காலச்சதுக்கம் – [1]

ஏப்ரல் 6-ஆம் தேதி திங்கட்கிழமை காலை பதினோறு மணிக்கு நியூ ஜெர்சியில் அமைந்த கோர்ட்யார்ட் மேரியட் விடுதியிலிருந்து நியூ யார்க் ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்லும் வழியில் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த நண்பர் பழனி ஜோதி அந்தக் கதையைச் சொன்னார்.

“பத்தடி உயரம். ஈசியா மடிச்சு சூட்கேஸ்ல போட்டுட்டு வந்திட்டாரு. காம்பிரமைஸே இல்லாம அந்தந்த அரங்குக்கு பின்னால விரிச்சு மாட்டியிருக்கணும்ன்னு கண்டிப்பா சொல்லிட்டாரு.

“நியூ யார்க் அகாடமி ஆஃப் மெடிசின்ல நம்ம தொடக்க நிகழ்ச்சி நடந்த நூலக அறை பழைய பாணியிலானது. பேனர் மாட்ட எந்த வசதியும் இல்ல. அரங்குக்குப் பின்னால பதினாலாம் நூற்றாண்டு டாபெஸ்டரிய தொங்க விட்டுருக்காங்க. அதக்கு எந்தச் சேதமும் வந்திரக்கூடாது. பின்னு குத்த முடியாது. ஆணி அடிக்க முடியாது. கயிறு கட்ட முடியாது…

“கடைசியா மெட்டல் ஃபிரேம்ல கட்டி நிக்க வைச்சுடலாம் ஐடியா வர அப்படிச் செஞ்சோம். தொடக்க நிகழ்வு முடிஞ்ச்தும் மேல ஏறி புதுமைப்பித்தன் பேனரை ஒவ்வொரு முடிச்சா கழற்றி க.நா.சு பேனரை மாத்தி மாட்ட ரொம்ப நேரம் ஆயிடுச்சு. ஆனால் அடுத்த முறையே தரையில விரிச்சு ஃபிரேமோட கம்பத்த அது மேல வச்சு இரண்டு பக்கமும் கட்டி அப்படியே நிக்க வைக்கலாம்னு கத்துக்கிட்டோம். ஏறிக் கட்டணும்னா தான் பெரிய வேலை. ஏதோ பெரிசா பன்றோம்ன்னு தோணிடுது. தரையில விரிச்சதும் எல்லாமே ஈசியாய்டுச்சு”

அந்தக் காட்சியை நான் மனதில் செய்து பார்த்தேன். நான்கு பேனர்கள். ஒவ்வொன்றும் பத்துக்கு இருபது. தரையில் விரிக்கப்பட்ட பேனரின் விளிம்புகளை இரண்டிரண்டு அங்குல இடைவெளிகளில் கம்பத்துடன் சேர்த்துக் கட்ட வேண்டிய பணி.

கட்டும்போது, க.நா.சுவையும், சு.ரா.வையும் புதுமைப்பித்தனையும் அசோகமித்திரனையும், அவர்களுடைய மாபெரும் ஓவியத் தோற்றத்தில், முகத்துக்கு முகமாக, கண்நோக்கிக் கண் பார்க்கும் அனுபவம் அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? எழுத்தாளரும் அவர்கள் நினைவில் விழா எடுக்கும் வாசகரும் அந்த நோக்கு வழியாக எவ்வளவு அருகே வந்திருப்பார்கள் அப்போது?

காலத்திலிருந்து எழுந்து வந்தவர்கள். எழுத்தாளர்கள் என்பதால் காலத்தை உருவாக்கியவர்களும் கூட. அவர்களை அவர்களால் உருவாக்கப்பட்ட வாசகர்களும் வழிதோன்றல்களும் காலத்தின் முன் நிமிர்த்தி நிறுத்தவேண்டும் என்று விரும்பி நிகழ்த்திய பணி அது. எந்த விழுமியங்களுக்காகவே வாழ்ந்து செயலாற்றி மறைந்தார்களோ அவற்றின் அடையாளமாகத்தான் அம்முகங்களை ஏந்திய பத்தடிப் பதாகைகளை அவ்விழுமியங்களின் வழி வந்தவர்கள் அங்கே நிறுத்தினார்கள்.

கார் கண்ணாடிக்கு அப்பால் அமெரிக்க ஃபிரீவேயின் வேகத்தில் மங்கலான தீற்றகாகப் பறந்துகொண்டிருந்த நகர்க்காட்சியைப் பார்த்தேன். ஆம், அந்தப் பதாகைகள் ஒவ்வொன்றும் ஒரு விழுமியம். ஒவ்வொன்றும் ஒரு காலச்சுரங்கம். அல்லது காலச்சதுக்கம். அந்த அவையில் காலமென்றே நின்றன அவை. காலத்தைக் கடத்தும், அதே சமயம் காலத்தை மீறி நிற்கும், சின்னமாக. காலமென்பதே நமக்கு இல்லையென்பதுபோல் கடந்துவரும் விழுமியங்களை அல்லவா நாம் ‘மரபு’ என்கிறோம்?

*

நியூ யார்க் வாழும் தமிழ் இலக்கிய விழாவின் நிகழ்வுகளைப் பற்றி இதற்குள் பலரும் பலவிதமாகப் பதிவுசெய்துவிட்டனர். அரங்குகள், உரையாடல்கள், நண்பர் அணுக்கங்கள், பயணத்தின் புதுவித அனுபவங்கள் என்று ஒரு விழாக்கோலத்தின் பூரிப்போடு பதிவுகள் வாசிக்கக்கிடைக்கின்றன. நண்பர்கள் லக்‌ஷ்மி சரவணகுமார், சுநீல் கிருஷ்ணன், ரம்யா, பாவண்ணன் சார் ஆகியோரின் பதிவுகளை கட்டுரை வடிவில் வாசிக்கலாம்.

எனக்கும் அப்படிச்சொல்லச் சில கதைகள் உள்ளன. ஆனால் அவ்வனுபவங்களையெல்லாம் மீறி இந்த நிகழ்வு முழுவதும் என்னை ஆட்கொண்ட உணர்வை ‘காலம்’ என்று தான் சொல்ல வேண்டும். கண்முன்னே விரியும் காலம். கண்டுகொண்டிருக்கும்போதே காலுக்கடியில் கடந்துசெல்லும் காலம். குளிர்ந்த அதிகாலைகளில் எங்கள் விடுதிக்குப் பின்புறம் விரிந்த ஹட்சன் ஆற்றங்கரையின் தன்னந்தனியாக நின்றேன். வானும் நிலமும் இரும்பாக விடியும் நியூ யார்க் அதிகாலை. இரும்பை உருக்கியது போல் ஒழுகிச்செல்லும் நதி. தலைக்கு மேலும் எதிர்புறமும் விடியலின் முதல்வெளிச்சத்தில் உருவம்பெற்று தோன்றிவந்த மாபெரும் இரும்புக் கட்டடங்கள். இரும்பால் சூழப்பட்டு நின்றேன். காலம். எத்தனை உறுதியுடன் நிற்கிறதோ, அத்தனை உறுதியுடன் ஒன்றையும் ஏற்காமல் ஒழுகிக் கடந்து செல்லும் மாயநதி.

விமானத்தில் மும்பை திரும்பிக்கொண்டிருந்த போது நண்பர் தமிழ் பிரபா, ‘இந்த விழா நாட்கள் முழுவதும் நீங்கள் மிகவும் தனித்திருந்ததை கவனித்தேன், ஏன்?’ என்று கேட்டார். அப்போது கூற முடியவில்லை. ஆனால் காரணம் இதுதான். ஒவ்வொன்றையும் நடைமுறையில் பார்க்கும்போதே இரும்பு போல் உறுதியான காலமென்றும் தோன்றிக்கொண்டிருந்தது. ‘இதோ நிகழ்கிறது காலம்,’ என்ற உணர்வு விமானம் நியூ யார்க்கில் இறங்கிய நொடியிலேயே பற்றிக்கொண்டது. இந்த இரட்டைப்பார்வை வரமா சாபமா தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து ஆற்றல், தவிப்பு, அச்சம், அச்சமின்மை, வியப்பு, வெறுமை என்று வெவ்வேறு உணர்வுகளால் மாறிமாறி ஆட்கொள்ளப்பட்டேன். அந்த உணர்வுகளே ஒன்று இன்னொன்றை சமன்செய்தபடி இருந்ததால் ஒட்டுமொத்தமாக ஒரு விலக்கமுணர்வே வாய்த்தது.

இந்த விழா நாட்களில் நான் விரும்பிய அளவுக்கு அனைவரிடமும் ஆழ்ந்து உரையாடினேன் என்று கூற முடியாது. ஆனால் வந்திருந்த அனைவரையும் கண்தீராவண்ணம் பார்த்துக்கொண்டே இருந்தேன். வீடுதிரும்பி மூன்று வாரமானப் பிறகு கண்மூடி எண்ணிப்பார்த்தால் இப்போதும் முகங்களும் குதூகலமான உடல்மொழிகளாகவுமே விழா ஒட்டுமொத்தமாகத் திரும்பி வருகிறது.

புனைவெழுத்தில் strange-making என்று ஓர் உத்தி உண்டல்லவா? தெரிந்தவற்றை அன்னியர் பார்ப்பதுபோல் தூரத்தை பாவனை செய்து வர்ணிப்பது. அன்னியருக்கு நம்முடைய தேய்ந்துபோன பார்வை இல்லை என்பதால் அன்றாடம் பார்க்கும் விஷயம் கூட பொருள்மயமாக புத்தம்புதியதாக காட்சியளிக்கிறது. புதுநோக்கே அப்பொருளின் சாரத்தை மேலும் துல்லியமாக எழுந்துவரச் செய்கிறது. நியூயார்க விழாவில் விருந்தினர்களாக அழைக்கப்பட்ட தமிழ் எழுத்தாளர்களைக் கண்டபோது அந்த உணர்வு ஏற்பட்டது.

அத்தனை முகங்கள். அத்தனை உருவத் தோற்றங்கள். ஆடைகம்பீரம். வாசிப்பு வழியாகவும் உரையாடல் வழியாகவும் நன்கறிந்தவர்கள் என்றாலும் ஒவ்வொருவரும் புதிய நாடு, புதிய கலாச்சாரச் சூழலில் முற்றிலும் புதிய ஒரு முகமாக, குரலாக அறிமுகமானார்கள். மேடையில் மூன்று கேள்விகள் ஐந்து நிமிடம் வீதம் மொத்தம் பதினைந்து நிமிடங்களில் தங்களை வெளிப்படுத்தவேண்டிய நிர்பந்தம் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டது. அந்த அவகாசத்தில் ஒரு படைப்பாளியுடன் நீண்ட நேர்முகம் நிகழ சாத்தியம் இல்லை. அவர் தன்னை ஒரு தரப்பாக சாராம்சப்படுத்தி முன்வைக்கவே இயலும்.

அதை அனைவரும் மிகச்சிறப்பாக செய்தார்கள். வெளியாகிக்கொண்டிருக்கும் காணொலிகளில் பார்க்கலம். ஓர் எழுத்தாளர் முன்வைத்தத் தரப்பின் கருத்துகளுடன் அவர் குரல், ஆடை, உடற்மொழி, முகபாவனை அனைத்தும் இணைந்து, ரத்தினம் போல செறிவும் காத்திரமும் ஒளிக்கூர்மையும் கொண்ட வெளிப்பாடாக நிகழ்ந்தது. இத்தரப்புகளெல்லாமே நவீன தமிழ் இலக்கியம் என்ற மரபின் இன்றைய முகங்கள். பத்தடிப் பதாகைகளில் தோன்றிய ஆளுமைகளின் மகத்தான உருவங்களுக்கு நிகராகவே அரங்கில் தோன்றிய உருவங்கள் முழுமைகொண்டன என்று சொல்வது மிகைவார்த்தை அல்ல – ஓர் எழுத்தாளன் கருத்தும் உருவுமாகத் தன் வாசகன் முன் தோன்றும்போது எப்போதும் நிகழ்வது தான் அது. முன்னோடிகளின் முகங்களுக்கடியில் அமர்ந்து உரையாற்றிய எழுத்தாளுமைகளின் முகத்தீவிரத்தை பல அரங்குகளில் புகைப்படம் எடுத்துப் பகிர்ந்திருந்தார்கள் நண்பர்கள். அவ்வுணர்வு என்னுடைய தனிப்பட்ட மனப்பதிவாக மட்டும் இருக்கவில்லை.

நியூயார்க் நகரின் மையத்தில் முதன்மையான கூடுகைமன்றத்தில் விழா நிகழவிருந்ததால் அனைவரும் semi-formal உடைகளில் வரவேண்டும் என்று விழா அமைப்பாளர்கள் மிகக்கராராக தெரிவித்திருந்தார்கள். அதற்கு அவரவர் அலைந்து ஷூ வாங்கி பழைய கல்யாணக் கோட்டுகளை தூசித்தட்டி புதிய சட்டை, கோட்டு, டிரெஸ் எடுத்து பிளௌஸ் தைத்து வந்த கதைகளே ஒரு பெரிய கொண்டாட்டப் படலம். ஆனால் விழாவின் முதல் நாள் விடுதியின் வாசலில் பேருந்தில் ஏறக் காத்திருந்தபோது சாம்பல்நிறத்தில் கோடும் மென்தீற்றலுமான ஒரு கனவைப்போல் ஒரே நொடியில் ஐந்தாறு உருவங்கள் கடந்து படியில் ஏறிச் சென்றன. காலை வெளிச்சம். செர்ரி பிளாசம் மரங்கள் இளஞ்சிவப்பில் மலர்கள் மட்டுமேயாக பூத்திருந்தன. மனம்பொங்க என்னுடன் இருந்த அழகுநிலாவிடம் திரும்பி, ‘நம்ம போயட்ஸ், மேடம்!’ என்றேன். என் பரவசத்தை அவரும் அறிந்தார். புன்னகைத்தார். சொல்லப்போனால் நாள் முழுவதும் அந்தப் புன்னகையை நாங்கள் இருவரும் பார்க்கும்போதெல்லாம் பரிமாரிக்கொண்டே இருந்தோம். அப்படி பலநூறு புன்னகைகளுக்கு மத்தியில் தான் இந்த விழா நிகழ்ந்தது.

இத்தருணத்தில் ‘இதென்ன அறிவியக்கவாதிகளை உருவ வழிபாடு செய்வது,’ அல்லது ‘தமிழ் விழாவுக்கு எதற்கு கோட்டு’ போன்ற கேள்விகளை கேட்பவர்களிடம் ‘ஓகே, எஞ்சாய் யுர் புளிப்புமிட்டாய்’ என்று சொல்வதைத்தவிர வேறுவழியில்லை. இது நவீன தமிழ் இலக்கிய நிகழ்வு தான். இலக்கியமும் கருத்தும் தான் மையம். சமரசமில்லை. ஆனால் இது விழாவும் கூட. மானுடத்தின் கொண்டாட்டம். கவிதையும் புனைவும் பாட்டும் களியும் மனிதனாகி வரும் தருணத்தின் கொண்டாட்டம்.

நம் கவிஞர்களும் எழுத்தாளர்களும் எப்போதும்போல கோடுபோட்ட சட்டையும் சுடிதாரும் அணிந்திருந்தாலும் எந்தக் குறையும் இருந்திருக்காது. ஆனால் வழக்கத்திற்கு மாறான ஆடையில் முன்புசொன்ன ‘அன்னியமாக்கம்’ செயல்படுவது தான் ஒவ்வொருவரும் மேலும் தீவிரமாக, சாராம்சமாக வெளிப்படக் காரணம் என்று தோன்றுகிறது. கவிஞனில் இல்லாத ஒழுங்கும் நேர்த்தியும் கவிதையில் உள்ளது. கவிஞன் அந்தரங்கமாக எத்தனை கொந்தளிப்பானவனாக இருந்தாலும் தன் கவிதையில் தன்னளவிலான முழுமைக்கே முயல்கிறான். ஆகவே ஒரு கவிஞன் அழகாகக் கத்திரிக்கப்பட்டக் கோடுகளாலான மென்மையான சாம்பல் நிறத்தில் நேர்த்தியான கோட்டு அணிந்து வரும் போது நாம் ரசிப்பது அந்த ஆடையை அல்ல. அவன் ஒவ்வொரு கவிதையிலும் முயற்சிக்கும் முழுமையை. அவன் அவனுக்கே தெரியாமல் அணிந்து வருவது அவன் கவிதையைத்தான்.

ஆனால் அன்னியமாக்கத்தின் இன்னொரு முகமும் உள்ளது. தன்மதிப்புக்கொண்ட எந்த படைப்பாளியும் நிறுவனரீதியான நிர்பந்தங்களுக்கு எதிராக ‘ரிபெல்’ செய்யவே முற்படுவான். அந்த நிர்பந்தத்தின் எல்லைக்குள் தன்னை வெளிப்படுத்த அவன் மேற்கொள்ளும் முயற்சி மிக முக்கியமானது. அன்னியத்தில் அன்னியம் என்று தோன்றும் அந்த அம்சம் அவன் அவனை தக்கவைத்துக்கொள்ளும் இடம். ‘ரிபெல்’ என்னும்போது எதிர்க்கவேண்டுமே என்பதற்காக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதிர்வினையாற்றுவது இரண்டாம் நிலை எதிர்ப்பு. தட்டையானது. படைப்பூக்கமற்றது. எந்த நிர்பந்தத்திலும் தன்னை வெளிப்படுத்த ஒரு புதிய சாத்தியத்தைக் கண்டடைவதே படைப்பாக்கத்தின் மூலப்பாடம்.

இந்த விஷயத்தை நம் எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பாணியில் மேற்கொண்ட விதம் அவர்கள் யார் என்று ஒரே பார்வையில் வெளிப்படுத்தியது. தமிழ்பிரபாவின் அட்டகாசமான ஆடைத்தேர்வைப் பற்றி பலரும் எழுதிவிட்டார்கள். தன்னை அமெரிக்காவின் கருப்பின கலாச்சாரத்துடன் அவர் அடையாளப்படுத்தியது ஒரு வலுவான அறிவிப்பு. கவிஞர் வெய்யில் தன்னுடைய நேர்த்தியான சூட்டுடன் வெண்ணிற ஸ்னீக்கர் அணிந்ததும் அவரை யார் என்று வெளிப்படுத்தியது. இரண்டாம் நாள் சுநீல் கிருஷ்ணன் நவீன ஓவியம் போன்ற ஒரு வண்ணக்கொப்பளிப்பை — அது பூப்போட்ட சட்டையா, பூனைப் போட்டச் சட்டையா என்று தெரியவில்லை — அணிந்திருந்தார். ஒரே சமயம் அமெரிக்க நிறுவனமாக்கலையும் காந்தியக் கட்டுப்பாடையும் எதிர்க்கும் புனைவெழுத்தாளரின் ஆழ்மனத் தேர்வா என்று நினைத்துக்கொண்டேன். சந்திரா தன் பேச்சில் தன்னை ‘பெண் எழுத்தாளர்’ என்று அடையாளப்படுத்துவதை மறுத்தார். ஆனால் அவர் அதை இளஞ்சிவப்பு நிற பிளேசரும் பூட்ஸும் அணிந்து சொன்னது மேலும் ஒரு செய்தியாக தொனித்தது. ஆடையை ஒரு ‘காஸ்ட்யூம்’ போல் மிகநேர்த்தியாக அணிந்து அதை ஓர் அபத்தநாடகமாக்கி அதற்குள்ளிலிருந்து இரு மடங்கு தாங்களாக வெளிப்பட்ட எழுத்தாளர்களில் யுவன் சந்திரசேகருக்கும் காலம் செல்வத்துக்கும் முதல் இடம். இந்த ‘ரிபெல்’ வெளிப்பாடு அவர்கள் யார் என்று அறிவித்துக்கொண்டே இருந்தது.

மேலும், ஓர் எழுத்தாளர் தமிழில் பேசவும் ஆங்கிலத்தில் பேசவும் மேற்கொண்ட தேர்வும் அதே போல் முக்கியமானதாகப் பட்டது. இது ஆங்கில வெளிப்பாடு சார்ந்த விஷயமல்ல என்றே எண்ணுகிறேன். அமெரிக்கா எல்லா வித ஆங்கிலமும் பேசப்படும் நாடு; அதிலும் ஓர் இலக்கிய மேடை மொழியை ‘சரியாகப்’ பயன்படுத்தும் களமே அல்ல. ஆகவே இந்தத் தேர்வு மொழிசார்ந்த ஒன்றாக இருக்கவில்லை. ஓர் எழுத்தாளர் தன் சாராசத்தை வடிவமைத்து முன்வைக்கும் ஒரு வடிவத்தேர்வாகவே விளங்கியது.

இலக்கிய அரங்குகளே ஒரு அழகான வடிவத்துக்குள் நிறுத்தி அமைக்கப்பட்டன. அரங்கில் கேட்கப்பட்டக் கேள்விகளும் ஓர் எழுத்தாளரின் மிகக்கூர்மையான முகத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. கேள்விகளை தயாரித்தவர்களுக்கு தனித்துவமான பாராட்டை வழங்க வேண்டும். தனித்தனியாக ஒவ்வொரு படைப்பாளியிடம் கேட்கப்பட்ட கேள்விகளை எடுத்துக்கொண்டால் ஓர் இசைப்பாடலின் நேர்த்தி அதில் தெரிந்தது. மூன்று கேள்விகளின் முடிவில் அந்த படைப்பாளி பற்றிய முழுமையான சித்திரம் ஒன்று மனதில் தங்கிவிடும்படி அமைந்திருந்தன. சில கேள்விகள் ஓர் அறைகூவல் போலவும் தோன்றின — பெரும்பாலான அரங்குகளில் படைப்பாளிகள் அக்கேள்விகளை தங்களுக்கே பிரத்யேகமான விதத்தில் எதிர்கொள்வதன் வழியாக தங்களை வலுவாக முன்வைத்தார்கள். [examples]. பல அரங்குகள் ஒரு மேடைநிகழ்வின் சுவாரஸ்யம் கொண்டிருந்தன. கேள்விகளை கேட்டு அரங்குகளை வழிநடத்திய இரண்டாம் தலைமுறை குழந்தைகளும் இந்த வடிவாக்கத்துக்கேற்ப தங்களை தயார் படுத்திக்கொண்டு வந்திருந்ததே மேடையை முழுமைகொள்ளச் செய்தது.

*

இலக்கிய நிகழ்வைப் பற்றி எழுதும்போது ஆடைக்கும் வெளிப்பாடுக்கும் ஏன் இத்தைனை முக்கியத்துவம் தந்து ஒரு நினைவுக்குறிப்பு எழுதப்படுகிறது என்று வாசகர் யோசிக்கலாம். ஏனென்றால் இவர்கள் படைப்பாளிகள் என்பது தான் அதற்கு பதில். ஒரு படைப்பாளி எழுதும்போது அவன் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே விஷயம் வடிவம் மட்டும் தான். தொடர்ச்சியாக வடிவத்தை சீர்படுத்துவது மட்டுமே கலைஞன் கையில் உள்ளது. போதமாகவும், அபோதமாகவும் அவன் கற்றவை அங்கே நிக்ழ்கிறது. சிறந்த வெளிப்பாட்டில் வடிவமே செய்தியாகவும் உருப்பெறுகிறது. வடிவமே சொல்கிறது. வடிவம் சொல்லாததை மறைக்கிறது, மறைப்பதைச் சொல்கிறது. நியூயார்க் விழாவின் நிர்பந்தங்களால் எழுத்தாளர்களின் மொழிவடிவம் எப்படியோ அவர்களுடைய புறவடிவத்திலும் பேச்சுவடிவத்திலும் பிரதிபலித்த நிகழ்வு கைகூடியது. ஒரு பார்வையில் மொழியின் புறவடிவங்களாக எழுத்தாளர்கள் தென்பட்ட அறிய நிகழ்வையே பதிவெசெய்ய விரும்புகிறேன்.

ஏனென்றால் நவீன தமிழ் எழுத்தாளனுக்கு ஒரு பிரத்யேகமான சிக்கல் உள்ளது. அது ஒருவகையில் வரமும் சாதகமும் தான், ஆனால் அவன் கையாளவேண்டிய சிக்கலும் கூட. அவன் வாழும் மொழிப்பண்டாடு ஒன்றின் வழித்தோன்றல் என்பது தான் அது. நாம் வாழும் தமிழ் பண்பாட்டில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். நாம் இன்று பேசும் மொழியில் சங்க காலத்தின், புராண காலத்தின், பௌத்த, ஜைன, காப்பிய காலத்தின், பக்தி காலகட்டத்தின் தாக்கம் உள்ளது. ஆனால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொழியின் வடிவம் — அதன் தாளம் — புத்தொளிகாலத்துக்குப் பின்னால் உலகமெங்கும் உருவான ஒன்று. ஆம், சாம்பல் நிறக் கேட்டுகள் போல நேர்த்தியாகவும் மென்மையாகவும் தைக்கப்பட்ட ஒரு மொழி. ஆனால் அதை அணிந்திருப்பவன் தமிழ்மனம் படைத்தவன். தமிழ்வாழ்க்கையை வாழ்பவன். அவன் அந்த மொழியை தனக்கேற்ப வடிவமைத்துக்கொள்ளும் நிர்பந்தத்தில் இருக்கிறான்.

சட்டையும் கோட்டையும் தனக்கேற்றார்மாதிரி அணிவதுபோல் அந்த மொழியை படைப்பாளி தன் இயல்புக்கேற்ப கையாளப் பழகிக்கொள்கிறான். தன் தனித்தன்மைகளை வெளிக்காட்ட முயல்கிறான். உண்மையில் நவீன இலக்கியவாதி எந்த மொழியில் எழுதினாலும் அவன் நவீன இலக்கியத்தின் உலகளாவிய மொழியில் தான் எழுதிக்கொண்டிருக்கிறான் என்று இலக்கியமறிந்த வாசகரிடம் சொல்லவேண்டியதில்லை. எப்படி மேம்போக்கான குறிப்புமொழியின் வேறுபாடுகளைத் தாண்டி ஶ்ரீனிவாச ராமானுஜத்தின் கணக்கு கேபிரிட்ஜ் பேராசிரியர் ஜி.எச்.ஹார்டிக்குப் புரிவதில் எந்த சிக்கலும் இருக்கவில்லையோ அப்படித்தான் தமிழ் எழுத்தாளனின் அசல் வெளிப்பாட்டைப் புரிந்து கொள்வதில் வேற்றுமொழி இணைக்கவிஞனுக்கும் எந்தச் சிக்கலும் இருக்கப்போவதில்லை — அவன் கவனித்துக் கற்றுக்கொள்ளும் மனதுடன் வாசித்தான் என்றால். நமக்கு அந்த சிக்கல் இல்லாதது தான் அதற்குச் சான்று.

தமிழ் இலக்கியவாதி கோட்டும் டிரெஸ்ஸும் அணியும் போது அது அன்னியமாகவும் இருக்கிறது; அவனுக்கே உரிய பிரத்யேக வெளிப்பாடாகவும் இருக்கிறது. அந்த ஆடையிடம் அவன் உரையாடுகிறான்; அவனிடமும் அந்த ஆடை உரையாடுகிறது. தமிழ் இலக்கியவாதியின் வடிவத்தேர்வுகள் அவனுடைய கேள்விகளுக்கேற்ப, மரபை அவன் பெற்றுக்கொள்ளும் விதத்துக்கேற்ப, தன் பண்பாட்டின் அழுத்தங்களையும் இலக்கிய வடிவங்களின் நிபந்தனைகளையும் அவன் எதிர்கொள்ளும் முறைக்கேற்பப், பிரத்யேகமாகத்தான் இருக்கின்றன. அவனில் அவன் கடந்தகாலமும் நிகழ்காலமும், கிழக்கும் மேற்கும், மரபும் மரபு எதிர்ப்பும் தொடந்து உரையாடலில் இருப்பதை நாம் காண்கிறோம். இருபக்கமும் சளைக்காமல் உயிர்ப்புடன் நிகழும் உரையாடல் அது. இவ்வாற்றல்கள் அனைத்தின் சமன்புள்ளி அவன். நியூ யார்க்கின் மையத்தில் அமைந்துள்ள டைம்ஸ் ஸ்குவேர் போல. ஒவ்வொரு எழுத்தாளனும் ஒரு காலச்சதுக்கம்.

பதினைந்தே நிமிடத்தில் ஒரு தமிழ் எழுத்தாளன் யார் என்றும், அவனுக்குள் சுழலும் காலச்சதுக்கத்தை தரிசிக்கும் நேர்வாய்ப்புக் கிடைத்ததும் தான் வாழும் தமிழ் இலக்கிய விழாவின் வெற்றிகளில் தலையாயது என்று சொல்வேன். இரண்டு நாட்களில் ஒரு மொழியின் விதாவிதமான தரப்புகளை அப்படிக் கண்முன்னால் நிகழ்வதைக் கண்டது ஒரு பெரிய அனுபவமாக இருந்தது. ஆம், காலம் கண்முன்னே நிகழ்ந்தாடுவதைக் கண்ட அனுபவம் அது.

(மேலும்)

Leave a comment