அந்தக் கலயம், அந்தப் பறவை, அந்த மலர்

தமிழ் நவீனக் கவிதைகளை தொடர்ச்சியாக வாசித்து வந்தாலும் அவற்றைப் பற்றி இதுவரை எழுதியதில்லை. ஒரு காரணம் நவீன கவிதையைப் பற்றி எனக்கு அசலாக எதுவும் சொல்ல இருக்கிறதா என்ற ஐயம்.

தமிழ் நவீனக் கவிதையின் மரபை வாசிப்பு வழியாக ஓரளவுக்கு அறிந்திருந்தாலும் ஒரு புதிய கவிதையை வாசிக்கும்போது அதை மரபில் வைத்து ஒப்பிட்டு வாசிக்க முடிவதில்லை என்னால். அல்லது அதை இரண்டாம் கட்டமாக, வலிந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது.

எனக்கு கவிதை வாசிப்பு என்பது எப்போதும் மிகவும் personal-ஆன ஒரு தொடர்புறுத்தலாகவே இருந்து வந்துள்ளது. என்னிடம் பேசும் ஒரு வரி. ஒரு மொழி. அல்லது என்னுடைய உள்ளத்தின் ஓர் அசைவை எனக்கு எடுத்துக்காட்டும் படிமம்.

இந்தத் தேடலுக்குள் கவிதை அமைந்துவிட்டால் அது என்னுடைய கவிதை, என்னுடைய வரி என்று மாறிவிடுகிறது. அதை வெளிப்படுத்திப் பேசுவது எப்படியோ என்னுடைய அகத்தை முன்வைப்பதுபோல் என்று தோன்றிவிடுகிறது. கவிதையை ‘புறவயமாக’ என்னால் அணுகமுடிந்ததே இல்லை.

இதே சிக்கல் பாடல் கேட்பதிலும் உள்ளது. புதிய பாடல்களை தேடிப்பிடித்துக் கேட்பது எனக்குப் பிடிக்கும். சில சமயம் நண்பர்கள் ‘இதைக் கேள், இதைக் கேட்கவில்லையென்றால் என்ன பாடல்ரசிகை நீ’ என்றெல்லாம் சீண்டி எதையாவது கேட்கவைத்துவிட வேண்டும் என்று முற்படுவார்கள். ஆனால் அப்படி கேட்பதை விட நானே அதை ‘கண்டுபிடித்துக்’ கேட்பது தான் பிடிக்கும். அப்படியென்றால் சில நாட்களுக்கு எவருக்குமே தெரியாத அறிய முத்து ஒன்றை அடைந்துவிட்டோம் என்ற திளைப்பில் மகிழ்ந்து தனித்திருக்கலாம் அல்லவா?

நேனோ மே பத்ரா சாயே‘ என்ற ஹிந்திப் பாடலை கண்டுபிடித்தபோது கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு நெஞ்சோடு பிடித்து வைத்திருந்தேன். அது மிகப் பிரபலமான பாடல் என்று பிறகு தெரிந்தது. அதனால் என்ன? அதைக் ‘கண்டுபிடித்தத்’ தருணம் என்னுடையதல்லவா? அந்தப் பாடலுக்கு என்னுடைய அர்த்தவெளியிலிருந்து பொருள் அளித்திருந்தேன். என்னுடைய அர்த்தவெளியிலிருந்து பொருள் அமைந்த பாடல் என்பதால் தான் அது எனக்கு அத்தனை அணுக்கமானது. அந்த பரஸ்பரத்தால் தான் அது எனதாகியிருந்தது.

ஆம், ஒருவருடைய ‘அர்த்தவெளி’ தான் அவர் எதிர்கொள்ளும் ஒவ்வொன்றுக்கும் பொருள் அளிக்கிறது. இந்த ‘அர்த்தவெளி’ என்றால் என்ன என்று கேட்டால் என்னால் வகுத்துச் சொல்லமுடியுமா தெரியவில்லை.

ஆனால் ஒரு பாடலையோ கவிதையையோ ‘தனிப்பட்ட முறையில்’ பெற்றுக்கொள்வதாகக் கூறுவது என்னுடைய சொந்த வாழ்க்கை அனுபவங்கள், நினைவுகள் என்ற மேம்போக்கான அளவில் அல்ல. வாசிப்பு வழியாக உருவான கருத்துகள், நம்பிக்கைகள் வழியாகவும் அல்ல. இவ்வனுபவங்கள் அனைத்தும் எனக்குள் ஓர் ‘அர்த்தப்பரப்பை’ உருவாக்கியிருப்பதை உணர்கிறேன். A field of meaning. இந்த உலகுக்கடியில் விரிந்திருக்கும் இன்னொரு உலகம். என்னுடையது.

அந்த அர்த்தவெளியுடன் ஒரு கவிதை வரியோ பாடலோ இணையும் போது அது என்னுடைய வரியாகிறது. அந்த வரி என் அர்த்தவெளியை எதிரொலிக்கலாம். அதனை அறைக்கூவலாம். ஆனால் இருவழிகளிலும் அதை விரிவாக்கவே செய்கிறது.

ஆகவே என் அர்த்தவெளியுடன் உரையாடும் கவிஞரை நான் மிகத்தீவிரமாக நேசிக்கிறேன். ஆனால் ஒரு கவிதையைப் பற்றிப் பேசும்போது எப்படியோ என்னுடைய அர்த்தவெளியை பற்றித்தான் பேசுகிறேன். அல்லது என் அர்த்தவெளிக்கப்பால் ஒரு கவிதை உண்மையில் எனக்கு பொருட்படுத்தக் கூடியதாக இல்லை.

இது ஒரு selfish-ஆன நிலைப்பாடு அல்லவா, இந்த வாசிப்பு இன்னொரு கவிதை வாசகருக்கு பயனுள்ள வகையில் இருக்குமா என்ற ஐயங்கள் எனக்கு இருந்துவந்துள்ளது. அந்தக் கவிஞரே அவ்வாசிப்பை அறிய விரும்புவாரா தெரியவில்லை. ஏனென்றால் கவிதையிலிருந்து தொடங்கினாலும் நான் பேசப்போவது என்னுடைய அர்த்தவெளியைப் பற்றித்தான். இந்த ஐயத்தாலேயே என் கவிதை வாசிப்புகளை இதுவரை பொதுவில் பகிர்ந்ததில்லை.

ஆனால் இப்போது முயன்று பார்க்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு காரணம், என்னுடைய வாசிப்பை எனக்கு நானே இப்படிச் சொல்லிப்பார்த்துக்கொள்ளும் போது எனக்கு அது உதவுகிறது. எழுதும் போது தான் ‘அர்த்தவெளி’ போன்ற ஒரு கருத்து எனக்குள் இயங்கிக்கொண்டிருப்பதை அறிகிறேன். அதை புறவயமாக்க முடிகிறது.

மேலும் என்னுடைய அர்த்தவெளி என்பது ஓர் எழுத்தாளராக நான் அன்றாடம் வாழும் என்னை செழித்து வாழவைக்கும் நிலம். அச்செழுமைக்கப்பால் ‘புறவயமாக’ இலக்கியத்தை அணுகும்போது கவிதை வாசிப்பை அர்த்தமுள்ளதாக்கும் வெளிப்படைத்தன்மையையும் இழந்துவிடுகிறேன் என்று தோன்றுகிறது.

அனைத்துக்கும் அப்பால், அர்த்தவெளி என்று நான் கூறும் என் செழுமையை எனக்குள் உருவாக்கியவர்களே என் கவிஞர்கள் தான். ஒரு வேளை அவர்களுக்கு இது பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாசகராக நன்றி கூறுவது என் கடமை அல்லவா?

*

கவிஞர் சம்யுக்தா மாயாவின் கவிதைகளை அவருக்கு அளிக்கப்பட்ட குமரகுருபரன் இளங்கவிஞர் விருதை ஒட்டித் தொடர்ந்து படித்து வருகிறேன்.

சம்யுக்தா மாயாவுக்கு குமரகுருபரன் விருது

சம்யுக்தா மாயா கவிதைகள்

சம்யுக்தா மாயாவின் கவிதைகளில் ஒரு புறம் இரவு, தனிமை, குளிர் என்ற தன்னிலையும், மறுபுறம் அலைதலும் எரியும் நெருப்பும் கொதிப்பும் உள்ளது. இரண்டுமே தனிமையின் இருவேறு வண்ணங்கள் என்று எனக்குத் தோன்றியது. ‘தனிமையும் அகத்தனிமையும்’ என்று அவருடைய கவிதையுலகை வகுக்கலாம்.

அவருடைய கவிதையுலகம் என் அகத்துக்கு நெருக்கமானது என்றாலும் அவருடைய எல்லா வரிகளும் என்னுடைய அர்த்தத்தளத்துடன் உரையாடவில்லை என்று கூறவேண்டும். பல இடங்களில் ஒரு நல்ல படிமம் வழியாக ஒன்றை வீச்சுடன் கூறிவிட்டு, அடுத்த வரியிலேயே அதை ‘ஐயம்திரிபட விளக்கிவிடவேண்டும்’ என்ற ஆசைக்கு இரையாகிறார் கவிஞர். ஆனால் சில வரிகள், சில சித்தரிப்புகள் வழியாக வெகுதூரம் செல்ல முடிந்தது. ‘தீ நின்ற பாதம்’ தொகுப்பில் வசீகர மலர் என்றக் கவிதை ஒரு சிறந்த உதாரணம்.

அக்கவிதை எழுதப்பட்ட வடிவில் என் அர்த்தவெளியைத் தீண்டவில்லை. எனக்கு வாசிக்கக் கிடைத்தது வலிமிகுந்த ஓர் உறவைப் பற்றிய ஒரு காதல் கவிதை. ஆபத்தும், வசீகரமும், கண்ணீரும் உருக்கமும் நிறைந்தது. ‘காதலின் ஏழு படிநிலைகள்’ என்பது போல் ஏழு அடுக்குகளாக கூறப்படும் ஓர் கதை. காதலின் பித்தையும் துக்கத்தையும், தவிர்க்கமுடியாமையையும் சொல்லும் கவிதை. தோல்வியிலும் கண்ணீரிலும் முடிவது.

இந்த அமைப்பும், அதில் கவிஞர் கையாளும் சில படிமங்களும் (வெயிலில் வெடிக்கும் எருக்கு, சித்தாரின் நரம்பு போல் அதிரும் தேகம், கசியும் மெழுகுவர்த்தி) பழமையானதாக, தேய்வுகொண்டதாகத் தோன்றியது.

ஆனால் இக்கவிதையில் மிக அற்புதமான மூன்று இடங்களைத் தொட்டுள்ளார் கவிஞர்.

அவற்றை மட்டும் கொண்டு, சற்று மாற்றி அடுக்கி, எனக்கான ஒரு கவிதையை உருவாக்கிக்கொண்டேன். என்னுடைய அர்த்தவெளியைத் தீண்டித் துடிக்கச்செய்த வரிகள் இவை.

*

தலைவனும் தலைவியும் தங்களுக்குள் பரஸ்பரம் ஊறும் கள்ளைக் கண்டடையும் தருணம். ஆனால் எங்கே ஊறுகிறது அது? ‘புராதன கலயத்தில்’.

அந்தக் கலயம் என் கற்பனையை தூண்டிக்கொண்டே உள்ளது. காதலை தான் மட்டுமே கண்டடைந்த கள் என்று எண்ணாத காதலரே இல்லை இங்கு.

ஆனால் உண்மையில் அதன் கொள்கலன் எத்தனை புராதனமானது! நம் பிறப்பும், நாம் இங்கு இவ்வடிவில் வந்தடையக் காரணமான நம்முடைய முன்னோர் ஒவ்வொருவரது பிறப்பும் ஊறிய கலயம் அது. நம்முடைய தாய்-தந்தையரும், அவர்களுடைய தாய்-தந்தையரும் அக்கலத்தையே அறிந்திருப்பர். ஏன், பூமியும் வானமும் ஆகசமும், அதற்கும் முன்னால் அணுத்துகள்களும் பிரபஞ்சமும் ஊறிவந்த கலயம் ஒன்று இருக்கவேண்டும் அல்லவா? அதை பரஸ்பரமான ஒரு கண்நோக்கில் கண்டுவிடமுடியுமா? காதல் பார்வைக்குள் எத்தனை தூரம் புகுந்து செல்ல முடிகிறது இவ்வுள்ளத்தால்?

இந்த வாசிப்பு கவிதையிலிருந்து பெற்றதென்றாலும் என் அர்த்தத்தளம் சார்ந்தது. அந்தப் புராதன கலயம் இக்கவிதைக்கு வெளியே என்னுள் இருந்துகொண்டிருக்கும் ஒன்றைச் சுட்டுகிறது. உன்னுடைய தேடல்களெல்லாம் அந்த புராதனக் கலயத்தை நோக்கித்தான் என்று ஒரு குரல் என்னுள் தீவிரத்துடன் அறிவிக்கிறது. என்னுடைய Holy Grail அது.

இப்போது எனக்கு நானே வாசித்துக்கொண்டிருக்கும் சொனாட்டாவின் தொடக்கமான அல்லெக்ரோ பகுதி இது என்று இதைக் கொள்ளலாம். இந்த வாசிப்பு இன்னொரு வாசகருக்கு உதவுமா தெரியவில்லை. இப்பகுதியை அகழ்வாய்வு என்று வகுக்கிறேன்.

*

பின், அக்கண்கள் மறைகின்றன. தேடலின் ஒரு பருவம் தொடங்குகிறது.

பறவையை பார்க்கவேண்டுமென்றால் நாம் மரத்திலிருந்து தான் தொடங்க வேண்டும். பறவைகள் தங்களை மரத்தினுள் மறைத்துக்கொள்ளும். மரம் தான் பறவை எங்குள்ளது என்று காட்டிக்கொடுக்கும். ஆகவே பறவைகளை பார்க்க முதலில் மரத்தைப் பார்க்கக் கற்க வேண்டும்.

சமீபத்தில் வெள்ளிமலையில் நடந்த பறவைப்பார்த்தல் வகுப்புக்குச் சென்றிருந்தபோது தான் இப்பாடத்தைக் கற்றேன். ஒரு நாள் அதிகாலை நித்யவனத்தை அடுத்த மடம் என்ற சிற்றூரில் ஓர் ஆலமரத்தின் அடியில் நாங்கள் ஐம்பது பேர் மூச்சைத் தவிர அசைவில்லாமல் நின்று மரத்தையே பார்த்துக்கொண்டிருந்தோம். அப்படிப் பார்க்கும் பயிற்சி வழியாகத்தான் நின்றுகொண்டிருக்கும் ஓர் மரத்துக்குள் எத்தனை பறவைகள் ஒளிந்துள்ளன, அவை எத்தனை விதமானவை என்று முதன்முதலாக கவனித்தேன்.

பறவைக்காக மரத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கும் நாம் எதிர்பார்ப்பது சிறு அசைவை. இலையின் அசைவு. கிளையின் அசைவு. அந்த அசைவு வழியாகவே அங்கு என்ன பறவை மறைந்துள்ளது என்று அனுபவசாலிகள் சொன்னார்கள். இலையென்றே என் கண்ணுக்குத் தெரிந்த கிளிகளை, குக்குறூவான்களை, பச்சைப்புறாக்களை அவற்றின் அசைவு வழியாகவே கண்டடைந்தார்கள்.

மரத்தின் கிளைகளைப் பார்க்கும் நாம் அவற்றில் சிறு அசைவுக்காகவே காத்திருக்கிறோம். அந்தப் பறவை. ஆனால் பெரிய சவால் அது. உண்மையிலேயே அங்கு ஒரு பறவை உள்ளதா? அசைவது இறகா இலையா? இறகுபோல் அசையும் இலைகளுக்கிடையே எழுந்து பறக்கும் அச்சிறகு, பறவையா பச்சிலைக் கிளையா? எங்கு தேடினாலும் சிக்காத பறவைக்காகத் தேடித் தேடி அயர்ந்த கண்கள் உடையோர் அதை அறிவர்.

ஒரு கட்டத்தில் மரமும் பறவையும் ஒன்றெனத் தோன்றத் தொடங்குகிறது. அந்த ஆலமரமே சிறகுமூடி அமர்ந்திருந்த ஒரு மாபெரும் பச்சைப் பறவையென்று தோற்றமளிக்கிறது. அந்தப் பறவையின் கண்களை பார்த்துவிடுகிறேன். கிளைகளுக்கிடையில் மறைந்திருக்கும் பறவை.

எத்தனை பறவைகள் மறைந்துள்ளன அதற்குள்? யாருக்குத் தெரியும்? நான் காண்பது என் கண்முன்னாலேயே, தன் தோற்றத்தாலேயே தன்னை மறைத்துக்கொண்டு அமர்ந்துள்ள, இந்த மாபெரும் புராதனப் பட்சியை அல்லவா? இனி ‘சடாரெனப் பறக்கையில் உதிரும் ஒற்றைச் சிறகுக்காய் ‘ காத்திருக்கத் தோன்றவில்லை எனக்கு.

இக்காட்சியில் எது மறைந்தது, எது தெளிந்தது என்பது எனக்கு சற்று மர்மமாகத்தான் உள்ளது. ஆம், உன்னை நீ மறைத்துக்கொண்டதால் தான் இந்தக் காட்சி எனக்குச் சித்தியானது. ஆனால் தன்னை மறைத்துக்கொண்ட இவ்விரு ‘நீ’-க்களில் எந்த நீ, நீ?

இது ஓர் அகவயமானக் கேள்வி. என் அர்த்தவெளியில் வைத்துக் கேட்டுக்கொள்வது. அதனால் தான் இந்த இடம் வரை வரும் இவ்வாசிப்பும் இன்னொரு வாசகருக்கு உதவுமா தெரியவில்லை.

இப்பகுதியை மறைவு என்று வகுக்கிறேன். என் சொனாட்டாவின் அண்டாண்டே. நிதானமானது, பல அடுக்குகள் கொண்டது.

*

இனி விரைவும் தாளமும் கூடி முடியும் அதன் ஃபினாலே —

***

இதுவரை கொண்டுவந்து சேர்த்த கவிஞர் சம்யுக்தா மாயாவுக்கு என் பிரியமும் அன்பும்.

Discover more from சுசித்ரா | Suchitra

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading