மைத்ரேயி தேவியின் ‘கொல்லப்படுவதில்லை’ நாவலைக் குறித்து எம். கோபாலகிருஷ்ணன் இந்த மாத நீலி இதழில் எழுதிய கடிதத்துக்கு எழுதிய வாசகர் கடிதம்.
ஒரு காதல், இரு புதினங்கள் – எம். கோபாலகிருஷ்ணன் – நீலி கட்டுரை
ஆசிரியருக்கு,
எம். கோபாலகிருஷ்ணன் அவர்கள் மைத்ரேயி தேவியின் ‘கொல்லப்படுவதில்லை’ நாவலைக் குறித்து எழுதிய கட்டுரை சிறப்பானது. ‘மைத்ரேயி தேவி தாகூரின் மாணவி’ என்ற வரியில் நூலைப் பற்றிய மொத்தச் சித்திரமும் நிலைகொண்டது. எழுத்தில் தன்னைப் பற்றிப் பதிவான அவதூறை எழுத்து வழியாகவே முறிக்க முயல்கிறார். அதே சமயம் தன்னுடைய உணர்வுகளுக்கு எப்போதும் உண்மையாக விளங்கும் கவிமனத்தையும் வெளிப்படுத்துகிறார். ஆசிரியர் மைத்ரேயி தேவியின் புத்தகத்தையும் மிர்சியா எலியாத்தின் புத்தகத்தையும் மதிப்பிட்டு ஒப்பிடும் இடம் முக்கியமானது. வடிவம் என்ற அளவில் கூட மைத்ரேயி தேவியின் நூல் மேலும் ஒருமையும் சித்தரிப்பு நுணுக்கமும் கொண்டது என்பது முக்கியமான அவதானிப்பு. அதற்குக் காரணம் மைத்ரேயி தேவி கவிஞரின் உணர்வு நேர்மையும் நாவலாசிரியரின் கதைத்திறனும் முழுமைநோக்கும் கலந்து ஒரு முழு வாழ்க்கைச் சித்திரத்தை அளிப்பது தான் என்று எனக்குத் தோன்றுகிறது.
இவ்விரு நூல்களைப் பற்றிய இதுவரையிலான விவாதம் இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதை போல் ஒரு காதலைப் பற்றிய இருவேறு புதினங்கள் என்றோ, அல்லது ஆணின் கதையாடலை மறுக்கும் பெண்ணின் கதையாடல் என்றோ வகுக்கப்பட்டுள்ளதை காண்கிறேன். அவை வாஸ்தவமான பார்வைகள் தான். ஆனால் இந்த கட்டுரையின் வாயிலாக அந்நூலின் என் வாசிப்பை மீண்டும் அசைப்போடும் வாய்ப்பு கிடைக்கிறது.
அப்படி எண்ணிப்பார்க்கையில், அந்நூலில் மைத்ரேயி காலத்தைப் பற்றிச் சொல்லும் வரிகளே முதலில் நினைவுக்கு வருகின்றன. இளைஞனான மிர்சியா தன்னுடைய இழந்த காதலின் நினைவை தொகுத்துக்கொள்ள அதைப் பற்றி ஒரு கதையை சொல்கிறான். தன்னை மயக்கிச்சென்ற இந்திய மோகினி என்ற ரீதியில் ‘பெங்கால் இரவுகளில்’ மைத்ரேயியை கட்டமைக்கிறான் மிர்சியா. ஆனால் அந்தக் கதையாடலை ஏற்காத மைத்ரேயி பதிலுக்கு ஒரு கதையைச் சொல்கிறாள். அது காதலின் கதையாக இல்லாமல் காலத்தின் கதையாக உள்ளது. ஏனென்றால் அந்தக் கதையை எழுதும் மைத்ரேயிக்கு வயதும், அனுபவமும், இலக்கிய முதிர்வும் வாய்த்திருக்கிறது.
ஆசிரியர் கூறுவதுபோல் மைத்ரேயியின் நாவலில் அவருடைய மொத்த வாழ்க்கைக் கதையும், அவர் வாழ்வு முழுவதும் பூண்ட வெவ்வேறு வேடங்களின் சித்திரங்களும் காணக்கிடைக்கின்றன. மிர்சியா கட்டமைக்கும் ஒற்றைப்படையான, சற்று அசட்டுத்தனமான fantasy-தன்மைக்கொண்ட கதையாடலுக்கு மறுதட்டில் மைத்ரேயி சதையும் குருதியுமான வாழ்க்கையை முன்வைக்கிறார். அவருடைய வலிகளும் தனிமைகளும் மட்டுமல்ல, அவர் ஏய்திய நிறைவுகளும் புரிதல்களும் அக்கதையில் உள்ளது. பெண்களின் எழுத்தின் மிகச் சிறந்த கதையாடல் சாத்தியம் என்பதே, ‘ஆம் அது நடந்தது, ஆனால் கதை அங்கே முடியவில்லை’ என்பது தானோ என்று இந்நூலின் நினைவு எண்ணவைக்கிறது.
மைத்ரேயி தேவி தன்னுடைய வாழ்க்கைச் சித்திரத்தை அடுக்கி அளிக்கும் முறையில் தொட்டுக்காட்டும் இடங்களின் நுட்பத்தை இத்தருணத்தில் எண்ணிக்கொள்கிறேன். துடிப்பும் தீவிரமும் படிப்பாணவமும் கலந்த அவருடைய இளமைக்காலம். அதில் மிர்சியாவின் வருகை ஏற்படுத்தும் உணர்வுமாற்றாங்கள். அவருடைய இளைய சகோதரி அந்த உறவின்மேல் கொள்ளும் பொறாமை. அன்னை அவர்மேல் உணர்வுரீதியாக செலுத்திய ஆதிக்கம். தத்துவ பேராசிரியர் என்ற கர்வம் கொண்ட தந்தையின் சிறுமை. அவர் இறுதியில் சென்றடையும் கீழ்மை. திருமணத்துக்குப் பின்னான தன்னுடைய அன்றாட வாழ்வின் நிறைவையும் தாண்டி அதன் சலிப்பையும் சோர்வையும் எழுதியதில், மைத்ரேயி தேவி தன்னை கருணையேயற்ற நேர்மை கொண்ட படைப்பாளுமை என்று நிறுவுகிறார்.
ஆனால் கட்டுரையில் ஆசிரியர் கூறுவதைப் போல் தாகூரே இந்த நாவலின் மைய அச்சாக விளங்குகிறார். நாவலின் மிகச்சிறந்த இடங்கள் என்று நினைவுக்கு வருவது முதன்மையாக மைத்ரேயியின் காதல் தோல்விக்குக் பிறகு தாகூர் அவருக்கு எழுதும் கடிதம். பிறகு திருமணம் நிச்சயமானதும் வரப்போகும் கணவனைப்பற்றி தாகூரிடம் கூறும் உரையாடல். திருமணத்துக்குப் பின் தாகூரின் கூற்றுக்கேற்ப தனக்கான ஒரு வாழ்க்கையை மலைப்பகுதி வீட்டில் உருவாக்க எண்ணும் மைத்ரேயி உருளைக்கிழங்குகளை பயிரிட்டு வளர்த்து வெற்றிக்கொள்ளும் சித்திரமும் அழகானது. அவருடைய குடும்ப, இலக்கிய, சமூகபணி வாழ்க்கை அனைத்துமே தொடங்கும் புள்ளி அது.
(தாகூரும் காதலி, மனைவி, குழந்தைமகள் என்று பல இழப்புகளைக் கடந்து வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர் என்ற தகவலை அறிந்த வாசகர்களுக்கு இச்சித்திரங்கள் மேலும் ஆழமான பொருளை அளிக்கக்கூடும். “இப்போது மிதந்து வரும் மேகங்கள் மழை பொழிவதுமில்லை, புயலைக் கொண்டுவருவதுமில்லை – என் அஸ்தமன வானில் சில வண்ணங்களை மட்டும் சேர்க்கின்றன” – இது தாகூரின் வரி.)
அப்படியென்றால் அந்த வாழ்க்கையில் மிர்சியாவின் இடம் என்ன? அவனுடைய நினைவு தன்னுடைய ஐம்பது தாண்டிய வயதிலும் அத்தனைத் தீவிரமாக தன்னை பாதித்த விந்தையை மைத்ரேயி தேவி மாய்ந்து எழுதுவதை நாம் காண்கிறோம். அந்நினைவுகளைத் தாண்டி அவன் சொன்ன அவதூறில் இருந்த தனிப்பட்டமுறையிலான ஏமாற்றமும் அவரை அலைக்கழித்தது. ‘ஏன் அப்படி எழுதினாய்?’ என்று உரிமையுடன் கேட்க நினைக்கிறாள்.


இத்தருணத்தில் மைத்ரேயி தன்னுடைய திருமண நாளை சித்தரிக்கும் விதம் நினைவுக்கு வருகிறது. திருமணம் நடந்த இரவில், கணவர் அவர் மனதை அறிந்து கொடுக்கும் இடைவெளியில், மைத்ரேயிக்கு ஒரு கனவு வருகிறது. கானல் சித்திரம் போல் தன்னுடைய அறையில் தோன்றும் மிர்சியா மறைந்து விலகி கங்கையில் கரைந்துவிடும் பிரமை அவருக்கு ஏற்படுகிறது. அந்த அனுபவத்துக்குப் பிறகே மைத்ரேயியால் தன்னுடைய திருமண வாழ்வுக்குள் முழுமனதுடன் நுழையமுடிகிறது.
அப்படி மறைந்துவிட்ட மிர்சியா நடுவயது தாண்டி மீண்டும் வலுவுடன் விழித்துவருவதை காலத்தின் தரிசனமாகவே மைத்ரேயி உணர்வதாகக் கொள்ள முடிகிறது. இது தந்தை வழியே கிடைத்த வரட்டுத் தத்துவப் புரிதலை விட, தாகூர் என்ற கவிஞர் வழியே கிடைத்த மெய்மையறிவு என்றே உணரக்கிடைக்கிறது.
மைத்ரேயி அடையும் கால தரிசனம் வழியாகவே அவர் மிர்சியாவை சந்திக்கும் இறுதி இடத்தை மதிப்பிடுகிறேன். ஆம், அந்தச் சந்திப்பில் மிர்சியா கோழையாக, மிகச்சிறியவராக மைத்ரேயி பார்வையில் நமக்குத் தோற்றமளிக்கிறார். அப்படியென்றால் அத்தருணத்தில் அவர் ‘ந ஹன்யதே’ என்று சொல்வது எதை? தன்னுடைய காதல் கொல்லப்படுவதில்லை, என்கிறாரா? அல்லது கொல்லப்படாத வேறொன்றின் தரிசனத்தைக் கண்டடைகிறாரா? காலமென்று தான் உணர்ந்த வாழ்வின் முழுமைக்கும் இந்தத் தீவிரத்துக்குமான தொடர்பென்ன? காதலுக்கும் காலத்துக்கும் கொல்லப்படமுடியாத அதற்குமான உறவென்ன? இக்கேள்விகள் எனக்குள் இன்னும் நிறைவுகாணாமல் சுழன்றுகொண்டிருக்கின்றன.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஒரு காதல் இரு கதைகள் என்று எப்பொதும் பேசப்படும் இந்நாவலின் படைப்புக்கு மிர்சியாவின் நூல் ஒரு நிமித்தமாகவே விளங்கியது என்று சொல்லத் தோன்றுகிறது. இன்று மிர்சியாவின் நாவல் இந்த சர்ச்சை மூலமாகவே வாசிக்கப்படுகிறது, ஆசிரியரும் அவ்வாறே வாசித்ததாக குறிப்பிடும் இடம் புன்னகைக்க வைத்தது. ஆனால் மைத்ரேயி தேவியின் ‘கொல்லப்படுவதில்லை’ இந்த விவாதத்தின் குறிப்புச்சட்டகத்தைத் தாண்டித், தன்னளவிலேயே கிளாசிக் என்று கூறத்தக்க ஆற்றலுடன் விளங்குவதைக் காண்கிறோம்.

இந்த அழகான நாவலை மீண்டும் விவாதத்திற்குள் கொண்டுவந்த ஆசிரியர் எம். கோபாலகிருஷ்ணனுக்கும் நீலி இதழுக்கும் நன்றி.
சுசித்ரா
(இந்த நாவலைப் பற்றி ஜெயமோகன் எழுதிய கட்டுரை மற்றும் கினு கமானியின் ஆங்கில கட்டுரை, இந்தச் சர்ச்சை வழியாகவே நாவலை அறிமுகம் செய்தன என்றாலும் என் வாசிப்பில் உதவின. வாசகர்களுக்கு உதவலாம் என்று பகிர்கிறேன்.
மைத்ரேயிதேவியின் ‘கொல்லப்படுவதில்லை’: https://www.jeyamohan.in/184/
கினு கமானியின் ‘A Terrible Hurt:The Untold Story behind the Publishing of Maitreyi Devi’ : https://press.uchicago.edu/Misc/Chicago/143651.html)

You must be logged in to post a comment.