படைப்பில் ஒருமை – ரவீந்திரனாத் தாகூர் [மொழியாக்கம்] – 1

குருதேவர் ரவீந்திரநாத் தாகூர்

[1]

அறிமுகம்

“நான் இங்கே இருக்கிறேன்” என்பது மிக எளிமையான அறிதல். அதை அறிய எனக்கு எந்த விஷேஷப் பிரயத்தனமும் செய்தாகவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ‘நான்’ என்ற இந்த ‘என்னை’ உருவாக்கும் எண்ணிற்கடங்காத பௌதீக, வேதியிய, உயிரிய, உளவியக் கூறுகளை நான் பகுப்பாய்வு செய்ய முற்பட்டால், அந்தத் தேடல் எல்லையில்லாத ஒன்றாக ஆகிவிடும். நான் என்பது எனக்குள் நான் உணரும், வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஒரு மர்மநிலை. அலகிலாததன் எளிமை அதில் உள்ளது. விரிந்து விரிந்து உடைந்து உடைந்து செல்லும், என்னை உருவாக்கி வைத்திருக்கும், இந்தப் பெருக்குகளை, ஒற்றைப்புள்ளியாக்கி நிறுத்துகிறது. 

என்னில் உள்ள இந்த ஒன்று – ஏகம் – பலவாகிப் பிளந்து பிரிந்து நிற்கும் இந்தப் பிரபஞ்சத்தை அறிகிறது. ஆனால் அது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளில் உள்ள ஒருமையை, ஏகத்தைத்தான் அறிகிறது. அது இந்த அறையை அறிகிறதென்றால், இந்த அறை அதற்கு ஏகமான, ஒருமையான ஓர் இருப்பு. அறை என்பது பலபொருட்களால் அமைக்கப்பட்டதென்றாலும், அப்பொருட்கள் ஒன்றுடன் ஒன்று முரண்படுகிறதென்றாலும், அறை என்பது ஒற்றை அறிதல் தான். என்னில் உள்ள ஏகம் ஒரு மரத்தை அறிகிறதென்றால், அது அறிவது ஒருமையைத்தான் – மரமாக வெளிப்படும் ஒருமை. 

எனக்குள் இருக்கும் ஒருமை, ஏகம், படைப்பூக்கமானது. படைப்பதென்பது அதற்கு ஒரு பொழுதுபோக்கு. லீலை. அதன்வழியே அது ஒருமையென்ற லட்சியத்துக்கு விதவிதமாக வடிவம் கொடுத்து விளையாடுகிறது. சித்திரங்களிலும் கவிதைகளிலும் இசையிலும் அது ஆனந்தத்தைக் கண்டடைகிறது. உள்ளுறையும் ஒருமைக்கு பூரணமான, பிரிதொன்றில்லாத வடிவத்தை கண்டடைவதன் வழியாக அது அந்த ஆனந்தத்தை அடைகிறது.

என்னில் உள்ள இந்த ஏகம், அதன் தற்புரிதலுக்காக அறிவில் ஒருமையை நாடுகிறது. அதன் குதூகலத்திற்காக ஒருமையின் சித்திரவடிவங்களை படைத்து விளையாடுகிறது. மட்டுமல்லாமல், அதன் நிறைவுக்காக பிரேமையின் ஐக்கியத்தை வேண்டுகிறது. அது தன்னை இன்னொருவரில் தேடுகிறது. இது ஓர் உண்மை. இதை நிரூபணமாக்கும் பேருண்மைகளின் ஊடகங்கள் நம்மிடத்தில் இல்லாதிருப்பின், இப்படிச்சொல்வது சற்று அபத்தமாகக் கூடப் படலாம். பிரேமத்தில் நாம் கண்டடையும் ஆனந்தம் பரமமானது, ஏனென்றால் அதுதான் பரமசத்தியமும் கூட. ஆகவேதான் உபனிடதங்களில் “அத்வைதம் அனந்தம்” என்று கூறப்பட்டுள்ளது. ஒருமை அலகில்லாதது. அவை “அத்வைதம் ஆனந்தம்” என்றும் கூறுகின்றன. ஒருமை ஆனந்தமானது, பிரேமைமயமானது.

அலகிலாத அந்த ஒன்றிற்கு பழுதில்லாத வடிவம் கொடுக்க, எண்ணிலாத இந்த பலவற்றில் இணைவையும் இசைவையும் உருவாக்குவதும், அலகிலாத பிரேமையென்ற ஆனந்தவெளியை, தன்னிருப்பைத் தியாகம் செய்து ஏய்துவதும் தான் தனிமனிதனாக, சமூகமாக, நாம் இலட்சியமென்று எடுத்துக்கொண்டு செய்யக்கூடியது.

1 thought on “படைப்பில் ஒருமை – ரவீந்திரனாத் தாகூர் [மொழியாக்கம்] – 1

  1. Pingback: படைப்பொருமை – ரவீந்திரநாத் தாகூர் [மொழியாக்கம்] – 2 | ஆகாசமிட்டாய்

Comments are closed.