நீலி மின்னிதமிழ் வெளியான எழுத்தாளர் பத்மா விஸ்வநாதனுடனான உரையாடலுக்கு எழுதப்பட்ட வாசகர் கடிதம்.
பத்மா விஸ்வநாதனுடன் ஓர் உரையாடல் — நீலி மின்னிதழ்
அன்புள்ள ரம்யா,
அருமையான நேர்காணல். வாழும் தமிழ் விழாவின் இரண்டு நாள் நிகழ்வுக்குள் இந்த நேர்காணலை நிகழ்த்தியது சிறப்பு.
பத்மா விஸ்வநாதனின் பதில்கள் வழியாக கிடைக்கும் அவருடைய எழுத்து வாழ்க்கைப் பற்றியான சித்திரத்தில் இரண்டு அம்சங்கள் எனக்கு முன் நிற்கின்றன. ஒன்று, அவர் தன்னுடைய கலைக்களத்தைக் கண்டடைந்த விதம். எழுத்தாளராகவே அவர் வாழும் வாழ்க்கை. இரண்டு, தன்னுடைய இந்திய வேர்களை குறித்து அவர் எழுதியுள்ள Toss of a Lemon என்ற நாவல் பற்றிய விவரணை, அவை கிளர்த்திய எண்ணங்கள்.
பத்மா தான் முப்பத்தைந்து வருடங்களாக பரதநாட்டியம் பயின்றவர், கூடவே பாலேயும் மேற்காஃப்ரிக்க நடனத்திலும் பயிற்சி உள்ளவர் என்று கூறிய தகவல் சுவாரஸ்யமானது. சமூகவியல் படித்து, அதன் வழியாக நாடகத்துக்குள் நுழைந்து, அங்கிருந்து எழுத்துக்கான தன் நாட்டத்தை கண்டடைகிறார். அமெரிக்காவுக்கு புலம் பெயற்கிறார், காதலித்துத் திருமணம் செய்துகொள்கிறார், பிரேசிலுக்குச் சென்று போர்த்துகீசிய மொழி கற்கிறார். இந்த வாழ்க்கைச் சித்திரம் தன்னளிவிலேயே ஈர்க்கக்கூடியதாக உள்ளது. இந்தியாவில் இன்று ஒரு பெண் எழுத்தாளருக்கு இத்தகைய வாய்ப்புகள் முற்றிலும் இல்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் தமிழ் போன்ற சூழலைப் பொறுத்த அளவிலாவது இத்தேர்வுகளை இயல்பாக மேற்கொள்ள நம் பண்பாடு மனத்தில் ஒரு தடை பெண்களுக்கே கூட உள்ளதோ என்று தோன்றுகிறது. மேலும் பொருளாதாரம் ஒரு பங்கை வகிக்கிறது. இங்கே பணமும் வசதியும் கொண்ட மேட்டுக்குடியினர் இத்தகைய வாழ்க்கையை உருவாக்குவதை பற்றி யோசிக்கலாம். ஆனால் உண்மையான கலை தாகம் கொண்ட, வசதியில்லாத பெண்கள் தங்கள் இடத்தைக் கண்டடைவதற்க்கான இயல்பான இந்தச் சூழல் நம் நாட்டில் இல்லை. அதை ஆதரிக்கும் நிறுவனங்கள், கல்வி அமைப்புகள் நமக்கு இல்லை. அந்த வகையில் நாடகம், நாட்டியம், இயல், மொழியாக்கம், என்று தன் தேடலின் பொறுட்டு இயல்பாக களம் மாறிய பத்மாவின் கலை வாழ்க்கை அழகாகவும் உத்வேகம் தரக்கூடியதாகவும் உள்ளது.
1880கள் தொடங்கி 1960கள் வரை தமிழ் நிலத்தில் தன்னுடைய பாட்டி முப்பாட்டிகளின் கதைகளை Toss of a Lemon நாவலில் தான் எழுதியுள்ளதாக பத்மா கூறும் இடமும் சுவாரஸ்யமாக இருந்தது. பத்மா ஒரு வகையில் வட அமெரிக்காவில் குடியேறிச்சென்ற பாரதி முகர்ஜி, ஜும்பா லகிரி போன்றவர்களின் வழி வந்தவர். ஆனால் இந்நாவலின் களம் எனக்கு தமிழில் எழுதப்பட்ட சிவசங்கரியின் பாலங்கள், வாஸந்தியின் விட்டு விடுதலையாகி போன்ற நாவல்களையே நினைவுக்குக் கொண்டுவருகின்றன. ஒரு விரிவான வரலாற்றுப்பின்னணியில் தலைமுறைகளின் கதையைக் கூறும் நாவல் என்று பத்மா சொல்வதால் மனம் இயல்பாக ஆஷாபூர்ணா தேவியின் முதல் சபதம் முதலிய நாவல்களுடன் ஒப்பிடுகிறது.
எதற்குச் சொல்கிறேன் என்றால், பத்மா எழுதிய நாவல் அமெரிக்காவில் வாசிக்கப்படும் விதத்தில் நாம் வாசிக்க மாட்டோம். ஏனெறால் நாம் அதை வேறு மரபில் பொறுத்துவோம். இந்நாவலை அத்தகைய முறையில் வாசித்து விவாதிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. நேற்று இந்த நேர்காணலை வாசித்தக் கையோடு நாவலை வாங்கிவிட்டேன். நாவலின் முதல் பத்தியின் இறுதி வரியில் உள்ளே நுழைந்துவிட்டேன்: “She looks capable of bearing great burdens, not as though born to a yoke but perhaps as though born with a yoke within her.” தமிழில் இந்தக் களத்தை எழுதிய எவரும் எழுதாத ஒரு வரி.
நியூயார்க்கில் பத்மாவிடம் பேசியபோது இவ்வாண்டு ஜூலை மாதம் நாவல் ஆய்வுக்காக இந்தியா வருவதாகவும் மதுரையில் தங்கவிருப்பதாகவும் சொன்னார். அவருடன் மேலும் உரையாட வாய்ப்பு அப்போது அமையலாம்.
அன்புடன்
சுசித்ரா
*
வாழும் தமிழ் விழாவில் பத்மா விஸ்வநாதன் பேசிய அரங்கு. அமர்வில் உடன் பேசியவர்கள் அ. வெண்ணிலா, சந்திரா தங்கராஜ். மட்டுறுத்துனர் சகானா குமார். ‘Through Her Lens’ என்ற இந்த அரங்கில் ஒவ்வொரு எழுத்தாளரும் தன்னுடைய பார்வை மற்றும் எழுத்தைப் பற்றிப் பகிர்கிறார்கள்.
அமைப்பாளர்கள் ஏன் இவர்கள் மூவரையும் ஓர் அமர்வில் ஒன்றாகக் கொண்டுவந்தார்கள் என்று யோசித்தேன். மூவரும் ஒரு குறிப்பிட்ட வயதையொத்த எழுத்தாளர்கள், பெண்கள், என்பது ஒரு காரணமாக இருக்கலாம். அப்படி அமர்வை அமைப்பதைப் பற்றிய சாதகங்களும் விமர்சனங்களும் ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் இந்த அமைப்பு வழியாக ஒன்று (குறைந்தபட்சம் எனக்குத்) துலங்கி வந்தது. மறுப்பவர் மறுக்கலாம்.
நம்முடைய எழுத்தாளர்கள் எங்கோ பெண் என்ற அடையாளத்துடன் தொடர்ந்து ஒரு சமரசப்பேச்சில் இருக்கவேண்டியுள்ளது. பத்மாவின் பதில்களிலும், அவர் நேர்காணலிலும் வெளிப்படும் தங்குதடையற்ற இயல்பு வெண்ணிலாவிடமும் சந்திராவிடமும் காணக்கிடைக்கவில்லை. இதை அவர்களைப் பற்றிய விமர்சனமாகக் கூறவில்லை. நம் சூழலைப் பறிய ஓர் அவதானம், அல்லது விமர்சனம் என்று கொள்க. வரலாற்றுப்பூர்வமானதும் கூட. அவர்கள் மட்டுமல்ல அடுத்தடுத்தத் தலைமுறைகளைச் சேர்ந்தத் தமிழ் பெண் எழுத்தாளர்களும் எதற்கோ, எவருக்கோ பதில் சொல்லும் இடத்திலிருந்து தங்கள் எழுத்தைப் பற்றிப் பேச வேண்டியுள்ளது. பெண் என்ற பிரக்ஞை இல்லாமல் அவர்கள் எழுதினாலும், ஃபிமினிசம் என்றோ, ஃபெமினிசம் அல்ல ஹியூமானிசம் என்றோ, கல்ச்சரல் ஃபெமினிசம் என்றோ, எப்படியோ தங்களுடைய இடத்தை வரையறுக்க வேண்டியுள்ளது. அந்த அழுத்தம் எங்கோ நம் மீது செலுத்தப்படுகிறது. பத்மாவின் வெளிப்பாட்டில் தன்னை அவ்வாறு வரையறுத்தாக வேண்டிய அழுத்தம் தென்படவில்லை. அதைத்தான் ‘இயல்பு’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறேன்.
வெண்ணிலா தான் பெண்ணிய, தலித்திய, திராவிட -ismகள் வழியாக எழுத்துக்குள் வந்தாலும் தற்போது இலக்கியம் என்பது அக்கொள்கைகளை தாண்டிய வெளி என்ற புரிதலை அடைந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். ‘கொள்கைகள் எல்லாம் சாளரங்கள், இலக்கியம் என்பது வானம்’ என்ற அவருடைய வரி மிகக்கூர்மையானது. ஆம், அடைத்த வீட்டிலிருந்து சாளரம் வழியாக பார்ப்பவர்களே ஆயினும் நாம் வானத்தையே பார்க்கிறோம். சந்திரா தான் தன்னை பாலடையாளம் வழியாக வரையறுப்பதில்லை என்று கூறுகிறார். மனிதர்களின் உணர்வுகளை பின் தொடர்ந்து செல்வதே எழுத்தாளரின் பணி அதில் பால்பேதம் இல்லை என்கிறார். பத்மாவும் தன்னுடைய கதாபாத்திரங்களையும் இதற்கு நெருக்கமான ஓர் எண்ணத்தை முன்வைக்கிறார்: அவை எல்லாமே அவர் தான் என்று. ஆனால் வெண்ணிலாவும் சந்திராவும் எப்படியோ அவ்விஷயத்தை பாலடையாளம் வழியாக, அல்லது பாலடையாளத்தை மீறிய ஒன்றாக, முன்னிலைப்படுத்த வேண்டியிருந்தது.
தமிழில் எழுதும் பெண்கள் இயல்பாக, எழுத்தாளர்கள் மட்டுமாக எப்போது உணர்வார்கள்? எப்போது அவ்வாறு எதிர்கொள்ளப்படுவார்கள்? என்ற கேள்வி இக்கணம் எழுகிறது. இப்பதிவை எழுதும் எனக்குள்ளும் பாலடையாளம் சார்ந்த முள் இயங்கும் முரணைநகையைக் கண்டு புன்னகைக்காமல் இல்லை. ஆனால் இதுதான் நாட்டு நிலவரம்.
இவற்றை அறுதியாக எதையும் கூறும் நோக்கத்துடன் எழுதவில்லை. வாழும் தமிழ் விழாவின் காணொலிகளை ஒவ்வொன்றாக பார்த்து வரும்போது, பதிவுகளை வாசிக்கும்போது தோன்றும் உதிரி எண்ணங்கள் இவை. இவற்றைத் தொகுத்துக்கொள்ளும் நோக்குடன் எழுதுகிறேன். இத்தகைய நிகழ்வுகள் நம்மை நாமே தொகுத்துப்பார்க்க ஒரு வழி.
*
அமெரிக்கா பெண்கள் நலனைப் பேணும் சமூகம், ஆணாதிக்கமற்ற சமூகம் என்பது போன்ற கற்பனாவாதங்கள் என்னிடம் இல்லை. அமெரிக்காவின் மத உணர்வுத் தீவிரம் இஸ்லாத்துக்கு நிகரானது. அது பெண்கள் நலனில் நாட்டம் கொண்டுள்ள சமூகம் என்று கூறமாட்டேன்.
ஆனால் அமெரிக்கா ஒருவகையான சுயம் சார்ந்த தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் சமூகம். தனக்கென கருத்துகளைக் கொள்ள, அவற்றைத் தன்னம்பிக்கையுடன் முன்வைக்க அந்நாட்டின் கல்வி நிலையங்கள் பெண்கள் உட்பட அனைவருக்கும் கற்றுக்கொடுக்கிறது. பதட்டம், தயக்கம், அடுத்தவர்களை உணர்வுரீதியாக சார்ந்திருப்பது போன்ற குணங்களுக்கு அங்கு மதிப்பில்லை. பத்மா போன்ற ஒருவர் உருவாவது அத்தகைய மதிப்பீடுகளிலிருந்து தான் என்று தோன்றுகிறது. அந்த இயல்பான தன்னம்பிக்கையைத் தான் சகானா, மேகனா உள்ளிட்ட அமெரிக்க இளம் தலைமுறை பெண்கள் அனைவரிடமும் கண்டேன்.
நம் பெண் எழுத்தாளகளிடம் வெளிப்பட்ட தன்னம்பிக்கை வேறு மாதிரி. பாலடையாளம் சார்ந்த பலவகையான அழுத்தங்களை எதிர்கொள்வதில் தான் அவரவர்க்கான வடிவங்களையும் கருத்துகளையும் அவர்கள் அடைந்தார்கள் என்று சொல்லத்தோன்றுகிறது. பெருமளவுக்கு பொழுதுபோக்காகவும் ஆண்-பெண் கனவுகளை வளர்த்தெடுக்கும் வகையிலும் எழுதப்பட்ட வரலாற்றுப்புனைவு என்ற எழுத்துவகையை ஆய்வு சார்ந்ததாக, பொதுமக்கள் வாழ்க்கை சார்ந்ததாக உருவாக்கி எழுதுவதாக வெண்ணிலா கூறுகிறார். சினிமாவில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படலாம், ஆனால் எழுத்தில் எந்த பாத்திரத்தினுள்ளும் புகுந்து எழுத சுதந்திரம் உள்ளதென்று சந்திரா குறிப்பிடுகிறார்.
அப்படிப்பார்த்தால் நிகழ்வில் பேசிய அமெரிக்க எழுத்தாளர்களிலேயே தமிழ் எழுத்தாளர்களுக்கு மிக நெருக்கமாக வந்தவர் ஜெரால்டீன் என்று சொல்லத் தோன்றுகிறது. ஏனென்றால் அவர் அடித்தள வாழ்க்கையிலிருந்து எழுதுகிறார். அழுத்தங்களை எதிர்கொள்ளும் விதமாகவும் எழுதுகிறார். தன்னுடைய தாய்மை நிலையின் விரிவாக்கமே தன் எழுத்து என்று எண்ணச்செய்தார். அங்கே பெண், எழுத்து, என்று எந்த பாகுபாட்டையும் அறியமுடியவில்லை.
*

