வாழும் தமிழ் விழாவின் முதன்மைச் சாதனை என்ன?
நியூ யார்க்கில் நடந்த வாழும் தமிழ் விழாவின் முதன்மைச் சாதனை என்ன? அபாரமான அந்தக் கற்பனை நிஜத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது என்பது தான்.
இது வரை உலக அளவில் தமிழ் நவீன இலக்கியத்துக்கென இந்தியாவுக்கு வெளியே விழா நிகழ்வுகள் நடந்ததில்லை. அப்படி ஒன்று சாத்தியமாகும் என்பதே பத்தாண்டுகளுக்கு முன்னால் கூட கற்பனைக்கு அப்பாற்பட்டதாகத்தான் இருந்தது.
2017-ல் சர்வதேச அளவில் கவனம் பெற்ற மொழிபெயர்ப்பாளரான டேவிட் பெல்லோஸை சந்தித்தபோது அவருக்கு தமிழ் மொழியும் தமிழ் நவீன இலக்கியமும் முற்றிலும் அறிமுகமற்றக் களமாக இருந்தது. அந்த ஆண்டு ஜெயமோகனின் ‘பெரியம்மாவின் சொற்கள்‘ என்ற சிறுகதை அசிம்டோட் என்ற சர்வதேச சிறுபத்திரிக்கையின் புனைவு மொழியாக்கப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. அதன் நடுவர் டேவிட் பெல்லோஸ். அக்கதையின் மொழிபெயர்ப்பாளர் என்ற வகையில் அவரை சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது.
அப்போது தமிழ் இலக்கியத்தை பற்றியும், ஜெயமோகனை பற்றியும், அவருக்கு ஓர் அறிமுகத்தை அளித்தேன். ‘தமிழ் ஐரோப்பாவுக்குள் இன்னும் வராத மொழி,’ என்று அவர் சொன்னார். செல்வாக்கில்லாத மொழி என்று அல்ல, ‘வராத’ மொழி என்று அன்று அவர் சொன்னது நினைவிலிருக்கிறது. டேவிட் பெல்லோஸ் ஜெயமோகனுக்கு என்ன வயது என்று கேட்டார். சொன்னேன். ‘Oh, he is a young man!’ என்றார்.
அன்று எவராவது பத்து வருடங்களில் இப்படி ஒரு விழா நிகழும் என்று ஆரூடம் கூறியிருந்தால் நம்பியிருப்பேனா தெரியவில்லை. அந்த விழாவின் தொடக்கவுரையில் அ. முத்துலிங்கம் அவர்கள் டேவிட் பெல்லோஸின் பெயரைச் சொன்னதும், விழாவில் கலந்துகொண்ட மொழிபெயர்ப்பாளர் எஸ்தர் ஆலன் பிறகு ‘என் நண்பர் டேவிட் பெல்லோஸ் இந்த விழாவை மிகவும் விரும்பியிருப்பார்’ என்று எழுதிய கடிதமும் தற்செயல் என்றும் தோன்றவில்லை.

இன்று மொழியாக்கம் வழியாக ஓரிரு தமிழ் எழுத்தாளர்கள் உலக மொழிகளில் வெளிவரத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் பெருமாள் முருகனின் நூல்கள் அமெரிக்காவிலும் யூகேவிலும் ஐரோப்பாவிலும் காலச்சுவடின் முயற்சியால் வெளியீடு கண்டுள்ளன. அதுவும் 2014-15-ல் அவருடைய மாதொருபாகம் நாவலுக்கு எதிராக எழுந்த வன்-எதிர்ப்பின் காரணமாக அவர் ‘இனி எழுதப்போவதில்லை’ என்று அறிவித்து அது சர்ச்சையானபோது தான் அந்த அலை தொடங்கியது. குரல் அமுக்கப்பட்ட எழுத்தாளருக்கான ஆதரவு என்று தொடங்கி அதுவே அவரைச்சூழ்ந்து ஒரு ‘பிராண்டாகத்’ திரண்டது.
(சர்வதேச பதிப்புலகின் நிதர்சனங்கள் இவை. மொழிபெயர்ப்பு இலக்கியங்களை பொறுத்தவரை ஒன்று ஓர் எழுத்தாளர் தன்னளவில் தனித்து நிற்கக்கூடிய புத்தகங்களை எழுதியிருக்க வேண்டும். அல்லது அவருக்கு marketability இருக்கவேண்டும். முதல் வகை எழுத்தாளரை விட இரண்டாம் வகை எழுத்தாளரின் நூல்களுக்கே கிராக்கி — தனித்து நிற்கக்கூடிய கலாபூர்வமான படைப்பு விற்பனையாகும் என்று உத்தரவாதம் ஏதும் இல்லையே?)
ஆனால் இந்த அலை தமிழ் இலக்கியத்தின் மேல் எந்த கவனத்தையும் கொண்டுவரவில்லை. சொல்லப்போனால் ‘தமிழ்ச் சமூகம் ஓர் எழுத்தாளரை எழுதவிடாத காட்டுமிராண்டிக் கூட்டம்’ என்ற கருத்தாக்கத்தின் வழியாகத்தான் அந்நூல்கள் பிரபலம் பெற்றன. தமிழில் அறிவியக்கம் என்ற ஒன்று உள்ளது என்றோ, அது பெருமாள் முருகனுக்குத் தொடர்ந்து ஆதரவாக நின்றது என்றோ ஆங்கிலத்தில் பதிவாகவில்லை. அவரை மிகச்சில நண்பர்களைத் தவிர தனித்து விடப்பட்டவர் என்றே சித்தரித்தது. மேலும், இதே காலகட்டத்தில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட இமையம், பூமணி போன்ற (பெருமாள் முருகனை விட கலைத்திறன் கொண்ட) எழுத்தாளர்களின் நூல்களுக்குச் சர்வதேசச் சந்தையில் பெறுனர்கள் இல்லை.
இந்தச் சூழலில் தான் தமிழ் நவீன இலக்கியத்துக்கென்று ஒரு சர்வதேச விழாவை ஜெயமோகன் கற்பனை செய்கிறார். இப்படி ஒரு விழா நிகழவேண்டியதன் அவசியம் என்ன என்பதை மேற்சொன்ன வரலாற்றிலிருந்து தெளிவுகொள்ளலாம். ஜெயமோகன் இந்த விழாவைப் பற்றிய கற்பனையை முதன்முறையாக 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெரியசாமி தூரன் விழாவில் பகிர்ந்தபோது அவருடைய நூல்கள் அமெரிக்காவின் முதன்மையான பதிப்பகங்களால் பதிப்புக்குத் தேர்வுசெய்யப்பட்டிருந்தன. ஆனால் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவில்லை. நூல்கள் எப்போது வெளிவரும் என்று எந்தக் குறியும் இல்லை.
இன்று ஏப்ரல் 2026-ல் இதை எழுதிக்கொண்டிருக்கும் போது ஜெயமோகனின் இரண்டு நூல்கள் அமெரிக்கப்பதிப்புகளாக வெளிவந்து பரவலான வாசக கவனமும் விமர்சக பாராட்டும் பெற்றுவிட்டன. மூன்றாவது நூல் 2026 ஜூலை மாதம் ப்ரியம்வதாவின் மொழியாக்கத்தில் அமெரிக்காவிலும் யூகேவிலும் ஒரே சமயம் வெளிவரப்போகிறது. வாழும் தமிழ் விழாவின் முதல் நிகழ்வும் நியூ யார்க்கில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. 2027-ல் லண்டனில் நிகழப்போகிறது. ஒருவேளை இந்த முறை கலந்துகொள்ளமுடியாத எழுத்தாளர்களும் அதில் கலந்துகொள்ளக்கூடும்.
காலத்தை உணர்வதாக சொன்னது இந்த பத்தாண்டுகளையும் சேர்த்துத்தான்.
*
இன்று, விழா முடிந்த நாட்களில், இவ்வாழாவில் விளைந்த பயன்களை நாம் தொகுத்துக்கொள்வது முக்கியம். அவற்றைச் சுருக்கமாக இவ்வாறு தொகுப்பேன்.
- முதன்மையாக, இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
- சர்வதேச அளவில் ஆங்கிலத்திலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வாசிக்கக்கிடைக்கும் ஓரிரண்டு தமிழ் எழுத்தாளர்களைத் தாண்டி தமிழ் இலக்கியம் என்பது எத்தனை பறந்துபட்டக் களம் என்று இந்த விழா பதிவுசெய்துள்ளது.
- தமிழ் எழுத்தாளர்களுக்கு அமெரிக்காவின் மையத்தில் தங்களை முன்வைக்கவும் உரையாடவும் ஒரு மேடை அமைந்தது. பார்வையாளர்களுக்குத் தமிழில் என்ன எழுதப்படுகிறது என்று ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் வழங்கப்பட்டது.
- அமெரிக்கா இரண்டாம் தலைமுறை குழந்தைகளுக்குத் தமிழ் அறிவியக்கத்துடன் அவர்களைத் தூண்டும் விதத்தில் ஓர் உரையாடல் நடந்தது.
- தமிழ் எழுத்தாளர்களுக்கும் அமெரிக்க அறிவியக்கத்துக்குமான உரையாடலின் தொடக்கம் நிகழ்ந்தது.
- குறிப்பாக, சர்வதேச இலக்கியத்தின் மேல் ஆர்வமும் கவனமும் கொண்ட அமெரிக்க இலக்கியவாதிகள் — மொழிபெயர்ப்பாளர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் — ஆகியோரின் அறிமுகமும் நன்மதிப்பும் கிடைத்தது.
- அமெரிக்க இலக்கிய வாசகர்கள் தமிழ் எழுத்தாளுமைகளை பரவலாக அறிமுகம் செய்துகொள்ள ஒரு வாய்ப்பு அமைந்தது.
- அமெரிக்கவாழ் நண்பர்களிலேயே கணிசமான புதிய மொழிபெயர்ப்பாளர்கள் கண்டடையப்பட்டு தங்கள் முதல் கதையை பிரசுரித்த நிகழ்வு நடந்தேறியது
- இந்த அளவிலான ஒரு நிகழ்வை எப்படி நிகழ்த்தவேண்டும் என்று விழா நிறுவனர்களுக்கும் நண்பர்களுக்கும் பெரும் அனுபவச் செல்வம் கிடைத்தது.
- இந்த நிகழ்வு நியூயார்க்கில் நடந்தேறியது தமிழுக்கே ஒரு சாதனையுணர்வையும் தன்னம்பிக்கையையும் அளித்துள்ளது.
ஒரு மொழிபெயர்ப்பாளராக, தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் பாலம் கட்டும் பணியில் இருப்பவராக சொல்கிறேன். இதுவரை இந்திய மொழிகளிலிருந்து உலக மொழிகளுக்கு புத்தகங்கள் பதிப்பாளர்களின், ஏஜெண்டுகளின், புத்தகச் சந்தையின் காற்றுவீச்சுக்கேற்பவே சென்றுகொண்டிருந்தது. இந்த நிகழ்வு அந்த கெடுபிடி இல்லாமல் நம் இலக்கியத்தை முன்வைக்க ஒரு வழி உள்ளது, என்று நிரூபித்துள்ளது. பண்பாட்டுரீதியாக இதன் முழுமையான தாக்கத்தை நாம் அறிய பல பத்தாண்டுகள் ஆகலாம். அப்போது இந்த விழாவை நிகழ்த்தியவர்கள் அனைவருமே காலமாகியிருக்கலாம். ஆனால் காலம் இங்கே நின்றுகொண்டிருக்கும்.
அந்த பத்தடி பேனர்களைப் பற்றி மீண்டும் யோசித்தேன். நிகழ்வு முடிந்தபிறகு அவை எங்கே சென்றன? மீண்டும் ஜெயமோகனின் பெட்டிக்குள்ளா? அவருடன் அமெரிக்கா முழுவதும் பயணம் செய்தனவா அவை? தண்ணீரில் மீன் போல. ஆம், தண்ணீரில் மீன் போல. எங்கே போகின்றன என்று நாம் அறியமுடியாது. ஆனால் போய்க்கொண்டே இருக்கும். அவற்றின் கண்கள் திறந்தே இருக்கும்.
(மேலும்)
You must be logged in to post a comment.