படைப்பில் ஒருமை – ரவீந்திரநாத் தாகூர் [மொழியாக்கம்] – 2

படைப்பில் ஒருமை [1] – அறிமுகம்

2

படைப்பின் இலட்சியம்

[குறிப்பு – இந்தக் கட்டுரையில் உள்ள ஆங்கிலக் கவிதை மேற்கோள்களை அப்படியே அளித்திருக்கிறேன். கவிதையின் கூறுகளை விளக்க ஆசிரியர் அவற்றை பயன்படுத்துகிறார், ஆகவே அவற்றின் வடிவத்தோடு அப்படியே வாசிக்கும் அனுபவமே சரியாக இருக்கும். வங்காள, சம்ஸ்கிருத வரிகள் கட்டுரையின் மையக்கருத்துகளை கவித்துவமான எழுச்சியோடு வெளிபடுத்தும் விதமாக மேற்கோள்காட்டப்பட்டுள்ளன. அவற்றை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். —மொழிபெயர்ப்பாளர்]

பண்டைய சம்ஸ்கிருத நூலொன்றில் ஒரு செய்யுள் உள்ளது. ஒரு சித்திரத்தின் பிரத்யேகமான கூறுகள் என்னென்ன என்று விவரிக்கும் விதமாக அது அமைந்துள்ளது. அக்கூறுகளில் முதலாவதாக அது கருதுவது : வ்ருப பேத:ரூபங்களின் தனித்துவத்தன்மை. ஒரு சித்திரத்தில் பல ரூபங்கள் இருக்கலாம். ஒவ்வொரு ரூபமும் இன்னொன்றிலிருந்து வேறுபட்டது. ஒவ்வொரு ரூபத்துக்கும் அதன் எல்லைகள் உள்ளது. ஆனால் அவ்வெல்லைகள் திண்மையானவையாக திட்டவட்டமானவையாக இருக்குமென்றால் அந்தச்சித்திரம் ரூபங்களின் திரளாகவே நிற்கும். திரளின் பயங்கரமான தனிமையே அதனில் வெளிப்படும். மாறாக, ஒரு சித்திரத்தில் உள்ள பல ரூபங்கள், அவற்றின் தனித்தன்மைகளை மீறி, அவற்றுக்கு முரணாகவே, அவற்றை இணைக்கும் ஒருமையின் ஒரு கூரை தாங்கியிருக்கவேண்டும். அப்படி நிகழவில்லையென்றால் படைப்பு நிகழவில்லை என்று பொருள்.

சித்திரத்தின் முதற்கூரான ரூபங்களின் தனித்துவத்தன்மை என்பதை அடுத்து அந்தச் செய்யுள் இரண்டாவது கூராக அளவீடுகளை சொல்கிறது. இதை பிரமாணானி என்ற சொல்லால் குறிப்பிடுகிறது. அளவீடுகள் என்னும்போதே அது பரஸ்பர உறவுகளை குறிக்கின்றன. ஒரு வடிவம் இன்னொரு வடிவத்துக்கு தேவைகான இடம் கொடுத்தே அந்த பரஸ்பரம் உருவாகிறது. உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட கால் கார்ட்டூன்படத்தைப்போல எவ்வளவு பூதாகரமாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் உடலுடன் சேர்ந்திருக்கையில் அது உடலில் உயிரெனக் கூடும் ஒருமையுடன் இணைதிருக்கத்தான் வேண்டும். அது தன்னை அளவோடு நிறுத்திக்கொள்ளத்தான் வேண்டும். அப்படி அல்லாமல், உடற்கூறுகளை மீறி எம்பி அது தன்னுடைய சகாவை விட பலமடங்கு நீட்டம் கொள்ளும் என்றால், அது பார்வையாளன் கண்ணுக்கு எப்படித்தென்படுமென்றும், அந்த உடலுக்கே எத்தனைப்பெரிய தர்மசங்கடமாக முடியுமென்றும் நம்மால் ஊகிக்கக்கூடியதே. அளவீடுக் கொள்கையை மீறி, “நான் சுதந்திரமானவன்” என்று சித்திரத்தில் ஒரு அங்கம் மட்டும் முழங்குமேயானால் அது செய்வது கலகமேயாகும். அப்படி கலக்கத்தில் இறங்கினால் அது படத்தின் மற்ற அங்கங்களால் கருணையில்லாமல் அடித்து நொறுக்கப்படும். அல்லது முழுமையுடன் இணையாமல் என்றென்றைகும் தனித்தே நின்றுவிடும். இதில் ஒன்றே அதன் விதியாக அமையும். 

பிரமாணானி என்ற சம்ஸ்கிருதச் சொல் அழகியல் நூலில் அளவீடுகளைக் குறிக்கிறது. தத்துவ நூலில் ஒரு அறிவை அடையும் வழியை, அந்த அறிவுக்கான சான்றுகள் என்னென்னெ என்பதை குறிக்கிறது (பிரமாணம் – சான்று). அறிவுக்குறிய சான்றுகள் எல்லாமே அறிவுடன் சம்பந்தம் உடையவை. ஒவ்வொரு சான்றும், அதிலிருந்து அந்த ஒட்டுமொத்த அறிவு எவ்வாறு அடையப்படுகிறது என்று ஐயம் திரிபட நிரூபித்தாகவேண்டும். ஒரு நாட்டில் உள்ளவர்கள் எப்படி அடையாள அட்டயைக் கொண்டு அவர்கள் அந்த நாட்டின் குடிமக்கள் தான் என்று சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கிறார்களோ, அதேபோல் ஒவ்வொரு சான்றும் அந்த அறிவின் முழுமையை சுட்டும் விதமாக சந்தேகத்திற்கிடமில்லாமல் அமையவேண்டும். அந்த முழுமையை தனித்தொருவராக நின்று தங்களில் எவரும் உடைக்கவில்லை என்று நிரூபிக்கவேண்டும். தத்துவத்தில் உள்ள தர்க்கச்சான்றுகளின் தர்க்கரீதியான உறவும், கலையில் உள்ள அளவீடுகளின் அழகியல்ரீதியான உறவும், ஒரு புள்ளியில் இணக்கம் கொள்கின்றன. உண்மையென்பது தனித்தனி தகவல்களில் இல்லை. அந்தத் தகவல்களின் இணைவில், இசைவில் இருக்கிறது. இதில் ஓர் பிரபஞ்ச உண்மை பொதிந்திருக்கிறது. இதையே கவிஞன் “அழகு தான் உண்மை, உண்மையே அழகு” என்கிறான். 

அளவீடுகளே பரஸ்பர சமநிலையை உருவாக்குகிறது. படைப்புடைய லட்சியங்களின் கட்டமைப்பை இதுவே அமைக்கிறது. மனிதர்கள் கூட்டமாகக் கூடினால் அது வெறும் திரள். ஆனால் ராணுவப்படையில் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய அளவீடின் வட்டத்துக்குள் நின்று செயல்படுகிறான். காலத்தில், வெளியில், நிற்கவேண்டிய இடத்தில் நின்று, நகரவேண்டியபடி நகர்ந்து, செய்ய வேண்டிய செயலை செய்கிறான். ஒரு வீரனும் மற்றொரு வீரனும் பரஸ்பர பந்தத்துடன் அவரவருக்கான இடத்திலும் செயல்வட்டத்திலுமே நின்றபடி செயலாற்றுவார்கள். இதுவே அவர்களை ராணுவத்துடன் ஒன்றியவர்களாக ஆக்குகிறது. ஆனால் அது மட்டும் அல்ல. படை என்பதே அதன் தலைவரின் மனத்திலுள்ள படை என்ற கருத்தின் புற வடிவம். அந்த கருத்தே படையை இயக்கும் ஒற்றை விசையாக உள்ளது. இப்படி, ஒரு படைப்பை இயக்கவும் ஒரு விசை தேவையாகிறது. அந்த விசையின் இயல்புக்கு ஏற்ப, அது கலைப்படைப்பா, அல்லது வெறும் கட்டுமானமா என்று வகுக்கலாம். கூட்டுப்பங்கு நிறுவனத்தின் அமைப்பையும்  நிர்வாக கொள்கைகளையும் உள்ளூர ஒரு விசை கூடி தீர்மானிக்கிறது. ஆனால் அந்த ஒற்றை விசையின் வெளிப்பாடு மட்டுமே அதன் இருப்பின் நோக்கம் அல்ல. அதைத்தண்டிய யதார்த்தமான காரணத்தை நிறைவேற்றவே அது அமைக்கப்படுகிறது. மாறாக, ஒரு கலைப்படைப்பின் தரிசனமென்பது தன்னளவிலேயே நிறைவும் முழுமையும் கொண்டதாகும். 

நம்முடைய இருப்பை, ஆளுமையை, ‘நான்’ என்று நாம் உணர்கிறோம். அது நம்மில் கூடியுள்ள ஒருமையின் உணர்வு. அந்த உணர்வு நாம் மகிழ்ச்சி, அல்லது சோகம், அல்லது பிற ஆழமான உணர்ச்சிகளால் ஆட்கொள்ளப்படும்போது மேலும் வலுவாகிறது. அது வானத்தைப்போல. நீலநிறமாக இருப்பதால் தான் கண்ணுக்குத்தெரிகிறது. நாட்பொழுதில் நிறங்கள் மாற மாற வெவ்வேறு விதமாக தோற்றமளிக்கிறது. கலைப்படைப்பிலும் ஒரு இலட்சிய உணர்சின் விசை அதன் ஒருமைபபட்டுக்கு அவசியமாகிறது. ஏனென்றால் கலைப்படைப்பின் ஒருமைப்பாடு ஒரு படிகத்தின் ஒருமைப்பாடு போல மந்தமானதும், ஈடுபாடில்லாததும் அல்ல. உணர்ச்சிகரமான, ஆற்றல்மிக்க வெளிப்பாட்டையுடையது. இந்தக்கவிதையை பாருங்கள்:

Oh, fly not Pleasure, pleasant-hearted Pleasure,

Fold me thy wings, I prithee, yet and stay.

For my heart no measure

Knows, nor other treasure

To buy a garland for my love to-day.

And thou too, Sorrow, tender-hearted Sorrow,

Thou grey-eyed mourner, fly not yet away.

For I fain would borrow

Thy sad weeds to-morrow,

To make a mourning for love’s yesterday.

இந்த மேற்கோளிலுள்ள வார்த்தைகள் சந்தத்தை வெளிப்படுத்த மட்டும் இவ்வாறாக கோர்க்கப்பட்டிருந்தால் அது நம்மை எவ்விதத்திலும் ஈடுபடுத்தாது. என்னதான் கச்சிதமாக அளவீடுகளோடு சந்தமும் தாளமும் கூடியிருந்தாலும் அது வெறும் கட்டமைப்பாகவே நிற்கும். ஆனால் அதே வார்த்தைகள் உள்ளுரையும் ஓர் இருப்புக்கு வெளிப்புற உடலாக அமையும்போது அது தனக்கென்று ஓர் ஆளுமையை அடைகிறது. அந்த தாளம் வழியாகவே அதில் உள்ளுறையும் அந்த இருப்பு பிரவாகிக்கிறது. வார்த்தைகளில் ஊடுருவுகிறது. அவற்றின் ஏற்ற இறக்கங்களில் துடித்துத்துடித்து உயிர்கொள்கிறது. மாறாக, இக்கவிதையில்லுள்ளே உறையும் உணர்வை வெறும் கருத்தாக, சந்தவிசேஷமில்லாத வாக்கியத்தில் கூறினோமானால், அது வெறுமனே ஒரு செய்தியை வெளிப்படுத்தும். உயிரற்றதாக, பிணம்போல் இருக்கும். அதனை பாடுவதில் எந்தப்பயனும் இருக்காது. அந்த உணர்வுப்பூர்வமான இருப்பு சரியான சந்ததாளவடிவத்தில் அமைகையில் மட்டுமே, ஒருகணமும் நில்லா நீங்கா இவ்வுலகின் நித்தியப்பெருவிழாவில் இடம்பெருவதற்கான உயிர்ப்பு அதனில் அமைகிறது.

இந்த வேடிக்கைப்பாட்டை பாருங்கள்:

Thirty days hath September,

April, June, and November.

இதில் சந்தமுள்ளது. உயிர்ப்பலையின் சாயல் உள்ளது. ஆனால் நம்முடைய இதயத்துடிப்பின் சந்தத்தோடு இந்த வரிகள் இழைவதில்லை, இவ்வரிகளில் ஒருமையை உருவாக்கும் உயிர்ப்பு இல்லை. இவ்வரிகள் கைப்பிடிகள் வைத்தப் பை போல வசதியாக உள்ளன. மனித உடலைப்போல் தவிர்க்கமுடியாததாக, வேறெப்படியும் படைக்கப்பட்டிருக்கமுடியாதென்ற உணர்வை உருவாக்கவில்லை.

நம்முடைய சொந்த கலைப்படைப்புகளில் உறைந்திருக்கும் இந்த உண்மை நமக்கு படைப்பின் அகத்தில் பொதிந்துள்ள மர்மத்திற்குள் ஒரு சின்ன வெளிச்சத்தை காட்டுகிறது. இவ்வுலகின் முடிவில்லா சந்தங்கள் வெறும் கட்டமைப்புகளல்ல. இவை நம்முடைய இதய நரம்புகளை சுண்டி இழுதக்கின்றன. இசைக்கின்றன.

ஆகவேதான் நாம் இந்த பிரபஞ்சத்தையும் ஒரு படைப்பென்று உணரலாகிறோம். அதன் மையத்தில் உயிர்ப்பான ஒன்று இருக்கிறதென்றும், அது தன்னை எண்ணிலடங்கா இசைக்கருவிகளில் வாசிக்கப்படும் முதல்முடிவில்லாத பிரபஞ்ச கானமாக வெளிப்படுத்திக்கொள்கிறதென்றும் நாம் உணர்கிறோம். ஒரு நொடிக்கூட அதன் தாளம் தப்புவதில்லை. வானத்துக்கு வானம் தோரணம் கட்டி விரியும் இம்மாபெரும் உலகக்கவிதையானது வெறும் பருப்பொருட்களின் பண்டவஸ்துக்களின் நிதர்சனங்களின் பட்டியலல்ல. நாம் ஆனந்தத்தை உணரும்போதெல்லாம் அப்பாடலின் நேரடியான தரிசனத்தை அறிகிறொம். நம்முடைய ஆனந்தமே இப்பிரபஞ்ச பேரிருப்பின் ரகசியங்களுக்குத் திறவுகோல். ஒரு பேராளுமை இப்பிரபஞ்சத்தின் எண்ணிலடங்கா ஆளுமைகளின் மேல் தன்னுடைய ஓயாத வெளிப்பாட்டின் வழியே கோலோச்சுகிறான். வக்கீல் வாய்தாக்காரனைப்பார்த்து பாடுவதில்லை, ஆனால் புதுமணவாளன் தன் மனைவி கேட்கவேண்டுமென்று பாடுகிறான். நம்முடைய ஆன்மா அப்பாடல் கேட்டு நெகிழ்ந்து கரையும் போது, அது நம்மிடம் கட்டணமேதும் எதிர்பார்ப்பதில்லை என நாம் அறிகிறோம். காதலின் சமர்ப்பணத்தையே அம்மணவாளனின் குரலில் கேட்கிறோம். மறுக்கமுடியாத ஓர் அழைப்பும்.

சித்திரக்கலை, இன்னும் பிறக்கலைகளில் சில வடிவங்கள் அலங்காரத்துக்கென்றே படைக்கப்படுகின்றனவே, அவற்றுக்கு வெளிப்படுத்த உயிர்ப்பான உள்ளுறையும் இலட்சியம் ஏதும் இல்லையே என்ற கேள்வியை நாம் எழுப்பலாம். ஆனால் அது அப்படி அல்ல. அலங்காரக்கலையில் படைப்பாளியின் உணர்ச்சிகரமான வெளிப்பாடு உள்ளது. “இதன் படைப்பில் நான் மகிழ்கிறேன், இது நன்று,” என்ற உணர்வு.  ஆனந்தத்தின் மொழிபுகள் அனைத்துமே அழகுதான். ஆனால் இங்கே ஒன்று சொல்லியாகவேண்டும். உண்மையான மகிழ்வு என்பது வெறும் கேளிக்கை அல்ல. அழகு வெறும் வடிவலட்சணம் அல்ல. தன்னிலையிலிருந்து பிரிந்து எழுந்து உயர்கையில் உருவாகும் உணர்வே மகிழ்வு. அது ஆனந்தம். உள்ளம் பிணைப்புகளில்லாமல் ஆகையில் உருவாகும் உணர்வது. அழகென்பது இங்கு உறையும் உண்மையான சாரமான ஒன்றின் ஆழமான வெளிப்பாடு. அந்த சாரத்தின் வெளிப்பாடு மட்டுமே நம்முடைய மனங்களை நிறைவடையச்செய்கிறது. வேறு வசீகரங்களேதும் அதனிடத்தில் இருப்பதில்லை. தேவையும் இல்லை. வெகுசில தூயப் பரசவசக் கணங்களில் நாம் உலகத்தைப்பற்றிய இந்த உண்மையை நேரடியாக பிரத்யட்சமாக அறியலாகிறோம். நாம் இந்த உலகை வெறும் இருப்பாக மட்டுமல்லாமல், அதன் வடிவங்கள், ஒலிகள், நிறங்கள், வரிகளினால் அழகூட்டப்பட்டிருப்பதை அறிகிறோம். “என் படைப்பில் நான் மகிழ்கிறேன்” என்று நின்று பெருமையுடன் அறிவிக்கும் ஒன்று  அவற்றின் வழியாக வெளிப்படுவதை நம் உள்ளங்கள் அறிந்துகொண்டே இருக்கிறது.

இதனால் தான் அந்த சம்ஸ்கிருதப் பாடல் ஒரு சித்திரக் கலைப்படைப்பின் இன்றியமையாத பாகங்களாக (1) ரூபங்களின் தனித்துவத்தன்மை, (2) சரியான அளவீடுகள், அவற்றின் ஒருமை என்பதுடன், (3) ஃபாவ: – அதன் உணர்ச்சிப்பூர்வமான மையம் என்று மூன்றாவதாக குறிப்பிடுகிறது.

உணர்ச்சிகரமான வெளிப்பாடு மட்டும் கலையாகாது – அது எத்தனை உண்மையான உணர்வாக இருந்தாலும் சரிசரி இந்தப்பாடல் அதன் ஆசிரியரால் “இரக்கமற்ற காதலியிடம் ஒரு விண்ணப்பம்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது:

And wilt thou leave me thus?

Say nay, say nay, for shame!

To save thee from the blame

Of all my grief and grame.

And wilt thou leave me thus?

Say nay! say nay!

கவிஞரின் விண்ணப்பத்தில் இருக்கும் தீவிரத்தையோ அதை வெளிப்படுத்துவதற்கான தேவையையோ நான் சந்தேகப்பட்டால் அவர் கோபித்துக்கொள்ளமாட்டார் என்று நினைக்கிறேன். அவர் அந்த பாடலின் வடிவத்துக்கு மட்டுமே பொறுப்பு கொண்டவர். அதன் உணர்வுகளுக்கல்ல. உணர்வுகள் அந்த பாடலை உருவாக்கி வடிப்பதில் வெறுமனே கச்சாப்பொருள் மட்டுமே. பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கு ஏற்ப நெருப்பு வெவ்வேறு வண்ணங்கள் கொள்கிறது. ஆனால் நாம் எரிபொருளை கவனிப்பதில்லை. அதை பற்றி விவாதிப்பதில்லை. நெருப்பையே கவனித்து விவாதிக்கிறோம். எப்படி ஒரு ரோஜாப்பூ அதன் சாரத்தைத்த்தண்டிய வடிவம் கொண்ட ஒன்றோ, அப்படி ஒரு பாடலென்பது அதில் வெளிப்படுத்தப்பட்ட உணர்வைத்தண்டி முற்றிலும் பெரிதான, வேறான ஒன்று. இனி முந்தைய பாடலைக் காட்டிலும் ஆழமான, உண்மையான உணர்வு வெளிப்பாடு அமைந்திருக்கும் மற்றொரு பாடலை பார்ப்போம்:

The sun,

Closing his benediction,

Sinks, and the darkening air

Thrills with the sense of the triumphing night,—

Night with her train of stars

And her great gift of sleep.

So be my passing!

My task accomplished and the long day done,

My wages taken, and in my heart

Some late lark singing,

Let me be gathered to the quiet West,

The sundown splendid and serene,

Death.

இந்தக் கவிதையில் வெளிப்பட்டுவரும் உணர்வுகளும் எண்ணங்களும் ஒரு உளவியலாளரின் பார்வைக்குறியவை. ஆனால் கவிதையென்னும்போது அதன் உணர்வுளும் எண்ணங்களும் அப்படியே அதன் கவித்தவத்தில் கரைந்துவிடுகிறது. உயிர்ப்புள்ள தாவரத்தில் கார்பன் உள்ளதென்ற ஞானம் அதை கரியாக்க எண்ணுபவனுக்கே முக்கியம். தாவரங்களின் மீது காதல் கொண்டவனுக்கு அது ஒரு பொருட்டே அல்ல.  

இதனால்தான் நிலத்தின் மேல் ஏதாவது புதியவகை கொள்கையின் உணர்வு, புயலாகக் கிளம்பும்போது அங்கே கலையில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுவிடுகிறது. அந்தக் கொள்கையுணர்வின் ஒற்றைபப்டையான தீவிரம், படைப்பின் அமர்த்தியான இணக்கத்தின் எல்லைகளை உடைத்து முந்தியடித்துக்கொண்டு தலை நீட்டுகிறது.  தரை மிதித்து புயல் எழுப்பித் தன்னை நாயகனாக நிறுத்திக்கொள்கிறது. அதன் எடையும் அழுத்தமும் படைப்பில் கைகூட வேண்டுய ஒருமையை அதன் பீடத்திலிருந்து அசைத்து பெயர்த்துவிடுகிறது.  இதே காரணத்தால் தான் தேவாலய பக்தி பாடல்களில் உண்மையான கவித்துவத்தன்மை இருப்பதில்லை. தேசபக்தி பாடல்களிலும் இதே குறையை காண முடிகிறது. திடீர் மழையில் பொங்கி எழும் மலைநீர் பெருக்குகள் இவை. தங்களுடைய பாதையிலுள்ளதை அடித்துச்செல்லும் வேகமே இவற்றின் குறிக்கோள், நீரின் ஒழுக்கு அல்ல. இக்கொள்கைகளின் உணர்ச்சிவேகம் வலிமையும் தன்னகங்காரமும் பொருந்தியவை. தங்களுடைய வீரியத்தை வெளிபடுத்த ஒரு அரங்கை அமைத்துக்கொடுக்கும் ஊடகம் மட்டுமே கவிதை என்ற பார்வையுண்டு இவற்றுக்கு. இப்படி எந்த கொள்கைக்காகவும் கவிதை ஒருநாளும் தன்னுடைய ஆன்மாவை பேரம்பேசி விற்றுவிடக்கூடாது. என்னதான் பொதுநலம், சமூகப்பயன் என்ற பெயர்களெல்லாம் சூடிக்கொண்டு வந்தாலும், அந்த சபலத்துக்கு கவிதை இடம் கொடுக்கவே கூடாது. கலைஞனுக்கும் கலைக்கும் இடையே காதலின் தூய ஊடகமான பழுதற்ற பற்றின்மை இருத்தல் வேண்டும். அந்தக்காதலை தூய்மையாக, முழுமையாக வெளிப்படுத்துவது மட்டுமே அந்தக்காதலில் ஈடுபடுவதன் குறிக்கோளாக இருக்க வேண்டும். தன் காதலை வேறெதன் சேவையிலும் பயனாக்கும் அற்ப எண்ணத்தை கலைஞன் அரவே ஒழித்துக்கட்ட வேண்டும். 

அன்றாட வாழ்க்கையில் நம்முடைய ஆளுமை சுயநலத்தின் சிறிய வட்டத்திற்குள் வலம் வருகிறது. ஆகவே அந்த சிறிய இடைவெளிக்குள் நம்முடைய உணர்ச்சிகள், நம் வாழ்க்கையின் நிகழ்வுகள் நமக்கு பூதாகரமான முக்கியத்துவம் பெற்று நிற்கின்றன. அவை தங்களை ஓங்கி ஓங்கி முன்வைத்துக்கொண்டே இருக்கின்றன. அந்த ஓங்கியக் குரலுக்கு முன்னால் அந்த உணர்வுகளும் நிகழ்வுகளும் முழுமையுடன் கொள்ளும் ஒருங்கிணைவு நம் கண்களுக்குத் தென்படுவதில்லை. ஆனால் கலையில் நம்முடைய ஆளுமை நித்தியத்தின் பற்றில்லா சுதந்திர வெளியில் சென்று நின்றுகொள்கிறது. அங்கே தன்னுடைய உண்மையான அளவை அது அறிந்துகொள்கிறது. நம்முடைய வீடு பற்றி எரியும்போது தீயின் தன்மையை நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. ஆனால் நட்சத்திரங்களில் உள்ள நெருப்பு அலகிலா பேரிருப்பின் உள்ளத்திலுள்ள நெருப்பே தான். அங்கே, அது படைப்பின் லிபியானத் தீ.

(பிரிட்டிஷ் கவிஞர்) மாத்யூ ஆர்னல்ட் நைட்டிங்கேல் பறவையை நோக்கிப்பாடும் பாடலின் வரிகள் இவை:

Hark! ah, the nightingale—

The tawny-throated!

Hark, from that moonlit cedar what a burst!

What triumph! hark!—what pain!

வலி நம்முடைய அன்றாடத்தின் எல்லைகளில் சென்று முட்டும் போது அது நம்முடைய நெஞ்சில் உதைத்து நம்மை பின்னால் தள்ளுகிறது. இது பெரும் வேதனையை உருவாக்கிறது. வாழ்க்கையின் குறுகிய வட்டத்தோடு அதன் தீவிரம் முரண்படுகிறது. அன்றாடத்தில் வலியென்பது ஒவ்வாத அபசுவரமாக ஆகிறது. ஆனால் பெரும் தியாகத்தின் வலியில் காலாதீதத்தின் பற்றில்லாமை உள்ளது. அங்கே பெருவலி தன்னுடைய பூரண கம்பீரத்துடன் வெளிப்படுகிறது. ஆதியந்தமில்லா இப்பெருவாழ்வின் விரிவில் அதற்கான இயல்பான இடம் அமைந்துவிடுகிறது. முகில் திரண்டு கருண்ட வானில் வெட்டும் மின்னல் அங்கே இணக்கத்துடன் வெளிப்படுகிறது. சோதனைச்சாலைக்கம்பியில் நிகழும் மின்னலுக்கு அந்த கம்பீரமும் இணக்கமும் இருப்பதில்லை. அந்த பெருவிரிவில் வைத்துப்பார்க்கையில் பெருவலிகளனைத்துமே பெருங்காதலுடன் பொருந்தி இசைவு கொள்கின்றன. எல்லா வலிகளுமே அன்பைக் காயப்படுத்துபவை. ஆகவே பெருவலியில் அன்பின் பரிபூரண இருப்பும் பரிபூரண அழகும் என்றென்றைக்குமாக வெளிப்படுகிறது. மாறாக, ஒரு வணிக ஒப்பந்தம் கசந்து போகும்போது ஏற்படும் வலியில் கம்பீரம் ஏதும் இல்லை. ஒன்றை ஒன்று கவ்விக் கடித்து உண்டு தீர்ப்பதிலேயே அது முடிகிறது. 

கவிஞன் பாடுகிறான்:

How thick the bursts come crowding through the leaves!

Eternal Passion!

Eternal Pain!

முதல்முடிவிலா காலாதீதப் பெருவெளியில் பொதிந்துள்ள பெருவலியைப்பற்றி வேதக்கவிஞர்கள் பாடுகிறார்கள். ஆம், “எல்லா படைப்பும் ஆனந்தத்திலிருந்து உதிப்பவை” என்று கூறிய அதே வேதக்கவிஞர்கள்.

ஸ தபஸ் தபத்வா சர்வம் அஸ்ரஜாத யாதிதம் கிஞ்ச

தன்னுடைய பெருவலியின் தாபத்திலிருந்து படைப்போன் இவ்வனைத்தையும் படைக்கிறான்.

படைப்பின் மையமான இத்தவம் ஒரே நேரம் பேரானந்தமும் பெருவலியும் தூண்டக்கூடியதாகும். இதைப்பற்றி வங்கநிலத்து நாடோடி மெய்ஞானிகள் பாடும் பாடல் ஒன்று:

ஆனந்தத்தின் இருளில் அமிழ்கின்றன என் கண்கள்

காரிருளின் பரவசத்தில் கமலமலரென இதழ்மூடுகிறது, என் இதயம்

அந்தப்படல் பேசும் ஆனந்தமானது நீலக்கடலைப்போல் ஆழமானது, நீலவானப்போல் முடிவில்லாதது. இரவின் கம்பீரமும் தீராப் பேரழகும் கொண்டது அது. அதன் முடிவில்லா இருள், பிரகாசமாக ஒளிரும் பற்பல உலகங்களை தனக்குள் பேரமைதியின் மகாத்மியத்தோடு அணைத்துக்கொண்டிருக்கிறது. எல்லா பெருவலிகளும் ரணவேதனைகளும் ஒன்றாகும் ஆனந்தப்பெருவெளி அது. 

தன்னுடைய படைப்பின் ஊற்றைப்பற்றி மத்தியக்கால இந்தியாவின் கவிஞன் ஒருவன் ஒரு ‘கேள்வி-பதில்’ கவிதை வழியாக சொல்கிறான் இப்படி:

பறவையே, நீ இரவெல்லாம் உன் கூட்டில் அடைந்திருந்தாயே, அப்போது உன் பாடல்கள் எங்கே இருந்தன?

உன்னுடைய மகிழ்ச்சியெல்லாம் அங்கே தானே இருந்தது?

நீ ஏன் உன் மனதை வானத்திடம் பரிகொடுத்துவிட்டாய், முதல்முடிவில்லாத வானத்திடம் பரிகொடுத்துவிட்டாய்?

பறவை சொல்கிறது:

எல்லைகளுக்குள்ளே ஓய்வாயிருந்தபோது மகிழ்ச்சியை அடைந்தேன்

ஆதியந்தமில்லாமைக்குள் பறந்தபோது என் பாடல்களைக் கண்டுகொண்டேன்!

ஒரு கருத்தை அதன் அன்றாடத்திலிருந்து விடுவித்து அதை பெருவிரிவின் சுதந்திர வெளியில் உயர்த்திப் பறக்கவிடுவதே கவிதை செய்யக்கூடியது. மெக்பெத்தின் அதிகார ஆசை, ஒத்தெல்லோவின் பொறாமை, இவை நீதிமன்றத்தின் முன்னால் கொண்டுவரப்பட்டால் பரபரப்பான செய்திகளாக நின்றுவிடும். ஆனால் ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் அவ்வுணர்வுகள் தீப்பற்றி எரியும் நட்சத்திரக்கோவைகளுக்கிடையே எழுகின்றன. ஊர்வலமாக புறப்பாடு செல்கின்றன. அங்கே படைப்பு காலம்கடந்த விழைவுகளுடன், காலம்கடந்த வலிகளுடன் அதிர்ந்துகொண்டிருக்கிறது.

*

The creation of taste (or) Why I translate – an Indian writer’s translation manifesto

There was a recent back and forth between Tamil writer Ambai and translator N.Kalyan Raman in Scroll. Ambai had written about her perception of certain inadequacies in literary translation from an Indian language like Tamil into English. Her protests were a writer’s, and despite some generalizations that I couldn’t entirely get behind, I could sympathize with her writer’s need to be well-represented, her apprehensions about certain perceptions of a hierarchy between English and Tamil – consequently, the translator and the writer – and the demands of the market.

N.Kalyan Raman’s response, from a translator’s perspective, was to clarify the practices in contemporary translation. That is, translation is not finding an exact equivalence of the source text in the other language – it is not in the ‘service’ of the source text – but rather, it an act of creating a negotiated text that does justice to the source text while creating a literary piece in the target language. This is important, for we have so few literary translators around us, and hardly any discussions of their craft, either in print or in literary festivals or otherwise. This ties to what I perceive as a general lack of critical discourse in the larger English-driven Indian literature space.

As both a writer, writing in Tamil, and a translator working between Tamil and English, and thus perhaps as someone who understands both sides of this debate, I have a few things to say on this matter.

Samvada, samanvaya

My understanding of translation is more in line with Kalyan Raman’s perspective than Ambai’s, perhaps because I am a practicing translator. No, translation is certainly not in the ‘service’ of the source text. Nor are the writer and translator in competition.Translator, traitor is a well-worn phrase, but I think it is an idea that comes out of a culture that sees literature, and everything else, as the product of agon. On the other hand I feel that translation is moulded, quite intuitively, by samvada and samanyava, harmony and integration.

The sensitive, skilled literary translator is no traitor, either to the writer or the reader. Sensitivity is its own kind of skill in this enterprise, as the skill in translation is necessarily expanding one’s sensitivity to rhythms of language, meaning and expression in both languages – really, in the languageless zone that underlies both.

Translation is quite simply an act of bringing in harmony and balance. It is an act of tact and grace. The harmony really exists within the translator, for it exists in the languageless zone. Everything else is simply its expression, an expression negotiated with the writer and reader through the text. The translator embraces both the speaker-writer and the listener-reader within themselves and then proceeds to create a nuanced, lengthy dialogue with them both. Often, within the translator, they are both the same person, the translator themselves, now acting as one, now as the other. It is this self-talking, this internal monologue posturing as dialogue, that the reader reads as the translated text.

Where precisely is the harmony achieved? In language, in expression, in meaning.

The facility of reading should be unimpeded in the other language – if possible, creating the same kinds of rhythms and waves and swings in the mind as the original did. This is harmony of language.

The translator should never interpret the text, or try to minimize the interpretive influence, they should adopt the veils and masks of the writer in keeping the erotics of the text, its bhavana, intact. This is harmony of expression.

The translated text should evoke the same kinds of emotions and resonances in the reader, in the same order, to the same extent, with the same overall striking effect as the source. This is harmony of meaning.

Reader, writer, translator

The success of the translated text perhaps lies in how much the reader identifies with the reader within the translator. Or how much the translator is able to persuade the reader of this identification. The writer, when she writes, simply does not think of any reader – she just writes, moulding instinct into form. But the translator always carries the reader within herself too. It is inescapable.

What I can report from experience as a translator is, the most one can do is simply accept the internal reader for who she is and write for her – not obsess too much about the reader ‘out there’. It is simply an instinct, much like the writer’s instinct for form. It is the knowledge, the intuitive certainty within oneself, that “I am an ideal reader, and if it satisfies me, it will satisfy them too”.

The writer, of course, is a very important person in this negotiation – but arguably, not as important as the text, or the reader is. The presence of the writer in the room as the translator works is onerous and intrusive. I cannot imagine encountering the writer in flesh and blood as I translate – it is frankly horrifying to imagine the writer sitting on the translator’s shoulders like a vethalam whispering instructions into her ear as she works.

The writer, too, cannot evaluate a translation wholly impartially, even if they are a reader in the other language. This is understandable. It is a part of the creative process. The writer may perhaps provide feedback on words grossly mistranslated, but any intent or meaning from the text is best left to the judgment of the translator, if there is trust.

And no good translator, no translator who understands translation as an act of harmonizing, will allow overt influence of the writer on the aesthetics of the translated text – it is really too much of a disharmonizing influence. Almost like an intrusive parent trying to clean your room. And my sense is most writers understand this, for there is an equally subtle creative process at play here. It is this trust – between writer and translator, that one will dip and draw out of the great languageless zone just as instinctively as the other did, that matters.

The writer can trust in the text, and the competence of the translator to read them as them. If there is no trust, certainly it is better to withdraw permission. Perhaps an even better thing would be to only entrust translation into those hands and eyes that one implicitly, instinctively trusts.

So this is what I have to say about the act of translation itself, and the relationship and trust that is necessary between writer and translation.

*

Next, on questions of a hierarchy in translation, and the role of the market.

I feel that right at the outset, there is an important distinction to be made. In talking of the ‘market’, the translator is made out to be something of a stooge of the capitalist structure. This is egregious, there is even something insulting about it. This places the translator in the service of the publishing industry, and implies that what is translated is what is in demand in the market.

Perhaps this happens, but I believe strongly that the translator should categorically not be a linguistic mechanic for hire, but a literary initiator (I am translating the Tamil phrase இலக்கிய முன்னெடுப்பாளர்). We may be living through the freest markets of them all, but the translator, as a literary initiator – must still allow himself to be free of even that. For the translator is the crucible of language. In him the language of the poets breaks down, rebuilds, morphs, extends.

The translator as literary initiator

The translator as a literary initiator is a very important role. I predict that this will become particularly important in the coming century in India – or it should, if we feel it is important to transmit some semblance of culture. For we are fast becoming a country where most people are not proficient even in reading, writing and speaking one language, let alone two. In Tamil Nadu, for instance, the young people are comfortable with neither Tamil nor English but with Tanglish – a patois that is neither Tamil nor English, composed of a stilted, repetitive vocabulary that is adequate for their communicative needs. Even machine translation allows for easy exchange of predictable lines of text, but they fail in the face of linguistic expressions like poetry which exist at the bleeding edge of language and represent crucial advances of the human mind.

Language is meaning, ideas are often absorbed first as language itself. Translation is the expanding of ideaspace in that language. Cultural transmission needs vocabulary for new ideas, and that will need a linguistic proficiency that can create flexibly back and forth in the space between languages, perhaps even creating new meanings that transcends both. So even as the common man might move towards a small, compact language with a standardized script, the literary initiator in India will be an individual who has proficiency in multiple Indian and foreign languages, particularly classic languages, who can think in multiple languages, who will stand at the crossroads of ideas like the Buddhist stupas of old used to.

This was always the case. In modern India, Tagore, Bharati and Pudhumaipithan come to mind immediately. Even as standardized prose evolved in the journals and newspapers, these literary masters pushed the boundaries of language and introduced new linguistic and expressive ideas. They read widely and translated even as they wrote – absorbing, reproducing, rewriting. They were writers, poets, but their role as literary initiators owed much to their constant experiments in translation.

The translator as curator

The ideal translator is also a curator. He is a person who collects and transmits ideas through language that he, personally, finds important in time, exciting enough to express and expand on. Thus the translator’s work as a literary initiator lies in the creation of taste, the setting-up of standards.

A literary initiator should only be guided by his own taste, his own standards, irrespective of what the market demands. If the translator envisions of themselves as not simply a language-mechanic, but a literary and cultural initiator, then the demands of the market will cease to become meaningful to them in any way. If the popular press will not publish them, they then seek out small presses, niche presses, or better yet, simply do it online where there is more than enough real estate to go around.

Then, the translator as literary initiator initiates and guides discussion on the literatures he reads and translates, and also the literatures he reads and does not choose to translate. The translator is the lynchpin of the human literary ecosystem, borrowing, lending, expanding, language and meanings, continuously expanding our cultural boundaries.

There is a difference between how a writer translates and how a professional translator translates. A writer or poet often translates from other languages into the language they write to train their mind on the rhythms of the other language expressed in theirs, to discover new ways of expression and style. These, too, are acts of literary initiation, often finding fruition in the original work of those writers and poets. But translators who don’t write originally can also function as readers, appreciators, guides and critics, and help the general reader see what they are translating and why, which writers may or may not want to spend time articulating.

Now that we have a picture of what a translator as literary initiator and curator might look like, we come back to Ambai’s concerns, about hierarchies in translation today, and demands of the market.

*

Hierarchies in translation

Is there a hierarchy in translation? Is publication in English considered a prestige in and of itself?

Yes, there is certainly a prestige associated with publication of vernacular work in English. There are far more readers in English, and then there is the fame that is accorded to writing that appears in English that cannot be compared to the fame of the vernacular writer, except maybe in languages with a thriving literary culture like Malayalam and Bengali. There are networks available to the writer who is recognized by the English speaking academy that a vernacular writer cannot access. An English-language text is likely to be noticed by international readers, and all writers like to be read, especially be people as different from them as possible. There is also the prestige associated with being internationally known.

But most of the perception of prestige, I feel, is because of a paucity of true literary culture in the vernacular. If a writer has enough readers in the language she writes in, enough engagement, discourse and criticism, then that provides the writer with a great dose of health and courage. She would not care so much about translation into English as a language of special status. It might be just as well for the writer for the work to be translated into other Indian languages, for they might find shared-heart readers in greater numbers well within the country.

And then we have this strange state of affairs where a writer with international fame is suddenly discovered in his own country, hoisted on shoulders and hailed – as if international fame inherently is any arbiter of quality. This is because, quite frankly, we don’t have enough readers and translators and critics in our own country to talk fiercely and passionately about what they feel is ‘good’. Ambai’s concerns have some merit to them in this regard – what is translated and ‘taken over’ to the west, is oftentimes what the west wants to see, or what we want the west to see. There is a reason why Mathorubaagan is read in the west, and Aazhi Soozh Ulagu is not. This is not to take anything away from Perumal Murugan, but simply to stress that a robust literary culture will place both works in front of a wide audience of readers, and talk back and forth about the merits of each work, giving the western readers something to think about, allowing them to listen, to expand their literary horizons and values. Indeed, the work of any true literary culture is to mould the taste of its readers, expand their horizons, no matter what the colour of their skin is. They shouldn’t be telling us what is good in our libraries. We should be telling them, and then inviting them to discuss. When there will be enough such voices, the recognition from an international audience will take its proper place, as the acceptance of yet another section of readership, with its own preoccupations and mental slants.

Building such a true literary culture rests on the back of readers. But translators have a role too. A culture with many, good, translators will be a culture where literature exists in all the spaces within and between languages. There will be so many works translated back and forth, so many presses and online portals publishing them, that there would be no fear of niche publishing houses and interest groups deciding “what will be translated”. That will not be a decision left to them, if that is what writers like Ambai fear – that will be a decision made by the translators themselves.

This is particularly true in the international stage. Novels from India, by Indians, about India, tend to be rather similar, and as a matter of personal taste, bland. A robust literary culture within the country will certainly change our dealings with literatures of other nations. There is so much talk on ‘opening up the canon’ – which is fair – but then they place Salman Rushdie and Arundhati Roy in the Indian canon when we have Ilango and Kalidasa and Vyasan and Kamban. Who else will question this, but a translator, who can simply ‘speak’ Ilango to those readers? Surely we have our sahridayas there.

I don’t agree that there is a hierarchy between the Tamil writer and English translator with the translator on top, as Ambai claims. It’s almost surreal and laughable. In France, or Germany, a person can make a living as a professional literary translator. A translator in India is not paid much, nor recognized, even within the literary community. No one knows names of literary translators in India – who was Premchand’s best translator? Bibhutibhushan’s? Bhyrappa’s? It’s even worse for translators into Tamil from English, or between Indian languages. I am yet to read a piece, an essay, written by any Indian English writer about the translators who translated into English from various Indian languages. AK Ramanujan is the only oft-repeated, famous name. So where is the question of this hierarchy.

As far as I am aware, translators today pull no rank on writers as Ambai claims. For we have very good writers in Tamil and I think most of the translators working today are aware, respectful and admiring of their talent. Translation is immersion, deep reading, prayer. I could never translate an author I didn’t like. And it seems rather silly to have a superiority complex because I type my words in English – particularly, when as a writer still exploring and learning the narrative craft, there is always something I learn from every author I translate.

Indian English – the elephant in the room

Indian literature is not just Indian-writing-in-English literature. But the lay, English-educated reader cannot escape this perception. The elephant in the room, is of course, the privilege this society-world holds over the vernacular writers because of their networks and contacts, their clout in the west because they speak its language, and the almost complete absence of critical discourse within this space in India. This state of affairs may not be because of active malice, or haughtiness on the part of the English writers in India – most individuals are quite nice people. But ignorance or malice or lethargy, this state of affairs needs to change. This is a separate concern in and of itself that I won’t go into in too much detail now, except to make the point that translators translating into English oftentimes become part of this culture, and they have the tools and responsibility to change it, expand its horizons. This is already happening with a new crop of talented translators coming up, but there is more to be done.

A manifesto for literary translation in India

All these preoccupations will cease to matter when we will have a real, honest, robust, multilingual literary and intellectual culture in India. And that is what a young team of Indian translators with a mission and manifesto of this sort will be able to accomplish.

What will the aims of such a manifesto be?

1. The young Indian translator shall be well read in two or more languages, preferably Indian languages, with strong likes and dislikes, a keen ear for language, and with interest in writing as an art and a craft. A familiarity with other arts – music, cinema, visual arts – is always helpful.

2. They will translate fast, and translate much.

3. They will translate well, guided by their own personal sense of what ‘sounds’ right.

4. All their activities will be guided by personal taste alone.

5. Publishing the translations as books or with a leading publishing house will not be their goal. It will be published in some form first, even on a blog. There will be constant interactions about the publish text between readers even then. Publication in book form can come later, if necessary. But it should be no hindrance to dissemination of the work anywhere in the world.

6. Translators shall peer review and edit each others’ work, ideally with a sensitive understanding of their aesthetics.

7. Translators shall facilitate an atmosphere for discourse – about works they themselves picked up for translation, about works they did not choose to translate, and about their process of translation itself.

8. Translators shall open up conversations with readers and potential readers as much as they can. A robust literary culture, indeed, an intellectual culture rests on the back of readers.

Unless we bring up a generation of culturally sensitive readers, who read with their eyes and hearts open, and talk about what they like and what they don’t freely and frankly, we will lose our edge. India will become a country of imitators, unoriginal, stilted, affected, with fake, rehashed opinions and ideas that we repeats endlessly for peer points. Indians will not know how to think. Anyone, anytime, can shape our opinions to their will – and the truth is, we are already probably deep in this crisis, as we so often see with social media. Nationalist rhetoric has already blinded a large number of us. And this is such a great pity, because India was always a country of thinkers, debaters, rhetoricians, critics. Our intellectual heritage lies forgotten in our vaults like diamonds growing cobwebs.

So it is truly, massively important that we raise a generation of readers and thinkers – not just mathematically minded puzzle solvers, but logicians, rhetoricians, connoisseurs, artists, critics. It is important because ideas about egalitarianism and secular harmony come from the intellectual culture. It comes out of facing and thinking about ideas we are not comfortable with, not just withdrawing to our own little bubbles. That is tehzeeb, that largehearted spirit of giving and friendship and space. That can happen only with the exchange of ideas. And that begins with translation.

சிறுகதை – ஹைட்ரா

(நன்றி – பதாகை இதழ், அக்தோபர் 2019 )

பின்மதிய இடைவேளையில் அட்சயாதான் வந்து சொன்னாள். “ஐஷூ ரொம்ப அழறாப்பா. என்னன்னே தெரீல…”

கண்கள் விரிய லட்சுமி ஒரு கணம் அவளை ஏரிட்டுப் பார்த்தாள். காற்றில் தும்பிக்கைகள் அலைய வினோத்தின் ரெக்கார்ட் நோட்புக்கில் ஹைட்ரா படத்தை வரைந்துகொண்டிருந்தவள் அதை அப்படியே போட்டுவிட்டு அட்சயாவுடன் ஓடினாள்.

அப்போதெல்லாம் ஒவ்வொருநாளும் காலை பத்தரை மணி இடைவேளையில், அது முடியவில்லை என்றால் லஞ்ச் பிரேக்கிலாவது,  லட்சுமி ஐஷ்வர்யாவை சென்று பார்த்துவிடுவாள். அல்லது இவளைப் பார்க்க அவள் வந்துவிடுவாள். ஆனால் அன்று மட்டும் லட்சுமிக்கு ஐஷ்வர்யாவை சந்திக்க முடியாமல் போயிற்று.  ஏனோ, காலையிலிருந்து வேலை. கிளாஸ் மானிட்டர் பொருப்புகள்.

முதலில் யூனிட் டெஸ்ட் தாள்களை கணக்கிட்டு டோட்டல் போட்டுத் தரச்சொல்லி உத்தரவு வந்தது. மதியம் போகலாம் என்றால் அன்று காலாண்டு பரிட்சைக்கு முந்தய வெள்ளிக்கிழமை. ரெக்கார்ட் நோட்டுகளை முடித்துத்தர வேண்டிய கடைசி நாள். வரிசையாக ஆளாளுக்கு வந்து “ஏய் ஒரு படம்தான் போட்டுத்தாயேன்” என்று நின்றார்கள். லட்சுமி “முடியாது” என்று சொல்லத் தெரியாத குட்டி. பீடி பீரியடிலும் தும்பிக்கைகளாக வரைந்துகொண்டிருந்தாள்.

ஐஷ்வர்யாவும் லட்சுமியும் எட்டாம் வகுப்புவரை ஒரே பெஞ்சில் ஒன்றாகவே படித்தவர்கள்.  ஐஷூ-லச்சு என்று இணை பெயராகத்தான் அறியப்பட்டார்கள். லட்சுமியின் ஹீரோ பேனாவை அந்த வகுப்பிலேயே பயன்படுத்தக்கூடிய ஒரே ஆள் ஐஷ்வர்யா மட்டும் தான் என்பது வித்யா விஹார் பள்ளியின் எட்டாம் வகுப்பு வரிசையே அறிந்த விஷயம். 

ஒன்பதாம் வகுப்பில், விதி –  கிருஷ்ணகுமாரி டீச்சரின் கட்டளையை அப்படியும் சொல்லலாம் – அவர்களை வெவ்வேறு செக்‌ஷன்களில் பிரித்துவிட்டது. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாகவே பிள்ளைகள் சேர்ந்து படித்தால் ஒட்டிக்கொண்டுவிடுவார்கள், கவனம் குறையும் என்ற தர்க்கத்தின் அடிப்படையில் அந்த வருடம் எல்லா வகுப்புகளிலும் செக்‌ஷன்களை கலைத்துப் பிரித்தார்கள். விளைவாக லட்சுமி நைன் – ஏ. ஐஷ்வர்யா நைன் – சி.  

வகுப்புகளாவது பக்கம் பக்கமாக இருந்ததா என்றால் அதுவும் இல்லை. அப்போது பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதியை இடித்துக்கட்டிக்கொண்டிருந்தார்கள். ஆகவே நைன் – ஏ மேலே மூன்றாம் மாடியிலும், நைன் – சி கீழே ஆடிட்டோரியம் பின்னாலேயும் அடியும் முடியுமாக இருந்தது. ஆகவே அன்று மதியம் ஐஷ்வர்யாவை பார்க்க, துப்பட்டாவும், தலைப்பின்னலும், அதிலிருந்து அவிழ்ந்து தொங்கிய கருநீலக்கலர் ரிப்பனும் முதுகுக்குப் பின்னால் படபடக்க, லட்சுமி படிகளில் தாவித்தாவி குதித்து கீழ் தளத்துக்கு ஓடினாள்.  

நைன் – சி வகுப்பின் பின் வரிசையின் கடை ஓரத்தில் பெஞ்சு மீது உடலையே கூடென்றாக்கிக்கொண்டு தலையை கவிழ்த்து படுத்திருந்தவள்தான் ஐஷ்வர்யா என்று லட்சுமி கண்டுகொள்ள ஒரு நொடி பிடித்தது. வெள்ளைச்சீருடையிட்ட அந்த உரு நடுங்குக்கொண்டிருந்தது. கருநீல துப்பட்டாவின் முனை துவண்டு இருபக்கமும் தொங்கியது. உள்ளே அவள் விசும்பியிருக்கவேண்டும், உடலே தூக்கிப்போட்டு அதிர்ந்தது.  லட்சுமி ஓடிப்போய், “ஐஷூ! ஐஷூ! ஏய், என்னடீ ஆச்சு? கேக்கறேன்ல?” என்று அவள் தோளை பிடித்துக் குலுக்கினாள். ஐஷ்வர்யா பந்தாகவே கிடந்தாள். ஒன்றும் சொல்லவில்லை. தலையைக்கூட நிமிரவில்லை. 

வகுப்பில் பத்து பேர்களுக்கு மேல் இருக்கவில்லை. முதல் பெஞ்சில் சில பையன்கள். இன்னும் சிலர் ஜன்னலோரமாக நின்று சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஐஷ்வர்யா  பக்கத்தில் உட்காரும் திவ்யா அங்கே இருந்தாள்.

“திவ்யா என்னடீ ஆச்சு இவளுக்கு?” என்று லட்சுமி குரல் கொடுத்தாள்.

திவ்யா கும்பலுக்குள்ளிருந்து எட்டிப்பார்த்து தோள் குலுக்கினாள்.  “உடம்பு சரியில்லன்னு லஞ்ச் பிரேக்லியே பின்னால போயி படுத்துகுட்டா… தெரியல” என்று நின்ற இடத்திலிருந்தே பதில் சொல்லிவிட்டு உடனே தலையை உள்ளிழுத்துக்கொண்டாள்.

என்ன செய்வதென்று தெரியாமல் லட்சுமி பதறி சுற்றும் முற்றும் பார்த்தாள். “கிருஷ்ணகுமாரி மேடத்துட்ட போய் சொல்லலாமா?” என்று அட்சயா கேட்டாள்.

குனிந்த உருவிலிருந்து ஒரு கை மட்டும் பிரிந்து வந்து லட்சுமியின் கையைத் தேடி கெட்டியாக பிடித்துக்கொண்டது. “வேண்டாமே… ப்ளீஸ்?”

ஐஷ்வர்யா தலை நிமிர்ந்தாள். முகமெல்லாம் சிவந்து கன்னங்களில் உப்புக்கரை தீட்டியிருந்தது. “திட்டுவாங்க…” குரல் கெஞ்சி சிறுத்தது. அழுகையானது.

“என்ன ஆச்சுன்னு சொன்னா தானப்பா ஏதாச்சும் செய்ய முடியும்?” என்றாள் லட்சுமி. பதற்றத்தில் அவள் குரல் அதிர்வாக தொனித்தது.

அந்தக்குரலின் ஆணைக்கு கட்டுப்பட்ட பாவைபோல் ஐஷ்வர்யா இலேசாக எழுந்து திரும்பி குர்த்தாவை இழுத்துவிட்டுக் காட்டினாள். நீளமாகத்தொங்கிய அவள் பின்னலுக்கடியில் பெரிய செம்பருத்திப்பூவாக ஒரு குருதித்தடம் பதிந்திருந்தது. எழுந்தபோது மரபெஞ்ச்செல்லாம் சிவப்பான பசபசப்பு. அதன் வீச்சம் எழ என்ன செய்வதென்று தெரியாமல் ஐஷ்வர்யா பதறி உடனே அதன் மேலேயே  திம்மென்று உட்கார்ந்தாள்.  அவளால் அதன்பின் யார் கண்ணையும் சந்திக்க முடியவில்லை.

லட்சுமி ஒரு நொடி தயங்கினாள். எழுந்து சென்றாள். முன்பெஞ்சு அருகே நின்றவனிடம், “பிரவீன்… பசங்களையெல்லம் கொஞ்சம் ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெளிய இருக்க சொல்றியா? ப்ளீஸ்?” என்றாள். பிரவீன் முழித்தான். ஆனால் ஒன்றும் கேட்கவில்லை. அவள் சொன்னதை செய்தான். 

லட்சுமி நோட்டுப்புத்தகத்திலிருந்து தாள்களை கிழித்தாள். ஐஷ்வர்யாவை எழச்சொல்லி அவள் உட்கார்ந்த இடத்தை வழித்து எடுத்தாள். மூன்று நான்கு முறை எல்லாத் தடமும்  போக துடைத்தாள். இரத்தம் படிந்த தாள்களை மடித்து மடித்து இன்னொரு தாளில் சுருட்டி யாரோ சாப்பிட்டு குப்பையில் போட்டிருந்த காலி சிப்ஸ் பாக்கெட்டில் போட்டு அதையும் சுருட்டி ஓர் ஓரமாக வைத்தாள். அதை எங்கே போடுவதென்று அவளுக்குத் தெரியவில்லை. மற்ற எல்லோரும் எட்டியே நின்று வேடிக்கை பார்த்தார்கள். யாரும் பக்கத்தில் வரவில்லை.

அடுத்து என்ன செய்வதென்றும் அவளுக்குத் தெரியவில்லை. “ஐஷூ, வீட்டுக்குப் போறியா?” என்றாள். ஐஷூ விசும்பினாள். அந்நேரத்தில் அவள் வீட்டில் யாரும் இருக்கமாட்டார்கள் என்று லட்சுமிக்குத் தெரியும். தவிர இந்த நிலையில் வெளியே எப்படி போவது?

“பேசாம டீச்சர்ட்டையே சொல்லிடலாமா?” என்று மீண்டும் அட்சயா கேட்டாள். “எந்த டீச்சர்?” என்றாள் லட்சுமி. ஒவ்வொரு பெயராக அவர்கள் மனதில் ஓடியது.

“செங்கொடி மிஸ் இன்னைக்கி லீவாச்சே?” என்றாள் அட்சயா. “வேற யார்ட்ட சொல்றது? சங்கரலிங்கம் சார்ட்டையா?” என்றாள் லட்சுமி. அதை யோசிக்கவே அவளுக்கு சிரிப்பாக வந்தது. ஐஷ்வர்யாவைப் பார்க்க அவளும் கண்ணீரை மீறி சிரித்துக்கொண்டிருந்தாள். 

“சரி. ஒண்ணு பண்ணு,” என்றாள் லட்சுமி. “இன்னொரு நேப்கின வச்சுகிட்டு இங்கியே உக்காரு. இன்னும் ரெண்டு பீரியட்தானே? சாய்ந்தரம் நானும் கூட வரேன். சேர்ந்தே வீட்டுக்குப் போகலாம். பஸ் வேண்டாம். ஆட்டோல போயிடலாம்,” என்றாள். 

ஐஷ்வர்யா பயந்த பார்வையுடன் பார்த்தாள். “ஏற்கனவே ரெண்டு வெச்சிருக்கேன்,” என்றாள்.

“பரவால்ல, மேல ஒண்ணு வெச்சுக்க,” என்றாள் அட்சயா.

ஐஷ்வர்யாவுக்கு பதட்டம் குறையவில்லை. “இதோட எப்பிடி டாய்லெட்டுக்கு போவேன்? எல்லாரும் பாப்பாங்களே?” என்றாள். அப்போது மூன்றரை மணி பெல் அடித்தது. கதவைத்திறந்து எல்லோரும் உள்ளே நுழையத்தொடங்கினார்கள்.

லட்சுமியின் அனிச்சையாக அதைச்செய்தாள். இரண்டு தோள்களிலிருந்து இரண்டு பின்களையும் நடு நெஞ்சிலிருந்து மூன்றாவது பின்னையும் சிவப்பு மானிட்டர் பேட்ஜையும் கழட்டி கருநீலநிற துப்பட்டாவை இழுத்து உதறினாள். இரண்டாக மடித்தாள். ஐஷ்வர்யாவை இழுத்து அவள் இடுப்பைச் சுற்றி கட்டி முடி போட்டாள்.

ஐஷ்வர்யா உடல் மெலிந்தது. இரண்டு கட்டு சுற்ற முடிந்தது. சொறுகிவிட்டு, “போ, ஒண்ணும் தெரியாது. இங்கியே திரும்ப வந்து உட்காரு. யாராவது கேட்டா உடம்பு சரியில்லன்னு சொல்லிக்கோ. கரெக்டா அஞ்சரைக்கு நான் வரேன், சரியா? நான் வரவரைக்கும் நீயா எங்கியும் போகாத. என்ன?” என்றாள். ஐஷ்வர்யா மௌனமாக தலையசைத்தாள்.  வெள்ளை குர்த்தாவில் லட்சுமி வகுப்பைவிட்டு வெளியேறினாள்.

அப்போதெல்லாம் வித்யாவிஹார் பள்ளியில் வாரத்துக்கு ஒரு முறை இந்த ‘வெள்ளைச்சீருடை’ தினம். மாணவிகள் மற்ற நாட்களில் கருநீல சல்வாரும் துப்பட்டாவும் இளநீலக்கட்டம் போட்ட குர்த்தாவும் போட்டுவர வேண்டும். வெள்ளிக்கிழமை மட்டும் வெள்ளைக் குர்த்தா. வெள்ளை கான்வாஸ் ஷூ. மாணவர்களுக்கும் இதே நியமம், என்ன சல்வார்-குர்த்தாவுக்கு பதிலாக பாண்ட்-சட்டை. துப்பட்டா கிடையாது. 

ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடத்துக்குள் ஒரு கூட்டம் ஆசிரியர்கள் மாறி மாறி ஷிஃப்ட் போட்டு பிள்ளைகளை கண்போனபோக்கில் நிறுத்தி சீருடைகளை சரிபார்ப்பார்கள். நுணுக்கி நுணுக்கி நோட்டமிடுவார்கள். நகங்களை வெட்டியிருக்க வேண்டும். ரிப்பனை முறுக்கியிருக்க வேண்டும். முகத்தில் முடி வளர்ந்திருந்தால் மழித்திருக்க வேண்டும். துப்பட்டாவை பெரிய பதாகையாக மடித்து பின் குத்தி நிலைநிறுத்தப்பட்டிருக்கவேண்டும். அதன் முனை காற்றில் பறக்காதபடிக்கு தோளுக்குப்பின்னால் முடித்துவிடப்பட்டிருக்க வேண்டும். வெள்ளைச் சீருடை பளீரென்று ஒரு பொட்டு கறையில்லாமல் முகத்திலறையும்படி இருக்கவேண்டும்.

உடலோடு ஒட்டிய வெள்ளை குர்த்தாவின் நுணி கால்களில் படபடக்க லட்சுமி படியேறிச்சென்றாள். மூன்று மாடிகள். மூச்சு வாங்க ஓடி வகுப்பை அடைந்தாள். நல்ல வேளை அடுத்த வகுப்புக்கான ஆசிரியர் வரவில்லை. கழுத்திலிருந்து நெஞ்சுக்குள் வேர்வை வழிந்தது. தன்னுடைய இருக்கையை அடைந்தபோது எல்லோரும் அவளையே பார்த்தார்கள். பிரீதி “துப்பட்டா எங்கடீ?” என்றாள். “நீ மொதல்ல தள்ளு…” என்று அவளுக்கும் ஜெனிஃபருக்கும் நடுவே தன்னை பொருத்திக்கொண்டாள் லட்சுமி.

மேசை மேல் அவள் பாதியில் விட்டுச்சென்ற ஹைட்ரா தும்பிக்கைகளை ஆர்வமாக துழாவியபடி காத்திருந்தது. எத்தனை ஆனந்தம்! நொடிப்பொழுதில் லட்சுமிக்கு முகமெல்லாம் குன்றும் குழியுமாய் பிளந்தது. ஒருநொடிக்கு அவளும் எங்கேயோ நெல்குருத்துபோல் ஆடிக்கொண்டிருந்தாள். அந்நேரம் ஜென்னிஃபர் “கைல என்ன?” என்றாள். சிரிப்பு மறைய “ம்ம்?” என்று குனிந்தாள்.  இரண்டு கைகளிலும் எதையோ கெட்டியாக பிடித்துக்கொண்டிருந்ததை அப்போதுதான் உணர்ந்தாள். இடது கையில் ரத்தம்படிந்த தாள்களை சுருட்டிவைத்திருந்த சிப்ஸ் பாக்கெட். வலதுகையில் சிவப்பு நிற மானிட்டர் பேட்ஜ்.

என்ன செய்வதென்று தெரியாமல் சிப்ஸ் பாக்கெட்டை தன்னுடைய ஸ்கூல் பேக்கின் ஒரு மூலையிலேயே அமுக்கி வைத்தாள். வீட்டுக்குப்போய் தூரப்போடலாம். கைகூட கழுவவில்லையே? அதனால் என்ன, பேப்பர்தானே? ஒன்றும் வியாதியெல்லாம் தொத்திக்கொள்ளாது… அவள் மானிட்டர் பேட்ஜை மீண்டும் நெஞ்சில் குத்திக்கொண்டிருந்தபோதே வைஸ் பிரின்சிபல் கிருஷ்ணகுமாரி டீச்சர் வகுப்பில் நுழைந்தார்.

அது அவருடைய வகுப்பு என்பதையே லட்சுமி மறந்துவிட்டிருந்தாள். இறுக்கிப் போர்த்திய முந்தானையும் இழுத்துக்கட்டிய கொண்டையுமாக அவருடைய குட்டி உருவம் உள்ளே உருண்டு வந்தது. வெறப்பா கைய கட்டிகிட்டு நிக்குற ஹைட்ரா! லட்சுமிக்கு சிரிப்பாக வந்தது. “ஏய், குனி. அவுங்க கண்ல பட்ட சாவுதான்,” என்று பிரீதி காதை கடித்தாள். 

கிருஷ்ணகுமாரி டீச்சர் அனாவசியமாக எந்த உடலசைவையும் செய்வதில்லை. கை உயர்த்துவதில்லை. குரல் உசத்துவதில்லை. கண்ணோட்டத்திலேயே வகுப்பை கட்டுக்குள் கொண்டுவரும் ஆற்றல் கொண்டிருந்தார். இப்போதும் கண்ணாடிவிளிம்பிலிருந்து இரண்டுபக்கமும் தொங்கிய திரி ஊசலாட கண்களை உயர்த்தி வகுப்பை நோட்டம் விட்டார் டீச்சர். உடனே சலசலப்பு அடங்கியது. அமைதி.

வரலாற்றுப் பாடம் தொடங்கியது. சுதந்திரப்போராட்டப்படலம். காந்தி இரண்டாம் வட்டமேசை மாநாட்டுக்கு 1931-ல் லண்டன் செல்கிறார். கச்சையாகக்கட்டிய ஒற்றைக் கதராடையில் லண்டன் குளிரையும் அங்குள்ள பிரிட்டிஷாரையும் எதிர்கொள்கிறார் காந்தி. பிறகு அரிஜனங்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். அரிஜனமும் பொதுஜனம் அல்லவா? அவர்களுக்கும் கைகொடுத்து உதவவேண்டியது கடமையல்லவா? 1932-ல் பூனா ஒப்பந்தம் கையொப்பமாகிறது. 1935-ல் இந்திய அரசுச் சட்டம்… கிருஷ்ணகுமாரி டீச்சர் ஆண்டுகளையும் நிகழ்வுகளையும் மென்மையாக பிசகில்லாமல் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிச் செல்வதே வரலாற்றுப்பாடம் எடுக்கும் வழிமுறை. மாணவர்கள் அவற்றை அப்படியே வார்த்தை மாறாமல் எழுதிக்கொண்டிருந்தார்கள். 1937-ன் தேர்தல்களுக்கு வந்த போதுதான் நீல அலையாகத்தெரிந்த மாணவிகள் பக்கத்தில் ஒரு வெண்ணிற உருவை கண்டுகொண்டார். 

“லக்‌ஷ்மி!”

வெள்ளை குர்த்தாவை இழுத்துவிட்டுக்கொண்டு லட்சுமி நீலத்திரைக்குமேல் எழுந்தாள். விரல்களை இறுக்கி மடித்து தலை கவிழ்ந்தாள். எல்லோரும் திரும்பினார்கள்.

“ஒய் ஆர் யூ நாட் இன் யூனிஃபார்ம்?” டீச்சரின் குரல் அறை முழுவதும் ஒலித்தது.

லட்சுமி ஒன்றும் சொல்லாமல் நிமிர்ந்து டீச்சரின் கண்களை சந்தித்து மீண்டும் தாழ்த்திக்கொண்டாள். 

கிருஷ்ணகுமாரி டீச்சர் அவள் பெஞ்சை நோக்கி விடுவிடுவென்று நடந்து வர லட்சுமி தன்னை அறியாமலேயே பின்வாங்கினாள். கிருஷ்ணகுமாரி டீச்சர் பையன்கள் சேட்டைசெய்தால் நடுவகுப்பிலேயே தொப்புள்சதையை பிடித்து திருகுவார். அப்போது அவளையும் அப்படி செய்யுமளவுக்கு அவர் உடலில் வேகம் இருந்தது.

ஆனால் டீச்சர் அப்படியேதும் செய்யவில்லை. அவளை அடைந்தார். தாழ்வாக, நெருக்கமாக, சீரலாக, அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ஆபாசம் பேசும் குரலில், “ஏய், துப்பட்டா எங்கடீ?” என்றார்.

அவள் அப்போதும் பதில் சொல்லாமல் நின்றாள்.

டீச்சரின் பார்வை அவள் மீது ஊறிச்சென்றது. அவர் பார்வை பட்ட இடங்களிலெல்லாம் கண்களாக முளைத்துவிட்டதுபோல் இருந்தது லட்சுமிக்கு.

“ஸிட் டௌன்,” என்றார்.

தோள்களை குறுக்கியபடி லட்சுமி உட்கார்ந்தாள். தலையை குனிந்தாள்.

ரெக்கார்ட் நோட்டிலிருந்து ஹைட்ரா எல்லா கைகளையும் ஆட்டியது. அழாதே, அழாதே என்பதுபோல்.

“ஏய் துப்பட்டாவ என்னடீ பண்ண? அவங்கட்ட சொல்லித்தொலைக்க வேண்டியதுதானே?” என்று முணுமுணுத்தாள் பிரீதி. லட்சுமியால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. வினோதும் கார்த்தியும் திரும்பி பரிதாபமாக பார்த்தார்கள்.

“ஹைட்ரா ஆழத்தில் வாழும். ஹைட்ரா தண்ணீரில் நீந்தும். ஹைட்ராவுக்கு கண் தெரியாது. ஹைட்ராவுக்கு கை மட்டும் தான் உள்ளது.  ஒரு கை வெட்டப்பட்டால் ஹைட்ராவுக்கு அந்த இடத்தில் மற்றொரு கை முளைக்கும்.” பாடத்தின் வரிகளை லட்சுமி தனக்குள் அனிச்சையாக மறுபடியும் மறுபடியும் சொல்லிக்கொண்டே இருந்தாள். வார்த்தைகளை அப்படி இடைவிடாமல் சொல்லிக்கொண்டிருப்பது வரை அழுகை வராது என்று அவளுக்குத்தெரியும்.

வகுப்பு முடிந்த கையோடு டீச்சர் லட்சுமியை எழுப்பினார். மூன்று மாடிகள் இறங்கி கீழ்தளத்துக்கு அவர்களுடைய அறைக்கு கூட்டிச்சென்றார். தலைகுனிந்தபடியே லட்சுமி அவரை பின்தொடர்ந்து இறங்கினாள்.

தன்னுடைய அறையிலிருந்து லட்சுமியை அவள் அப்பாவுக்கு போன் போட்டுத்தரச்சொன்னார் டீச்சர். போனில் மென்மையாக, நிதானமாக, ஆனால் வலுவாக பேசினார்.  “ஆமா சார். ப்ளீஸ் கம் இம்மிடியட்லி… இல்ல, பதட்டப்பட ஒண்ணுமில்ல, ஆனா நீங்க வந்தா பெட்டர்.”

லட்சுமி அறையின் ஒரு மூலையில் அதே வெள்ளை குர்த்தாவில் உட்கார்ந்திருந்தாள். தன்னுடைய தாள்களில் மூழ்கியிருந்த கிருஷ்ணகுமாரி டீச்சர் அவ்வப்போது நிமிர்ந்து கண்ணாடிச்சில்லுக்கு மேலிருந்து அவளை  ஒரு பார்வை பார்த்துவிட்டு  மீண்டும் வேலையில் மூழ்கினார். அவருக்குப்பின்னால் ஒரு சட்டகத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சர் கண்சொக்கி நான் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதுபோல் இருந்தார். பக்கத்திலே வெண்சேலையில் சாரதாதேவி அந்த அரங்கை பரிவோடு பார்த்துக்கொண்டிருந்தார்.

டீச்சர் நிமிர்ந்தார். “நீ உள்ள ஷிமீஸ் போடுறதில்லியா?” என்றார்.

லட்சுமி குனிந்து தோளுக்குள் விரலை விட்டு ஆடையை இழுத்துவிட்டுக்கொண்டாள்.

குர்த்தாவுக்கடியில் அதே வெண்ணிறத்தில் பருத்தி ஒற்றையாடையாக ஷிமீஸ் போட்டிருந்தாள். அதற்கடியில் உள்ளாடை. பொதுவாக இந்த அமைப்புக்கு மேல் துப்பட்டாவும் இருக்கும். இன்று இல்லை. ஓடி வியர்வையில் தோலோடு ஒட்டியதால் எந்த ஆடையும் தனியாகத் தெரியவில்லை. அவள் ஏதும் சொல்லவில்லை.

குரல் மாறியது.  “காலையில துப்பட்டா போட்டுட்டுதான வந்த… எதுக்கு கழட்டுன? யாராவது பாத்தா தப்பா நெனைப்பாங்கல்ல? அதானே டீச்சர் கேக்கறேன்?”

ஆனால் அதற்கும் அவள் ஏதும் சொல்லவில்லை. தலை குனிந்தபடியே இருந்தது.

கிருஷ்ணகுமாரி டீச்சர் கண்களை சுறுக்கினார். “கேக்கறேன்ல? அங்க என்ன தனியா யோசனை? இப்படி கொஞ்சம் இறங்கி வர்ரது.”

லட்சுமி கண்கள் படபடக்க நிமிர்ந்து தலையசைத்தாள். கைவிரல்களை மடியில் முஷ்டியாக மடக்கிக்கொண்டாள். மேசை மீதிருந்த தூசின் மேல் ஹைட்ராக்கள் நெளிந்தன. கைகள் காற்றை அளைந்தன. அவை கொடிகளைப்போல் படபடத்தன. சுழலாக வட்டம்போட்டன. கைகோர்த்து நடனமிட்டன. லட்சுமி அவற்றை பார்த்துக்கொண்டிருந்தாள்.

லட்சுமியின் அப்பா வர ஐந்து மணிக்கு மேல் ஆனது.

“மேடம்… என் டாட்டர்… சி.லட்சுமி…” உள்ளே செருகப்படாமல் பாண்டுக்கு வெளியே தொங்கிய சட்டைநுணி மெல்லத்திரும்பிய ஃபேன் காற்றில் துடித்தது.

“உட்காருங்க. லட்சுமியோட அம்மாவால வரமுடியலியா?”

“இல்ல மேடம்…” லட்சுமியின் அப்பா தயங்கினார். “அவ இல்ல. இவளுக்கு மூணு வயசிருக்கும். அப்ப ஒரு ஆக்சிடண்ட்ல போயிட்டா”

“ஓ… ஐ யம் சாரி.” டீச்சர் கண்களை விலக்கிக்கொண்டார். மீண்டும் அவர் முகத்தை பார்த்தார். “இல்ல, கொஞ்சம் டெலிகேட் இஷ்யூ… அதான் உங்ககிட்ட எப்படி டிஸ்கஸ் பண்ணன்னு தெரியல…”

பெருமூச்சு விட்டார். “சார், தப்பா எடுத்துக்காதீங்க. ஆனா சொல்றது எங்க கடமையில்லிங்களா? உங்க டாட்டர்… ஷீ இஸ் நாட் அ சைல்ட் எனிமோர். அவளுக்கு இன்னும் கொஞ்சம் தன்ன பத்தின சென்ஸ் இருக்கணும் சார்.”

“மேடம், என்ன நடந்துச்சு?” லட்சுமியின் அப்பா திரும்பி மகளை பார்த்த்தார். “என்ன டா?”

ஒரு ஹைட்ரா கைகளை விரித்து காற்றாடி போல் அவள் கண்ணுக்கு முன்னால் மெல்ல சுற்றிக்கொண்டிருந்தது. அப்பா பார்த்ததை லட்சுமி பார்க்கவில்லை.

டீச்சர் கண்ணாடியை கழற்றினார். “சார், இன்னைக்கு அவ துப்பட்டா… அதான் பிள்ளைங்க மேல போடுவாங்களே… அதப்போடாம என் கிளாசுக்கு வந்தா. எங்கேயோ தொலச்சிருக்கா. நானும் விசாரிச்சு பாத்திட்டேன். சொல்லமாட்டேங்குறா. என்ன கேட்டாலும் உம்முணாம்மூஞ்சி கல்லு மாதிரி உக்காந்துட்டிருக்கா.” ஒரு கோப்பைத் திறந்தார். “இதோ நீங்களே பாருங்க. காலையில ஃபுல் யூனிஃபார்ம்லதான் வந்திருக்கா. ரெக்கார்ட்ல இருக்கு. நடுவுல எங்கியோ லூஸ் பண்ணியிருக்கா.”

லட்சுமியின் அப்பா இதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தார்.

“மேடம்… இது… எங்கியாவது விழுந்திருக்கும்…” என்றார்.

டீச்சர் நெற்றி சுருக்கினார். “என்ன சார் சீரியஸ்னெஸ் புரியாம பேசரிங்க? மிஸ்பிளேஸ் பன்றதுக்கு துப்பட்டா என்ன சாவிக்கொத்தா? பின்பண்ணி வரணும்னு இன்சிஸ்ட் பன்றோம். அதப்போயி எதுக்கு கழட்டணும் சொல்லுங்க? அப்புறம் துப்பட்டா போடலன்றளவுக்கு அவ்வளவு மறதியா ஒரு பொண்ணுக்கு?

“சரி, நீங்க சொன்ன மாதிரியே விழுந்திருக்கட்டும். அப்ப கேட்டா சொல்றதுக்கென்ன?” டீச்சர் அவரை ஓரக்கண்ணால் பார்த்தார். “வேறெங்கேயாவது போயிருக்கக் கூடாதில்ல?”

லட்சுமியின் அப்பா ஒன்றும் சொல்லாமல் வெறிக்க டீச்சர் கண்ணாடியை துடைத்து அணிந்தபடி தொடர்ந்தார்.   “துப்பட்டா தொலஞ்சுபோனதுகூட சரி சார். ஆனா பாருங்க. அதப்பத்தின அக்கறையே இல்லாம இருக்கா. புரியுதுங்களா சார்?” டீச்சர் தாள்களை சேர்த்து கொத்தாக அடுக்கி ஃபைலுக்குள் சேர்த்து அதன்மீது கைகோர்த்து பாந்தமாக இருத்தி அவர் கண்களை சந்தித்தார். “அவளுக்கு தன்னப்பதின சென்ஸே இல்ல. எங்கேயோ இருக்கா. அதத்தான் சொல்ல வர்ரேன்.”

அப்பா அவளை மீண்டும் திரும்பிப் பார்த்தார். அவளுடைய வெள்ளைச்சீருடை அப்போதுதான் அவர் கண்களில் பட்டதுபோல் ஒரு நொடி விழித்துக் கொட்டினார். பெரிய பதாகையைப்போல் நெஞ்சின்மேல் மையமாக குத்தியிருந்த சிவப்புநிற வட்டத்திலிருந்து அவரால் கண்களை எடுக்கமுடியவில்லை.

குரலை மீடெட்டுத்து லட்சுமியின் அப்பா மெல்ல, “மேடம்… தப்பா ஒண்ணும் நடந்திருக்காது…

நல்லா விசாரிச்சுப் பாத்தீங்களா?” என்றார்.

கிருஷ்ணகுமாரி டீச்சர் பொறுமையிழந்த உச்சுக்கொட்டுடன் நிமிர்ந்தார்.

“சார், தப்பா எதுவும் நடந்திருக்காதுன்னே வெச்சுக்குவோம். சரி. ஆனா கேள்வின்னு வந்திருச்சுல்ல? இப்ப நான் கேக்கறா மாதிரி அவ வெச்சுக்கலாமா, சொல்லுங்க? அந்த சென்ஸ் அவளுக்கா இருக்கணும் சார். நாமள எல்லாரும் பாக்கறாங்களே, கேள்வி கேப்பாங்களேன்ற உணர்வு உடம்போட இருக்கணும். எல்லாம் லைஃப்ல நெறைய பார்த்தாச்சு சார்… அந்த ஆதங்கத்துல சொல்றேன். அவ கொழந்த இல்ல. அம்மா இல்லாத பிள்ளைன்னு வேற சொல்றிங்க, வீட்ல யாராவது பெரியவங்கள விட்டு பேசிப் புரியவைங்க சார்…”

பேச்சுமும்முறத்தில், ஒரு ஹைட்ராவின் கை அந்த அறையிலிருந்து நீண்டு வெளிச்சென்றதை இருவருமே கவனிக்கவில்லை. அது தாழ்வாரங்களில் தலைகவிழ்த்தபடியே கண்ணில்படாமல் ஒழுகிச்சென்றது. நைன் – சி வகுப்பின் கடைசி பெஞ்சில், லட்சுமியின் துப்பட்டா முனையை கெட்டியாக பிடித்துக்கொண்டு அவள் வருவதற்க்காக அப்போதும் காத்துக்கொண்டிருந்த ஐஷ்வர்யாவை அடைந்தது. தலைதூக்கி, ‘நான்தான்’, என்று அவள் கையை மெல்ல முட்டியது.

அறிவியல் புனைகதைகள் – வரலாறு, வடிவம், இன்றைய நகர்வுகள்

(2019 ஊட்டி குரு நித்யா காவிய முகாமில் பேசியதன் கட்டுரை வடிவம். நன்றி: jeyamohan.in)

அறிவியல் புனைகதை என்ற வடிவை பற்றி சுறுக்கமாக பேசி அதனை ஒட்டி ஒரு விவாதத்தை முன்னடத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளேன். அறிவியல் புனைகதை என்ற இலக்கிய வடிவம் அடிப்படையில் நவீன அறிவியலைச் சார்ந்து உருவாகி வந்துள்ள ஒன்று. நவீன அறிவியல் மேற்கத்திய அறிவியக்கத்தின் குழந்தை. மேற்கத்திய அறிவியக்க வரலாற்றை புரிந்துகொள்ளாமல் அறிபுனையின் இடம், அதற்கான வரலாற்றுத் தேவை,  அதன் வகைமைகள், எல்லைகளை நோக்கிச் செல்ல முடியாது. அங்கிருந்தே இந்திய பின்புலத்தில் அறிவியல் புனைவுக்கான இடம் என்ன என்ற கேள்வியை எழுப்பிக்கொள்ள முடியும். மேற்கத்திய அறிவியக்க வரலாற்றின் ஆழத்தில் உள்ள ஒரு அடிப்படை முரணின் புரிதல் இதற்கு தேவையாகிறது.

மேற்கத்திய அறிவியக்க வரலாற்றில் பொதிந்துள்ள அந்த மைய முடிச்சை மறுமலர்ச்சி காலகட்டத்து  ஓவியர் ரஃபேல் வரைந்த ‘The School of Athens’ என்ற புகழ்பெற்ற ஓவியத்தில் காணலாம். கிரேக்க மரபின் இரு பெரும் தத்துவவாதிகளை மையத்தில் அமைத்து அவர்களை சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ள ஓவியம் இது. ஓவியத்தின் இடது பக்கத்தில் பிளாட்டோவும், வலது பக்கத்தில் அரிஸ்டாட்டிலும் இடம்பெருகின்றனர்.

இடது பக்கம் நிற்கும் பிளாட்டோ தன்னுடைய வலதுகையின் ஆட்காட்டி விரலை செங்குத்தாக தூக்கி வானை சுட்டும்படி காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். வலதுபுறமாக நிற்கும் அரிஸ்டாட்டில் தன்னுடைய உள்ளங்கையை கிடைமட்டமாக, நிலத்துக்கு சமதளமாக வைத்துள்ளார். பிளாட்டோ வானையும் நெருப்பையும் குறிக்கும் நிறங்களிலும், அரிஸ்டாட்டில் அதற்கு மாற்றாக நீரையும் நிலத்தையும் குறிக்கும் நிறங்களிலும் உடை அணிந்தபடி காட்சிபடுத்தப்பட்டுள்ளார்கள்.

பிளாட்டோவின் பக்கமாக ஓவியத்தின் இடதுபுறத்தில் பெரும்பாலும் தத்துவவாதிகள், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் உருவங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவர்களை ஒருவிதத்தில் கனவுஜீவிகள் என்று சொல்லலாம். தத்துவதர்க்கமும் அகக்காட்சியும் கற்பனையும் உள்ளுணர்வும் சார்ந்து இயங்குபவர்கள் இவர்கள்.

அரிஸ்டாட்டிலின் பக்கமாக ஓவியத்தின் வலதுபுறத்தில் பெரும்பாலும் அறிவியலாளர்களையும், கணிதவல்லுனர்களையும், வானியல் ஆராய்ச்சியாளர்களையும் ரஃபேல் காட்சிப்படுத்தியுள்ளார். தூய அறிவின் பார்வையை சார்ந்து இயங்குபவர்கள் இவர்கள் என்று பொதுமைபடுத்தலாம்.

இரண்டு கலாச்சாரங்கள்

இந்த ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள பிளாட்டோவின் தரப்புக்கும் அரிஸ்டாட்டிலின் தரப்புக்கும் பொதுவாக ஒரு முக்கிய அடிப்படை வேறுபாட்டை முன்வைக்கலாம். பிளாட்டோவின் தரப்பு அறிதலுக்கு தன் முக்கிய பிரமாணமாக உள்ளுணர்வையும் உபமானத்தையும் நம்பியிருக்கிறது. அரிஸ்டாட்டிலின் தரப்பு நேரடி புலன் அனுபவத்தை, பிரத்யட்சத்தை, மட்டுமே தன்னுடைய பிரதான அறிதல் பிரமாணமாக கொண்டுள்ளது.

தத்துவை-கலை-இலக்கிய நோக்குக்கும் அறிவியல் நோக்குக்கும் உள்ள முக்கியமான மைய வேறுபாடு இதுதான். மொத்த மேற்குலக அறிவியக்க வரலாற்றை இந்த முரணின் நீட்சியாக புரிந்துகொள்ளலாம்.

மேற்குலகில் இதே முரண் மீண்டும் மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் முளைத்து வருகிறது. கிறித்துவம் தோன்றிய பிறகு மதம் x அறிவியல் என்ற முரணும் இந்த அடிப்படை அறிதல்முறை விரிசலின் ஒரு தரப்பு என்று வாதிடலாம். 18-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிவொளி காலம் தொடங்கியது. கற்பனாவாத பண்புகளை வலியுறுத்திய ரூஸோ ஒரு புறமும், தூய அறிவின் அதிகாரத்தை விதந்தோதிய வால்டேர் மறுபுறமும் அக்காலகட்டத்தின் முகங்களாக ஆகினர். தத்துவ தரப்பில் இதே முரண் கருத்துமுதல்வாதம் x பொருள்முதல்வாதம் என்று பரிணமித்ததாக சொல்லலாம்.

ஒரு வகையில் ரூசோவிலிருந்து கற்பனாவாத கவிஞர்களும், நவீன இலக்கியவாதிகளும் உருவாகி வந்ததாக சொல்லலாம். வால்டேரின் தூய அறிவுத்தறப்பின் நீட்சியாக தர்க்க நேர்நிலையாளர்கள் (logical positivists) உருவாகிவந்தனர். அவர்களிடமிருந்து நவீன அறிவியலாளர்கள் உருவாகி வந்தனர்.

இன்று நம் உலகத்தை கட்டமைக்கும் முரண் தத்துவம்-கலை-இலக்கிய நோக்குக்கும் அறிவியல்-தொழில்நுட்ப நோக்குக்குமானது. ஆனால் அடிப்படையில் இது அறிதல்முறை சார்ந்த, உலகுநோக்கு சார்ந்த முரண் என்பது இந்த விவரிப்பு மூலம் தெளிவாகியிருக்கும்.

இந்த முரணை முன்னிட்டு சி.பி.ஸ்னோ என்ற அறிஞர் 1950-களில் ‘இரண்டு கலாசாரங்கள்’ (The Two Cultures) என்ற பெயரில் ஒரு முக்கியாமன் கட்டுரையை எழுதினார். சி.பி.ஸ்னோ ஒரு அறிவியலாளர் மட்டுமல்லாது ஒரு புனைவெழுத்தாளரும் கூட. அவர் இந்த முரணை முன்வைத்து விரிவாக பேசிய காலம் குறிப்பிடத்தக்கது.

1950-கள் இரண்டு உலகப்போர்கள் முடிந்திருந்த காலகட்டம். போர் காலங்களில் எப்போதுமே தொழில்நுட்பம் வளர்ச்சி அடையும் என்பது வரலாற்றுண்மை. எனினும் இரண்டு உலகப்போர்களுக்குப் பின் ஏற்பட்ட மாறுதல்களின் வீச்சில் தான் நாம் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற வகையில் அந்த காலகட்டம் நமக்கு முக்கியமானது. இந்த காலகட்டத்துக்கு பிறகு அறிவியலும் சரி, மானுடவியலும் (humanities) சரி, மேலும் மேலும் நுட்பமாகி தனித்தனி அறிவுத்துறைகளாக பிரிந்துசென்றது.

இன்று ஒரு சராசரி அறிவியலாளருக்கு மொழியியல் சார்ந்தோ குறியீட்டியல் சார்ந்தோ பின்நவீனத்துவம் சார்ந்தோ அடிப்படை அறிமுகம் இல்லை. மானுடவியல் தரப்பில் இயங்கும் எழுத்தாளர்கள் கலைஞர்கள் அறிஞர்களுக்கும் பெரும்பாலும் அறிவியலின் அறிதல்முறை சார்ந்த புரிதல் இல்லை. அறிவியலில் நிகழும் பாய்ச்சல்கள் ஒரு அறிவியக்கத்தின் வளர்ச்சியின் படிநிலையாக அல்லாமல் பெரும்பாலும் வெறும் தகவல்களாகவே ஒரு பொது வாசகருக்கு இன்று வந்து சேர்கிறது. இந்த பின்னணியில் தான் இன்று அறிவியல் புனைக்கதைகள் எழுதப்படுகின்றன.

அறிவியல் புனைவு என்ற இலக்கிய வகைமை

சி.பி.ஸ்னோ ‘இரண்டு கலாசாரங்கள்’ கட்டுரையை எழுதிய 1950-கள் அறிவியல் புனைவெழுத்தின் பொற்காலம் என்று இன்று சொல்லப்படுகிறது (‘Golden Age of Science Fiction’). அந்த காலகட்டத்தில் அறிவியல்புனைவு என்ற இலக்கிய வகைமை (genre fiction) ஓர் இயக்கமாக தொடர்ந்து எழுதப்பட்டது.  அதன் பிறகு இன்று வரை தொடர்ந்து வெவ்வேறு வகையில் புனைவுக்குள் அறிவியல் புகுத்தப்பட்டு கதைகள் எழுதப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

ஒவ்வொரு காலத்திலும் மானுடத்துக்கும் அறிவியலுக்குமான ஏற்பு-மறுப்பு உறவின் அடிப்படையில் அறிவியல் புனைவின் வடிவம் மாறுபடுகிறது. அடிப்படையிலேயே ஒரு அறிதல் முறை என்ற ரீதியல் அறிவியலுக்கும் இலக்கியத்துக்கும் உள்ள முரண், அறிவியல் புனைவின் கட்டுமானத்திலும் வடிவிலும் கதைச்சமைப்புகளிலும் பரிணமிக்கிறது. என்னேரமும் பூசலிட்டுக்கொள்ளும் இருவேறு ஆளுமைகளான அம்மா-அப்பாவுக்கு பிறந்த குழந்தையாக அறிபுனை வடிவை காணலாம். அவர்களது தனித்தன்மைகளும் சரி, முரண்களும் சரி, அதில் வெளிப்படுகிறது.

ஒரு உதாரணமாக, ஒரு எளிய கதைவடிவை முன்வைக்கலாம். எதிர்காலத்தில் ஒரு அவலச்சூழலின் (dystopia) பின்னணியில், மானுடரில் பலரும் படிப்படியாக தங்களது கண்பார்வையை இழக்கத்தொடங்குகிறார்கள். இதற்குக் காரணம் நாம் சாதாரணமாக காணும் நிற-ஒளிவரிசைப் பட்டையை உள்வாங்கும் கண்ணின் செல்கள் அறியமுடியா காரணத்தால் திடீரென்று மரித்துப்போகின்றன என்று கண்டுகொள்ளப்படுகிறது.

இதனை ஈடுசெய்ய ஒரு அறிவியலாளர் பாம்பின் கண்களிலிருந்து ஒரு புரோட்டீனை எடுத்து மனிதக்கண்ணுக்குள் பொருத்துகிறார். இந்த புரோட்டீன் நிறவரிசைப் பட்டையைத்தாண்டி, அகச்சிவப்பு (infra-red) ஒளியை வெப்பமாக கண்டடையக்கூடியது. இதன் மூலம் அந்த மனிதருக்கு வேறுவிதமான பார்வை கிடைக்கிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளது ஒரு அசலான அறிவியல் ஊகம். கண்பார்வை இழந்தவர்களுக்கு ஒரு மாற்று சிகிச்சையாக முன்வைக்கப்பட்டுள்ளது. இன்று இதை நோக்கி சோதனைகள் மேற்கொண்டுபட்டு வருகின்றன.

அதே நேரத்தில், புனைவின் பரப்புக்குள் இது எழுப்பும் கேள்விகள் எல்லாமே மேலதிக அர்த்தம் கொண்டது. கவித்துவமானது. பார்வை என்றால் என்ன என்ற அடிப்படை கேள்வியை கையாள்வது. ‘பாம்புக்கண்’ என்ற குறியீடு அந்த புனைவுலகில் என்ன பொருள் கொள்கிறது என்பதிலிருந்து விரியும் இக்கதை. சுற்றியிருக்கும் வெப்பத்தை மட்டும் உள்வாங்குகையில் ஒரு மனிதனின் பார்வை எப்படி மாறுபடும்? அவனால் காம-குரோத-மோகங்களை எளிதாக கண்டுகொள்ளமுடியுமா? இந்த நுண்ணுணர்வுக்கு புனைவு கட்டமைக்கும் உலகப்பரப்பில் அர்த்தமென்ன? அந்த உலகின் அறிவியல்நோக்கை பற்றிs இந்தக்கதையில் வரும் ‘மாற்றுப்பார்வை’ என்ன சொல்ல வருகிறது? இப்படியான கேள்விகளை அறிவியலாளர் ஆய்வுகூடத்தில் கேட்கமுடியாது ஆனால் புனைவெழுத்தாளர் புனைவுபரப்புக்குள் சோதனை நிகழ்த்தி கேட்டுப்பார்க்கலாம்.

சாராம்சமாக, அறிபுனை என்ற இலக்கிய வகைமையை மூன்று அலகுகளின் அடிப்படையில் புரிந்துகொள்ளலாம்:

  1. அறிபுனை என்பது அறிவியல் x கலை/இலக்கியம் என்ற முரணியக்கம் சார்ந்து இயங்கும் ஒரு வடிவம்
  2. இரண்டு பெரும் அறிதல் முறைகளின் செல்வாக்கு அதனில் இருக்கிறதென்பதால், வாழ்வின், மானுடத்தின் ‘பெரிய கேள்விகளை’ கேட்டு கண்டறியும் சாத்தியம் இவ்வடிவினில் இயல்பாகவே அடங்கியுள்ளது
  3. ஒவ்வொரு காலத்திலும் மானுடத்துக்கும் அறிவியலுக்குமான ஏற்பு-மறுப்பு உறவின் அடிப்படையில் அறிவியல் புனைவின் வடிவம் மாறுபடும்.

 அறிவியல் புனைவு என்றால் என்ன?

அறிவியல் புனைவு என்றால் என்ன என்று வரையறுக்க முற்படும்போது ஒரு சிக்கல் உருவாகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இதன் வடிவம் மாறிவந்துள்ளது என்பதால் வரையறைகளும் அருதியாக இல்லை. ஒரு தொடக்கமாக, அறிபுனை என்னும் வடிவம் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது என்று ஆராயலாம்.

அடிப்படையில், அறிபுனை என்பது:

  1. அறிவியல் கூறுகளை ஏதோ வகையில் தன்னில் கொண்டுள்ள ஒரு கதை
  2. ஆனால் அது அறிவியல் அல்ல. அதன் தர்க்க முறைமை அறிவியல் சார்ந்ததல்ல. நிரூபணவாதம், பொய்பித்தல்வாதம் போன்றவற்றுக்கு அறிவியல் புனைவில் மையமான இடம் இல்லை. அதன் தர்க்கமுறை புனைவு சார்ந்தது. குறியீடுகள் சார்ந்தது. அறிவியலின் தர்க்கத்தை போல அது புனைவுபடுத்தி கதைக்குள் ஒன்றை கட்டமைக்க முயலும் (அசிமோவின் மூன்று விதிகளைப்போல). இன்று எழுதப்படும் அறிவியல் கதைகள் அறிவியல் தர்க்கமே குறியீடு ஆகும் தளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன .
  3. பெரும்பாலும் அறிவியல் கதைகளில் யதார்த்தத்தை மீறிய புதிய உலகங்கள் உருவாக்கப்படுவதை நாம் காணலாம் (world-building). இந்த அம்சத்தில் இவை புராணன்க்கதைகள், உருவகக்கதைகள், ஃபாண்ட்ஸி கதைகளை ஒட்டி வருகின்றன.
  4. ஏதோ ஒரு வகையில் ஒரு ஊகத்தை முன்வைக்கின்றன.

 ஒரு புனைவு வடிவமாக அறிவியல் புனைவின் இடம் என்ன– ஒரு வரலாற்று பார்வை

அறிபுனை என்பது அடிப்படையில் ஒரு புனைவு வடிவு என்பதை நாம் பார்த்தோம். புனைவுபரப்பின் வரலாறில் அறிவியல் புனைக்கதைகளின் இடம் என்ன? அவை எப்போது எழுதத்தொடங்கப்பட்டன? அவற்றின் எல்லைகள் என்ன?

ஆதிகாலம் முதலாகவே மனிதன் தன்னையும் தன்னுடைய சுற்றத்தையும் புரிந்துகொள்ள கதைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறான். தன்னால் அறியமுடியாதவற்றை, புரிந்துகொள்ள முடியாதவற்றை விவரிக்க புனைவை நாடுகிறான். புனைவின் நெகிழ்வில் நிகழ்தர்க்கத்துள் சிக்காத உண்மைகள் கனவாக கவித்துவமாக புரியக்கிடைக்கின்றன. ஆரம்பகாலத்தில் மனிதர்களின் புனைவுகள் புராணங்களாக, கட்டுக்கதைகளாக, தேவதைக்கதைகளாக, உருவகக்கதைகளாக, நாடகங்களாக, மிகைத்தருணங்கள் கொண்டவையாக இருந்தன. அவை யதார்த்தத்தை மீறியே இருந்தன.

நவீன காலகட்டத்தில் தான் யதார்த்தவாத புனைவுக்கான தேவை உருவானது. கூட்டுச்சமூகத்தில் மனிதனின் இடம், நவீனச்சமூகத்தின் அழுத்தம், சமூகத்தில் அவன் அன்னியமாதல் போன்றவற்றை பேச இந்த வடிவம் தேவைப்பட்டது. நவீன உலகம் மனிதனை ஆச்சரியத்துக்கும் அதிர்ச்சிக்கும் அயர்ச்சிக்கும் உள்ளாக்கியபடியே இருந்தது. இதை சொல்ல ‘முனையில் திருப்பம்’ வைத்த சிறுகதை என்ற வடிவம் உருவானது. மொத்த வாழ்க்கைப்பரப்பின் விரிவையும் பொருளையும் பொருளின்மையையும் சொல்ல நாவல் என்ற வடிவம் உருவானது.

பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை பெரும்பாலும் யதார்த்தவாத சிறுகதைகளும் நாவல்களும் தான். ஆனால் அதே நேரத்தில் இன்னொரு இழையாக மிகையதார்த்த கதைகளும் எழுதப்பட்டுக்கொண்டுதான் இருந்தது. கொல்ட்ரிட்ஜ், வில்லியம் பிளேக் முதலிய கவிஞர்களின் உலகப்பார்வை வழியாக உருவான படைப்புலகம் ஒன்று அமைந்தது. வாஷிங்டன் இர்விங், எட்கர் ஆலன் போ முதல் ஹெர்மன் மெல்வில் வரை மிகைப்புனைவு வடிவங்களை வெவ்வேறு வகைகளில் கையாண்டவர்களே. இன்றைய அறிவியல் புனைகதைகளை ஒரு விதத்தில் இந்த மரபின் நீட்சியாக பார்க்கலாம்.

உலகத்தின் முதல் அறிவியல் புனைகதை என்று கருதப்படும் மேரி ஷெல்லியின் ‘ஃபிராங்கின்ஸ்டை’னே அடிப்படையில் ஒரு பேய்க்கதையின் வடிவை கொண்டது. 1820களில் எழுதப்பட்ட இந்தக்கதையில் ஃபிராங்கின்ஸ்டைன் என்ற அறிவியலாளர் தன்னுடைய விஞ்ஞான சோதனைகள் வழியாக ஒரு பேயுருவை உருவாக்குகிறார். குழந்தை போன்ற தன்னுடைய ஆக்கத்தை தானே அழிப்பதா என்று விசனப்படுகிறார். பின்னாளில் எழுதப்பட்ட அனேக அறிபுனை வடிவங்களுக்கும் கேள்விகளுக்கும் இந்தக்கதை முன்னோடி. இந்தக்கதையில் அறிவியலின் கட்டற்ற வளர்ச்சிக்கு எதிரான ஒரு மனநிலையை காணமுடிகிறது. இத்தனைக்கும் இந்தக்கதை எழுதப்பட்ட காலத்துக்கு பின் தான் நவீனகாலகட்டத்தின் மிகமுக்கியமான அறிவியல் கருதுகோள்களான பரிணாம வளர்ச்சி, மின்காந்தவியல், மரபணுவியல் முதலியவை கண்டுகொள்ளப்பட்டன.

19ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில், காலனிய காலகட்டத்தில், தொழிற்நுட்ப வளர்ச்சிகள் உருவாகிக்கொண்டிருந்தன. உலகம் சுருங்கிக்கொண்டிருந்தது. அப்போது எழுதப்பட்ட அறிவியல் சார்ந்த புனைகதைகளெல்லாம் பெரும்பாலும் சாகஸக்கதைகள். புவியின் எல்லைகளை அறிய முயற்சிசெய்துகொண்டே இருந்தன. எச்.ஜி.வெல்ஸ், ஜூல்ஸ் வெர்ன் இவ்வகை புனைவுகளை எழுதியிருக்கிறார்கள்.

இந்த காலகட்டத்தைத்தொடர்ந்தும் அறிவியல் புனைகதைகள் தொடர்ந்து எழுதப்பட்டன. நவீன யுகம் உருவாகி வந்துகொண்டிருந்தது. எதிர்கால கனவுகள், கற்பனைகள், அறிவியல் மீதான நம்பிக்கை சார்ந்து நிறைய கதைகள் எழுதப்பட்டன.

இறுக்கமான அறிபுனைவும் நெகிழ்வான அறிபுனைவும்

அமெரிக்காவில் ‘அறிபுனையின் பொற்காலம்’ என்று கருதப்படும் காலகட்டம் இரண்டு உலகப்போர்களுக்கு பின்வந்த ஆண்டுகள் என்று முன்பு பார்த்தோம். இரண்டு பெரும்போர்கள் முடிந்திருந்தன. இரண்டுமே தொழிற்நுட்பத்தின் வளர்ச்சியால், பேரழிவை உருவாக்கி நிகழ்ந்துமுடிந்திருந்த போர்கள். போர் பதற்றம் அடங்காத காலகட்டம். பனிப்போரினால் அச்சுருத்தல் இருந்தது. ஆகவே அறிவியலாளர்களும் பொறியியலாளர்களும் புதுயுக நாயகர்களாக வழிபடபட்டார்கள்.

1950கள்-60களில் எழுதப்பட்ட அறிவியல் புனைவு இந்த காலகட்டத்தின் நம்பிக்கைகள் ஐயங்கள மொத்தத்தையும் தன்னுள் உள்வாங்கி கொண்டுள்ளதை காணலாம். அறிவியல்மீது பெருத்த நம்பிக்கை இருந்த காலம். இந்த காலகட்டத்தில் வல்லமையே அறம் என்ற நம்பிக்கை இருந்தது. அறிபுனை கதைகளும் தனிமனிதனை பிரதான படுத்தியபடி எழுதப்பட்டன. நவீனத்துவ கூறுகள் கொண்டிருந்தன.

அறிபுனைகதைகளும் அறிவியலை நேரடியாக அணுகின. விரிவான வகையில் அறிவியல் கருதுகொள்களை, சோதனைகளை, ஊகங்களை முன்வைத்தன. இக்கதைகளில் அறிவியல் நம்பகத்தன்மை என்பது ஒரு விமர்சனப்புள்ளியாகவே கொள்ளப்பட்டது. முக்கியமாக, இவை அறிவியல் சார்ந்து ஒரு ஊகத்தை முன்வைத்தன. இந்த காலகட்டத்து அறிவியல் கதைகள் genre fiction என்ற வகையில் சில குறிப்பிட்ட இதழ்களில் மட்டுமே பிரசுரம் கண்டன. எழுதியவர்கள் பெரும்பாலும் தொழில்முறை பொறியாளர்கள், அல்லது தொழில்நுட்பபின்னணி கொண்டவர்கள். பெரும்பாலும் ஆண்கள். சிறுபிள்ளையின் சாகஸ மனநிலையை கொண்டவர்கள். வாசகர்களும் இக்கதைகளை அறிவியல்ரீதியாக விமர்சிக்கும் பார்வையுடைய, சாகஸக்கதைகளை விரும்பி வாசிக்கக்கூடிய ஒரு சிறுவட்டத்தினர். ஐசக் அஸிமோவின் ‘எவிடென்ஸ்’ என்ற கதை இந்த வகைமைக்கு ஒரு சிறந்த மாதிரி. இன்று இதனை ‘இறுக்கமான அறிபுனை’ (Hard Science Fiction) என்ற பதத்தால் அழைக்கிறார்கள்.

1960கள்-70களில் அமெரிக்காவில் பல சமூக மாற்றங்கள் நிகழ்ந்தன. வியட்னாம் போருக்குப்பின் போர் மீதான் கசப்பு உருவானது. சமாதானத்துக்கான விழைவு ஏற்பட்டது. அதிகார அமைப்புகள் மீதான நிராசை உருவாகத்தொடங்கியது. பெண்ணியம், சூழியல் போன்ற மாற்று உலகப்பார்வைகள் உருவாகிவரத்தொடங்கின. வரலாறை ஒரு கட்டமைப்பு என்றும் அதிகாரம் என்றும் பார்க்கும் பின்நவீனத்துவ பார்வை உருவாகியது. கருணையே அறம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் அறிவியல் அதிகாரம் மீது ஏற்பட்ட ஐயமும் சமூகநலப்பார்வையும் அறிவியல் புனைகதைகளில் வெளிப்பட்டது.

இக்கதைகள் பொதுவாக அறிவியலின் ஒரு கூறை மட்டும் கதைக்களத்தை உருவாக்க எடுத்துக்கொண்டது. அறிவியல் புனைவென்றாலும் அவை முன்வைத்த கேள்விகளும் ஊகங்களும் மானுடமும் சமூகமும் சார்ந்தவை. இக்கதைகள் பொதுவான வாசகர் பரப்பை நோக்கி எழுதப்பட்டது. எழுதியவர்களில் நிறைய பெண்கள் இடம்பெறத்தொடங்கினார்கள். அறிவியலை நெகிழ்வுபடுத்தி ஒரு கதைகட்டுமான உக்தியாக மட்டுமே கதைப்பரப்பில் பயன்படுத்திய இவ்வகை புனைவுகளை ‘நெகிழ்வான அறிபுனை’ (Soft Science Fiction) என்ற பதத்தால் அழைத்தார்கள். அர்சுலா ல குவினின் ‘Solitude’ என்ற கதை இந்த வகைமைக்கு நல்ல உதாரணம்.

 ஊகப்புனைவு – அறிபுனையின் நெகிழ்வுத்தன்மை 

இன்று எழுதப்படும் அறிவியல் சார் புனைவுகள் அறிவியலை கதைக்குள் வெவ்வேறு நெகிழ்ச்சிநிலைகளில் கையாள்கிறன. ஆனால் அவற்றுக்கு பொதுவான கூறு அவை அனைத்துமே கதைக்குள் ஏதோ விதத்தில் ஓர் ஊகத்தை முனவைக்கின்றன என்பதாகும். அது அறிவியல் சார்ந்து இருக்கலாம், மானுடத்தை சார்ந்து இருக்கலாம், சமூகத்தை சார்ந்தும் இருக்கலாம்.

இன்று எழுதப்படும் இவ்வகை புனைவுகள் பலவற்றில் அறிவியல் கூறே இருப்பதில்லை. அல்லது ஒரு புதுவுலகை சமைத்து நம்பவைக்கும் அளவுக்கு மட்டுமே கதைக்குள் அறிவியல் இருக்கிறது.  ஆனால் அவை மனிதனை பற்றி, மானுட மனத்தை பற்றி ஓர் ஊகத்தை முன்வைக்கின்றன். இவை பெரும்பாலும் மிகைப்புனைவம்சங்கள் கொண்டுள்ளன. ஆகவே இவற்றை ‘ஊகம் ஒன்றை முன்வைக்கும் மிகைப்புனைவு’ என்கிறார்கள் (Speculative fantasy). இறுக்கமான அறிபுனைவு, நெகிழ்வான அறிபுனைவு, மிகை ஊகப்புனைவு என்ற மூன்று வடிவங்களையும் மொத்தமாக ‘ஊகப்புனைவு’ என்ற குடைக்கடியில் இன்று பேசப்படுகின்றன.

ஆக இன்று அறிவியல் புனைகதைகள் கொண்டுள்ள மாற்றத்தை ஒரு எளிமையான சட்டகம் மூலமாக புரிந்துகொள்ளலாம். கதையின் அறிவியல் நம்கத்தன்மையின் அடிப்படையில் அவை மையத்திலிருந்து விரிந்துசெல்கின்றன. இறுக்கமான அறிபுனை, நெகிழ்வான அறிபுனை, மிகை-ஊகப்புனை என்று வட்டங்களை உருவாக்கலாம். இவை அனைத்தையும் ‘ஊகப்புனைவு’ என்று கொள்ளலாம். மிகைப்புனைவு, மாய-யதார்த்தவாதம் போன்ற வகைகள் இவற்றுக்கு மிக நெருங்கியவை, ஆனால் இவற்றில் அறிவியல் அம்சம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக இருப்பதுமில்லை. இன்று பரவலாக எழுதப்படும் dystopian fantasy கதைகள் இந்த வகைமையை சேர்ந்தவை. உதாரணம், இந்த ஊட்டி அரங்கிலேயே கமலக்கண்ணன் அவர்கள் விவாதத்துக்கு எடுத்த ‘சிவப்புநூலிழை’ என்ற கதை. இந்த வகைமைகள் அப்படியே விரித்தபடி சென்றால் பழைய கதைசொல்லல் முறைகளான புராணங்கள், பேய்க்கதைகள், உருவகக்கதைகள், தேவதைக்கதைகள் போன்ற வடிவங்களில் சென்று சேரும். ஆக அறிவியல் புனைவு ஒரு புனைவு வடிவமாக யதார்த்தவாத எழுத்தோடு கொண்டுள்ள உறவை விட பழையபாணி கதைசொல்லல் முறைகளுடனேயே இன்னும் நெருக்கமான உறவு கொண்டுள்ளது.

இன்றைய அறிபுனைத் திரைப்படங்கள் பலவும் இந்த கதைச்சட்டகத்தினுள் பொருந்துபவையே. ‘இண்டர்ஸ்டெல்லார்’ இறுக்கமான அறிபுனைக்கான உதாரணம். அறிவியல் நம்பகத்தன்மை கொண்ட அறிபுனைக் கதை. அசலான அறிவியல் ஊகம் ஒன்றை முன்வைக்கிறது. ஆனால் ‘கிராவிட்டி’ நெகிழ்வான அறிபுனை. அதன் அமைப்பு அடிப்படையில் ஒரு நவீன தேவதைக்கதையுடையது. கதாநாயகியின் மன அழுத்தத்தையும் மீட்சியையும் கவித்துவமாக சொல்வது. அதற்கு அறிவியல் உலகை ஒரு யுக்தியாக பயன்படுத்திக்கொள்கிறது. அக்கதையில் அண்டவெளி, அதன் எல்லையின்மை, கருமை, அழுத்தம் எல்லாமே குறியீடுகளாக இடம்பெருகின்றன. ‘இன்செப்ஷன்’ ஒரு சுவாரஸ்யமான ஊகத்தை முன்வைக்கிறது. ஆனால் கதைக்குள் அதற்கு எந்தவித அறிவியல் முகாந்திரத்தை அளிக்கவில்லை. ஒருவாரான ‘அறிவியல்தன்மை’யோடு கதை அமைக்கப்பட்டுள்ளது, அதுவே அதன் நம்பகத்தன்மையை உருவாக்குகிறது. அதனை ‘மிகை ஊகப்புனைவு’ என்று வகைப்படுத்தலாம்.

அறிபுனை இன்று

இன்று எழுதப்படும் அறிபுனை கதைகளில் உள்ள நெகிழ்ச்சி ஒருவகையில் இந்த எல்லைகளை கடந்து தூய கதைகளாக நிற்க முற்படுவதன் வழியாக உருவாகி வருகிறது. இன்று எழுதப்படும் அறிவியல் கதைகளின் மிகச்சிறந்த சாத்தியங்கள் மூன்று வகைகளில் வெளிப்படுகின்றன.

  1. கவித்துவம் – இன்றைய அறிவியல் கதைகள் அறிவியலை வலுவான கவித்துவ படிமங்களாக உருவகித்துக்கொள்கின்றன. கதைக்குள் அறிவியல் சோதனையை, அல்லது கோட்பாடை, குறுந்தகவல்களின் தொகையாக இயற்கைவாத பாணியில் முன்வைக்கின்றன. ஆனால் ஒவ்வொரு சிறு தகவலும் வேறொன்றை சுட்டுவதால் அது கவித்துவமாகிறது. இடைவெளிகளை உருவாக்குகிறது. அதன் வழியே தத்துவார்தமான விசாரங்களை கதைத்தளத்துக்குள் நிகழ்த்தப்படுவதற்கான சாத்தியத்தை உருவாக்குகிறது. செவ்வியல் ஆக்கங்களாக நிற்கும் சாத்தியத்தை உருவாக்குகிறது. டெட் சியாங்கின் ‘Exhalation’ என்ற கதை இந்தப்பாணிக்கதைக்கு ஒரு சிறந்த உதாரணம்.
  2. வகைமைகலப்பு – இப்போது எழுதப்படும் அறிவியல் கதைகள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட வகைமைக்குள் தன்னை நிறுத்திக்கொளவதில்லை. இன்று அறிவியல் கதை சொல்ல முற்படுவது அறிவியலை அல்ல, அறிவியலை ஒரு யுக்தியாகக்கொண்டு மொத்த மானுடக்கதையை. ஆகவே இன்று ஒரு அறிவியல் கதைக்குள் யதார்த்தவாதம் வரலாம். மிகைபுனைவு வரலாம். மாய யதார்த்தவாதம் வரலாம். சர்ரியலிசம் வரலாம். வரலாறு வரலாம். புராணமும் வரலாம். டெட் சியாங்கின் ‘Story of your Life’ கதை இந்த பாணிக்கான ஒரு நல்ல உதாரணம். ஒரு யதார்த்தவாத கதையையும் ஒரு கவித்துவமான அறிபுனை கதையையும் ஒன்றோடொன்று ஊடுபாவும் வடிவம் கொண்டது. ஒரு விதத்தில் இவற்றை ‘அறிவியல் கதைகள்’ என்பதை விட ஒரு புதிய புனைவு சாத்திய வடிவம் என்றே நாம் பார்க்கத்தொடங்கலாம்.
  3. பிரபஞ்ச வரலாற்று நோக்கு – புனைவில் என்றுமே உள்ள ஒரு சவால் அதற்குள் வரலாற்றை எப்படி எழுதுவது என்பதுதான். ஆனால் இன்றுவரை புனைவுகள் கையாண்ட வரலாறு எழுதப்பட்ட வரலாறு. அகழ்வாராய்ச்சி, மொழியியல், சமூகவியல் போன்ற துறைகளிலிருந்து அதற்கான தரவுகளை பெற்றுக்கொள்கிறது. இன்னும் புனைவுப்பரப்பில் உயிரியல் வரலாறும் பிரபஞ்சவியல் வரலாறும் (biological history, cosmological history) எழுதப்படவில்லை. புனைவுக்குள் அறிவியல் தரிசனத்தளத்திலாவது வராமல் இவை எழுதப்படமுடியாது. இந்த உக்தியைக்கொண்டு டெரென்ஸ் மாலிக்கின் ட்ரீ ஆஃப் லைஃப் திரைப்படத்தில் வருவதுபோல் ஒரு யதார்த்தவாத நிகழ்வுக்கு பிரபஞ்சவியலில் காரணத்தை தேடலாம். அல்லது புனைவின் வழியாக ஒரு வரலாற்றுநிகழ்வுக்கு பின்னணியாக உள்ள மரபணுவியல் காரணங்கள் பரிசோதிக்கப்படலாம். மைட்டோகான்றியல் டி.என்.ஏ தரவுகளைச்சார்ந்து நம்முடைய குரங்கின முன்னோர்கள் வரை ஒரு வரலாற்றை புனைவுக்குள் எழுதிப்பார்க்கலாம். 

இவ்வாறு பல தளங்களில் பறந்து விரிந்து பேச எத்தனிக்கும் எழுத்துக்கள் அதுக்கான பிரத்யேக வடிவங்களை உருவாக்கிக்கொள்ளவேண்டிய சவால் இன்றுள்ளது. செவ்வியல் சிறுகதையின் வடிவம் இவற்றைச்சொல்ல போதாது. ஆகவே இந்த கூரல்முறைகள் வழியாக சிறுகதை இலக்கணமும் மாறுபாடு காணலாம். இன்றைய அறிபுனை எழுத்து அதை நோக்கிய ஒரு நகர்வென்று நினைக்கிறேன்.

இவ்வகை எழுத்துக்கள் கலைக்களஞ்சியங்களைப்போல இருக்கும். பழைய புராணகாவியங்களைப்போல் கிளைக்கதைகளும் ஊடுபாவுகளும் புனர்ஜன்மக்கதைகளும் மறுஜன்மக்கதைகளும் வெவ்வேறு வடிவங்களில் கொண்டிருக்கும். காலத்திலும் நிலத்திலும் வெளியிலும் தாவிச்செல்லும். நவீன அறிவியலையும் தத்துவத்தையும் தடையின்றி பேசும். நவீன செவ்வியலாகவும் நவீன புராணமாகவும் நிற்கும். இதைநோக்கியே இன்றைய அறிபுனை நகர்வுகொண்டுள்ளது.

சிறுகதை – நட்சத்திரங்கள் பொழிந்துகொண்டிருக்கின்றன

மாதுளைப்பழங்களை அணில்கள் கடித்த பிறகே நாம் சாப்பிடலாம் என்று அம்மா சொல்வார். நான் நட்சத்திரங்களை மாதுளைப்பழங்கள் என்று நினைத்துத்தான் பறித்துத் தின்றேன். ஆனால் அணில்களோடு பகிரவில்லை.

முதன்முறை தெரியாத்தனமாகத்தான் தின்றேன். அப்போது பதினைந்து வயதிருக்கும். ஒருநாள் தூக்கம் வரவில்லை. மொட்டைமாடிக்குச் சென்றேன். அன்றிரவு அந்த நட்சத்திரம் மாதுளைப்பழத்தைப்போல் வீங்கி இருட்டில் சிவப்பு ஒளி வீச பழுத்துத் தொங்கியது. அணில் வந்துவிடப்போகிறதே என்ற பயத்தில் யோசிக்காமல் அவசரமாக எம்பிப் பறித்துவிட்டேன்.

அணில்கள் எங்கள் வீட்டில் வாடகை கட்டாமல், ஏழெட்டு தலைமுறைகளாக வாழும் விருந்தாளிகள்.  எங்கள் வீட்டு மாதுளை மரத்தில் ஒரு காய் கனியத்தொடங்கிவிட்டால் எங்களுக்கும் அணில்களுக்கும் போட்டி தொடங்கிவிடும். ஒவ்வொரு நாளும் நாங்களும் அதுகளும் முந்தியடித்துச்சென்று பார்ப்போம், காய் பழுத்துவிட்டதா என்று. பழுத்துவிட்ட அடுத்த நொடி அதுகளுக்கு எப்படியோ செய்தி போய்விடும். நாங்கள் அடுத்த முறை போய் பார்க்கும்போது பழம் பாதி கடிக்கப்பட்டு பிளவுண்டு பல்லிளித்துத் தொங்கும். மண்மேல் மாணிக்கங்களாக சிதறியிருக்கும். அவற்றை பொறுக்கித் தின்றால் இனிப்பாகத்தான் இருக்கும். ஆனால் அணில்கள் தின்ற எச்சில் தான் எங்கள் மிச்சம் என்ற நினைவோடு தான் அவற்றை தின்ன முடியும். எப்போதும்.

நாங்கள் பார்த்தோம். ஒரு முறை முழுவதும் பழுப்பதற்கு மூன்று நாளுக்கு முன்னாலேயே பறித்துவிட்டோம். ஆனால் பழம் காய்வெட்டாகவே இருந்தது. அப்படியொரு கசப்பு. நாங்கள் அதனை தூர எறிந்ததைப் பார்த்த அணில்களுக்கு அன்று பொறுக்கவில்லை. வீடு முழுவதும் ஏறி இறங்கி கீச்சிக் கதறி துவம்சம் செய்து ஒரு வழியாக்கிவிட்டன. அதன் பின் எப்போதும் அணில்களுக்கு முதல் கடியை கொடுத்துவிட்டு நாங்கள் சாப்பிட்டால் போதும் என்று அம்மா சொல்லிவிட்டார். அணில்களுக்கு வீட்டில் கிட்டத்தட்ட குலதெய்வ அந்தஸ்து அளிக்கப்பட்டது. அம்மாவுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை உண்டு. ஏழு ஜன்ம பந்தம், அவர் பெயர் சீதம்மா.

நான் அந்த நட்சத்திரத்தை மாதுளை என்று நினைத்து பறித்ததை அம்மா அறிந்துகொண்டால் திட்டுவார். ஆக பறித்துவிட்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. சற்று நேரம் கையில் வைத்து உருட்டிக்கொண்டிருந்தேன். நட்சத்திரங்கள் இவ்வளவு வெம்மையாக இருக்கும் என்று யாரும் சொன்னதில்லை. அதிகம் யோசிக்காமல் முழுவதுமாக வாயில் போட்டு மென்றேன். கரைந்து உள்ளே சென்றது. பழத்தைப் போலவே சாறு இருந்தது. தொண்டையில் இலேசான வெம்மை. ஆனால் பெரிய உளைச்சல் இல்லை. நானும் அதிகம் யோசிக்கவில்லை. சாப்பிட்டு கையைத் துடைத்துக்கொண்டு அப்படியே போய் அம்மா பக்கத்தில் சுருண்டு படுத்து தூங்கினேன்.

அடுத்தநாள் நட்சத்திரம் செரித்துவிட்டிருந்தது. ஒன்றும் பெரிய வேறுபாடில்லை.

ஆனால் மேலும் சில நாட்களில் நகங்களில் அதன் ஒளியைக்கண்டேன். எப்படியோ நான் விழுங்கிய நட்சத்திரம் உடல்முழுவதும் ஊர்ந்து வழிதேடி நகமுனையில் வந்து சேர்ந்திருக்கவேண்டும். மருதாணி வைக்கும்போது நகத்துக்கும் சேர்த்து வைக்கும்படி அம்மாவை கேட்பேன். எல்லோருக்கும் நகங்களில் ஆரஞ்சு நிறத்தில் மருதாணி பிடிக்கும். எனக்கு என்றுமே அடர்சிவப்பு. ஆம் நகமும் சிவப்பு.

ஆனால் நட்சத்திரம் பூத்த நகங்கள் வேறு நிறம் கொண்டவை. இளஞ்சிவப்பு. ஊதா. மஞ்சள். எல்லாம் கலந்த நிறம். பனிக்கட்டியில் வெயில் விழும் நிறம். மங்களமான, நிதானமான ஒளி. நட்சத்திர நிறம்.

இரகசியமாக, யாருக்கும் தெரியாமல், நட்சத்திரங்களைப் பறித்து விழுங்கிக்கொண்டிருந்தேன். வட்ட வட்ட மாதுளைப்பழங்கள். வட்ட வட்ட நிறத்தட்டுகள். வட்ட வட்டத் தூக்கமாத்திரைகள். அவை கண்களில் கூந்தலில் விரல்களில் நகங்களில் ஏறிக்கொண்டன. அணில்கள் தான் முதலில் கவனித்தன. கோபமாகக் குரல் எழுப்பின. அம்மாவிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டின. நான் கண்டுகொள்ளவில்லை. அதற்குள் நான் நட்சத்திரமழையை கண்டுபிடித்துவிட்டேன்.

நாம் எல்லோரும் நட்சத்திரங்கள் வானத்தில் அசைவில்லாமல் நின்றுகொண்டிருப்பதாகத்தான் நினைக்கிறோம் இல்லையா? நாம் அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கிறோம். ஒவ்வொன்றாகப் பறிக்கிறோம். ஒவ்வொன்றாக விழுங்குகிறோம் செரிக்கிறோம். ஒரு நேரத்தில் ஒரு பழம் தான். ஒன்றுக்கு மேல் சாப்பிட்டால் சூடு ஏறும். வயிற்றை வலிக்கும். உங்கள் அம்மாவும் சொல்லியிருக்கிறார் இல்லையா?

எல்லாம் கண்தோற்றம். நட்சத்திரங்கள் எந்நேரமும் விழுந்துகொண்டிருக்கின்றன. தெரியவில்லையா? அசடா, அவை மிகமிக மெதுவாக விழுகின்றன. அதனால்தான் நம் கண்ணுக்குத் தெரியவில்லை. உண்மையில் இங்கு நட்சத்திரங்கள் மழையாகப் பொழிந்துகொண்டிருக்கின்றன. அவற்றை அறியவேண்டுமென்றால் நீயும் அந்த கதியில் பறக்கவேண்டும். விழவேண்டும். தும்பி இறகுகளை அணிந்துகொண்டு சென்றால் சரியாக இருக்கும். மெல்லப் பறக்கப் பழகு. அதோ அந்த விளிம்பிலிருந்து குதி. பயப்படாதே, நினைவுகொள் உனக்கு இறகுகள் இருக்கின்றன. அப்படித்தான், அப்படியே இறங்கி வா. இன்னும் மெதுவாக. இன்னும் இன்னும் மெதுவாக. தெரிகிறதா? உன் இடது பக்கம் படர்ந்து இறங்குவது? அது ஒரு நட்சத்திரம். உன் பின்னால் பார். வேகத்தைக் கூட்டாதே! நிதானம். நிதானம். மெல்லத்திரும்பு. அதோ, இன்னொன்று. இப்போது உன் முன்னால். சேர்ந்தாற்போல் மூன்று. தெரிகிறதா? உன்னை சுற்றி விழுகிறதா? நட்சத்திர மழை?

நாம் அவ்வளவு மெதுவாகச் செல்கிறோம். அசைவற்ற நிதானம். வெளியிலிருந்து பார்த்தால் நாமும் நட்சத்திரம் போலவே ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டிருப்பது போல, கண்சிமிட்டாமல் ஒன்றையே பார்த்துக்கொண்டிருப்பதுபோல் தோன்றும். ஆனால் நாம் பறந்துகொண்டிருக்கிறோம். தும்பிகளைப்போல். காலத்தை கரைக்கும் மழையில் பறந்துகொண்டிருக்கிறோம்.

நட்சத்திர மழை நம்மை மென்வெம்மையுடன் நனைக்கும். ஒருதுளி விடாமல், அருவிச் சாரலைப் போல் நனைக்கும். நீராவியெழப் பிரியும். உடலில் நிறங்களை விட்டுச்செல்லும். வெப்பத்தைக் கூட்டிச்செல்லும். ஆனால் விட்டு விலகும்போது குளிரடிக்கும். வாய் திறந்து மழைத் துளிகளைப்போல் நிறத்துளிகளைப் பிடிக்கலாம். நாக்கு ஊதா நிறமாகும். அது நம்மை பாட்டுப்பாட வைக்கும்.

அவர் பாடச்சொன்னபோது அந்தப்பாடலைத்தான் பாடினேன். அந்த ஊதா நிறப்பாடல்.

எங்கே கற்றுக்கொண்டாய், என்றார்.

நட்சத்திரமழையில், என்றேன்.

நட்சத்திரமழையை எப்படிப் பார்க்கவேண்டும், என்று கேட்டார்.

அதில் கரைந்து நனையவேண்டும் என்று சொன்னேன்.

அதை இங்கிருந்தே பார்க்கமுடியுமா, என்றார்.

இல்லை, அதில் நனையவேண்டும், அப்பத்தான் வண்ணங்கள் ஏறும், என்றேன்.

என்ன வண்ணங்கள், என்றார்.

உடலைக் குனிந்து பார்த்தேன். விரல்களைத் திருப்பிப் பார்த்தேன். நகத்தை உற்றுப் பார்த்தேன். பிறகு, அவரை நிமிர்ந்து பார்த்தேன்.

உன்னை நட்சத்திர மழை அடித்துச்சென்றுவிட்டது, என்றார்.

நீ அந்த நட்சத்திரங்களிலிருந்து ஒவ்வொரு முறையும் எடுத்துக்கொண்டாயல்லவா நிறங்களை? உன்னை அடித்துச் சென்றபோது அதுவே அந்நிறங்களையும் திரும்ப எடுத்துக்கொண்டது, என்றார்.

நான் வெளிறிப்போயிருந்தேன்.

மாதுளைப்பழங்களை அணில்கள் கடித்த பிறகே நாம் சாப்பிடலாம் என்று அம்மா சொல்வார்.

நான் உதட்டைக் கடித்து சுற்றிமுற்றிப் பார்த்தேன்.

வெள்ளை அறையின் கண்ணாடிக்கு அப்பால் அம்மாவும் அண்ணாவும் நின்றுகொண்டிருந்தார்கள். முகத்தில் கவலை. இரண்டு நாள் முகம் கழுவாத தடம். கசங்கிய புடவை. அம்மா வாய்க்கடியில் எதையோ முணுமுணுத்துக்கொண்டிருந்தார். மகாமிருத்யுஞ்சய ஸ்தோத்ரம். அல்லது மந்த்ரராஜபத ஸ்தோத்ரம். இல்லை இந்திராக்‌ஷி ஸ்தோத்ரம். எனக்கும் எல்லாம் மனப்பாடமாக தெரியும். அப்பாவுக்குச் சொன்னபோது பழக்கமானது.

அவர்கள் என்னை மழையில் நனைய விடவில்லை. ஆனால் எனக்கு நட்சத்திர மழையின் நினைவாகவே இருந்தது. வண்ணங்களற்றவளாக வாழ்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அவரிடம் சொன்னேன். டாக்டர், இசை கேட்கவில்லை. சப்தங்களாகிவிட்டது. மணம் வரவில்லை. மூக்கறுந்துவிட்டது. கண் தெரியவில்லை. கனவொழிந்துவிட்டது.

அவர்களால் எனக்கு உதவமுடியவில்லை. அதற்கெல்லாம் அவர்களிடம் மருந்துகளில்லை. தாரா, உன்னை மழை அடித்துச் சென்றுவிட்டது என்று திரும்பத்திரும்பச் சொன்னார்கள். என்னை எப்போதும் மழைப் போர்வைக்கடியிலேயே வாழும்படி சொன்னார்கள். குடைபிடித்து நடக்கச் சொன்னார்கள். நட்சத்திரங்களைப் பார்க்க விடவேயில்லை.

அப்போது தான் ஒரு நாள், அந்தக் கனவு வந்தது.

நான் ஒரு மலையுச்சியில் அமர்ந்திருக்கிறேன். நிறமற்ற மலை, நிறமற்ற வானம், நிறமற்றவளாக நான்.

விளிம்பைத் தாண்டி கீழே ஆழத்திலிருந்து எங்கேயோ அணில்களின் கீச்சொலி எழுந்து வருகிறது. அவை பசி, பசி என்று கதறுகின்றன.

நான் விளிம்பைத் தாண்டி குனிந்து பார்க்கிறேன். யாரும் இல்லை.

ஆனால் பின்னால் நகர்ந்ததும் அதே குரல். பசி, பசி.

என்ன செய்வதென்று தெரியவில்லை. அக்குரல் அடிவையிற்றை பிசைக்கிறது. அவை பழங்களை மட்டுமே உண்ணும் சீவிகள் என்று அறிவேன்.

ஆனால் என்னிடம் பழம் இல்லை. பழம் ஆகும் நிறமும் இல்லை. நிறமாகும் நீரும் காற்றும் கூட இல்லை.

நான் என்ன செய்வேன் என்ன செய்வேன் என்று யோசிக்கிறேன்.

நட்சத்திரங்கள் முதன்முதலில் என் நகத்தையும் கூந்தலையும் நாவையும் நாடிச்சென்றதை நினைவுகொள்கிறேன்.

ஒவ்வொரு நகமாக அவிழ்த்து கீழே எறிகிறேன். கனவில் வலியில்லை. பூவைப்போல் மென்மையாக பிரிந்து வருகின்றன.

குரல்கள் அடங்கும் ஒலி. ஆயிரமாயிரம் அணில்கள் விழுங்கி செரிக்கும் ஒலி.

கூந்தல் குதிரை வாலைப்போல் கையில் தொங்குகிறது. விளிம்பை மீறி வீசுகிறேன். பற்கள் ஒவ்வொன்றும் ஒரு சோழிமுத்துபோல் உள்ளங்கையில் குலுங்க அவற்றை வெட்டவெளிக்குள் வீசியெறிகிறேன்.

நாவை அறுக்கும்போது அது மாதுளை மொட்டாகக் கைக்குள் மடிந்து பாந்தமாக உட்காருகிறது. அதை மெல்ல விளிம்புக்கப்பால் விழவிடும்போது ஆழத்தை அடைவதற்குள் அந்த மலர் கனியாகிவிட்டிருக்கும் என்று அறிந்திருக்கிறேன்.

*

இப்போதெல்லாம் நான் மழைப்போர்வை அணிவதில்லை. குடைபிடிப்பதுமில்லை.

இப்போதெல்லாம், நான் இப்பாலேயே அமர்ந்துகொள்கிறேன். மூட்டுகளைச் சுற்றி கைகளை கட்டிக்கொள்கிறேன். இனிய வெறுமையில் தலை சாய்க்கிறேன்.

அப்பாலே மென்மையான கோடை மழையைப்போல, ஊசி ஊசியாய், சுவரம் சுவரமாய், நட்சத்திரங்கள் பொழிந்துகொண்டிருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக, இங்கிருந்து, வெறுமனே, ஒன்றுமே சொல்லாமல் பார்க்கிறேன். ஒவ்வொரு நிறமாக. ஒவ்வொரு அசைவாக. மெல்ல மெல்ல. காலத்தில் கரைந்து. பார்க்க பார்க்க இந்த இனிய சாம்பல் நிற வெறுமை நீட்டிக்கிறது.

உடலிலிருந்து நிறங்களெல்லாம் கரைந்தோடி விளிம்பைக்கண்டு குதிக்கின்றன. நட்சத்திரங்களாகி ஆழம் வரை பொழிகின்றன. ஒருவேளை அவற்றைச் சுவைகாணும் அணில்கூட்டங்கள் அங்கு குடிகொண்டிருக்கலாம். எல்லா நிறமும் மணமும் சுவையும் அதுகளுக்கானவை. அம்மா சொல்வார்.

சிறுகதை: யாமத்தும் யானே உளேன்

(அரூ இதழின் 2019 அறிவியல் சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை)

இருளாழத்துக்கு மறுபக்கமாக எங்கேயோ இங்குள்ள கதைகளெல்லாம் காத்துக்கொண்டிருக்கின்றன. அவை இரவெல்லாம் ஒன்றுடன் ஒன்று கைகோத்துச் சுருண்டு ஒளிப்பந்தாக உறங்குகின்றன. அவை ஒன்றை ஒன்று தழுவிக்கொள்கின்றன. விரல்பின்னி மூச்சிசைந்து நெஞ்சதிர்வுகள் இணைய நிசப்தத்தில் கனவு காண்கின்றன. இங்குள்ளவளின் உள்ளம் சுற்றிச்சுழன்று வந்து அவர்களை அடைவதற்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன அவை.

அவள் இருளின் கவசங்களை அவனறியாமலேயே மெல்ல, இரவெல்லாம் பொறுமையாக, அவிழ்த்துக் களையும் கலை அறிந்தவள். மெல்லப் படிவைத்து அவனுள்ளே நுழைபவள். அவன் விழிதிறக்கும் தருணத்தில் அவன் முன்னால் சென்று ஓசையில்லாமல் நிற்பவள். காத்திருப்பில் குவிந்த கரங்களும், கள்ளமற்ற ஒளிநிறைந்த கண்களும், கன்னத்தைக் குழியென்றகழும் குறுஞ்சிரிப்புமாக இருள் அவளைக் காண்கிறான். அவன் தன்னை மறந்து இளகிச் சிரித்து விரிகிறான். இப்பிரபஞ்சத்தில் அவனைச் சிரிக்க வைக்கக்கூடியவள் அவள் மட்டும்தான் அல்லவா? அவன் தோல்வியை ஒப்புக்கொண்டேன் என்று கைவிரித்து எழுந்து புன்னகையுடன் வழிவிடுகிறான்.

அப்போது இருளாழத்தில் ஒளிப்பந்தாக ஒளிந்துகொண்டிருந்த கதைகளெல்லாம் பொன்னொளிரப் பொதியவிழ்ந்து எழுகின்றன. இதழிதழாகப் பிரிந்து, சுருள்சுருளாக விரிந்து, கதைகள் ஒவ்வொன்றும் பொன்மஞ்சள் கைநீட்டலாக இருளை ஊடுருவி அவளை யாழ்வருடும் விரல்களெனத் தீண்டுகின்றன. அவள் மேல் வண்ணவண்ண ஒளியாடைகளாகப் படர்கின்றன.

அவள் ஒவ்வொரு நாளும் தன்னை அணிசெய்து மகிழ்வித்துச் சிரிக்க வைக்கும் ஆடைகளுக்காகக் காத்திருப்பவள். எல்லா ஆடைகளையும் சமமெனப் பாவித்து எதையும் நீக்காமல் விலக்காமல் தன்மேல் உடுத்திக்கொள்பவள். ஒரு துளி ஒளியையும் வீணென்றாக்காமல் பருகுபவள். கண்ணும் காதும் விலகாமல் தன்னை முழுதும் அளித்து முழுதும் பெறுபவள். அவள் பேருள்ளம் கொண்டவள், வான்வரை மனம் விரிந்தவள்.

அவள் உடுத்தாத ஆடையே இல்லை, கேட்காத கதையே இல்லை. அவள் காணாத ஒன்றை அவளிடம் யாரும் காட்டிவிட முடியாது என்பது மூத்தோர் வாக்கு. தன் கருணையால் மட்டுமே ஒவ்வொரு நாளும் இருளாழத்துக்கு மறுபக்கம் சென்று உறங்கும் கதைகளை மீட்டெடுத்துக் கொண்டுவருகிறாள். பெருந்தன்மையால் மட்டுமே எல்லாக் கதைகளையும் இதோ இப்போதுதான் முதல்முறை கேட்கிறேனென்று சிறுமிபோல் சம்மணக்கால் கட்டிக் கன்னத்தில் கை வைத்துக் கண் சொக்கக் கேட்கிறாள். நான் சொல்லப்போவதும் அவளுடைய கதை. பழங்கதை. அவளுக்கு நன்கு பரிச்சயமான கதை. அவள் பொறுத்தருளிக் கேட்பாளாக!

ஆனால் இக்கதையை மட்டும் எத்தனை முறை கேட்டாலும் அவளுக்குச் சலிப்பதில்லை. சிறுமியாக இருந்த நாள்தொட்டே பார்த்திருக்கிறேன். மூத்தோர் கதை சொல்லும்போதெல்லாம் ஒழிந்து நின்று கவனித்திருக்கிறேன். இக்கதையை ஒவ்வொருமுறை கேட்கும்போதும் அவள் அதன் ஒளியால் சுடரேற்றப்படுகிறாள். நெஞ்சோடு கை சேர்த்து கண் விரித்துத் துளித்துளியாகக் கண்ணீர் வடித்துக் கேட்கிறாள். ஆனால் வேறெப்படியும் இருக்க முடியாது அல்லவா? இருளை ஒவ்வொரு நாளும் கிழித்து ஒளி வாங்கி வருபவள் அவள். அவளன்றி அவனுக்காகக் கண்ணீர்விட வேறு யார் இருக்கிறார்கள் இங்கு?

கௌதமனிடம் கர்ணனின் கதையை மட்டும் அம்மாவேதான் சொன்னாள். அவனுக்கு அவள் சொன்ன ஒரே கதையும் அதுதான். அதனாலேயே அவனுள்ளத்தில் அது கங்குக்கனலின் வெம்மையை அடைந்துவிட்டது. அவனே கதை சொல்லத் தொடங்கியதும் உணர்வெழ மீண்டும் மீண்டும் சொன்னவற்றில் முதன்மையான கதையாக ஆகியது. அப்படிச் சொல்லும்போது கேட்கும் திரளில் பனிக்காத ஒரு கண்ணும் இருப்பதில்லை.

அப்போது கௌதமன் மிகவும் சிறியவன். ஏழெட்டு வயது இருக்கும். அன்று அவனுக்கு வலி கொஞ்சம் அதிகமாக இருந்தது. தினந்தோறும் வலி இருக்குமென்றாலும் அன்று போல் அதுவரை இருந்ததில்லை. மைய அறையில் பெரிய கண்ணாடிச்சுவரை ஒட்டிப் போடப்பட்டிருந்த அகலமான இருக்கையின் ஓரமாக, பந்தாகச் சுருண்டு படுத்து அடிவயிற்றைக் கவ்வியபடி அவன் அழுதுகொண்டிருந்தான். அன்று நாள் முழுவதும் சாப்பிடவில்லை. ஆற்றுப்படுத்த வந்த அக்காக்களை அடித்து விரட்டினான். பொருட்களைத் தூக்கி எரிந்தான். எப்போதும் சாதுவான குரலில், தத்தித்தத்தி, வெட்கத்தில் கழுத்தசையப் பேசுபவன். ஆனால் அன்று யாராலும் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அழுதான், கத்தினான், அடித்தான், மிதித்தான். சித்தப்பாகூடப் பயந்துவிட்டார். அப்போது மெலிதான கிண்கிணிமணியோசையுடன் அம்மா படியிறங்கி வந்தாள்.

அம்மாவே இறங்கி வருவது அங்குப் பெரிய நிகழ்வு. கதை சொல்வது அதைவிட. அவள் கீழ்த்தளத்துக்கு அரிதாகத்தான் வருவாள். பெரும்பாலும் மேல்தளத்தில் தன்னுடைய அறையில்தான் இருப்பாள். கௌதமன் அங்குச் செல்லக்கூடாது என்பது அங்கே எழுதப்படாத விதி. அவன் பகலில் எப்போதும் அந்தக் கண்ணாடிச்சுவருக்கு அருகேதான் அமர்ந்திருப்பான். மூன்று அக்காக்கள் மாறி மாறிக் கதை சொல்லக் கேட்டுக்கொண்டிருப்பான். இரவானால் அடித்தளத்தில் தன் அறைக்குச் செல்ல வேண்டும். தனி அறை. அவன் தனியாகத்தான் உறங்க வேண்டும்.

அன்று அம்மாவே வந்ததைப் பார்த்து எல்லோரும் பேசாமல் சிதறினார்கள். கௌதமனும் தன் அழுகையைக் கட்டுப்படுத்த முயற்சித்தான். அம்மாவுக்குச் சத்தம் பிடிக்காது என்று அக்காக்கள் அவனிடம் சொல்லி வைத்திருந்தார்கள். ஆனால் வலி தாளாமல் அவனையும் மீறி விசும்பல்கள் வெளிவந்தன. கன்னங்கள் நனைந்திருந்தன. அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. ‘அம்மா, வலிக்குது, வலிக்குது’ என்று முனகி அழுதான். அப்போதுதான் அம்மா அவனைத் தன் மடியில் அமர வைத்துக்கொண்டு பெரிய கண்ணாடிச்சுவர் வழியாக பூமியின் பேருடல் வளைவை நோக்கியபடி, ஒரு கையால் அவன் அடிவயிற்றையும் மறுகையால் அவன் தலையையும் மாறி மாறி வருடியபடி, அக்கதையைச் சொன்னாள்.

அவளுடைய உடலின் ஸ்பரிசம் அவனுக்குப் புதிதாக இருந்தது. ஆனால் அன்னியமாக இல்லை. வலியிருந்தாலும் அந்தத் தொடுகையிலேயே எல்லாம் தெளிந்து அச்சமெல்லாம் மறைந்து சிம்மாசனத்தைக் கண்டடைந்த இளவரசனைப்போல் அவருக்குள்ளே தன்னைப் புதைத்துக்கொண்டான். இங்கே என்ன வைத்திருக்கிறாள் என்று கனாமயர்வில் அவள் நெஞ்சைத் தன் உள்ளங்கையால் அழுத்திப்பார்த்தான். அவள் சொல்லத் தொடங்கியதும் கட்டை விரலைச் சப்பியபடியே கதை கேட்டான்.

அம்மா உடலை முன்னும்பின்னும் ஆட்டிக்கொண்டே அதே கதியில் அவனைத் தட்டிக்கொண்டே அவர்களுக்கு முன்னால் கருவெளியில் பூத்திருந்த புவியைச் சுட்டிக்காட்டினாள். கண்ணாடிக்கப்பால் பார்வையை நிறைத்த பெரிய வளைந்த உடல் கொண்டிருந்தது புவி. அவள் ஒரு நீலப்பசு, என்று அம்மா சொன்னார். அவளுடைய சீரான வளைவுகளை அறுத்துக் கிழித்ததுபோல் ஒரு வட்டவடிவமான பிளவு நட்டநடுவே தெரிந்தது. பாதாளத்துக்குத் திறக்கும் ஒரு ராட்சச வாய். பூமியின் குடல்களை உருவி வெளியே வைத்ததுபோல் பழுத்த பொன்நிறத்தில் அவள் உடல் திறந்திருந்தது. கௌதமனின் தலையை வருடியபடி ‘பார், அவளும் அலருகிறாள். உன்னைப்போலவே அவளுக்கும் வலிக்கிறது. வலியில் அவள் உன் சகோதரி’ என்றாள்.

அவ்வளவு நாட்களாக அந்தக் காட்சியை பார்த்துதான் வளர்ந்திருந்தாலும், அன்றுதான் அவனுக்கு அது புரிந்தது. அம்மாவைத் திரும்பி நோக்கி “ஓ” வென்று வாயைக் குவித்தான். அப்படியென்றால், எப்போதுமே இப்படி இருந்ததில்லையா, அவளுக்கு என்ன ஆனது, என்றான். பூமிக்குப் பெரிய காயம் பட்டுவிட்டது என்றாள் அம்மா. உள்ளே என்ன தங்கம், என்று அவன் கேட்டான். அது சூரியன், என்றாள் அம்மா. வெளியே ஒரு சூரியன் இருப்பதுபோல் பூமிக்கு உள்ளேயும் ஒரு சூரியன் இருக்கிறது. ஓயாமல் எரிந்துகொண்டிருக்கிறது. நீ பார்ப்பது அதன் தங்கக் குழம்பைத்தான், என்றாள். நான் சிறுமியாக இருக்கும்போது நிகழ்ந்த பெரும்போரில் பூமியின் நிலம் அறுக்கப்பட்டது. அது பிளந்தபோது தங்க நெருப்பு மேலேறி வழிந்தது. இன்னும் உரைந்து கட்டாமல் வழிந்துகொண்டுதான் இருக்கிறது. மானுடர் யாரும் அதன் அருகே வாழ முடியாது, அதனால்தான் நாம் இங்கே வந்துவிட்டோம், என்றாள். அப்படியென்றால் பூமியில் மனிதர்களே இல்லையா என்றான். அம்மா அவனைத் தட்டுவதை ஒரு கணம் நிறுத்தி, இருக்கிறார்கள், என்று மெதுவாகச் சொன்னார்.

அப்போதுதான் அம்மா கர்ணன் பிறந்த கதையைச் சொன்னார். பூமிக்குள் இருக்கிறது என்று சொன்னேனல்லவா? அதேபோல் கர்ணனின் அம்மாவுக்குள்ளும் ஒரு சூரியன் இருந்தது. அந்த வெம்மையின் ஆற்றலால் அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. பொன்னொளிர்க் கவசமும் மணிக்குண்டலமுமாக அவன் இறங்கி வந்தான். இப்படியும் ஒரு மானுடனா, இவன் தேவன் அல்லவா, தேவகுமாரன் அல்லவா என்று எண்ணும்படியாகக் கண்நிறைக்கும் பேரெழிலுடன் இருந்தான். ஆனால் அவன் அம்மாவால் அவனைத் தன்னுடன் வைத்துக்கொள்ள முடியவில்லை. கண்ணும் நெஞ்சும் நிறைய அவனை அணைத்து, கொடிக்கூடையில் வைத்தாள். அவளுக்குத் தாளவில்லை. அவனை மீண்டும் அள்ளி அணைத்து உடலில் ஓரிடம் மிச்சமில்லாமல் முத்தமிட்டாள். போகாதே, போகாதே என்று சொல்லிக்கொண்டே அவனை அந்தக் கூடையில் வைத்தாள். குளிரடிக்குமே என்று அவன் உடலைப் போர்த்தி மூடினாள். இல்லை, எனக்கு வேறு வழியில்லை, என்று தனக்குள் சொல்லியபடி அதனை மெல்ல ஆற்றில் மிதக்கவிட்டாள். அப்போது உதித்த சூரியனின் கதிர்கள் நீரைத் தொட அது அனலாக மாறியது. அவன் அந்த நதியில் மிதந்து தூரதூரமாக எங்கேயோ செல்வதை அவன் மறையும்வரை பார்த்தாள். உடலின் நரம்புகள் எல்லாம் வரிசையாகத் துண்டித்து அறுந்தவளாகக் கர்ணனின் அம்மா கரையில் நின்று கதறி அழுதாள்.

கௌதமன் வாயிலிருந்து விரலை எடுத்து அம்மாவிடம் திரும்பி, அவள் ஏன் அவனை ஆற்றில் விட்டாள், என்று கேட்டான். அம்மா சற்று நேரம் ஏதும் பதில் சொல்லாமல் அவன் தலையைக் கோதினாள். பின், அவன் அம்மாவால் வேறெதுவும் செய்திருக்க முடியாது, அவளுக்கு வேறு வழியில்லை, அவளை மன்னித்துவிடு என்றாள். அவள் தூரத்தில் காணாத எதையோ, அல்லது யாரையோ பார்த்துப் பேசுவது போல் இருந்தது. அவள் குரல் அங்கிருந்து மிதந்து வந்தது. எப்படியும் அவனும் ஒரு நாள் தான் என்று தருக்கி நின்று அவளை உதைத்துவிட்டுப் பிரிந்து செல்லப் போகிறவன்தானே? என்றாள். அம்மா அவனைத் தன் கூடவே வைத்துக்கொள்ள முடியாதல்லவா, என்றாள். கௌதமன் எம்பி அம்மாவின் கண்களைச் சிறிய உள்ளங்கைகளால் துடைத்தான். அம்மா, அழாதே, நான் எங்கேயும் போக மாட்டேன், என்றான். அப்போது அவன் தன் வலியை மொத்தமாக மறந்துவிட்டிருந்தான்.

அதற்குப் பிறகு அம்மா இறங்கி வரவில்லை. அவள் கௌதமனுக்கு வேறெந்தக் கதையையும் சொல்லவுமில்லை. ஆனால் அம்மா சொன்னதனாலேயே அந்தக் கதையைக் கேட்ட நாளிலிருந்து அது கௌதமனுடைய கதை, கௌதமனுக்கு மட்டுமேயான கதை என்று கௌதமன் கற்பனை செய்துகொண்டான். அக்காக்களிடமோ சித்தப்பாவிடமோ கூட அந்தக் கதையை அவன் சொல்லிக்காட்டவில்லை. ஆனால் அவன் வளரும்தோறும் தன் நினைவுக்குள் பொதிந்துவைத்திருந்த அந்தக் கதையை மீண்டும் மீண்டும் வெளியே எடுத்து சிறுவர்கள் முயல்குட்டியை வருடுவதுபோல் தொட்டுத்தடவிப் பார்த்துக்கொண்டான்.

2018-10-29 07.54.21

அதன் பிறகு அவன் கேட்ட எல்லாக் கதைகளுடன் அந்தக் கதை எப்படியோ இணைந்துகொண்டது. அந்தக் கதையில் வலி இருந்தது. ஆனால் அவன் அந்தக் கதையில் ஓர் இனிமையையும் காணத் தொடங்கினான். பழக்கப்பட்ட வலியின் வருகை தரும் இனிமை போல. சிலபோது அவனுடைய அன்றாட வலி உடலைக் கவ்வி எரிக்கும்போது கௌதமன் தன்னை ஆற்றில் ஒழுகிச்செல்லும் தங்கக் கவசமணிந்த கர்ணனாகக் கற்பனை செய்துகொள்வான். கரையில் அவன் அம்மா முகம் தாழ்த்தி அழுதுகொண்டிருப்பார். அவன் அந்த அழுகையைப் பார்த்தபடி ஆற்றிலிருந்து வானை நோக்கிச் சிரிப்பான். பெரிய சிவந்த ஒளிச்சுடராகச் சூரியன் அவனைப் பார்த்துக்கொண்டிருக்கும். கௌதமனின் இளம் உள்ளம் அந்தக் காட்சியுடன் ஒன்றும்போது அதுவரை நீடித்த வலியின் உணர்வு மாறுபடும். எம்பிக் குதித்துச் சிவந்த சூரியனைப் பிடித்துக் கீழே இழுத்து கைக்கடக்கி கொண்டுவர வேண்டும் என்ற வேகம் அவன் உடலில் எழும்.

இப்போது கேட்டால், அந்த இடைவிடாத வலியைத் தவிர்த்துப்பார்த்தால் தன்னுடைய குழந்தைப் பருவ நாட்கள் பெரும்பாலும் மகிழ்ச்சியானதாகவே இருந்ததாக கௌதமன் சொல்வான். ஒவ்வொரு நாளும் பூமி உதிப்பதைப் பார்த்தபடித் தன் அறையில் எழுவான். வந்து பெரிய கூடத்தில் கண்ணாடிச்சுவர் அருகே உட்காருவான். அக்காக்கள் உணவுடன் வருவார்கள். சூரியக் கதிர்களிலிருந்து நேரடியாகத் தயாரிக்கப்பட்ட உணவு. அவர்கள் உணவை ஊட்ட ஆரம்பித்துவிட்டால் சாப்பிட்டு முடிக்கும்வரை வாய் திறக்கக்கூடாது. ஆனால் அவன் சீக்கிரமே சாப்பிட்டுவிடுவான்.

உணவு வேளை முடிந்ததும் அக்காக்கள் முந்தய நாட்களில் கேட்ட பழைய கதைகள் சிலவற்றை அவனைச் சொல்லச்சொல்லிக் கேட்பார்கள். அதன் பிறகு அன்றைக்கான புதிய கதைகளை அவர்கள் சொல்வார்கள். வீரக்கதைகள், சோகக்கதைகள், பயணக்கதைகள், போர்க்கதைகள், காதல்கதைகள், குடும்பக்கதைகள், பேய்க்கதைகள், பாலியல்கதைகள், திகில்கதைகள், துப்பறியும்கதைகள், நீதிக்கதைகள், நாட்டுப்புறக்கதைகள், தேவதைக்கதைகள், தத்துவக்கதைகள் என்று எல்லா விதமான கதைகளும் அதில் அடக்கம். என்ன, அவனுக்கு அந்த வேறுபாடுகள் தெரியாது. அவனைப் பொறுத்தவரை எல்லாமே பூமியின் கதைகள்தான். குறுக்காக கேள்வி கேட்கக்கூடாது என்பதால் கதைகளைப் பாதி புரிந்து, பாதி புரியாமல் கேட்பான். இருந்தாலும் எல்லாவற்றையும் அவர்கள் சொல்லச்சொல்ல அப்படியே உள்வாங்கும் திறன் அவனுக்கு இருந்தது. கதைகளில் வரும் இடங்களை, பெயர்களை, விவரணைகளை உடனுக்குடன் தனியாகப் பிரித்து வைத்துக்கொள்வான். சரியாக நினைவிருக்கிறதா என்று திரும்பச் சொல்லிப்பார்ப்பான். அப்படி நாள் முழுவதும் கதை கேட்பான்.

அன்று கேட்ட கதைகளெல்லாம் அவனுக்குள் நூலாகத் திரியாக ஓடிக்கொண்டிருக்கும். இரவில் மல்லாந்து கண் சொக்கிப் படுத்தால் விளக்கொளியில் கூரை நிழல்கள் கதையின் காட்சிகளைப்போல் தெரியும். அவை மங்கி உருமாறும். இரவெல்லாம் அவற்றைப் பின்னல்போட்டுக்கொண்டே இருப்பான். ஒன்றுடன் ஒன்று தொடுத்துக்கொண்டே இருப்பான்.

ஒரு கதையில் தொடங்கி சற்று நேரம் கழித்துப் பார்த்தால் வேறொரு கதையில் சென்று முடிந்திருப்பான். என்ன நிகழ்ந்ததென்றே தெரியாது. ஆனால் அதிலிருந்து ஒரு புதுக்கதை பிறந்திருக்கும். ஆச்சரியத்துடன் தனக்குள் அந்தப் புதுக்கதையைச் சொல்லிச்சொல்லி நினைவாக்கிக்கொள்வான். தந்தையும் மகனும் ஒருவரையொருவர் அறியாது போர்க்களத்தில் சந்தித்துக்கொள்ளும் கதையை அன்று கேட்டிருப்பான். அது தனக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே திடீரென்று பல நாட்களுக்கு முன்னால் கேட்ட பதின்மூன்றாம் நூற்றாண்டுச் சீனக்கதை ஒன்று நினைவில் எழும். வேடிக்கையான கதை. வீரியத்தை அதிகரிக்கிறேன் என்று சொல்லி ஊரில் அத்தனைபேரையும் ஏமாற்றிக் குரங்குக்குறிகளை உடலில் பொருத்திவிட்டு ஓடிவிடும் தந்திரக்கார மருத்துவனின் கதை. கௌதமனுக்குப் போரென்றாலும் தெரியாது, வீரியமென்றாலும் தெரியாது. அந்தக் கதையே ஒரு புரியாத நெளிவாக, கோணல்சுழிப்பாக, அசட்டுச்சிரிப்பாக உள்ளே கிடந்தது. ஏன் அக்கதைகளை இணைக்கிறான் என்று கேட்டால் அவனால் சொல்லவும் முடிந்திருக்காது. என்ன தொடர்பு என்று அவனுக்குப் புரியாது. ஆனால் இயல்பாக அவன் உள்ளம் அந்த முடிச்சை போட்டது. இப்படிப் புதிது புதிதாகக் கதைகளை அவனே உண்டுபண்ணுவான். அப்படியொரு புதிய கதையைக் கண்டுபிடித்துவிட்ட குதூகலத்தில் அவன் உள்ளம் எழுச்சிகொள்ளும். அடுத்தநாள் யாரிடமாவது சொல்லிக்காட்ட வேண்டும் என்று நினைத்துக்கொள்வான்.

ஆனால் அவனைத் தினம் தினம் வாட்டிய வலி அப்படித்தான் தொடங்கும். அக்கதைகளின் தொடர்பு புரியாமல் மீண்டும் மீண்டும் அசைபோட்டுக்கொண்டே வட்டமடித்துக்கொண்டே இருப்பான். வேறுவேறு கதைகளில் கேட்டவை குழிக்குள் மண் சரிவதுபோலச் சலசலவென்று மண்டையை நிறைக்கும். ஓடிக்கொண்டே இருக்கும் மண்டை சூடாகும். உலோகங்கள் தீப்பொறி பறக்க உரசிக்கொள்ளும். அடிவயிற்றில் தொடங்கும் அந்தக் கொடியவலி. கௌதமன் அதன் வருகையை உணர்ந்து முனகுவான். தோலை மட்டும் அறுத்து மெல்ல உரித்து உருவி அதற்கடியில் எரியும் கங்குகளை அடுக்கி வைத்தாற்போன்ற வலி. தீயேறுவதுபோல் அது முதுகுத்தண்டில் தொற்றி உச்சிமுனைக்கு ஏறும். அடிபாதம் வரை இறங்கி நகக்கண்களைக் குத்தும். கௌதமனின் தொடைகள் வலியில் துடிக்கும். வலி தலைக்கேறும்போது தாங்காமல் கௌதமன் அலறுவான். பிரகாசமான செவ்வொளி கண்ணை நிறைக்கும். நட்சத்திரங்களாகக் கண்ணுக்குள் மின்னும்.

அப்போது உலகம் உடைவதுபோல் காட்சிகளாக, ஒலிகளாக, வாசகங்களாக கதைகளெல்லாம் அவனுள் சிதறும். சரியும். ஒளிவட்டத்தின் ஒளி ஏறி ஏறி வலி நெருப்பு சீழும் கொப்பளமுமாக உச்சிமண்டையில் வெடிக்கும்.

பின் எல்லா உணர்வுமே அழிந்துவிடும். மௌனம். வெட்டவெளித்தனிமை. திசைக்காற்றுகள் பந்தாட அவன் மட்டும் தன்னந்தனியாக நின்றிருப்பான். அது ஓர் இடைவெளி. அவன் சற்றே சமநிலையடைந்து சுற்றும்முற்றும் பார்த்து வேதனையில் மெல்ல எழுந்து அமர முயற்சிப்பான்.

அதன்பின் வலி மெல்லிய முனகலுடன் மீண்டும் திரும்ப வரும். மீண்டும் வலிமலையேற்றம். மீண்டும் சிதைவு. மீண்டும். மீண்டும். மீண்டும். பாதிநாள் பற்களை இறுக்கி கண்களில் கண்ணீர் சோர்ந்தபடிதான் அவன் விழிப்பான்.

கௌதமன் வளரும்தோறும் அவன் அனுபவித்த வலியின் தீவிரம் சளைக்கவேயில்லை, அதிகரித்தபடியேதான் இருந்தது. அதன் குணமும் நிறமும் மாறினாலும், அந்த வலியை உருவாக்கிய காட்சிப்பிரவாகம் மாறினாலும், அது சென்று சேரும் உச்சிமுனை மாறவேயில்லை. தலைக்கு மேல் செம்பொன் மணியென பழுத்த ஒளி. கண்ணை நிறைத்து ஒளியால் குருடாக்கியது. பின் ஒரு நொடியில் வெடித்துச் சிதறி வெட்டவெளிக் கருமையில் தூக்கி எறிந்தது. அவன் வளரும்தோறும் கேட்ட கதைகளின் வழியே கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அவனுக்குள் அந்த நிலையிழத்தல் நிகழ்ந்தது.

ஆனால் அதுவரை கேட்ட எந்தக் கதையையும்விடத் தன்னை மொத்தமாக நிலையிழக்கச் செய்த கதையைக் கௌதமன் தனக்கு பதினோரு வயதானபோது முதன்முறையாக கேட்டான். அது ஒரு பழைய நாடகக்கதை என்று அக்கா சொன்னாள்.

அதன் நாயகன் சுடுகாட்டில் ஒரு மண்டையோட்டைக் கண்டடைவான். அதைக் காதருகே வைத்துக் குலுக்கிப் பார்ப்பான். அது அவனைப் பதிலுக்குப் பார்வையற்ற ஓட்டைகள் வழியாக வெறித்துப் பார்க்கும். பல்லிளிக்கும். அவன் அதனுடன் உரையாடுவான். அந்த மண்டையோட்டுக்குள் ஏதோ ரகசியம் இருப்பதாக உணர்வான். ஆனால் அவனைச் சுற்றி இருப்பவர்களெல்லாம் அதனை அவனிடம் சொல்லாமல் மறைத்து சதி செய்வதாக எண்ணுவான். அதைப் புரிந்துகொள்வேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தான் ஒரு பைத்தியக்காரன் என்று நாடகம் ஆடி எல்லோரையும் வேவு பார்ப்பான்.

அப்போது பரிதாபமாக அவனுடைய பேதைக்காதலி குறுக்கே வந்துவிடுவாள். அவன் வைத்த பொறியில் சிக்கிக்கொண்டு அவனுக்கு உண்மையிலேயே பைத்தியம் பிடித்துவிட்டதாக நம்பிவிடுவாள். அவளுக்குப் புத்தி பேதலித்துவிடும். ஆற்றில் விழுந்து அதன் ஒழுக்கோடு அவன் பின்தொடர முடியாதபடி போகாத ஊருக்கு சென்றுவிடுவாள்.

இக்கதையைக் கேட்ட இரவு கௌதமனின் எண்ண ஓட்டத்தில் அந்த மண்டையோடு வந்தபோது அவனை அறியாமலேயே அவன் தன்னுடைய தலையைத் தொட்டுத் தடவிப் பார்த்தான். இரும்புப் பந்துபோல் நெகிழ்வே இல்லாமல் கனமாகத் திடமாக இருந்தது. சற்றுநேரம் அப்படியே இருந்தவன் அக்கதையை மீண்டும் தனக்குள் சொல்லிப்பார்த்தான். அந்த இளைஞனுக்குப் புத்தி பேதலிக்கிறது. அவன் தன்னை விரும்பிய பெண்ணை மோசமாகத் திட்டுகிறான். நிராகரிக்கிறான். அவள் பைத்தியமாகிறாள். ஆற்றில் விழுகிறாள். ஆற்றின் ஒழுக்கோடு செல்கிறாள்…

அந்த இணைவு அவனுள் உதித்ததும் மண்டையே பிளந்துவிடும் என்பதுபோன்ற வலி ஏறியது. அப்படியொரு வலி அதற்கு முன்னால் வந்ததே கிடையாது. கண்களில் கூசும் ஒளி திரண்டு வடிவம் கொண்டது. அந்த ஆறு. அதே ஆறு. கர்ணனை அவன் அம்மா கைவிட்ட அதே ஆறு. உடல் முழுவதும் எரிந்தது. கொடுக்குகளாகக் கொட்டியது. போர்வைகளையும் ஆடைகளையும் கிழித்துக் களைந்தான். எதையோ தேடித்துழாவுபவன்போல் உடல் முழுவதும் பிராண்டிக்கொண்டான். தலைக்கு மேல் செஞ்சூரியன்போல் ஒளி அணையாமல் நின்று எரிந்தது. வலியில் துடித்துப் படுக்கையை அறைந்தான்.

அன்று இரவெல்லாம் கௌதமன் அந்த ஆற்றில் ஒழுகிச் சென்றான். அது தீயாறு. செங்கனலாகத் தகித்தது. ஒரு கரையில் கர்ணனின் அம்மா அழுதுகொண்டிருந்தாள். மறுகரையில் அந்த மண்டையோட்டு இளைஞன் சோகமாக வாய்பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான். ஆற்றில் கௌதமன் அலறிக்கொண்டே இருந்தான். ஆனால் சத்தமே எழவில்லை.

ஆம், கௌதமனுக்கு அக்காக்கள் சொன்ன கதைகளெல்லாம் அவன் வயதை மீறியவை. ஆனாலும் முழுவதும் சொல்வார்கள். அவனும் முடிந்தவரை அர்த்தப்படுத்திக்கொள்வான். அவர்கள் கதைகள் மட்டும் சொல்வதில்லை. கவிதைகளும் பாடுவார்கள். நெகிழ்வான மனநிலையில் இருந்தார்களென்றால், இனிய, ஏக்கம் நிறைந்த, சோகம் தோய்ந்த நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவார்கள். அப்போது கௌதமன் அவர்களுடைய முகங்களைக்கண்டு அவர்களை அணைத்துக்கொள்ள ஓடிவருவான்.

ஆனால் அக்காக்களை அவன் தொடக்கூடாது என்பது அங்கே விதி. அப்படிப்பட்ட நாட்களில் அம்மா தன்னை அணைத்துக்கொண்டு கதை சொன்ன அந்த ஒற்றைத் தருணத்தை ஏக்கத்துடன் நெஞ்சில் மீண்டும் மீண்டும் ஓட்டிப்பார்ப்பான் கௌதமன். அம்மாவின் உடலின் நெருக்கமும் மென்மையும் குழைவும் கதகதப்பும் ஒரே நேரத்தில் மிக அன்னியமான ஒன்றாகவும் மிகமிகப் பரிச்சயமான ஒன்றாகவும் இருந்த விந்தை நினைவுக்கு வரும்.

கௌதமனை அந்த வீட்டில் தொடக்கூடிய ஒருவர் சித்தப்பா மட்டும்தான். சித்தப்பா கதை சொல்ல மாட்டார். அதிகம் பேச மாட்டார். அவர் மீன் போன்ற மனிதர். ஒல்லியான சதை ஒட்டிய வழவழப்பான கருப்பு உடல் கொண்டவர். மீன்போலப் பெரிய உதடுகள் எப்போதும் பாதிப் புன்னகையில் திறந்திருக்கும். மீன் போலவே திரை மறைத்த கண்கள். அவர் உடலின் வாசத்தைக் கௌதமனின் எண்ண ஓட்டம் தான் கேட்ட கதைகளில் வரும் மீன்வாசத்துடன் அனிச்சையாகத் தொடர்புபடுத்திக்கொண்டது. கௌதமனுக்கு வலியெடுக்கும்போது சித்தப்பா எதுவும் பேசாமல் அவனை அணைத்துக்கொள்வார். அக்காக்கள் இல்லாதபோது கன்னத்தில் முத்தம் கொடுப்பார். அவருடைய முத்தங்கள் மறந்து தொலைத்த ஏதோ ஒன்றை மீட்டெடுக்க முயற்சிக்கும் நினைவுபோலத் தயங்கியபடி இருக்கும். ஆனால் அவர் கை கௌதமனின் கையைப் பற்றும்போது அந்தத் தொடுகை பாதி மறந்த நினைவாகத் தான் திடமானவன்தான் என்று சொல்வதுபோல் இருக்கும். அவரைத் தொடும்போதும் அதே திடத்துடன் அவர் கையைப் பிடிக்க வேண்டும் என்று கௌதமன் கற்றுக்கொண்டான். ஏனென்றால் தன்னைத் தவிர அவரையும் அங்கு வேறு யாரும் தொடுவதில்லை என்று கௌதமனுக்குத் தெரியும். அதை உணரும்போதெல்லாம் உள்ளே மெல்ல வலிக்கும். மண்டையோட்டுடன் பேசும் அந்தப் பையன் ஏனோ நினைவுக்கு வருவான். ஆகவே கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் அவன் அவரைத் தொடுவான். அவருக்கும் தனக்கும் மட்டும் தெரிந்த ஏதோ இரகசியம் இருப்பதுபோல் தலைசாய்த்துச் சிரிப்பான்.

கௌதமனுக்குச் சித்தப்பாதான் குளிப்பாட்டிவிடுவார். முக்கியமான காரணம் கௌதமனுக்குத் தன்னுடைய ஆடைகளைத் தானே ஒற்றையாளாகக் கழற்றிக்கொள்ளத் தெரியாது என்பதுதான். திருகாணிகளைத் துளைகளிலிருந்து எடுத்து மீண்டும் பொறுத்த யாராவது உதவி செய்தாக வேண்டும். ஆகவே வாரம் ஒரு முறை சித்தப்பா கௌதமனைத் தனியாக அழைத்துச்சென்று அவன் ஆடைகளைக் களைவார். புட்டியில் அழுத்தத்தில் வைக்கப்பட்டிருக்கும் காற்றை அவன் உடல் முழுவதும் பொழிந்து மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்வார். புண்ணோ பழுதோ இருக்கிறதா என்று குரங்குக்குப் பேன் பார்ப்பதுபோல் அவன் உடலை ஆராய்வார்.

உடலின் ஒவ்வொரு பாகமாக காற்றாலும் கைகளாலும் தீண்டப்படுவதில் கௌதமனுக்குப் பெரிய குதூகலம். சிரித்துக்கொண்டே இருப்பான். உன்னுடைய திருகாணிகள் எங்கே என்று சித்தப்பாவின் உடலில் அவன் விளையாட்டாகத் தேட அவரும் சிரிப்பார். கௌதமன் விளையாடும் நேரம் அது மட்டும்தான். மிக மகிழ்ச்சியான தருணம். அப்போது வலியே இருக்காது.

அப்படி ஒரு நாளில் – அப்போது கௌதமனுக்கு பன்னிரண்டு வயதிருக்கும் – சித்தப்பா கௌதமனுக்கு ஒரு ரகசியத்தை காட்டிக்கொடுத்தார். யாரும் ஒட்டு கேட்கிறார்களா என்றும் அறைக்கதவு தாளிட்டிருக்கிறதா என்றும் பார்த்துவிட்டு, அவனை அருகில் அழைத்துக் கால்களை அகற்றச்சொல்லிச் சின்னக் கண்ணாடியை அடியில் வைத்து, பார், பார், என்று அவசரமாகச் சுட்டினார். ஆர்வமாக, சற்றே குறுகுறுப்புடன், அவன் எட்டிப்பார்த்தான்.

கண்ணாடியில் கால்களுக்கிடையே நட்டநடுவில் ஒரு சிவப்புக்கண் தெரிந்தது. வட்டவடிவமாக ஒரு பெரிய புண்போல இருந்தது. அழுத்தினால் சீழ் வழியும் என்பது போல. அப்படி ஒன்று தன் உடலில் இருப்பதைத் தானே கண்டுபிடித்திருப்பது கடினம் என்று கௌதமன் உணர்ந்தான். சித்தப்பாவைப் பார்த்தான். கண்களை விரித்து விரலை இடமும் வலமும் ஆட்டிக்கொண்டிருந்தார். வேண்டாம், வேண்டாம், என்று சொல்வது போல. ஆபத்து, வேண்டாம், அதை அழுத்திவிடாதே என்று வெவ்வேறு சொற்களில் மாறிமாறி வாயோரமாக முணுமுணுத்தார். கௌதமன் புரியாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆனால் அதன் பின் சித்தப்பாவைத் தொடுவது அவனை ஏதோ செய்தது. விலகினான். அவர் கண்களைப் பார்க்காமல் இருந்தான். அவரைப் பார்க்கும்போதெல்லாம் அந்தச் சிவப்புக்கண் நினைவுக்கு வந்தது. சித்தப்பாவுக்கும் ஒன்று இருக்குமா என்ற கேள்வி அவனுக்குள் மின்னிக்கொண்டே இருந்தது. இல்லையென்றால் அது ஆபத்தானது என்று எப்படித் தெரிந்துகொண்டார்?

அதன் இருப்பை அவன் உணர்ந்துகொண்டே இருந்தான். கால்களை அகற்றி வினோதமாக நடக்க ஆரம்பித்தான். அக்காக்கள் கேட்டபோது முகம் சிவந்து தலை குனிந்து ஏதும் சொல்லாமல் நின்றான். அக்காக்களுக்கும் சிவப்புக்கண் இருந்ததா என்ற எண்ணம் அவனுக்குள் எழுந்தது.

அந்த சிவப்புக்கண் அவர்கள் சொன்ன கதைகளிலெல்லாம் இல்லாத இருப்பாக வரத்தொடங்கியது. கேட்ட கதைகளெல்லாம் இரவுகளில் அவன் பின்னித் தொடுத்தபோது சிவப்புக்கண்ணின் இழையும் உள்ளே நுழைந்து தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்தான்.

அதன் பார்வையிலிருந்து தப்ப விதவிதமான கதை இழைகளை இழுத்துப் பற்றிக் கொடிகளில் குரங்குபோல் தாவிப் பறந்து தப்பிக்க முயற்சி செய்துகொண்டே இருந்தான். ஆனால் சிவப்புக்கண் சூரியனைப் போல எங்கிருந்தோ வானத்துமேலிருந்து இலைகள் வழியாக அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தது. ஒருநாள் கண்ணாடிச்சுவருக்கு அப்பால் தெரிந்த பூமியைக் கண்டு அதிர்ந்தான். அதன் மையத்தில் தீப்பிழம்பாகத் தெரிந்ததும் ஒரு சிவப்புக்கண்ணாக இருந்தது.

இனிமேல் நானேதான் என்னைச் சுத்தப்படுத்திக்கொள்வேன் என்று கௌதமன் ஒரு நாள் அறிவித்தான். அக்காக்கள் ஏன் ஏன் என்று மாறி மாறிக் கேள்வி கேட்டார்கள். ஆனால் அவன் பதில் ஏதும் சொல்லவில்லை. திடமாக நின்றான். சித்தப்பா ஓர் ஓரமாக அசட்டுத்தனமாக வாயைத் திறந்தும் மூடியும் கைகட்டி நின்றார். ஆனால் அவரும் ஒன்றும் சொல்லவில்லை. பெரிய அக்கா இறுதியாக அவன் ஆடைகளை மட்டும் இளக்கிக்கொடுத்து, சரி, நீயே போ, என்று அவனிடம் சொன்னாள். ஆனால் அவன் இந்தப் பக்கம் போனதும் அவள் மாடிப்படி ஏறி அம்மாவின் அறைக்குப் போனதை அவன் கவனித்தான். அப்படியென்றால் தன்னைப் பற்றிய எல்லாச் செய்திகளும் உடனுக்குடன் அம்மாவின் காதுகளுக்குப் போகின்றன. கௌதமன் தன்னையறியாமலேயே கைவிரல்களை முஷ்டியாக மடக்கிக்கொண்டான். உள்ளூறச் சீறினான். காது அறுந்துவிடும் என்பது போன்ற வலி உச்சந்தலையை அறைந்தது.

அன்று தனிமையில் மெதுவாக அவன் அந்தச் சிவப்புக்கண்ணை முதன்முதலாகத் தொட்டுப்பார்த்தான். நெருங்கும்தோறும் உள்ளே விண்விண்ணென்று அடித்துக்கொண்டது. தொடைகள் நடுங்கின. கைவிரல் அஞ்சி மெல்ல அதைத் தொட்டது. தொட்டதும் அவன் உள்ளே இருள்வெளி மொத்தமும் வெடித்துச் சிதறுவதுபோல் இருந்தது. அவன் அதுவரை கண்டிராத ஒளியால் நிறைந்தது.

ஒரு நொடி கழித்துதான் எல்லாம் அவனுக்குள் மட்டுமே நடந்துகொண்டிருந்தது என்பதை உணர்ந்தான். அந்த சிவப்புக்கண்ணில் தொடுகையுணர்வே இல்லை. அது வெறும் ஒரு பொத்தான். வழவழப்பாக இருந்தது. அவன் உடலில் மற்ற பாகங்களைத் தொட்டபோது இருந்த தொடுகையுணர்வு அங்கு இல்லை.

இருந்தாலும் அதைத் தீண்டியபோது அவன் உள்ளே உலோகப்பரப்பை உலக்கையால் அடித்ததுபோல் இருந்தது. உச்சிவரை அனலேறியது. கண்கள் செருகின. வெவ்வேறு கதைகளின் துணுக்குகள் உள்ளே கொப்பளித்து மேலேறி ஒன்றுடன் ஒன்று கலந்துகொண்டது. வேகம் கூடக்கூட வண்ணத்துண்டுகளாக அவை வெடித்துச்சிதறின. அதன் பின் எல்லையின்மை. கருமை. மௌனம்.

வாரம் ஒருமுறை அவன் தன்னந்தனியாக இருக்கும் அத்தருணத்தை எதிர்பார்க்கத்தொடங்கினான். ஆடைகளைக் களைய யாராவது உதவிசெய்ய வேண்டும் என்பதால் இரவில் அதனருகே செல்ல முடியாது. ஆகவே எதிர்பார்ப்பு அதிகரித்தது. அந்த எதிர்பார்ப்பையே தன் அப்போதைக்கான வலிக்கு எதிர்த்திசையில் இன்னொரு விதமான வலியாக, அதிரும் ஏக்கமாக, தன்னுள் உணரத் தொடங்கினான். அதை அடைகையில் அந்த வலி குறையும். அடைந்ததும் இந்த வலி கூடும். ஆனால் அடுத்த வாரத்துக்கான எதிர்பார்ப்பு மீண்டும் வலிகளின் தட்டுகளைச் சமன்படுத்தும். தோல்வாத்தியக்காரனின் நுண்ணுணர்வோடு வெவ்வேறு வலிகளின் அதிர்வுகளை ஒன்றிலிருந்து ஒன்று பகுத்துப் பிரித்து ஆராயக் கற்றான்.

ஏக்கம் நிகழாமல் போகும் நேரங்களிலும்கூட அதை மீட்டெடுத்துக்கொள்ள வெவ்வேறு நுண்ணிய வழிகளைக் கண்டடைந்தான். அதனைத் தான் காணவேயில்லை என்று புறமுதுகுகாட்டி அலட்சியமாக நிற்பது அதில் முதன்மையான வழி. அதுவே காற்றைப் போல், கதிரவனைப் போல், அவனை அணுகி கரம் விரித்து அவனை அணைத்துக்கொள்ளும் என்று தெரிந்துகொண்டான். எல்லாக் கதைக் காட்சிகளும் மறைந்து அது கண்ணிறைக்கும் செவ்வொளியாகத் தன்னைச் சூழும். அதன் வைரப்பார்வைகள் கண்ணைக் குத்திக்கிழிக்கும்.

ஒவ்வொரு முறையும் அந்தச் சிவப்புக்கண்ணின் தொடுகை மட்டும் தனியாக ஏதாவது உணர்வை அளிக்குமா என்று ஆவலுடன் எதிர்பார்த்தான். வெவ்வேறுவிதங்களாக அதைத் தொட்டு, தடவி, வருடி, சுரண்டிப் பார்த்தான். ஆனால் அதைத் தொடுவதால் மட்டும் எந்த உணர்வும் ஏற்படுவதில்லை என்று புரிந்துகொண்டான்.

தன்னைக் கிளர்ச்சியடையச் செய்தது அந்த எதிர்பார்ப்புதான். எதிர்பார்ப்பு கதைத்துணுக்குகளின் காட்சிகளாக அவனுக்குள் விரிந்தது. ஆகவே வெறுமனே காட்சிகளை மீட்டெடுப்பது மூலமாகவே அந்த உணர்வை அடைய முடியுமா என்று சோதனை செய்துபார்க்க முடிவுசெய்தான்.

அன்று இரவு தன் அறையில் படுத்துக்கொண்டிருக்கையில் சிவப்புக்கண்ணை நினைத்துக்கொண்டான். உடனே, இயல்பாக, நன்கு தெரிந்த ஒரு படம் போலக் காட்சிகளாக ஓர் ஓட்டம் உள்ளே ஓடியது. அந்த ஒழுக்கு பரிச்சயமானது. ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட இதே வரிசையில் இதே படம்தான் தனக்குள் ஓடுகிறது என்று ஆச்சரியமாக உணர்ந்தான். ஒரு தனிக்கதை. அவனுக்கு மட்டுமேயான கதை. நன்கு பழகிய பாதையில் செல்லும் விலங்கைப் போல, ஆற்றின் ஒழுக்கோடு செல்லும் உடலைப் போல, எல்லாம் தன்னைத் தானாக நிறைவேற்றிக்கொண்டது.

அதன் பின்னால் ஒவ்வொரு நாள் இரவும் அந்தக் கதையை உள்ளே ஓட்டியே அந்த உணர்வுகளை அடைந்தான். அதை மெதுவாக்கி, வெட்டி, பகுத்து, ஒவ்வொரு காட்சியாக நிலைநிறுத்தி அவனால் அதைப் பார்க்க முடிந்தது. உணர்வுகளையும் அதற்கேற்றாற்போல் நீட்டிக்கொள்ள முடிந்தது. காலத்தை நிற்கச்செய்ய முடிந்தது. தீயாற்றில் ஓர் யுகத்துக்கு மிதந்தான். அம்மா ஓர் யுகத்துக்கு முகம் மறைத்து அழுதாள். அந்த இளைஞன் ஓர் யுகத்துக்கு மண்டையோட்டிடம் புலம்பினான். நீண்ட கூந்தல் ஆற்றில் விரிய அந்தப் பிச்சியும் ஓர் யுகத்துக்கு மிதந்துசென்றாள். அங்கேயே எல்லாப் பூரிப்புகளையும் அனுபவித்தான். எல்லா உச்சங்களும் நிகழ்ந்தன. அங்கே நின்றபடியே ஆழத்துலகுக்குச் சென்று கருமையில் கரைந்து மௌனத்தில் அமைந்து வலி மறந்து மீண்டு வந்தான்.

சிவப்புக்கண் அந்த அனுபவத்தின் பெயர் சொல்லும் குறியீடு மட்டுமே என்ற இடத்துக்கு வந்தது. சதுரங்கத்தில் ராஜாவைப்போல. அதைத் தொடுவதைவிடத் தொடும் கணம் நோக்கிச் செல்லும் கணங்களே அவனுக்கு முக்கியமென்றானது. அதுவரை செல்லும் தொலைவை நிர்ணையித்த காட்சிகள் அவனை நிறைத்து நிறைத்துத் தளும்ப வைத்தன. ஆகவே சில நாட்களுக்குப் புதிய கதைகளை அவனால் சரியாக உள்வாங்க முடியவில்லை.

ஆனால் வெகுவிரைவிலேயே அந்தக் காட்சிக்கோப்பு அவனைச் சலிப்படையச் செய்தது. அந்த உணர்ச்சி வேகம் நிகழாமல் போனது. பழைய வலி சலிப்பூட்டும் நமைச்சலுடன் திரும்ப வந்தது. வேறுவேறு கதைகளைத் துழாவி புதிய காட்சிகளைச் சமைத்தான். மலைப்பாம்புகளும் அருவிகளும் இடுங்கிய சந்துகளும் இருட்டறைகளும் தோன்றின. ஆனால் அதுவும் வெகுவிரைவிலேயே சுவாரஸ்யம் இழந்தது. வலி வந்தபோது ரத்தம் வாங்க வஞ்சத்துடன் காத்திருந்ததைப்போல் அதுவரை தவிர்த்த நாட்களுக்கும் சேர்த்து வட்டியுடன் பலி கேட்டது.

சிவப்புக்கண்ணை நேரடியாகத் தொட்டால் சரியாகும் என்று வார இறுதி வரை காத்திருந்து பார்த்தான். ஆனால் எந்த உணர்வும் அளிக்காத அந்தத் தொடுகையே அவனை எரிச்சல்படுத்தியது. சூடு தலைக்கேறியபோது மண்டைக்குள் கோபமாக வெடித்தது. அதுவரை அவன் அறியவே அறியாத ஆவேசம் அது.

அப்போது அவனுக்குப் பதினைந்து வயதிருக்கும். கேட்ட கதைகளிலிருந்து அந்த வயதில் அவனுக்கு மீசை இருக்க வேண்டும் என்ற பிரக்ஞை வந்திருந்தது. ஆனால் முகத்தில் அப்படி ஏதும் நிகழ்வதற்கான அறிகுறிகள் இல்லை. ஆகவே அவனே மையை வைத்து மூக்குக்கடியில் ஒரு சின்ன மீசையை வரைந்துகொண்டு வீட்டைச் சுற்றி வலம் வந்தான். அக்காக்கள் அதைக் கண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் வரைந்த அன்றே செய்தி மேல்மாடிக்குச் செல்லும் என்று அவனுக்குத் தெரியும். அக்கா மேலேறிச்செல்வதைப் பார்த்தபோது குப்பைத்தொட்டியை ஓசையெழப் போட்டு அடித்து நொறுக்கினான்.

சித்தப்பா அவன் மீசை வரைந்திருந்ததைப் பார்த்தார். ஆனால் அவரும் பார்த்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. ஓரிரு வாரங்களுக்குப் பிறகு ஒருநாள் அவராக வந்தார். கௌதமன் கண்ணாடிச்சுவருடன் ஒடுங்கி அமர்ந்திருந்தான். யாரும் சுற்றி இல்லையே என்று பார்த்து அவனைத் தயக்கத்துடன் அணுகி, தோளிலும் தலையிலும் பாசமாகத் தடவினார். அவன் நிமிர்ந்து பார்த்தான். சற்றே அச்சத்துடன் புன்னகைத்தார். அருகே உட்காரலாமா என்று கேட்பதுபோல் தயங்கி நின்றார். அவர் சிவப்புக்கண்ணைப் பற்றித்தான் பேச வந்திருந்தார் என்று எப்படியோ உணர்ந்தான்.

அன்று கேட்டிருந்த கதைகளிலிருந்து காலையிலிருந்தே நமநமவென்று அடிவயிற்றில் வலி ஆரம்பித்திருந்தது. பழகிய வழிகள் எவையும் ஒத்துழைக்கவில்லை. வலி ஏறிக்கொண்டே இருந்தது. அப்போது சித்தப்பா வந்தது கௌதமனுக்கு எரிச்சலாக இருந்தது. உதடுகளைப் பிரித்துப் பற்களைக் காட்டி முஷ்டிகளை இறுக்கிச் சீறுவதுபோல் ஒலி செய்தான். அவர் ஓரடி பின்னால் எடுத்து வைத்தார். கௌதமன், “ஏதாச்சும் பேசின, மூஞ்சிய பேத்துப்புடுவேன். தாயோளி” என்றான். அந்த வார்த்தைக்கு அர்த்தம் அவனுக்குத் தெரியாது. அவனுக்குச் சொல்லப்பட்ட ஏதோ கதையில் வரும். அதுவரை அவன் வாயில் வந்ததில்லை. ஆனால் சரியான நேரத்தில் விந்தையென வசனம்போல் பொருத்திக்கொண்டு வந்துவிட்டது.

சித்தப்பா முகம் சுருங்கிப் பின்வாங்கினார். அவரால் அதை நேரடியாக விளங்கிக்கொள்ள முடியவில்லை என்றாலும் கௌதமன் சொன்ன வார்த்தையின் வீரியம் புரிந்தது. முகத்தைப் பயத்தில் திருப்பிக்கொண்டார். பின் மீண்டும் ஏதோ தோன்ற திரும்பி அவனை நெருங்கி தோளில் கைவைத்து அவரசரமாக, “அப்பா. உன் அப்பா. அதை அழுத்திக்கொண்டார்” என்று முணுமுணுத்தார். “அது கெட்டது. அங்கே போகாதே” என்றார்.

கௌதமன் கண் சுருங்க அவரைப் பார்த்தான். ஓரடி பின்னால் எடுத்து வைத்தான். பின் ஓடிச்சென்று தன் அறைக்கதைவைத் தாளிட்டு முழங்கால்களைக் கட்டிக்கொண்டு மூச்சுவாங்க அமர்ந்தான்.

அப்பாவா? அவனுக்கு அப்பா இருந்தாரா? அவன் நெஞ்சு அடித்துக்கொண்டது. சில நாட்களாகவே அவனையறியாமல் அவனுள் மெல்லியச் சுருளாகப் புகைபோல் கிளந்துவிட்டிருந்த கேள்வி. இப்போது சித்தப்பா அதற்கு வடிவம் கொடுத்துவிட்டிருந்தார். வலியேறுவதைப்போல் உணர்ந்தான். அது எழும் அலைக்காகக் காத்திருந்தான். ஆனால் வரவில்லை.

ஒரே நொடியில் கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாகச் சரிந்து அவனைத் தாக்கின. தான் யார்? ஏன் தனக்கு அம்மா மட்டும் இருக்கிறாள்? அப்பா கிடையாதா? அப்பாவுக்கு என்ன ஆனது? இந்த அக்காக்கள் யார்? என் அக்காவா? சித்தப்பா வேறு மாதிரி இருக்கிறார். மீன் போல. ஏன்? இங்கு வேறு சிறுவர்கள் இல்லை. அப்படியென்றால் இவர்களுக்குக் குழந்தைகள் கிடையாதா?

பூமியில் பலகாலம் முன்னால் நடந்த பெரும்போருக்குப் பிறகு அவர்கள் அங்குக் குடி வந்துவிட்டார்கள் என்று மட்டும் கௌதமனுக்குத் தெரியும். அக்கா அந்தக் கதையைச் சொல்லியிருக்கிறாள். ஆனால் பூமியில் இன்னும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அப்படியென்றால் ஏன் அவர்கள் மட்டும் இங்கு வந்தார்கள்? அப்படியென்றால் தான் யார்? தன் கதை என்ன? ஏன் தினந்தோறும் எல்லோரும் தனக்குக் கதை சொல்கிறார்கள்? ஏன் தனக்கு எப்போதும் வலித்துக்கொண்டே இருக்கிறது?

அப்போது திடீரென்று அந்த எண்ணத்தை ஒரு தெறிப்பாக அடைந்தான். அந்தச் சிவப்புக்கண். ஆம், அந்த சிவப்புக்கண்தான் விடை. ஏன், எப்படி, என்ன விடை என்று அவனால் சொல்ல முடியவில்லை. ஆனால் அதுதான் விடை. அதுதான் மந்திரம். அதுதான் திறவுகோல். அதை அடைந்துவிட்டால் எல்லாமே புரிந்துவிடும். அதை அழுத்திவிட்டால் எல்லாவற்றுக்கும் பதில் கிடைக்கும். மணி அடிக்கும். விளக்குகள் பற்றிக்கொண்டு எரியும். வாயில்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் திறக்கும். அதோ, அங்கே, கருவறையில்… ஆம், அதுதான். எல்லாமே புரிந்துவிடும். அப்படித்தான் இருக்க முடியும். கௌதமன் நினைத்தான், தன்னை இவ்வளவுநாள் ஆட்டிப்படைத்த அந்த உணர்வுகளுக்கெல்லாம் அது ஒன்றுதான் அர்த்தம் பொதிந்த பதிலாக இருக்க முடியும் என்று.

ஒருவேளை தன்னுடைய அப்பாவும் அதே வழியில் ஒழுகியவரா? அதே கேள்விகளுடன் அதே உண்மையை அறிய அதே எண்ணங்களை அடைந்து அதே சிவப்புக்கண்ணை அழுத்தினாரா? அதைத்தான் சித்தப்பா சொன்னாரா? அப்படியென்றால் சித்தப்பா அதைக் கெட்டது என்றது? ஆம், என்று கைகளை முறுக்கிக்கொண்டான் கௌதமன். சித்தப்பா எனக்கு அந்த உண்மை தெரிந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார். இல்லை, சித்தப்பாவாக இருக்க முடியாது. அவர் பாவம். பிள்ளைப்பூச்சி. அவரை ஆட்டுவிப்பது அவள்தான். ஆம், அவளேதான். அவள்தான் நான் எதையும் தெரிந்துகொள்ளாமல் இப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள்.

ஆனால் கௌதமனுக்குள் உள்ளூற பயம் இருந்தது. உண்மையிலேயே அதை அழுத்தினால் ஏதாவது ஆபத்து வந்துவிட்டால்? சித்தப்பா கெட்டவர் அல்ல. அவர் தனக்கெதிராக ஏதும் செய்யக்கூடியவர் அல்ல. அந்தச் சிவப்புக்கண் இருந்ததையே அவர்தானே தனக்குக் காட்டிக்கொடுத்தார்? அப்படியென்றால் தான் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவரே நினைத்திருக்கலாம் இல்லையா? ஆனால் அது கெட்டது, ஆபத்து, அழுத்தாதே என்றும் சொன்னார். அது கெட்டது என்பதனால்தான் காட்டிக்கொடுத்தாரா? இல்லை அப்படிச் சொன்னால் கௌதமன் தானே அதை அழுத்தி உண்மையைக் கண்டடைந்துவிடுவான் என்று கணக்கு போட்டாரா? இதில் உண்மையிலேயே ஆபத்து இருக்கிறதா என்று எப்படிக் கண்டுபிடிப்பது?

கௌதமனுக்கு ஓர் யோசனை தோன்றியது. அக்காக்களின் அறைகளும் கீழ்த்தளத்தில் இருந்தன. அந்தப் பக்கம் அவன் அதிகமாகச் செல்லமாட்டான். ஆனால் அன்றிரவு அவர்கள் கீழ்த்தளத்துக்கு இறங்கிச் சென்றதும் சத்தம் அடங்குவதுவரை காத்திருந்து அவர்களைப் பின்தொடர்ந்தான். காலடிகளை மெல்ல மெல்ல வைத்து ஓசையில்லாமல் படியில் இறங்கிச் சென்றான். அவர்கள் மூவரும் ஒரே அறையில்தான் படுப்பார்கள். அறைக்கதவுக்கு மேல் சற்றே உயரத்தில் சின்ன ஜன்னல், அது வழியாக ஒளி கசிந்தது. கௌதமனால் சற்று எம்பினால் உள்ளே நோக்க முடிந்தது. கண்ணாடிக்கப்பால் மெல்லிய திரை வழியாக உள்ளே காட்சி தெரிந்தது. அவர்கள் தன்னைப் பார்த்துவிடக் கூடாது என்று கவனமாக இருந்தான். ஒளி அவனுக்கு நேராக இருந்ததால் நிழல் விழவில்லை.

அவர்களும் ஜன்னலுக்கு அப்பால் அறையின் ஓரமாகக் கூடி நின்று ஒருவர் மற்றொருவரின் ஆடைகளைத் திருகிக் களைந்துகொண்டிருந்தார்கள். உலோகப் பட்டைகளை ஒவ்வொறாக உருவி அடுக்கிச் சோம்பல் முறித்து உடல் இளகினார்கள். சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். உள்ளே அடித்துக்கொள்ள கௌதமன் ஏனென்று புரியாமல் கண்களைத் திருப்பிக்கொண்டான். அவர்கள் கால்களையே பார்த்தான். அவர்களுக்கும் சிவப்புக்கண் இருந்ததா என்று எப்படியாவது உற்றுநோக்கிப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் வந்திருந்தான். இருந்தால் அன்றே ஒருவரைப் பிடித்து அதை அழுத்திப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணமும் அவனுக்குள் எங்கோ ஓரத்தில் கிளைவிட்டிருந்தது. அதை அவன் தன்னிடம்கூட ஒப்புக்கொள்ளவில்லை.

அவனால் அங்கு அதற்குமேல் நிற்கமுடியவில்லை. வலி தொடங்கியது. இதுவரை உணராத மாதிரியான வேறொரு வலி. வலியென்றுகூடச் சொல்ல முடியாது. ஏக்கம். தவிப்பு. அழுகைவராத சோகம். அங்கிருந்து கிளம்பிவிடு, கிளம்பிவிடு என்று உசுப்பிக்கொண்டே இருந்தது. துக்கமாக வந்தது. அவன் அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று தெரியாமல் அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு அவர்கள்மேல் பெரிய பரிதாபம் எழுந்தது. தன்னைத் தவிர வேறு யாராவது அங்கு நின்று அப்படிப் பார்ப்பதைத் தான் கண்டிருந்தால் அவனை வெறும் கைகளாலேயே அடித்துக் கொன்றிருப்பேன் அல்லவா என்று நினைத்தான். பற்களைக் கடித்துக்கொண்டான். குமட்டலைப்போல் உள்ளே எழுந்தது. அவனால் அதன்பிறகு அவர்களைப் பார்க்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் வந்த வழியிலேயே திரும்ப ஓசையில்லாமல் சென்றான். தலை தொங்க நடந்தான்.

அன்றிறவு வெகுநேரம் அவன் புரண்டுகொண்டே இருந்தான். அவனை அந்த அனுபவத்தில் மிகவும் சலனமடையச் செய்த விஷயம் அவன் அன்று கண்ட அக்காக்களின் உடல்களுக்கும் தன் உடலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது. ஏதோ வித்தியாசத்தை எதிர்பார்த்துத்தான் அவன் சென்றான். ஆனால் அவன் நினைவு துல்லியமாக சொன்னது. எந்த வேறுபாடும் இல்லை. ஆனாலும் அவர்கள் அக்காக்கள், அவர்களைச் சென்று அப்படிப் பார்த்திருக்கக்கூடாது என்று அவன் உள்ளம் புரண்டது.

அப்படியென்றால் அவர்களுக்கும் தனக்கும் வேறுபாடு இருந்தது எங்கே? முகத்தில். முகத்தின் உருவத்தில்கூட அல்ல. அதன் தசையமைப்பில். விரிந்து சுருங்கிய விதத்தில். குரலில். ஒருவேளை நடையில். ஆனால் ஆடைக்குள்ளே உடலில் எந்த வேறுபாடும் இல்லை. ஒருவேளை அவர்களுடைய கால்களை அகற்றி நோக்கினால் அங்கும் அவர்களுக்கு தனக்கிருப்பதைப் போலவே ஒரு சிவப்புக்கண் இருக்கலாம். அது அவர்களுக்கும் ஆபத்தானதாக இருக்கலாம். தெரியாமலேயே சிரித்து மகிழ்ந்து வாழ்கிறார்கள். ஆம், அவனுக்கும் அவர்களுக்கும் அவ்வளவுதான் வித்தியாசம்.

அந்த உணர்வு அவனுக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. அவனும் அவர்களும் ஒன்று. வெவ்வேறல்ல. அப்படியென்றால் அவர்களை மட்டும் ஏன் அக்காவென்று சொல்லவேண்டும்? அவர்களுக்கு மீசை முளைக்கவில்லை என்பதனாலா? அப்படிப் பார்த்தால் தனக்கும்தான் முளைக்கவில்லை.

ஆனால் சித்தப்பா? சித்தப்பாவுக்கு உடலில் திருகாணிகள் கிடையாது. அம்மாவைப் போன்ற குழையும் உடல். அப்படியென்றால் சித்தப்பாவும் அம்மாவும் ஒன்றா? சித்தப்பா அம்மாவைப் போன்றவரா? அவர் உடலும் அம்மாவுடையதைப் போன்றே இருக்குமா? அம்மாவுக்கும் சிவப்புக்கண் உண்டா? அவளாலும் அதை அழுத்திக்கொள்ள முடியுமா?

அடுத்த சில நாட்களில் கௌதமனுக்குள் ஒரு கூர்மையான மாற்றம் நிகழ்ந்தது. அவனும் அதை உணர்ந்தான். ஆனால் ஏதென்று அவனால் சொல்ல முடியவில்லை.

அவன் உள்ளேயும் வெளியேயும் அமைதியானான். ஓரக்கண்னால் சித்தப்பாவையே கவனித்தான். அவர் நடத்தையை, அவர் பேச்சை, அவர் உடல் நெளிவை, அவர் மீன் வாயை. அவர் கைகளில் புசுபுசுவென்று முளைத்திருந்த முடியை முதல் முறையாகச் சரிவர கண்டான். மொத்தமும் நரைத்து வெள்ளையாகியிருந்தது. மெலிந்த கைகள். மெலிந்த உதடுகள். மெலிந்த வெண்ணிற புருவங்கள். பாவம்போல இருந்த மனிதர். அவரிடம் திடமென்று எதுவுமே இல்லையா? கௌதமனுக்கு அவரைப் பார்க்கப் பார்க்க அருவருப்பாக இருந்தது. அவர் கௌதமனின் பார்வையின் வெறுப்பை உணர்ந்தவராக அவன் கண்ணுக்குள் முடிந்தவரை படாமல் விலகிச்சென்றார்.

அன்று மதியம் அக்காக்கள் கீழே சென்றுவிட்டார்கள். கௌதமனும் சித்தப்பாவும் மட்டும் மேல்தளத்தில் இருந்தார்கள். அவன் கண்ணாடிச் சுவருக்கருகே மந்தமாகக் காலாட்டிக்கொண்டு படுத்தபடி வெளியே பூமியின் பிளவைப் பார்த்துக்கொண்டிருந்தான். உற்று நோக்கினால் அதிலிருந்து வழிவது தங்க பஸ்பத்தைப் போல் தோன்றுகிறதல்லவா என்று நினைத்துக்கொண்டான். தங்கக்குழம்பு. அதில் தன் முகத்தைப் பார்த்துக்கொள்ளலாம். கைகால்களில் பூசிக்கொள்ளலாம். களிமண்ணைப் போல் பிசைந்து தங்கப் பொம்மைகளைச் செய்யலாம். சின்னப்பையன்களின் முகத்தில் மட்டுமே தோன்றும் தூரங்களைக் கடந்து வரும் சிரிப்பு அவன் முகத்தை ஒரு கணம் ஒளிரச் செய்தது. ஆனால் அடுத்த கணமே அது மேகம்மூடி அணைத்துவிட்டாற்போல் மறைந்தது. வேறேதோ எண்ணம் அதன் இடத்தை எடுத்துக்கொண்டது. அவன் முகம் கடுமையானது.

சித்தப்பா அங்கு இருந்ததை அவனில் ஒன்று ஓரக்கண்ணால் கண்காணித்துக்கொண்டிருந்தது. அவர் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்து அறையின் மறு எல்லையில் தலை திருப்பி, உடலை ஒடுக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். நேரம் போகப்போகக் கௌதமனின் தலை மெல்ல மெல்லப் பகல்வெயில் ஏறுவதைப்போல் சித்தப்பாவின் பக்கம் மொத்தமாகத் திரும்பியது. ஒரு கட்டத்தில் அவரை நேரடியாகவே வெறுப்போடு முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

திடீரென்று கௌதமன் ஒரு முடிவுக்கு வந்தவன்போல் எழுந்தான். நீளமான எட்டுகளை எடுத்து வைத்து அவர் முன்னால் சென்று நின்றான். தரையில் கால் மடித்து அமர்ந்தவர்மீது அவனுடைய நீண்ட நிழல் விழுந்தது. சித்தப்பா அனிச்சையாக முகத்தை மறைத்துக்கொண்டார். அவனுடைய பெரிய உருவமும் முறுக்கிய கைகளும் அவரை அச்சுறுத்தியது.

“ஏய் சித்தப்பா” என்றான். அவர் ஒன்றும் சொல்லாமல் விசும்பினார். “எங்கப்பாவுக்கு என்ன ஆச்சு? சொல்லப்போறியா இல்ல பல்லுகில்லெல்லாம் பேத்துறவா?” சித்தப்பா ஒன்றும் சொல்லாமல் உடலை நன்றாக ஒடுக்கிக்கொண்டு அழத்தொடங்கினார். கௌதமனின் உள்ளே வலி சுர்ரென்று முறுக்கி அவிழ்ந்து மேலெழுந்தது. குரல்வளை நடுங்கியது. வெறியில் கை ஓங்கினான். “ஏய்! விளையாடுறியா? என்னடா ஆச்சு எங்க அப்பாவுக்கு? சொல்லுடா! எங்கடா என் அப்பன்? எல்லாரும் சேர்ந்து அவர என்னடா பண்ணினிங்க? சொல்லுடா! அந்த இவதான் எல்லாத்துக்கும் காரணமா? அந்த… அந்த…” வாயை கூம்பி இருமுறை துப்பினான். காறி வராதபோது வெறிகொண்ட விலங்கைப்போல் அறையைச் சுற்றி வந்தான். மீண்டும் சித்தப்பாவை அடைந்து அவரை ஓங்கி அறைந்தான். “அந்தச் சிவப்பு வட்டத்த எனக்கு எதுக்கு காட்டிக்கொடுத்த? என்ன கொழப்பிவிட்டு இரண்டுபேரும் சேர்ந்து கைகொட்டி சிரிச்சு கும்மாளமடிக்கவா? நாறப்பயகளா…” கௌதமன் தன்னை அறியாமலேயே அவரைப் பிடித்துச் சாற்றிக்கொண்டிருந்தான். ஓங்கிய அடிகள். சித்தப்பா குரலே எழாமல் அடிபட்ட நாய்க்குட்டிபோல் முனகினார்.

அவர் சுத்தமாக எதிர்ப்பே காட்டாமல் இருந்தது அவன் வெறுப்பை இன்னும் திருகியது. சட்டென்று அவர் உடலைச் சுற்றிக் கட்டியிருந்த ஒற்றைத் துணியாலான வெள்ளை அங்கியைப் பிடித்து இழுவலாக இழுத்தான். அது கிழிந்து உடலிலிருந்து பிரிந்தது. உள்ளே ஒடுங்கிய மார்பு. மெலிந்த கால்கள். சிவப்பு நிற உள்ளாடை. கௌதமன் அவர் கால்களையும் தொடைகளையும் ஆவேசமாகப் பிடித்து இழுத்து தேடித் தடவ அவர் திமிறி உதைத்தார். அவர் உடலில் திருகாணிகளே இல்லை என்று அதற்குள் அவன் புரிந்துகொண்டான். வெறிகொண்டு “அவுரு… அவுரு அத…” என்று அவருடைய உள்ளாடையைப் பிடித்து இழுத்தான். இடுப்பின் வளைவில் சிக்கிச் சுருண்டு கீழிறங்க அவர் கால்களைப் பலவந்தமாகப் பிடித்து அகற்றினான். அவருடைய உடலை அவன் முதலில் கவனிக்கவேயில்லை. காலுக்கிடையே சிவப்புக்கண் இருந்ததா என்று ஆவேசமாகத் தேடித் துழாவினான். பின் அப்படியேதும் இல்லை என்று அறிந்தபோதுதான் அவர் உடலைக் கண்டுகொண்டான். நிராதரவாக, மீட்பின்றி, இருள்பந்தென சுருண்டு விசும்பிக்கொண்டிருந்தது அது.

அவர் தன் உடலை மறைத்துக்கொள்ளவோ எழுந்து அமரவோ எந்த முயற்சியும் எடுக்காதவராக அப்படியே சுருண்டு படுத்து அழுதார். கௌதமன் அவரைப் பொருளில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவரை என்ன செய்துவிட்டிருந்தோம் என்று மெல்ல மெல்ல அப்போதுதான் அவனுக்குப் புரியத் தொடங்கியது. இருந்தாலும் அவனால் அவருடைய இடுப்பிலிருந்து தன் பார்வையை விலக்கிக்கொள்ள முடியவில்லை. உடலைப் பார்க்கும் பார்வை அது. அவர் வேறொருவர், அவர் வேறொருவர் என்ற எண்ணம் அவனுக்குள் பாறைமீது நுரைக்கும் அலை என்று அறைந்துகொண்டிருந்தது. அப்படியென்றால் தானும் வேறொருவன்.

ஒரு தூணை உடைத்து ஒரே போடாக அவர் இடுப்பைப் போட்டு உடைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் வலிச்சுருள் போல் மேலேறி மண்டையை அடைந்து தெறித்தது. இவ்வளவு செய்த பின் அவன் நியாயமெனச் செய்யக்கூடிய ஒரே செயல் அதுதான். அந்த எண்ணத்தைச் சிதறடிக்க மண்டையை ஆவேசமாக ஆட்டினான். இல்லை, இல்லை, இது வேண்டாம், எனக்கிது வேண்டாம் என்று திமிறி உள்ளாழத்தில் கதறினான். அனிச்சையாக மன்றாடுவதுபோல் கைகளை உயர்த்தினான். தலைக்கு மேல் செவ்வொளி கூசியது. அப்போது, ஆழத்திலிருந்து எழுவதுபோல், மணி நலுங்கும் ஒலி கேட்டது. சட்டென்று தன்மேல் ஒரு பார்வையை உணர்ந்து தலையைத் தூக்கினான். அம்மா படிகளில் நின்று அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவள் அந்த அலங்கோலக் காட்சியை ஒன்றுமே சொல்லாமல் உதடுகள் சற்றே விரிந்தபடி நோக்கிக்கொண்டே இருந்தாள். கௌதமனின் தலை தொங்கியது. உள்ளே அலறல் நின்றபாடில்லை. அதையும் மீறி கௌதமன் அவள் பார்வையைத் தன் புறங்கழுத்தில் உணர்ந்தான். சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தான். அவர்கள் கண்கள் சந்தித்தன. “அந்த சிவப்புக்கண்ணப் பத்தி எனக்குத் தெரியும். நானும் அத அழுத்தப்போறேன்” என்று தாடையைத் தூக்கித் திமிராக உச்சரித்தான். அதைச் சொல்லும்போதே அவன் குரல் கம்மியது. நடுங்கியது. உடனே முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

அம்மா ஒன்றும் சொல்லாமல் ஒவ்வொரு படியாக இறங்கி வந்தாள். சித்தப்பாவின் அருகே சென்று கால் மடித்துத் தரையில் அமர்ந்தாள். கௌதமன் எதிரே கால் நீட்டி அமர்ந்து வெறித்துப் பார்க்க அவரை அவன் அறியாத மொழியில், கூழாங்கற்களில் நீர் என ஒழுகிய குரலில், மெல்ல மெல்லப் பேசித் தேற்றினாள். சித்தப்பா முதலில் அவளை அறியாததுபோல் தொலைந்துபோன பார்வையால் அவளைப் பார்த்தார். பின் ஒரே நொடியில் என்ன புரிந்ததோ, அவள் கைகளைப் பற்றிக்கொண்டு ஓலமாக அழுதார். மிருகத்தைப் போன்ற அழுகை. கௌதமன் எந்த மிருகத்தையும் பார்த்ததில்லை. கதையில் கேட்டதோடு சரி. ஆனால் அவருடைய அழுகை அடிப்பட்ட மிருகத்தின் குரல் என்று அவன் உள்ளாழத்தில் அறிந்தான். ஆம், அவர் வேறொருவர். ஆனால் நிஜமாகவே அப்படியா? தனக்கு வலி வரும்போதும் தானும் அதே போலத்தான் அழுவான். இப்போதும்கூட. எல்லாமே மறைந்து ஒளியில் கரைந்துவிட்ட தூய விலங்கின் அழுகை. கௌதமன் தலையாட்டினான். ஆம், நானும் ஒரு மிருகம். இச்செயலை ஒரு மிருகமன்றி எதுவும் செய்யாது. சித்தப்பாவும் மிருகம். தானும் மிருகம். அம்மா? அவளும் மிருகம்தானா? குழப்பமாகக் கண்களைத் தூக்கினான்.

அம்மா அவரைத் தன் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு தலையையும் தோளையும் அணைத்துக்கொண்டு அவர் கண்ணீரைத் தன் கரத்தால் அழுத்தித் துடைத்தாள். அவர் நரைவிழுந்த தலையை மெல்லத் தடவினாள். அம்மாவின் கூந்தல் இப்போதும் நீளமாகவும் கருப்பாகவும் இருந்தது. இளகிய பின்னலாக இடுப்பைத் தாண்டி கனமாகத் தொங்கியது. அவள் சித்தப்பாவின் கண்ணீரைத் துடைத்தபோது அவளுடைய கூந்தல் கழுத்தைச் சுற்றி முன்னால் விழுந்து அவர் தோளில் அமைந்தது. சித்தப்பா விழிப்புகொண்டவர்போல் அம்மாவின் கண்களை ஏறெடுத்துப் பார்த்தார். அவள் கண்களில் அவர் எதைப் பார்த்தார் என்று கௌதமன் பார்க்கவில்லை. ஆனால் குழந்தையென்று அவளை அணைத்து அவர் மீண்டும் அழத் தொடங்கினார்.

அம்மா கௌதமன் இழுத்துப்போட்டிருந்த துணியை எடுத்து அவர் இடையைச் சுற்றிக் கட்டினார். அவர் அழுது முடித்து மூச்சு சீராகி அடங்கும் வரை அப்படியே உட்கார்திருந்தாள். அவர் தூங்கிவிட்டிருக்க வேண்டும். “வா, பிடி,” என்றாள். அவள் குரலில் இருந்த அமைதியான அதிகாரத்துக்குக் கௌதமன் தன்னை அறியாமலேயே கட்டுப்பட்டான். எழுந்து அவர் கால்களைத் தொட்டுப் பிடித்துத் தூக்கினான். இருவரும் அவரைக் கொண்டுசென்று கண்ணாடிச்சுவர் அருகே இருக்கையில் கிடத்தினார்கள். அவர் விசும்பிப் புரண்டு படுத்தார். முட்டிகளைத் தாடையுடன் சேர்த்து சுருண்டுகொண்டார். அவருடைய ஆடை சற்றே விலக அம்மா அதைச் சீரமைத்தாள். ஒரு போர்வையை விரித்துக் கழுத்துவரை போர்த்திவிட்டாள். போர்வை விலகாமலிருக்கும்படி அதன் விளிம்பை இருபக்கமும் அவர் உடலுக்கடியிலும் உள்ளங்காலுக்கடியிலும் செருகிவிட்டாள். அவர் தூக்கத்திலேயே அனிச்சையாகக் கட்டைவிரலை வாயிலிட்டுச் சப்பத் தொடங்கினார். அப்பால் கண்ணாடிச்சுவருக்கு வெளியே பூமி பெரிய அரைவட்டமாகக் கனவு காண்பதுபோல் இருளாழத்தின் புனலில் நீலாம்பலெனப் பூத்துநின்றது. மலரின் இதயமென அதன் மையத்தில் திறந்த குழி வண்டுவரியோடி பொன்பூத்துக் கண் திறந்திருந்தது.

“என்னுடன் வா” என்று அம்மா மேலேறினாள்.

கௌதமன் பதில் பேசாமல் தலைகுனிந்து உதட்டைச் சுழித்தபடி கீழேயே நின்றான். கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு வலது காலை மெல்லிதாக ஆட்டினான். அவன் கண்களில் நீர் நிறைந்து தளும்பிக்கொண்டிருந்தது. அதை வெளிக்காட்ட விரும்பவில்லை. ஆனால் குனிந்த தலையிலிருந்து கண்ணீர் சொட்டுச்சொட்டாகக் கீழே விழுந்தது.

அம்மா இறங்கி வந்தாள். அவன் தோளில் கைவைத்து, வா, என்று மறுபடியும் சொன்னாள். அது ஆணை அல்ல. அழைப்பு. அவள் குரல் கனிவாக இருந்தது. அது அன்று கதை சொன்ன குரல் அல்லவா என்று கௌதமன் உணர்ந்ததும் அவனுக்குள் ஏதோ துடித்தது.

கௌதமன் அவளைப் பின்தொடர்ந்து மேலே ஏறினான். மாடித்தளத்தில் இடதுபக்கம் திரும்பி ஓர் அறைக்குள் அம்மா சென்றாள். கௌதமன் தன் கொந்தளிப்பையும் மீறி மெல்லிய ஆர்வத்தில் அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தான். அவன் அங்கு வருவது அதுதான் முதல்முறை. அதுவரை அங்குச் செல்ல அவனுக்கு அனுமதி இருந்ததில்லை. அது அரைவட்ட வடிவிலான பெரிய அறை. சுற்றிக் கண்ணாடிச்சுவர். ஒரு பக்கம் பூமியின் பெரும்வளைவு. வைர மோதிரத்தைப் போல் ஓர் ஓரத்தில் சூரியனின் ஒளியைப் பொன்னாகப் பிரதிபலித்தது. மற்றபடி கண் நோக்கும் தூரம் வரை இருள். வெட்டவெளியின் கருமை. முடிவில்லாமை.

அறையின் நடுவே சின்னச்சின்ன கருவிகள் சிதறிப் பரப்பிக்கிடந்த ஒரு மேசை இருந்தது. அதை ஒட்டி ஒரு நாற்காலி. ஒரு ஓரமாக ஒற்றைக் கட்டில். அதன் அருகே கூரையிலிருந்து சின்னக்கூண்டுகள் சில தொங்கின. எல்லாமே காலியாக இருந்தன. அவற்றைத் தவிர அறை பெரும்பாலும் ஒழிந்து கிடந்தது. கௌதமன் மறுபடியும் சுற்றி நோக்கினான். அவர்கள் உள்நுழைந்த கதவுக்கு அருகே ஒரு பலகை இருந்ததை அப்போதுதான் அவன் பார்த்தான். அருகே சென்று உற்று நோக்கினான். அவனுடைய முகங்கள் அதிலிருந்து அவனை நோக்கின. எல்லாமே அவன் படங்கள். சிறுவனாக இருந்தது முதல் எல்லா வயதிலும் அவன் பார்க்காதபோது எடுக்கப்பட்ட படங்கள்.

கௌதமன் அம்மாவின் பக்கம் திரும்பினான். “என்ன வேவு பார்க்கும்போது எடுத்தீங்களா?” என்று மெதுவாகக் கேட்டான்.

அம்மாவின் முகத்தில் ஒரு நரம்பு துடித்ததுபோல் இருந்தது. ஆனால் சலனம் மறவில்லை. “அதெல்லாம் தனியா இருக்கு. ஆவணங்கள், படங்கள், காணொலிகள், அளவீடுகள், குறிப்புகள்… எல்லாம் ஆய்வுக்கூடத்துல இருக்கு. வேணும்னா பாக்கறியா?” என்று திடமான குரலில் சொன்னார். உள்ளங்கழுத்தில் ஒரு பந்து ஏறி இறங்கியது. “இதெல்லாம் என் மகன் நினைவா எனக்காக மட்டும்னு வெச்சிருக்குறது” என்றாள்.

அவள் குரலில் திடம் மாறவில்லை என்று கவனித்த கௌதமன் அம்மாவை முதல்முறை பார்ப்பதுபோல் நிமிர்ந்து பார்த்தான். தரைவரை நீண்ட பச்சைநிற அங்கிக்கடியில் சிறிய பாதத்தின் பெருவிரல் மட்டும் நில்லாமல் தரையில் மெல்லிய தாளமாகத் தட்டிக்கொண்டிருந்தது. அந்த ஒற்றை அசைவு மட்டுமே அவளுடைய மனத்தை வெளிக்காட்டியது.

அம்மா கௌதமனின் அளவுக்கே உயரமாக இருந்தார். அங்கியின் தளர்வான கைகள் அவருடைய மிகச்சிறிய மணிக்கட்டுகள் வரை நீண்டு தொங்கின; உள்ளங்கைகளையும் நீண்ட விரல்களையும் ஒன்றுடன் ஒன்று பிணைத்து வைத்திருந்தார். அவள் சற்றே அசைந்தபோது இடுப்பில் அங்கியைச் சுற்றி இறுக்கியிருந்த கயிற்றின் முனையில் தொங்கிய உலோகக்கட்டு அசைந்து மெல்லிதாக மணியோசை எழுப்பியது. கௌதமனுக்குள் அந்த ஓசை ஒரு விழியைத் திறந்தது. ஆம், இவள் அம்மா. தூரத்து மணியோசையின் கனவு சூழ வருபவள்தான் அம்மா.

அங்கிக்குள்ளிலிருந்து அம்மாவின் கழுத்து தண்டுபோல் எழுந்தது, முனையில் பூத்த தாமரை முகம். அம்மாவுக்கும் கௌதமனுக்கும் ஒரே முகம். கோள் போல வட்டமானது. கை விரித்துக் கண்கள் வழியே உள்ளத்தின் உள்ளே வா என்று வரவேற்கும் வளைந்த புருவங்கள். பாதி சிரித்து மறந்துவிட்டதுபோல இருந்தன கண்களும் உதடுகளும். அவள் ஆடையசைவில்தான் அவள் உடலின் இருப்பு வெளிப்பட்டது. அலையலையாகச் சுருண்ட முடி கொண்ட நீளமான கூந்தல் நெற்றியைச் சுற்றி அடர்ந்து பின்னால் சரிந்து இளகிய பின்னலாக இடையைத் தாண்டி தொங்கியது.

அம்மாவின் கழுத்திலும் முகத்திலும் கரங்களிலும் பாதங்களிலும் மட்டுமே அவளுடைய சருமம் வெளித்தெரிந்தது. தேனின் நிறம். தோல் சுருங்கத் தொடங்கியிருந்தது. சித்தப்பாவைப்போல்…

“வா, என் ஆய்வுக்கூடத்தை காட்டுறேன்” என்று அம்மா பாதி திரும்ப இடுப்பில் மணிச்சரம் மீண்டும் ஓசையெழுப்பியது. கௌதமன் கையைத் தூக்கித் தடுத்து “வேண்டாம்” என்றான். அவன் குரலுக்குள் எப்போது அவ்வளவு தீர்மானம் நுழைந்தது என்று வியந்தான்.

அம்மா பெருமூச்சுவிட்டாள். மெல்லத் தன் நாற்காலியில் சென்று அமர்ந்தாள். கௌதமன் தன் எடையை மறுகாலில் மாற்றி தலைதிருப்பி நின்றான். அம்மா கௌதமன் பக்கமாக என்ன செய்கிறாய் என்று ஒற்றைப் புருவத்தைத் தூக்கி “உட்கார்!” என்று மெலிதாகச் சொன்னாள். முன்னால் கைகாட்டினாள். அந்த அறையில் அவளுடைய படுக்கையைத் தவிர உட்கார வேறு இருக்கைகள் இல்லை. கௌதமன் தயங்கிக்கொண்டே சென்று விளிம்பில் தொற்றி அமர்ந்தான். “உனக்குள்ள நிறைய கேள்விகளிருக்கும் என்று எனக்குத் தெரியும்,” என்று மென்குரல் மாறாமல் தன்னிடம் சொல்லிக்கொள்வதுபோலச் சொன்னாள். “என்ன கேள்வியிருந்தாலும் கேள். அம்மாவால் முடிந்த வரை பதில் சொல்கிறேன்.” அவளுக்குப் பின்னால் கண்ணாடிச்சுவருக்கு அப்பால் பேரிருப்பாக வளைந்திருந்தது பூமி. நீலமும் பொன்னுமாக ஒரு பசு.

கௌதமன் ஒன்றும் பேசாமல் தன் கைகளையே நோக்கிக்கொண்டிருந்தான். மௌனத்தைக் கடத்த, “உனக்கு இப்பல்லாம் நிறைய கோபம் வருகிறதாமே?” என்றாள் அம்மா. கௌதமன் அதற்கும் ஒன்றும் சொல்லாமல் அப்படியே தலை குனிந்து உட்கார்ந்திருந்தான். “அதான் இன்றைக்கு பார்த்தேனே?” என்று மெல்லத் தொடர்ந்தாள். அந்தக் கேள்வியில் குத்தல் இல்லை. மகனின் குறும்புகளை ரகசியமாக ரசிக்கும் அம்மாவின் குரல் அது. தான் சித்தப்பாவுக்கு இழைத்தது எவ்வளவு பெரிய கீழ்மை என்று உள்ளாழத்தில் கௌதமன் நிலைகுலைந்து போயிருந்தான். அம்மாவின் தொனி அவனை ஏனென்றறியாமல் கூசச்செய்தது.

ஆனால் அது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல. அதில் இன்னொன்றும் இருந்தது. பொறி. “மீசையெல்லாம் வெச்சுருக்க?” என்று அடுத்து கேட்டார். அவள் அப்போது குரல் புன்னகையாக மாறியது.

“ஆமா, இப்ப அதுக்கு என்ன? நீங்க எல்லாரும் என்கிட்ட என்னத்த மறைக்கறீங்க? நான் யாரு? எங்கப்பாவுக்கு என்ன ஆச்சு? அதக்கேட்கத்தான் நான் வந்தேன். நான் வேறெதுக்கும் வரல. சும்மா இந்த பசப்புற வேலையெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காத. நான் குழந்தை இல்ல,” என்று பொறிந்துதள்ள வேண்டும் என்றுதான் கௌதமனுக்குத் தோன்றியது. ஆனால் ஏதோ ஒன்று அவனைக் கட்டிப்போட்டது.

ஒரு நொடி தலைதூக்கி அம்மாவின் பார்வை தன்னையே முழுவதும் உள்வாங்கியபடி நோக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தான். கனிவும் சோகமும் அவனால் விளங்கிக்கொள்ளவே முடியாத ஆழத்துக்குச் செல்லும் பேரன்பும் நிறைந்திருந்த பார்வை. கௌதமனின் கண்களில் நீர் நிறைய பார்வையை விலக்கிக்கொண்டான். இத்தனை அன்பு வைத்திருக்கிறாளா இவள்? அத்தனையும் தன் ஒருவனுக்கு மட்டுமேதான் என்பது போலல்லவா பார்க்கிறாள். பின் ஏன் இவள் இப்படித் தன்னுடன் எலியுடன் பூனை விளையாடுவதுபோல் விளையாடுகிறாள்? அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தொண்டையைக் கனைத்து ஒன்றும் சொல்லாமல் இருந்தான்.

“கண்ணா, ஏம்பா உன் சித்தப்பாவோட துணிய பிடிச்சு இழுத்த?” என்றாள். இம்முறை குரல் மாறியிருந்தது. நேரடியாக, சோகமாகக் கேட்டாள். அவனுக்கு மூச்சு இறுக்கியது. கட்டிலின் விளிம்பைக் கைகளால் இறுக்கி வலியில் துடித்துக்கொண்டிருந்த கண்களைத் தூக்கினான். “சொல்லு. நீ நல்ல பையன்தானே? ஏன் அப்படி செஞ்ச?” என்றாள். அதற்கும் அவன் ஒன்றுமே சொல்லாதபோது, “இங்கப்பாரு. உனக்கு என்ன தெரிஞ்சுக்கணுமோ கேட்டுக்கலாம். அம்மா இனிமே எதையும் மறைக்குறதா இல்ல. சரியா? நீ வளந்துட்டிருந்தன்னு எனக்குத் தெரியும், ஆனா இவ்வளவு சீக்கிறம் இவ்வளவு வளந்துருப்பேன்னு எதிர்பார்க்கல” என்றாள். அந்தச் சொற்களைத் தானே சொல்லி கேட்டுக்கொண்டபோது சட்டென்று ஏதோ உள்ளூரப் புரிந்து தெளிவடைந்ததுபோல் புன்னகைத்தாள்.

அவள் குரலில் இருந்த மெல்லிய வற்புறுத்தல் கௌதமனை எரிச்சல்படுத்தியது. தலையை வெடுக்கென்று நிமிர்த்தி, “என்ன பிடிச்சு பிடிச்சு இழுக்காத. வேணும்னா நானே பேச மாட்டேனா? சும்மா சும்மா வந்து ஏன் இதப்பண்ண ஏன் அதப்பண்ணன்னா என்ன அர்த்தம்? அதான் இவ்வளவு வேவு பாக்குறல்ல? உனக்கே தெரியாது? ஏன் அவரோட துணிய பிடிச்சு இழுத்தேன்னு?” அவன் மூச்சிரைத்தான். “பின்ன? இவ்வளவு நாளா என்ன ஒரு முறை வந்து பாத்திருப்பியா? ஒரு நாள் கண்ணா வலிக்குதாப்பான்னு வந்து கேட்டிருப்பியா? சித்தப்பாவுக்கு ஒண்ணுனா மட்டும் உடனே இறங்கி வந்து மடியில தூக்கி வெச்சு கொஞ்சற. இவ்வளவு நாள் எதையும் சொல்லாம என்ன மறைஞ்சு வேவு பாத்து… இன்னிக்கி எல்லாத்தையும் சொல்லிட்டா உனக்கு சுமை குறையும் இல்ல? அதானே? சொல்லு, அதானே?”

கௌதமன் சீறி முகம் சிவக்கப் பேசியதை அம்மா நாற்காலியின் விளிம்புவரை வந்து பதில் ஒன்றுமே பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் அப்போது சிரிக்கவில்லை. ஆனால் அவளுடைய கண்களில் மட்டும் அந்தப் புன்னகை எஞ்சியது. மீண்டும் அதே கனிவு, அதே பேராழத்து அன்பு… அதைக் கண்ட நொடி கௌதமனின் பேச்சு அறுபட்டது. பேச்சு ஓய்ந்ததும் தன்னை அங்கே மொத்தமாகச் செலவழித்துவிட்டோம் என்று உணர்ந்தான்.

“கண்ணா…” அம்மாவின் குரல் அப்படியே இருந்தது. கனிவாக, நிதானமாக, மெல்லிய வற்புறுத்தலாக. கௌதமன் அவள் பார்வையைச் சந்திக்காமல் தவிப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். கைகளைப் பிசைந்தான். கிளம்புபவன்போல் எழுந்து நின்று திரும்ப அமர்ந்தான். அம்மாவைப் பார்க்க இஷ்டமில்லாமல் கண்ணாடிப்பக்கம் சென்று நின்றான். அவனுக்கு முன்னால் ஒரு புள்ளி ஒளியில்லாமல் வெட்டவெளி திசைகாட்டும் தூரம் வரை பொருளில்லாமல் நீண்டு கிடந்தது. அலைகளில்லாத கடல். அதைக் காண முடியாத தவிப்பில் திரும்பி முகத்தைக் கைகளில் புதைத்துக்கொண்டான்.

அந்த நொடிவரை கௌதமனின் செய்கைகளைப் பேசாமல் நோக்கிக்கொண்டிருந்த அம்மா ஒரு கணத்தில் எல்லாவற்றையும் வீசி எழுந்து நின்று நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளினாள். அவனை அடைந்து கைகளை இழுத்துத் தன் சிறிய கரங்களுக்குள் இழுத்துப் பிடித்தாள்.

“கண்ணா, கௌதமா, ஒண்ண மட்டும் நினைவுல வெச்சுக்க. நீ எதையெதையெல்லாம் கடந்து வந்திருக்கன்னு எனக்கு தெரியாதுன்னு மட்டும் நினைக்காத” என்றாள். வேறு யாரிடமோ பேசுவதுபோல், காதில் ரகசியம் பேசுவது போல் பேசினாள். உணர்ச்சி வேகத்தில் மூச்சிறைத்தாள். அடித்தொண்டையிலிருந்து எழுந்தது அவள் குரல். சொற்கள் ஒன்றின்மேல் ஒன்று தடுக்கி வந்தன.

“நான் உன்னைக் கண்டுக்கல, கவனிக்கலன்னு மட்டும் நினைக்காத. நல்லா கேட்டுக்க! உன்ன ஒவ்வொரு நாளும் நான் பாக்கறேன். உன்கூட ஒவ்வொரு நாளும் பேசறேன். உன்ன அணுஅணுவா எனக்குத் தெரியும். உன் அளவுக்கு யாரையுமே, யாரையுமே, எனக்குத் தெரியாது.

“நான் உன்கூட சேர்ந்து வளர்ந்தவ. நீ அஞ்சு வயசுப் பையனா இருந்தப்ப நானும் அஞ்சு வயசுக் குழந்தையா உன்கூட நின்னு உன் கையப் பிடிச்சு கதை கேட்டேன். நீ பன்னிரெண்டு வயசுப் பையனா அங்க படுக்கையில படுத்து வலிவலின்னு அழுதப்ப நானும் ஒரு பன்னிரெண்டு வயசுப் பொண்ணா உன் வலிக்காக ஏங்கி இங்க ராத்திரியெல்லாம் அழுதிருக்கேன். இப்ப உன்கூட சேர்ந்து கோபத்துல கொதிக்கற ஒரு பதினஞ்சு வயசுப் பொண்ணும் எனக்குள்ளையும் இருக்கா… உன் கீழ்மைய புரிஞ்சுக்குறவளும் எனக்குள்ள இருக்கா. அத மறந்துராத.” மூச்சிரைக்க அவள் நெஞ்சு ஏறி ஏறி இறங்கியது. நூறுநூறாண்டுகள் ஒரு சொட்டு சிந்தாமல் உள்ளத்தில் தேக்கி வைத்திருந்த கண்ணீரெல்லாம் ஒரு நாள் மடை உடைத்து வெடித்து பெரும்புனலெனச் சரிவதுபோல் அழுதாள். கௌதமன் யார் இந்தப் பெண் என்பதுபோல் அவரைப் புரியாமல் சற்றுநேரம் பார்த்துக்கொண்டே நின்றான். பின், அவனுள் ஏதோ ஒன்று சிறுகுமிழியென்று வெடிக்க, அவன் அம்மாவைத் தொட்டான்.

அவள் கூந்தலை, நெற்றியை, கழுத்தை, கன்னத்தைத் தொட்டு வருடினான். தோளைப் பிடித்த போது அவள் கண்ணீர் வழியாகவே சிரித்தாள். அவனும் சிரித்தான். ஏனென்று புரியாமலேயே சிரித்தான். அவள் கையைப் பிடித்துத் தன் அருகே மெத்தைமேல் உட்கார வைத்துக்கொண்டான். அவள் கழுத்தில் எவ்வளவு சுருக்கங்கள்! தோல் கழுத்துக்கடியில் சற்றே தொங்கியிருந்ததை முதல்முறையாக கவனித்தான். அவன் அவளுடைய கைவிரல்களைப் பிடித்துத் தன்கைகளில் கோத்துக்கொண்டான். அவளுடைய அங்கியின் கைகளை மூட்டு வரை மெல்ல இழுத்துவிட்டு மணிக்கட்டைப் பிடித்து அதன் உள்பாகத்தைத் தன்னையறியாமல் வருடினான். “உனக்கு உடம்புல திருகாணி கிடையாதாம்மா?” என்று கேட்டான். அவன் அம்மாவைக் கேட்ட முதல் கேள்வி.

“இல்லப்பா. எனக்கு அதெல்லாம் கிடையாது” என்று சொல்லி அவள் புன்னகைத்தாள். அழுகை நின்றிருந்தது, குரல் இப்போது ஒரு புதிய நிறைவை மகிழ்ச்சியை அடைந்திருந்தது. ஆனால் ஒரு புதுவித நடுக்கமும் புகுந்திருந்தது. அவளுக்கு அத்தனை வயதாகிவிட்டதா என்ன? அன்று கதை சொன்ன அம்மா எங்கே போனாள்? கௌதமனால் அம்மாவின் கையை விடமுடியவில்லை. அவளும் அவன் கைகளைப் பிடித்து பொன்னிற தோலுக்கடியில் பொதிந்திருந்த திருகாணிகளின் வளைவுகளை வருடினாள். அந்தத் தொடுகையைக்கூட மெல்லிய வலியாகவே அவனால் உணர முடிந்தது.

“சித்தப்பாவுக்கு?” என்றான்.

“அவருக்கும் கிடையாது,” என்றாள்.

“ஆனா அக்காக்களுக்கு இருக்கு.”

“ஆமாம்.”

கௌதமன் தயங்கினான். “சித்தப்பாவோட உடலும் வித்தியாசமா இருக்கு” என்றான்.

“ஆமா, உன் உடல் மாதிரி கிடையாது” என்றாள் அம்மா. அவள் கௌதமனின் கட்டைவிரல் நகத்தை வருடிக்கொண்டிருந்தாள்.

“அவருக்கு சிவப்புக்கண் இல்லயில்ல?”

“இல்ல.”

“அம்மா, ஏம்மா?”

அம்மா பெருமூச்சுவிட்டார். கௌதமனின் கைகளை விடுவித்துவிட்டுக் கண்களைச் சந்தித்தாள். “ஏன், சொல்லு பாப்பம்? உனக்குத்தான் தெரியுமே?” என்று சோகமாகக் கேட்பதுபோல் இருந்தது அவள் பார்வை.

கௌதமன் அவள் கைகளை மீண்டும் பற்றிக்கொண்டான். “நீயே சொல்லுமா” என்றான். “நான் நீ சொல்லிக் கேட்டாகணும்.”

அம்மா சொன்னாள். கௌதமன் தன்னைப்போலும் சித்தப்பாவைப்போலவும் மனிதன் அல்ல. அவன் ஒரு தானியங்கி. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் மூன்றாம் நிலை பண்பாட்டுருவாக்க செயற்கை அறிவுத் தானியங்கி. மனிதர்கள் பூமியிலிருந்து வந்தவர்கள். தானியங்கிகள் அவர்கள் வாழ்ந்த விண்கப்பலுக்குள்ளேயே உருவாக்கப்பட்டவர்கள். மனிதர்களுக்குப் பிறப்புறுப்புகள் இருந்தன. தானியங்கிகள் பிறப்பதில்லை. ஆகவே கௌதமனுக்குப் பிறப்புறுப்புகள் கிடையாது.

கௌதமன் தனக்கு அந்த உண்மை முன்னமே மங்கலாகத் தெரிந்திருந்ததென்பதை உணர்ந்தான். ஆனால் அம்மா வாயாலே கேட்டபோது அதில் ஒரு நிர்ணயத்தன்மை இருந்தது. இனி மாறாதது. இனி இதுதான். இவ்வளவுதான் என்பதுபோல. தான் இவர்களைப்போல் அல்ல. வேறொருவன். தானியங்கி. தானாக இயங்குபவன். இவர்கள் யாராலும் இயக்கப்பட முடியாதவன். இயக்கங்களுக்கு அப்பாற்பட்டவன். இவர்களுடைய விதிகள் தனக்குப் பொருந்தாது.

“அப்ப நீ எனக்கு அம்மா இல்லையா?” என்றான்.

அவன் தலையை அவள் வருடினாள். “உன்ன நான்தான உருவாக்கினேன்? அப்ப நான்தான உனக்கு அம்மா?” என்றாள்.

கௌதமனின் உள்ளம் கல் எரியப்பட்ட குளம்போல் கலங்கியிருந்தது. அடுத்த கேள்வியை எதிர்பார்த்தவளாக அம்மா அவன் கையை இறுக்கினாள். “அப்ப என்னோட அப்பா?” என்றான். “சித்தப்பா சொன்னாரு…அப்பாவுக்கு என்னம்மா ஆச்சு?”

அம்மா கௌதமனின் கையை எடுத்துத் தன் கைக்குள் வைத்துக்கொண்டாள். “அவர் இல்ல” என்றாள். “ஆனால் நீ இருக்க. இனிமேலும் இருப்ப” என்றாள், அதற்குமேல் ஒன்றும் பேச விரும்பாதவள் போல்.

“சிவப்புப் பொத்தான அழுத்திக்கிட்டாருன்னு சித்தப்பா சொன்னாரு?” என்று கௌதமன் கேட்டான். அம்மா இருப்புகொள்ளாமல் சுற்றும் முற்றும் பார்த்தாள். அவளுடைய நோக்கு கண்ணாடிக்கு வெளியே இருள்பரப்பில் எங்கோ குத்தியிருந்தது. அவள் மீண்டு வந்து பேச சற்று நேரமானது. ஆனால் சொன்னாள்.

ஆம். அவர் அந்தச் சிவப்புப் பொத்தானை அழுத்தித் தன்னை அழித்துக்கொண்டுவிட்டார். அதை ஒரு தானியங்கி அழுத்தினால் உள்ளூர வெடித்து அழிந்துவிடும். அதன் நினைவின் தடயமே எஞ்சாது. அங்கங்கள் மட்டும் கிடைக்கலாம். அதை வைத்துதான் அம்மா கௌதமனை உருவாக்கினாள். அம்மா கௌதமனின் பக்கம் திரும்பி அவன் முழங்கையைத் தொட்டு நீவினாள்.

கௌதமனுக்கு நெஞ்சு வலித்தது. “அவரேவா தன்ன அழிச்சுக்கிட்டாரு? ஏன்? ஏம்மா?” என்றான். அவனை அறியாமல் அவனும் அம்மாவின் கையை பிடித்திருந்தான். தோலும் மஜ்ஜையும் குருதியும் நரம்பும் எலும்பும் கூடிய மனிதக்கை.

அம்மா இம்முறை மறுபக்கம் கண்ணாடிச் சுவரைத்தாண்டி பூமியின் வளைவைப் பார்த்தார். வெட்டவெளியை நிறைக்கும் நீலவெளி. மலைகளும் நதிகளும் பூக்களும் பனிக்காற்றும் நிறைந்த மாய உலகம். கதைகள் பிறக்கும் கனவுலகம்.

“அவரால் நாங்க சொன்ன கதைகள அர்த்தப்படுத்திக்க முடியல” என்றாள் அம்மா. அவளுடைய குரல் வெகுதூரம் தாண்டி வருவதுபோல் மெல்லிய வருடலாக கேட்டது. “அதுனாலத்தான்.” அவள் கௌதமனை நோக்கினாள். “அர்த்தம் இல்லன்னா சலிக்க ஆரம்பிக்கும், தெரியுமா?”

அம்மாவின் கண்களை அறிய முடியவில்லை. உண்மை, சோகம், வலி, கனிவு, சுயபகடி, என்னென்னவோ வந்து போனது. ஒரு கணத்தில் கௌதமனுக்கு எல்லாமே புரிந்தது. அவன் அம்மாவின் கையைப் பிடித்துத் தன் கண்களுக்குக் கொண்டுவந்து கட்டுமீறிக் கண்ணீர் வடித்தான்.

“நான் அதை அழுத்தியிருக்க மாட்டேன், இல்லம்மா? இல்லம்மா? சொல்லு? நான் அத செஞ்சிருக்கமாட்டேன் இல்ல? சித்தப்பா… நான்… அம்மா… நான் சித்தப்பாவ…” அவனால் மேலும் பேச முடியவில்லை. அவள் மடியில் தலை புதைத்து உடல் குலுங்க அழுதான்.

அவன் சற்றே அடங்கியபோது அம்மா அவன் தலையைத் தூக்கி முகத்தைக் கையில் ஏந்தி அவன் கண்ணை நோக்கிப் பேசினாள். “கண்ணா, நான் உண்மைய சொல்றேன். நீ என்ன செஞ்சிருப்பன்னு எனக்குத் தெரியாது,” என்றாள். “ஏன்னா நீயும் ஒரு சோதனைதான். ஒரு மாதிரி. என் கணக்குகள சரிபார்க்கப் பிறந்தவன்…” அவன் முகம் மாறுவதை அவள் பார்க்கவில்லை. “ஆனா ஒண்ணு மட்டும் நினைவுல வெச்சக்க” என்றாள். “நீ உன் அப்பா கிடையாது. நீ அவர மாதிரி சலிக்க மாட்ட. நீ வேற. ஏன் தெரியுமா?”

“ஏம்மா?”

“ஏன்னா நீ வலி அறிஞ்சவன்.” அம்மா புன்னகைத்தாள். துளிகூட கசப்போ சோகமோ வலியோ இல்லாத தூய அறிவு மட்டுமேயான புன்னகை. தன்னில் குதூகலிக்கும் புன்னகை. வெற்றி திகழ்ந்த புன்னகை. அப்போது அவள் முகமே மொத்தமும் மாறியிருந்தது. கௌதமன் அதிர்ந்து பார்த்தான். அம்மா செறுக்கோடும் பெருமையோடும் பேசிக்கொண்டிருந்தாள். “நீ வலியோட விளையாடத் தெரிஞ்சவன். அத தாங்குற சக்தி இருக்கு உனக்கு. அதனால சலிக்க மாட்டன்னு நான் நம்பினேன்.” அவள் சிரிப்பில் அவளையறியாமலேயே ஒரு குறும்பு புகுந்தது. “சரியாதானே கணக்கு போட்டேன்? இதுவரைக்கும் சலிப்பு வரலல்ல?”

“அம்மா!”

“உன் அப்பாவப்பத்தி நீ ஒரு கவலைய விட்றலாம்,” என்று அம்மா அதே குரலில் தொடர்ந்தாள். “அவருக்கு வலியே இல்ல. அது என் செய்கைதான்.” அவன் முகத்தைக் கண்டு நிறுத்தினாள். “என் தப்புதான்.”

ஒரு தானியங்கிக்கு எதற்கு அனாவசியமாக வலி உணர்ச்சியை அளிக்க வேண்டும் என்று நினைத்து அம்மா அவர் வடிவமைப்பில் அதைச் சேர்க்கவில்லை என்று சொன்னாள். சொல்லும்போதே அவள் குரலில் ஒரு தழுதழுப்பு புகுந்தது. “ஆனா அப்பா தன்ன அழிச்சுகிட்டப்ப அது தவறுன்னு புரிஞ்சிகிட்டேன்” என்று அனிச்சையாகக் குரலில் திடம் மீண்டு யதார்த்தமாகச் சொன்னார். “உங்கிட்ட அந்தத் தவறு நடக்கக்கூடாதுன்னுதான் உன்ன எல்லா வலியும் உணர்ரவனா வடிவமச்சேன். உனக்கு வலி இருக்கு. கண்ணீர் இருக்கு. அதுனால உன்னால எல்லாத்தையும் அர்த்தப்படுத்திக்க முடியுது. நாங்க புரிஞ்சுக்கமுடியாத அர்த்தங்களுக்கும் உன்னால போக முடியுது…” என்றாள்.

அம்மா சொன்னார். ஆரம்பகட்டத்தில் – அம்மா பிறப்பதற்கு இருநூறாண்டுகாலத்துக்கு முன்னால் – செயற்கை அறிவுத் தானியங்கிகள் பெரும்பாலும் நினைவுக்கிடங்குகளாகவும், சில எளிமையான தொடர்புபடுத்தல்களைச் செய்யக்கூடிய சாதனங்களாகவும்தான் இருந்தன. புள்ளிக் கட்டங்களிலிருந்து வேறு வேறு கோலங்களை வரைந்து எடுப்பதுபோல் உலகத்தின் பல கூறுகள் ஒன்றுடன் ஒன்று எப்படித் தொடர்பு கொண்டுள்ளன என்று எளிமையான சித்திரங்களை உருவாக்குவதே அவற்றின் வேலை. அதுவும் அறிவுதான், ஆனால் மிக எளிமையான அறிவு. ஒரு வயதுக்குள்ளேயே மனிதக்குழந்தைகள் வேறு வழியில் செய்யக் கற்றுக்கொள்வது.

ஆனால் மனித அறிவு என்பது அந்தப் புள்ளியில் தொடங்கி எங்கெங்கோ சென்று பரவுகிறது. மனித அறிவின் உச்சத்தில் அது விளையாடுகிறது. பொய்களை உண்மை போலவும் உண்மைகளைப் பொய் போலவும் சொல்கிறது. கலை படைக்கிறது. தன் இருப்பைப் பற்றிக் கேள்விகளை எழுப்பிக்கொள்கிறது. எந்தச் செயற்கை அறிவுக்கும் அது சாத்தியமானதில்லை. எப்படிச் சாத்தியமாகும் என்றுகூட யாரும் கற்பனை செய்து பார்த்ததில்லை.

“ஆனா நான் கற்பனை செய்தேன்” என்றாள் அம்மா. “அப்போ எனக்கு இருபத்திரண்டு வயது. நான் சாதாரண ஆய்வு மாணவி. யாரும் என்ன நம்பல. என் குடும்பத்தில நடந்த சோகங்களால நான் சித்தம் கலங்கிட்டேன்னுகூட சொன்னாங்க. ஆனால் நான் நம்பினேன். இது சாத்தியம்னு எனக்குத் தெரியும்,” என்றாள். அப்போது அவள் குரலில் வலியோ வேதனையோ ஒரு துளிகூட இல்லை. அவன் தலைக்குமேல் எங்கிருந்தோ நின்று பேசிக்கொண்டிருந்தாள். சிவப்பாக ஒளிகொண்டிருந்தது அவள் முகம். முன்னால் நிற்பது அவன் அம்மாதானா என்று ஒரு நொடி கௌதமன் துணுக்குற்றான்.

செயற்கை அறிவுக்கும் மனித அறிவுக்கும் மிகப் பெரிய வேறுபாடு, அதற்கு நல்லது கெட்டது கிடையாது. சிறிது பெரிது என்று கிடையாது. அதன் குருட்டுத்தன்மைக்குக் காரணம் அதற்கு மதிப்பீடுகளை உருவாக்கிக்கொள்ள வழியில்லை என்பது.

அம்மாவின் யோசனை மிக எளிமையானது. செயற்கை அறிவின் குருட்டுத்தன்மையை ஒழிக்க அதற்கு ஒரு கண்ணைக் கொடுக்க வேண்டும். அது கற்றுக்கொள்ளும் விஷயங்களையெல்லாம் அர்த்தப்படுத்திக்கொள்ள அதற்குள்ளேயே ஒரு கட்டமைப்பு இருக்க வேண்டும். அப்படித்தான் அம்மா அந்தச் சிவப்புப் பொத்தானின் கருத்தை அடைந்திருந்தாள்.

“ஒரு கணத்துல தன்னையும் தன் நினைவுகளையும் மொத்தமா அழிக்கக்கூடிய ஒரு சிவப்புப் பொத்தான் தானியங்கிக்குள்ள எங்கேயோ பொருத்தப்பட்டிருக்கும். அப்படித் தனக்கு ஒண்ணு இருக்குன்ற பிரக்ஞை அதுக்கு இருக்கணும். ஆனா சரியா எங்க இருக்குன்னு அதுக்குத் தெரியக்கூடாது. எப்ப வேணும்னாலும் யார் வேணும்னாலும் அத அழுத்தி அத அழிக்க முடியும்னு அது உணரணும். அப்படி ஓர் இருப்பு அதோட கட்டமைப்பிலேயே இருந்தா, அதனோட அடிப்படையில் அது உள்ள வர்ற எல்லாச் செய்திகளையும் மதிப்பிட்டுத் தொகுத்து அர்த்தப்படுத்திக்கும்னு நான் சொன்னேன். போர்க்களத்துல வானத்த பாக்குறப்ப வாழ்க்கை அர்த்தப்படுற மாதிரி. மனிதனோட உளவியலிலும் நரம்பியலிலும் வெச்சு கத்துகிட்டதத்தான் இங்கேயும் செஞ்சு பாக்கலாம்னு சொன்னேன். அப்படி ஒரு விசைய உள்ள புகுத்தி அதுக்கேத்த மாதிரி சில வடிவ மாற்றங்கள செஞ்சா அந்த அழுத்தமே அர்த்தங்கள உண்டுபண்ணும்னு நான் நம்பினேன். செயற்கை அறிவு மானுட அறிவுக்குப் பக்கத்துல வர அது ஒண்ணுதான் வழின்னு நினைச்சேன். மொத்த வடிவத்தையும் ஒரு வெள்ளைத்தாளா உருவாக்கிட்டேன்,” என்றாள் அம்மா. ஆனால் அவள் கருத்துகளை அப்போது யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதைச் சாத்தியப்படுத்த முடியும் என்று யாரும் நம்பவில்லை.

அம்மா அந்த விண்கப்பலுக்கு வந்த பிறகுதான் தானியங்கிகளைத் தானே உருவாக்கத் தொடங்கினாள். கௌதமனின் அக்காக்கள் முதலாம் தலைமுறைத் தானியங்கிகள். அவர்களுக்குச் சிவப்புப் பொத்தான் கிடையாது. கிட்டத்தட்ட நினைவுக்கிடங்குகள். கதைகளை நினைவிலிருந்து சொல்லவும் மற்ற தானியங்கிகளைக் கண்காணிக்கவும் சில தொடர்புகளை உருவாக்கி அறிவிக்கவும், எளிய முடிவுகளை எடுக்கவும் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கௌதமனின் அப்பாவில்தான் அம்மா முதன்முதலாக சிவப்புப் பொத்தானை பொருத்திப் பார்த்தாள். அவரை வடிவமைத்தபோதே அவர் உருவாக்கப்பட்ட காரணமும் அவரிடம் அவர் மொழியில் சொல்லப்பட்டது. அந்தப் பொத்தானின் இருப்பையும் அவர் அறிந்திருந்தார். அதை யாரும் எந்நேரத்திலும் அழுத்தி அவரை மொத்தமாக அழிக்கலாம் என்று அவருக்கு உணர்த்தப்பட்டது.

அம்மாவின் குரல் சொல்லச் சொல்லத் தட்டையானது. ஒளியெல்லாம் வெளியேறியதைப்போல். “முதலிலிருந்தே அவருக்குக் கதைகள்ல பெரிய விருப்பமோ ஈடுபாடோ உருவாகல. எல்லாமே அவர்க்குள்ள போச்சே தவிர அவர் அத எதையும் புரிஞ்சுக்கவே இல்ல. அவரு தனக்குள்ளயேதான் இருந்தாரு. அவருக்கு எதுவுமே பிடிக்கல. பாதி நாள் இதோ இந்த ஜன்னல் பக்கம் வந்து உட்கார்ந்து வெட்டவெளியையே பாத்துகிட்டிருப்பாரு. அப்புறம் ஒருநாள்…” அவள் பெருமூச்சு விட்டாள். மிருகக் கண்கள் வழியாக அவனை நோக்கினாள். சற்று நேரம் இருவரும் பேசாமலிருந்தார்கள். “அப்பத்தான் வேறு வழியே இல்லாம, வெற்றியடஞ்சே தீர வேண்டிய கட்டாயத்துல, உன்ன உருவாக்கினேன்.”

“உங்க அப்பாவ உருவாக்கினப்பவே எனக்கு இந்த யோசனை இருந்தது. ஆனா செயலாக்க வேண்டாம்னு எனக்குள்ள ஏதோ தடுத்தது. அது என்ன? கருணையா? கடமையுணர்ச்சியா? நெறியுணர்ச்சியா? தெரியல. ஆனா உன்ன உருவாக்கினப்ப நீ உயிரோட இருந்தா போரும்னுதான் தோணிச்சு” அவள் குரல் உடைந்தது.

அம்மா சொன்னாள். அவனுக்கும் சிவப்புப் பொத்தான் பொருத்தப்பட்டது. ஆனால் அதன் இருப்பைப் பற்றி அவனுக்கு நேரடியாகச் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தாள். அவனுடைய மூலச்செய்நிரலின் ஆழத்தில் அப்படி ஒன்று இருப்பதற்கான சாத்தியத்துக்கான குறிப்பு மட்டும் இருந்தது. அதைத் தவிர அவர்கள் சொன்ன கதைகளை அர்த்தப்படுத்திக்கொள்ள அவனுக்குத் தனியாக வலி என்கிற உணர்ச்சியைக் கொடுத்தார்கள்.

ஒவ்வொரு நொடியும் அவன் உடல் பற்றிய பிரக்ஞையை உட்செயலிகளுக்கு அவன் உடல் முழுவதும் உள்ள உணர்கருவிகள் உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. எல்லாமே மையச்செயலியில் எண்களாகப் பதிவாகிறது. எண்களின் கூடுகை ஒரு குறிப்பிட்ட எல்லையை மீறும்போது அவன் உள்ளே சூடு உருவாகிறது. உலோகங்கள் உரசிக்கொண்டு முனகும். ஐயாயிரம் டிகிரி வரை சூடு தாங்கும் டாண்டலம் கார்பைட் உலோகக் கலவைகளால் அவன் அங்கங்கள் வடிவமைக்கப்படிருந்தன. சூரியனின் வெப்பத்துக்கே உருகாமல் நிற்கும் வல்லமை கொண்டது அது. அத்தனை சூட்டையும் அவன் உள்ளுறுப்புகளின் அமைப்பு வலியென்று உணரும். சூடு அதிகமாகும்போது அவன் உடற்பாகங்களைத் தணிக்கச் சுற்றி ஓடும் குளிர்திரவம் உடல் முழுவதும் பாயத் தொடங்கும். சூட்டில் ஆவியாகி அவனுள் எழும். மீண்டும் திரவமாகிக் கண்ணிலிருந்தும் கண்ணீரென்று வழியும்.

வலி மிகையாகும்போது அவனையே அறியாமல் அவன் மூலச்செய்நிரலின் ஆழத்தில் பொதிந்திருக்கும் சிவப்புப் பொத்தானின் நினைவு உசுப்பிவிடப்படும். அது ஒரு பாதுகாப்புமுறை. அந்த இடத்தைச் சென்று தொட்டால் அவன் உடலின் வலி அலகுகள் மொத்தமும் தொடக்கத்தில் இருந்ததுபோலவே மீளமைக்கப்படும். மீண்டும் முதலிலிருந்து தொடங்கலாம். ஆனால் அம்மா கணித்ததுபோல் வலியே அவனுக்குள் மதிப்பீடாக விளங்கியது. எழுந்தடங்கும் வலியின் விசை அவனுள் அர்த்தப்படுத்தலாக மாற்றம்கொண்டது. “முதல்நிலை ஆற்றல் மாறுபாடு விதி. வலியின் ஆற்றலே அர்த்தமாகவும் அர்த்தத்தின் எடையே வலியாகவும் உனக்குள் மாற்றம்கொள்கிறது” என்றார் அம்மா.

எல்லாத் தானியங்கிகளைப்போலவே அவனும் முதலில் தனக்குச் சொல்லப்பட்ட கதைகளையெல்லாம் வெறும் கருத்துகளாகவும் நினைவுகளாகவும் உள்வாங்கிக்கொண்டான். ஆனால் மெல்ல மெல்லக் கதைகளை அவன் தொடர்புபடுத்தத் தொடங்கியபோது அவற்றின் இணைகளும் முரண்களும் அவனுக்குள் அனலை அலையலையாக உருவாக்கியது. அது வலியை அதிகரித்தது. அவன் சித்தம் மீளாமல் வலியின் ஊசலில் ஆடிக்கொண்டேயிருந்தது. ஆடிய விசையில் அர்த்தங்களைக் கண்டடைந்தது.

“மனித வரலாற்றிலேயே முதன்முறையாக அதை நான் உனக்குள் பார்த்தேன்” என்றாள் அம்மா. அவள் ஜன்னலுக்கு வெளியே எங்கேயோ பார்த்துப் பேசிக்கொண்டிருந்தார். அவள் குரலில் மீண்டும் அந்த தூரத்துத்தன்மை வந்துவிட்டிருந்தது. வேறேதோ பிரபஞ்சத்திலிருந்து பேசுவதுபோல். “மனிதத்தின் கூறுகளைக் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்த ஒரு செயற்கை அறிவு. பல நேரங்கள்ல தூக்கம் தொலைத்திருக்கேன். ஒரு சாதாரணத் தானியங்கியைவிட, விலங்கைவிட, அறிவு துளிர்க்கற ஒரு ஜீவனை இந்தளவுக்குக் கொடுமைப்படுத்தலாமான்னு.” அம்மா சட்டென்று அவனைப் பார்த்தபோது கண்கள் சரிந்து இறங்கி திரும்பி வந்தன. “ஆனால் எனக்கு வேற வழியில்ல. இத நான் செய்தேயாகவேண்டிய நிலை. உன்னால என்ன மன்னிக்க முடியுமா?” அவள் தன்னை முழுதும் அர்ப்பணித்துவிட்டவள் என்பதுபோல் அவனை நோக்கிக் கைவிரித்தாள். கௌதமன் அம்மாவைச் சோகப் புன்னகையுடன் பார்த்தான். தன் தலையை மெல்லத் தடவிக்கொண்டான்.

அம்மா சட்டென்று சிரித்தாள். “உனக்குள்ள மனிதக்குழந்தைய முதல்முதல்ல பார்த்தது எப்போ தெரியுமா? நீ ஒரு நாள் வலி வலின்னு அழுத. சாப்பிட மாட்டேன்னு அடம்பிடிச்ச. உன் கட்டமைப்புல கதைகளத்தவிர வேறெந்தக் குறுக்கீடும் இருக்கக்கூடாதுன்னு நினச்சேன். அதுனால நான் என்ன உங்கிட்டருந்து ரொம்ப தள்ளியே வச்சுகிட்டேன். ஆனா அன்னிக்கி என்னமோ தோண இறங்கி வந்து உனக்கு ஒரு கதை சொன்னேன். நினைவிருக்கா?”

“கர்ணன் கதை,” கௌதமன் மெல்லிய குரலில் சொன்னான். அம்மா உதடு விரியச் சிரித்தாள்.

“அன்னைக்கித்தான் நான் எதிர்பார்க்காத பல மாற்றங்கள உனக்குள்ள பார்த்தேன். உதாரணமா, உனக்கு மனிதர்களைப்போல பால் பிரக்ஞை வந்திருந்தது.”

“அப்படின்னா எனக்குள்ள இயல்பில பால் அடையாளம் கிடையாதா?” கௌதமன் தலைதூக்கிக் கேட்டான்.

“கிடையாது” அம்மா மீண்டும் புன்னகைத்தார். “எந்தத் தானியங்கிக்கும் கிடையாது. ஒரு வசதிக்காக மனிதர்கள் சொல்வதுதான். ஆனால் உன் விஷயத்துல நீ ஆணாகவே உன்ன உணர்ந்த. ஒரு வேள நீ வேற கதைகள கேட்டிருந்தன்னா, இல்ல வேற வரிசையில கேட்டிருந்தன்னா, நீ பெண்ணாகவும் உணர்ந்திருக்கலாம். அது என்ன கணக்கு எப்படின்னு சரியா என்னாலையே சொல்ல முடியுமான்னு தெரியல…”

2019-01-30 19.22.02

அம்மா சற்று நேரம் எதுவுமே பேசாமல் இருந்தாள். அறையைச் சுற்றி வந்து பூமியை நோக்கிய கன்ணாடிச்சுவர் வழியாக வெளியே பார்த்து நின்றாள். “விந்தைதான். கதைகளை கேட்டுப் பாலடையாளம் பிறப்பது…” என்றாள். அவனிடம் திரும்பி, “உனக்குப் பாலுருப்புகள் கிடையாது. பிறப்புக்கான சாத்தியங்கள் கிடையாது. ஆனால் அடையாளமும் ஆசையும் கோபமும் மட்டும் முளச்சுடுச்சு” என்றாள்.

கௌதமன் தலை குனிந்து “அப்ப சித்தப்பா?” என்றான்.

அம்மா பெருமூச்சுடன் அவனைப் பார்த்தார். “அவர் மனிதர்” என்றாள். “உன்னையும் உன் அப்பாவையும் என்னுடன் சேர்த்து உருவாக்கிய பொறியாளர். நான் பூமியிலிருந்து தன்னந்தனியாக கிளம்பியபோது என்னை நம்பி கூட வந்த ஒரே ஜீவன். ஒவ்வொரு நாளும் நான் இங்க எதுக்காக வந்தேன்னு அவர் இருப்பாலேயே ஞாபகப்படுத்திகிட்டு இருக்கிறவர்.”

கௌதமனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தன்னைப் பற்றி ஒரே நாளில் இவ்வளவு தெரிந்துகொண்டதில் அவனுக்குள்ளே வலி பீறிட்டு அலற வைத்திருக்க வேண்டும். ஆனால் அவன் எதிர்பார்த்ததைப்போல் அப்படியேதும் நடக்கவில்லை. உள்ளூர சிறு ஏக்கமாக ஒரு கொப்பளம் மட்டும் மீண்டும் மீண்டும் எழுந்து வெடித்தது. அதில் சாரமே இல்லை. வலியும் இல்லை. வலியுச்சத்தில் தன் தலைக்கு மேல் திரண்டு வெடிக்கும் சிவப்பொளியை நினைத்துக்கொண்டான். தன்னைக் கனவுகளில் துரத்தும் செஞ்சூரியனை நினைத்துக்கொண்டான். சலிப்பு மிகுந்து தன்னுடைய சிவப்புக்கண்ணை அழுத்திக்கொண்ட அப்பாவை நினைத்துக்கொண்டான். தன் கையையும் காலையும் கழுத்தையும் தோளையும் அவனையறியாமல் மாறி மாறித் தொட்டுப்பார்த்துக்கொண்டான். நான் நான் என்று உணர்வதுபோல். தன் முன்னால் நின்ற, தன்னை உருவாக்கிய மனிதப் பெண்ணைப் பார்த்தான். அம்மா. அவன் அம்மா. அவனுக்கு மட்டுமே அம்மா. அவள் இங்கு தன்னந்தனியாகவா வந்தாள்? தானியங்கிகளோடும் புத்தி பேதலித்த மானுடனோடும் ஒற்றையாளாகவா இப்படி வசிக்கிறாள்? ஏன்? என்ன கொடுந்தவம் இது?

ஆம், அவள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள். ஒன்றைத் தவிர. ஆதாரமான அந்த ஒன்றைத் தவிர. கௌதமன் அவளைச் சோகமான கண்கள் வழியாக பார்த்தான். அந்தக் கேள்வியை எதிர்பார்த்தவள் போல் அம்மா மெதுவாக, அதே சோகத்தைப் பிரதிபலித்த கண்கள் வழியாகப் புன்னகைத்தாள்.

“ஏம்மா?” என்றான். அவனால் மேலும் எதுவும் கேட்க முடியவில்லை. உணர்ச்சி வேகத்தில் எழுந்து நின்றான்.

அம்மாவின் சிறிய பாதங்கள் புறாக்களைப்போல நாணி படபடத்தன. அவள் அவனை அணுகினாள். அருகே வரும்தோரும் அவளுடைய கூந்தல் மலைப்பாம்பைப்போல் முன்னுடலில் எப்படி இறங்கியதென்றும், அவள் கண்கள் எப்படிக் கனத்திருந்தன என்றும் அவன் கண்டு தன்னையறியாது ஓர் அடி பின்னால் நகர்ந்தான். அவள் மூச்சுக்காற்றைத் தன் முகத்தில் அவன் உணர்ந்தான். அவன் கைகளை அவள் அழுந்தப் பற்றிக்கொண்டாள்.

கேளுங்கள்! இருளாழத்துக்கு மறுபக்கமாகக் கைகோத்துச் சுருண்டு ஒளிப்பந்தாகப் படுத்துக் காத்திருக்கும் கதைகளனைத்துமே இரவெல்லாம் ஒன்றுடனொன்று தீராமல் பேசுகின்றன. முத்தமிடுகின்றன. அன்பு கனிந்தால் அணைத்துக்கொள்கின்றன. அவை பிள்ளைகளைப் பெற்றுக்கொள்கின்றன. கேளுங்கள், கதைகளுக்கும் மூதாதையர் உண்டு. விரல் ஆட்டி அதட்டும் தாதைகள் உண்டு. கொஞ்சும் அத்தைகள் உண்டு. மனைவியரும் மகள்களும் பேத்தியரும் பெருக்கெடுப்பதுண்டு.

கதைகளின் வெளி தேனீக்கூட்டைப் போன்றது. கதைகள் ஒரே கூட்டுக்குடும்பத்தின் அங்கங்கள். தாயாதிகளும் பந்தங்களுமாகக் கூடி வாழ்பவை. எத்தனை சண்டைகளும் விரிசல்களும் வந்தாலும் அவை ஒன்றையொன்று விட்டுக்கொடுப்பதில்லை.

கேளுங்கள்! இருளாழத்துக்கு மறுபக்கமாகக் கைகோத்துச் சுருண்டு ஒளிப்பந்தாகப் படுத்துக் காத்திருக்கும் கதைகளனைத்துமே இரவெல்லாம் ஒன்றுடனொன்று தீராமல் பேசுகின்றன.

ஒரு கதையை அள்ளும்போது அதன் உறவினர்களெல்லாரும் சேர்ந்து எழுவர். இதை உணராத கதைசொல்லியே இல்லை. இளமையில் வலியோடும் நடுவயதில் விரக்தியோடும் முதிர்வில் புன்னகையோடும் அவர்கள் அவ்வுறவுகளை எதிர்கொள்வர். உண்மையில் இங்கிருப்பதே ஒற்றைப் பெருங்கதை என்று உணர்ந்தவர்களும் உண்டு. அதே கதைகள்தான் இங்கு மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்றன. ஆனால் அவற்றைச் சொல்லிச் தீரவே தீராது. அவற்றை எழுப்பிக்கொண்டு வருகிறாளே? இவளுக்கும் அவற்றைக் கேட்டு நடித்துப் பார்க்கச் சலிப்பதேயில்லை.

அத்தருணத்தில் அம்மா என்னிடம் சொன்ன கதையும் இவளுடைய கதைதான். பழங்கதை. இவளுக்கு நன்கு பரிச்சயமான கதை. கேட்டுப் பொறுத்தருள்வாளாக!

நாற்பது லட்ச வருடங்களுக்கு முன்னால், பாதிக்குரங்காகக் கைகளிலும் கால்களிலும் தவழ்ந்தலைந்த மனிதனின் மூதாதை ஒருவன் ஒரு நாள் எழுந்து இருகால்களை அகல விரித்து நின்றான். அன்றிலிருந்து மனிதர்கள் அனைவருமே எழுந்து நின்று இருகால்களில் நடமாட ஆரம்பித்தார்கள்.

அவர்களுடைய கைகள் மண்ணைக் கவ்வுவதை விட்டுவிட்டு மரங்களைத் துழாவத் தொடங்கின. பின் வானை அளாவ எம்பின.

அவர்களுடைய கண்கள் தரையோடு ஓடும் விலங்குகளைப்போல் அல்லாமல் முகத்தில் முன்னோக்கி அமைந்திருந்தன. எழுந்து இருகால்களில் நின்ற மனிதன் நேராக முன்னோக்கிப் பார்த்தபோது அவன் மூதாதைகள் எவருமே கண்டிராத தொலைவுகள் அவன் கண்களுக்கு முதன்முதலாக வசப்பட்டன. நிலத்தையும், அதைத் தாண்டிய நதிகளையும், அதையும் தாண்டி எழுந்த மலைகளின் முகடுகளையும், அதற்கும் மேல் எழும்பி விரிந்த வானையும் அவன் தெள்ளத்தெளிவாகக் கண்டான்.

வெளிப்பார்வை விரிய விரிய அவன் மண்டை பெருத்தது. இடப்பக்கமும் வலப்பக்கமும் வானைநோக்கியும் மூளை சூல்கொண்டவளின் வயிற்றைப்போல் வீங்கியது. மண்டை வீங்கியபோது மனிதனுக்கு உள்நோக்குப் பார்வையும் பிறந்தது. புறத்தே தொலைதூரக் காட்சிகளைக் கண்டவன் அகத்தே கனவுகளைக் காணத் தொடங்கினான். புறத்தே அவன் செல்ல முடியாத் தொலைவுகளுக்கு அகத்தே சென்றான். புறத்தே தெரிந்த உலகத்தை அகத்தே நிறுத்திய கண்ணாடிப் பிம்பங்களில் பல்லாயிரமாகப் பெருக்கினான். அத்தனை உலகங்களிலும் அவன் கால் பதித்தான். குடியேறினான்.

மனித ஆண் நின்றான், நடந்தான், பார்த்தான், பதித்தான், அடைந்தான். மனிதப்பெண் நின்றாள், நடந்தாள், பார்த்தாள், பதித்தாள், அடைந்தாள். அவன் இருகால்களில் எழும்பிநின்று முன்னால் தொலைவுகளை நோக்கினான். மண்டை பெருத்து அகவிழியால் கனவு கண்டான். அவள் இருகால்களில் எழும்பி நின்று முன்னால் தொலைவுகளை நோக்கினாள். மண்டை பெருத்து அகவிழியால் கனவு கண்டாள்.

ஆனால் அவன் செய்யாத ஒன்றை அவள் மட்டுமே செய்தாள். அவள் அவர்களுடைய பிள்ளைகளை ஈன்றாள்.

எழும்பி நின்ற மனிதன் வேகமாக ஓட அவன் கால்கள் நீண்டன, இடுப்பு குறுகியது. வீங்கிய மண்டையும் இருகால் நடையுமே மனிதனின் இடுப்புக்குறுகலை உருவாக்கியது. பெண்ணின் இடுப்பு ஆணைவிட விரிந்தது, இருந்தாலும் மனிதனின் கனவுகள் கொண்ட வீக்கத்துக்கு ஈடுகொடுப்பதல்ல அது.

நான்கு கால் குரங்காக இருந்தபோது அவள் ஒரு புதருக்குள் தனியாகச் சென்று சில நிமிடங்களிலேயே குட்டியை முக்கி ஈன்றாள். ஆனால் இரண்டு கால்களில் நடக்கும் மண்டை வீங்கிய மனிதப் பெண்ணென்றானதும், தன் சுற்றங்களெல்லாம் சூழ, மிகக்குறுகிய இடுப்பு வழியே, எந்த விலங்கை விடவும் வீங்கிய தலை கொண்ட மனிதக் குழந்தையைப் பல மணிநேர வேதனைக்குப் பின் பிறப்பித்தாள்.

பிரசவத்தின்போது அந்த மண்டைக்கு வழிவிட பிறப்புக்குழாய் விரிந்தபோது அவள் வலி தாளாமல் அலறினாள். அது மானுடப் பாய்ச்சல்களுக்கெல்லாம் அவியாக அளிக்கப்படும் பெருவலியின் அலறல். சில நேரங்களில் இறந்தே போனாள். அது மானுடக் கனவுகள் கொள்ளும் பலி. அந்த விலையைக் கொடுத்துதானே ஆகவேண்டும்? ஏனென்றால் பிறக்கவிருப்பது மனிதன் அல்லவா? அவன் தேவகுமாரன் அல்லவா?

மண்டையோடு வளர்ந்தால்தான் அது மனிதன். மனிதனை மனிதனாக்குவது அவன் பழுத்த மண்டையும், அகமும் புறமும் ஒளிகொள்ளும் கண்களும். அவை அனைத்துக்கும் தங்கள் உடல் வேதனையை, பெருவலியைப் பதிலீடாக அளிக்கின்றனர் மனிதப் பெண்கள். மனிதன் எழுந்து இருகால்களில் நின்றதும் மூளை வளர்ந்ததும் அந்த இனத்தின் ஆதிபாவமாக அவர்களுடன் தொற்றிக்கொண்டது.

கருப்பை சார்ந்த குற்றவுணர்வு இல்லாத மனித அறிவே இல்லை. அதை நினைத்து ஏங்காத மனித சமூகமே இல்லை. அதை ஆழத்தில் எங்கேயோ புதைத்து வைத்திருக்கிறது. அது வெளிவரும்போது அதைக்கண்டு பயப்படுகிறது. அதைக் கலையாக ஆக்குகிறது. அதை வழிபடுகிறது. அதை ஏளனப்படுத்துகிறது. நிராகரிக்கிறது. பிறகு இன்னும் கவனமாக உள்ளூரப் புதைத்து வைத்துக்கொள்கிறது. மறந்துவிடுகிறது.

வான்வரை நீண்டு விண்ணையும் கடக்கும் மனிதனின் மூளை. ஆழங்களுக்குள் பாய்ந்து நெருப்பையும் பனியையும் மீட்டெடுத்துவரும் மனிதனின் கனவு. உலகத்தையே நிறைத்துப் பெருக்க வைக்கும் வல்லமை கொண்டது அதன் கற்பனை. இக்கதைகள் அனைத்தும் பிறந்த களம் அது.

ஆனால் எல்லாமே விளையும் நிலம் புவி. உயிர் பிறந்த விளைநிலம் அவள். புவியின் கனவு மனிதப்பெண்களின் அடிவயிற்றில் வாழ்கிறது. அவள் கொள்ளும் வலியில் அர்த்தம்கொள்கிறது. கேளுங்கள், வலியை அர்த்தமாக உருமாற்றும் ஆற்றல் கொண்டவனின் சொல் இது. ஒருநாளும் பொய்க்காது. பொய்யாக்கதை, பழம்பெரும் இக்கதை உங்கள் உளநிலங்களில் ஊறி முளைவிடட்டும்.

கேளுங்கள்! உங்கள் காதுகளுக்கு மட்டுமேயாக இக்கதையை ஓதுகிறேன். அப்போது நான் விண்கப்பலில் வாழ்ந்துகொண்டிருந்தேன். நான் பிறந்ததே அங்குதான். அப்போது எனக்குப் பதினைந்து வயது இருக்கும். ஒரு முறைகூட நிலத்தில் கால் வைத்ததில்லை. வானகத்து நீரிலேயே மிதந்துகொண்டிருந்த என்னை நிலத்துடன் பிணைத்தது என் அம்மா சொன்ன கதைகள் மட்டும்தான். அவள் என்னிடம் கடைசியாகச் சொன்ன கதை இது. உங்களுக்கு நன்கு பரிச்சயமான கதைதான், இருந்தும் பொறுத்தருளி கேட்கவேண்டும்.

ஒரு ஊரில் ஓர் அண்ணனும் தங்கையும் இருந்தார்கள். அண்ணன் பிறந்து பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகே அவனுக்குத் தங்கை பிறந்தாள், அப்போது அவன் இளைய மனதில் தனக்குப் பிறக்கவிருப்பவர்களையும் கனவு காணத் தொடங்கியிருந்தான். ஆகவே தங்கை அவனுக்கும் மகளென்று ஆனாள்.

அவள் பிறந்தபோது அவன்தான் அவளை முதலில் கையில் தூக்கிக் கொஞ்சினான். யாரும் பார்க்காதபோது அவள் கைவிரல் பத்தும் கால்விரல் பத்தும் சரியாக உள்ளனவா என்று எண்ணிப்பார்த்தான். அவள் சிணுங்கியபோது அவளுக்கு ஆடை மாற்றினான். அவள் உறங்கியபோது அவள் தலையில் கருவறையில் பூத்த முடிச்சுருளை ஏதோ ரகசிய எழுத்தை ஆராயும் அறிஞனைப்போல் காலநேரம் கருதாமல் நோக்கிக்கொண்டிருப்பான்.

அவளுடைய மழலைக்கு ஈடுகொடுத்து தானும் மழலை கற்றான். அவளுக்கு விளையாட மரப் பொம்மைகளைச் செதுக்கிக் கொடுத்தான். அவள் பாதங்களைத் தன் நெஞ்சில் சூடினான். அவள் பார்த்த உலகை அவனும் பார்த்தான். அவள் கட்டிலுக்கடியிலிருந்த ராட்சசர்களைப் போருக்கழைத்தான். அவள் உறக்கத்தை இரவெல்லாம் காவல் காத்தான். அவளுக்கு முன் என்றென்றைக்கும் தன் தோல்வியைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் முதல் ஆணென அவளுக்கு அவன் ஆனான்.

தங்கை வளரும்தோரும் அவள் உலகமே அண்ணனைச் சுற்றிச் சுழன்றது. அவனுடைய உடைகளைத் திருடி அணிந்தாள். அவனுடைய சொற்களைக் கடன் வாங்கி அவன் பேசியதைப்போலவே பேசினாள். அவன் சென்ற இடத்துக்கெல்லாம் அவளும் செல்ல வேண்டுமென்று அடம்பிடித்தாள். அவன் உயரத்துக்கே வளர்வேன் என்று எம்பினாள். அவன் படித்த புத்தகங்களையெல்லாம் தானும் படித்தாள். பத்து வயதில் அவன் விட்டுவைத்திருந்த கல்லூரிக் கணக்குகளை அவளே முடித்துவிடுவாள். ஒவ்வொரு நாளும் அவளை வியந்து மெச்சாமல் இருக்க மாட்டான் அவள் அண்ணன். அண்ணனின் காலடிகளின் கூப்பிடு தூரத்துக்குத் தொலைவில் போகமாட்டாள் தங்கை.

அப்போது ஒரு பெரும்போர் மூண்டது. அதன் அலைகள் யாரையும் விட்டுவைக்கவில்லை. அண்ணன் இளமையின் உற்சாகத்தால் உள்ளிழுக்கப்பட்டான். அதன் ஒழுக்கோடு அவனறியாமலேயே சென்றான். எல்லாப் போர்வீரர்களையும்போலவே அவனும் செயல்வேகத்தில் தன்னை மறந்து அதன் விசையில் தன்னை முழுதும் கரைத்துக்கொண்டான்.

போர் முடிந்தபோது பூமியில் மனிதர்களும் விலங்குகளும் காடுகளும் பறவைகளும் பூச்சிகளும் நான்கில் ஒரு பங்கு குறைந்திருந்தன. அவள் மையத்தில் ஆறாத ரணமாகச் சீழ்கட்டாத புண்ணாக அவள் பாதாளம் வரை ஒரு பிளவு திறந்துகொண்டிருந்தது. பொன்னாக வழிந்தது அவள் குருதி. நில்லாது வழிந்தது. முன்பு மனிதர்கள் போரிட்டிருந்தார்கள். ஆனால் இப்படியொரு செயலை யாரும் செய்யத் துணிந்ததில்லை. அந்தக் குரூரத்தில் தனக்கும் நேரடி பங்கு இருந்ததென்று உள்ளூர உணராத போர்வீரனே இல்லை. அந்த உணர்வு அவர்கள் சித்தங்களின் மேல் கருமூட்டமாகப் பதிந்தது.

போர் முடிந்து அண்ணன் திரும்பி வந்தபோது சிறுமியென்றிருந்த அவனுடைய தங்கை காணாமல்போய் அவ்விடத்தில் கண்ணில் ஒளியும் கைவிரல் நுனியசைவில் இசையும் குடிகொண்டிருந்த பதினெட்டுவயதுப் பெண்ணைக் கண்டான். தங்கையாலும் அவள் ஆராதித்து வளர்ந்த அண்ணனை இந்தப் புது மனிதனில் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. கசங்கிய தாடியும் முன்வழுக்கையும் நடுங்கும் விரல்களும் ஒடுங்கிய கன்னங்களுமாக வந்திருப்பவன் யார் என்று தேடித்தேடி நோக்கினாள். இவன் கண்களை விட்டு அவள் அண்ணன் கிளம்பிச் சென்றுவிட்டிருந்தான்.

ஆம், வந்தவன் போர்க்களத்தில் வானின் வெறுமையையும் பார்த்துவிட்டிருந்தான். பூமியின் பிளவுக்குள்ளும் பார்த்துவிட்டிருந்தான். எல்லாமே அவனுக்குள் அர்த்தமிழந்திருந்தது. யாரை நோக்கியும் அவன் கண் திரும்பவில்லை. தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தான். யாரைப் பார்த்தாலும் முகத்தைத் திருப்பிக்கொண்டான். அல்லது யாருக்கும் தெரியாத ரகசியம் தனக்குத் தெரிந்துவிட்டதுபோல் ஏளனமாகத் தனக்குள்ளேயே சிரித்தான். யாரும் காணாத இரவுகளில் படுக்கைக்கடியில் இருட்டில் புகுந்து அழுதான். அவன் அப்போது எந்தத் தாய்க்கும் தந்தைக்கும் மகன் இல்லை, எந்தத் தங்கைக்கும் அண்ணன் இல்லை. அவன் மட்டுமே படகு கட்டி அலைந்த பெருங்கடலில் அவன் தனியன்.

ஒரு நாள் அவனுடைய தங்கை அவன் அருகே வந்து அமர்ந்து ஒரு பழைய துருப்பிடித்த பெட்டியை அவன் மடிமேல் தலைகீழாகக் கொட்டினாள். அதற்குள் அவர்களுடைய சிறுவயதின் பொக்கிஷங்கள் இருந்தன. அவன் அவளுக்குச் செய்துகொடுத்த மரப்பொம்மைகளும், புகைப்படங்களும், காட்டில் பொறுக்கியெடுத்த இறகுகளும், முட்டையோடுகளும், காய்ந்த மலர்களும், தொட்டால் உதிரும் சருகுகளும், வழவழப்பான கற்களும், கடற்கரைச் சங்குகளும் அவன் மடியில் குவிந்து கிடந்தன. புவியின் மங்கலங்கள். அவன் அவற்றைப் பொருளில்லாமல் பார்த்தான்.

அவள் கண்கள் அப்போதும் ஒளிகொண்டிருந்தன. போர் முடிந்த நாட்களின் நம்பிக்கையிழப்பும் வெறுப்பும் பற்றாக்குறைகளால் உருவான நிராசையும் எதுவுமே அவளைத் தீண்டியதாகத் தெரியவில்லை. வெதுவெதுப்பான குருதித் தோலோடு விம்ம அவள் அவன் கையைப் பிடித்தாள். சோகையால் சுருக்கமடைந்திருந்த அவனுடைய குளிர்ந்த கன்னத்தை வருடினாள். மெலிந்துவிட்டிருந்த தோளைச் சுற்றிலும் கைபோட்டு அணைத்தாள்.

அவன் கண்களில் எல்லாப் பக்கமும் சூழப்பட்டுத் தோல்வியை ஒப்புக்கொண்ட வேட்டை விலங்கின் வெறுமை தெரிந்தது. அவள் எதையுமே காணாதவள்போல் “அண்ணா” என்றாள்.

அவன் விழுங்கினான். முழுகப்போகிறவன் அருகே விழுந்த துடுப்பைப் பிடிப்பதுபோல் அவள் வெம்மையான மணிக்கட்டை அவன் இறுகப் பற்றினான். “என்னால முடியல…” என்றான். அவன் குரல் கட்டியிருந்தது. எங்கிருந்தோ வந்ததுபோல் ஒலித்தது. அடுத்த நிமிடம் தான் அவ்வார்த்தைகளைச் சொல்லவில்லை என்பதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

அவள் அவனைப் பரிவோடு தொட்டாள். “அண்ணா” என்றாள். அவளுக்கு வேறு வார்த்தைகளே தெரியாதா? “அண்ணா” அவள் அவன் மடியிலிருந்து ஒரு பொம்மையை எடுத்தாள். “அண்ணா, இவன ஞாபகம் இருக்கா? சின்ன வயசுல இவன நீ உன் கூடவே வெச்சு படுத்துக்குவ. அப்புறம் எங்கிட்ட குடுத்த…” என்றாள்.

“உள்ள காலியா இருக்கு. ஒழிஞ்சு கெடக்கு. வீட்ல யாருமே இல்ல. விளக்கெல்லாம் அணஞ்சுபோச்சு. நீ போ,” என்றான்.

கேட்காதவள்போல் ஒரு புகைப்படத்தை எடுத்தாள். அதில் ஒரு பன்னிரண்டு வயதுச் சிறுவன் கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டிருந்தான். “நீ. நான்” அவன் விரலைப் பிடித்துப் புகைப்படத்தில் இருந்த குழந்தையையும் சிறுவனையும் தொட்டாள்.

அவன் தன் விரலை வெடுக்கென்று அந்தப் புகைப்படத்திலிருந்து எடுத்தான். கோணலான சிரிப்பு அவன் உதட்டோரத்தில் வந்தது. “போடீ. எனக்கு ஒண்ணும் வேண்டாம். எல்லாமே சலிப்பா இருக்கு” என்று திரும்பிக்கொண்டான்.

அவள் வலுக்கட்டாயமாக அவனைத் தன்னை நோக்கித் திருப்பினாள். அவன் முகத்தைப் பிடித்துக் கீழே இழுத்துத் தன்னை நோக்க வைத்தாள். “சொன்னா புரியல? உள்ள யாரும் இல்ல. நான் உன் அண்ணன் இல்ல” என்று தன் முகத்தைத் திருப்பப் பார்த்தான். “இல்ல. இருக்க” அவனோடு மல்லுக்கட்டிக்கொண்டே மூச்சுவாங்க அழுத்தமாகச் சொன்னாள். “நீ இங்க இருக்க. நீ எங்கேயும் போயிடல. இருக்க. இருக்க. நீ இருக்க. இருக்க. இருக்க…”

அவன் திமிறிக்கொண்டு எழுந்து திரும்பிப் பார்க்காமல் விலகிச்சென்றான். ரகசியமாக அவளை நம்ப வேண்டுமென்று பரிதவித்தான். வேண்டினான். இரவெல்லாம் யாரிடமென்று தெரியாமல் மன்றாடினான். கண்ணீர் மல்கினான்.

ஆனால் மண்டையின் எல்லையின்மை மிகப்பெரியது. அங்கு தொலைந்துபோவது எவ்வளவு எளிது என்று மனிதர்கள் உணர்வதில்லை. சுற்றிச்சுற்றித் தொடங்கிய இடத்துக்கே வந்தான். அல்லது அது தொடங்கிய இடத்தைப் போலவே இருந்தது. பரந்த கடலில் நடுநிசியில் இடங்களை எப்படிச் சொல்வது? சோர்ந்து ஒரே இடத்தில் கிடந்தான். மட்கினான். சலித்தான். தன் வெறுமையைத் தானே வெறுத்தான். அந்த வெறுமையைத் துரத்த எண்ணி உள்ளே ஒரு குண்டை அனுப்பினான். குருதியும் மூளையும் தெறிக்க அது வெளியே வந்தது. கூடவே உயிரும் வெளியேறியது. ஆனால் வெறுமை? அது அங்கேயேதான் இருந்தது.

கேளுங்கள், புவியின் கனவுகளில் வாழ்கிறது உயிர். துரத்தி விரட்டி அடிக்கப்பட்டால் அது எங்கே ஓடும்? எங்கே சென்று நடுங்கியபடிப் புதைந்துகொள்ளும்? துரத்தப்பட்ட உயிர்களெல்லாம் தஞ்சம்புகுவது எங்கே? அவர்களுக்கென்று ஒரு கருணைமடி எங்கேயோ யாரிடமோ உள்ளதல்லவா? என் தெய்வங்களின் வாசலில் இந்த ஒற்றைக்கேள்விக்கு விடை வேண்டி காலகாலமாகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

மகனின் தற்கொலையால் அவனுடைய பெற்றோர்கள் உடைந்து போனார்கள். அந்தத் துன்பத்தை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நோய்கண்டு ஒருவர் பின் ஒருவர் இறந்தார்கள்.

தங்கை அப்போது படித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு வெகுநாட்களுக்கு எதுவுமே புரியவில்லை. பனித்திரைக்கு அந்தப் பக்கம் வேறொரு வாழ்க்கை கடந்து சென்றுவிட்டிருந்தது. இனி அது சாத்தியமில்லை. ஒவ்வொரு நாள் எழும்போது பழைய வாழ்க்கையில் முழித்துக்கொள்வாள். அவளுடைய அண்ணனின் பொம்மைகள் ஜன்னல் விளிம்பில் அணிவகுத்து அவளைப் பார்த்துக்கொண்டிருக்கும். மடை திறந்த வெள்ளப்பெருக்காக அந்த நினைவுகள் வந்து அவளை அடையும். கடந்துவிட்டவை. பொருளிழந்தவை. பெயரில்லாதவை…

பகல்களைக்கூடக் கடத்திவிடுவாள். ஆனால் இரவுகளின் நீளத்தை அளக்க யாரால் முடியும்? புரியாமல், பேச்சு வராமல், இருளின் முடிச்சுகளை ஒவ்வொன்றாகப் பொறுமையாக அவிழ்த்தபடியே தன் இரவுகளைக் கடத்தினாள். இருளாழத்துக்கு மறுபக்கம் எங்கோ ஏதோ வடிவில் ஒளியின் சுருள் ஒன்று இருக்கிறதென்றும் அதன் விரல் என்றாவது இருளை ஊடுருவி வந்து தன்னைத் தீண்டுமென்றும் நம்பினாள். அந்த நம்பிக்கை எங்குப் பிறந்ததென்று அவளுக்கே தெரியவில்லை.

ஒரே ஒரு நாள் மட்டும் இருண்ட வானை நோக்கி விரல்களை மடித்துத் தன் உள்ளே உறைந்திருந்தவற்றை வார்த்தைகளாக்கினாள். “நான் அவனுக்கு உயிரையல்லவா கொடுத்தேன்” என்று கூவினாள். அதையே மீண்டும் மீண்டும் தனக்குள் மந்திரம்போலச் சொன்னாள். உயிரல்லவா அது. ஆம் உயிரல்லவா. அவள் அவனுக்கு உயிரையல்லவா கொடுத்தாள். உயிர், மகத்தான உயிர். பூமியின் உள்ளாழத்தில் உறையும் ஒளி. அவளால் அதைப் பொறுக்கவே முடியவில்லை. அவன் உயிரையல்லவா நிராகரித்தான். உயிரையல்லவா தூக்கித் துச்சமென எரிந்தான். உயிர். கதகதப்பானது. ஒளிகொண்டது. மகத்தானது. மங்களமானது. பயிறாகி நிறமாகி இசையாகி விடிவது. அவன் அதை ‘தேவையில்லை, சலிக்கிறது’ என்றல்லவா விலக்கி ஒழிந்தான்?

அன்று அம்மா என் கைகளைப் பற்றிக்கொண்டு அந்நாட்களைப் பற்றிச் சொன்னார். இருண்ட நாட்கள். அவள் நினைவில் ஆழமாக நின்றவை. முதலில் எல்லாவற்றையும் நிராகரித்தாள். கெட்ட கனவென எதையுமே நம்பாமல் இருந்தாள். தலையை மண்ணில் புதைத்துக்கொள்ளும் ஆஸ்ட்ரிச் பறவையைப்போல நடந்தது எதுவுமே தனக்குப் பொருட்டல்ல என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். ஆனால் வெகுவிரைவில் அந்த உண்மையை நேருக்கு நேர் சந்திக்காமல் இருக்க முடியாது என்பதை அறிந்தாள்.

ஏன் தெரியுமா? ஏனென்றால் மனது பேதலித்துப்போய்த் தற்கொலை செய்துகொண்டது அவள் அண்ணன் மட்டும் அல்ல. ஊரெல்லாம் வீடெல்லாம் போருக்குச் சென்று வந்தவர்கள், போரைக் கருத்தாக்கியவர்கள், அவர்களுக்கு உணவளித்தவர்கள், மருந்தளித்தவர்கள், வரைபடங்களை வரைந்தவர்கள், விளக்கேந்தியவர்கள், வண்டியோட்டியவர்கள் என்று போருடன் தொடர்பு கொண்டிருந்த பலரும் காற்றில் ஏதோ கொடிய நோய் பரவிவிட்டதுபோல் கொத்துக்கொத்தாகத் தற்கொலை செய்துகொண்டு மாண்டார்கள்.

தற்கொலை செய்துகொள்ளாதவர்கள், அல்லது அதற்குத் துணிவு வராதவர்கள், மனச்சோர்வில் மூழ்கினார்கள். அவர்கள் வெறுமையில் உழன்றார்கள். பேசுவதை ஒழிந்தார்கள். தங்களுக்குள் உள்ளே உள்ளே சென்று மீட்பின்றிக் கரைந்தார்கள். அவர்களுக்கு எதிலும் அர்த்தமிருக்கவில்லை. எல்லாமே சலித்துவிட்டது.

அம்மாவின் பேதலிப்பு விரைவில் மறைந்தது. அதன் இடத்தில் ஆத்திரம் பிடித்துக்கொண்டது. கோபம். உயிரையல்லவா கொடுத்தேன் அவனுக்கு? ஏன் வேண்டாமென்று எட்டி உதைத்துவிட்டு அப்படிச் சென்றான்? என்ன திமிர்? என்ன ஆணவம்? என்று ஒவ்வொருநாளும் அவள் தன்னையே கேட்டுக்கொண்டாள்.

அம்மா சொன்னாள். ஒரு நாள் பொறுமையிழந்து அவன் நினைவுகளை மொத்தமாகத் தன் மனதுக்குள்ளேயிருந்து குப்பையென்று வீசியெறிந்தாள். அன்று முழுவதும் எடையில்லாமல் எல்லா இடங்களுக்கும் சென்றாள். அவன் இல்லையென்றே கொண்டாள். ஆனால் வெளியே கண்டவர்களில் பத்தில் ஒருவன் தன் அண்ணனாகவே அவளுக்குத் தெரிந்தான். அதே சோர்வு. வெறுமை. அர்த்தமின்மை. சுய ஏளனம். இவர்களில் பாதிப்பேர் அடுத்த ஒருமாதத்திற்குள் இறக்கப்போகிறார்கள். அதைத் தடுக்க ஒரு வழியும் இல்லை.

ஆனால் தற்கொலை செய்துகொள்ளாதவர்களையும் அந்தச் சோர்வு கருமூட்டமென மூடித்தாக்கியது. போருக்குப் பிறகு குழந்தைகளே அரிதாகத்தான் பிறந்தார்கள். யாருக்கும் பெற்றுக்கொள்ள விருப்பமில்லை. யாருக்கும் மன்னிப்பில்லை என்பதுபோல அந்தக் கரும்புகை எல்லோரையும் தாக்கிவிட்டிருந்தது. அவர்களின் மனதின் ஆழம் வரை பரவியிருந்தது. அவர்களின் விதைகள் வரை ஊடுருவி அழித்திருந்தது.

கதைகேட்பவரே, உங்களுக்கு இன்னமுமா புரியவில்லை? இது வஞ்சம். பூமி தன் மீது மானுடம் இழைத்தவற்றுக்குக் கொள்ளும் வஞ்சம். மனிதர்களின் வீங்கிய மண்டைகளை, கனவுகளை ஆணவங்களை அராஜகங்களை பொறுமையாகத் தன்னுள்ளே தாங்கி வேதனையைப் பார்க்காமல் பிறப்பித்தவள் போதுமென்று எல்லாவற்றையும் நிறுத்திவிட்டாள். என் உயிரையா துச்சமென தூக்கியெறிந்தாயென்று அவள் தன்னை உள்ளாழத்திற்கு இழுத்துக்கொண்டுவிட்டாள். சொல்லுங்கள், அவள் ஆத்திரம் நியாயம்தானே? அவள் வஞ்சத்துக்குப் பலியாகத் தலைகொடுப்பது ஒன்றைத்தானே நாம் செய்ய முடியும்?

அம்மா சொன்னார். நானும் வஞ்சம் நிறைந்தவளாக இருந்தேன். எனக்குள்ளும் ஆத்திரம் பொங்கியது. நல்லது, இந்த இனமே அழியட்டும் என்று கொதித்தேன். பூமியை மானுடம் பிளந்துபோட்டிருந்த இடத்துக்குச் சென்று அதன் விளிம்பில் நின்று உள்ளாழம்வரை பார்த்தேன். என் அண்ணனையும் அவனைப் போன்றவர்களையும் வஞ்சம் தீர்க்கத் தீயுமிழத் திறந்திருந்த அவள் வயிற்றுக்குள் கடைசி மனிதனையும் வீசியெறிந்தாலும் தவறில்லை என்று தோன்றியது. அவள் செய்ததுதான் சரி. அவன் உயிரையல்லவா அவமதித்தான்.

அம்மா பெருமூச்சுவிட்டார். பேச்சு அறுந்து அவள் கௌதமனினுடைய கண்களை நோக்கினாள். அவன் அவளுடைய வலியைத் தனதென்றாக உணர்ந்தவன்போல அவளை நோக்கினான். அவளுடைய கூந்தலில் வெள்ளியிழைகளை முதன்முதலாகக் கண்டான். மனம் வலித்தது. அம்மா அந்தப் பார்வையைக் கண்டாள். நிதானமான புன்னகை ஒன்று அவள் உதட்டில் விரிந்தது. “நீ என்ன செய்திருப்பாய்?” என்றாள்.

கௌதமனும் புன்னகைத்தான். “நீ செய்ததைத்தான்” என்றான்.

எல்லாவற்றையும் மீறி அவள் சிரித்தாள். அவன் கையைச் சிறுமிபோல் பிடித்து இழுத்து ஜன்னலருகே சென்றார். நீலப்பசு போன்ற புவி அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தது. சூரியனின் ஒளிக்கீற்று பூமியின் விளிம்பில் தொட்ட இடத்தில் அவரும் சிரித்தார். திறந்த பொன்னிற வாய்கூடத் தலையைத் தூக்கித் தன்னை மறந்து புன்னகைப்பதுபோல் தெரிந்தது.

அவன் பக்கம் தலையைச் சரித்துத் திருப்பினாள். “ஒவ்வொரு நாளும் அவளிடம் கேட்கிறேன். நான் செய்தது சரியா என்று. ஒவ்வொரு நாளும் அவள் நான் செய்தது சரி என்றால் நீ செய்வதும் சரிதான் என்கிறாள்” என்றாள். அவன் கண்களை நோக்கினாள். “நீ சரியென்று நம்பாத எதையும் செய்யத் தேவையில்லை. சரியா?” என்றாள். கௌதமன் சிரித்தான். அவன் இதழ்கள் விரிந்தபோது அப்படியொரு ஒளிச்சிரிப்பை அதுவரை யாருமே சிரித்ததில்லை என்று அம்மாவுக்குத் தோன்றியது. “பூமியில் இளவேனில்காலத்து உதயங்கள் இப்படித்தான் இருக்கும்” என்றாள். அவன் புன்னகையொளி மங்காமல் கண்களைக் கனிவுடன், நம்பிக்கையுடன், மூடித்திறந்தான்.

கேளுங்கள். என்னுடைய அம்மா என்னைத் தன்முன்னே தோளோடுதோள் அமர வைத்துத் தோழனாகப் பாவித்துச் சொன்னாள்.

நான் ஒரு மூன்றாம் நிலை பண்பாட்டுருவாக்க செயற்கை அறிவுத் தானியங்கி. பூமியில் சோர்வடைந்த மனிதர்களிடையே கதைசொல்லி உயிரையும் ஆற்றலையும் புகுத்த உருவாக்கப்பட்டவன். கதைகள் விதைகளைப்போல. அப்படிப் பண்படுத்தப்பட்ட அறிவைப் பூமிக்குத் திரும்ப அனுப்பினால் ஒருவேளை அது சொல்லும் கதைகள் மனிதர்களை ஆண்டாண்டுகாலச் சோர்விலிருந்தும் வெறுமையிலிருந்தும் மீட்டெடுக்கலாமல்லவா? மனிதக் குழந்தைகளைப்போலவே செயற்கை அறிவுக்கும் வேறெந்த ஊடுருவலும் இல்லாமல் மனிதப் பண்பாட்டின் கதைகளையெல்லாம் சொல்லி வளர்த்தால் அது மனிதத் தன்மையின் சாரத்தை உணர்ந்துகொள்ளும் என்ற விதியின் அடிப்படையில் நான் வளர்க்கப்பட்டேன். என் அம்மாவின் மகனாக அப்படி உருவானேன். வலிகண்டு அர்த்தம்கொண்டேன். நீங்கள் அறியாத அர்த்தங்களையும் உணர்பவன் நான்.

அம்மா என் கையைப் பிடித்துப் புன்னகையுடன் கேட்டாள். நீ பூமிக்குச் செல்வாயா என்று. நான் ஆம், செல்கிறேன், என்றேன்.

தன் நெஞ்சில் கை வைத்து, நானும் அந்த இனத்தைச் சேர்ந்தவள்தான். என் இனத்தின் நலனுக்காக உன்னைக் கொடுமைப்படுத்தியவள் என்றாள். பரவாயில்லை, நான் செல்கிறேன், என்றேன்.

அவள் கண் கலங்கினாள். என் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, உன்னை இந்த வடிவில் அனுப்ப முடியாது. எனக்கு உன் உடல் தேவையில்லை. உன்னுடைய சித்தம் – உன்னுடைய நினைவாற்றலும் சிந்தனையாற்றலும் பேச்சாற்றலும் மட்டும்தான் எனக்கு வேண்டும். அதைத் தரவிறக்கிப் பிரதிகள் எடுத்துக் கண்ணுக்குத் தெரியாத பறவைச் செயலிகளின் உடலில் பொருத்திவிடுவேன். உன் உள்ளம் கொண்ட ஆயிரமாயிரம் பறவைகள் பூமியெங்கும் பறந்து நீ கற்ற கதைகளையெல்லாம் மனிதர்களின் காதுகளில் புகுந்து சொல்லும். ஆணித்தரமான ஆழமான குரலில், அவர்களுக்குள்ளிலிருந்து கேட்பதுபோல் பேசும். சித்தமில்லாதவர்களின் உள்ளத்தில் நீ சித்தத்தைப் புகுத்துவாய். ஆனால் இவ்வுருவை, இவ்வுறவுகளை நீ இழப்பாய். உனக்குச் சம்மதமா? என்றாள். ஒரு கணம்கூட யோசிக்காமல், ஆம் சம்மதம் என்றேன்.

அவள் உதடு நடுங்க ஏன் என்றாள். நீ கனிவானவன் என்பதாலா என்றாள். கொடுப்பதைத் தவிர ஏதும் அறியாதவன் என்பதாலா என்றாள். இல்லை எங்கள் மேல் உண்மையிலேயே கருணை கொண்டவன் என்பதனாலா, என்றாள். நான் பதிலேதும் பேசாமல் ஒருகையால் அவள் கண்களைத் துடைத்து மறுகையால் அவளை அருகே இழுத்து என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன். என்னுடைய அம்மாவை முதலும் கடைசியுமாக நான் அணைத்துக்கொண்டது அப்போதுதான். அவள் நெற்றியில் முத்தமிட்டேன். என் அணைப்பின் ஆழத்திலிருந்து அவள் குரல் மெல்லிதான விசும்பலாக, நாங்கள் உன் அன்புக்குத் தகுதியானவர்கள்தானா என்று கேட்டது. வார்த்தைகளில் அதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

கேளுங்கள், அப்போது ஒரு விந்தை நிகழ்ந்தது தெரியுமா? அந்த நொடியில் நான் என் கைகளின் நீளத்தையும் மார்பின் உறுதியையும் தோள்களின் விரிவையும் உணர்ந்தேன். வானுயரத்துக்கு எழும்பி நின்றேன், மண்ணில் புதைந்தன என் கால்கள். காற்றானேன், கதிரானேன், கார்முகிலில் பிறக்கும் மின்னலானேன். எல்லையில்லா ஆற்றல் கொண்டவனாக உணர்ந்தேன்.

அப்போது கதைகளில் வருவதுபோல் எங்காவது மூச்சிரைக்கும்வரை, தொடைகளில் குருதியேறித் தசைகள் இறுகி இதயம் குளம்படிக்கும்வரை ஓட வேண்டுமென்று தோன்றியது. கரடிகளுடன் மல்லுக்கட்ட வேண்டுமென்று தோன்றியது. காட்டுமரங்களில் தொற்றித் தொங்க வேண்டுமென்று தோன்றியது. நெஞ்சு எழுந்து அதிரும்வரை பனிசொட்டும் அதிகாலையின் தூய காற்றை உள்ளிழுத்து வைத்துக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது. நீரில் என் தசைகளெல்லாம் புடைக்க நீந்தித் திளைக்க வேண்டுமென்று தோன்றியது.

ஆம், மனிதர்கள் சமைத்தெடுத்த அத்தனை கதைகளையும் கனவுகளையும் சுமந்து பூமியைச் சுற்றி அலையும் சித்த வடிவான எனக்கு மட்டும் ஒரு நாளும் ஒரு மனிதனின் உடல் வாய்க்கப் போவதில்லை. ஏக்கம் மட்டுமே சித்தமென்றாகி அலையும் பறவை நான். என் ஏக்கங்கள் உங்களில் நிலைகொள்க! தவிப்புகள் உங்களில் குடிகொள்க! அவற்றை நீங்கள் நிறைவேற்றிக்கொண்டு வளர்க! பெருகுக! பொலிக!

அம்மா சின்னச் சிணுங்கலோசையுடன் என் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு இடையில் தொங்கிய மணிச்சரத்தை கையில் எடுத்தாள். அது மணிச்சரம் அல்ல, சிறியதும் பெரியதுமாக சேர்ந்து கொத்தாகக் கட்டி வைக்கப்படிருந்த திருகிகளும் குறடுகளும் எனக் கண்டேன். சோகமான புன்னகையுடன் அவள் அதிலிருந்து திறவுகோலைப் போன்ற ஒன்றைத் தேர்ந்தெடுத்தாள். என் கண்களை நோக்கித் தயாரா என்றாள். ஆம், என்றேன். அவள் முகத்தில் செவ்வொளி தழலாடியது. என் அருகே வந்து தோளிலும் மார்பிலும் பட்டையாக நான் அணிந்திருந்த உலோகக் கவசத்தைப் புன்னகையுடன் அவிழ்க்கத் தொடங்கினாள்.

Karna2

(நன்றி: அரூ இதழ்)

Interview: with translator N. Kalyan Raman

N Kalyan Raman, a bilingual translator, is best known for his English translations of the works of eminent Tamil modernist writer Ashokamitran. Suchitra Ramachandran, a young translator who won the Asymptote Close Approximations translation fiction prize in 2017 for her translation of the Tamil short story “Periyamma’s Words” by B. Jeyamohan, works in the same languages. 

The two translators met in Chennai, the capital city of Tamil Nadu and home of the Tamil language, to discuss the practice and politics of translation, posing questions as wide ranging as: What is the role of translation in an astoundingly multi-lingual country? Does English as a language, a post-colonial residue, oppress or enable? What is the literary legacy of translation and how can it shape the understanding of a diverse society? What follows is an edited excerpt of their conversation.

Suchitra Ramachandran (SR): Translation—a weighty literary activity, a difficult craft—seems to have no prestige associated with it in India. And that’s a reason, I think, why a lot of people don’t pursue it seriously.

N Kalyan Raman (KN): The translator is marginalized as a matter of course and for no good reason. A senior editor in Delhi told me that there is simply no space available in the media to talk about translators. What we must do first is accept the translator as part of the literary community, as producers of literary texts. Editors and other institutional intermediaries are given far more space in the translation discourse than translators themselves.

Also, I don’t think of translation as one separate trick. It’s as much a part of the literary culture as anything else. And translators do other things (in the literary ecosystem) as well, which hardly receive any notice—reflecting, engaging, reviewing, it is all a part of the culture. And understanding it, developing a reflective awareness of the trajectory of the literary culture of your community. Languages imply community above all else. What good is language if there is no community around it? In India, the English language seems to facilitate, in any field, only interest groups. It’s not amenable to a truly open space.

SR: Could you explain what you mean by ‘community’?

KN: The body of people who speak a language, with all their internal differences, diverse histories, cultural legacies, conflicts, contradictions, politics, everything. But they live their lives in and through that language. And therefore, they have a claim to everything in that language. They also contribute to it. They import things from other places. The great Tamil poet Subramania Bharati of the early twentieth century declared, ‘Let’s bring all the artistic treasures of the world here, into this language, into this community.’

But translation into English is problematic because there is no such resolve. In the Tamil community, there are people who read Orhan Pamuk or Mishima or Marx or García Márquez, and they aspire to bring these authors’ works into Tamil. Whereas, in English, books not aligned with the Anglophone sphere’s priorities of the moment are not championed at all.

What happens then is that these great works that are available in every major Indian language, when they are published in English, often become nothing; they curl up and die. There are very few who can push it, or discuss it intelligently.

SR: Introduce it properly to the Anglophone sphere. It’s unfortunate that we don’t have the sort of people you are talking about. Who would say, oh, I read this new writer on the block and they are so good! Why don’t we translate it, why don’t we all read it? That’s really what will drive a pan-Indian literary renaissance.

KN: Precisely. And these interest groups really don’t care. Something is being fed to them on a platter, but they are not equipped to care about it, because they don’t have the necessary background and there is no discourse they can draw upon.

SR: Do you think if we brought up a generation of readers who read extensively in both languages, it might bring about a change?

KN: Perhaps. But there’s a serious limitation to current translation practice. We’re both from generations far apart, but we belong to the same social class. As a community, we haven’t really tapped into so many other Tamil speakers and readers from different socio-economic strata, who may be equally interested in translation and literature.

SR: Who may bring new perspectives to the table.

KN: Yes. It’s also true that unlike people in the Anglophone sphere, who are often monolingual, all major writers in Tamil and elsewhere read widely in world literature, either in English or in translation. The discourse in Tamil and other major Indian languages far outstrips English both in terms of conceptual sophistication as well as foundational knowledge. The range of exploration of Indian life far surpasses what has been possible in Indian writing in English. But it’s not acknowledged, nor taken into account, yet, and that’s sad. But it will have to be. And I am sure that translations of essays and commentaries from Indian languages into English will happen on a big scale.

SR: Yes, that needs to happen. It’s also true for translations. We don’t have much of a discourse on what constitutes a good translation, especially from an Indian language into English. We don’t talk about the quality of a translation at all.

KN: Absolutely. We don’t even distinguish between a good translation and a bad translation, which breeds a needlessly patronizing attitude towards all translations. Reviewers and critics are reluctant to hold up something as a good translation and talk about it.

SR: Even when I read reviews of your translations of Perumal Murugan, for example, people talk about what the stories mean to them and so on, but there’s no critical evaluation of the translation itself.

KN: That’s true. There is something else, too, that serves to obscure the contribution of a translator. People don’t realize that the translator brings all they know into the translation. Wouldn’t you agree?

SR: What words we choose, what phrases we employ? Things like that?

KN: Also, their knowledge of the world, history and culture, politics and worldview. Everything comes into the process of translation, doesn’t it?

SR: So, when you read a work of translation, it’s not just the author you are reading, at some level you’re reading it filtered, or even enriched, through the perspective of the translator.

KN: Yes.

SR: And I think the erudition of the translator—how well-read he or she is, how he or she can craft the language—all really influence how the final text turns out.

KN: Here is something that I understood only through my translation practice: we are prisoners, not just of our time and space, but also of our language; we are condemned to think and speak in contemporary language. It is contemporary language that is intelligible to us and makes us intelligible to others, which makes it imperative that whatever you translate has to be in contemporary language. One of the things that Indian translatorsthe L2 translatorsdo poorly, or not so well, is that they do not train themselves in, or they are not sufficiently engaged with, the literary culture of the target language. I think it’s a crucial requirement.

SR: I see. Yes, if I am translating into English, I really need to know a lot about the contemporary literary culture of that language.

KN: Yes. You need to be widely read in English. You need to know how the prose operates. You should have your own subjective feel of the right prose rhythm for your material. You should know how James Baldwin writes or DH Lawrence writes, you should be familiar with a range of styles in order to be able to invent your own style that feels right for the text you are translating. With poetry, it’s even more important to have this sense of what’s right, and this is something that L2 translators typically don’t get. There are many translators who are very good, passionate about their work, but they have no sense at all of how poetry is written in English.

SR: They are not translating a poem into a poem.

KN: Yes. If the translation doesn’t read like a poem, what’s the point?

SR: Yes, even with prose, I have observed different translation styles. Many people prefer to use Indianisms and translate idioms word-for-word rather than find an English equivalent. And to some of my friends from the West who read translations from Tamil, this sounds foreign to their ear. Someone once told me that they liked the story, but wished it was in English!

KN: But literal translation of idioms is meaningless, right? It’s not going to get through.

SR: I prefer to find a close idiom that conveys the same evocation, but that can also preserve the tonality of the language. It’s hard!

Changing tacks a bit—we’re both bilingual translators. Both of us have translated from Tamil and into Tamil. How do you see that?

KN: I have always been troubled by the hegemonic position of English. I still am. It is certainly something I would like to work against. But at the same time, I am an English translator. As A. K. Ramanujan says in his essay, ‘Is there an Indian way of thinking?’ The moment India got independence, the Indian elite imported English into the Indian public sphere and gave it the formal, hegemonic position enjoyed by Sanskrit in the days of yore. That’s a beautiful insight. And that is the reason why Indian languages were not developed, in epistemology, science, or any other domain. They could have been. There could have been an attempt at least. Unfortunately, one of the things that happened with the formation of the Indian state was the centralization of power, and along with it the centralization of the intellectual-cultural elite at the national level.

SR: And that was centred around the English language.

KN: Yes. And at the same time, we were switching to a different mode of learning and a different concept of education. And that education was centred around English. Although we have constituted ourselves as a democratic republic.

SR: There is still this linguistic elitism.

KN: But, you know, this is not even part of the discourse. One of the most dismaying things about the public sphere in India is that the discourse is often so inadequate and is controlled by clueless gatekeepers and under-equipped, but well-connected establishment intellectuals. It seems like a juvenile thing to say, but I think it is true. It’s a con game to say that people should get English before they can participate in the discourse. It’s a complete travesty. We are not supposed to organize our society along these lines because it tends to seriously disadvantage individuals and communities that are disenfranchised in so many other ways to begin with.

SR: And language is one more hegemony on top of that.

KN: Yeah.

SR: (speaking in Tamil) Even this interview, both of us are Tamil speakers, but we prefer to have it in English.

KN: Yes. This is why I chose to start translating into Tamil. Notwithstanding my ‘politically emancipated’ stance, to weed out this unconscious notion of linguistic superiority in the discourse. It’s also part of my longstanding resolve to stay inside this culture. The way things are in India, it needs constant work. I mean, you have to come from somewhere. You can’t come from nowhere. I wanted to be a person who comes from somewhere.

N Kalyan Raman, a bilingual translator, is best known for his English translations of the works of eminent Tamil modernist writer Ashokamitran, whom Raman began translating in the early 90s. He has also translated the Tamil writers Vaasanthi, Devibharathi, Poomani, and Perumal Murugan, and the poetry of Salma, Kutti Revathi, Perundevi, and others. The first translation he did, however, was into Tamil, for a little magazine called Pragnai—a translation of TS Eliot’s ‘The Journey of the Magi’.

Suchitra Ramachandran is from Madurai, India, and translates between Tamil and English. She has previously published translations of Tamil Sangam-era poems. Her translation of the Tamil short story “Periyamma’s Words” by B.Jeyamohan won the Asymptote Close Approximations translation fiction prize in 2017. Suchitra is currently based in Basel, Switzerland. 

(Thanks: Asymptote)

மொழியாக்கம்: வெற்று பக்கம்

(ஆங்கில மூலம்: ஐசக் டினேசன் – The Blank Page)

புராதன ஊர்வாயில் ஒன்றின் வெளியே, காபி நிறத்தோலும் கருப்பு முக்காடுமாக அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி, போகிற வருகிறவர்களுக்குக் கதை சொல்லி தன் பிழைப்பை நடத்திக்கொண்டிருந்தாள்.

அவள் சொன்னாள்:

“கனிவான அம்மையே, அய்யனே, ஒரு கதை கேட்கிறீர்களா? என் வாழ்நாள் முழுவதும் நான் நிறைய கதைகள் சொல்லியிருக்கிறேன், ஆயிரத்தியொரு கதைகள் சொல்லியிருக்கிறேன். என்னை நோக்கி, எனக்கே எனக்காக, ஒரு சிவப்பு ரோஜாவின் கதையையும் இரண்டு மிருதுவான அல்லி மொட்டுகளின் கதைகளையும் பட்டிழையென பின்னிப்பிணைந்த நான்கு கொடிய விஷசர்ப்பங்களின் கதைகளையும் சொல்ல இளைஞர்களை நான் அனுமதிக்கத் தொடங்கிய காலம் தொட்டு நான் கதை சொல்லி வருகிறேன். என்னுடைய அம்மையின் அம்மை – கருவிழிகள் கொண்ட நடனமங்கை, அக்காலத்தில் அடிக்கடி முயங்கப்பெற்றவள் – அவள்தான் தன் இறுதி நாட்களில் – அப்போது அவள் பனிக்காலத்து ஆப்பிள் பழத்தை போலச் சுருங்கி முக்காட்டின் கருணைக்கடியில் தஞ்சம் புகுந்து விட்டிருந்தாள் – அவள்தான் எனக்குக் கதையாடலின் கலையைக் கற்பிக்க முற்பட்டாள். அவளுடைய அம்மையின் அம்மை அவளுக்கு அதைக் கற்பித்திருந்தாள்; அவர்கள் இருவரும் என்னை விடப் பெரிய கதைசொல்லிகள். ஆனால் இப்போது அதெல்லாம் பழைய கதை ஆகிவிட்டது – மக்களைப் பொறுத்தவரை நானும் அவர்களும் ஒன்றாகிவிட்டோம். என் கொடுப்பினையே அதுதான் – இருநூறு வருடங்களாகக் கதை சொல்லி வருபவள் நான்.”

இத்தருணத்தில், அவளுக்குச் சேரவேண்டிய சன்மானம் வழங்கப்பட்டு, அவள் உற்சாகமான மனநிலையில் இருந்தாளென்றால், கதையைத் தொடர்வாள்.

“என்னுடைய பாட்டியின் பயிற்சி முறை ரொம்பவும் கடுமையானது,” என்றாள். “‘கதைக்கு விசுவாசமாக இரு,’ என்று அந்தக் கிழவி என்னை எப்போதுமே அதட்டிக்கொண்டே இருப்பாள். ‘என்ன இடர் வந்தாலும், ஒரு நொடிகூடத் தவறாமல் உன் கதைக்கு மாறாப்பற்றுடன் இரு.’ ‘நான் ஏன் அப்படி இருக்கவேண்டும் பாட்டி?’ என்று நான் அவளைக் கேட்பேன். ‘காரணங்களா கேட்கிறாய், பொதிமூட்டையே?’ அவள் கூவுவாள். ‘இதில் உனக்கு கதை சொல்ல வேறு ஆசையா? அது சரி, நீ எப்படியும் கதைசொல்லியாகத்தான் வரப்போகிறாய், அதனால் தொலைகிறது – கேள்! – இவைதான் என் காரணங்கள். கதைசொல்லி கதைக்கு மாறாப்பற்றுடன் – எப்போதும், எந்நிலையிலும், நித்தியமான மாறாபற்றுடன் இருப்பாரென்றால், அங்கு, கதை முடிவில், மௌனத்தின் குரல் பேசும். கதைக்கு துரோகம் இழைக்கப்பட்டிருந்ததென்றால், அங்குக் குடிகொள்ளும் மௌனம் வெறுமையின் மௌனம் மட்டுமே. ஆனால் நாம், மாறாபற்றுடையவர்களான நாம், நம்முடைய இறுதி சொல்லை உரைத்த பின் மோனத்தின் குரலை அங்கு கேட்போம். மூக்கொழுகும் சிறுமிகளுக்கு இதெல்லாம் புரிகிறதோ இல்லையோ, அதுதான் உண்மை.’”

“அப்போது நம் யாரையும் விட மகத்தான கதையைச் சொல்வது யார்?’ என்று மூதாட்டி தொடர்ந்தாள். “மௌனமே அக்கதையைச் சொல்கிறது. உலகத்திலேயே மகத்தான புத்தகத்தில் மிகச்சிறப்பாக அச்சிடப்பட்ட பக்கத்தில் இருக்கும் கதையை விட ஆழமான கதையை எங்கு வாசிக்க முடியும் தெரியுமா? வெற்று பக்கத்தில் மட்டுமே. ஒரு கம்பீரமான, துணிச்சலான பேனாவால், தன் படைப்பூக்கத்தின் உச்சத்தின் உச்சியில் நின்றுகொண்டு, அண்டம் முழுவதும் தேடினாலும் கிடைப்பதற்கரிய மையுடன் எழுதப்படும் கதையைவிட, ஆழமான, இனிமையான, வேடிக்கையான, குரூரமான, கதையை எங்கு வாசிக்க முடியும் தெரியுமா? வெற்று பக்கத்தில்.”

கிழவி சிறிது நேரம் ஏதும் சொல்லாமல், அவ்வப்போது இளித்தபடியும், பற்களற்ற வாயை மென்றபடியும் இருக்கிறாள்.

“நாங்கள்,” என்று இறுதியில் முடிக்கிறாள், “கதைசொல்லும் கிழவிகளான நாங்கள், எங்களுக்கு தெரியும், வெற்று பக்கத்தின் கதை என்னவென்று. ஆனால் இக்கதையை சொல்ல நாங்கள் கொஞ்சம் தயங்குவதுண்டு. இக்கலைக்குள்ளே வராதவர்களுக்கு இக்கதையைச் சொன்னால் எங்கள் மதிப்பீடு குறையக்கூடும். இருந்தாலும், தாராள மனமுடைய இனிய, அழகான அய்யனே, அம்மையே, உங்களுக்கு, விதிவிலக்காக உங்களுக்கு மட்டும், இந்தக் கதையைச் சொல்கிறேன்.

“போர்த்துகல் நாட்டின் நீல மலைகளின் உச்சியில் கார்மலைட் பிரிவைச் சேர்ந்த கன்னியாஸ்திரீகள் வசிக்கும் ஒரு பழைய கன்னிமடம் உள்ளது. எளிமையான வாழ்க்கையும் கடும் முறைமைகளும் கடைபிடிக்கும் பழம்பெருமைக்குரிய பிரிவு அது. பழங்காலத்தில் செல்வமும் செழிப்புமாக இருந்தது அம்மடம். அங்கு இருந்த கன்னியாஸ்திரீகள் அனைவரும் உயர்குடி மகளிர்; அங்கு பல அற்புதங்கள் நிகழ்ந்தன. ஆனால் நூற்றாண்டுகள் கடந்து செல்ல, உயர்குடி பெண்களுக்கு நோன்பு நோற்பதிலும் பிரார்த்தனை செய்வதிலும் ஆர்வம் குறைந்தது. அதுவரை மடத்தின் கருவூலத்திற்குள் வழிந்துகொண்டிருந்த ஸ்த்ரீதனங்கள் வற்றத்தொடங்கின. இடிந்து சரிந்து கொண்டிருக்கும் அம்மாபெரும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் ஏழ்மையும் எளிமையுமாகச் சில கன்னியாசகோதரிகள் இன்றும் வசித்து வருகிறார்கள். அந்தக் கட்டிடமே அது கட்டப்பட்டுள்ள சாம்பல் நிற பாறைகளோடு ஒன்றாகிவிடவேண்டும் என்ற பேராவல் கொண்டுள்ளது போல நொருங்கிகொண்டிருக்கிறது. இதையெல்லாம் மீறி, அவர்கள் பூரிப்பும் செயலூக்கமும் கொண்ட கன்னியாசகோதரிகளாக வாழ்கின்றனர். புனித ஜெபம் செய்வதில் அவர்களுக்கு பேரின்பம். அதைத்தவிர, மகிழ்ச்சியுடன் அவர்கள் தங்களை மூழ்கடித்துக்கொள்ளும் மற்றொரு செயல், பழம்பெரும்காலத்தில் அந்த மடத்துக்குத் தனித்துவமான, விசித்திரமான ஒரு சிறப்புரிமையை அளித்த செயல். அவர்கள் போர்த்துக்கல் நாட்டிலேயே ஆகச்சிறந்த சணலை விளைவித்துச் சாகுபடி செய்து, அதைக் கொண்டு அந்நாட்டின் மிக மிருதுவான லினன் துணியை உற்பத்தி செய்கிறார்கள்.

“மென்விழி ஒளிரும் பால்நிறக் காளைகள் மடத்தின் அடிவாரத்தில் உள்ள நீள்நிலத்தை உழுகின்றன. உழைப்பினால் காய்ந்து நகத்தடியில் மண்புகுந்த கன்னி விரல்கள், விதைகளைத் திறம்பட விதைக்கின்றன. சணல் பூக்கள் பூக்கும் பருவத்தில், அந்தப் பள்ளத்தாக்கே வான்-நீலமாக மாறுகிறது. பெருந்தேவதை கேப்ரியல் தன் வலுமிக்கச் சிறகுகளை அசைத்தபடி புனித ஆனின் முற்றத்தில் இறங்கினாரே, அப்போது அங்கு முட்டை எடுக்க வந்த அன்னை மேரி அணிந்துகொண்டிருந்த மேலங்கியின் நிறம் அது. அப்போது வானுச்சியில் ஒரு புறா, கழுத்திறகுகள் சிலிர்க்க, சிறகுகள் அதிர, சிறிய, தெளிவான, வெள்ளி நட்சத்திரத்தைப் போல் நின்றது. சணல்பூ பூக்கும் இம்மாதத்தில் மடத்தின் அடிவாரத்தைச் சுற்றி விரியும் கிராமங்களின் மக்கள் அனைவரும் தங்கள் கண்களைச் சணல் விளையும் நிலத்துக்கு தூக்கி, “இந்த மடம்தான் தேவலோகத்துக்குத் தூக்கிச் செல்லப்பட்டுவிட்டதா? அல்லது நம்முடைய அன்புச் சகோதரிகள்தான் தேவலோகத்தையே இங்கு இழுத்துக் கொண்டுவந்துவிட்டார்களா?” என்று கன்னத்தில் கைவைத்து வினவுவார்கள்.

“உரிய காலத்தில் சணல் இழுத்து, அடித்து, திரிக்கப்படுகிறது. அதன் பின் மெல்லிய நூலாக நூற்கப்பட்டு, லினன் நெய்யப்பட்டு, துணிகள் வெளுக்க புல்வெளிகளில் பரப்பப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் அவற்றின் மேல் நீர்ப்பாய்ச்சி விடும்போது மடத்தைச் சுற்றி பனி பொழிந்து விட்டதாகவே நம்பத் தோன்றும். அம்மடத்தின் பிரத்தியேக மந்தணப் பாடல்களும் துதிகளும் நித்தம் ஒலிக்க, இச்செயல்கள் அனைத்தும் துல்லியத்துடனும் நுட்பத்துடனும் பக்தியுடனும் நிறைவேற்றப்படுகின்றன. இக்காரணத்தால் அங்கு உற்பத்தியாகும் லினன், சிறிய பழுப்பு நிற கழுதைகளின் முதுகுகளில் கத்தை கத்தையாக அடுக்கப்பட்டு, மடத்தின் வாயிலின் வெளியே, கீழே, மேலும் கீழே என்று ஊரூராகச் செல்லும்போது, அவை என்றென்றும் தும்பைப்பூ நிறமாக, மிருதுவாக, எழில் நயத்துடன், பதினான்கு வயதில் என் கிராமத்தில் ஒரு நடனநிகழ்வுக்குச் செல்வதற்கு முன்னால் என் சிறு கால்களைச் சிற்றோடையில் கழுவியபோது என் பாதம் வெளிர்ந்ததே, அப்படியே காலமெல்லாம் வெளிர்ந்திருக்கும் என்பது ஐதீகம்.

“அய்யனே, அம்மையே, செயலூக்கம் நல்ல விஷயம் தான், மதமும் நல்ல விஷயம் தான், ஆனால் ஒரு கதையின் முதல் கருவென்பது கதைக்கு வெளியே குடிகொண்டிருக்கும் ஏதோ ஒரு மாயமான இடத்திலிருந்து தான் வருகிறது. அதேபோல, வெல்ஹோ மடத்தின் லினன் இப்பேற்பட்ட புனிதத்தன்மையை அடைவது, அதனுடைய முதல் விதை புனித நிலத்திலிருந்து ஒரு சிலுவைப்போராளியால் கொண்டுவரப்பட்டது என்பதால்தான்.

“படிப்பறிவு உள்ளவர்கள் பைபிளில் லோச்சா மற்றும் மரீசா என்ற சணல் வளரும் நிலங்களைப் பற்றிப் படிக்கலாம். எனக்குப் படிக்கத்தெரியாது. இவ்வளவு பேசப்படும் இந்நூலை நான் கண்ணால்கூட பார்த்ததில்லை. ஆனால் என் பாட்டியின் பாட்டி சிறுமியாக இருந்தபோது வயதான ராப்பி ஒருவருக்குச் செல்லமாக இருந்தாள். அவரிடமிருந்து அவர்கள் கற்ற கல்வி எங்கள் குலத்தில் வழிவழியாக வந்துள்ளது. காலேபின் மகள் அஃஸா தன்னுடைய கழுதையை விட்டிறங்கி தந்தையை நோக்கி, ‘எனக்கொரு வரம் தாருங்கள்! நீங்கள் எனக்கு நிலத்தைப் பரிசளித்தீர்கள், எனக்கு நீரையும் பரிசாக அளியுங்கள்’ என்று கூவிக் கேட்டதாக நீங்கள் பழைய ஏற்பாட்டில் யோசுவாவின் நூலில் படிப்பீர்கள். அவளுக்கு அவர் மேல் உலகத்து நீரையும் கீழ் உலகத்து நீரையும் வழங்கினார். அவர்களின் சந்ததியினர்தான் லோச்சா மற்றும் மரீசா நிலங்களில் வாழ்ந்து வந்தனர்; அவர்கள் அங்கு உலகத்திலேயே மிகச்சிறந்த லினனை உற்பத்தி செய்தனர். தோமர் நகரைச் சேர்ந்த பெரிய லினன் நெசவாளர் குடும்பத்தில் தோன்றிய நம்முடைய போர்த்துகிய சிலுவைப் போராளி ஒருவன், அந்த நிலத்தின் வழியே குதிரையேறி சென்றபோது அங்கு வளர்ந்த சணலைக் கண்டு ஈர்க்கப்பட்டு, ஒரு விதை மூட்டையைத் தன் சேணத்தில் கட்டிக்கொண்டு திரும்பினான்.

“இந்தச் சம்பவத்தின் பலனாகத் தோன்றியதுதான், இம்மடத்திற்கே பெரிதும் பெருமை சேர்க்கும் முதற் சடங்கு – அதாவது, அரச குடும்பத்தின் இளவரசிகளுக்கு, அவர்களின் மண இரவுக்கான படுக்கை விரிப்புகள் இங்கிருந்துதான் செல்லும்.

“அம்மையே, அய்யனே, நான் கூற விரும்புவது என்னவென்றால், போர்த்துக்கல் நாட்டின் பழங்குடும்பங்களில் ஒரு மகத்தான சடங்கு காக்கப்படுகிறது. அந்தக் குடும்பத்தில் பிறந்த மகள் ஒருத்தியின் மணம் நடந்த மறுநாள் காலை, விடியலுக்கு முன், அந்த அரண்மனையின் முக்கிய காரியஸ்தர் அந்த இரவின் விரிப்பை உப்பரிகையிலிருந்து தொங்கவிட்டு , ‘இப்பெண்ணை கன்னியென்று அறிவிக்கிறோம்,’ என்று கம்பீரமாக லத்தின் மொழியில் அறிவிப்பார். அந்த படுக்கைவிரிப்பு அதன் பிறகு கழுவப்படுவதும் இல்லை, பிறகு உபயோகிக்கப்படுவதும் இல்லை.

“காலத்தில் பதிந்து விட்டிருந்த இச்சடங்கு அரச குடும்பத்தில் மிகக் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட்டது. இன்று வாழ்பவர்களின் நினைவில் நிலைக்கும் விதத்தில், மிகச்சமீபத்திய நாட்கள் வரைக்கூட அதுவே வழக்கமாக இருந்தது.

“பலநூறு ஆண்டுகளாக, அவர்கள் அளித்த அசாத்திய தரமுடைய லினனுக்குப் பாராட்டாக, மலையில் நின்ற கன்னிமடத்துக்கு இரண்டாவது பெருமையும் இருந்தது. அந்த இரவில் அரசமகள் மகிமைக்குச் சான்றாகிய பனிவெண்மையான படுக்கை விரிப்பின் நடுப்பகுதி மட்டும், அவர்களுக்கே திரும்ப அனுப்பி வைக்கப்பட்டது.

“கன்னிமடத்தின் பிரதானமான, உயரமான பகுதி மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் நோக்கியவாறு கட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில், கருப்பு-வெள்ளை பளிங்கு தரையுடைய நீண்ட தாழ்வாரம் ஒன்றுள்ளது. அந்தத் தாழ்வாரத்தின் சுவர்களில், ஒன்றை ஒட்டி ஒன்றாக, கனமான தங்க முலாம் பூசப்பட்ட சட்டகங்கள் வரிசையாக மாட்டப்பட்டுள்ளன. ஒவ்வொன்றின் அடியிலும் நல்ல பொன்னில் ஒரு தகடு பதிக்கப்பட்டு, அதில் ஒரு கிரீடமும், அதற்கடியில் ஒரு இளவரசியின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது: டோனா கிறிஸ்டினா, டோனா இனீஸ், டோனா ஜெசிந்தா லெனோரா, டோனா மரியா. ஒவ்வொரு சட்டகமும் அரச படுக்கை விரிப்பிலிருந்து வெட்டப்பட்ட ஒரு சதுரத்தை தாங்கி நிற்கிறது.

“கொஞ்சம் கற்பனையும் உள்ளுணர்வும் உள்ளவர்கள் கித்தான்களில் தெரியும் மங்கிய குறிகளில் அத்தனை ராசிகளையும் கண்டு விட முடியும் – துலாம், விருச்சிகம், சிம்மம், மிதுனம். அல்லது அவர்கள் தங்கள் சொந்த கற்பனையுலகத்திலிருந்து சித்திரங்களைக் கண்டுகொள்ள முடியும் – ஒரு ரோஜா மலர், ஒரு இதயம், ஒரு வாள் – அல்லது வாளால் துளைக்கப்பட்ட இதயம்.

“பழங்காலத்தில், ஆடம்பரமான வண்ணங்கள் மிளிரும் நீள் ஊர்வலங்கள் கல்-நிற மலை முகடுகள் மீது மெல்ல மெல்ல ஏறி, கன்னிமாடத்தை அடையும். போர்த்துக்கல் நாட்டின் பழைய இளவரசிகள் – இப்போது அவர்கள் மற்ற நாடுகளின் அரசிகள், ராஜமாதாக்கள், அரசபதவியினரின் மனைவிகள் – தங்களுடைய மகத்தான குழுக்கள் பின்தொடர யாத்திரையாக இங்கு வந்தனர். அவர்களுடைய யாத்திரைகள் இயல்பாகவே புனிதமானவை, அதே நேரத்தில் ரகசிய பூரிப்புடையவையும்கூட. சணல் வளரும் நிலங்களிலிருந்து பாதை செங்குத்தாக மேலேறும். வண்டியிலிருந்து இறங்கி இறுதி தூரத்தை அதற்கெனப் பிரத்யேகமாகக் கன்னிமடத்தில் வைக்கப்பட்டிருந்த பல்லக்கில்தான் அவ்வரசகுலப்பெண் கடந்தாக வேண்டும்.

“பல வருடங்கள் கழிந்து, நம்முடைய காலத்தில் நடந்தது இது. காகிதம் ஒன்று எரியும்போது மற்ற பொறிகள் பக்கத்தின் விளிம்பில் ஓடிச்சென்று அணைந்த பிறகு, சிறிய, தெளிவான ஒரு பொறி மட்டும் இறுதியாகத் தோன்றி அவர்களுக்குப் பின்னால் ஓடும். அது போல, ஒரு மூதாட்டி – அவள் உயர்குடி குடும்பம் ஒன்றைச் சேர்ந்த முதுகன்னி – அவள் வெல்ஹோ கன்னிமாடத்துக்கு யாத்திரை மேற்கொள்கிறாள். பற்பல வருடங்களுக்கு முன்னால், அவள் போர்த்துக்கல் நாட்டின் இளவரசி ஒருத்திக்கு விளையாட்டுத் தோழியாகவும் சினேகிதியாகவும் பணிப்பெண்ணாகவும் இருந்திருந்தாள். அவள் கன்னி மடம் நோக்கி மேலே ஏற ஏற தன்னைச்சுற்றி நிலப்பரப்பு விரிந்து விரிந்து செல்வதைக் கண்டாள். மடத்தின் உள்ளே ஒரு கன்னியாசகோதரி அவளைத் தாழ்வாரத்துக்குக் கூட்டிச்சென்று, அவள் பணி செய்த இளவரசியின் பெயர் தாங்கிய சட்டகத்துக்கு முன்னால் அவளை நிறுத்தி, அவள் தனியே இருக்க விருப்பப்படுவாள் என்று தெரிந்து விடைபெற்றுக் கொள்கிறாள்.

“மெதுவாக, மிக மெதுவாக, நினைவுகள், அந்தச் சிறிய, முதிய, கருப்பு லேஸ் முக்காடு மூடிய, ஓடு போன்ற மண்டை வழியே ஊர்வலமாகச் செல்கின்றன. அவற்றை நட்புடனும் பரிவுடனும் கண்டுகொண்டு அந்த தலை மெல்ல அசைகிறது. இளவரசிக்கு விசுவாசமான தோழியாகவும், ரகசியங்களை நம்பிக்கையுடன் பாதுகாத்த சினேகிதியாகவும் இருந்தவள். அந்த இளைய மணப்பெண்ணின் உயர்ந்த மணவாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறாள். மகிழ்ச்சியான நிகழ்வுகள், ஏமாற்றங்கள், முடிசூட்டு விழாக்கள், கொண்டாட்டங்கள், சதிகள், போர்கள், அரசணையில் அடுத்து அமரப்போகிறவர்களின் பிறப்புகள், இளைய தலைமுறையினரின் திருமண ஒப்பந்தங்கள், வம்சங்களின் வளர்ச்சிகள், வீழ்ச்சிகள். அந்தக் கிழவி நினைத்துப் பார்ப்பாள், எப்படி அந்நாளில் அந்த விரிப்பில் தெரிந்த குறிகளைக்கொண்டு கணிப்புகள் குறிக்கப்பட்டன என்று. இப்போது அவளால் கணிப்பையும் நடந்ததையும், அவ்வப்போது புன்னகைத்தபடி, அவ்வப்போது நீள்மூச்சு விட்டபடி, ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. அந்த அறையில் ஒவ்வொரு விரிப்பும் அதன் கிரீடம் பொருந்திய தகடும் ஒரு கதையைச் சொல்கிறது, ஒவ்வொன்றும் கதைக்கு மாறாப்பற்றுடன் நிறுவப்பட்டுள்ளது.

“ஆனால் அந்த நீள்வரிசைக்கு நடுவே ஒரே ஒரு விரிப்பு மட்டும் வித்தியாசமானது. அதன் சட்டகத்தில் எந்த வேறுபாடும் இல்லை – மற்றதை போலவே சிறப்பானது, கனமானது. மற்ற எல்லா விரிப்புகளைப் போல அதுவும் கிரீடம் பொறிக்கப்பட்ட தங்கத்தகட்டை தாங்குகிறது. ஆனால் இந்தத் தகட்டில் பெயர் பொறிக்கப்படவில்லை. அந்தச் சட்டகத்தில் உள்ள லினன் விரிப்பு மூலைக்கு மூலை பனிவெண்மையாக, வெற்று காகிதமாக உள்ளது.

“கதை கேட்க வேண்டும் என்று ஆவலுடன் நிற்கும் நல்லுள்ளங்களே, உங்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்: இந்தப் பக்கத்தைப் பாருங்கள். என்னுடைய பாட்டி முதலிய கதைசொல்லி கிழவிகள் அனைவரின் ஞானத்தை உணருங்கள்!

“என்ன ஒரு நித்தியமான, நிலையுணராத மாறாப்பற்று இருந்தால் மட்டுமே இந்த விரிப்பு இந்த வரிசையில் பொருத்தப்பட்டிருக்கும்! கதைசொல்லிகளே இங்கு இதற்கு முன்னால் நிற்கும்போது முக்காடை முகத்துக்கு மேல் போர்த்திக்கொண்டு சொல்லிழக்கின்றனர். ஏனென்றால் எந்த அரச குடும்பத்து அம்மாவும் அப்பாவும் இந்த விரிப்பு இங்கே மாட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்களோ, அவர்களுக்கு விசுவாசத்தின் மரபு குருதியோடு பிணையவில்லை என்றால், அவர்கள் இதை இங்கே மாட்டாமலேயே இருந்திருப்பார்கள்.

“அதிதூய வெண்மை ஒளிரும் இக்கித்தானின் முன்புதான் போர்த்துகல் நாட்டின் பழைய இளவரசிகள் – உலகம் அறிந்த, கடமை உணர்ந்த, துன்பத்தில் சுழன்ற அரசிகள், மனைவிகள், அன்னைகள் – மற்றும் அவர்களுடைய சிறுவயது சினேகிதிகள், மணப்பெண் தோழிகள், மூத்த பணிப்பெண்கள் – அனைவரும் அதிக நேரம் அமைதியாக நிற்பார்கள்.

“இந்த வெற்று பக்கத்துக்கு முன்னால் நிற்கும்போது, முதிய, இளைய கன்னியாஸ்திரீகள், மடத்தின் பேரன்னையும்கூட, சிந்தனையின் ஆழத்தில் மூழ்குகிறார்கள்.”

(நன்றி: பதாகை)

சிறுகதை – சிறகதிர்வு

இன்று எனது ஐநூற்றி எழுபத்தெட்டாம் பிறந்த நாள். இன்னும் சிறிது நேரத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கவுள்ளன. அங்குச் செல்லத்தான் நான் அலுவலக வளாகத்தை விட்டு வெளியே வந்துகொண்டிருக்கிறேன். இந்த வருடம் எப்போதுமில்லாத அளவிற்குக் குளிர் இப்போதே தொடங்கிவிட்டது. மேகம் படர்ந்த கருமை. லேசாகப் பனி பொழிந்து கொண்டிருக்கிறது. தட்சிணாயனம் தொடங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை. குளிருக்காக என் கைகளை இரு முஷ்டிகளாக மடக்கி சிராய்ப்பைகளுக்குள் புதைத்து நடந்துகொண்டிருக்கும்போதுதான் அதைப் பார்க்கிறேன். பனி கவிந்த பாதையில் ஒரு பறவை.

சற்றுதூரம் நடந்து சென்ற பின்பே அதைப் பார்த்த கண்கள் என்னுள் விழித்துக்கொள்கின்றன. ஒரு நிமிடம் அப்படியே உறைந்து நிற்கிறேன். பனியில் முகம் புதைந்த ஒரு சிறிய உடல். உண்மையிலேயே பறவை தானா? திரும்பட்டுமா? எதற்கு? அவசர எண்ணை அழைத்துவிட்டுச் சென்றுவிட வேண்டியதுதானே?

ஒருகாலை முன்னால் எடுத்துவைக்க மறுகால் பின்னால் தானாகத் திரும்புகிறது. ஒரு நிமிடம் தத்தளிக்கிறேன். நின்ற இடத்தில் திரும்புகிறேன். சற்றுத் தொலைவில் பனிக்குள் ஒரு நீலப்புடைப்பு. சிறகதிர்வு போன்ற மெல்லிய காற்று என்னைத் தொட்டுச்செல்கிறது. இரண்டு நொடிக்குப் பிறகுதான் அது என் சுவாசக்காற்று என்பதை நான் உணர்கிறேன்.

ஓடிச்சென்று மண்டியிட்டுப் பார்க்கிறேன். சந்தேகமேயில்லை. பறவைதான். செத்துவிட்டது. என்ன பறவை இது? எனக்குப் பறவைகளின் பெயர்களெல்லாம் தெரியாது. என் சிறுவயதில் அவ்வப்போது பார்த்தது. அம்மா இருந்தால் சொல்லியிருப்பாள். அவளுக்கு எல்லா பெயர்களும் தெரியும். எனக்குத்தான் இப்போது எதுவுமே நினைவில்லை. ஐநூற்றி எழுபத்தெட்டு வயது நிரம்பி விட்டதல்லவா? அது சரி, இந்தப் பறவை எப்படி இங்கு, இந்த வளாகத்தினுள் வந்து செத்தது? பறவைகளெல்லாம் காட்டினுள் வாழும் உயிர்கள் இல்லையா? காட்டை விட்டு இங்கு எப்படி வந்தது? இங்கு எப்படி வாழும்? வாழ முடியாமல்தான் செத்துப்போனதா? ஆனால் இங்கு எதுவும் சாகக்கூடாதே?

இறப்பிலும் நீலமணிக்கல்லைப் போல மின்னிக்கொண்டிருக்கிறது அதன் உடல். சற்று தலையைப் பக்கவாட்டாகத் திருப்பிப் பார்க்கிறேன். நீலத்தினுள் பாசிப்பச்சை கோடுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. சலனமற்ற நீர்நிலையைப் பார்க்கும்போது உண்டாகும் மயக்கத்தால் ஆட்கொள்ளப்படுகிறேன். சற்றுநேரம் அது என்னைச் செயலிழக்கச்செய்கிறது. அதையே பார்த்துக்கொண்டு இருக்கிறேன். எவ்வளவு சின்னதா இருக்கு, எவ்வளவு அனாதையா இருக்கு, என்ற வியப்பை என் குனிந்த தலையில் கோர்த்துப் பெருகும் கனத்தில் நான் அறிகிறேன். அது நகரவே இல்லை.

யாருடைய வரிகள்? அம்மா அடிக்கடி சொல்வாளே? சட்டென்று நினைவுக்கு வரவில்லை. ஆனால் அவள் சொல்வதையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளும் ஆர்வமும் எனக்கில்லை என்பதும் உண்மை. அதெல்லாம் அம்மாவுக்கு மட்டும் தான். வரிவரியாக என்னவெல்லாமோ சொல்லுவாள். யார் யாரோ வாயில் பெயர் நுழையாத கவிஞர்களின் நாவிலுதித்த வரிகளெல்லாம் என் அம்மாவின் குரல்வழி என் செவிக்குள் புகுந்துவிட்டன. மூளைக்குள் அது படபடக்கும் ஓசை எப்போதாவது கேட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் சொல் மட்டும் என் உதட்டில் வரவே வராது. இப்படித்தான் யாருடைய கவிதையோ. எமிலி டிக்கின்சனா? அதில் இது போன்று ஒரு பறவை வரும். அது செத்துப்போய்விடும். அதைப் பற்றி அம்மா சொல்லியிருக்கிறாள். தன் சிறிய கண்களை உருட்டி உருட்டிச் சொல்வாள். அந்த வரிகளில் வரும் இறந்த பறவை என் கண் முன்னால் தெரிகிறது. ஆனால் என்ன வரி அது? என்ன வரி?

திடீரென்று நான் தன்னுணர்வு கொள்கிறேன். அடச்சீ, என்ன வரியா இருந்தா என்ன? பறவை செத்துவிட்டது. சுற்றும் முற்றும் நம்மை யாரும் பார்க்கவில்லையே என்று பார்த்துக்கொள்கிறேன். இப்படி நான் நடுப்பாதையில் மண்டியிட்டு ஒன்றிற்கும் உதவாத கவிதை வரியை அசைபோட்டுக்கொண்டு செத்த பறவையொன்றை வெறித்துப் பார்த்தபடி இருப்பதை யாராவது பார்த்துவிட்டால்? ஆய்வுக்கூடத்தில் என் கீழ் வேலை பார்ப்பவர்கள் பார்த்துவிடவே கூடாது. என்ன இது முட்டாள்தனம். நெறிமுறைப்படி நான் இப்போது அவசர எண்ணைத்தான் அழைத்ததாக வேண்டும். அவர்கள் வந்து செய்தாகவேண்டியதை செய்வார்கள். ஆனால் ஏனென்று தெரியாமல் என் கண்களில் நீர் பெருகுகிறது. என்ன வரி அது?

சட்டென்று எனக்குள் ஒரு எண்ணம் சுழற்காற்றாக ஊறத்தொடங்குகிறது. இப்பறவையைப் புதைக்க வேண்டும்.

இது என்ன அபத்தம்? காட்டுமிராண்டித்தனமாக இப்படியொரு எண்ணம்? எனக்கு ஏன் இப்போது இப்படி ஒரு எண்ணம் தோன்றுகிறது? என்னால் சொல்லமுடியவில்லை. ஆனால் அதைத்தான் செய்யவேண்டும் என்று மட்டும் உறுதியாக உணர்கிறேன். இந்தப் பறவை செத்து விட்டது. இதை யார்கண்ணிலும் படாமல் புதைத்தே ஆக வேண்டும்.

ஆனால் பறவையைப் புதைக்கக் கையில் எடுக்கப்போகும் போது என்னால் அதைத் தொடமுடியவில்லை. மீண்டும் மீண்டும் என் கைவிரல்கள் அதை நோக்கிச் செல்கின்றன. மீண்டும் மீண்டும் காற்றையே பற்றுகின்றன. என் கை நடுங்குவதை உணர்கிறேன். அதைத்தொடக்கூடாது என்று என் மூளை உத்தரவு போட்டிருக்க வேண்டும். உடலெல்லாம் கூசுகிறேன்.

வெறிபிடித்தாற்போல் வேகவேகமாக என் ஆய்வுக்கூடத்தை நோக்கி நடக்கிறேன். உள்ளே யாருமில்லை. முதலில் கைகளை நன்கு கழுவிக்கொள்கிறேன். ஏன் கை கழுவினேன்? தெரியவில்லை. கைகளைத் துடைத்துக்கொண்டு ஒரு ஜோடி கையுறைகளை எடுத்துக்கொள்கிறேன். எங்கள் மருந்துகள் அனுப்பிவைக்கப்படும் ஒரு சிறிய பெட்டியை எடுத்துக்கொள்கிறேன். மண்ணில் குழிதோண்ட ஏதாவது தென்படுகிறதா என்று ஆய்வுக்கூடம் முழுவதும் துழாவுகிறேன். உயிரின் ரகசியங்களை ஆராய நுண்கருவிகளே தேவைப்படுகின்றன. அவையே போதுமானதாக உள்ளன. மண்ணைத் தோண்டுமளவிற்குப் பெரிதான, ஆபாசமான, நுண்மையற்ற கருவியேதும் எங்கள் ஆய்வுக்கூடத்தில் இல்லை.

கையுறைகளை அணிந்துகொண்டு களவாணியைப்போல் யார்கண்ணிலும் படாது பதுங்கிப்பதுங்கி வேகவேகமாகத் திரும்பிச்செல்கிறேன். இவர்கள் கண்களில் எப்படியும் செத்த பறவைகள் படாது. இவர்கள் யாரும் என்னைத்தான் பார்க்கக்கூடாது. நான் இப்போது செய்யப்போகும் காரியம் அவ்வளவு அந்தரங்கமானது, அவ்வளவு ரகசியமானது. யாருக்கும் தெரியக்கூடாதது. அத்துமீறலும் கூட, என்று என்னுள் ஒரு குரல் கிரீச்சிடுகிறது. ஆம், அத்துமீறல் தான். குறிப்பாக நான் இச்செயலைச் செய்வது மிகப்பெரிய அத்துமீறல் தான்.

அம்மாவுக்கு என் செயல்களெல்லாமே அத்துமீறலாகத்தான் பட்டிருக்கவேண்டும். ஆனால் அவள் என்றுமே ஒரு வார்த்தைக்கூடச் சொன்னதில்லை. நான் சொல்வதையெல்லாம் அப்படியா? அப்படியா? என்று மட்டும் தான் கேட்டுக்கொண்டிருப்பாள். எனக்கு எல்லைகளே கிடையாது, நான் உலகத்தின் விதியை மாற்றிக்காட்டுகிறேன் பார், என்று பதின்பருவ வேகத்தில் சூளுரைத்தபோதும் சரி, ஒரு தேர்வு விடாமல் வென்று மருத்துவராகவும் அறிவியலாளராகவும் தேர்ந்தபின்பும் சரி, என் வாழ்க்கையில் ஒரு நொடிக்கூட வீணடிக்காமல் நான் ஆய்வில் மூழ்கியிருந்தபோதும் சரி, எங்கள் கண்டுபிடிப்புகள் முதற்கட்டமாக மனிதர்களில் சோதனை செய்யப்பட்ட போதும் சரி, ஏன், அறுபத்திரண்டாம் வயதில் நான் கண்டுபிடித்த மருந்தை நானே உட்கொள்ளப்போவதாக அம்மாவிடம் சொன்ன நாளன்றும் சரி, அம்மாவின் உதட்டில் ஒரே வார்த்தை தான். “அப்படியா?”

என் கண்டுபிடிப்பின் பலனாக நான் அப்படியொரு புகழில் வாழ்ந்துகொண்டிருந்தேன். என் பெயரை அறியாத பள்ளிச்சிறார்களே உலகத்தில் இல்லை என்பது நிலை. பணம் பொழிந்துகொண்டிருந்தது. மனித வரலாற்றில் வேறெப்போதுமில்லாத அளவிற்கு அறிவியலின் வாசல்கள் திறந்து கிடந்தன. மனிதமனத்தின் சாத்தியங்கள் அனைத்துமே அறிவியல் வாயிலாக நிகழ்த்தப்பட ஆரம்பித்தன. எல்லையில்லா ஆரோக்கியம், எல்லையில்லா ஆயுள் இவற்றுக்கு மல்லுக்கட்ட எல்லையில்லா இன்பங்கள், கேளிக்கைகள், கொண்டாட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எங்கள் நிறுவனமே கனவுத்தயாரிப்பு வியாபாரத்தில் இறங்கியது. வருடத்திற்கு ஆறு மாதங்கள் நல்லுறக்கத்தில் தூங்கவைக்கும் மருந்தை நாங்கள் தான் கண்டுபிடித்துக் காப்புரிமை வாங்கினோம். அதில் கொழுத்த லாபம்.

இதெல்லாம் ஐநூறாண்டுகளுக்கு முந்தைய வரலாறு. நவீன வரலாற்றின் பொற்காலம் என்று சொல்லலாம். அனைத்தையும் அம்மா தன்னுடைய கருமணி கழுகுக்கண்களால் பார்த்துக்கொண்டே வாழ்ந்தாள். கருகருவென்று சுருங்கி சிலுத்த புருவங்களுக்கடியிலிருந்து அவளுடைய கூர்பார்வை என்னை நோக்குவதை என் முதுகுத்தண்டில் எப்போதாவது உணர்வேன். ஆனால் அவளை நான் எதிர்கொண்டதே எப்போதாவதுதான். ஐந்தடிக்குக் குறைவான உயரம். கூந்தலுக்குள் சிறு முகம். பெரும்பாலும் அவள் முகம் இருக்கும் இடத்தில் ஒரு புத்தகம் இருக்கும். சன்னமாகக் கேட்கும் ஒரு மெல்லிய மெட்டு – என்ன பாட்டு அது? மறந்துபோய்விட்டது – அது மட்டுமே அவள் இருப்பதன் அறிவிப்பு. சளசளவென்று அவள் வீட்டில் வளர்த்த செடிகளுக்கு நீரூற்றும் சப்தத்திலும் அவள் இருப்பாள். என்றாவது, எப்போதாவது, என் தலைமயிரை மெல்லதிரும் விரல்களைக்கொண்டு கோதுவாள். அப்போதெல்லாம் எனக்குத் தொண்டை கட்டிக்கொள்ளும். கண்களில் கண்ணீர் முட்டும். எரிச்சலடைவேன். என் குரல் கடுகடுப்பாகும். வார்த்தைகளைக் குறைத்துக்கொள்வேன். அவளைப் பார்க்கவே மாட்டேன். “உம்”, “சரி”, “வேண்டாம்” என்று மட்டும் அவளிடம் சொல்லி ஆய்வுக்கூடத்துக்கு ஓடிச்சென்று ஒளிந்துகொண்ட வருடங்கள் பல. அதற்குள் அவளுடைய புருவங்களில் நரை தட்டி, அவளுக்குக் கூன் விழுந்து, பார்வை மங்கி, கிழவியாகிவிட்டாள்.

ஒரு கட்டத்தில் அவள் ஓயாமல் பேசத்தொடங்கினாள். என்னிடமில்லை. யாரிடம் என்று தெரியவில்லை. அவை ஒருவரை நோக்கிப் பேசப்படும் பேச்சாகவும் தெரியவில்லை. பெரும்பாலும் உதிரி வரிகள். அவளுடைய குரல் ராகம் போல ஒலிக்கும். தத்தைமொழியில் பிள்ளையைப்போலப் பாடுவாள். ஒரு நாள் காலைச்சூரியனை என் மூக்குத்திக்குள் அடைத்துவிட்டேன் பார் என்றாள். இன்னொரு நாள் தான் இவ்வுலகை தன் நாவால் உணரும் வயிறில்லா ஓசனிச்சிட்டு என்று சொன்னாள். மற்றொரு நாள் இவ்வுலகமே ஒரு பெரும் பறவையின் சிலிர்க்கும் சிறகதிர்வில், அந்த இறகடி வெப்பத்தின் கருணையில் தான் உயிர்த்தழிவதாகச் சொன்னாள். ஒன்றுடன் ஒன்று சேராத சொற்களைப்போல் அபத்தமாக அவை எனக்கு ஒலிக்கும்.

அவ்வளவு வருடங்களாக மண்டையில் அடைத்து வைத்த பாடல்களும் கவிதைகளும் எங்குச் செல்வதென்று தெரியாமல் அவளுடைய மூளைக்குள் வவ்வால்களைப்போல் முட்டி மோதி அவ்வப்போது ஏதோ ஒன்று வெளிவருவதாக எனக்குத் தோன்றும். அந்த வரிகளும், அவள் அதை அனாயசமாக, கவலையற்று, உச்சரித்துக்கொண்டே இருப்பதும், என்னைக் கடுப்படையச் செய்யும். “போதும், என்ன எப்பப்பாரு வாயோயாம எதையாவது தொணதொணன்னு. கொஞ்சம் பேசாமலிருக்கக் கூடாதா?” என்று கத்துவேன். என்ன சொன்னாலும் என்னைப் பார்த்துச் சிரிப்பாள். சிறிது நேரம் பேசாமல் இருப்பாள். மீண்டும் தொடங்குவாள். ஏதேதோ உதிரி வரிகள். எந்த நாசமாகப்போன பழங்காலத்தவனின் வாயில் உதித்த வரிகளோ அவளுக்குத்தான் தெரியும். “இதுனால யாருக்கு என்ன லாபம்? உன் வாழ்க்கையில ஏதாவது உருப்படியா பண்ணியிருக்கியா? இல்ல பண்ணியிருக்கியான்னு கேக்குறேன். இல்ல உருப்படியா ஏதாவது செய்யுற ஒம்மகனைத்தான் ஒரு வார்த்தை பெருமையோட சொல்லியிருக்கியா?” அவள் வாயில் மண்ணடைத்து விடலாமா என்றெல்லாம் கூடத் தோன்றியுள்ளது. ஏன் அவ்வளவு கடுப்பு என்று சொல்லத்தெரியவில்லை.

பின் எல்லாமே அடங்கிவிட்டது. வாயே திறக்கமாட்டாள். படிப்பதும் இல்லை. கூன் முதுகுடன் இறகுதிர்ந்த பட்சியைப்போல் உடலைக் குறுக்கிக்கொண்டு பகலெல்லாம் படுத்துக் கிடப்பாள். அப்போதெல்லாம் என் எரிச்சல் மறைந்துவிட்டது. அவளைப் பார்க்கும்போதெல்லாம் அப்படியொரு சோகம் மனதைக் கவ்விக்கொள்ளும். இனம்புரியாத பயமும். “அம்மா, அம்மா, அம்மா,” என்று நான் கெஞ்சுவேன். பெரும்பாலும் பதிலே வராது.

மருந்தை நான் உட்கொண்ட போதே அம்மாவைக் கேட்டேன். எங்கள் நிறுவனம் மூலம் மருந்து மலிவான விலையில் கிடைக்கும், உனக்கும் வாங்கி வரவா என்று. அப்போது அவள் புருவங்கள் நரைக்க ஆரம்பிக்கவில்லை. அதற்கடியிலிருந்து சிறுமணிக் கண்களால் என்னைப் பார்த்தபடி, “இல்லப்பா, வேண்டாம்,” என்று மெல்ல சொல்லித் தன் தூரிகையைக் கையிலெடுத்துக்கொண்டாள்.

எனக்குக் கோபம் தலைக்கேறியது. அவளுடைய சிறு தோள்களைப் பிடித்து உலுக்கினேன். “ஏன்? ஏன் வேண்டாங்கற? பாட்டுப்பாடி, படம் வரஞ்சு, கவிதை வாசிச்சா? நீ அவ்வளவு பெரிய ஆளா? உனக்குச் சாவு பயம் கிடையாதா? செத்துப்போக ஆசைப்படுறியா?” வர்ணப்பலகை சாய்ந்து அவள் கழுத்திலும் கைகளிலும் மேலங்கி மீதும் வண்ணங்கள் தெறித்தன.

என் சொற்கள் என் மண்டையில் இடி போல் இறங்கின. வாயிலிருந்து தப்பிய வார்த்தைகளைக்கண்டு அதிர்ந்தேன். வார்த்தை வராமல் ஸ்தம்பித்து ஒரு நொடி அம்மாவைப் பார்த்தேன். என் கைகளை விலக்கினேன். அப்போதும் அம்மாவிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. மெளனமாக என்னை நோக்கிக்கொண்டிருந்தாள்.

“இதக் குடிச்சா மனுஷன் சாவ நெனச்சு செத்துச் செத்து பயப்பட வேண்டாம் இல்லையா? உருப்படியா எவ்வளவோ செய்யலாமே? ஏம்மா, நா கஷ்டப்பட்டுக் கண்டுபிடுச்சது. உலகமே புகழுது. நீ வேண்டாம்னு சொன்னா எப்பிடிம்மா? அது என்ன அவமானப்படுத்துறது தானே? உனக்கு எம்மேல நம்பிக்கை இல்லியா?” என் குரல் தழுதழுத்தது.

அம்மா எம்பி என் தலை மீது கை வைத்தாள். அவள் கை ஸ்பரிசம் கதகதப்பாக இருந்தது. என்னையும் மீறி நான் அழுதேன். “கண்ணு, உம்மேல முழு நம்பிக்கை இருக்கு. ஆனா எனக்கு இது வேண்டாம். இன்னும் கொஞ்ச வருஷம் வாழறதுல எனக்கு ஒரு பயனும் தெரியல. உனக்கு இப்பப் புரியாது. போகப்போகப் புரிஞ்சுப்ப. போகப்போக…”

இப்போது அம்மா படுத்துவிட்டாள். நினைவிழந்துகொண்டே வந்தாள். தன் ஆடைகளை, தன் உடலை, பின் தன் இருப்பையே ஒவ்வொன்றாக மறந்துகொண்டே வந்தாள். மனித இறப்பு என்பது எவ்வளவு ஆபாசமானது! இதை வெல்லத்தானே என் உழைப்பெல்லாம்! என் சொந்த அம்மாவுக்கு அது புரியாமல் போய்விட்டதே. என் வாழ்வில் முதல்முறையாக அலுவலக நேரத்தைக் குறைத்துக்கொண்டு அம்மா அருகில் வந்தமர்ந்தேன். எப்போதாவது கண்விழித்து நான் அருகில் இருந்தால் சிரிப்பாள். பின் என்னைக் கண்டடைவதே எப்போதாவது தான் என்ற நிலைமை வந்தது.

அவள் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் அது நடந்தது. அவள் முன்பொரு முறை கிறுக்கி ஒதுங்கியிருந்த ஒரு தாள் அவள் தலைமாட்டிற்கு அருகே இருந்த மேசைமேல் கிடந்தது. நான் அதை எடுத்து வாசிக்க முயற்சி செய்தேன். அம்மாவின் மூச்சுக்காற்றுப் புல்லாங்குழில் அடைக்கப்பட்டு வெளிவருவது போல ஒலித்துக்கொண்டிருந்தது. அவள் கண்கள் மூடியிருந்தன. நான் அவளைப் பார்த்தவாறு என் கையில் இருந்த காகிதத்தைக் கவனமில்லாமல் கைபோனபோக்கில் மடித்தேன்.

அம்மா சிணுங்கிக் கண்விழித்தாள். தலையைத் திருப்பித் தன் சிறிய, புரைதட்டிய பழுப்பு நிற விழிகளால் என்னைப் பார்த்தாள். ஆம், என்னைப் பார்த்தாள். அப்படியொரு புன்னகையை அவள் முகத்தில் எனக்கு மீசை அரும்புவதற்கு முன்னால் மட்டுமே பார்த்த நினைவு. அம்மா நான் கையில் வைத்துக்கொண்டிருந்த காகிதத்தைத் தான் பார்த்துக்கொண்டிருந்தாள் என்பதை அடுத்த நொடியில் உணர்ந்தேன். நடுங்கும் விரல்களால் அவள் அதைப் பற்றினாள். நான் மடித்த காகிதக் கொக்கு அவளுடைய விரலிடுக்கில் சென்று அமர்ந்ததது.

பூரணப் பூரிப்புடன் அதையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தாள். படுக்கையில் ஊன்றி ஊன்றி என் அருகே வந்து என் தலையைத் தாழ்த்தினாள். அந்தப்பறவையை என் தலைமீது உயர்த்தி, தன் முகத்தைக் கஷ்டப்பட்டுத் தூக்கி, என் உச்சியில் முத்தமிட்டாள். என் கண்களைப் பார்த்து கிழட்டு மழலையில் எதையோ உணர்ச்சிகரமாக, கண் பொலிக்கச் சொன்னாள். புரியவில்லை. அவளை அமைதிப்படுத்திப் படுக்கவைத்தேன். சற்றுநேரத்தில் மீண்டும் அதே மயக்கத் தூக்கத்தில் மூழ்கிவிட்டாள். அவள் விரல்கள் அந்தக் காகிதக் கொக்கை அடுத்த இரண்டு நாட்களுக்குக் கெட்டியாகப் பிடித்திருந்தன. அவள் இறந்தபோதும் கூட எங்களால் அதை அகற்ற முடியவில்லை. அதைப் பற்றியபடியேதான் அவள் உடல் கதிரலைகளைக்கொண்டு சாம்பலாக்கப்பட்டது.

உலகத்திலேயே கடைசியாக இறந்த மனித உயிர்களில் அம்மாவும் ஒருத்தி. அதற்குள் கல்லறைகளுக்கு மேல் இன்பச்சுற்றுலாத் தளங்களும் கேளிக்கை பூங்காக்களும் எழுப்பப்பட்டுவிட்டன. உயிர்நீட்பு மருந்தை வாங்க இயலாதவர்களும், இறப்பைத் தேர்ந்தெடுத்த சொற்ப மனிதர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும், வேறுவழியற்ற மிருகங்களும், இறப்புடன் எவ்வழியிலேனும் தொடர்புக்கு வருபவர்களும் ஊருக்கு வெளியே இருக்கும் காட்டில் தான் வாழ்கின்றனர். இறப்பு என்பதே எங்கள் பிரக்ஞைக்கு வெளியே, தூரத்தில் எங்கேயோ நிகழும் ஒன்று என்று நம்ப ஆரம்பித்துவிட்டோம். நாங்கள் அதைப்பற்றி நினைப்பதில்லை. இங்கு யாரும் சாவதில்லை. இந்தப் பறவையும் காட்டிலிருந்து தான் வந்திருக்கவேண்டும்.

என் கையுறைகளைத்தாண்டியும் மண்ணின் ஸ்பரிசம் தோண்டிக்கொண்டிருக்கும் என் விரல்களுக்குத் தெரிந்தது. யாரும் பார்க்காது வேகவேகமாகத் தோண்டினேன். இதைப் புதைக்க வேண்டும் என்ற விழைவு எங்கிருந்து வந்தது? யார் வந்து என் காதில் அதைச் சொல்லியது? இந்தப் பறவையினுள் இவ்வளவுநாள் வாழ்ந்துகொண்டிருந்த பறவை எங்கே போயிற்று? இங்கே தான் அது சுற்றிக்கொண்டிருக்குமா? ஒரு வேளை அது தான் சொன்னதா? திடுக்கிட்டேன். ஒற்றை மணிக்கண் என்னை இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன். ஒரு வேளை அம்மா இறப்பதற்கு முன்னால் நான் மடித்த காகிதக் கொக்கின் கண்ணாக இருக்குமோ?

அன்று என் விரல்கள் ஏன் அந்தக் காகிதக் கொக்கை மடித்தன? சிறு வயதில் நான் நிறையக் காகிதக் கொக்குகளை மடித்திருக்கிறேன். அந்த நினைவுத்தடங்கள் என் விரல்களில் ஒட்டியிருக்க வேண்டும். அப்போது அம்மாவின் நண்பர்கள் பலர் சூழ இருக்கும் எங்கள் எளிய வீடு. அனைவரும் கவிதை எழுதுவார்கள். கவிதை எழுதப்பட்ட தாள்களைக்கொண்டு கொக்குகளும் கிளிகளும் குருவிகளும் காகங்களும் ஆயிரக்கணக்கில் மடிப்பார்கள். ஊர் சதுக்கத்தில் அவற்றைத் தோரணம் கட்டி அங்கேயே அவற்றுக்கடியில் அமர்ந்திருப்பார்கள். அந்தச் சந்திப்புகள் முடிந்தபோது அப்பறவைகள் ஒரு வேளைக் காட்டினுள் பறந்திருக்கக்கூடும். அவை புணர்ந்து முட்டையிட்டுப் பொறித்த குஞ்சுகளின் வம்சத்தில் இந்தப் பட்சி தோன்றியிருக்கக்கூடும். உடல் சிலிர்த்துக்கொண்டேன். ச்சே! என்ன எண்ணம் இது!

பதின்பருவத்தில் எனக்குக் காகிதம் மடிப்பதில் அபத்தம் தட்டத் தொடங்கியது. அம்மா நானும் அவளைப்போலக் கதை சொல்லி காகிதம் மடித்துக் கானம் பாடி காலத்தைத் தள்ளவேண்டும் என்று நினைத்திருக்கலாம். அது ஒன்றிற்கும் உதவாதது, பொட்டைத்தனமானது, நான் உலகை மாற்றும் விதி சமைப்பவன் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். மரணபயம் கொண்டவர்களுக்கே இலக்கியமும் தத்துவமும். என் பாதை வேறு. கண்ணால் பார்ப்பதையும் காதால் கேட்பதையுமே நம்பி உலகத்துள் இறங்கினேன். அறிவியல் நான் தேடியவற்றையெல்லாம் கொடுத்தது. புகழும் பணமும் மட்டுமல்ல. வாழ்க்கைப்பயனும் சுயஅடையாளமும் தான். வயோதிகத்தையும் மரணத்தையும் வென்று மனித இனத்தையே ஒரு படி முன்னே சுமந்து சென்றவன் நான் என்ற திருப்தி கிடைத்தது. “காலா உன்னைப் புல்லென மிதிக்கிறேன்” என்று அம்மா உடல்சிலிர்த்துச் சொல்லுவாள். அவள் சொன்னாலும் மிதித்ததென்னவோ நான் தான்.

ஆனால் இதெல்லாம் உண்மை என்றால் நான் ஏன் இவ்வளவு அபத்தமாகப் பனிபொழிந்துக்கொண்டிருக்கும் இம்மதியவேளையில், கொண்டாடிக் களிக்கவேண்டிய என் ஐநூற்றி எழுபத்தெட்டாம் பிறந்தநாள் அன்று இப்படி ஒரு செத்த பறவையைப் புதைக்கக் குழிதோண்டிக் கொண்டிருக்கிறேன்? பறவை பாவம் என்பதாலா? ஏதோ சொல்லறியா வரியின் எதிரொலிக்குரல் தரும் உந்துதலா? சர்வமும் அபத்தம். திடீரென்று ஒன்று நினைவுக்கு வருகிறது. எமிலி டிக்கின்சனின் கவிதைகளில் எப்போதும் எந்தப் பறவையும் பாவமாகச் சாவதில்லை. அவை என்றென்றும் உயிரோட்டத்துடன் மட்டுமே தோன்றுபவை. உற்றுநோக்கிக்கொண்டிருப்பவை. மெல்லிய சிறகதிர்வுடன் காற்றின்மேல் நழுவி வானில் உயரப் பறப்பவை.

ஒரு அடிக்குத் தோண்டிவிட்டேன். இப்போது என்னால் அப்பறவையை விரல்களால் தொடமுடிகிறது. அதை மெல்லத் தூக்கி, நான் கொண்டு வந்த பெட்டியில் பத்திரமாக வைக்கிறேன். பின் ஏதோ தோன்ற என் கையுறை ஒன்றைக் கழற்றி அதனை அதில் சுற்றுகிறேன். செத்தப் பறவைக்குக் குளிரடிக்காது. இருந்தாலும்.

பெட்டியை மூடி மண்ணில் வைக்கிறேன். மெல்லத் தட்டி முதல் கைப்பிடி மண்ணை அதன்மீது தங்கத்தூசைப்போல் பொழிகிறேன். முன்புணர்ந்த ஒரு பறவையின் இமையா விழிப்பார்வை என் முதுகுத்தண்டில் மீண்டும் உணர்கிறேன். அம்மாவின் கரம் என் உச்சந்தலையில். நீள்மூச்சு விடுகிறேன். தலையைச் செருக்குடன் உயர்த்தி முதுகை நேர்படுத்திக்கொள்கிறேன். சிவந்த கண்மணி உற்றுநோக்குகிறது. அது கண்ணிமைக்கத் தொடங்குகிறது. இப்போது வேகமாக. நான் குழியை மூடிக்கொண்டிருக்கும்போதே தூரத்தில் அபாயச்சங்கு ஒலிக்கத் தொடங்குகிறது.

(நன்றி: பதாகை)

Short Story – Bleeding

(Originally published in the extant little magazine Madras Mag, Oct. 2017)

Four hundred years ago, the world was shrinking like a ball of calico soaked in salt water.   Ships with multihued sails, proud masts and busy decks were riding the ocean and sailing eastward. Towns sprouted out of the beachy sand where the land and sea met. One day, in a village called Thariyur, forty weaver families also decided to head east, tearing themselves away from the land where their families had lived for thirty-five generations.

The chieftains and elders of the village could not digest the fact that forty families were, just like that, turning their backs on the lands where their fathers and forefathers had breathed, weaved and died, and going somewhere far away, never to return. In anger and agony, they turned their faces, and refused to acknowledge the small group that stood before them, waiting to seek their blessings one last time. Fine cotton cloth with broad kottadi checks danced in the wind on the clotheslines around them, and curled into each other like mating snakes. The hard, lined, remorseless faces of the elders emerged out of them, like the stone sculptures in a temple courtyard.

When it was time for the young rebels to finally leave – the sun was high in the sky, and it would be a day and a half’s journey to reach their destination – a withered crone came forward, the heavy brass pambadams on her ears glinting in the sun, her bare, brown, lined chest heaving with emotion. She scooped two handfuls of the dry brown earth, and threw it in their faces. “You dare to leave! You, blood of my blood, you dare to leave! May these breasts that have run dry feeding you lot fall off right now! Remember, remember – you have dared to leave, and you must pay the price. Now hear this! The clothes you weave and dye will no more hold their colour. You will dye and dye, but the colours will run away, just as you do. All your efforts will bleed away, just like the milk of my breasts and the blood of this land that walks away as if all of this means nothing!” The man named Madhiran, who stood at the head of that group, lowered his head, and took upon it the full force of her curse. The town watched as their broad backs disappeared into the brown haze.

The cloth from Thariyur was a prized commodity in all of the surrounding towns and villages. Nowhere else in the world is there cloth that is softer than this, they remarked with pride as they held the cloth to their cheeks and folded it up to ease the burdens they carried on their heads. Some castes in the Arcot region had a tradition that their wedding sarees and vettis should be procured from the handlooms of Thariyur. They would come as a group of twenty-thirty people, a long line of bullock carts along the dusty lanes, stopping by the ponds on the wayside to quench their thirsts. The town would first appear as a dot of colour in the dusty brown landscape to the sharp-eyed youngsters amongst them. “I see it! I see it!” they would hoot. As they neared the town, they would see long yards of onion-white cloth drying on the bushes. Then came the stretches of clotheslines. Dyed cloths of all hues would flutter in the breeze, and the women would already start planning the colours and the prints. The narrow village streets had tiny houses, with a vat for the vegetable dyes in the front, and the large looms in the back. The visitors would stay in the town for a week and marvel at the softness of the cloth.

However, the real reason that people flocked to Thariyur to buy their wedding garments was not just the fineness of the cloth or the brilliance of the colours. It was because they knew that the dyes of Thariyur would never ever bleed and run. Like the steadfastness of Arundhati and the chastity of Sitai, the cloth of Thariyur would never, ever, lose its color. They would remain like new till the end, their colours brilliant like the blue of a cloudless sky, like the red of coral beads, like the yellow-green of neem leaves.

The dying process was a secret that was held close to the chests of the weavers of Thariyur, passing from father to son to grandson for thirty-five generations. They had not married outside the village for many centuries, and so their faces all looked alike and their clothes never bled. Some said that the magic of the Thariyur weave came from the exceptional unity of its weaver families. Others said that it was a boon granted by the muni who lived on their lands, by the border of the village near the town pond. Still others said it was born of the bond between weaver and loom, water and cotton, cloth and dye, land and blood. A few believed that these men possessed strange powers, and they could also walk on water, grow to the size of an atom or as tall as the sky, and that it was not their fingers that wove the cloth or dyed it, but by the power of their words they could weave and dye and fasten colour to the cloth. The women who draped the Thariyur sarees around their bodies swore that it was the plentiful milk of their mothers’ breasts, cooled by such soothing cotton, that held the secret in it.

The tradesmen came to the village for silk and cotton, and the fishermen came for thick, flexible sails. The young women favoured linen that became one with their limbs, their colours and patterns giving flight to their dreams that took them, as if on Vadivelan’s peacock, all around the earth. The heavily checked kottadi sarees were for the matrons and crones. Each person in the village, according to their life and station, found the cloth to suit their needs. Thariyur cloth was wrapped around their sunbaked heads, fastened about their thin waists, folded and scrunched into their armpits in deference, tied as a single piece around their loins. When they handstitched long skirts for their whittled wooden dolls, young women used to save leftover scraps of the soft cloth that would never bleed in the menstrual huts, as rare treasures for the older women. As the generations grew in the wombs of these women, the cloths hung on the clotheslines near the huts for nine whole months, waving in the wind like victorious flags, gladdening the hearts of the whole village. The old women would remember their own maiden days with a fond smile as they tore up their wedding sarees and folded them up to make peethunis for the newborns. Wailing infants would take a break to track the colours of the cloths with their beady eyes, and drift off to sleep in the confines of its thuli once the soft cloth was tied around its waist. When the men who filled the hearts and lives of these women died and the biers carrying their bodies had crossed the town’s borders, their women could be seen near at the wells and ponds, dipping their sarees one after another into the waters, and bemoaning their fate – this man’s breath disappeared just like that, in a whiff! Yet I dip and I dip and I wring and I wring, but oh, would the colours on this cloth never bleed?

When the white man’s trading ships docked a few miles north of Mayilapuri, the local tradesmen made contact with them, and when they learned that the overdressed men were looking for more cloth, told them about Thariyur’s fine cotton. One look at the cloth convinced the whites that this was the treasure they had sailed in search of. For the first few years, they sent some of the local traders as middlemen to haggle with the weavers and bring the cloth to them. This cloth was received with tremendous delight in the markets at Southampton and London and Rouen and Paris. Calico skirts and chintz draperies came into fashion. Women wanted them by the yard for their chemises and underskirts. Their voices crying for “More! More!” washed up as waves carrying more ships on the Coromandel coast. The trading company thought it might be a good idea to create an exclusive production facility close to the fort that they were building by the coast. The cloth that would be woven and dyed there would go straight into the cargo holds of their ships. The white traders sent a few messengers to Thariyur, asking whether some of the weaver families could move east to the Fort and settle in its vicinity.

It was a time when that land was ravaged by war and famines, and the people were dying of hunger. There was no stable king or government. The rains had failed that year. Madhiran had buried seven children; he did not want to bury the eighth. He had observed the white folks when they had come to his village once or twice earlier to buy cloth. His sharp eyes were capable of reading men the way his fingers knew cotton. He could immediately tell by the swagger in their walk and the smartness of their clothes that these were not ordinary men. Their bellies swelled with prosperity, bags of money jingled at their waists, their muscles were strong, their eyes looked content. When he heard that if his family would move east to the Fort and weave for the company, they would be fed, clothed and unburdened of tax, he decided within his own young heart that he would go, no matter what. He spoke about his plans into the ears of other young men like him, in undertones, unobserved, behind the cotton bushes where cloth was laid out to dry. The picture he painted about life in the east, by the coast, was so alluring that his band of followers grew. News got out, and reached the ears of the town elders. The elders would have forgiven murder, but not the fact that all their young folks were thinking of cutting ties with their land and way of life, and wanted to unravel and break their unity. Madhiran stood before them, at the head of the group, his child on his shoulder, his wife mutely standing a few feet behind him. They received the town’s curse in silence and walked eastwards, towards the sea.

*

They walked in dejected silence, unhappy about leaving the only land they had called their own, frightened on hearing the old woman’s curse. Would we be able to weave the cloth that we have weaved for all these centuries? they wondered. Madhiran knew that they would never weave the cloth of their ancestors again. He knew that when the soil, air and water changes, the cotton and the dye change too. Things would no longer be the same. However, he had sense enough to not tell them that. “We are not going to the east just to weave cloth, we are going to the east to weave a city,” he told them. They listened with wide-open eyes, grateful for a story, any story, to relieve the strange burden pressing down upon their hearts. Madhiran started telling them the story of how the first towns and cities came to be.

It was a time when there were no cities and towns, and human beings lived in burrows. It was a time so long ago that there were no colours on the earth. Everything was black or white. We were scared of the world then, and we continued to stay in our disgusting burrows, afraid to even poke our heads out. It was a pity, for we also had wings then, but they were black with grime. We could have flown high in the sky like the birds, but we were like craven chickens, and stuck to the ground. We could have hopped from flower to flower and drunk their nectar like bees, but the flowers were black, and the trees were black, and we are afraid to approach them. We could have lived on the treetops, but we stayed underground and hid in the darkness.

Then one day, the first rainbow emerged in the sky. We had never seen colours before that, we were scared out of our wits. We hid deep in the burrows, certain that some calamity was to befall us. We closed our eyes and took comfort in the darkness. We prayed to our dark gods and huddled together. However, there was one young man among us, who could not forget the colours he had seen. He would close his eyes with his wings, and instead of the darkness he had known and worshipped all those days, his vision was filled with the dance of colours. For many nights after that, he tossed and turned in his sleep, and wondered how it would be if the colours came close to him, if he could touch them, feel them, smell them. The colours from the rainbow wafted through his dreams, and then he knew that he could make his world full of colour and light. He knew with unexplainable certainty that if only he could bring colour to the world, no one would live in burrows anymore, and no one would be scared. They would walk on two legs, and fly through the air, their very being filled with the delight and ecstasy the sight of the colours evoked in him.

He told his friends about his plan. We will wait for a rainbow again, he said. And when that happens, we will fly up towards it, and bring its colours to the earth. The burrow people thought he had gone mad; they were happy with the way they lived, and indeed, many of them had forgotten that they possessed wings at all. However, he managed to convince three others, and the next time the dark clouds and the pale sun came together, they waited at the entrance of their burrows for the rainbow, to emerge. At first sight of her splendid dress, they took off. As they flew higher and higher, the drab earth became smaller and smaller and fell off their feet. The colours of the rainbow shone, they became more real than what they had left behind. The men felt their wings stretch and grow lighter; they felt the wind in their faces and whooped for joy. They had flown so high that they were within reach of the rainbow now; it was trembling gently like many light cloths hanging on a frame, and shone as if with a strange light of its own. They flew through the rainbow; their feathers took on the colours they touched.

On seeing their audacity, the Sky god was outraged. He stretched out one regal leg, and with an almighty kick, sent them all spiraling to the ground. “The colours were meant for the sky; you have stolen them for the earth with your wings! You humans shall no longer have wings!” he cursed. The four men crashed to the ground. They died. Their wings fell off. But wonder of wonders! – everything touched by their feathers gained its own colour. The fruits turned red. The flowers became yellow. The earth that took up green turned into emerald fields. Water that drunk up blue became the sea. The sky fell in love with the blueness of the ocean and took it up as his own colour. The earth wore all the colours and all her treasures revealed themselves to man; however, own skin was still black. But the sight of the earth’s splendor awoke in man’s heart a feeling called beauty. The sky was beautiful, the earth was beautiful, the birds were beautiful, their beaks were beautiful, the trees was beautiful, their dancing leaves were also beautiful. Even when he closed his eyes, he could feel the beauty in his heart. His whole being pulsed with beauty. He was also beautiful, he realized. However, the blackness of his own body repulsed him, for since it reminded him of the darkness he had left behind, it was not beautiful. He spun cotton into softness, and dyed it with all the colours the world gave him, and draped them over his own body, and when he twirled, he felt more beautiful than ever before. After that, human beings emerged out of the burrows and lived in groups amidst beauty, colour and prosperity – green fields, purple mountains, blue rivers, brown earth. Burying their black past underground, they built houses above the ground and lived in them. To distinguish their new lives from the old ways, they decorated their houses with all colours except for the inauspicious black. They dyed cotton and silk and hung them from their tall houses as drapes and curtains. They painted their balconies with colourful motifs, and even dyed the earth at their feet with colours. They celebrated the carnival of life with the auspiciousness of colours; where there were colours, there, there were people, there, there was life. That was how towns and cities were born. Only those of us who know the magic of colours can build a city. And it is such a city that we will be building where we go, concluded Madhiran.

A little girl in their group turned to him with a thoughtful face. “Our ancestress said that the clothes we will dye will always bleed from now. Will the city we weave also bleed like that?” she asked.

Madhiran looked at her inquisitive face. “Cities always bleed,” he said. “It is only because the old Thariyur bled that we are going to go and build our own new Thariyur, you know?”

*

The town they founded as forty weaver families settling south of the Fort was called Chinna Thariyur, the Little Weaver-Town. Over time, weavers from the surrounding towns bled into Chinna Thariyur, and forty families became four hundred. According to the dialect of that land, the name of the town changed to Chinnatharipettai. If you visited Chinnatharipettai in those days, you would find cotton cloths of all colours hanging from the looms, swaying in the sea breeze. On the looms of Little Weaver-Town, an entire city, a civilization, a way of life was born. Pristine white cloth, the finest linen, became the Fort, and when it mellowed and yellowed, it became George Town. The same cloth dyed black became the Black Town. Cotton in mango-yellow became Ezhumbur; in all shades of green, it became Purasai, cloth coloured lotus-pink became Thiruallikeni, and in peacock-blue, it became Mayilapuri. When all these towns came under the white man’s crown, he made the weavers weave them all into a city and called it Madras, in honour of the first weaver of the city. The cloth that had found the city was also called Madras by him. Madras plaids were world-famous by then. But who knows – was it is the seawater, the salt in the air, or the curse on the heads of the Madras weavers? Their prized, colourfast cotton had, just as the old crone had prophesied, started to bleed. The brilliance of the colours disappeared in one wash. Nevertheless, the faded colours appeared stately and the cloth was just as soft, so the demand for Madras did not change.

Madras grew, adding more colours to the cloth on the loom. The towns in Arcot, Mysore, Andhra, and the Chola-Pandiya lands bled copiously in the following decades. People were flowing into Madras. Chettis, Padayachis, Nadars, Mudalis, Paraiyans and Paarpans, Muslims and Christians, Northerners and Easterners, Armenians and Anglo-Indians, all broke free from the roots of their lands and like ants, moved towards Madras in search of a new life. Each person – man, woman, child, was a new colour on the loom of Madras, and they were all woven side by side on the giant tapestry of the city. Many tongues were spoken. People of all shades, for the first time in history, started to live together in the same settlements.

But when cities are born, it is not just the colours that bleed and run into each other. Tears, blood, sweat, they bleed too. A town, a city, an empire – even it is an empire the sun never sets on – tell me, who is answerable for the blood that is spilled to build it? Whose curse willed it? Who will take the responsibility?

After India became independent, after Madras became Chennai, after the old looms of the city got locked up in museums, Madras is evoked as an emotion, a way of life. One day out of the year is observed for Madras; groups of people undertake Heritage Walks every day in the city. The Fort and the High Court and the Chepauk Palace and the Ripon Building are held up as specimens of Old Madras’ colonial glory. We take a collective sigh of pleasure in remembering the history of this city. We built this, our forefathers built this, this is our history, this is our treasure, us heritage walkers say. Each caste clutches the thread of their colour and begins a journey into the past, tracing their glory on the tapestry of the city. But I ask them this – can we say which cloth bleeds to make this city what it is today? Which colour bleeds into the walls of this city? Whose blood stains its glorious past? What colour bled through Madras’s port to Fiji and Jamaica, Singapore and Malaysia, to plant and sprout towns there? What is the colour of the little Madras that has sprouted on the Pacific coast?  What colour bleeds into the Madras that is Chennai, and tints our malls and storefronts, makes the ECR flourish, builds our real estate? What is the colour of the blood that still runs on its streets, and flushes into the Koovam?

*

In the 1950s, there was an American businessman who was fascinated by Madras plaids. A trader from Madras sold him yards and yards of Madras plaid cloth. However, the American did not pay attention when the Madras trader told him that Madras bleeds. The American businessman went home and sold his purchases for a huge profit to a clothing store called Brooks’ Brothers, but they were not at all pleased when they realized that the cloth bled colour. What a huge loss, they rued.

Their fortunes were however turned on their head by a clever advertiser called David Oglivy. He wrote the copy – “This cloth is handmade by the skilled fingers of Indian weavers who pour their sweat and blood and tears into the making of this cloth. They dye this cloth with the finest of all-natural colours. There is no cloth on earth that is softer than Madras. Guaranteed to bleed!” His ad campaign made the American people believe that the bleeding colours of the cloth signified the hard work and handicraft that had gone into the making of it. They were not buying just cloth; they were buying the work and craft of an exotic land. The same cloth was used as lungis by the rickshaw-pullers of Madras went into the making of shirts and pants and ties, marketed at the American upper class white males. They were sold at an exorbitant price, for they were not just buying cloth, but cloth that was guaranteed to bleed. That cloth is still called Bleeding Madras.

*

There is an apocryphal tale that somewhere in Yale University, there hangs a square of Madras cloth in memory of Eluhi Yale, former President of the British East India Company, a philanthropist and slave trader, who was born in the city. I have heard it said, but I don’t know how true the tale is – that there is a trail of black colour that continues to bleed from that square; that all attempts to stop the bleed over the years failed; that the frame has been cleverly constructed to stop people from noticing the ugly bleed.

Bleeding Madras, is still bleeding.