படியைத் தாண்டியது. கதவு மீண்டும் சாற்றப்பட்டது. சாவி கதவில் திரும்பியது. ஏஞ்சலோ தனிமையில் விடப்பட்டான்.

முதல் சில நொடிகளுக்கு ஏஞ்சலோ அதை ஒரு மாபெரும் கருணையென்றே எடுத்துக்கொண்டான். ஆனால் அடுத்த நொடியே அவன் உருளும் பாறையால் அடித்து நசுக்கப்பட்டவன் போல் கீழே சுருண்டு விழுந்தான்.

அவன் செவிகளில் ஆசிரியரின் குரல் எதிரொலித்தது. கண்கள் முன்னால் ஆசிரியரின் உருவம். மேல் உலகம் ஒன்றின், கலையின் எல்லையில்லா வெளியின் ஒளி பொருந்திய உருவம். தந்தை அவனுக்குத் திறந்து கொடுத்திருந்த அந்த ஒளியுலகிலிருந்து அப்போது அவன் அந்தர இருளுக்குள் தூக்கி எரியப்பட்டிருந்தான். அவனால் நம்பிக்கைதுரோகம் செய்யப்பட்டவர் அங்கிருந்து போனபிறகு அவன் முழுத்தனிமையில் இருந்தான். அவனால் அப்போது வானத்து நட்சத்திரங்களை பற்றியோ மண்ணை பற்றியோ கடலை பற்றியோ நதிகளை பற்றியோ  அவன் நேசித்த பளிங்கு சிற்பங்களை பற்றியோ யோசிக்க முடியவில்லை. அந்த நொடி லியோனிடால் அல்லோரியே அவனை ரட்சிக்க நினைத்திருந்தாலும் அது சாத்தியமாகியிருக்காது. ஏனென்றால் விசுவாச துரோகம் என்பது முற்றழிவுக்கு சமானமானது.

கல்லெறிப்படுபவன் மீது எறியப்படும் சல்லிக்கற்களைப்போல் ‘விசுவாச துரோகி’ என்ற பதம் அவன் மீது நாலாபுறத்திலிருந்தும் வந்து விழுந்தது. அதன் விசையை தாங்கமுடியாமல் மண்டியிட்டு கைகள் தொங்க அவன் அந்த அடிகளை மௌனமாக பெற்றுக்கொண்டான். மெல்ல புயல்மழை ஓயவும், ஒரு சிறு அமைதி. அப்போது மௌனத்திலிருந்து மென்குரல் ஒன்று காத்திரமாக எழுந்தது. “பொன் விகிதம்” என்று அது சொன்னது. அந்தச்சொற்கள் அவனைச்சுற்றி எதிரொலிக்க ஏஞ்சலோ கைகளை உயர்த்தி காதுகளை அழுத்தி மூடிக்கொண்டான்.

“விசுவாச துரோகம். அதுவும் எதற்கு? ஒரு பெண்ணிற்காக. பெண்! பெண் என்பவள் யார்? கலைஞர்களான நாம் அவளை உருவாக்கும் வரை அவளுக்கு இருப்பு இல்லை. நம்மை அன்றி அவளுக்கு உயிர் இல்லை. உடலைத்தவிர அவள் ஒன்றுமே இல்லை, ஆனால் நாம் அவளை பார்க்கவில்லை என்றால் அவள் உடல் கூட இல்லை. அவள் உயிர் பெற்று வர நம்முடைய ஆன்மாக்கள் நிலைக்கண்ணாடிகளாக வேண்டும் என்று கோருகிறாள். அதில் அவள் தன்னை அழகுபார்த்துக்கொள்வாள். ஆம், நான் அழகுடையவள், நான் இருக்கிறேன், என்பாள். அவள் வாழ வேண்டும் என்றால், அவள் தன்னை அழகுடையவள் என்று நம்பவேண்டுமென்றால், அதற்கு நாம் எரிந்து நடுங்கி மடியவேண்டும். நாம் கண்ணீர் சிந்தும்போது அவளும் கண்ணீர் சிந்துவாள் – ஆனால் மகிழ்ச்சியுடன், ஏனென்றால் நம்முடைய அந்தக் கண்ணீரும் அவள் அழகுக்கான சான்று. அவளை உயிருடன் வைத்திருக்க நாம் ஒவ்வொரு கணமும் எரிந்து துடிதுடிக்க வேண்டும்.”

அவன் சிந்தனைகள் மேலும் தொடர்ந்தன. “அவள் நினைத்தபடி நடந்திருந்தால் என்னுடைய படைப்பு சக்தி முழுவதையும் அவளை படைப்பதில், அவளை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் செலவழித்திருப்பேனே! ஆம், பெருங்கலை என்று ஒன்றை என்னால் எந்நாளும், எப்போதும், உருவாக்கியிருக்க முடியாது. அதை நினைத்து நான் வருந்தி கண்ணீர் உகந்திருப்பேன். அப்போதும் அவளுக்கு புரிந்திருக்காது. “ஏன், உனக்குத்தான் நான் இருக்கிறேனே!” என்று சொல்லியிருப்பாள். ஆனால் அவருடன் இருக்கையில்? அவருடன் இருக்கையில் நான் மகா கலைஞன் அல்லவா!”

அப்போது அவனால் லுக்ரீசியாவை பற்றி நினைக்க முடியவில்லை. தான் விசுவாச துரோகம் செய்த தந்தைக்கு அப்பால் அவனுக்கு அந்த நொடி உலகில் இன்னொரு மனித உயிர் இல்லை.

“நான் ஒரு மகத்தான கலைஞனாக ஆகக்கூடியவனென்று உண்மையிலேயே நினைத்தேனா? பெரும் வல்லமையும் ஒளிர்வும் கொண்ட சிற்பங்களை படைக்கப்போகும் சிற்பியென உண்மையிலேயே எப்போதாவது நம்பினேனா? நான் கலைஞன் இல்லை. ஒரு நாளும் நான் ஒரு மகத்தான சிற்பத்தை படைக்கப்போவதில்லை. ஆம், ஆணித்தனமாக அது எனக்கு இப்போது தெரிகிறது. என் கண்கள் போய்விட்டன. நான் குருடன். நான் குருடன்!”

இன்னும் சற்று நேரத்தில் அவன் எண்ணங்கள் நித்தியகாலத்திலிருந்து சமகாலத்துக்குத் திரும்பி வந்தன.

ஆசிரியர் அப்போது மலைப்பாதை வழியாக நடந்து கொடிகளுக்கு இடையே உள்ள தோட்டவீட்டை அடைந்திருப்பார். கீழிருந்து ஒரு கூழாங்கல்லைத் தூக்கி ஜன்னலின் மேல் வீசி எரிவார். அவள் ஜன்னலை திறப்பாள். ஊதா நிற மேலங்கி உடுத்தி அங்கே நிற்பவனை அவள் எப்போதும் அழைப்பது போல், “ஏஞ்சலோ” என்று அழைப்பாள். அப்போது அவனுடைய பேராசானுக்கு நண்பனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட சாவே இல்லாத அந்த மாமனிதனுக்கு எல்லா உண்மையும் புலப்படும். தன் சீடன் தனக்கு விசுவாச துரோகம் இழைத்துவிட்டான் என்று புரிந்துகொள்வார்.

முந்தைய நாள் முழுவதும் ஏஞ்சலோ சாப்பிடவில்லை. தூங்கவும் இல்லை. இப்போது உடல் மிகவும் களைத்து சோற்வுற்றிருந்தது. ஆசிரியர் அவனிடம் “இன்று இரவு நீ உறங்க வேண்டும்” என்று சொன்னது அவன் நினைவுக்கு வந்தது. லியோனிடாசின் உத்தரவுகள் – அவற்றை அவன் பின்பற்றினானென்றால் – எப்போதும் அவனை சரியான பாதையிலேயே இட்டுச்செல்பவை என்று அறிந்திருந்தான். அவன் மெல்ல எழுந்து தடுமாறி நடந்து ஆசிரியர் படுத்திருந்த வைக்கோல் பரப்பின் மீது விழுந்தான். படுத்தவுடன் உறங்கிவிட்டான்.

ஆனால் உறக்கத்தில் கனவுகள் வந்தன.

மீண்டும் அவன் முன்னால் அந்த காட்சி விரிந்தது. இந்த முறை இன்னும் தெளிவாக. ஊதா நிற மேலங்கி அணிந்த அந்த பெரிய உருவம் மலைப்பாதையின் மேல் நடக்கிறது. குனிந்து ஒரு கூழாங்கல்லுக்காக துழாவுகிறது. கண்ணாடி ஜன்னலின் மேல் விட்டெறிகிறது. ஆனால் கனவு அவனை அடுத்தக்கட்டத்துக்குக் கூட்டிச்சென்றது. அவன் அந்த ஆடவனின் கைகளில் இருந்த பெண்ணைக் கண்டுவிட்டான். லுக்ரீசியா!

படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான். அவன் உலகத்தில் உயர்வான, புனிதமான எதுவுமே எஞ்சியிருக்கவில்லை. அப்பட்டமான பொறாமையின் தீ அவன் நாளங்களை சுட்டெறித்துப் பறவியது. அவனை மூச்சடைக்க வைத்தது. சீடனுக்கு ஆசிரியர் மேல் அந்த மகா கலைஞன் மேல் இருந்த பற்று பெருமதிப்பு பக்தி எல்லாம் போனது, அந்தர இருட்டில் மகன் தந்தையை பார்த்து பல்லை கரகரவெனக் கடித்தான். கடந்தகாலம் மறைந்து விட்டது, எதிர்காலம் என்று இனி ஏதும் வரப்போவதில்லை. இளையவனின் எண்ணங்களெல்லாம் அந்த ஒரே புள்ளியில் சென்று குவிந்தன. அங்கே, சில மைல்களுக்கு அப்பால் அங்கே, அந்த அணைப்பு.

அவன் ஒருமாதிரியாக போத நிலைக்கு வந்தான். மீண்டும் உறங்கக்கூடாது என்று நினைத்தான்.

ஆனால் மீண்டும் உறங்கினான். இம்முறையும் அதே கனவு வந்தது. மேலும் உக்கிரமாக மேலும் உயிர்ப்பாக மேலும் நுண்விவரங்கள் கொண்டதாக. இல்லை, இல்லை, இது நான் இல்லை என்று பேரச்சத்துடன் ஒவ்வொன்றையும் நிராகரித்தான். தன் மீதிருந்த சுயகட்டுப்பாடு உறக்கத்தில் அவிழ்ந்த பிறகு தான் அவன் கற்பனையாற்றல் அதையெல்லாம் அவனுக்கு உருவாக்கித்தந்திருக்கக்கூடும்.

மீண்டும் விழித்தான். உடம்பெல்லாம் குளிர்வாக வியர்த்துக் கொட்டியது. அறையின் மறுபுறம் கணப்படுப்பில் சில கரித்துண்டுகள் அப்போதும் ஒளிர்வுடன் எரிந்துகொண்டிருந்தது. எழுந்து அருகே சென்று ஒரு பாதத்தை அதன் மேல் வைத்து அழுத்தி அப்படியே சில நிமிடங்களுக்கு வைத்திருந்தான். கரித்துண்டுகளில் நெருப்பு அணைந்தது.

அடுத்தக் கனவில் அவன் அமைதியாக ஓசையே எழாதவாரு மலைப்பாதையில் ஏறிச்சென்றவரை பின் தொடர்ந்தான். அவர் பின்னாலேயே ஏறி ஜன்னல் வழியாக உள்நுழைந்தான். கையில் கத்தி இருந்தது. அங்கே இருவர் அணைத்தபடி கிடக்க, பாய்ந்து கத்தியை முதலில் அந்த ஆணின் நெஞ்சில் பாய்ச்சினான். இழுத்து அதை அந்தப் பெண்ணின் நெஞ்சில் இறக்கினான். அவர்களின் ரத்தம் சேர்ந்து ஒழுகி ஒன்றாக கலந்து படுக்கைவிரிப்பு மீது சிவந்து கனற்றும் இரும்புத்துண்டால் சுட்ட புண் போல ஆழமான சிவப்புக் கரையாக ஊறியது. அதைப்பார்க்கப்பார்க்க அவன் கண்கள் எரிந்து எரிந்து அவன் குருடானான். பாதிவிழிப்பில் எழுந்து “ஆனால் நான் அவர்களை கத்தியால் குத்தவேண்டியதில்லையே. வெறும் கைகளால் கழுத்தை நெரித்தே கொல்லலாமே,” என்று யோசித்தான். அப்படியாக இரவுக் கழிந்தது.

சிறைக்காவலர் அவனை எழுப்பியபோது விடிந்திருந்தது. “உன்னால் தூங்க முடிந்ததா?” என்றான் அவன். “அந்த கிழட்டு நரியை நீ உண்மையிலேயே நம்புகிறாயா? என்னைக்கேட்டால் அவன் உன்னை நன்றாக ஏமாற்றிவிட்டான் என்று தான் சொல்வேன். இப்போது மணி ஐந்தே முக்கால். ஆறடிக்கும்போது சிறைப்பாதுகாவலரும் கர்னலும் வருவார்கள். கூண்டில் எந்த பறவை இருக்கிறதோ அதைக் கொண்டு போவார்கள். பாதிரியார் பிறகு தான் வருவார். ஆனால் உன் கிழட்டுச்சிங்கம் வரப்பொவதில்லை. உண்மையைச்சொல், அவர் இடத்தில் நீயோ நானோ இருந்தால் திரும்பி வருவோமா என்ன?”

ஏஞ்சலோவுக்கு சிறைக்காவலரின் வார்த்தைகள் புரிந்தபோது அவன் மனம் விவரிக்கமுடியா மகிழ்ச்சியில் நிறைந்தது. இனி பயப்பட ஒன்றும் இல்லை. கடவுள் அவனுக்கு ஒரு பாதையை திறந்துவிட்டார். மரணம். எளிமையான மகிழ்ச்சியான வழி. ஏஞ்சலோவின் தவிக்கும் மனத்தில் அப்போது ஒரு எண்ணம் மட்டும் மங்கலாக ஓடியது. “சாதாரண மரணம் அல்ல. அவருக்காக சாகப்போகிறேன்!”  ஆனால் அந்த எண்ணம் மறைந்தது. அவன் உண்மையில் அப்போது லியோனிடாஸ் அல்லோரியை பற்றியோ வேறு எந்த மனிதரை பற்றியோ யோசிக்கவில்லை. அவனுக்கு ஓர் எண்ணம்தான். இப்போது, இந்த இறுதிக்கணத்தில், எனக்கு மன்னிப்பு அருளப்பட்டுவிட்டது.

அவன் எழுந்து சிறைக்காவலர் கொண்டு வந்த தண்ணீர்க் கிண்ணத்தில் முகத்தை நன்றாகக் கழுவிக்கொண்டான். தலையை சீவினான். காலில் சூடு பட்ட இடம் எரிந்தது. நன்றியுணர்வால் நிறைந்தான். அப்போது அவன் ஆசிரியர் கடவுளின் விசுவாதத்தை பற்றி சொன்ன வார்த்தைகளை நினைவுகூர்ந்தான்.

சிறைக்காவலர் திரும்பி அவனைப் பார்த்தார். “நேற்று உன்னைக் பார்த்தபோது நீ இளைஞன் என்று நினைத்தேன்,” என்றார்.

சில நொடிகளில் கற்கள் பதிக்கப்பட்ட வெளிப்பாதையில் காலடியோசைகள் கேட்கத் தொடங்கின. டகடகவென்று ஒரு சத்தம். “வீரர்கள் துப்பாக்கிகளுடன் வருகிறார்கள்,” என்று ஏஞ்சலோ நினைத்தான். கனமான பெரிய கதவு நிறந்தது. இரண்டு சிப்பாய்கள் கைகளை பிடித்து நடத்தி வர அல்லோரி உள்ளே நுழைந்தார். அவர் முந்தைய நாள் மாலை சொன்னதுபோலவே அவர் கண்கள் மூடியே இருந்தன. ஆனால் ஏஞ்சலோ நின்ற திசையை ஊகித்து அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தார். அவன் முன் ஒரு கணம் மௌனமாக நின்றார். பிறகு தன் மேலங்கியின் கொக்கியை அவிழ்த்து, தன் தோள்களிலிருந்து அதை எடுத்து, இளைஞனின் தோளில் அதை போர்த்தி அணிவித்து விட்டார். அந்த சிறு அசைவில் அவர்கள் இருவரும் உடலோடு உடல் அருகே வர நேர்ந்தது. “ஒருவேளை அவர் கண்களைத் திறந்து என்னை பார்க்காமலே செல்லக்கூடும்,” என்று அப்போது ஏஞ்சலோ நினைத்துக்கொண்டான். ஆனால் அல்லோரி என்றாவது சொன்ன சொல்லை தவறவிடுபவரா? மேலங்கியை போர்த்திவிட்டக்கரங்கள் ஏஞ்சலோவின் கழுத்தில் ஒரு கணம் படிந்து அதை சற்று முன்னால் கொண்டுவந்தது. பெரிய இமைகள் நடுங்கி படபடத்து விரிந்தன. ஆசிரியர் மாணவனின் கண்களுக்குள் ஆழமாக பார்த்தார். ஆனால் மாணவனால் பிறகு எப்போதும் அந்த பார்வையை நினைவுகூற முடியவில்லை. அடுத்தக் கணமே அவன் அல்லோரியின் உதடுகளை தன் கன்னத்தில் மேல் உணர்ந்தான்.

“ஓஹோ!” என்றார் சிறைக்காவலர் ஆச்சரியத்துடன். “வாருங்கள்! நீங்கள் திரும்பி வருவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சரி, உங்களுக்கான விருந்து காத்திருக்கிறது. நீ…” என்று ஏஞ்சலோ பக்கம் திரும்பினார். “நீ கிளம்பலம். இன்னும் ஆறு மணி அடிக்க சில நிமிடங்கள் உள்ளன. அதன் பிறகு என் மேலதிகாரிகள் வருவார்கள். பாதிரியார் பிறகு தான் வருவார்.  இங்கு எல்லாமே மிகச்சரியான விதத்தில், அளவெடுத்தது போல் தான் நடக்கும். அதுதானே நியாயம்?”

*

ஆங்கில மூலம்: ஐசக் தினேசென்

தமிழில்: சுசித்ரா

பின்குறிப்பு 

‘Cloak’ என்ற சொல்

ஆங்கிலத்தில் இந்தக் கதையின் தலைப்பு ‘க்ளோக்’ [The Cloak]. அதை ‘மேலங்கி’ என்று மொழியாக்கம் செய்திருக்கிறேன். கண்டாமணி போன்ற வடிவம் உடையதால் clocca என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து அந்த வார்த்தை உருவானதாக சொல்லப்படுகிறது. லத்தீனில் clocca என்றால் மணி, ஃபிரெஞ்சு மொழியில் cloche இதற்கு நிகரான சொல். ஆங்கிலத்தில் cloak என்று மாறியது.

ஆனால் மேலைப்பண்பாட்டில் cloak என்ற வார்த்தைக்கு மேலும் ஆழமான பல அர்த்தங்கள் உள்ளன.

குளிருக்கு அணிந்துகொள்ளும் மேலங்கி என்பது அதன் சாதாரண அர்த்தம். 

Cloak என்பது மேலும் மறைவை குறிக்க பயன்படுத்தப்படும் சொல். மறைவுச்செயல்பாடுகளையும் ரகசியங்களையும் குற்றங்களையும் கூட குறிக்கிறது. Under the cloak, cloak and dagger, invisibility cloak போன்ற பதங்களில் இதைக் காணலாம். 

ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பொறுப்புகள் கடத்தப்படுவதையும் cloak என்ற படியம் வழியாக உணர்த்தும் வழக்கம் உள்ளது. Passing the cloak, passing the mantle போன்ற சொற்கட்டுகளில் இதைக் காணலாம். விவிலிய பழைய ஏற்பாட்டில் தீர்க்கதர்சி எலியா (Elijah) தன் மாணவன் எலிசா (Elisha) தன் வாரிசாக தொடர்வான் என்பதை குறிக்க தன் மேலங்கியை அவனுக்கு அணிவிப்பார்.

கிறிஸ்துவ மதத்தில் cloak என்பதற்கு வேறொரு அர்த்தமும் உண்டு. அது எளியவர்களும் பிச்சைக்காரர்களும் அணியும் உடை. ஒரு விவிலியக்கதையில் கிறிஸ்து அந்த வழியாகச் செல்வதை அறிந்து பார்ட்டிமேயஸ் என்ற குருட்டுப் பிச்சைக்காரர் தன் cloak-ஐ கழற்றி வீசி ‘இனிமேல் நான் எளியவன் அல்ல பிச்சைக்காரன் அல்ல, நான் கிறிஸ்துவின் தொண்டன்’ என்று அவரை பின் தொடர்ந்து செல்கிறார். 

அருவருப்பின் அழகியல்

அசோகமித்திரன் ஜெயமோகனைப்பற்றி 2006-ஆம் ஆண்டில் எழுதிய ஒரு மதிப்புரையில் [சுட்டி] ஜெயமோகனின் கதைகளில் அடிக்கடி தோன்றும் ‘அருவருப்பு’ அல்லது ‘பீபத்சம்’ என்ற அம்சத்தை சுட்டிக்காட்டுகிறார். அந்த அம்சத்தின் சரடு நம் மரபில் என்றும் இருந்துள்ளது என்றும் கதா சரித சாகரம் போன்ற நூல்களில் வெளிப்படுவதாகவும் ஆனால் அதற்கு இங்கு தொடர்ச்சி கிடையாது என்றும் கூறுகிறார். இந்தக்கூறுகளின் தொடர்ச்சி ஜெயமோகனில் வெளிப்படுவதாக சொல்கிறார். 

ஜெயமோகனின் புனைவுகளை வாசித்தவர்களுக்கு தொடர்ந்து அவருடைய கதைகளிலும் நாவல்களிலும் இடம்பெறும் பீபத்சச் சுவை கூடிய பல இடங்கள் நினைவுக்கு வரலாம். விஷ்ணுபுரத்தில் விஷ்ணுவின் பாதத்தைக் கண்ட அடுத்தக்கணத்திலேயே தெருவில் கிடக்கும் குஷ்டநோயாளியின் அழுகிய பாதம் தோன்றும் இடம் ஓர் உதாரணம். வியப்பு, பக்தி, உடனே அருவருப்பு.

நாவலில் அவை ஒன்றின்பின் ஒன்றாக தோன்றுவதாலேயே ஒன்றை ஒன்று சமன் செய்கின்றன. அது செவ்வியலின் பண்பு. செவ்வியல் உத்தேசிக்கம் அமைதியில் எல்லா மெய்ப்பாடுகளுக்கும் அவற்றுக்கான இடங்களை மிகச்சரியான அளவில் வகிக்கின்றன. பொதுவாக செவ்வியலில் ஒரு ரஸம் மேலோங்குவதில்லை. அதற்கு மாறாக, ஜெயமோகனின் ஆக்கங்களிலேயே முற்றிலும் பீபத்சச்சுவையில் வார்க்கப்பட்ட படைப்பு என்றால் அது ஏழாம் உலகம் என்று சொல்லலாம். 

ஏழாம் உலகம் பிச்சையெடுப்பவர்களின் வாழ்க்கை அவலத்தை எந்த பாவனைகளும் பூசல்களும் இல்லாமல் வெளிப்படையாக சொல்கிறது. இந்த நாவல் வெளிவந்த காலம் முதலே ஒரு சமூக யதார்த்த நாவலாக, விளிம்புநிலை மனிதர்களின் இதுவரை வெளிதெரியாத வாழ்க்கையின் நேரடியான சித்தரிப்புகளை காட்டும் நாவலாகத்தான் பெரும்பாலும் வாசிக்கப்பட்டது. அசோகமித்திரன் ஜெயமோகனின் பீபத்சச் சித்தரிப்பைப் பற்றிக் கூறுகையில் வாசகர் அவற்றை இப்படியும் உண்டா என்று திடுக்கிடலோடு அணுகுவதாகக் கூறுகிறார். நாவலை வாசித்த என் நண்பர் ஒருவரும் அதே கருத்தை தெரிவித்தார். “இப்படியெல்லாமும் லைஃப் இருக்கான்னு பிரம்மிப்பா இருக்கு” என்றார்.

சமீபத்தில் நான் ஏழாம் உலகம் நாவலை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்து முடித்தேன். ஒரு மூன்று மாதக்காலம் இந்த நாவலுக்குள்ளேயே குடிபுகுந்தது போன்ற நிலை ஆனது. முதல் முறையாக ஏழாம் உலகத்தை 2015-ல் படித்த போது எனக்கும் அதன் மறைவுகளே இல்லாத வாழ்க்கைச் சித்தரிப்பு என்னை அதிர வைத்தது அது. அதன் இருட்டும் ஓங்கிய அருவருப்புச் சுவையும் என்னை சற்று வெளியே தள்ளியது. 

ஆனால் மொழியாக்கம் செய்வதற்கு முன்பாக மீண்டும் வாசித்தபோது இந்த நாவல் எனக்கு முற்றிலும் புதுவிதமாக திறந்துகொண்டது. விஷ்ணுபுரம் நாவலில் சித்தனும் காசியபனும் சின்ன சதுரத்தின் ஒளிக்குள் விஷ்ணுபுர கோயில் கோபுரத்தின் தலைகீழ் சித்திரத்தை காணும் ஓர் இடம் இருக்கிறது. கோபுரத்தின் அத்தனை அழகான சிலைகளும் சின்னச்சின்னதாக, தலைகீழாக, விபரீதமான வடிவங்கள் கொண்டு விழுகின்றன. முழு கோபுரத்தையும் அந்த மாற்று வடிவில் கண்டு இருவரும் ரசிக்கிறார்கள். ஏழாம் உலகமும் அது போல் ஒரு தலைகீழ் சித்திரம் என்ற அவனாதம் எனக்குள் உருவானது. இவ்வுலகத்தின் எல்லா பிம்பங்களும் அவ்வுலகத்தில் சாராம்சப்படுத்தப்பட்ட வடிவில், விபரீதமாக விகாரமாக தலைகீழ் பிம்பங்களாக விழுகின்றன. நம் மாபெரும் மானுட வாழ்வின் மினியேச்சரான தலைகீழ் உருவாக்கம் தான் இந்த நாவல்.

கதையின் முக்கியான கதாபாத்திரங்களின் சித்தரிப்பில் இந்தத் தலைகீழ் அம்சத்தைத் தெளிவாகக் காண முடிகிறது. முத்தம்மையை மீண்டும் மீண்டும் பல ஆட்களுடன் இணையவிட்டு அவளைப்போலவே உடல் சிதைந்த குழந்தைகளை ஈன வைக்கிறார்கள். ஆனால் அந்த நிறைக்கு அவள் தான் பேரன்னை. பேரன்னை இங்கே படிக்கட்டுகளில் பெரிய உடலும் ஒற்றை முலையுமாகக் கிடக்கிறாள் என்பது ஒரு வித ஆழமான மனச்சலனத்தை உருவாக்கக்கூடிய கருப்பு அங்கதம். அதேபோல் அபார ரசனை கொண்ட ராமப்பன் ஒரு குஷ்ட ரோகி. விரலும் முகமும் மழுங்கிப்போனவன். ஆனால் கலைஞனுக்கே உரிய நுண்மையுடையவன். முதுகெலும்பு ஒடிந்த எருக்கு ஒரு கற்புக்கரசி. அறிவுஜீவி அகமதுக்கு விதைப்பைகள் வீங்கிப்போன கோளாறு உள்ளது. அது ஒரு வகையில் எல்லா அறிவுஜீவிகளுக்கும் உள்ள கோளாறு அல்லவா?

எதிர்ப்பாராத தருணத்தில் ஓர் அற்புதத்தைக் கண்ட புன்னகையுடன் இந்தச் சித்தரிப்புகளை இம்முறை வாசித்தேன். ஒவ்வொரு மனிதமாதிரிகளின் சாராம்சமான குணங்கள் இங்கே சற்று கோணல்படுத்தி, அங்கதமாக விழவைத்திருக்கிறார் ஆசிரியர். ‘மேல்’ உலகத்தவரின் செறிவாக்கப்பட்ட பிம்பங்கள் தான் இவர்கள். ஆகவே இந்த உலகில் நின்றுகொண்டு ‘மேலே’, ‘நம்’ உலகத்தை நிமிர்ந்து பார்த்து புன்னகைக்காமல் இருக்கமுடியவில்லை. இதில் நம் உலகத்தை நோக்கிய சின்ன கிண்டலின் அம்சமும் உள்ளது. குறிப்பாக விதை வீங்கிப்போன அறிவுஜீவியின் சித்திரம். ஆனால் அதுவும் மனிதனின் தோளில் கைபோட்டு செய்யும்  புன்னகை தான். அந்த சினேகபாவம் இந்த நாவல் முழுவதும் வெளிப்பட்டு வெளிச்சமூட்டுகிறது.

இதில் மேலும் நுட்பமான விஷயம், எப்படி இந்த மனிதர்களுக்கு தங்கள் இழிவிலிருந்து  மீட்பு சாத்தியமாகிறது என்பது. அந்த மீட்பும் ஒவ்வொருவரின் சாராம்சமான குணங்களிலிருந்தே தோன்றுகிறது. உதாரணமாக, விரல் மழுங்கிப்போன ராமப்பனுக்கு தான் உச்சபட்ச அழகுணர்வு உள்ளது. அழகை தொட்டுவிடமுடியுமா என ஏங்கும் அவன் விரல்முனைகளின் தவிப்பு இங்கே ஒவ்வொரு கலைஞனின் விதியும் கூட. ராமப்பன் விரலும் கண்ணும் தடியுமாகவே உருவகப்படுத்தப்படுகிறார். புலன்களால் ஆன கொச்சைப்பேச்சு ஆளுமையாக. ஆனால் சாராம்சத்தில் மகத்துவபூர்வமான வெளிப்படுகிறார். அது மானுடத்தின் மகத்துவம். எந்த கடைநிலையிலும் மலரச் சாத்தியமாகக்கூடியது.

அதே போல் எருக்கு. பண்டாரத்தின் உதவியாளரால் ஓர் அவல நிகழ்வில் தாலி கட்டப்பட்டு, பிறகு அவரையே கணவராக வரிக்கிறாள். முதுகெலும்பு உடைந்தவளின்  அசைக்கமுடியாத நம்பிக்கை அங்கதமாக, பரிதாபமாக வெளிப்படுகிறது. ஆனால் சாராம்சத்தில் இது மீராவின், ஆண்டாளின் ஆன்மீகம். அதன் ஆணிவேர் மானுடப்பொதுவானது. காரணமற்றது, சிரிக்கத்தக்கது, அதனாலேயே அந்த நம்பிக்கையின் தீவிரம் அச்சமூட்டக்கூடிய தீவிரத்துடன் வெளிப்படுகிறது [நாவலில் தாலி கட்டியவன் பெயர் மாதவப்பெருமாள். இது தற்செயல் அல்ல என்று நினைக்கிறேன்] அதுபோலவே தன் அறிவையும் போனாவின் வலிமையையும் நம்புவதே அகமதின் மீட்பாகிறது. ஆக கலை, பக்தி, ஞானம், எல்லாம் இங்கும் உள்ளது. எந்தக் கடைநிலையிலும் ஆதாரமானது. இதைக் காண்கையில் எத்தனை இருண்மையை எழுதினாலும் அடிப்படையில் ஜெயமோகன் ஒரு கிளாசிசிஸ்ட், செவ்வியலாளர் தான், என்று தோன்றியது. 

ஆகவே இந்த வாசிப்பில் ஏழாம் உலகமும் எனக்குள் விஷ்ணுபுரம் போலவே ஒருவகையான கிளாசிக் நாவலாகவே திரண்டுகொண்டது. ஆனால் மறுவலான கிளாசிக். தலைகீழ் கிளாசிக். ஏனென்றால் ஒட்டுமொத்த வாழ்க்கையும், அதன் அத்தனை படிநிலைகளையும் இந்த நாவல் அந்த தலைகீழ் மினியேச்சர் சட்டகத்துக்குள் பேசிவிடுகிறது. எளிமையான மொழியில், பல குரல்களின் சின்ன சின்ன தீற்றல்கள் வழியாக, குறைந்த இடத்துக்குள், இத்தனை கதாபாத்திரங்கள் தெளிவாக துலக்கம் பெற்று வருகிறார்கள். யதார்த்த சித்தரிப்புகள் ஆழமாக தீவிரமாக இருந்தாலும் குறைத்து அளந்து சொல்லப்பட்டதிலேயே கலையமைதி கூடியதாக ஆகிறது. நிகழ்வுகள் செவ்வியலின் சமநிலையை அடைகின்றன. 

*

நாவலில் இரண்டு மைய இழைகள். ஒன்று முத்தம்மைக்கு குழந்தை பிறந்து, ஒரு வயது வரை அது வளர்ந்து, விற்கப்பட்டு, அவள் அடுத்த கருவை பெற்றுக்கொள்ளும் நொடிவரையிலான வாழ்க்கை. இன்னொன்று போத்திவேலு பண்டாரம் மாங்காண்டி சாமியை விற்று, அவரை திரும்பப் பெரும் வரையில் அவர் வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகள். இரண்டு இழைகளுமே யதார்த்தமான கதைகளாக சொல்லப்பட்டிருந்தாலும், அடிப்படையில் முத்தம்மையின் சரடு இயற்கை சுழற்ச்சியின் கதை. மாங்காண்டி சாமியின் சரடு தெய்வமும் மனிதனுக்குமான உறவைச்சொல்லும் கதை. ஆக மனிதன், இயற்கை, தெய்வம் என்ற பிரபஞ்ச பின்னலின் மூன்று அலகுகளும் நாவலுக்குச் சட்டகம் அமைக்கின்றன. அவற்றின் மோதல்-விலகல் வழியாக நாவல் அடிப்படையான இருப்பு சார்ந்த ஒரு பயங்கரமான தீர்மானத்தை அடைகிறது. ஆக ஏழாம் உலகம் ‘இப்படியெல்லாம் வாழ்க்கைஇருக்கிறது’ என்று மாதிரி வாழ்க்கைகளை சொல்லும் நாவல் [மட்டும்] அல்ல. ‘வாழ்க்கை என்பது சாராம்சத்தில் இப்படித்தான்’ என்று ஒட்டுமொத்தத்தையும் கணக்கில் கொண்டு வெளிப்படுத்தும் கிளாசிக் நாவலும் கூட. ஆனால் நாவலிலிருந்து சாராம்சமாக திரண்டு வருவது செவ்வியலின் ‘சாந்தம்’ ‘அழகு’ அல்ல. பீபத்சத்திலேயே பயணித்து பயங்கரத்தில், உக்கிரத்தில் உச்சம் பெரும் உன்னத உணர்வு [awe அல்லது sublime].

நாவலுக்குள் இரண்டு தெய்வீக ரூபங்கள் இடம்பெருகின்றன. மாங்காண்டி சாமி தொடர்ந்து ‘சாமி’, ‘சித்தர்’ என்ற அடைமொழிகளாலேயே அழைக்கப்படுகிறார். சாமியாராகவும் வேஷம் கட்டி உட்காரவைக்கப்படுகிறார். அவருடைய தெய்வீகம் என்பது எந்த புள்ளியில் வெளிப்படுகிறது என்பது நாவலுக்குள் அறியமுடியாத ஒன்று. ஒற்றைக்கையும் குரலும் மட்டுமே கொண்ட உடல் அவருக்கு. சாமியால் நடக்க முடியாது. நகர முடியாது. ஆனால் முகத்தில் கல் போல் மாறாத புன்னகை. விரக தாபத்தில் பாடலாக எழும் குரல். மனிதனுக்கும் தெய்வத்துக்குமான ஓர் பாலம் போல எழுவது. அவருடைய நிமிர்வு இந்த நாவலுக்குள் மையமான மர்மமாம ஓர் இருப்பு.

கதைக்குள் இன்னொரு தெய்வாதீத அம்சமாக வருபவள் முத்தம்மை. ஒரு நிலையில் அவள் வெரும் மனித உயிர் அல்லது அது கூட அல்ல. புணர்ந்து புணர்ந்து பிள்ளைகளை பெற்றுப்போட்டுக்கொண்டே இருக்கும் ஓர் உடல். ஆனால் அந்த உடல் வழியாகவே அவளில் தெய்வீகமும் கூடுகிறது. சாங்கியம் தொடங்கி இந்திய மரபில் பிரகிருதி என்று சொல்லப்படும் பருப்பொருள் கருத்தின் ரூபவடிவாக முத்தம்மை தோன்றுகிறாள். 

இந்த நாவலின் இறுதியில் அவள் தன் முதல் மகனாலேயே ஆட்கொள்ளப்படும் நிகழ்வு நேரிடுகிறது. மனிதனுக்கு நிகழ சாத்தியமான கீழ்மைகளில் மிக அவலமானதாகவும் மானுடத்தின் ஓர் உடைவுபுள்ளி என்றும் தான் இதுகாரும் இந்நிகழ்வு வாசிக்கப்பட்டது. ஆனால் நாம் முத்தம்மையை பிரகிருதி என்று கண்டால், அந்நிகழ்வு இப்பிரபஞ்ச இருப்பின் மூலாதாரம் என்றும் மனிதகுலம் காலகாலமாக அடையும் துன்பத்தின் ஊற்றுக்கண் என்றும் அர்த்தம்கொள்கிறது. அதே சமயம் அடுத்த சுழலின், புனர்ஜென்மத்தின், தொடக்கப்புள்ளியாகவும் விளங்குகிறது. வாழ்க்கை சுற்றிச் சுழலும் அச்சென முத்தம்மை தோன்றுகிறாள்.

‘ஊரில் எல்லோரும் சுகபோகத்துடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் அதற்கு ஓர் உயிர் மட்டும் பாதாளத்தில் அடைக்கப்பட்டு முடிவிலி வரை சித்திரவதை படவேண்டும். இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு மனிதன் வாழ முடியுமா?” என்று கரமசாவ் சகோதரர்கள் நாவலில் இவான் கேட்பான். அப்படிப்பட்ட ஓர் உயிராக முத்தம்மையைக் காண முடிந்தது. இந்த ஒட்டுமொத்த வாழ்க்கை நெசவின் அடியே வாழ்ந்து துன்பப்படுபவள். ஒவ்வொரு தலைமுறையிலும் மைந்தர் அன்னையின் மடியிலிருந்தே வாழ்க்கையும் துன்பத்தையும் வேண்டி வேண்டி பெற்றுக்கொள்கிறார்கள்.

இந்த நாவல் நெடுக அந்த  வாழ்க்கைத்துன்பத்தின் வெவ்வேறு வெளிப்பாடுகள் வழியாக பயணிக்கிறோம். டாண்டேவின் பயணம் போன்ற ஒரு பயணம். பிச்சைக்காரர்கள் அடைவது உடல் சார்ந்த துன்பம். அவர்களுடைய உடல் விகாரங்கள் முதற்பார்வையில் விலகலை உருவாக்கினாலும் அவர்களில் மீண்டும் மீண்டும் தோன்றும் மானுடம் அவர்களை நெருக்கமானவர்களாக்குகிறது. அவர்களை அருவருக்க முடியவில்லை, மாறாக அவர்களில் நம்மை கண்டுகொள்ளத் தொடங்குகிறோம். ஆனால்  அவர்களை வாங்கி விற்பவர்களின் செயல்பாடுகள், அதற்கு அவர்கள் சோடித்துக்கொள்ளும் நியாயங்கள் அனைத்துமே நாற்றமடிப்பதாக, அருவருக்கத்தக்கதாக இருக்கின்றன. அப்படி அவர்கள் இருப்பதே ஆன்மீகமான ஒரு துன்ப நிலை. அவர்களுடைய மதிப்பீடுகளில் நம்முடைய அன்றாடத்தின் மதிப்பீடுகளை கண்டுகொள்கையில் துணுக்குறுகிறோம். வெட்குகிறோம். அப்படி வெவ்வேறு துன்பங்கள் வழியாக பயணித்து பாதாள முனையில் முத்தம்மையை அடைகிறோம். 

ஆனால் சென்று சேர்ந்த பாதை உச்சக்கட்ட அருவருப்பு வழியானதாக என்றாலும், அந்த உக்கிரமான இறுதிக்கணத்தை அடையும் போது ஒரு சுத்தீகரணத்தையே உணரமுடிகிறது. கங்கையைக் காணும் போது ஏற்படுவதுபோல. கங்கை சாக்கடை. ஆனால் அது கங்கை. பிரகிருதி ரூபமாக சொல்லப்படும் தேவிக்கு பீபத்சரூபிணி என்ற ஒரு பெயரும் உண்டு என்பதை இத்துடன் இணைத்துக்கொள்ளத்தகது.

பீப்த்சம் வழியாகவே இந்த நாவல் ஒட்டுமொத்த வாழ்க்கையை சொல்லி அதன் சாராம்சத்தை அடைகிறது. பீபத்சம் என்பது தனி ஒரு சுவையாக நின்றுவிடவில்லை. அது ஒரு முழுமுதல் தரிசனமாகவே இதில் வெளிப்படுகிறது. இங்குள்ள வாழ்க்கை பற்றிய ஒரு ஸ்டேட்மெண்ட் போல. பீபத்சத்தின் கண்ணாடி வழியாகவே எல்லா உணர்வுகளும் வடிகட்டி வருகின்றன. இது ஒட்டுமொத்தமாக வாழ்க்கையிலிருந்து விலக்கம் ஒன்றை உருவாக்குகிறது. அதன் சாரத்தின் உக்கிரத்தை உன்னதமாக (sublime) உணரவைக்கிறது.

*

இந்த நாவலில் மாங்காண்டி சாமியும் முத்தம்மையும் தெய்வீகத்தின் இரண்டு துருவங்களாக வெளிப்படுகிறார்கள். ஆனால் இதை மீறிய மூன்றாவது தெய்வீகம் ஒன்றும் நாவலுக்குள் தெளிந்து வருகிறது. இதை மிக நேரடியாக, வாழ்க்கையிலிருந்து அறிந்துகொண்டேன். ‘ஏழாம் உலகம்’ நாவலை மொழியாக்கம் செய்துகொண்டிருந்த நாட்களில் ஒரு வயதான என் குழந்தை வீட்டில் வளர்ந்துகொண்டிருந்தது. நாவல் இறுதியில் முத்தம்மையின் குழந்தை அடையும் வயது தான் கிட்டத்தட்ட அவனுக்கு.  ஒவ்வொரு நாளும் புதிய சாகசங்கள், சிரிப்பு, கும்மாளம். மழலை மொழியாகிக்கொண்டிருந்தது. நடை பழகிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் குளிப்பாட்டும்போது அவன் உடைகளை கழற்றிவிட்டு பளபளக்கும் வெறும் உடம்பை காணும்போது ‘மனிதக்குட்டி! மனிதக்குட்டி!’ என்று என் மனம் பொங்கும். மனித உடலின் அமைப்பில் இயல்பிலேயே ஓர் உன்னதம் இருப்பதாகத் தோன்றுகிறது. இரண்டு கால்களில் எழுந்து நின்று உலகை கண்களால் தொலைதூரத்துக்கு பார்க்க சாத்தியப்பட்ட உயிரினம். கைகால்களில் தவழ்ந்தாலும், கண் குருடானாலும், தூக்கிச்செல்லப்பட வேண்டிய நிலை என்றாலும், மனிதன் எப்போதுமே அந்த சாராம்சமான உன்னதம் நிறைந்தவன். ஏழாம் உலகம் நெடுக உடல்களாக வருகிறது. வெவ்வேறு நிலைகளில், வெவ்வேறு காட்சிகளாக. படுக்கும், சுருளும், நிமிரும், தொங்கும், குனியும் உடல்கள். அவை அனைத்தையும் என் குழந்தையின் ஆடை மறைக்காத உடம்பின் சித்திரம் வழியாக ஒரு தொகுப்பென ஆக்கிக்கொண்டேன். அந்தத் திரள் மொத்தமும், இந்தச்சிறு உடலின் வழியாக, மனிதன் என்று. இத்தனையும் மீறி ஒங்கி நிற்கிறது, ஒளி நிறைந்த மனிதக்குழந்தை.

ஐரோப்பிய மரபில் செவ்வியலுக்கு எதிராக கற்பனாவாதம் எழுந்தது. அழகு, சமநிலை போன்ற செவ்வியல் பண்புகளுக்கு எதிராக உணர்வெழுச்சி மற்றும் உக்கிரத்தை முன்வைத்தது கற்பனாவாதம். ஜெயமோகனின் இந்த நாவலில் வெளிப்படுவது செவ்வியல், கற்பனாவாதம் இரண்டுக்கும் அப்பால் உள்ள ஒன்று. இதில் வெளிப்படும் பீபத்சத்தின் தீவிரத்துக்குளேயே மொத்த வாழ்க்கையும் நிகழ்கிறது. வாழ்க்கையை பற்றி உக்கிரம் நிறைந்த ஒரு தரிசனமும் அதன் வழியாகவே மனிதனின் மகத்துவமும் ஒரே சமயம் வெளிப்படுகிறது.  இந்த வடிவம் மேலை இலக்கிய வடிவங்களையும், நம்முடைய சித்தர், காவிய, அவைதீக கதை மரபு இலக்கியங்களையும் உள்வாங்கி அடைந்த மிகுந்த தனித்துவமான ஒரு வடிவம் என்று கூறலாம்.

**

எழுத்தாளர் அருண்மொழிநங்கை – வல்லினம் நேர்காணல்

எழுத்தாளர் அருண்மொழிநங்கை அவர்களை வல்லினம் இலக்கிய இதழுக்காக நான் எடுத்த நேர்காணல் [நன்றி : வல்லினம்]

*

கடந்த ஏப்ரல் மாதம் அருண்மொழிநங்கையின் ‘மரபிசையும் காவிரியும்‘ கட்டுரையை படித்தபோது அந்தக்கட்டுரை ஒரு பெரிய நாவலின் தொடக்கம்போல எனக்குத் தோன்றியது. அன்றே அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அன்று முதல், ஒவ்வொரு வாரமும், அவர் தொடங்கிய வலைத்தளத்தில் (https://arunmozhinangaij.wordpress.com/blog/) கட்டுரைகள் எழுத எழுத, தொடர்ந்து அவருடன் உரையாடலில் இருந்திருக்கிறேன். குட்டி அருணாவும் ஆலத்தூரும் அதன் மனிதர்களும் மிகமிக நெருக்கமானார்கள்.

எங்கள் உரையாடலின் நீட்சியாக ஒரு நேர்காணல் எடுக்கலாமா என்று கேட்டேன்வாட்சாப்பின் ‘வாய்ஸ் நோட்‘ செயலி வழியாகபத்து நாள் காலத்தில்நாகர்கோயிலில் அவர்களும் பாசலில் நானுமாககிடைத்த நேரமெல்லாம் குறுக்கும் நெடுக்குமாகக் குரல்பதிவுகளை பரிமாறிக்கொண்டோம்அவ்வாறு நிகழ்ந்தது இந்த நேர்காணல்.

அங்கே இப்போது பெய்யும் துலாவர்ஷ மழையின் இடைவிடாத ஓசை, ரயில்சப்தங்கள், நாய்களின் குரைப்புகள், வரப்போகும் தீபாவளியின் வெடிச்சப்தங்கள் அருண்மொழியின் குரலுக்குப் பின்னணியாக அமைந்தன. உற்சாகம் குன்றாமல் அருண்மொழி பேசிக்கொண்டே இருந்தார். வெளியே மேகம் படர்ந்த வேளிமலை ஓங்கி நிற்க உள்ளே உணவு மேஜையில் அமர்ந்தபடி அவர் பேசுவதாக ஒரு கற்பனைச்சித்திரம் மனதில் தோன்றியது.

அருண்மொழிநங்கை’ என்பது ஒரு தனித்துவமான பெயர்எதை உத்தேசித்து அப்பா உங்களுக்கு அந்தப்பெயரை வைத்தார் 

‘அருண்மொழிநங்கை’ நிச்சயமாக ஒரு தனித்துவமான பெயர்தான். அப்பா தமிழாசிரியர் அல்ல, சரித்திர ஆசிரியர். ஆனால் தமிழ் மேல் பயங்கரமான பற்று. ராஜராஜசோழனின் இரண்டு மகள்களுக்கு அருண்மொழிநங்கை, அம்மங்கை என்று பெயர். முதல் மகளின் பெயரைத்தான் அப்பா எனக்கு வைத்தார். ராஜராஜனுக்கே அருள்மொழிவர்மன் என்று பெயர் உண்டே. என் அப்பாவினுடைய தமிழ்ப்பற்றை உலகத்துக்கு பறைசாற்ற ஓர் ஊடகமாக நான் இருந்திருக்கிறேன், இல்லையா? உயிருள்ள ஓர் ஊடகம். [சிரிப்பு] அப்பாக்கள் இப்படித்தான். தங்களுடைய விருப்பங்களைக், கனவுகளை குழந்தைகள் மேல் தானே ஏற்றிவைப்பார்கள்.

ஆனால் சின்ன வயதில் உங்கள் பெயர் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று எழுதியிருக்கிறீர்கள்.

ஆமாம். சிறுவயதில் என் பெயரின் பழந்தமிழ்த்தன்மை, செவ்வியல் தன்மை, எனக்குப் பிடிக்கவில்லை. சின்ன வயதில் நாம் பெரும்பாலும் நவீனமான பெயர்களைத்தானே விரும்புவோம். ஆறாவது ஏழாவது படிக்கும்போது சுஜாதா கதைகளை மிகவும் விரும்பிப் படிப்பேன்.  சுஜாதா அவருடைய கதாநாயகிகளுக்கு லீனா, அபர்ணா, அனிதா என்று மிக நவீனமான பெயர்களை வைப்பார். அப்படி எவ்வளவோ சின்னச்சின்ன அழகான பெயர்கள் இருக்கும்போது இப்படிக் கட்டுப்பெட்டித்தனமாக, ஏதோ பிராட்டியார் பெயர் போல் ஒலிக்கும் பழைய பஞ்சாங்கம் மாதிரி ஒரு பெயரை அப்பா நமக்கு வைத்துள்ளாரே என்று இருக்கும். எங்கு போனாலும் பெரிய பெயரைச் சொல்வது கூச்சமாக இருக்கும். அருள்மொழியா, அருண்மொழியா என்று குழப்பம் வரும். என்னப்பா வச்சிருக்கிங்க பெயர், ஒன்றரை முழம் நீளத்துக்கு என்று திட்டுவேன். அப்போது அப்பா, இதன் அருமை உனக்கு இப்போது தெரியாது என்று மட்டும் சொல்லிச் சிரிப்பார்.

கல்லூரி படிக்கும்போது சில பழந்தமிழ் கவிதைகளையும் வாசித்தேன். அப்போது அந்தக் கவிதைகளின் சொல்நயம், ஓசை நயம் – தமிழுக்கென்று ஒரு ஒலிநயம், உச்சரிப்பு அழகு இருக்கும் இல்லையா…  அந்த அழகு என்னை ஈர்த்தது. அப்போது கொஞ்சம் என் பெயர் மேல் ஒரு அஃப்பினிட்டி உருவானது. ஆனால் அதிகமாக விரும்ப, வெளியிலிருந்து ஒருவர், அதுவும் ரொம்பப் பிடித்த ஒருவர் வந்து ‘உன் பெயர் எவ்வளவு அழகான பெயர்’ என்று சொல்லவேண்டியிருந்தது.

ஜெயமோகன் கடிதம் எழுதியபோதா?

ஆம். ஜெயன் எனக்கு எழுதிய இரண்டாவது கடிதத்தில் ‘தூங்கும் நேரத்தைத் தவிர உன் பெயரை மனதில் சொல்லிக்கொண்டே தான் இருக்கிறேன்’ என்று எழுதியிருந்தார். என்ன சொல்ல? அது ஒரு உச்சாடனம். இப்போது நாம் கடவுளை வணங்கும் முறை என்றாலே சகஸ்ரநாமம், ராமஜெயம் என்று பெயர் உச்சரிப்பதுதானே? ‘உன் பெயரை நான் இடைவிடாது உச்சரிக்கிறேன்’ என்று அவர் சொன்னபோது எனக்கு ரொம்பவும் சிலிர்ப்பாக இருந்தது.

அப்போது ஒரு கவிதையும் கூட அனுப்பியிருந்தார். எனக்கு அந்தக் கவிதையும் மிகவும் புதுமையாக இருந்தது. பிரமிளினுடைய கவிதை. அந்தக் கவிதையின் பெயரே ‘உன் பெயர்’.

சீர்குலைந்த சொல்லொன்று

தன் தலையைத்

தானே

விழுங்கத் தேடி

என்னுள் நுழைந்தது.

துடித்துத் திமிறி

தன்மீதிறங்கும் இப்

பெயரின் முத்தங்களை

உதறி உதறி

அழுதது இதயம்.

பெயர் பின் வாங்கிற்று.

“அப்பாடா’ என்று

அண்ணாந்தேன்…

சந்திர கோளத்தில் மோதியது

எதிரொலிக்கிறது.

இன்று, இடையறாத உன்பெயர்

நிலவிலிருந்திறங்கி

என்மீது சொரியும் ஓர்

ரத்தப் பெருக்கு.

பித்துநிலையில எழுதினாற்போல் இருக்கும். பெயரையும் பாம்பையும் மயக்கி எழுதியிருப்பார்.  பெயர் ஒரு விஷமுத்தத்தை நமக்குத் தருகிறது. பாம்பு மாதிரிதான். காதலின் வலியும் இன்பமும் கலந்த உணர்வை அப்படித்தானே சொல்ல முடியும். ‘இன்று, இடையறாத உன் பெயர்’ என்ற பிரயோகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு நிமிஷம் கூட நிறுத்த முடியாத உன் பெயர், உன் நினைவு. எனக்கு அந்தக் கவிதை ரொம்பப் பிடித்திருந்தது; ரொம்பவும் ரசித்தேன்… [சிரிப்பு] அப்புறம் ஆகா, இப்படி ஒரு லவ் லெட்டர் நமக்கு வருதே என்று பெருமையாகக் கூட இருந்தது.

இது 1991-ல் அல்லவா?

ஆம், மார்ச் 1991.

இப்போது இத்தனைக் காலத்துக்குப் பிறகு உங்கள் பெயர் உங்களுக்கு என்னவாகப் பொருள்படுகிறது?

உண்மையிலேயே இப்போது மிகவும் தனித்துவமான, அழகான, உச்சரிக்க இனிமையான பெயராகத்தான் தோன்றுகிறது. என் பெயரை வைத்து நான் பெருமைதான் படுகிறேன். ஒரு குழந்தைக்கு ஒரு பெயர் வைக்கும்போது, அந்தப் பெயரின் அர்த்தம் தரும் கனத்தை அந்தக் குழந்தை சுமக்க முடியாமல் இருக்குமில்லையா? அந்தப் பெயருக்கு, அந்த மொழிக்கு, பயங்கரமான அர்த்தம் இருக்கும். அந்த குழந்தை வளர்ந்து வளர்ந்து, அதன் தனித்துவம் மலரும் போதுதான், அந்தக் குழந்தை அந்தப்பெயரை உணர்ந்தறிந்து நிறைக்கிறது என்று தோன்றும். அப்படி நான் வளர்ந்து, என் ஆளுமையெல்லாம் கொஞ்சம்  முதிர்ச்சி ஆகித்தான் என் பெயரும் நிரம்பியது என்று நான் நம்புகிறேன். என் பெயருக்கான அர்த்தம் ‘இனிமையான சொற்கள் நிறைந்த மொழியை பேசும் பெண்’. சமஸ்கிருதத்தில் இதற்கு நிகராக ‘சுபாஷிணி’ என்ற பெயரைச் சொல்வார்கள்.

உங்கள் பெயரை முதன்முறை கேட்டபோது ஒரு எழுத்தாளரின் மனைவிக்கு எத்தனை பொருத்தமான பெயர் என்று நினைத்துக்கொண்டேன்ஒரு எழுத்தாளருக்கும் அது மிகப் பொருத்தமானப் பெயர் என்று இப்போது தோன்றுகிறதுசின்ன வயதில் எப்போதாவது எழுதவேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறதாஅப்போது ஏதும் எழுதிப்பார்த்ததுண்டா?

‘விட்டு வந்த இடம்’ கட்டுரையில் எழுதியிருப்பேன். ‘நீல ஜாடி’ மொழிபெயர்க்கும்போது எழுதலாமே என்று ஒரு சின்ன ஆசை வந்தது. ஏனென்றால் அவர்களும் [எழுத்தாளர் ஐசக் தினேசென்] ஒரு பெண்தானே? இவ்வளவு அழகாக எழுதியிருக்கிறாரே? நாமும் எழுதிப்பார்க்கவேண்டும் என்று இருந்தது.

அப்புறம் திருமணமான பிறகு ஜெயனும் நானும் நண்பர்களும் சேர்ந்து டி.எஸ்.எலியட்டை மொழிபெயர்த்தபோது எழுதவேண்டும் என்று ரொம்ப ஆசை வந்தது. ஒரு கட்டுரையில் ஓர் எழுத்தாளர் என்னென்ன திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று அவர் பட்டியல் போடுகிறார். அவன் மரபார்ந்த இலக்கியங்களை படித்திருக்கவேண்டும், தன் மொழியிலும் உலக இலக்கியத்திலும் அதே காலகட்டத்தில் எழுதுகிறவர்களைப் படித்திருக்கவேண்டும், இரண்டு பிராந்திய மொழிகள் தெரிந்திருக்கவேண்டும், உலக மொழி ஒன்று தெரிந்திருக்கவேண்டும் என்றெல்லாம் பட்டியல் போடுவார். அதெல்லாம் படித்தபோது தலை சுற்றியது. எழுத்தாளராக இருப்பது இவ்வளவு கஷ்டமா என்று!

திருமணத்திற்கு முன்னால் ஏதும் எழுதினீர்களாபள்ளிகல்லூரி காலத்தில்?

[சிரிப்பு] ஆமாம், கொஞ்சம். கல்லூரி இரண்டாம் வருடத்திலேயே வானம்பாடி கவிதைகளை வாசித்துக் கொஞ்சம் எழுதிப்பார்த்தேன். ஓரிரு வரிகள் ஞாபகம் இருக்கிறது. ‘மேய்ச்சல் நிலமாம் உலகத்தில், இறைவன் படைத்தான் மந்தைகளை, மந்தைகள் தனது பசியாற…’ இப்படி வரும். இதே ரிதமிக் பேட்டர்னில். அது ஒரு நீள்கவிதை. இந்த மந்தையிலிருந்து ஒரு குட்டி ஆடு மட்டும் கோபித்துக்கொண்டு போய்விடும். கோபம் என்று இல்லை, அது புரட்சிகரமான ஆடு. வித்தியாசமாக சிந்திக்கும். வித்தியாசமாக சிந்திக்கும் ஆடு வேறு யார்? இந்த அருண்மொழிதான்…

பிறகு சங்கக்கவிதைகளுக்குள் இறங்க ஆரம்பித்தேன். சங்கக்கவிதைகள், பெரியாழ்வார், நம்மாழ்வார் எல்லாம் படிக்கப் படிக்க மொழியினுடைய அழகு தெரிந்து… சங்கக்கவிதை பாணியிலேயே நாம் ஒன்று எழுதிப்பார்ப்போம் என்று நினைத்தேன். ‘முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்’  பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன நின் பவளக் கூர்வாய்’ போன்ற அழகழகான வார்த்தைகள் எனக்குள் இறங்கின. அப்படியே குறிஞ்சி திணைக்கு, மருதத்திற்கு, முல்லைக்கு என்று நானாக ஒவ்வொரு திணைக்கும் இரண்டு, மூன்று கவிதைகள் எழுதினேன். சங்கப் பாணி கவிதையில் ஆசிரியப்பா, வெண்பா எதுவுமே வராதே? நம் மனம் போனப்படிக்கு எழுதலாம்.

ஆனால் அதில் நான் எடுத்துக்கொண்ட கான்செப்ட்தான் சரியில்லை போல. அந்தக் கவிதைகளை ஒரு நோட்புக்கில் நான் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். ஜெயனை மூன்றாவது முறை சந்திக்கும்போது கொஞ்சம் துணிச்சலோடு அந்த நோட்டை எடுத்து  காட்டினேன். ஜெயன் உண்மையிலேயே அவர் சிரிப்பை அடக்கக் கஷ்டப்பட்டிருப்பார் என்று நினைக்கிறேன். அவர் முகத்தை பார்த்தபோதே தெரிந்தது. ‘வார்த்தைகள்லாம் நல்லாத்தான் இருக்கு அருணா, ஆனால் கான்செப்ட்தான் கொஞ்சம் பழசுடீÓ என்றார். மெல்லிய சமாதான தொனியில், நான் கோபித்துக்கொள்ளக் கூடாது என்பதுபோல்தான் சொன்னார். ஆனால் முகத்தில் புன்னகை தவழ்ந்துகொண்டே இருந்தது. அப்போது முடிவு பண்ணினேன், இனிமேல் இந்த டிராக்ல போகக்கூடாது என்று. அது ஒரு கன்னி முயற்சி.

இப்போது ஓர் எழுத்தாளராக உங்களுடைய ஆதர்சங்கள் யார் யார்எழுதும்போது ‘இவர்களைப்போல் ஒரு கதை எழுதிவிடவேண்டும்‘ என்று யாரையேனும் மனதில் நிறுத்திக்கொள்வதுண்டா?

கதை என்றால் சிறுகதையைச் சொல்கிறீர்களா, நாவலையா? நாவலாசிரியர்களில் ஆதர்சங்கள் பலர். சிவராம காரந்த் [மண்ணும் மனிதரும்], எஸ்.எல். பைரப்பா [ஒரு குடும்பம் சிதைகிறது], அதீன் பந்தோபாத்யாய் [நீலகண்ட பறவையைத் தேடி], தாராசங்கர் பானர்ஜி [ஆரோக்ய நிகேதனம்], குரதுலைன் ஹைதர் [அக்னி நதி]. யதார்த்தவாத நாவல்களிலேயே ஒரு விசாலமான காலத்தையும் நிலத்தையும் மக்களையும் அடையாளப்படுத்தியவர்கள் இவர்கள். உலக இலக்கியம் என்றால் எல்லா பெரிய மாஸ்டர்களுமே ஆதர்சம்தான், தல்ஸ்தாய், தஸ்தோயெவெஸ்கி, ஹெர்மன் ஹெஸ், ஹெர்மன் மெல்வில் [மோபி டிக்], கஸாண்ட்சாகிஸ்  எல்லோரும்.

ஜெயமோகன்?

ஜெயமோகன் இதில் விசேஷமான கேட்டெகரி, இப்போதைக்கு அவரை தள்ளி வைத்து விட்டு மற்றபடி என் பொதுவான அபிப்பிராயங்களைச் சொல்கிறேனே.

சரிசிறுகதையில் யாரை பிடிக்கும்நீங்கள் இப்போது எழுதியுள்ள கதைகட்டுரைகளுக்கு முன்னோடியென்று மனதில் யாரையும் நிறுத்தியுள்ளீர்களா?

சிறுகதை என்று எடுத்துக்கொண்டால் தமிழிலேயே மாஸ்டர்கள் இருக்கிறார்கள். புதுமைப்பித்தன் எனக்குத் தீராத ஆச்சரியம் கொடுக்கக்கூடிய ரைட்டர். அவர் முயன்று பார்க்காத வடிவிலான சிறுகதையே இல்லை. ஒரு பக்கம் கயிற்றரவு, கபாடபுரம் மாதிரியான கதைகள். செல்லம்மாள் மாதிரியான கதைகள். அதே சமயம் கடவுளும் கந்தசாமி பிள்ளையும் மாதிரி கதைகளையும் அவர் எழுதியிருக்கிறார். பேசுபொருள், யுக்தி, சொல்லும்முறை என்று எல்லாவற்றிலுமே நிறைய வேரியேஷன் காட்டியிருக்கிறார் அல்லவா.

பிறகு, கச்சிதமான, மிகமிக கூர்மையான சிறுகதைகளை எழுதியவர் என்றால் அது அசோகமித்திரன்தான். உலகளவிலுள்ள மாஸ்டர்களுடன் அவரை இணைவைக்கலாம்.  அந்தளவுக்கு பெரிய மாஸ்டர் அவர், என்னைப் பொறுத்த வரை. உண்மையில் அசோகமித்திரன் மாதிரி ஒரு கதை எழுதிவிடுவதுதான் எல்லா எழுத்தாளர்களின் கனவாக இருக்குமென்று நினைக்கிறேன். அவ்வளவு subtle-ஆக, அவ்வளவு நுட்பமாக, கம்மியான வார்த்தைகளை சொல்லி – தீராத வியப்பில்லையா? அப்புறம் திஜா, சுந்தர ராமசாமி, கி.ரா, அழகிரிசாமி இவர்களுடைய சிறுகதைகளும் பிடிக்கும். மலையாளத்தில் பால் சக்காரியா, பஷீருடைய சிறுகதைகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். கன்னடத்துல விவேக் ஷன்பாக்.

இப்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் கட்டுரைகளின் வடிவத்துக்கு நான் இமிடேட் பண்ணும் எழுத்தாளர்கள் என்றால் அதிகமாக பஷீர், அ.முத்துலிங்கம், அசோகமித்திரன். அசோகமித்திரன் பதினெட்டாவது அட்சக்கோட்டில் செகந்திராபாத் நாட்களை எழுதுவாரே? அந்த வகைமாதிரியில்தான் நான் முயன்று பார்க்கிறேன்.

உலகளவில செக்கவ், ரே பிராட்பரி, ரேமண்ட் கார்வர், ஐசக் பாஷெவிஸ் சிங்கர், இடாலோ கால்வினோ, மார்குவேஸ்… மார்குவேஸ் சில நீள கதைகளை சிறப்பா எழுதியிருப்பாரு. இப்பக்கூட நினைவுக்கு வர்ர ஒரு கதை, ‘The Trail of Your Blood in the Snow’. சொல்புதிதில் செங்கதிர் அதை அழகாக மொழிபெயர்த்திருந்தார். ‘உறைபனியில் உன் குருதியின் தாரை’ என்ற பெயரில். பிறகு ஐசக் தினேசனின் fairy-tale பாணியிலான கதைகள், இவ்வளவும் என் மனசுக்கு பிடித்தமானது. ஆதர்சம் என்றால், இந்த பாணியிலெல்லாம் நான் இன்னும் எழுதிப்பார்க்கவில்லை, ஆனால் என் மனதிற்குள் இவர்களெல்லாம் இருக்கிறார்கள்.

கதை‘ என்று ஏன் கேட்டேன் என்றால்உங்கள் வலைதளத்தில் இடம்பெறும் கட்டுரைகள் எல்லாவற்றிலும் ஓர் அசலான புனைவுத்தன்மை உள்ளதுநினைவுக்குறிப்புகள், memoirs, என்பதை வெறுமனே சம்பவ அடுக்கு என்று எழுதாமல்ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு சிறுகதையின் வடிவைக் கொடுத்துள்ளீர்கள்இந்தப் புனைவம்சத்தைக் கொண்டுவரவேண்டும் என்ற தூண்டுதல் உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது?

முதல் காரியம், இதை எழுதத்தொடங்கும் போதே என் மனதில் இரண்டு, மூன்று நிபந்தனைகளை நானே போட்டுக்கொண்டேன். முதல் விஷயம் இது அனுபவம், ஆனால் அனுபவம், அனுபவமாக மட்டும் சுருங்கிவிடக்கூடாது. இரண்டாவது நிபந்தனை, அருண்மொழியுடைய அனுபவம் வெறுமனே அருண்மொழியின் அனுபவமாக மட்டும் நின்றுவிடக்கூடாது. என்னதான் வட்டாரத்தன்மை இருந்தாலும் ஏதாவது ஒரு புள்ளியில் எல்லாருமே இணைந்து கொள்ளக்கூடிய விதத்தில் அது அமையவேண்டும், உலகளாவிய தன்மை ஒன்று அதில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

அப்புறம் இந்த கட்டுரைகளிலேயே மூன்று பேட்டர்ன், மூன்று வகைமைகள் இருக்கு. விட்டு வந்த இடம், கண்ணீரும் கனவும், சின்ன சின்ன புரட்சிகள், மாயச்சாளரம் எல்லாவற்றிலுமே ஒரு பரிணாம வளர்ச்சிய சொல்லியிருக்கேன். இசை ரசனை, வாசிப்பு ரசனை, சினிமா ரசனை எல்லாம் எனக்குள்ள வளர்ந்த பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப கட்டுரைகள்ல காட்டியிருப்பேன். அதுப்பக்கறம் இரண்டாவதா, என் மனம் கவர்ந்த ஆளுமைகளைப் பற்றி எழுதினேன். ‘அரசி’யில் என் ராஜம்மா பாட்டி, ராவுத்தர் மாமா, பட்டாணி, ‘நிலை’ வடிவேல் மாமா, இந்த மாதிரி. மூன்றாவது கதை. கதைன்னா, என் அனுபவங்கள்ல ஒரு கதையை புகுத்தி, ஒரு புனைவின் சாத்தியத்தைப் பரிசீலிக்கிற அம்சத்தோடு வந்த கட்டுரைகள்.

வானத்தில் நட்சத்திரங்கள்’ மூன்றாவது வகையான கட்டுரை இல்லையாஅற்புதமான கதைத்தருணம் ஒன்று இருக்குமே அதில்.

ஆமாம், வானத்தில் நட்சத்திரங்களில்ல அது சாத்தியமாச்சு. ஏன்னா அதுல பரிணாம வளர்ச்சி ஏதும் கிடையாது. ஒரு பதினாலு வயசு பெண்ணுக்கும், ஒரு ஒன்பது வயசு பையனுக்கும் ஒரு மிகப்பெரிய வாழ்க்கை அறிமுகமாகுது. அதைத்தான் அது சொல்ல வருது. அதுவரைக்கும் அவங்க கேள்விப்படாத இயேசு என்ற ஒருத்தர் அவங்களுக்கு அறிமுகம் ஆகிறார். ஒரு நாடக வடிவுல ஜீஸசோட எசென்ஸ் அவங்களுக்குள்ள இறங்குற தருணம். அதைச்சொல்லிப்பார்க்கலாம் என்று நினைத்தேன்.

இது ஒரு மூணு நாள் அனுபவம். நாடகத்துக்கு போறதுக்கான தூண்டுதல், அந்த தயாரிப்பு, அங்க போறது, அங்க அடையற அனுபவம், அவ்வளவுதானே. இந்த சம்பவம் இப்படி மூணு நாள்ள நடக்குறதுனால இதில் ஒரு சிறுகதை வடிவம் முயற்சி பண்ணி பார்க்கலாம் என்று ஆசைப்பட்டேன்.

சிறுகதை வடிவம்னா அதுக்கு மனசுல ஒரு சட்டகம் போட்டீங்களாஅனுபவத்துல புனைவ எங்க புகுத்தணும்னு எப்படி தீர்மானிச்சீங்க?

அதுக்கு ஒரு ஸ்கெலிட்டன் உருவாக்கிக்கிட்டது உண்மைதான். இந்தக் கட்டுரைகளில் ஒரு 70% உண்மைச் சம்பவம். அந்த ஸ்கெலிட்டனை மூடுகிறேன் இல்லையா, அதில்தான் புனைவின் அம்சம் கலந்திருக்கிறது. அந்த உரையாடல்கள் அப்படியே நிகழ்ந்திருக்குமா என்றால் இல்லை. ஆனால் அந்த வகையான உரையாடல்கள் எங்கள் வீட்டில் நிகழ சாத்தியம் உண்டு. அந்த பேட்டர்னை வைத்துக்கொண்டு உரையாடல்களை எழுதும்போது நிகழ்த்திக்கொள்கிறேன். அதில் புனைவின் அம்சம் உள்ளது. அப்புறம் கடைசியில் ஒரு ‘ஜம்ப்’ வருகிறதில்லையா, அங்கே ஒரு புனைவு எட்டிப்பார்க்கிறது.

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் என் எல்லா கட்டுரைகளையும் படித்தார். உடனுக்குடன் எனக்கு குறிப்போ, வாய்ஸ் நோட்டோ அனுப்புவார். அவருக்கு அவை மிகவும் பிடித்திருந்தன. ‘எங்க புனைவும் உண்மையும் கலக்குதுன்னு கண்டுபிடிக்க முடியவில்லை. எழுத்தாளருக்கு முக்கியமான சவால் அதுதான். அந்த சவாலில் நீங்கள் வெற்றிபெற்றுவிட்டீர்கள்,’ என்று அவர் சொன்னார். மேற்கில் இந்த genre இருக்கு, இப்படி எழுதுகிறார்கள் அருண்மொழி என்றார். நான் சொன்னேனல்லவா, பஷீர், அசோகமித்ரன், அ.முத்துலிங்கம்தான் இந்த வகைமையில் எனக்கு முன்னோடிகள். அதுவும் முத்துலிங்கம் சாரின் உண்மை கலந்த நாட்குறிப்புகள் எல்லாம் கிட்டத்தட்ட இந்த மாதிரித்தான். அவர் இந்த வகைமையை ‘truth, but more truth – உண்மை, மேலும் கூடிய உண்மை’ என்று சொன்னார். அப்போது எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. வானத்தில் நட்சத்திரங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால் புனைவுக்குரிய எல்லா உத்திகளுமே நீங்க அதுல experiment பண்ணியிருப்பீங்கஉரையாடல்வர்ணனைஎல்லாமே.

ஆமாம், ‘வானத்தில் நட்சத்திரங்கள்’ எழுதியபோது எனக்கு எல்லாமே செய்து பார்க்க ஆவலாக இருந்தது. உரையாடலை நிகழ்த்திப்பார்த்தேன். கதை மாந்தர்களைச் சொல்லிப்பார்த்தேன். சூழல் சித்தரிப்பு, வர்ணனைகள் எல்லாம் செய்து பார்த்தேன். அந்தத் திருவிழாவின் மனநிலையை உருவாக்கிப் பாத்தேன். எதெல்லாம் எனக்கு வருகிறது, வரவில்லை என்று நானே பரிசீலித்துப் பார்த்தேன்.

அதில் கொஞ்சம் போதப்பூர்வமாக செய்த அம்சம், அதன் இரண்டாம் பாகம் கனமாக இருக்கப்போகிறது என்பதால், முதல் பாகத்தை இயல்பா, நகைச்சுவை இழையோட, அந்த குடும்பத்தின் சூழலை வர்ணிக்கவேண்டும் என்று நினைத்தேன். அப்போதுதான் சஸ்டெயின் ஆகும். இங்கிருந்தே அந்தக் கனத்தைக் கூட்டிவிடக்கூடாது. ஜாலியா, லைட்டா ஆரம்பிச்சு, போகப்போக கனம் கூடி அந்த முடிவில் சென்று நிற்கவேண்டும் என்று நினைத்தேன்.

அந்த உணர்வை என்னால் குடுக்க முடிகிறதா? என்பதுதான் எனக்கு முக்கியமாக இருந்தது. அந்த இரண்டு குழந்தைகளும் கண்ணீர் விடுகிறது. அன்று அந்த நாடகம் நடந்த மைதானத்தில் இருந்த 75% பேர் அழுதார்கள். அத்தனை பவர்ஃபுல்லான நாடக வடிவம். முதன்முதலாக எனக்கு இயேசு அறிமுகமானது அப்போதுதான். ஒரு நூல் வழியாக படிச்சிருந்தாலும் நான் இவ்வளவு உலுக்கப்பட்டிருப்பேனா என்று எனக்குத் தெரியாது. இயேசு, நாடகம் வழியாக எனக்குள்ளையும் என் தம்பிக்குள்ளையும் இறங்கினார். அந்தக் கண்ணீர் – பைபிளில் ஒரு வரி வரும், ‘உங்கள் கறை படிந்த ஆன்மாவை கண்ணீரால் சுத்திகரியுங்கள்’ என்று. இந்த குழந்தைகள் கறை படிந்த ஆன்மா கிடையாதுதான். ஆனால் இயேசு செய்யாத பாவத்துக்காக, மனிதகுலத்துக்காக, ரத்தம் சிந்தியவர் இல்லையா? நாம நேரடியா அதில ஈடுபடலன்னாலும் மனிதக்குலம் முழுவதும் அந்த பாவத்த கொஞ்சம் கொஞ்சம் தனக்குள்ள ஏத்துக்கணும். ஒரு பிராயச்சித்தமா கண்ணீர் சிந்தணும், அப்படின்னு நான் நினைக்கிறேன். அப்போ அந்த மொத்த பாவத்துக்காக, அவன் மேல் இழைக்கப்பட்ட துரோகத்துக்காக, ஒவ்வொரு மனுஷனும் கொஞ்சம் கண்ணீர் விடுறான். அந்தக் கண்ணீர் இருக்கில்லியா, அதை எப்படியாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

அப்புறம் அந்தக் கண்ணீரோட போக முடியாது. அந்தக் கண்ணீர் முடிஞ்சு, தூய்மையாக, பாவத்தினால் வரும் இந்த உணர்ச்சிய கழுவினப்பிறகு ஒரு வெளிச்சம் வரும் இல்லையா, அந்த உணர்ச்சிய கொண்டு வரணும்னுதான் இந்த நட்சத்திரங்கள பார்க்குற சீன வைச்சேன். அது கண்டிப்பா புனைவோட ஒரு டச் தான். ஆனால் அதை நான் வேண்டி வேண்டி செய்யல, அதான் ஆச்சரியம். கோடைக்காலப் பின்னிரவில் திறந்த ரிக்ஷாவில் போகிறார்கள் என்றதுமே அந்த நட்சத்திரம் நிறைந்த வானம் வந்துவிட்டது. அந்த முடிவு அந்தத் தருணத்தில் எனக்குத் தோன்றியதுதான். அதுதான் புனைவின் மாயம் என்று நினைக்கிறேன். அது என்னை இழுத்துக்கொண்டது.

அதன் பிறகு நுரை, யசோதை முதலிய பதிவுகளில் நிறைய கதை மாந்தர் வரத்தொடங்கினார்கள். நிறைய உரையாடல்கள். அந்த வடிவம் என்னை மிகவும் ஈர்த்தது. அதற்குள் போய்விட்டேன்.

ஆமாம்அந்த கட்டுரைகள் எல்லாமே நல்ல சிறுகதைகளை வாசிக்கும் அனுபவத்தை கொடுத்தனஆனால் முழுக்கவும் புனைவென்று நினைக்கும்படியும் இல்லைஓர் அசல் நினைவுஎப்போதோ நடந்த உண்மைஎன்ற உணர்வு இருந்துகொண்டே இருந்தது.

எழுதும்போது கட்டுரை கட்டுரையாக மட்டும் இருக்கக்கூடாது, புனைவாகவும் இருக்கக்கூடாது என்று நினைத்தேன். சூழல் எல்லாமே கொஞ்சம்தான் ஞாபகம் இருக்கும், அதை நான் இட்டு நிரப்புவேன். அது எந்த வகையிலேயும் வெளியே தெரியாமல் இருக்க வேண்டும், அதை மட்டும் நான் பார்த்துக்கொள்வேன். நம்பகமாகக் கொடுக்கவேண்டும், அதுதான் சவால். அதை நிறைவேற்றினேனா தெரியவில்லை.

ஒவ்வொரு கட்டுரைக்கும் ஏதாவது ஒரு சாராம்சம், மையம் இருக்கவேண்டும் என்று நினைப்பேன். அந்த சாராம்சம், மையம் நாம் உருவாக்குவதுதான். நாம் எழுத ஆரம்பிக்கும்போதே அந்த மையம் தெரிந்துவிடும். என்னைப்பொறுத்தவரை, எந்த மனிதனுக்கும் நிகழும் அனுபவம் இயல்பிலேயே தன்னுள் ஒரு சாராம்சத்தைத் தேக்கிவைத்துக்கொண்டுள்ளது. இது என்னுடைய ‘பெட் தியரி’ என்று வைத்துக்கொள்ளுங்களேன். அந்த சாராம்சத்தின் புள்ளியைக் கண்டுபிடிப்பது மட்டும்தான் நம்முடைய வேலை. நான் ஒரு சம்பவத்தை எழுதும்போதே இதற்கான சாராம்சம் எங்கே என்று தேடுகிறேன். ஒன்று நானே வேண்டுமென்று தேடுகிறேன், இல்லை அதுவாக நிகழ்கிறது. நான் அந்த சாராம்சத்தைத் தொட்டு சரியாக அதை நிகழ்த்திவிட்டேன் என்றால் அது வெற்றிகரமான கட்டுரையாக இருக்கிறது.

நீங்கள் வலைத்தளம் எழுதத் தொடங்கியபோதுஏன் நினைவுகுறிப்புகள் எழுதலாம் என்று எடுத்தீர்கள்இவர்களைப்பற்றிஇந்த இந்த நிகழ்வுகளைப்பற்றியெல்லாம் எழுதவேண்டும் என்று திட்டம் போட்டு எழுதினீர்களா?

நினைவுகுறிப்புகள் எழுத வேண்டும் என்று நினைத்து கண்டிப்பாக பிளாக் ஆரம்பிக்கவில்லை சுசித்ரா. தொடங்கும்போது இசை பற்றி எழுதலாம், வேண்டுமென்றால் மொழிபெயர்ப்பு ஏதாவது பண்ணலாம் என்றுதான் நினைத்தேன். ஆரம்பத்திலிருந்து நான்  ஒரு secondary writer மாதிரித்தான் என்ன உணர்ந்துகொண்டிருந்தேன். கிரியேட்டிவா செயல்பட முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் வரவில்லை.

ஆனால்’ மரபிசையும் காவிரியும்’ எழுதிய பிறகுதான் ஜெயன் சொன்னார். “அருணா இது வேறொரு genre-ல் போகுது, இது ரொம்ப நல்லா இருக்கு, இந்த டிராக் நல்லா இருக்கு, இதுல போ,” என்று. அப்போது தளத்தில் வெளியிடுவதற்கு முன்னாலேயே உங்களுக்கும் அனுப்பினேன் அல்லவா? நீங்கள் எனக்கு ரொம்ப உற்சாகமா, ஆரவாரமான வரவேற்பு கொடுத்தீங்க.  ஒரு நாவலோட முதல் அத்தியாயம் மாதிரி இருக்குன்னு சொன்னீங்க. எனக்குள்ள ஒரு நம்பிக்கையை விதைச்சது அது. அதுக்கப்புறம் தான் வலைத்தளம் தொடங்கலாம்னு இறங்கினேன்.

பிளாக தொடங்கி முதல் மூணு கட்டுரைகள போட்ட உடனே, சரி, நம்ம பரிணாம வளர்ச்சிய எழுதுவோம்னு நினைச்சேன். வாசிப்பு ரசனை, இசை ரசனை, எல்லாம் எப்படி வளர்ந்து வந்ததென்று சொல்வோம் என்று இறங்கினேன். அப்படி சொல்லி வரும்போதே, ஒரு அனுபவம் நினைவுக்கு வந்து, இதைச் சொல்லிப் பார்ப்போமே என்று வந்தது. அதைச் சொன்னவுடனே, சின்ன வயதை தொடக்கத்திலிருந்து சொல்ல ஆரம்பித்தேன். ஒவ்வொருத்தரும் கேரெக்டராக எனக்குள் வந்தார்கள். வில்ஃபுல்லா முன்னால திட்டம் போடல. பள்ளி நாட்கள பத்தி சொன்னதுமே  மனோகர் சார், ஜோதி டீச்சர் வந்தாங்க.  அத்தை வந்தார்கள். அத்தை பற்றிச்சொன்னதும் அத்தையின் நிச்சயம். கல்யாணம். அப்படியே பாட்டி, ராவுத்தர் மாமா என்று தன்னால் எல்லாரும் உள்ளே வந்தார்கள். நாம் ஒரு சின்ன வாசல்தான் திறக்கிறோம். அப்புறம் அங்கிருந்து தொறந்து தொறந்து ஒவ்வொண்ணா போய் பார்ப்பதுதான் அது. ஒண்ணு இன்னோண்ண பயங்கரமா கொக்கிப் போட்டு இழுத்துட்டு வந்திருச்சு. ஒரு நினைவு இன்னொரு நினைவ கிளறி விட்டிருச்சு. இவ்வளவு வரும்னு எனக்குத் தெரியாது. உண்மையில உள்ளுக்குள்ள இவ்வளவு இருக்குன்னு தெரியாது. எழுத எழுதத்தான் கிளம்பி வருது அது. என்ன சொல்ல? அது பயங்கரமான ஒரு பிராசஸ். எனக்கு இப்ப நினைச்சாலும் வியப்பா இருக்கு.

பெண்கள் அதிகமும் சிறுவயது நினைவுகள்குடும்ப வாழ்க்கைச் சித்திரங்கள்தான் எழுதுகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு சொல்லப்படுகிறதுஇதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

அது ஒரு பொத்தாம்பொதுவான பார்வை. நான் இப்போதுதான் ஆரம்பக்கட்டத்தில் எழுதவருவதால் சிறுவயது நினைவுகளிலிருந்து தொடங்குகிறேன். அது இயல்பானதுதான். பெண்கள் என்று மட்டும் அப்படி சொல்லிவிடமுடியும் என்று தோன்றவில்லை. பெரும்பாலான ஆண் எழுத்தாளர்களை எடுங்க? சிறுவயது நினைவுகளை எழுதாதவங்க இருக்காங்களா? செகந்தராபாத் கதைகள் வழியா அசோகமித்திரன் சிறுவயதைத்தான் எழுதினார் இல்லையா?

தல்ஸ்தாய் கூட Childhood, Boyhood, Youth எழுதித்தான் எழுத வந்தார்.

ஆமாம். கொஸாக்குகள்ல வர்ர ஓலெனினும் போரும் அமைதியும்ல வர்ர ராஸ்டோவும் இளம் வயது தல்ஸ்தாய் தானே. சோனியா, மரியா எல்லாரும் அவருடைய அத்தைகள்தான். அதே மாதிரி தஞ்சை எழுத்தாளர்கள் பெரும்பாலும் பெண்கள் உலகத்தைத்தான் எழுதினாங்க. மோகமுள்ல இசையைப்பற்றி வருவதனால் ஒரு பொதுவான தளம் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். மற்றபடி திஜாவினுடைய பின்னாள் கதைகளை எடுத்துக்கொண்டால் – செம்பருத்தி, மலர்மஞ்சம், அன்பே ஆரமுதே, எல்லாமே முழுக்க முழுக்க பெண்கள் உலகம் தான். அதில திஜா பேர எடுத்துட்டு ஒரு பெண் எழுத்தாளரோட பெயரைப்போட்டா அவங்க எழுதினா மாதிரிதான் இருக்கும், இல்லையா? லா.ச.ரா, கு.ப.ரா எல்லாரும் கூட அக்ரகார வாழ்க்கையத்தான் எழுதினாங்க, அதிலும் அதிகம் பெண்களப் பத்தித்தான் எழுதினாங்க, இல்லையா? அதனால இதை பெண்களுக்கு மட்டுமான குற்றச்சாட்டா வைக்கமுடியாதுன்னு நான் நினைக்கறேன்.

அப்புறம் முதன்முதல்ல எழுதவறவனுக்கு கச்சாப்பொருள் அவன் புழங்கின வாழ்க்கை, அவன் வாழ்ந்த சூழல், இல்லையா? அதைத்தான் அவன் சொல்லியாகணும். எல்லாருமே பெரும்பாலும் ஒரு biographical novel-லத்தான் தொடங்கறாங்க. இதை எழுதுவது தான் இயல்பான பரிணாமமா இருக்குது. ஆனால் இங்கருந்து அடுத்த களத்துக்குப் போகணும், அதுதான் விஷயம்.

இதை விட்டு வித்தியாசமான களங்கள்ல எழுதற ஆண் எழுத்தாளர்களே ரொம்ப கம்மியாத்தான் இருந்திருக்காங்க. கிரா அவருடைய நாவல்கள்ல ஒரு பெரிய வாழ்க்கைச் சித்திரத்த காட்டியிருக்கிறார். யுவன் சந்திரசேகர் அவருடைய குள்ளச்சித்தன் சரித்திரம், வெளியேற்றம் போன்ற நாவல்ல ஒரு metaphysical பார்வைய முன்வைக்கிறார்.  சுரா எழுதிய புளியமரத்தின் கதை, ஜெ.ஜெ. சில குறிப்புகள் இரண்டுமே socio-political novels என்று சொல்லலாம். ஆனால் அவரே கூட கடைசி காலத்துல ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ எழுதினார். அது பியூர்லி ஒரு biographical நாவல்தான். முழுக்க முழுக்க அவருடைய இளமைக்கால நினைவுகள், அப்பா பத்திதான். சிவராம காரந்தோட மண்ணும் மனிதரும்ல வர்ர ராமன் காரந்தேதான். அதே மாதிரி ஒரு குடும்பம் சிதைகிறது நாவல்ல குடும்பம் மொத்தமும் இறந்து கடைசியா அந்த சாமியாரோட போற குட்டிப்பையன் பைரப்பாதான். ஆக தொடக்கமோ முடிவோ, எப்படியும் ஒரு ரைட்டர் இளமைக்காலத்துக்கு வந்து சேரறாங்க. இதில ஆண், பெண்ணுன்னுலாம் வித்தியாசம்  ஒண்ணுமில்ல.

ஆனால் பெண்களும் வேறு களங்கள்ல எழுதணும்னுதான் நான் நினைக்கிறேன். குடும்பப்பிரச்சனைகள்ல உழன்றுகிட்டு, அதுக்குள்ள சுத்திச்சித்தி வர்ரது எனக்கு உவப்பானது கிடையாது. என்னுடைய ஆதர்சம் குரதுலைன் ஹைதர் மாதிரி எழுதுணும். எவ்வளவு விசாலமா எழுதினவங்க. அக்னி நதியில பௌத்தம், முகலாய காலம், பிரிட்டிஷ் காலகட்டம், பிரிவினைன்னு எவ்வளவு களங்களைத் தொடுவாங்க அவங்க. அந்த மாதிரித்தான் பெண்கள் முயற்சி பண்ணணும்னு நான் நினைப்பேன். அதுக்கு அவங்க படிப்பும் ஒண்ணு இருக்கு. குரதுலைன் ஹைதர் லக்னோவுல பெரிய குடும்பத்துல பிறந்தவங்க. நல்ல யூனிவர்சிட்டியில படிச்சவங்க, லண்டன்  கேம்பிரிட்ஜில படிச்சுருக்காங்க. பெரிய வாய்ப்புகள் கிடைச்சவங்க. அதனால அவங்க உலகம் விரிஞ்சு பறந்து இருந்திருக்கு. பெண்கள் தங்கள  குறுக்கிக்கக்கூடாதுன்னுதான் என் எண்ணம். அதுதான் என் ஆசையும் கூட.

ஜெயமோகனின் சாயல் சிறிதும் இல்லாமல் எழுதப்பட்ட கட்டுரைகள்‘ என்று பலரும் ஒரு பாராட்டாக சொல்லியிருக்கிறார்கள்உங்கள் எழுத்தில் ஜெயமோகனின் தாக்கம் இருக்கிறதென்று நீங்கள் நினைக்கிறீர்களாஅந்த தாக்கத்தைத் தவிர்க்க நீங்கள் ஏதும் விசேஷமாக மெனக்கட்டீர்களா?

ஆமாம். அதை எல்லோரும் பாராட்டாக சொல்கிறார்கள். ஆனால் அதை நான் பிரக்ஞைப்பூர்வமாகத் தவிர்க்க விரும்பவில்லை.  அதைப்பற்றி நான் மனதிற்குள் நினைப்பதும் இல்லை. அவருடைய மொழி பிரயோகங்கள், phrases, வெளிப்பாடு, அதை வேண்டுமென்றால் நான் தவிர்த்திருக்கலாம். மத்தப்படி ஜெயமோகன் எல்லாரையும் பாதிக்கும் அளவுக்கு பெரிய ஆலமரம். அந்த ஆலமரத்தோட நிழல்ல இருந்துகிட்டு அவரோட தாக்கம் சுத்தமா இல்லாம என்னால வர முடியாது, இல்லையா… அது ஏதாவது ஒரு வகையில் இருக்கும், பார்க்கமுடியாத விதத்துல இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் ஒன்று. இப்போது நான் சொல்லும் களம் ஒன்று இருக்கிறதில்லையா… அது ஜெயமோகன் எழுதியதிலிருந்து முற்றிலுமாகப் புதிய களன். தஞ்சை மண், அதனுடைய மனிதர்கள் வேறு, வாழ்க்கை வேறு, எங்களுக்குள் புழங்கிக்கொள்ளும் வார்த்தைகள் வேறு. குடும்ப அமைப்பிலுள்ள உறவுகளுடைய சிஸ்டம் வேறு. அவங்க இதுல அப்படிக் கிடையாது. ஜெயனின் புறப்பாடு, அனந்தன் கதைகள் எல்லாம் எடுத்துக்கிட்டா, அவங்க குடும்பத்துல நடக்குறதெல்லாம் பாருங்க. இப்ப ஜெயனுக்கும் அவங்க பாட்டிக்கும் உள்ள உறவு எனக்கும் என் பாட்டிக்கும் உள்ள உறவு மாதிரி இல்ல. அவங்க வேற மாதிரி பாட்டி. ரொம்ப பர்சனல் அட்டாச்மெண்ட் இல்லாத தனியா குடும்பத்தில் இருக்கக்கூடிய மெஜெஸ்டிக்கான பாட்டி. அவங்களுக்கு ஜெயன் பேரன், அவ்வளவுதான். ஒரு பர்சனல் உறவு இருக்குறமாதிரி சொல்லமாட்டாரில்ல. அப்புறம் அவங்க குடும்பம் இன்னும் கொஞ்சம் கூட விவசாயம் சார்ந்து இருக்காங்க. அதோடில்லாம குடும்பச்சூழல் இப்படி அமையல. குடும்பத்துக்குள்ள உட்காருறது, டிஸ்கஸ் பண்றது, அப்பா அம்மா குழந்தைகளோட பேசிக்கிறது. அவங்க வீட்ல  பையன் சாப்பிட வந்திட்டானா, தூங்க வந்திட்டானா, அப்படி மட்டும்தான் கேப்பாங்க. இங்க அப்படி இல்ல. அந்த லைஃப்ஸ்டைல் வேற. ஆகவே நான் எழுதுறது எல்லாமே புதுசா தோணலாம் உங்களுக்கு.

அப்புறம் மொழி. நாம் சாம்ஸ்கி சொன்ன மாதிரி மொழி அப்படீங்குறது மொழி மாத்திரம் அல்ல. It is a way of expression. நீங்க ஒண்ண எப்படி சொல்றிங்க, எதை அடுக்கா வரிசைப்படுத்தறீங்க, ஒரு சூழலை வர்ணிக்கும்போது எத உங்க மனசு பிரதானப்படுத்துது, எல்லாமே மொழி தான். எந்த கூறுகளை எடுக்குது, அதை எப்படி அடுக்குது, அதை எப்படி வெளிப்படுத்துது. இந்த மூணுமே way of expression, மொழிதான் என்று சொல்றாரு. இப்படி ஒவ்வொரு மைண்டும் ஒவ்வொரு பேட்டர்ன்ல இருக்கும்னு நினைக்கிறேன். அவர் யோசிக்கிற  மாதிரி நான் யோசிக்க மாட்டேன் இல்ல? இப்போ நாம ரெண்டு பேரும் ஒரு இடத்துக்கு போறோம், ஒரு நிகழ்ச்சி நடக்குது, நாம பாக்குறோம், நாலஞ்சு வருஷம் கழிச்சு நாம ரெண்டு பேரும் அதை எழுதினோம்னா சுத்தமா வேற வேறாத்தானே இருக்கும்.

வெளிப்பாடுங்குறதுல, எதை எதை நம்ம மனசு உள்ள எடுக்குதுன்றது ஒண்ணு, எதை நாம் வெளிப்படுத்துகிறோம் என்பது ஒன்று. ஒவ்வொரு கிரியேட்டிவ் மைண்டும் இந்த விஷயத்துல வேற வேற மாதிரித்தான் இருக்குமென்று நினைக்கிறேன். 

ஒரு ஜாலி கேள்வி… ஒரே வீட்டில் இரண்டு எழுத்தாளர்களாக வாழ்வது எப்படி இருக்கிறது?

[கலகலவென்று சிரிப்பு] ஆமாம் சுசித்ரா. என்ன சொல்ல? நீங்க ஜாலி கேள்வின்னு கேட்டீங்க இல்ல? எனக்கு செம்ம ஜாலியா இருக்கு. உண்மையிலேயே ரொம்ப கலகலப்பா இருக்கு. சாதாரணமாவே நாங்க ரொம்ப ரொமாண்ட்டிக்கான கப்பிள்தான். ஆனா இப்ப எழுத ஆரம்பிச்சத்திலெருந்து ரொமான்ஸ் கொஞ்சம் கூடுதலா போயிடுச்சு [சிரிப்பு] அது ஏன்னா, அவர் பார்க்காத ஒரு முகம் இதுல இருக்குல்ல? இதுவரைக்கும் இவள எங்க ஒளிச்சு வச்சிருந்தான்னு ஒரு இது. நாம பார்த்ததுல இவள இதுவரைக்கும் காணுமே, இப்ப எந்திரிச்சு வாராளே புதுசா ஒருத்தி, அப்படி நினைப்பாரில்ல?

பொதுவாவே செம ஜாலியா இருப்பேன் வீட்ல. ஒரே டான்ஸ், பாட்டுன்னு குதிச்சிக்கிட்டுத்தான் இருப்பேன். அஜி கூட சொல்வான், சரியான பந்து மாதிரி இருக்கம்மான்னு. எந்தக் கவலையும் ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு மேல எனக்கு நீடிக்காது. நான் கவலையெல்லாம் ரொம்ப மனசுக்குள்ள எடுத்துக்கற ஆளெல்லாம் கிடையாது. சாதாரணமாவே மகிழ்ச்சியா இருக்குற தருணங்களை நானே உருவாக்கிக்குவேன்.

அப்படி இருக்கும்போது இதை எழுத ஆரம்பிச்சபோது வாழ்க்கை உண்மையிலேயே இன்னும் வண்ணமயமாயிடிச்சு. ரொம்ப ரொம்ப கலர்ஃபுல்லா… இந்த வயசானவங்க கேட்டராக்ட் பண்ணிக்கிட்ட பிறகு, உலகம் இன்னும் கொஞ்சம் பிரகாசமானதுபோல் இருக்குன்னு சொல்வாங்கல்ல, அந்த மாதிரி. இன்னும் கொஞ்சம் ஜாலியா.

நான் எப்பவுமே enthusiastic-ஆக இருக்குறது அவருக்குப் பிடிக்கும். இப்ப அவருக்கு என்ன பார்க்கும்போதெல்லாம் ஹேப்பினெஸ் கூடுது, செம்ம ஹேப்பியா இருக்கோம் ரெண்டு பேரும். பலவித திட்டங்கள போடுறது, இப்படி பண்ணலாம், அப்படி பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்றது, டௌட்ஸ் கேக்குறது, நான் எழுதறப்ப இப்படி ஆயிட்டேன், எனக்கு தானா வருதுன்னு என்னோட பரவசங்கள பகிர்ந்த்துகிறது, அதெல்லாமே சந்தோஷம்தான்.

சின்ன வயது அருண்மொழி புதிய புதிய அனுபவங்களுக்கு அறிதல்களுக்கு வேட்கைகொண்டவளாகஉற்சாகமானவளாக இருந்திருக்கிறாள்உங்கள் வாழ்க்கையில் அந்த அறிதல் ஆசையெல்லாம் நிறைவேறியதென்று சொல்வீர்களா?

[சிரிப்பு] ஆமா, சின்ன வயசு அருண்மொழி ஒரு firebrand தான். அந்த அறிதல்வேட்கையெல்லாம் இருந்துக்கிட்டுத்தான் இருக்கு, இல்லாம போகல. எனக்கு எப்படின்னா, ஜெயன கல்யாணம் பண்ணத்துக்கு அப்பறமே, அவ்வளவு புத்தகங்கள் அறிமுகமாயிடுச்சி. அப்புறம் பக்கத்திலேயே ஒரு ஆசிரியர வைச்சுக்கிட்டு நான் இருந்திருக்கேன். எல்லா வித சந்தேகங்களையும் நான் கேட்டுப்பேன், எல்லாத்துக்கும் எனக்கு பதில் கிடைச்சுடும்.

நான் 1991 தொடங்கி 1998 வரைக்கும் பயங்கரமா படிச்சேன். விட்டு வந்த  இடத்துலதான் எழுதியிருப்பேனே. ரஷ்ய இலக்கியம், ஐரோப்பிய இலக்கியம், இந்திய இலக்கியம்,  எல்லாத்தையும் படிச்சேன். நீங்க சொல்ற வேட்கை, தேடல் எல்லாமே அதில satisfy ஆயிடிச்சு. வேட்கைன்னா என்ன, உலகத்தை அறிஞ்சிக்கற வேட்கை புத்தகம் மூலமா தீந்திரும் இல்ல?

அப்புறம் ஜெயன் பயணத்தை ரொம்ப விரும்பக்கூடியவர். எனக்கும் பயணங்கள் ரொம்ப பிடிக்கும். பலவிதமான புதிய அனுபவங்கள் பிடிக்கும். அவர் போற இடத்துக்கெல்லாம் நானும் பயணம் போனேன். அப்பறம் வெளிநாட்டு பயணம். 2006 தொடங்கி நாங்க வெளிநாட்டுப் பயணம் போக ஆரம்பிச்சோம். ஒரு ரெண்டு மூணு பயணத்திலத்தான் என்ன விட்டுட்டு போயிருப்பாரு. ரொம்ப தவிர்க்கமுடியாத சூழல்ல நான் வரலன்னு சொன்னபோது மட்டும். மத்தபடி எல்லா பயணங்கள்லயும் என்ன கூட்டிட்டு போயிருக்காரு. அது எல்லாமே எனக்கு கிடைச்சிருக்கு. அந்த அனுபவங்கள் எதையுமே நான் மிஸ் பண்ணதில்ல. அதனால ஓரளவு எல்லாமே satisfy ஆயிடுச்சுன்னுதான் சொல்லணும். ஒரு நிறைவான வாழ்க்கை தான். அதுக்கு மேல என்ன இருக்கு?

கண்ணீரும் கனவும்‘ பதிவில்வணிக இலக்கியத்திலிருந்து சீரிய இலக்கியத்திற்கு நீங்கள் வந்து சேர்ந்த பாதையை விவரிக்கிறீர்கள். ‘வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறதுகதையும் இப்படியல்லவா இருக்கவேண்டும்‘ என்று உணர்ந்ததைக் கூறுகிறீர்கள்அந்த காலத்தில் உங்களுக்குள் வாழ்க்கையை பற்றிய கேள்விகள்குழப்பங்கள்தேடல்கள் இருந்தனவா?

சின்ன வயசிலிருந்தே நான் சூழல ரொம்ப உள்வாங்குவேன். மனிதர்கள விரும்பி கவனிப்பேன். நிறைய பெரியவங்க குழந்தைகள பொருட்படுத்தவே மாட்டாங்க. குழந்தைகளுக்கு ரொம்ப சென்சிபிளானா ஒரு மைண்ட். மனுஷங்களோட போலித்தனங்களெல்லாம் ஊடுருவிப் பார்த்திடும். அப்படி மனிதர்களை பார்த்துப் பார்த்து நான் பழகினேன்.

பதினாலு வயசுல ஆலத்தூரிலிருந்து மதுக்கூரிலும் பட்டுக்கோட்டையிலும் என்னைத்தூக்கிப் போட்டது கடல் தண்ணீரிலிருந்து மீனை வெளியே தூக்கிப்போட்டது மாதிரி இருந்தது. மதுக்கூரில் ஒரு கிராமத்தன்மையே இல்லை. கசகசவென்று, ஒரு விரிந்த தன்மை இல்லாத ஊர் அது. மாலையானா மனைவிகளை தெருவில இழுத்து போட்டு அடிக்கும் குடிகார கணவன்மார்கள் எங்கள் வீட்டு எதிரிலேயே குடியிருந்தார்கள். வாழ்க்கையோட harsh reality பலதும் நான் கண்முன்னால பார்த்தேன். ஆனால் கதைகள் வேறெதையோ ஒன்றை பேசிக்கொண்டிருந்தன.

அப்போது புனைவிலிருந்து கொஞ்சம் வெளியே வர ஆரம்பித்தேன். இந்துமதி, சிவசங்கரி, வாசந்தி போன்றவர்களிடமிருந்து ஒரு தூரம் உருவானது. அப்புறம் பாலகுமாரன் பெரிய சலிப்பைக் கொடுத்தார். கல்லூரியில அசோகமித்திரனை படித்த பிறகு தான் மீண்டும் புனைவுக்குள் தீவிரமாக வந்தேன். ஒரு சின்ன மிடில் கிளாஸ் லைஃப்ல இவ்வளவு வெரைட்டி காண்பிக்குறது, அதை அத்தனை நுட்பமாக, குறைந்த வார்த்தைகளில் சொல்கிறார் என்று பயங்கர ஈர்ப்பாக இருந்தது. 

அதுவரை சோவியத் புத்தகங்களை நிறைய படித்தேன். ரஷ்யாவில் இப்படி புரட்சி நடந்திருக்கிறதே, மொத்த சமுதாயத்தையும் புரட்டிப் போட்டிருக்கிறதே, அப்படி நமக்கும் நடக்கும், இங்கும் ஏழை-பணக்காரன் வித்தியாசம் அழியும் என்று நம்பினேன்.

தத்துவார்த்தமான  கேள்விகள் இருந்ததா?

இல்ல, அப்போதைக்கு எனக்கு அந்த மாதிரி தேடல்கள் இல்ல. பாட்டி வழியாக கடவுள் என்ற கான்செப்ட் எனக்கு அறிமுகமாயிருந்தது. அதே சமயம் அறிவியலை ரொம்ப நம்பினேன். குறிப்பாக சுஜாதாவின் ‘ஏன் எதற்கு எப்படி’ எனக்கு பெரிய வழிக்காட்டி.

அதன் பிறகுதானே நவீன இலக்கியம் அறிமுகம் ஆனதுசீரிய இலக்கியக்காரர்கள் ஒரு குறுங்குழுவாகநக்சலைட் போலதலைமறைவாக இயங்கியவர்களெனச் சொல்லியிருப்பீர்கள்.

அது அந்த காலகட்டத்தின் நிலைமை என்று நினைக்கிறேன். அப்போது நிகழ், கல்குதிரை மாதிரியான சிறுபத்திரிகைகள் வெறும் 300 பிரதிகள் அச்சிடுவார்கள். தமிழ்நாட்டு மக்கள் தொகை அப்போது 8 கோடி இருத்திருக்கலாம். அதில் 300 பிரதியென்றால் நான் நினைத்தது கிட்டத்தட்ட உண்மைதானே? குறுங்குழுதானே? [சிரிப்பு] சுஜாதா தப்பித்தவறி வெகுஜனப் பத்திரிக்கை எதிலோ அசோகமித்திரனை பற்றி வாய்விட்டதனால் நான் கேள்விப்பட்டேன். 

ஆனால் 1990ல், நான் கல்லூரி படித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே, இந்த நிலைமை மாறியது. ஐராவதம் மகாதேவன் தினமணியின் ஆசிரியராக பொறுப்பேற்ற உடனேயே தமிழ்மணி என்று ஒரு சப்லிமெண்ட் கொண்டு வந்தார். அதில் தான் அசோகமித்திரன், சுந்தர ராமசாமி கட்டுரைகளை படித்தேன்.

அப்புறம் ‘91-ல் சுபமங்களா ஆரம்பித்தார்கள். அது ஒரு இடைநிலை இதழ். எல்லா தீவிர எழுத்தாளர்களோட பேட்டியும் அதில் வந்தன. அது வரை ‘சுந்தர ராமசாமி’ என்ற பெயரை மட்டுமே கேள்விப்பட்டிருந்த எனக்கு அவருடைய முழு பேட்டியையும் கண்டது எவ்வளவு பரவசத்தை தந்திருக்கும் என்று உங்களுக்குப் புரியலாம்.

அப்போது சுஜாதா ஒரு நல்ல பணியை ஆற்றினார். ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் எதில் எழுதினாலும் இந்த சீரியஸ் ரைட்டர்ஸ பத்தின ஒரு லைன் எழுதுவார். ‘அசோகமித்திரன் கணையாழியில்’ அப்படின்னு ஒரு வரி எழுதுவார். நல்லா படிக்குற வாசகனுக்கு கணையாழின்னா என்னன்னு ஆர்வம் வரும்.

பெண்களுக்கு சீரியஸ் இலக்கியம் அறிமுகமாக  தடைகள் இருந்ததா நினைச்சீங்களா?

பெண்கள்ன்னு இல்ல, நான் வாசித்த காலத்தில் ஆண் வாசகர்கள் இருந்தாலும் இதே பாடு பட்டுத்தான் உள்ளே நுழைந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. பொதுவா அப்போ இருந்த டிரெண்டே அப்படித்தான். மூடி மறைச்சு, அட்ரெஸ் கண்டுபிடிச்சு, சந்தா கட்டி, அந்த இதழ வரவழைக்குற ஒரு தன்மைதான் இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது கணையாழி, நிகழ், முன்றில், கனவு, கல்குதிரை இவ்வளவுக்கும் நான் சந்தா கட்டிக்கிட்டிருந்தேன்.

மார்க்ஸ்ஜெபிராமகிருஷ்ண ஹெக்டேமொரார்ஜி தேசாய் எல்லாருமே உங்களுக்கு பிடித்த அரசியல் நாயகர்களாக இருந்திருக்கிறார்கள்உங்களுக்கு நிறைய அரசியல் கவனிப்பு அந்த வயதில் இருந்ததென்றே தெரிகிறது. ‘தீ போல் எரிந்து கொண்டிருந்த அந்த அருண்மொழியின் பரிசுத்தமான இலட்சியவாதம் ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பும் கூடÓ என்று ‘சின்னச் சின்ன புரட்சிகள்‘ கட்டுரையில் எழுதியிருக்கிறீர்கள்இன்று உங்களிடம் அந்த லட்சியவாதம் இருக்கிறதா?

அது ஒரு காலகட்டத்தோட பிரதிபலிப்புன்னுதான் எனக்குத் தோணுது. எல்லா மனுஷங்களும் சமமா, ஏற்றத்தாழ்வில்லாம இருக்குற ஒரு சமூகம்ன்னா அது ஒரு பெரிய கனவுதான், இல்லையா? அப்போது அதற்கு உவப்பா இருந்த ஒரே தியரி சோசியலிசம், கம்யூனிசம் தான். ஆகவே இயல்பாவே இப்படிப்பட்ட கனவிருந்த அனைவரும் அதன் பக்கம் ஈர்க்கப்பட்டார்கள். அந்த அலையில் நானும் அடித்துச்செல்லப்பட்டேன். என் வயசும் அதற்கு ஒரு காரணம்.

பிறகு கிழக்கைரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றிலும் படிப்படியாக கம்யூனிச ஆட்சிகள் விழுந்தன. இறுதியாக ரஷ்யாவும் சிதறுதேங்காய் மாதிரி சிதறி உடைந்தது. அந்த நிதர்சனத்தைப் பார்த்தேன். அப்புறம் வயதாக ஒரு முதிர்ச்சியும் வந்தது. எந்த ஒரு சித்தாந்தமும் உலகத்தை அப்படியே நெம்புகோல் வச்சு திருப்பற மாதிரி புரட்டிப்போட முடியாது என்கிற பட்டறிவு நமக்கு கொஞ்சம் காலம் பிந்தித்தான் கிடைக்கிறது. குறிப்பா இது எந்தளவுக்கு வன்முறையில போய் முடியுது, எத்தனைப்பேர காவு வாங்கியிருக்கு என்றெல்லாம் யோசிக்கும்போது நம் நம்பிக்கை குறையத்தொடங்குகிறது. அதுக்குன்னு இலட்சியவாதமே இல்லாமல் இருக்கவும் முடியாது.

இன்று என்னிடம் அப்போதுபோல் தூய்மையான கனவுத்தன்மை வாய்ந்த இலட்சியவாதம் இல்லையே ஒழிய,  என் மனதில் வேறொரு இலட்சியவாதத்தை நம்பிக்கொண்டுதான் இருக்கிறேன். இலட்சியவாதம் என்பதைவிட, நேர்மறைவாதம் என்று அதைச் சொல்லலாம். ஹியூமானிட்டி போற பாதை மேல் ஒரு தீர்க்கமான நம்பிக்கை இருக்கிறது எனக்கு. போர், பஞ்சம், நோய், பேரழிவு, எவ்வளவோ வந்தாலும் மனிதகுலம் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன். அந்த நேர்மறைத்தன்மையே ஒரு இலட்சியவாதம்தானே…

சின்ன வயசுல அப்பா சொல்லி நிறைய அரசியல கவனிச்சேன். பிறகு நரசிம்மராவ் காலத்துக்கப்புறம் நடந்த ஊழல்கள், பேரங்கள் எல்லாமே அரசியல் மேல பெரிய சலிப்ப கொடுத்துச்சு.  எத்தனையோ இசங்கள் பரிசீலிக்கப்பட்டிருச்சு. மத அதிகாரத்த கையில எடுத்துக்கிட்ட அரசுகள், சர்வாதிகார அரசுகள், கம்யூனிசம், முதலாளித்துவம்… சீனாவுல இருந்தது போல ஒரு ரிஜிட் கம்யூனிசம். அங்க என்ன நடக்குதுன்னு இப்பத்தான் கொஞ்சம் திரை விலகி தெரிய வருது. அமெரிக்காவுல முதலாளித்துவ அரசு. அமெரிக்காவோட அதிகாரத்த ஒரு பத்து மல்டிநேஷனல் கையில வச்சிருப்பானா? நமக்கு தெரியுறது ஜோ பைடனோட முகம் தான? அந்த மாதிரி எவ்வளவோ பார்த்தாச்சு.

இப்ப என்ன தோணுதுன்னா, இன்று உலகத்துக்குத் தேவை நடைமுறை இலட்சியவாதம். அதிலே சிறந்த வடிவம் ஜனநாயகம்தான்னு நினைக்கிறேன். தோல்வியோ வெற்றியோ. பேச்சுவார்த்தை நடந்துகிட்டே இருக்க அதுதான் வழி. அதிலும் காந்தி கனவு கண்ட சமூகம்தான் நம் இலட்சியவாதமாக இருக்கவேண்டும் என்று இப்போது தோன்றுகிறது. அதிகாரம் மையமாகவே கூடாது. கிராமங்கள்ல கூட அதிகாரத்த பிரிச்சுக்கொடுன்னு சொல்றாரில்ல? ஒரு மையத்துல அதிகாரம் குவியவே கூடாது.

அப்பா திராவிட இயக்கத்தில் இருந்தார்ஆகவே சின்ன வயதில் கடவுள் வழிபாடுபண்டிகைகள் என்று பெரிதாக ஒன்றும் இருந்ததில்லை என்று எழுதியிருக்கிறீர்கள்ஆனால் வெண்முரசு பற்றி நீங்கள் அளித்த பேட்டியின் நிறைவில் எனக்கு கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு என்று குறிப்பிட்டிருந்தீர்கள்இந்த பரிணாமம் எப்படி நிகழ்ந்ததுகடவுள் அப்போது உங்களுக்கு என்னவாக பொருள்பட்டதுஇப்போது?

 அப்பா தீவிரமான, மூர்க்கமான நாத்திகராக இருந்தார். எங்கள் வீட்டில் கடவுள் உருவம் இருக்காது, குத்துவிளக்குக்கூட இருக்காது. தீபாவளி கொண்டாட மாட்டோம் என்பதால் அந்த நாட்களில் அழுதுவடியும் எங்கள் வீட்டில். ஆனால் ராஜம்மா பாட்டியுடன் திருவிழா, கோயில் எல்லாவற்றுக்கும் போவேன். அந்தப்பக்கம், புள்ளமங்கலம் பாட்டி வீட்டுக்குப் போகும்போது ஏப்ரல், மே மாதங்களில் எல்லா குலதெய்வங்களுக்கும் கொடை நடக்கும். திருவாரூர் போனால் வீதிவிடங்கர் ஆலயம், கமலாலயம், எல்லாம் போவோம். தேரோட்டம் பார்ப்போம். அதெல்லாம் பார்க்கும்போது வாழ்க்கையில் நிறைய இழக்கிறோம் என்று எனக்குத் தோன்றும். சின்ன வயசு அருணா அனுபவத்துக்காக ரொம்ப ஏங்கறவன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். அப்பான்னால இவ்வளவு மிஸ் பண்றோமேன்னு இருக்கும். அப்படிப்பார்க்கும்போது, கடவுள் இல்லன்னு சொல்றாங்க பாத்திங்களா? அவங்க பிள்ளைங்களுக்கு கொடுக்காம விடுறது கடவுள்ன்ற கொள்கைய மட்டுமில்ல… இந்த ஹேப்பினெஸ், இந்த வண்ணமயமான உலகத்த குழந்தைங்களுக்கு இல்லாம பண்ணிடறாங்க. திருவிழான்னா கோயிலுக்கு போகுறது மட்டும்தான் திருவிழாவா? அது சொந்தமும் சமூகமும் சேர்ந்து அனுபவிக்கற ஒரு பெரிய கொண்டாட்டம் இல்லையா. அது ஒரு பெரிய இழப்புதான். அதை நான் அப்பவே உணர்ந்தேன்.

அதனால, வளர வளர எனக்கு பக்தி ஜாஸ்தியாய்டிச்சு. அப்பா என்ன சொல்றாங்களோ, அதுக்கு நேர்மாறா நடந்துக்கணும்னு இருந்துச்சுபோல. ஒரு வயசுக்கப்புறம் அப்பாவ மறுதலிப்போமில்ல… அப்பா எனக்கு எவ்வளவோ சொல்லிக்கொடுத்திருக்காங்க, லாஜிக்கலா எல்லாத்துக்கும் பதில் சொல்வாங்க. ஆனால் இந்த ஒரு விஷயத்துல மட்டும் என் அப்பாவ என் மனசுக்குள்ள நான் மறுதலிச்சேன். மதுரைல கல்லூரிக்குபோன உடனே மாசத்துக்கு இரண்டு முறை மீனாட்சி கோயில் போயிடுவேன். எனக்கு அந்தக்கோயில் அவ்வளவு பிடிக்கும். இழந்ததையெல்லாம் திரும்ப பெறணும்னு வெறியோட இருந்தேன்.

கல்யாணமானதும் சொல்லவே வேண்டாம். ஜெயன் பக்திமான்ல்லாம் இல்ல, ஆனால் கலை அனுபவத்தைத் தரக்கூடிய கோயில்கள் அவருக்கு ரொம்ப பிடிக்கும். குழந்தைகள் பிறந்து வளர வளர எல்லா பண்டிகைகளையும் கிராண்டா கொண்டாடுவோம். எதெல்லாம் செய்யாம சின்னபிள்ளையில நான் இழந்தேனோ எல்லாமே என் பிள்ளைங்களுக்கு கொடுக்கணும்னு நினைச்சேன்.

ஆனால் கடவுள்ன்ற கான்செப்ட் மாறியிருக்கு. சிவன், விஷ்ணு, முருகன் எல்லாமே நாம கொடுக்கற உருவம்தானே? எனக்கு குமாரகோயில் முருகன் செண்டிமெண்டா பிடிச்சுப்போன கடவுள். என் கல்யாணம் அங்கத்தான் நடந்தது. பிள்ளங்களுக்கு எல்லா சடங்கும் அங்கத்தான் செஞ்சோம். இப்பக்கூட நினைச்சா அங்க போயிருவேன். ஆனால் அது முருகன்தானான்னா, இல்ல. அந்த அனுபவத்த மனசு இழக்க விரும்பல. அதுக்கு முருகன்னு ஒரு உருவத்த கொடுத்துக்குது.

அப்புறம்,  இப்பக்கேட்டா இந்துமதம் சொல்ற பிரம்மம்ற கோட்பாட்டை நான் ரொம்ப நம்பறேன். இந்துமதம் சொல்ற பிரம்மமும், பௌத்தம் சொல்ற மகாதம்மமும் மற்ற மதங்கள் சொல்ற ஒரே இறையும் ஒண்ணு தான்னு தோணுது. ஒரு great cosmic order இருக்குன்னுதான் தோணுது. அப்படி மாபெரும் நியதி ஒண்ணுதான் இந்த பிரபஞ்சத்த ஒருங்கிணைவோட, ஒத்திசைவோட, ஒழுங்கமைவோட இயக்குதுன்னு நம்பறேன்.

இப்ப நாம பேசிக்கிட்டு வர்ரப்ப ஒண்ணு தோணுதுஉங்களுக்கும் உங்க அப்பாவுக்குமான உறவு ரொம்ப தனித்துவமான ஒண்ணு அப்படீன்னுகட்டுரைகள் வழியாகவே உருவாகுற சித்திரம் அதுஉங்களுக்கும் உங்கள் அப்பாவுக்குமான உறவு எப்படிப்பட்டது?

ஒரு love-hate relationship – ன்னு வெச்சுக்குங்களேன். சின்ன பிள்ளையா இருக்கும்போது பயங்கர அட்மிரேஷனோட பாப்பேன். அப்பாவுக்கு எல்லாத்த பத்தியும் தெரியும். ஒரு சபையில அவரோட கருத்துதான் ஸ்தாபிக்குற மாதிரி நிக்கும். அப்போல்லாம் ஆகா, நம்ம அப்பா, அப்படீன்னு இருக்கும். ஒரு எட்டாவது ஒன்பதாவது படிக்குறப்பதான் அப்பாவுக்கு இருக்குறது கொஞ்சம் பழமையான பார்வைன்னு தோண ஆரம்பிச்சது. அப்புறம் திராவிட அரசியல் அப்பா மேல ரொம்ப தாக்கத்த ஏற்படுத்திச்சு. ஒரு குறிப்பிட்ட சமூகத்துமேல வெறுப்ப வளத்துக்குறது, கடவுள் மறுப்பு, இதெல்லாம் சின்ன ஒரு நெருடல உருவாக்கிச்சு. அதெல்லாம் நான் விவாதிச்சிட்டே இருப்பேன். ஆனால் இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் பிரியம் இருந்துகிட்டே இருக்கும். பிரியத்துக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை.

ஒரு 35-40 வயசு ஆனத்துக்கப்புறம்தான் நம்ம அப்பா நமக்கு என்ன கொடுத்திருக்கார்ன்னு தொகுத்துக்க ஆரம்பிக்கிறோம். என் வயசுக்காரங்களோட அப்பாக்களவிட எங்க அப்பா ரொம்ப லிபரலான ஒருத்தராவே இருந்திருக்கிறார். ஏழாவதிலேயே சைக்கிள் கத்துக்க சொன்னார். ஒன்பதாவதிலேயே டூ வீலர் ஓட்டுவேன். எல்லாரும் வேடிக்கை பார்ப்பாங்க. இப்ப அதெல்லாம் உங்களுக்கு சாதாரண விஷயமாக இருக்கலாம், ஆனால் 80-கள்ல கிராமத்துல அதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம். அப்பா அந்த மாதிரி எல்லாத்திலெயுமே ஃபார்வர்டா தான் யோசிப்பாங்க. பொம்பள பிள்ளைன்னா தனியா போகணும், வரணும், எல்லா விஷயங்களிலேயும் ஈடுபடனும், தனியா எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணனும்னு நினைப்பாரு. அப்படித்தான் என்ன வளத்தாங்க. அதனால இப்ப வரைக்கும் யாரோட பழகுறதுக்கும் எனக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்ல. என் ஆளுமையிலேயே அந்த போல்ட்னெஸ் இருக்கு. அது அப்பா மூலமா வந்ததுதான்.

உங்கள் கட்டுரைகளில் தஞ்சை மண்ணின் வாழ்க்கைபேச்சுஎல்லாம் இடம்பெறுகிறதுஒரு பெரிய காலமாற்றின் சாட்சிப்போல உள்ளன உங்கள் கட்டுரைகள்திருமணமான பிறகு நீங்கள் அந்த நிலத்தை விட்டு வந்துவிட்டீர்கள்இன்று உங்கள் பார்வையில் அந்த நிலம் எப்படி இருக்கிறது?

நான் என் கட்டுரைகளில் 70கள்80கள் காலக்கட்டத்தைத்தானே எழுதுகிறேன்? அப்போது பழைய தஞ்சை மாவட்டம் இப்போது போல மூன்று மாவட்டங்களாக [தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்] பிரிக்கப்படவில்லை. அதில் இரண்டு வகைப்பாடு சொல்லப்பட்டது. கீழத்தஞ்சை, மேலத்தஞ்சை. கீழத்தஞ்சை முழுக்கமுழுக்க டெல்டா பகுதி. கிழக்குப்பக்கம் உள்ள தஞ்சை, கடற்கரையை ஒட்டியுள்ள தஞ்சை. மன்னார்குடி, கும்பகோணம், நன்னிலம், வேதாரண்யம், வேளாங்கன்னி, எல்லாமே கீழத்தஞ்சை. மேலத்தஞ்சை என்பது நான் இப்போது எழுதும் பகுதி. ஆலத்தூர், பட்டுக்கோட்டை, ஊருணிபுரம், திருவோணம், அறந்தாங்கி, கந்தர்வகோட்டை. கீழத்தஞ்சையை விட மேலத்தஞ்சை கொஞ்சம் கூட வறண்டபகுதி என்று கருதப்பட்டது.

அப்போது இருந்த தஞ்சை இப்போது இல்லைதான். நான் சொல்லும் காலகட்டம் மிகவும் வளமான ஒரு பீரியட். காவிரி பொய்யா நதியா ஓடிக்கொண்டிருந்த காலம் அது. ஆனால் 1995-96 வாக்கில் நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் முடிந்து நிலைமை மாறியது. எப்போதும் போல காவிரியில் தண்ணீர் வராமல் ஆனது. விடுவதில் முறை வைத்தார்கள். பாதி நேரம் தண்ணீர் வந்தாலும் தாமதமாகவே வரும். நிறைய பிரச்சனைகள். தஞ்சை மாவட்டத்தில் எல்லாமே தலைகீழாக மாறியது. எந்த ஒரு கலாச்சாரத்தையும் செழுமைப்படுத்துவது  தண்ணீர்தான். நதிதான். காவிரி பிரச்சனை வந்த பிறகு நான் கண்ட தஞ்சையே வேறு.

அதன் பிறகு குறுவைக்கு மட்டும் தான் தண்ணீர் வரும். முன்னால மூன்று போகம் விளைந்த மண் அது. குறுவை, சம்பா, தாளடின்னு சொல்வாங்க. குறுவைன்னா குறுகியக்கால பயிர். மூன்று மாதம். சம்பான்னா அடுத்தக்கால பயிர். நாலரை மாதம் போகும். தாளடின்னா தாள்-அடி – வைக்கோல அறுத்த பிறகு ஒரு சாண் அப்படியே இருக்கும். அது மேல உளுந்து, பயறு தெளிப்பாங்க. இதுதான் சிஸ்டம். அல்லது நெல் போடாதவங்க கரும்பு போடுவாங்க. பருத்தி போடுவாங்க. நான் பார்த்த காலத்துல மண்ண இப்படி முப்போகம் விளைய வைப்பாங்க.

95-96க்கு பிறகு ஊருக்குப் போகும்போதெல்லாம் வயல்கள் பாதி தரிசாகத்தான் கிடக்கும். விவசாயத்தை கைவிட்டவங்க பாதி உண்டு. நிலத்துல வருமானம் வராம வித்துட்டு ஃபாரின் போனவங்க பாதி உண்டு. குறுவிவசாயிங்க நிலத்த வித்துட்டு கூலிகளா போனதையும் கேள்வி பட்டிருக்கேன். இன்று கீழத்தஞ்சை தமிழ்நாட்டிலேயே மிகவும் வறுமை நிறைந்த ஒரு பகுதி என்று சொல்லலாம். அந்த பழைய செழுமையெல்லாம் எங்க போச்சுன்னே தெரியல. நான் மரபிசையும் காவிரியும்ல சொல்வேன்ல, மூங்கில்கள் நிறைந்த பாதைகளெல்லாம், இப்ப கருவேலம் ஆக்கிரமிச்சிருக்கு. பார்க்கவே பகீர்ன்னு இருக்கும்.  

இந்த மாற்றம் தண்ணியால மட்டும் தானா?

தண்ணியாலன்னு நான் யூகிக்கிறேன். ஆனால் இன்னும் சமூகப்பொருளியல் காரணிகள் இருக்கலாம்.

ஆனால் 2017-18 போல நிலைமை கொஞ்சம் மாறியதுபோல் தோன்றியது. அப்போது அம்மாவை தஞ்சாவூரில் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு திருவாரூரிலிருந்து தஞ்சாவூருக்கு ஏழெட்டு நாள் போய்வந்துகொண்டிருந்தேன். அப்போது ஒரு பக்கம் காவிரி தண்ணீருடன் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. மறுபக்கம் குளங்களெல்லாம் தூர்வாரி, கரையெல்லாம் உயர்த்தி நல்ல நிலமையில் இருந்தது. அது மனசுக்குச் சந்தோஷமா இருந்தது.

தஞ்சை மாவட்டத்தில் வளர்ந்ததால் இயல்பாக மரபிசை அறிமுகம் உங்களுக்கு கிடைத்ததைப்பற்றி எழுதியுள்ளீர்கள்நிறைய இசை கேட்பீர்களாஇசையில் பயிற்சி உண்டா? 

கண்டிப்பா இசையில எனக்கு பயிற்சி கிடையாது. சின்ன வயசுல ரொம்ப ஆசை இருந்தது, பாட்டு கத்துக்கணும்னு. ஆனால் பதினாலு வயசு வரைக்கும் அட்ட கிராமத்துல இருந்தேன். அங்க பாட்டு சொல்லித்தர்ரவங்க யாருமே கிடையாது. அதனால அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்ல. அப்பாகிட்ட அடிக்கடி சொல்வேன் நான். அப்பா என்ன கர்ணாட்டிக் மியூசிக் படிக்கவெச்சிருக்கலாமில்ல, நான் நல்லா பாடுவேன்ல்ல? அப்படீன்னு. அது ஒரு சின்ன ஏக்கம் எனக்கு உண்டு எப்பவுமே.

ரசனை எனக்கு குஞ்சிதய்யர் மூலமாகவே விதைக்கப்பட்டிருந்தது, எழுதியிருக்கிறேனே. ஆனால் முறைப்படி கேட்க பழகியது எப்போதுன்னா, கல்யாணத்துக்கு பிறகுதான். அதுவரைக்கும் டேப் கூட எங்களுக்கு பெரிய விஷயம்தான். ரேடியோ வந்ததும் அரங்கிசை கேட்பேன். பிறகு டேப் வாங்கி கேட்டோம், நானும் ஜெயனும். ‘மலையில் பிறப்பது’ கட்டுரையில எழுதியிருப்பேனே. அப்போ நாங்க தர்மபுரியிலிருந்து இங்க பத்மநாபபுரத்துக்கு மாற்றலாகி வந்திருந்தோம். அவ்வளவு கலெக்ஷன்ஸ்… காசெட்டே ஒரு 70-80, அப்புறம் சீடிக்கு மாறினப்பிறகு சீடி வாங்கினோம். அப்புறம் வேலைப்பளு கூடியபோது இசை கேட்பது கொஞ்சம் குறைந்தது. அடுக்களையில் வேலை பார்க்கும்போது பின்னால் ஓடிக்கொண்டிருக்கும். அதற்கென்றே உட்கார்ந்து கேட்க நேரமில்லாமல் போனது.

சமீபத்தில் ரொம்பவும் தீவிரமாக கேட்டது இந்த கொரோனா காலகட்டத்தில்தான். ஜெயன் வெண்முரசு முடித்தபோது பயங்கரமான வெறுமையான கொந்தளிப்பான ஒரு மனநிலைக்குப் போனேன். அப்போது மிகத்தீவிரமாக இசைக்குள் நுழைந்தேன். கர்னாட்டிக்கிலிருந்து ஹிந்துஸ்தானிக்கு போனேன். அப்போதுதான் கிஷோரி அமோன்கார் எல்லாம் கேட்டது.  படே குலாம் அலிகான், பண்டிட் வெங்கடேஷ் குமார்… அந்த ஜூலையிலிருந்து டிசம்பர் வரைக்கும். பித்து பிடிச்ச மாதிரி ஒரு ஆறு மாசம் கேட்டேன். அப்போது தான் எழுத்துக்கான உத்வேகமும் வந்தது. மரபிசையும் காவிரியும் எழுதினேன்.

கடந்த ஏப்ரல் மாதம் உங்கள் தம்பிஉங்கள் கட்டுரைகளில் சின்னப்பையனாக இடம்பெறும் லெனின் கண்ணன் இறந்துபோனார் என்று அறிகிறோம்அந்த பேரிழப்பின் பின்னணியில் இந்தக் கட்டுரைகள் இன்னும் கனம்கொள்கின்றன.

ஆம், என் தம்பி லெனின் கண்ணன் சமீபத்தில் மறைந்தான். அதை நான் கட்டுரைகளில் சேர்க்கவில்லை. ஏன் சேர்க்கவில்லை என்றால், நினைவுக்குறிப்புகள்ல பால்யகாலத்தத்தான எழுதறேன். தற்போது நடப்பதை அங்கே கொண்டு போய் வைக்கவேண்டாம் என்று நினைத்தேன். அதில வர்ர தம்பி சிரிச்சுட்டிருக்கற ஒரு பையன். பால் வடியுற முகத்தோட இருப்பான். யசோதை கட்டுரையில ஒரு கிரிட்டிக்கல் ஸ்டேட்ல போயிட்டு மீண்டு வருவான்ல? அப்பக்கூட இப்ப நடந்தத போய் அங்க வைக்கக்கூடாதுன்னு தோணிச்சு.

தம்பி இறந்ததுக்கு முன்னாலேயே முதல் கட்டுரையை எழுதிட்டேன். மரபிசையும் காவிரியும். மார்ச் 30ஆம் தேதி அவன் படிக்கட்டில் கீழே விழுந்தான். ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். நினைவு திரும்பாமலேயே ஏப்ரல் 8-ஆம் தேதி இறந்தான். கபாலம் அடிபட்டு ஹெமரேஜ் ஆயிடுச்சு. அந்த எட்டு நாளும் நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் மாறி மாறி வந்துட்டிருந்துச்சு. பொழச்சிருவான்னு வேண்டுனோம். எட்டாம் நாள் அவன் இறந்து போனான் என்று சொன்னதும் நாங்க நொறுங்கிப் போயிட்டோம். என் தம்பி அவன்.

காரியமெல்லாம் முடிச்சு ஏப்ரல் 21-22 தேதி போல் தான் ஊருக்கு வந்தேன். வீட்டில யாருமே சரியில்ல. அம்மா ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க. ஜெயன் குமரித்துறைவி எழுதி முடிச்ச வெறுமையில இருந்தார். அஜிக்கு கொரோனா, ஆசாரிபள்ளத்துல இருந்தான்.

ஏப்ரல் 23-24 வாக்கில் எனக்கு ஒரு நினைப்பு வந்தது. இல்ல, இந்த ஃபீல நான் பெருக்கிக்கக்கூடாது. இழப்பு இழப்புதான். ஆனால் அதுக்குள்ள போயிடக்கூடாது, அதிலிருந்து மீள்றது ரொம்ப கஷ்டமாயிடும்.

அப்போது ஜெயனுக்கு சுந்தர ராமசாமி சொன்னது நினைவுக்கு வந்தது. எனக்கு சொன்னது மாதிரி இருந்துச்சு. ஜெயன் அவங்க அம்மா-அப்பாவை இழந்த நாட்கள் எப்படி இருந்திருக்கும்ன்னு யோசிங்க. நின்னிட்டிருக்குற தரைத்தளமே இளகிக் கீழே போனமாதிரி இருக்குமில்ல? அப்போ சுந்தர ராமசாமி சொன்ன ஒரே விஷயம், நீங்க எழுதுங்க, கிரியேட்டிவா எழுதினா மட்டும்தான் இதிலெருந்து வெளிவர முடியும்.

சுந்தர ராமசாமி ஜெயனுக்கு சொன்னதைத்தான் ஜெயன் எனக்கு சொன்னார். நீ எதிலாவது முழுமூச்சா இன்வால்வ் ஆகணும். இல்லைன்னா இதிலெருந்து வெளிவர முடியாதுன்னு சொன்னார். நானே ஒரு நாள் ராத்திரி முழுக்க முழிச்சிருந்து யோசிச்சு பார்த்தேன். இந்த ஃபீலிங் பெருகிப்பெருகி வரும். துக்கத்த பெருக்கிக்குறதுல என்ன இருக்கு? ஒரு பெரிய இழப்புதான். அதுக்குள்ள நம்ம மைண்ட விட்ற கூடாதுன்னு தோணிச்சு.

ஏப்ரல்-25ஆம் தேதி வலைத்தளத்த ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்ட்ட சொல்லி டிசைன் பண்ணேன். ஏற்கனவே  எழுதிய கட்டுரைகள் ஒரு இரண்டு மூணு வாரம் வந்துச்சு. அப்போ நான் எனக்கே ஒரு கம்பல்ஷன் மாதிரி விதிச்சிகிட்டேன். ஒவ்வொரு வாரமும் ஒரு கட்டுரை கண்டிப்பா எழுதி பிரசுரிக்கணும்ன்னு.

அந்த கட்டுரைகள்ல உங்க சின்ன வயசு தம்பி ரொம்ப இயல்பா வந்தார்.

ஆமா, சின்ன சின்ன புரட்சிகள்லையே வந்திருவானே! உண்மையிலேயே அதெல்லாம் எழுதறப்ப இப்ப உள்ள தம்பி, அந்த இழப்பு, எதுவுமே எனக்குத் தெரியல. என் தம்பி ஒரு காலகட்டதுல உயிரோட எங்கெயோ இருக்கான். நான் அவன் கூட அங்க போய் பேசி விளையாடிக்கிட்டு இருக்கேன் அப்படீன்ற மாதிரி ஒரு ஃபீல் வருது. என் தம்பி பழைய லெனின் கண்ணன் மாதிரி என் கூட வரான், போறான் அப்படீங்கும்போது அந்த இழப்பை ஏதோ ஒரு வகையில் என் மனசு ஈடுகட்டிக்குதுன்னு தான் நினைக்கறேன். நான் அவனோட ஞாபகங்களையெல்லாம் அகழ்ந்தெடுத்து பயங்கரமா பற்றிக்கிட்டேன்னு தான் சொல்லணும். அந்தத்  தம்பிய நான் இன்னும் இன்னும் ஒளிமிகுந்தவனா பார்த்திக்கிட்டிருந்தேன். இந்த இறப்பே மறந்து போற அளவுக்கு.

ஆறு மாசம் இந்த எழுத்துல நான் என்ன தீவிரமா மூழ்கடிச்சிக்கிட்டேன் இல்ல? அது அந்த இறப்போட துயர கரைச்சிடிச்சு. இப்ப நினைச்சுக்கிட்டா துக்கம் இல்லாம இல்ல. ஆனால் புண் ஆறியிருக்கு. அது எழுத்துனாலத்தான். எழுத்த ஒரு healing process-ன்னு சொல்றாங்க. மனச கொந்தளிக்க வைக்குறதும் அதுதான். அதோட காயங்கள ஆத்துறதும் அமைதியாக்குறதும் அதுதான். ஒரே சமயம் இரண்டையும் பண்ணுதுன்னு எனக்குத் தோணுது. ஏதோ பெரிய எழுத்தாளர் மாதிரி generalize பண்ண நினைக்கல [சிரிக்கிறார்]. ஆனால் நான் அனுபவமா பாத்ததுல எனக்கு அதுதான் தோணுது.

நான் எழுதுறது மூலமா அவன் இறப்ப முழுசாவே மறக்கடிச்சிட்டேன். அது வேறென்னமோ. யாருக்கோ நிகழ்ந்ததுன்னு நான் நம்பிக்கிட்டேன். என் தம்பி அங்க இருக்கான். எட்டு பத்து வயசுலெருந்து விளையாடின தம்பி. அங்க, அத்தனை alive-ஆக, அத்தனை உயிர்ப்போட துடிப்போட,  இருக்கான்.

யசோதை எழுதுறபோது ரொம்ப உடைஞ்சு போனேன். அப்போ ரெண்டு நாள் நினைவில்லாம இருந்து திரும்ப வந்தானே. இப்ப எட்டு நாள் நினைவில்லாம அப்படியே போய்ச் சேர்ந்திட்டானே. இந்த நாப்பத்தஞ்சு வருஷம் வாழுறதுக்குத்தான் கடவுள் அப்ப உயிர்ப்பிச்சைக் கொடுத்தாரா. போதும்ன்னு நினைச்சுட்டாரா. இந்த வாட்டி ஒரேயடியா பறிச்சிக்கிட்டாரே. இப்படியெல்லாம் தோணி கீபோர்ட்ல்லலாம் கண்ணீர் சிந்தித்தான் யசோதை எழுதினேன். எழுதுற மனசுக்கும் அதை பின்னாலிருந்து கண்காணிக்குற மனசுக்கும் சுத்தமா தடையெல்லாம் அழிஞ்சு ஒரு மனநிலையில எழுதின கட்டுரை அது.

இத்தனைப்பெரிய இழப்பை எழுத்து வழியா கடந்திருக்கிங்கஎழுத்துங்கற செயல்பாடு அப்படி எதைக் கொடுக்குது?

தொடர்ந்து படைப்பூக்கத்தோட இருக்கிறதோட மகிழ்ச்சியே ரொம்ப தனித்துவமானது சுசித்ரா. அப்புறம் எழுதும்போது அந்த வயச, அந்த வாழ்க்கைய நான் திரும்ப வாழறேன். ஒன்னொண்ணா திறந்து திறந்து பார்க்கும்போது மனசு உள்ள உள்ள போகுது, பயங்கரமா. இதைத்தான் எழுத்தாளர்கள் ‘A raid into your subconscious’ – நினைவிலிக்குள் ஓர் ஊடுருவல் – என்று சொல்றாங்கன்னு நினைக்கிறேன். தீவிரமான ஒரு பயணம். எழுத்து மூலமாத்தான் அங்க போக முடியும்.

எழுதும் அந்த நேரத்துல போதப்பூர்வமான மனசக் கடந்து உள்ள எங்கியோ போயிடறோம். குளிக்கும்போது குளத்துக்குள்ள மெல்ல ஆழ்ந்து போவோமில்ல. அங்க ஆழத்துல தம் பிடிச்சு இருந்துட்டு வெளிய வருவோமில்ல. அந்த மாதிரி, நம்ம மனசு தன்னத்தானே கான்ஷியஸ் மைண்ட விலக்கி விலக்கி உள்ள போகுறப்ப, ஒரு கட்டத்துல சப்-கான்ஷியஸ் திறந்துக்குது. அதைத்தான் சொல்லிருக்காங்க. கிரியேட்டிவ் பிராசெஸ்ஸே அதுதான்னு பெரிய பெரிய எழுத்தாளர்கள்லாம் சொல்றாங்க. அதைத்தான் நானும் நம்புறேன்.

ஏன்னா, என் கான்ஷியஸ் மைண்டால ஆலத்தூரப்பத்தி இத்தனை நினைவுகளை கொண்டுவந்திருக்க முடியாது. ஆனால் எழுதும்போது அலை மாதிரி வேறு ஒரு உலகத்துக்குள்ள கொண்டு போகுது. அதுக்கு மேல அங்க நடக்குறத நம்மால புரிஞ்சுக்க முடியாது.

ஏதோ இத்துனூண்டு எழுதிட்டு இப்படி சொல்றேன்னு நினைக்காதீங்க. என் அனுபவம் இப்படித்தான் இருந்தது. கிரியேட்டிவா எழுதுறது ரொம்ப அற்புதமான, பரவசமான ஒரு விஷயம். கடவுளுக்கு பக்கத்துல போகுற இன்பம். எனக்கு அது கிடைச்சுது.

அடுத்து என்ன எழுதப்போறிங்க?

இப்ப ஒரு இடைவெளியிலத்தான் இருக்கேன். அடுத்து என்ன எழுதணும்னு கொஞ்சம் குழப்பமா இருக்கு. இசையைப் பற்றி எழுதணுமா, அல்லது சின்னச்சின்ன மொழிபெயர்ப்புகள் பண்ணலாமா, இப்படி. அடுத்த வருடம் ஒரு நாவல் தொடங்கலாம்ன்னு இருக்கேன்.

என்ன தீம்?

தீம் இன்னும் முடிவு பண்ணல, ஆனால் களம் கீழைத்தஞ்சைன்னு யோசிச்சு வச்சிருக்கேன். மரபிசையும் காவிரியும்ல வருதில்ல. எங்க பாட்டி ஊர். அதுதான் களம்.

எழுத்தாளருக்கு வயதில்லை. அவர் எழுதிய வயதுகளெல்லாம் அவர். அருண்மொழிநங்கையிடம் பேசப்பேச அவ்வப்போது எட்டிப்பார்க்கும் குட்டி அருணா நெகிழச்செய்கிறார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு படைப்பாளியாக பரிணமித்திருக்கும் அருண்மொழிநங்கையில், இளமையின் உற்சாகமும் புலன்விழிப்பும், ஒரு பழுத்த நிதானமான அனுபவ அறிதலும் ஒன்று சேர காணக்கிடைக்கிறது. அவர் நாவலை எதிர்நோக்குகிறோம்.

நேர்காணல் : சுசித்ரா

புகைப்படங்கள் : நன்றி ஸ்ருதி டிவி