அசோகம்

போன வருடத்தின் டைரியை புரட்டிக்கொண்டிருந்தேன். பிப்ரவரி 8, 2024, அன்று எழுதிய குறிப்பு கண்ணில் தென்பட்டது. ‘அசோக மரம் பூத்திருக்கிறது’ என்று எழுதியிருக்கிறேன்.

இன்று வளாக எல்லைகளில் நடப்படும் நெடிய அலங்கார மரத்தைத்தான் அசோகா என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. நீளமான, நெளிந்த விளிம்புகளுடைய இலைகள் கொண்ட மரம்.

ஆனால் செவ்வியல் பழமை கொண்ட அசோகமரம் இதுவல்ல. Saraca asoka என்று பெயருடைய அந்த மரம் மிக நளினமான தோற்றம் கொண்டது. அதன் அடிமரம் மெலிதானது. கிளைகள் மேலும் மெலிதானவை. அடர்பச்சை நிறத்தில் கீழ்வாக்கில் தொங்கும் இலைக்கொத்துக்கள் உடையவை. இளவேனிலில் மரம் பூக்கத் தொடங்கும்போது கொம்புகளிலிருந்தே மலர்க்கொழுந்துகள் கிளம்பும். ரத்தச்சிவப்பும் ஆரஞ்சும் இளம் மஞ்சளும் கலந்து இதழ்விரியும் பூக்குவை முழுமலர்வில் கொழுந்தெனவே தோன்றும். அஸ்தமனத்துக்கு சில கணங்களுக்கு முன்பு செஞ்சுடரென தீப்பிழம்பென உருண்டு திரளும் சூரியனைப்போல் ஒளிவீசும்.   

இப்போது நம் வீடு அமைந்துள்ள பெங்களூர் JNCASR என்ற அறிவியல் நிறுவன வளாகத்தை ஒரு குறுங்காடு போல பராமரித்து வருகிறார்கள். மருத மரங்கள், புங்கை மரங்கள் ஏறாளாம். கூடவே செண்பகம், நாகலிங்கம், மா, பலா வகைகள். ஆங்காங்கே சிறிய மூங்கில் தோட்டங்களும் உண்டு. ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவை அலங்கார விருட்சங்களும் பூச்செடிகளும் தான். அதன் பகுதியாக Saraca asoka மரங்களை சிறு தோப்புகளாக நட்டு பராமரிக்கிறார்கள். ஆனால் இந்தத் தொகுதியில் Saraca asoka தனித்துவமானது. பூமரம் தான் என்றாலும் அசோகம் அலங்கார மரம் மட்டுமல்ல. பண்பாட்டு ஆழம் கொண்ட அரிய விருட்சம். 

பழைய சம்ஸ்கிருத காவியங்களில் ஒரு நயம் மிக்கச் சடங்கு விவரிக்கப்படுகிறது. இளவேனிலின் தொடக்கத்தில் பூக்கும் பருவத்தை அடைந்தும் பூக்காமல் நிற்கும் மரங்களைப் பூக்கவைக்க ஓர் இளங்கன்னியை அழைத்து வருவார்கள். அதன் அடிமரத்தை அவள் தன் காலால் சிறிதாக உந்தி உதைக்கவேண்டும். அந்தத் தீண்டலுக்கு மரம் பூத்துவிடும் என்பது மரபு. நம் ஆலையங்களில் விரவிக்கிடக்கும் எண்ணற்ற சாலபஞ்சிகை சிலைகளுக்குப் பின்னால் உள்ளது இந்தக் கற்பனை தான். சாலம் என்று பெயர் இருந்தாலும் அது அசோகமரத்தையே குறிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். காவியத்திலும் சிற்பத்திலும் இந்த நிகழ்வு ஒரு படிமமென்றே கையாளப்படுகிறது. ஒரு கன்னிகையின் தொடுகைக்குக் கொழுந்தென வெடித்து மலரும் மரம். இது வளத்தின் குறியீடென்றே பொதுவாக புரிந்துகொள்ளப்படுகிறது. 

ஆனால் அம்மலர்களின் வடிவ மென்மையும் வண்ண ஆழமும் தன்னளவிலேயே பொருள் கொண்ட ஓர் இயற்கை நிகழ்வு என்றும் எனக்குத் தோன்றியதுண்டு. காற்றில் அசையும்போது அதன் வண்ணபேதத்தால் தானே ஒளி கமழ்வது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் அடுத்த நொடியே தான் ஒளி அல்ல, வண்ணம் மட்டும்தான் என்று அவ்வசைவே தன்னைக் காட்டிக்கொடுக்கிறது. ஒரு மென்சோகமென இவ்வசைவு உள்ளத்தில் பரவுவதை உணர்ந்திருக்கிறேன். மரபு அதற்கு போட்டிருக்கும் பெயரோ, அசோகம். நம் மரபில் உள்ள பல அரிய விஷயங்களைப்போல் இதுவும் ஓர் அரிய முரண் தான். An enigma. 

அசோகத்தின் அடியில் தான் புத்தரை மாயாதேவி ஜனித்தாள் என்ற தொன்மம் உள்ளது. அசோகம் சூழ்ந்த வனத்தில் தான் ஆதிகவி சீதையை அமரவைத்தான். அவன் எப்பேர்ப்பட்ட கவி என்பதை அசோகத்தைக் கண்ட பிறகே நான் உணர்ந்தேன்.

பெங்களூர் வந்த பிறகு தான் நான் அசோகத்தை முதன்முதலாகக் கண்டேன். என் படிப்பரையில் அமர்ந்தால் ஜன்னல் வழியாக சற்று தூரத்தில் ஒரு வரிசை மரங்களைக் காண முடியும். நாங்கள் 2023 நவம்பர் மாதம் வந்த போது மரம் மலர்ந்திருக்கவில்லை. ஆனால் 2024 ஜனவரியிலேயே மொட்டுகளைக் கண்டிருந்தேன். எப்போது பூக்கும் என்று எதிர்நோக்கியிருந்தேன். பிப்ரவரி 8 அன்று பூத்ததாக டைரியில் எழுதியிருக்கிறேன்.

*

எழுத்தாளர்கள் டைரி எழுத வேண்டும் என்று தன் ஆசிரியர் சுந்தர ராமசாமி கூறியதாக என் ஆசிரியர் ஜெயமோகன் பல முறை எடுத்துக் கூறியிருக்கிறார். ஆனால் அந்த அறிவுறையை சென்ற ஆண்டு தான் செயலாக்கத் தொடங்கினேன். அதுவும் மிகச்சிறிய அளவில். சென்ற வருட டைரியில் பல நாள் கட்டங்கள் காலியாக உள்ளன. ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் எழுதாமல் மேலும் பல கட்டங்கள் உள்ளன. ஆனாலும் என்னை பரிசீலித்துக்கொள்ள பல சுவாரஸ்யமான புள்ளிகளைக் காண்கிறேன். 

உதாரணம், பல குறிப்புகள் அன்று கண்ட ஓர் இயற்கை நிகழ்வைப்பற்றியாக உள்ளது. ‘இன்று அசோகம் பூத்தது’ என்று ஃபிப்ரவரியிலேயும், ‘இன்று கடம்பம் பூத்தது’ என்று ஜூன் மாதத்திலும், ‘பருந்துகள் திரும்பிவந்துவிட்டன’ என்று நவம்பரிலும் எழுதியிருக்கிறேன். இயற்கைக்குள், இயற்கையின் பகுதியாக இருந்திருக்கிறேன் என்ற உணர்வு சட்டென்று ஏற்பட்டது. அது பெரும் நிறைவாக உள்ளத்தை நிறைத்தது.

எழுத்து சார்ந்தும் பல தெளிவுகள் உருவாயின. முதல் விஷயம், எழுத்துக்கு எவ்வளவு மெனக்கடல் தேவைப்படுகிறது என்று தெரிந்தது. மற்றவர்களுக்கு எழுத்து சுலபமாக அமையும் வித்தையாக இருக்கலாம். ஆனால் எனக்கு மெனக்கடலுடனேயே நிகழ்கிறது. அந்த மெனக்கடலுக்கான அவகாசம் பதிவாகும்போது புரிகிறது. ‘ஆம், முயன்றுகொண்டு இருக்கிறேன், தொடர்ந்து, நேரத்தை விரயம் செய்யவில்லை’ –  இந்த உணர்வு தன்னம்பிக்கை கொடுக்கிறது என்று சொன்னால் எழுத்துக்கு வெளியே இருப்பவர்களுக்கு ஒருவேளை புரியாமல் இருக்கலாம். இலாபம் வராமல் மெனக்கடுவதில் என்ன இருக்கிறது என்று கேட்பார்கள். ஆனால் எழுத்து என்ன கோருகிறது என்பதை அறிந்தவர்கள், அதற்காக தொடர்ச்சியாக கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை ஒருவர் உணர்வதில் உள்ள ஊக்கத்தை புரிந்துகொள்வர். இசையில் தேர்ச்சியுடைய ஒரு நண்பர் கூறியது நினைவுக்கு வருகிறது. அவருக்கு மேடையில் பாடுவதை விட அன்றாட சாதகமே மேலும் நிறைவை அளிக்கிறது என்று சொன்னார். ‘மியூசிக் எவ்வளவு பெரிசுங்கற கான்ஷியஸ்னஸ் தனியா இருக்கறப்பத்தான் கிடைக்கிறது,’ என்றார். அத்தனைப் பெரிய ஒன்றின் பகுதியாக இருப்பதே நிறைவு தான். மகிழ்ச்சி தான்.

இரண்டாவது, பெரும்பாலும் நேரத்தை விரையமாக்கவில்லை என்ற உணர்வு வந்தது. அது ஒரு நிமிர்வை கொடுத்தது. தொலைக்காட்சி அநேகமாக பார்க்கவில்லை. சென்ற ஆண்டு தொலைக்காட்சி, தொடர்கள், படங்கள் பார்த்த அவகாசத்தை கணக்கிட்டால் மொத்தம் ஒன்றரை நாட்களுக்கு மேல் தேரவில்லை. குழந்தையுடனும் குடும்பத்துடனும் நேரம் செலவழித்திருக்கிறேன். வாரத்தில் மூன்று நாட்களாவது சிறிய ‘இயற்கை நடைகள்’ சென்றுள்ளோம். குழந்தைக்கு சிறிய அளவில் இசையும் கோயில்களையும் அறிமுகம் செய்திருக்கிறேன். 

மூன்றாவது, உண்மையிலேயே நேரம் எங்கே போகிறது என்ற துல்லியமான பார்வை கிடைத்தது. நான் விரும்பும் அளவுக்கான விரிவுடன் சென்ற ஆண்டு வாசிக்கவில்லை. தேவைக்கேற்பவே வாசித்தேன். அந்தக் குறை உள்ளது. இப்போது இயங்கிக்கொண்டிருக்கும் தளங்கள் பல்வேறு திசைகளில் என்னைச் சிதறடிக்கின்றன. ஆகவே ஒன்றில் மட்டும் குவிந்து இருக்கமுடியாமல் ஆனது. பணி, குடும்பம், குழந்தை என்று அனைவருக்கும் இருக்கும் வாழ்க்கைச்சுழலின் அழுத்தங்களையும், நுண்ணுணர்வுள்ளவர்களுக்கு சமயத்தில் வரும் மன அவஸ்தைகளையும் கவனித்துக் கையாள வேண்டியிருந்தது. 

ஆனால் அனைத்தையும் மீறி, பெரும்பாலான நேரம் மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது. மனம் பெரும்பாலும் விரிவுடனும், துல்லியத்துடனும் இருந்தது. உடல் ஆரோக்கியமாக இருந்தது. சிந்தனையும் கற்பனையும் இந்த ஓராண்டில் மேம்பட்டுள்ளதை உணர்கிறேன். என் திறமைகளையும் எனக்கு முன் இருக்கும் சவால்களையும் பிரித்தறிய முடிகிறது. கனவுகள் திறக்கத் தொடங்கிவிட்டன. இவை எல்லாமே வரம் தான்.

*

சென்ற ஆண்டு எழுத்து சம்பந்தமாக என்னென்ன செய்தேன்? 

ஜனவரி மாதத் தொடக்கத்தில் அஜிதனின் மருபூமி நாவல் வெளியீட்டில் பேசினேன். பாவண்ணன் அவர்களும் நண்பர்கள் தமிழ் பிரபா, அகரமுதல்வன் ஆகியோரும் உடனிருந்தனர். அன்று எல்லா உரைகளுமே நன்றாக அமைந்தன. அஜிதன் தன் நிறைவுரையில் Transmodernism பற்றிப் பேசினார். 

அதன் தூண்டுதலில் ஜனவரி மாதம் முழுவதும் transmodernism-ஐ பின் தொடர்ந்து வாசித்தேன். நண்பர் ஐஸ்வர்யா (மொழிபெயர்ப்பாளர், ஆங்கிலப் பேராசிரியர்) உடன் விவாதித்தேன். 

ஜனவரி மாதம் நண்பர் அணில் சர்வேபள்ளி தன்னுடைய ‘ஹர்ஷனீயம்’ என்ற podcast-ல் என்னை பேட்டிக் கண்டார். அணிலின் தாய்மொழி தெலுங்கு. ஹைத்ராபாதில் வசிக்கிறார். என் மொழியாக்கத்தில் ஏழாம் உலகம் நாவலை வாசித்து அந்நாவலால் பெரிதும் கவரப்பட்டார். ஆகவே என்னை பேட்டி எடுத்தார். பிறகு ஜெயமோகனையும் பேட்டி எடுத்தார் — அது ஒரு கிளாசிக். தொடர்ந்து ஓராண்டில் உலகெங்கிலுமிருந்து நூறு மொழிபெயர்ப்பாளர்களை வாசித்துப் பேட்டி எடுத்து பகிர்ந்தார். ஏழாம் உலகம் நாவலை ஆங்கிலம் வழியாக தெலுங்குக்கு மொழியாக்கம் செய்துள்ளார். அதோ லோகம் என்ற பெயரில் இவ்வருடம் வெளியாகவுள்ளது.

ஜனவரியில் தான் லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் ‘அக்னிசாட்சி’ நாவலையும் வாசித்தேன். ஆங்கில மொழியாக்கத்தில். அதன் பிறகு சிற்சில பகுதிகளாக எழுத்துக்கூட்டி மலையாளத்தில். அக்னிசாட்சியை கச்சிதமான அமைப்புக்கொண்ட நாவல் என்று சொல்லிவிடமுடியாது. ‘ஒரு பெருங்கட்டடத்தின் வரைபடத் துண்டுகள்’ என்று என் முதல் அபிப்பிராயத்தை புத்தகத்தின் முதல் பக்கத்தில் கிறுக்கியுள்ளேன். ஆனால் அந்த கட்டடத்தின் கனவு என்னை ஆட்கொண்டது. அந்த பாதிப்பில் நிறைய வாசித்தேன். எழுதினேன்.

ஜனவரி இறுதி வாரத்தில் கிளம்பி ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவுக்குச் சென்றேன், மொழிபெயர்ப்பாளராக. ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ நாவலை மொழியாக்கம் செய்ததால் கிடைத்த வாய்ப்பு.  

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் ஆடம்பரத்தை கேள்வித்தான் பட்டிருந்தேன். பார்வையாளராகக்கூட சென்றதில்லை. முதல் முறையே பேசுபவராகச் சென்றதால் அதன் உள்வட்டங்களை அருகிருந்துக் காண வாய்ப்புக் கிடைத்தது. 

சற்று திகைப்பாக இருந்தது. செயற்கையானச் சூழல் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் அதுவும் ஒரு எதிர்வினை உணர்வு தான். உண்மையில் அங்கே வந்திருந்தவர்கள் அனைவருமே வாசகர்கள். நல்லெண்ணம் கொண்டவர்கள். ஆனால் அவர்கள் அங்கே பறைசாற்றிய அறிவு எல்லைக்குட்பட்டது, மேம்போக்கானது. அறிவுஜீவி எப்படி அறியாமையுடன் சமரசம் செய்துகொள்ள முடியும் என்ற வியப்பும் திகைப்பும் தோன்றியது. மேலும் மேலும் என்று சென்றுகொண்டே இருக்கும் தாகம் அங்கே காணக்கிடைக்கவில்லை. எல்லோருக்கும் அவரவர்கள் ஆசனங்கள் போதுமானதாக இருந்தது.

இந்தச் சூழலில் ஆசிரியர் ஜெயமோகனுடன் உடனிருந்தது மிகப்பெரிய மன எழுச்சியை அளித்தது. பொய்யும் பகட்டும் கலக்காத அறிவு கொடுக்கும் நிதானத்தை அவருடைய  புன்னகையில் கண்டுகொண்டே இருந்தேன். அவருடைய பார்வை விரிவு அனைத்தையும் ஊடுருவி நிதமனாகத், துல்லியமாக, வகுத்தது. என் திகைப்பு குறைந்து வருவதை உணர்ந்தேன். ஜெயமோகனுடன் உடனிருப்பது பார்வைக்கான, சிந்தனைக்கான நேரடிப் பயிற்சியே தான். அவருடைய விரிவும் நிதானமும் நம்மை ஆட்கொள்கின்றன. நாம் அவ்வகையில் நம் சிந்தனைகளை நிகழ்த்தத் தொடங்குகிறோம். அந்த ஐந்து நாட்களில் என் இடம் என்ன, என் எதிர்காலம் என்ன, அந்தப் பாதையில் என் போதாமைகள் என்னென்ன, அவற்றைக் கடக்க என்ன செய்ய வேண்டும் என்ற புரிதல்கள் தெளிவுற்றன என்றால் மிகை அல்ல. 

மேலும், ஜெ கனவுகளால் பொங்கிக்கொண்டே இருப்பவர். ஓர் ஆசிரியராக ஜெயமோகனின் மிகச்சிறந்த கூர் என்ன? நம் மனதில் தளிரென்று கூட இன்னும் அரும்பாத கனவுகளின் முளைகளை எழுப்பிவிடும் அவருடைய ஆற்றல் தான் அது என்று இன்று  சொல்வேன். நண்பர்கள் சொன்னதுண்டு. ஒவ்வொருவரிலும் ஒவ்வொன்றை தீண்டியிருக்கிறார். அதை எவ்வாறு கண்டுகொண்டார் என்பது மர்மம் தான். அதை முற்றிலும் உத்தேசித்துத், திட்டம்போட்டு, போதப்பூர்வமாக செய்கிறார் என்று எனக்குத் தோன்றவில்லை. 

இந்த நாட்களில் ‘மொழி’ இணையதளம் சார்ந்த என் கனவுகள் முளை கண்டன. பிரியம்வதாவும் நானும் விவாதித்துக்கொண்டிருந்தோம். ஆனால் ஜெயமோகனிடம் பேசியபோது எங்கள் செயல்திட்டத்தின் சாத்தியங்களை மேலும் விரிவுபடுத்திக்கூறினார்; மேலும் கூராக்கினார். 

அவற்றைக் கனவுகள் என்றே விவரித்தார். கனவுகள் உலகையே விரிவுகொள்ளச் செய்கின்றன. அதன் முன் நாம் சிறியவர்களாகின்றோம். ஆனால் சிறியவற்றுக்குறிய சுருசுருப்பும் வேகமும் நம்மில் அமைந்துவிடுகிறது. பெருமாள் முன் தொண்டரென. அந்த விவாதங்களின் அடிப்படையில் எங்கள் திட்டங்களையும் தளத்தையும் வடிவமைத்தோம். இன்று வெளிப்பாடு கண்டுள்ளது.

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் ‘The Abyss’ நூலைப்பற்றி எழுத்தாளர் அஞ்சும் ஹஸன் ஜெயமோகனையும் அதன் மொழிபெயர்ப்பாளரான என்னையும் பேட்டிக்கண்டார். நான் மொழி அமைப்பின் செயல்பாடுகளைப் பற்றி மற்றோரு அரங்கில் பேசினேன். சாகித்ய அகாதமியின் Indian Literature பத்திரிக்கையின் தொகுப்பாளர் சுகிர்தா பால், தொகுப்பாளர் மினி கிருஷ்ணன், மற்றும் மொழிபெயர்ப்பாளர் டெய்சி ராக்வெல் ஆகியோர் உடனிருந்தனர். ஆர். சிவப்ரியா தொகுத்தார். 

ஜெய்ப்பூரில் கிடைத்த மற்றொரு அபாரமான அனுபவம் பண்டித் விஷ்வ மோகன் பட் அவர்களின் வீணை இசை. மோகன்வீணா என்ற slide guitar தான் அவர் வாத்தியம். அவரே உருவாக்கியது. குளிர்ந்த இரவில் அபாரமான இசை. ஜெய்ப்பூரில் காவல் துறை உயரதிகாரியாக பணி வகிக்கும் ஜெயமோகனின் நண்பர் மொழிபெயர்ப்பாளர் செங்கதிர் அவர்கள் ஆமேர் கோட்டையையும் ஹவா மெகலையும் காண ஏற்பாடு செய்து உடன் வந்தார். அதுவும் இனிய நாளாக அமைந்தது. 

ஃபிப்ரவரி மாதம் அஜிதனுடன் transmodernism பற்றி ஒரு இணைய உரையாடலில் கலந்துகொண்டேன். இச்சிந்தனைகள் இன்றைய சூழலில் தாக்கம் ஏற்படுத்துவதைக் காண முடிகிறது. இதைப் பற்றி அஜிதன் ஒரு புத்தகத்தை தற்போது தயாரித்துக் கொண்டிருப்பதாக சொன்னார். அதே மாதம் அஜிதன் – தன்யா திருமணம் கோவையில் நடந்தது. ஆசிரியர் இல்லத்து மங்கலம். நண்பர்கள் சூழ இணக்கமான சூழலாக அமைந்தது. 

மார்ச் மாதம் கலவையாக வாசித்தேன். என்னுடைய ‘மதுரம்’ சிறுகதை, ஜனவரியில் எழுதியது, அகழ் இதழில் பிரசுரமானது. மார்ச் மாத இறுதியில் ‘ஒரு தலைமுறையின் விதி’ எழுதத் தொடங்கினேன். அதில் உள்ள செய்திகளை பல வருடக் காலமாக வாசித்து நினைவில் இருந்ததால் மேற்படி படிக்க வேண்டியிருக்கவில்லை. மொழியை, எழுத்தின் அமைப்பை சீரமைக்க மட்டும் கவனம் தேவைப்பட்டது.

ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் டெல்லி செல்ல திட்டம் இருந்தது. ஜக்கர்நாட் பதிப்பகத்தின் ஆசிரியர் சிக்கி சர்கார் அவர்களுடன் ஒரு சந்திப்பு. ஜெயமோகன், பிரியம்வதா, எங்கள் முகவர் கனிஷ்கா குப்தா ஆகியோருடன் நானும் அவர்களை சந்திப்பதாக இருந்தது. மொழியாக்கங்களை ஆங்கிலத்தில் பதிப்பிக்கும் செயல்பாடின் பகுதியாக இத்தகைய சந்திப்புகளுக்கும் நேரம் அமைக்க வேண்டியுள்ளது. 

ஆனால் அந்த வாரம் என் மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனது. மருத்துவமனையில் சேர்க்க வேண்டி வந்தது. டெல்லி செல்லவில்லை. மருத்துவமனையில் இருந்தபடி நேரம் கிடைத்தபோது எழுதினேன். அந்த மாதம் வேறென்ன செய்தேன் என்று டைரியில் குறிப்பிடவில்லை. ஆனால் எழுதினேன். இப்போது நினைத்துப்பார்க்கும் போது ஆஸ்பத்திரியின் நோய்ச்சூழல் நினைவில்லை. அங்கே இங்கும் அங்கும் அமர்ந்து எழுதிய இடங்கள் துல்லியமாக நினைவிருக்கின்றன. 

ஏப்ரல் மாத இறுதியில் இந்திய தத்துவம் மூன்றால் நிலை வகுப்பில் பங்கேற்க வெள்ளிமலை சென்றேன்.

மே முதல் வாரம் ‘ஒரு தலைமுறையின் விதி’ பிரசுரமானது. நல்ல வரவேற்புப் பெற்றது. முதல்முறை எனக்கு என் எழுத்து சார்ந்து ஒரு பெருமிதம் உண்டானது. சொல்ல ஒன்று உள்ளது, அதைச் சொல்வேன் என்ற தன்னம்பிக்கை உருவானது. 

அந்த கட்டுரைக்கு ஓர் இரண்டாம் பாகம் உள்ளதென்று அறிந்தேன். ஆனால் அதன் வடிவம் அமையவில்லை. மே மாதம் சற்று எழுதிப் பார்த்தேன். கைகூடவில்லை. அந்த மாதம் டாண்டேயின் டிவைன் காமெடி காவியத்தை வாசித்தேன். அதைப்பற்றி வெள்ளிமலை காவிய முகாமில் பேசி நேரம் அதிகமானபடியால் திட்டும் வாங்கினேன். வடிவப்பிரக்ஞை பற்றி மறக்கமுடியாத பாடமாக அந்த அனுபவம் அமைந்தது.

மே மாதம் பிரியம்வதாவும் நானும் பெங்களூரில் சந்தித்தோம். சங்கம் ஹவுஸ் என்ற இலக்கிய அமைப்புக்குச் சொந்தமான ‘தி ஜாமுன்’ என்ற இல்லத்தில் எழுத்தாளர்களை விடுதி போல் தங்க அனுமதிக்கிறார்கள். இனிமையான இடம். மரங்கள் சூழ்ந்தது. நல்ல நூலகம் உள்ளது. உணவும் அளிக்கப்பட்டது. அங்கே இரண்டு நாட்கள் தங்கி நாங்கள் மொழி அமைப்புக்கான திட்டங்களை விவாதித்தோம். 

ஜூன் மாதம் கடம்பம் பூக்கும் பருவம். தன் அமெரிக்கப் பதிப்பாளரைச் சந்திக்க ஜெயமோகன் பெங்களூரு வந்திருந்தார். எங்கள் முகவர் கனிஷ்காவும் வந்திருந்தார். ஜூன் மாதத்திலேயே வெள்ளிமலையில் மற்றொரு தத்துவ வகுப்பில் கலந்துகொண்டேன். சாங்கியம், யோகம் சார்ந்து. முறையான விவாதத்துக்கான முதற்கட்டப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. பட்டாம்பூச்சிகள் சூழ அருமையாக இருந்தது வெள்ளிமலையின் சூழல்.

ஜூன் தொடக்கத்தில் ஒரு வரலாற்று நாவலுக்கான உந்துதல் தோன்ற சற்று எழுதிப் பார்த்தேன். வாசிக்கத் தேவை இருந்தது தெரிந்தது. ஜூன், ஜூலை தொடர்ச்சியாக அது சார்ந்து வாசித்தேன். 

ஜூலை மாதம் மூன்று நாட்கள் பாலக்காடு ஶ்ரீகிருஷ்ணாபுரத்தில் தங்கி மலையாள இதழாளர், விமர்சகர் கே.சி.நாராயணன் அவர்களை மொழி அமைப்புக்காக ஒரு நேர்காணல் கண்டோம். பிரியம்வதா, நான், கூடவே நண்பர் அழகிய மணவாளன். வெளியே தங்க ஏற்பாடுகள் செய்திருந்தோம். ஆனால் முதல் நாள் உரையாடல் முடிவிலேயே கே.சி. அவர் குடும்ப வீட்டிலேயே எங்களைத் தங்கிக்கொள்ள அழைத்தார். அது அபாரமான ஓர் அனுபவமாக அமைந்தது.  

அது இருநூறாண்டு பழமை கொண்ட பழைய நம்பூதிரி இல்லத்தின் ஒரு பகுதி. கிழியேடம் என்று பெயர். முன்பகுதி முழுவதும் மரத்தால் ஆனது. நாங்கள் பெரும்பாலும் அமர்ந்திருந்த பூமுகத்துக்கு முன்னால் ஒரு பழங்காலத்துக் குளம். இல்லம் முழுவதும் நிறைந்திருந்த பழைய உடைசல்கள், வெண்கலப் பாத்திரங்கள். கரையான் அரித்துக் கிடந்த மர ஏணி போன்ற படியில் ஏறி மேற்தளத்துக்குச் சென்றால் பழைய அலமாரிகளுக்குள் ரிக் வேதத்தின் பிரதிகள். இல்லத்துக்குப் பின்னால் சற்று தூரத்தில் பெண்களுக்கான குளம். வரலாற்றுக்குள் ஓர் அடி வைத்தது போல் இருந்தது. 

அழகிய மணவாளன் ஒரு கேரளப்பிரியர். Keralophile. கேரள இலக்கியம், வரலாறு, நிகழ்த்துக்கலை மரபுகள் ஆகியவற்றில் அவருக்கு ஆர்வம் உண்டு. கதகளிப்பிராந்தும். கே.சி. அவர்களுக்குக் கதகளியில் பெரிய பாண்டித்யம் உண்டு. இந்த நாட்களில் இவ்விருவருடன் கல்யாண சௌகந்திகம் கதகளியைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. என் முதல் நேர்காட்சி அனுபவம். அந்த மூன்று நாட்களும் ஆழமும் தீவிரமும் கொண்ட அற்புதமான அனுபவமாக உள்ளத்தில் நிலைக்கின்றன.

ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் பெங்களூர் புக் பிரம்மா அமைப்பு ஜெயமோகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கவிருப்பதாகத் தெரிவித்தனர். அதை ஒட்டி அந்த விழாவில் அவரோடு ஓர் உரையாடல் நிகழ்த்தினேன். 

இப்படிப்பட்ட உரையாடல்களை நிகழ்த்துவது பெரிய கற்றல் அனுபவமாக அமைகின்றன. இத்தகைய உரையாடல்களுக்குக் கேள்விகள் தயாரிப்பது எப்படி என்பதை ஒட்டி சில புரிதல்களை இவ்வாண்டு அடைந்துள்ளேன். கேள்விகள் எழுத்தாளரைப் பேசத் தூண்டுவதாக, Open-ended-ஆக அமைந்திருந்தால் நல்லது. கேள்விகளுக்குள் ஒரு தொடர்ச்சி அமைந்தாலும் நல்லது.  சில நேரம் எழுத்தாளரின் பதிலிலிருந்தே புதிய கேள்விகள் எழலாம். 

அதன் வழியாக அந்த அமர்வே ஒரு வடிவத்துக்கு வந்தால் மேலும் நல்லது. ஒரு சிந்தனைத் தொடர்ச்சியை பின் தொடர்வது போல் ஆகிவிடும். ஜெயமோகனிடம் ஆசிரியரென்று உரையாடிக் கற்றவற்றின் நீட்சியாகவே இந்த உரையாடல்கள் அமைவது எனக்கு மேலும் உவகையாக உள்ளது.

புக் பிரம்மா நிகழ்வில் என் ஆதர்சம் பண்டிட் வெங்கடேஷ் குமாரின் இசையைக் கேட்கும் அனுபவம் வாய்த்தது. வாழ்க்கையில் முதன்முதலாக யட்சகானம் காணும் அனுபவமும் பெற்றேன். சிவானந்த ஹெக்டேவின் குழு. குருகு இதழில் அவர்களுடனான நெர்காணலை வாசித்திருந்தாலும் அரங்கில் நிகழ்த்தியவர்கள் அவர்கள் தான் என்னும் புள்ளியை பிறகு தான் இணைத்தேன். ராமாயணத்தில் சூர்ப்பனகைப் படலம். செவ்வியலும் ஃபோக்கும் பாதிக்குப்பாதி கலந்த கலைவடிவம். சுநீல் கிருஷ்ணன் அந்த நிகழ்வைப் பற்றி நல்ல அவதானிப்புகளுடன் ஒரு கட்டுரை எழுதினார். 

ஆகஸ்ட் மாதம் தூரன் விழாவில் ஒரு நாள் மட்டுமே கலந்துகொள்ள முடிந்தது. சுவடியியல் வகுப்பை தவரவிட்டதில் வருத்தம். என் தோழி இந்துமதி கனடாவிலிருந்து வந்திருந்தாள். அந்த நாள் முழுவதையும் அவளுடன் செலவழித்தத் திருப்தியுடன் திரும்பினேன்.

செப்டம்பார் மாதம் குடும்பத்துடன் கர்னாடகத்தின் குடகு பகுதியில் ஒரு சுற்றுலா. விடுதியாக்கப்பட்ட பழைய பிரிட்டிஷ் பாணி காட்டு பங்களாவில் தங்கினோம். அதன் உயரமான மரக்கூரைகளும் மஞ்சள் வெளிச்சமிட்ட உள்ளரைகளும் சுவற்றில் தொங்கிய துப்பாக்கிகளும் பழைய புகைப்படங்களும் வாசித்த பேய்க்கதைகளையெல்லாம் நினைவுக்குக் கொண்டு வந்தன. 

குழந்தையை அந்த வீடு பாதித்தது தெரிந்தது. ‘வீடு இவ்வோ பெரிசா இருக்கு, நா இவ்வோ குட்டியா இருக்கேன்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தான். அவன் தோட்டத்திலேயே ஓடிக்கொண்டிருந்தான். மத்திகோடு யானைகள் சரணாலயத்தில் காலையும் மாலையும் யானைகளை பார்த்தோம். நம்டிரோலிங் திபெத்திய மடாலயத்துக்குச் சென்று உக்கிரமான பௌத்தக் கடவுள்களின் சுவர் ஓவியங்களைக் கண்டோம். காவிரியைப் பார்த்தோம். ஒரு நாள் குடகுமலைகளுக்குள் சென்று வயநாட்டில் உள்ள திருநெல்லி ஆலயத்தை தரிசித்துவிட்டு வந்தோம். நீல மலைகள் சூழ அழகான, பழைய ஆயலம். 

செப்டம்பர் மாதம் மொழி அமைப்பு ஆண்டுதோறும் நடத்தும் மொழி பரிசுப் போட்டிக்கு அனுப்பப்பட்டக் கதைகள் கையில் கிடைத்தன. 120 கதைகளை வாசிக்க வேண்டும். அதனுடன் சர்வதேச மொழியாக்க நாளை ஒட்டி சில நிகழ்வுகளில் பேச அழைப்பு வந்தது. ஐஸ்வரியாவின் கல்லூரியில் ஒரு வகுப்பு எடுத்தேன். பெங்களூர் கதே இன்ஸ்டிட்யூட்டில் ஒரு கலந்துரையாடலில் பேசினேன். கன்னட எழுத்தாளர் வசுதேந்திரா, ஜெர்மானிய மொழியிலிருந்து கன்னடத்துக்கு மொழியாக்கம் செய்யும் ஹர்ஷா ஆகியோர் பங்கேற்றனர். இந்து பத்திரிக்கைக்காக பிரியம்வதாவும் நானும் இணைந்து ஒரு கட்டுரை எழுதினோம்.

இம்மாதம் மொழியாக்கப் பதிப்பு சார்ந்த சில அலைக்கழிப்புகளும் நிகழ்ந்தன. சென்ற ஆண்டு நேரம் விரயமானது இப்படிப்பட்ட அல்லல்களால் தான். ஆனால் அனைத்தும் அனுபவங்கள். ஒன்றைக் கடந்த பின் அது எளிமையாகிறது என்பது இந்த ஆண்டு முழுவதும் எனக்கு திரும்பத் திரும்ப கிடைத்துக்கொண்டிருந்த பாடம்.

அக்டோபர் மாதம் எல்லாவற்றையும் ஓரம்கட்டி வைத்து ஜெயமோகனின் ‘குமரித்துறைவி’ நாவலின் மொழியாக்கத்தை முடிக்க முற்பட்டேன். அந்த மாதம் முழுவதும் அதிலேயே சென்றது. அக்டோபரில் மூன்று நாட்கள் குருஜி சௌந்தர் வெள்ளிமலையில் நடத்திய யோக முகாமில் கலந்து கொண்டேன். அங்கே கற்ற பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். என் மன அமைப்பிலும் நாள் ஒழுங்கிலும் மிகப்பெரிய மாற்றத்தை இந்தப் பயிற்சிகள் கொண்டு வருவதைக் காண்கிறேன். என் மனத்தையும் கவனத்தையும் மேலும் கூர்மையாகக் கையாள முடிகிறது. அக்டோபர் இறுதியில் ஜெயமொகனின் ‘பிரதமன்’ சிறுகதை என் மொழியாக்கத்தில் South Parade என்ற சிற்றிதழில் பிரசுரமானது. ‘The Abyss’ அமெரிக்காவின் ALTA நிறுவனத்தின் First Translation Prize-ன் இறுதிப்பட்டியலுக்குத் தேர்வானது. அதை ஒட்டி இதழாளர் சிந்தன் மோடி என்னிடம் நடத்திய உரையாடல் ஹிந்துஸ்தான் டைம்ஸில் வெளியானது.

அக்டோபர் மாதம் நண்பர் ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் மொழியாக்கம் தொடர்பாக ஓர் உரையாடலுக்காக என்னை ஈரோடுக்கு  அழைத்திருந்தார். ‘மொழியாக்கமும் படைப்பாக்கமும்’ என்ற தலைப்பில் பேசினேன். முப்பது நண்பர்களுக்கு மேல் வந்திருந்தனர். அந்த உரை சிறப்பாக அமைந்தது. என் சிந்தனை பக்குவமடைவதை பற்றிய  நம்பிக்கைத் தோன்றியது. மிக நிறைவான நாள். 

நவம்பர் மாதத்தில் நண்பர் ஜெயக்குமார் வெள்ளிமலையில் நடத்தும் ஆலையக்கலை வகுப்பில் கலந்துகொண்டேன். அதனைத் தொடர்ந்து ஐந்தாம் இந்திய தத்துவ வகுப்பில் கலந்துகொண்டேன். நடுவே ஒரு வாரம் வெள்ளிமலையில் தனியாகத் தங்கி குமரித்துறைவி நாவலின் மொழியாக்கத்தை முடித்தேன். தீவிரமாக செயல்படும்போது தனிமை என்னை சற்றும் தொந்தரவுசெய்யவில்லை என்பது அந்த அனுபவத்தின் முக்கியமான பாடம்.

வெள்ளிமலை வகுப்புகளைப் பற்றி இத்தருணத்தில் ஒன்று சொல்ல வேண்டும். முழுமையறிவு என்று பெயரிடப்பட்டுள்ள இவ்வகுப்புகள் இன்று இந்திய அளவில் மிகப் படைப்பூக்கம் கொண்ட பாடதிட்டமுடைய ஒரு குட்டிப் பல்கலைக்கழகமெனச் செயல்படுகிறது. அனைத்திலும் கலந்துகொள்ள பெருவிருப்பு இருந்தாலும் இப்போதைக்கு நேரமும் சூழலும் இல்லை. நான் இந்த ஓராண்டில் மூன்று இந்தியத் தத்துவ வகுப்புகளிலும், யோக வகுப்பிலும் ஆலையக்கலை வகுப்பிலும் மட்டுமே கலந்துகொண்டேன். ஆனால் இவற்றின் வழியாக என் இலக்கிய வாசிப்பும் எழுத்தும் சிந்தனையும், பல படி மேம்பாட்டுள்ளதைக் காண்கிறேன். ஏன், அன்றாட வாழ்க்கைப் போக்கே மேம்பட்டுள்ளது.  நான் இசை கேட்கும் விதம் மேம்பட்டுள்ளது. என் இயற்கை ரசனை மேம்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் கற்றவை ஒன்றை ஒன்று நிரப்பிக்கொண்டு உருவாக்கும் பெருஞ்சித்திரத்துக்காகத்தான் என் வாழ்நாள் முழுவதும் நான் தேடிக்கொண்டிருந்தேன்.  என் வரையில் இந்த வகுப்புகள் ஒரு பொக்கிஷம். 

டிசம்பார் மாதம் பெங்களூர் இலக்கிய விழாவில் மீண்டும் ஜெயமோகனுடன் ஓர் உரையாடல். சலிப்பே இல்லாமல் இவற்றை நிகழ்த்த முடிவதற்குக் காரணம் ஜெயமோகன் தான். ஒவ்வொரு முறையும் புத்தம்புதியதாக ஒன்று நிகழ்கிறது. இந்த நிகழ்வுக்கு சைதன்யா மற்றும் கிருபா வந்திருந்தார்கள். அவர்களுக்கு ஆங்கிலத்தில் பெண்ணெழுத்து சார்ந்து ஒரு பதிப்பகம் தொடங்கும் எண்ணம் இருக்கிறது. அது சார்ந்து பேசினோம். 

டிசம்பம் 16 என் முப்பத்தி ஏழாவது பிறந்த நாள். அன்று ஜெயமோகனை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. தத்துவ வகுப்பு சமயத்தில் பெண் எழுத்துக்களைப்பற்றி ஒரு விவாதம் நிகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக, நீலி இதழைத் தொடர்ந்து, பெண்களின் படைப்புகளை விவாதிக்க ஓர் இதழ் ஆரம்பித்தால்  என்ன என்ற எண்ணம் தோன்றியது. நவம்பர், டிசம்பர் இரண்டு மாதங்களும் பெண்ணெழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து ஓர் இதழுக்கான முன் வரைவை திட்டமிட்டேன். சுரபி என்ற பெயர் அமைந்தது. அந்த எண்ணத்தை ஜெயமோகனிடம் பகிர்ந்துகொண்டேன். 

டிசம்பதில் குடும்பத்துடன் கோலாரில் சில ஆலையங்களைக் காண சிறு பயணம் சென்றோம். சோழர்களுக்குச் சமகாலத்தவரான நோளம்பர்களின் கட்டடக்கலை. நந்திமலை போகநந்தீஸ்வரர் ஆலையம் நாங்கள் அடிக்காடி செல்லும் ஒன்று. கோலாரில் சோமேஸ்வரர் ஆலயத்துக்கும் கோலாரம்மன் கோயிலுக்கும் சென்றோம். 

டிசம்பரில் மதுரைக்குச் சென்றேன். அம்மா மருதாணி வைத்தார்கள். பிடித்த பண்டங்களைச் செய்தார்கள். குழந்தையுடன் கொஞ்சல், விளையாட்டு. இரண்டே நாள். இந்த முறை மீனாட்சியைக்கூட பார்க்க அமையவில்லை. கோவை விஷ்ணுபுரம் விழாவுக்குச் சென்றேன். திரும்ப மதுரைக்கு. குடும்பத்துடன் தென் தமிழகத்தில் குலதெய்வக் கோயில் பயணம். திருவட்டாறு, நாகர்கோவில், கன்யாகுமரி, நாங்குநேரி. குழந்தைக்குப் பழங்கோயில்கள் மேல் தானாகவே ஒரு பிரியம் உருவாவதைக் காண்கிறேன்.  

அங்கிருந்து மீண்டும் வெள்ளிமலை. பிரியம்வதாவும் நானும் தலா ஒரு மொழியாக்க நூலின் வரைவை முடித்திருந்தோம். புத்தாண்டை ஒட்டி அவற்றைப் பற்றி ஜெயமோகனுடன் ஒரு விவாதம். 2024-ல் தொடர்ச்சியாக ஜெயமொகனை சந்தித்துக்கொண்டே இருந்ததைக் காண்கிறேன். வெள்ளிமலை வகுப்புகள், இலக்கிய விழாக்கள், மொழியாக்கம் சார்ந்த சந்திப்புகள் என்று  மொத்தமாக கணக்கிட்டால் ஏறத்தாழ முப்பது நாட்கள். இந்த ஒரு வருடத்தில் ஒரு மாத காலம் ஆசிரியரின் அருகாமையில் இருந்தது நல்லூழ் தான். 

*

இந்த புத்தாண்டில் ஒரு முடிவெடுத்தேன். இவ்வாண்டு முடிந்த அளவு பயணங்களை குறைக்க வேண்டும். மேலும் தீவிரமாக எழுத வேண்டும். புனைவு எழுதவேண்டும். நேரத்தை மேலும் கச்சிதமாகக் கையாளவேண்டும், என்று. குமரித்துறைவி மொழியாக்கத்தை முடித்துக் கொடுக்கும் பணி சற்று மிச்சமுள்ளது. மொழி அமைப்பின் வலைத்தளம் ஒரு வருட கால உழைப்புக்குப் பின் நிறைவடைந்தது. 2024 மொழி பரிசின் முடிவுகள் வெளியாகின. அவற்றின் பிரசுர வேலைகள். 

முதலாம் ஆண்டு மொழி பரிசில் தேர்வான கதைகளின் தொகுப்பு ஹைதரபாத் புக் டிரஸ்ட் – சவுத் சைட் புக்ஸ் வழியாக வெளியாகவுள்ளது. அதற்கான ஆயுத்தங்கள். நடுவே தொடர்ச்சியாக எழுதிக்கொண்டும் மொழியாக்கம் செய்துகொண்டும் இருக்கிறேன். சுரபிக்கான ஆயுத்தங்கள் ஒரு பக்கம். இவற்றுக்கு வெளியே வேலைமாற்றத்துக்கான முயற்சிகள். 

யோசித்தால் வாழ்க்கையை மிகப் பரபரப்பாக ஆக்கிக்கொண்டுவிட்டேன். ஆனால் என்னைக் கலையின் அருங்கை சூழ்ந்துள்ளதை ஒவ்வொரு கணமும் உணர்கிறேன். அந்த விரிவு என்னை நிதானப் படுத்துகிறது. 

ஒவ்வொரு நாளும் யோகப்பயிற்சிகள் செய்கிறேன். இயற்கை நடைகள் செல்கிறேன். இப்போது பெங்களூரில் இளவேனிற்காலம். எங்கும் மலர்களை மட்டும் ஏந்தி நிற்கும் மரங்கள் தென்படுகின்றன. 

மீண்டும் பூத்திருக்கிறது அசோகம். என் படிப்பரைக்கு வெளியே, தூரத்தில் வரிசையாக, குருதியும் நெருப்பும் ஒளியும் சூடியதுபோல். அவற்றைப் பார்க்கிறேன். தீராமல் புகைப்படம் எடுக்கிறேன். திரையில் நிறம் சொட்டுகிறது. எத்தனை பாவனைகள். எத்தனைத் தீவிரம். எத்தனை ஆழம். எத்தனை அழகு. ஒளியும் வண்ணமும் அன்றி என்ன பொருளுள்ளது இவற்றுக்கெல்லாம்?

ஆனால் நிதானமாகப் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் அவற்றை நின்று நோக்கும் அளவுக்கு நிதானம் இருக்கிறது மனதில். 

*

Leave a comment