[1]
சமீபத்தில் மறைந்த வங்க எழுத்தாளர் ஆஷாபூர்ணாதேவி அவர்களின் சிறுகதைகள் சிலவற்றை வாசித்தேன். ‘Shake the bottle and other stories’ என்ற தலைப்பில் பெங்குயின் வெளியீடாக அருணவா சின்ஹா மொழியாக்கத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள கிண்டில் நூல். 21 கதைகளை கொண்டது. சர்மிளா தாகூரில் முன்னுரையுடன், எழுத்தாளரின் கட்டுரை ஒன்றுடன், இந்த நூல் அழகாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.*

ஆஷாபூர்ணாதேவி அவருடைய மூன்றடுக்கு நாவல் தொடர் வழியாகவே அதிகமும் அறியப்பட்டவர். பிரதம் பிரதிஸ்ருதி (முதல் சபதம், தமிழில் புவனா நடராஜன்), சுபர்ணலதா, பாகுல் கதா என்ற அந்த நாவல்கள் மூன்று தலைமுறை வங்காளப்பெண்களின் கதைகள். அவை நமக்கு நூறு வருட வங்க வறலாற்றை கடந்து வந்த உணர்வை அளிக்க வல்லது. ஆனால் ஆஷாபூர்ணாதேவியின் கைத்தேர்ச்சி தெரியும் இடம் எப்போதுமே அவர் மனித மனத்தை, ஒரு மனம் இன்னொரு மனத்துடன் உறவாடுகையில் கொள்ளும் மாற்றங்களை, திரிபுகளை எழுதும்போது தான். அவர் கண் மனிதர்களுக்குள்ளே பார்க்கும் ஃபோக்கசுடன் எப்போதும் கூர்மைபடுத்தப்பட்டுள்ளது.
முதல் சபதத்தில் சத்தியவதியின் வளர்ச்சியும் மாற்றத்தையும் அவள் குடும்பத்துடனும் ஊருடன் கொள்ளும் உறவையுமே முதன்மையாகக் காட்சிப்படுத்துகிறார். படிப்புக்கான வேட்கையுள்ள எட்டு வயது சிறுமி, பழமைவாதியான கொடுமைக்கார மாமியாருடன் சேர்ந்து வாழ்வதன் வழியாகவே தன் உரிமைகளை தக்கவைத்துக்கொள்ளமுடியும் என்று உணர்ந்து வைராக்கியமாக வாழ்ந்து வளர்கிறாள். ஒரு கட்டத்தில் தன் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்ற உறுதிப்பாட்டின் அலையில் எழுகிறாள். கணவனை கல்கத்தாவில் வேலைத்தேடத் தூண்டுகிறாள். நகருக்குக் குடிபுகுகிறாள். நகரில் அவள் எல்லைகள் விரியத்தொடங்குகின்றன. கணவன் எதிர்ப்பை மீறி சிறு பள்ளியில் மாலை நேர ஆசிரியை ஆகிறாள். இந்த மனிதக் கதையாடலுக்குப் பின்னணியில், மங்கலாக, வங்காள மறுமலர்ச்சியும் இந்தியச் சுதந்திர போராட்டத்தின் உதயமும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் வரலாற்றின் கதையை நேரடியாகச் சொல்வதில் ஆஷாபூர்ணா தேவி மெனக்கெடுவதில்லை. வரலாறென்பது தனிமனிதர்களின் விருப்புவெறுப்புஉறவுபிரிவுகளின் அலை என்ற அளவிலேயே வரலாறு அவர் கதைகளில் இடம்பெறுகிறது. இந்தக்கதை நிகழும் அதே தருவாயில் இந்தியா முழுவதும் எழுந்த சத்தியவதிகளை பற்றி நாம் நினைக்கையிலேயே அந்தக்கதையின் வரலாற்றுப் பரிணாமம் துலக்கம் பெறுகிறது.
தன்னுடைய சிறுகதைகளிலும் ஆஷாபூர்ணாதேவி மனித மனத்தின் வெவ்வேறு முகங்களை காட்சிப்படுத்துகிறார். நாவல் நமக்களிக்கும் வரலாற்றுச் சித்திரத்தைப்போலவே, சிறுகதைகள் வழியாக, இருபதாம் நூற்றாண்டு வங்கச் சமூகத்தில் நிகழ்ந்த மாற்றங்களின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை அவரால் நமக்கு அளிக்க முடிகிறது. ஆனால் இதுவும் பின்னணித் தோற்றம் தான். ஆஷாபூர்ணாதேவியின் கதைகளின் களன் பெரும்பாலும் நடுத்தர வர்க்க வீடும் மனையும் அங்கே வாழும் மனிதர்களும் தான். இந்தக்களத்தில் வைத்து மனித மனத்தையே அவர் எழுதுகிறார்.
அவர் கதைகளை வாசிக்கையில் ஓர் இறுக்கப்பட்ட உணர்வை தடுக்கமுடியவில்லை. ஏனென்றால் கதைகள் பெரும்பாலும் நிகழ்வது நான்கு சுவற்றிற்குள். வங்காள கூட்டுக்குடும்பத்தின் வேவுபார்க்கும் கண்களுக்கடியில். காட்சி நகரத்திற்கு மாறினாலும் இந்த அமைப்பு மாறுவதில்லை. ஒரு ஃபிளாட்டின் சுவர்கள் இன்னும் இறுக்கமாக மனிதர்களை பொத்திவைக்கிறது. வேலைக்காரிகள் கண்வாங்காமல் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். ஏகாந்தம் என்பதே இல்லை. எப்போதாவது கதை நகருக்குள் நகர்ந்தாலும் பேருந்துகள், டாக்சிகள், கட்டடங்கள் என்று அதே நெரிசல் உணர்வு ஏற்படுகிறது.
ஒரு விதத்தில் இவர் கட்டும் களம் காஃப்காவையும் அசோகமித்திரனையும் நினைவு படுத்துகிறது. நவீனத்துவ யுகத்தில் மனிதன் அன்னியப்படும் சிக்கல் இக்கதைகள் சிலவற்றில் ஒரு சாயலாகக் காணமுடிகிறது (நீலக்குருதி, கதாநாயகன் போன்ற கதைகளில் வரும் வேலையில்லாத இளைஞர்கள்). கதைமாந்தர் பலரும் வெவ்வேறு காரணங்களுக்காக தனிமைப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் ஒரு மாதிரி (template) நவீனத்துவப் படைப்பில் வருவதுபோல் நிறம், குணம் இல்லாத மனிதன் நவீன யுகத்தின், அபத்தத்தின் சுழற்சியில் மாட்டிக்கொள்ளும் கதையை ஆசிரியர் சொல்வதில்லை. இக்கதைகளின் பாத்திரங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு நிறங்கள் கொண்டவர்கள். ஒரு பண்பாட்டுப்புலத்திலிருந்து வந்து காலமாற்றத்தில் சிக்கிக்கொண்டவர்கள். அவர்களுடைய சிக்கலான மன அமைப்புகளை ஆசிரியர் மீண்டும் மீண்டும் நமக்கு காட்சியாக்குகிறார். இந்தக் கதாபாத்திரங்களின் இறுக்கம் அவர்களுடைய சூழலிலிருந்து வருகிறதா, அல்லது அவர்களுடைய சொந்த மன அமைப்புகளிலிருந்தும், எண்ணச்சுழல்களிலிருந்தும் வருகிறதா என்று நம்மை எண்ண வைக்கிறது.
நவீனத்துவப் படைப்பு மனிதன் என்ற தனியனை உலகு என்ற ஒற்றைப்படையான, புரிந்துகொள்ளமுடியாத சுழற்சியில் வைத்து ஆறாய்கிறது. ஆனால் இந்தக்கதைகளில் ஆசிரியர் மனிதனை தன்னைப்போன்ற மற்ற மனிதர்களுக்கிடையே வைக்கிறார். ஒவ்வொரு மனிதனுக்கும் மற்றவர்களின் அளவுக்கே ‘தான்’ என்ற உணர்வும், தனக்கான நியாயங்களும், ஆசைகளும் ஆத்திரங்களும் இருக்கின்றன. அவை ஒன்றுடன் ஒன்று மோதும்போது புரிந்துகொள்ளவேமுடியாத இறுக்கமும் தனிமைப்படுத்தலும் உருவாகிறது. ஜனசமுத்திரத்தில் அன்னியப்படுகிறான் மனிதன். எங்கும் தண்ணீர், எங்கும் தண்ணீர், குடிக்க மட்டும் ஒரு துளி இல்லையே என்ற கவிஞனின் வரி நினைவுக்கு வருகிறது.
சிறந்த உதாரணம் ‘கழைக்கூத்து’ என்ற கதை (A Balancing Act). ஒரு குடும்பம். வேலைக்குப்போகும் குடும்பத்தலைவி, அவள் கணவர். அவர்களுக்கு நான்கு வயது மகள். மகளை ஒவ்வொருநாளும் வேலைக்காரியிடம் விட்டுச்செல்ல வேண்டும். வேலைக்காரிக்கும் வீட்டுக்காரிக்கும் ஒத்துப்போகாது. குழந்தைக்கும் வேலைக்காரியை பிடிக்காது. ஆனால் சகித்துக்கொண்டு வாழ்வதைத்தவிர வேறு வழி இல்லை. ஏனென்றால் வேலைக்காரிக்கு இந்த வேலை தேவை. வீட்டுக்காரிக்கு வேறு ஆள் கிடைக்கமாட்டாள். மாமியார் ஊரில் இருக்கிறாள். அவர்கள் வாழும் பழையபாணி வீட்டுக்கு அவள் தான் சொந்தக்காரி. அவள் ஒத்துக்கொண்டால் வீட்டை விற்றுவிட்டு, ஒரு ஃபிளாட் வாங்கி, ஒரு வண்டியும் வாங்கி வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளலாம். ஆனால் மாமியார் பழையகாலத்து மனுஷி. கணவர் கட்டிய வீட்டை விற்கமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார். அதே நேரத்தில் மகன், மருமகளுடன் வந்து வாழவும் அவளால் முடியவில்லை.
இந்தக்கதையில், ஒவ்வொரு மனிதரும் மற்றவர்களுக்கிடையே விடப்பட்டிருக்கிறார்கள். உணர்வுரீதியான நெரிசலில் வாழ்கிறார்கள். ஒருவர் தன் சுயவிருப்பை நிறைவேற்றிக்கொள்ளும் அளவு மற்றவர்களை சார்ந்தே தீர்மானிக்கப்படுகிறது. சமரசம் ஒன்றே சாத்தியம். மகன் அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையே சமரசம் செய்ய வேண்டும். மனைவி வேலைக்காரிக்கும் குழந்தைக்கும் இடையே சமரசம் செய்யவேண்டும். வேலைக்காரி பிடிக்காத வேலைக்கும், தன் பிழைப்புக்கும் இடையே சமரசம் செய்தாக வேண்டும். குழந்தை தன் வயதை மீறி பெற்றோருக்கும் வேலைக்காரிக்குமிடையே சமரசத்தை அடையவேண்டும். மாபெரும் கழைக்கூத்தாட்டம்.
ஆனால் இத்தனை சமரசங்களை நிகழ்த்தும் போக்கில் அவர்கள் ஒவ்வொருவரும் மற்றொருவரை தோற்கடிக்க நினைக்கிறார்கள். ஏமாற்றப்பார்க்கிறார்கள். கள்ளத்தனம் செய்கிறார்கள். பொய் சொல்கிரார்கள். குரூரமான உண்மைகளையும் சொல்கிறார்கள். இந்தப்பின்னலில் தங்களை நிலைநாட்டிக்கொள்வதன் மூலம் தொடர்ந்து இறுக்கமடைகிறார்கள்.
ஆஷாபூர்ணாதேவியின் கதைமாந்தர்கள் அனைவருமே சாதாரண குடும்ப உருப்பினர்கள். ஓய்வுபெற்ற மாமனார்கள், வீட்டில் அன்னியப்படும் கணவர்கள், மனைவியர், மகள்கள், விதவையான அத்தைமார்கள், குழந்தைகள். ஆனால் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் அதன் interest உள்ளது. கதைக்குள் ஆசிரியர் அதை தெளிவாகவே வரையருக்கிறார். வெவ்வேறு கதாபாத்திரங்களின் interest-கள் மோதுவதைத்தான் ஆசிரியர் கதையாக்குகிறார். கதாபாத்திரங்கள் தங்களுடைய interest-ஐ பாதுகாக்கக் கிட்டத்தட்ட போரே புரிகிறார்கள். உணர்வுரீதியாக, சமூகரீதியாக, அவர்கள் கையில் கிடைக்கும் அத்தனை ஆயுதங்களையும் பிரயோகிக்கிறார்கள். சில சமயங்களில் அத்துமீறி தரம் தாழ்ந்தும் கூட போகிறார்கள். அத்தனையும் மீறி திருப்தியுறாமல் இருக்கிறார்கள்.
கணவன் பணிவாழ்க்கையில் முன்னேர நாட்டியமாடும் மனைவியை பகடைக்காயாய் பயன்படுத்துகிறார் (‘நறுமணத்தின் சாரம்’) . பணவெறி பிடித்த கணவனுக்கு பாடம் புகுட்ட வருமானத்துறை அதிகாரியான முன்னாள் காதலனை வீட்டுக்குள் அழைக்கிறாள் மனைவி (‘ஓரினப்பறவை’). விதவையான பிறகு வீட்டில் தன் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள கணவரின் தம்பியை முப்பது வருட நீதிமன்ற வழக்கில் கட்டிவைக்கிறார் அண்ணி (‘ஆயுதம்’). வீட்டில் வருமானமில்லாமல் வெகுநாள் தங்கிக்கொண்டிருக்கும் கணவரின் நண்பனை அப்புறப்படுத்த அவனைப்பற்றி பொல்லாப்புகளை பறப்புகிறாள் மனைவி (‘கதாநாயகன்’).
அதே சமயம் கதைமாந்தர் அனைவருக்கும் அவரவர் நியாங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் கையறு நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் உலகம் காலுக்கடியில் வழுக்கிச்செல்கையில் கையில் கிடைப்பதையெல்லாம் உடும்புப்பிடியுடன் பிடித்துக்கொள்ளும் வேகமே அவர்களில் செயல்படுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் இயலாமையை சமாளிக்கத்தான் இத்தனை நாடகமாடுகிறார்களா என்று எண்ண வைக்கிறது.
மகளின் கணவர் இறந்துபோகிறார். செய்தி வரும் தருணத்தில் மகள் அமர்க்களமாக அலங்காரம் செய்துகொண்டு அத்தை மகள் கல்யாணத்திற்கு புறப்பட்டுக்கொண்டிருக்கிறாள். அவளுடைய தாய் செய்தியை அவள் விழாவிலிருந்து திரும்பிய பிறகே சொல்கிறாள். சமூகமே கொந்தளிக்கிறது. மகள் தன் வாழ்வில் அனுபவிக்கவிருக்கும் கடைசி உற்சாகத் தருணம் அது. அதை முடிந்த அளவு நீட்டிக்க நினைப்பதில் என்ன தவறு என்று அம்மாக்காரி தருக்கி நிற்கிராள். அதில் உள்ளது அன்னையின் இயலாமை. கூடவே, ஒரு விதமான அறவுணர்வு. தன் வட்டத்திற்குள் அவள் செயல்படுத்தக்கூடிய ஒரு எதிர்ப்புவெறி. (‘ஏமாற்றுக்காரி’)
ஆக ஆஷாபூர்ணாதேவி சொல்லும் கதைகளின் களன் வேண்டுமென்றால் அடுக்களையும் மனையுமாக இருக்கலாம். ஆனால் அவர் சொல்லும் கதைகள் மனிதனின் இயலாமையைப் பற்றியவை. அதிகாரத்தை, அதிகார மோதல்களைப் பற்றியவை.
அடுக்களையானாலும் சரி, நாடாளுமன்றம் ஆனாலும் சரி, போர்க்களம் ஆனாலும் சரி. மனித மனம் ஒன்று தான். மனிதன் தன்னைப்போன்ற மற்ற மனிதர்களுக்கு இடையில் தான் வாழ்ந்தாகவேண்டும். அவனுக்குச் சுய பாதுக்காப்புணர்வு இருக்கும் வரையில், அவன் இயலாமையை உணரும் வரையில், அவன் தன் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பான். அது நியாயமாக அமையும் போது போறாட்டமாகும். அத்துமீறும்போது சுரண்டலாகும். அதிகார வேட்கையாகும். இந்தப்போக்கை நாம் தொடர்ந்து வரலாற்றில் பார்க்கிறோம். ஆனால் இதற்கு ஆதாரமான அமையும் மனித மனத்தின் பரிணாமங்களை ஆஷாபூர்ணாதேவியின் எழுத்து துல்லியமாக, கருணையில்லாமல் அம்பலமாக்குகிறது. வேடங்கள் இல்லாமல் நம்மை நாமே பார்த்துக்கொள்ளும் ஒரு தருணத்தை இந்தக் கதைகள் நமக்கு அளிப்பதே இவற்றின் முதன்மைக் கொடை.
ஆக, அவர் களத்தை வைத்துக்கொண்டு அவரை ‘சாதாரண அடுக்களை எழுத்தாளர்’ என்று குறைத்துவிடுவது அவருக்கு நீதி செய்வதல்ல. ஒரு கதையின் களத்தை மட்டுமே வைத்து அதை ‘நல்ல கதை’ அல்லது ‘சாதாரணக் கதை’ என்று தீர்மானித்துவிடமுடியாது. வெவ்வேறு சாதி,மதப்பின்னணிகளின் அடுக்களைகள், நகரங்களின் அலங்கோலங்கள், பயங்கரமான வன்முறைக் காட்சிகள், பாலியல் நாடகங்கள் என்று பல களங்களைக்கொண்டு எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். ஆனால் அந்த களத்தில் ஆசிரியரின் ஃபோக்கஸ் எதில் உள்ளது என்பது தான் கேள்வி. களன் ஒன்றே கலையை ஆக்குவதில்லை. ஃபோக்கஸ், அது வெளிப்படும் விதம், இவையே கலையை தீர்மானிக்கிறது.
ஆஷாபூர்ணாதேவி பள்ளிப்படிப்பு இல்லாதவர். இளம்பிராயத்திலேயே மணமாகி, ஆசாரமான குடும்பவாழ்க்கைக்குள் வாழ்ந்தபடி 3000 சிறுகதைகளும் 150க்கு மேற்பட்ட நாவல்களும் எழுதியிருக்கிறார். அவர் எழுதியதெல்லாம் அவர் கண்ட ‘அடுக்களைக் கதைகள்’ தாம். ஆனால் அவர் ஃபோக்கஸில் சிக்கியது மானுட மனங்கள். அவை போடும் நாடகங்கள். ஒன்றுடன் ஒன்று தொடுக்கும் சமர். நான் அவர் கதைகளை வாசிக்கையில் என் குடும்பத்தின் மனிதர்களை நினைத்துக்கொள்கிறேன். ஆனால் அதே அளவுக்கு நான் பணிபுரிந்த ஆராய்ச்சித்துறையின் முகங்களையும் நினைத்துக்கொள்கிறேன். பல மில்லியன் டாலர்களும் உலகப்புகழும் அறிவதிகாரமும் புழங்கும் நடைக்கூடங்களும் ஆஷாபூர்ணாதேவியின் அடுக்களை மனிதர்களால் தான் நிரம்பிவழிகிறது.