செயற்கை நுண்ணறிவும் மொழிபெயர்ப்பும் – ஒரு மறுப்பு

“மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரையில் ஏ.ஐ ஒரு வரம் என்றே கருதுகிறேன். இன்று எந்த மொழிபெயர்ப்பாளரும் பேப்பர், பேனா வைத்துக் கொண்டு, மூல நூலைத் திறந்து வைத்து வரிக்கு வரி மொழிபெயர்ப்பதில்லை என்று சொன்னால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். கூகுள் டிரான்ஸ்லேட் பயன்படுத்தி ஒரு பாராவின் தோராயமான வடிவம். பின்னர் மொழிபெயர்ப்பாளரின் மொழி அறிவைக் கொண்டு திருத்தி எழுதுதல் என்றுதான் மொழிபெயர்ப்புச் செயல்பாடு இருக்கிறது. ஏ.ஐ என்பது கூகுளைவிட மேலும் தேர்ந்த ஒரு மொழிபெயர்ப்புச் சாதனம் என்ற புரிதல் இருந்தால், அதைத் திறம்படக் கையாண்டு நிறைய மொழிபெயர்ப்புகளைச் செய்யலாம். ஏ.ஐ என்பது ஒரு கருவி. அந்தக் கருவியை உபயோகித்து மொழிபெயர்ப்பவர் இருமொழிகளையும் திறமையாகக் கையாள்பவராக இருப்பதோடு மட்டுமல்ல, அவர் எந்தத் துறையில் மொழியாக்கம் செய்கிறாரோ அந்தத் துறை குறை குறித்த ஆழ்ந்த அறிவும் உள்ளவராக இருந்தால், அற்புதமான மொழிபெயர்ப்புகளை உருவாக்கலாம். ஏ.ஐ ஒரே வாக்கியத்தின் பல்வேறு சாத்தியமான வடிவங்களை அடுக்கிக் காட்டும். அதில் துல்லியமான மொழியாக்கத்தைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அந்த மொழிபெயர்ப்பாளருக்கு உண்டு. அந்தத் தேர்ந்தெடுக்கும் திறன் உள்ளவர்தான் திறமையான மொழிபெயர்ப்பாளர் என்று இனி அறியப்படுவார் என்று நினைக்கிறேன்.”

நண்பர் விசு அவருடைய வலைத்தளத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த உருவாகிவரும் இலக்கிய ஆளுமைகளை நேர்காணல் கண்டு வருகிறார். இந்த வாரம் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜெகதீஷ் குமாரின் நேர்காணல் வெளியாகியுள்ளது. மேற்கூரிய வரிகள் அந்நேர்காணலில் “படைப்புகளில் ஏ.ஐ தொழில்நுட்பம் பயன்பாடு குறித்த உங்கள் பார்வை என்ன?” என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்.

ஜெகதீஷ் குமார் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்து வருகிறார். ஜெயமோகனின் சிறுகதைகளின் தொகுப்பு A Fine Thread and Other Stories என்ற பெயரில் ரத்னா புக்ஸ் வழியாக வெளிவந்துள்ளது. பவா செல்லதுரையின் A Journey Through Words என்ற நூல் எமெரால்ட் பப்லிஷர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்நூலுக்காக ஜெகதீஷ் குமார் கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் மொழிபெயர்ப்பு விருதை பெற்றார். சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த வாழும் தமிழ் மாநாட்டில் அவர் தொகுப்புமேற்ப்பார்வையில் இரண்டு நூல்கள் வெளியீடு கண்டது. Born with the Southern Wind, The Sound of the Eastern Waves. திரு பதிப்பகம் வெளியீடு. இரண்டும் சிறுகதைத் தொகுதிகள். ஒன்று மூத்தத்தலைமுறை எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கொண்டது, இன்னொன்று இளந்தலைமுறையினரின் சிறுகதைகளைக் கொண்டது. இந்த நூல்கள் இரண்டே மாதத்தில் எவ்வாறு மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டன என்றும் ஜெகதீஷ் குமார் தன்னுடைய நேர்காணலில் விளக்குகிறார். “ஒரு ஆண்டு கால அவகாசம் இருந்திருந்தால் பத்து நாவல்களையே மொழிபெயர்த்திருக்க முடியும்,” என்றும் கூறுகிறார்.

இவ்வளவு பணிகளை ஆற்றி வரும் ஜெகதீஷ் குமார் மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரையில் ஏ.ஐ ஒரு வரம் என்றே கருதுவதாகக் கூறியதை வாசித்தபோது சற்று ஏமாற்றமாக இருந்தது. அதை விட ஏமாற்றமாக இருந்தது அவர் அதை வெளிப்படுத்திய தொனி. “இன்று எந்த மொழிபெயர்ப்பாளரும் பேப்பர், பேனா வைத்துக் கொண்டு, மூல நூலைத் திறந்து வைத்து வரிக்கு வரி மொழிபெயர்ப்பதில்லை என்று சொன்னால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். கூகுள் டிரான்ஸ்லேட் பயன்படுத்தி ஒரு பாராவின் தோராயமான வடிவம். பின்னர் மொழிபெயர்ப்பாளரின் மொழி அறிவைக் கொண்டு திருத்தி எழுதுதல் என்றுதான் மொழிபெயர்ப்புச் செயல்பாடு இருக்கிறது,” என்கிறார். “இப்பல்லாம் யாருங்க நேர்மையா இருக்கான். எல்லாரும் தான் லஞ்சம் வாங்கறான்,” என்று சொல்வது போன்ற ஒரு வரி.

இத்தருணத்தில் ஜெகதீஷ் குமார் உத்தேசித்துக் கூறுவது உண்மையல்ல என்று கூற கடன்பட்டிருக்கிறேன். அவர் நினைப்பது போல் இங்கே எல்லா மொழிபெயர்ப்பாளர்களும் கூகிள் டிரான்ஸ்லேட் அளிக்கும் தோராயமான வடிவத்தை அடித்து நெம்பி ஒன்றும் தங்கள் பிரதிகளை உருவாக்கிக் கொண்டிருக்கவில்லை. ஒருவேளை அவர் அப்படிச் செய்யலாம். ஆனால் அது பொது வழக்கம் அல்ல. கல்யாண் ராமன் போன்ற அனுபவமுள்ளவர்கள் நூலிலிருந்து மொழிபெயர்ப்பதாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். என்னுடன் தொடர் உரையாடலில் இருக்கும் மொழிபெயர்ப்பாளர் நண்பர்களான ப்ரியம்வதா, ஐஸ்வர்யா, சைதன்யா, விசு, கிருபாலட்சுமி உள்ளிட்ட எவரும் இத்தகைய வழிமுறைகளை பின்பற்றுவதில்லை என்று அறிவேன். ஆம், “மூல நூலை திறந்து வைத்துக் கொண்டு வரிக்கு வரி மொழிபெயர்ப்பு” தான் செய்துகொண்டிருக்கிறோம்.

“கூகுள் டிரான்ஸ்லேட் பயன்படுத்தி ஒரு பாராவின் தோராயமான வடிவம். பின்னர் மொழிபெயர்ப்பாளரின் மொழி அறிவைக் கொண்டு திருத்தி எழுதுதல் என்றுதான் மொழிபெயர்ப்புச் செயல்பாடு இருக்கிறது,” என்று ஜெகதீஷ் குமார் பொதுப்படுத்தி, அதை normalize செய்துக் கூறுவதில் பொதிந்துள்ள நச்சுத்தன்மை என்ன?

முதல் விஷயம், மொழியாக்கம் என்பது ஒரு படைப்பாக்கச் செயல்பாடு. சுதந்திரமான எழுத்தை உருவாக்கும் போது எழுத்தாளர் எவ்வாறு மொழியில் பிரவாகம் போல் ஒன்றைச் சொல்லி ‘நிகழ்த்துகிறாரோ’ அதே போல தன்னளவில் நிகழவேண்டிய ஒரு செயல். கூகிள் டிரன்ஸ்லேட்டோ, செயற்கை நுண்ணறிவோ பயன்படுத்தி பத்திகளை உருவாக்கி அதை இங்கே தட்டி அங்கே தட்டி ஒரு வடிவத்தை ஒருவர் உருவாக்கலாம். விரைவாக ஒரு மொழியாக்கத்தை நிகழ்த்திவிட்டோம் என்ற குதூகலத்தையும் அடையலாம். ஆனால் அது படைப்பூக்கம் கொண்டதாக இருக்காது. தங்குதடையற்ற வெளிப்பாட்டுத் தன்மையும், மொழி ஒருமையும், மொழிபெயர்ப்பாளர் ஒரு சிறந்த வாசகராக தான் மட்டுமே அப்பிரதிமேல் கொண்டுவரக்கூடிய கூர்மையும் இல்லாமல் ஆகும். ‘எண்தேர் தச்சன்’ உருவாக்கும் மரச்சாமானுக்கும் ஐக்கியாவில் விற்கப்படும் மரத்துண்டுகளைக் கொண்டு கட்டிநிறுத்தப்படும் பொருட்களுக்கும் உள்ள வித்தியாசம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஏன், ஐக்கியா மேஜையில் உணவுண்ண முடியாதா என்று கேட்கலாம். ஆனால் புனைவு மொழியாக்கம் உணவுமேஜைப் போல் ஒரு பயன்பாட்டுப் பொருள் அல்ல. அது ஒரு கலைப்பொருள். மூலம் கலையாக வெளிப்பட்டுள்ளது என்று நம்பி கையில் எடுக்கும் மொழிபெயர்ப்பாளர், சென்று சேறும் மொழியிலும் அதைக் கலையாக நிகழ்த்திக் காட்ட வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கிறார். மூலத்தில் கலையென வெளிப்படும் ஒரு சிறுகதையோ நாவலோ மொழியாக்கத்தில் கலையாக அல்லாமல் வெளிப்படுமென்றால் அது மூலநூலுக்கு அம்மொழிபெயர்ப்பாளர் செய்யும் தீங்கு என்று சொல்வேன்.

இன்று தமிழ் இலக்கியத்தை மற்ற இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் உள்ளிட்ட உலக மொழிகளிலும் அறிமுகம் செய்ய தீவிரமான செயல்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் மினி கிருஷ்ணனின் தொகுப்பு மேற்பார்வையில் பல ஆங்கில மொழியாக்கங்கள் சென்ற நான்கைந்து ஆண்டுகளாக தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இந்நூல் பட்டியலை கவனித்தவர்களுக்குத் தெரியும். ஒன்று, அவர்களுடைய தேர்வு இலக்கிய அளவுகோல்களை விட அரசியல் நிலைப்பாடுகளைப் பேணும் அளவிலேயே அமைந்துள்ளன (இப்போது நிகழ்ந்த ஆட்சி மாற்றம் இத்தேர்வுகளை எந்தளவிலாவது பாதிக்குமா என்று பார்க்கவேண்டும்). இரண்டு, அம்முயற்சியில் வெளிவந்துள்ள நூல்களில் பலவும் மிகச்சுமாரான வகையில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. புனைவில் கலை நிகழ்வை அடையாளம் காணாத, படைப்பூக்கமற்ற, தட்டையான, கல்லூரிப் பேராசிரியர் மொழி.

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பாக பெங்களூரில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்டபோது “இந்நூல்களுக்கான வாசகர்கள் யார்?” என்ற கேள்வியை தெரியாத்தனமாகக் கேட்டுவிட்டேன். அரங்கே குத்திக் குலைப்போட எழுந்துவிட்டது. மொழியாக்க நூல்கள் கல்லூரி நூலகங்களுக்குச் செல்லும். அதிர்ஷ்டமிருந்தால் பாடத்திட்டங்களில் சேர்க்கப்படும். அதற்கு வெளியே நீ ‘வாசகன்’ என்று சொல்லும் அந்த வினோத மிருகம் எது? அதைப்பற்றி பேராசிரியர்களான நாம் ஏன் பேச வேண்டும்? ஓ, நீ பேராசிரியர் இல்லையா? அப்படியென்றால் உனக்கென்ன வேலை இங்கே? – என்ற ரீதியில் சென்றது அவர்களுடைய பதில். தங்களுடைய வட்டத்தைத் தாண்டி இலக்கியம் வாசிக்கப்படுகிறது, மொழிபெயர்க்கப்படுகிறது (ஏன், எழுதப்படுகிறது) என்ற பிரக்ஞையே அற்றவர்களாக அவர்கள் தென்பட்டார்கள். 

மொழியாக்கம் என்பதை தன்னளவிலேயே ஒரு கலகச்செயல்பாடாகவும், எதிர்ப்புச் செயல்பாடாகவும் உருவகிக்கும் ஒரு பேராசிரியர் நிரை நம்முடைய கல்லூரிகளில் மலிந்து கிடக்கிறார்கள். ‘குரல்களை பிரதிநித்துப்படுத்தும்’ செயலாக மொழியாக்கத்தை உருவகிக்கிறார்கள். அம்மொழியாக்கம் எப்படியிருந்தால் என்ன? யார் வாசித்தால் என்ன வாசிக்கவில்லையென்றால் என்ன? அந்த பேராசிரியருக்கு அவ்வாண்டுக்கான பதவி உயர்வுக்கும் ஊதிய உயர்வுக்கும் ஒரு ‘டிக்’ அடிக்கப்பட்டுவிட்டதே? இச்செயல்பாடு ஒரு குடிசைத்தொழில் போல நம் கண்ணுக்குத் தெரியாமல் நடந்துகொண்டே இருக்கிறது. லண்டனிலும் ஃபிராங்ஃபர்ட்டிலும் நடக்கும் புத்தக சந்தைகளில் இந்நூல்களில் சில முதன்மையாக பிரதிநித்துவப்படுத்தப்படுகின்றன (அத்தேர்வும் அரசியல் நோக்கத்துக்கு உட்பட்டது). இவ்வாறு தமிழ் இலக்கியம் உலகுக்கு அறிமுகமாகிக்கொண்டிருக்கிறது.

இந்த போக்குக்கு மாற்றாக சில செயல்பாடுகள் சமீபத்தில் உருவாக்கம் கண்டுள்ளன. லண்டனில் அலுவலகம் கொண்டுள்ள திரு பதிப்பகம் வழியாக ஜெயமோகன் நவீன தமிழிலக்கியத்தின் முதன்மையான நூல்களை ஆங்கிலத்தில் உலகெங்கிலும் கிடைக்கச்செய்யும் வகையில் வெளியிட திட்டம் கொண்டுள்ளார். நியூயார்க் வாழும் தமிழ் மாநாட்டில் ஜெகதீஷ் குமார் தொகுத்து வெளியான இரு நூல்களை வெளியிட்டது திரு பதிப்பகம் தான். அவருடைய மகள் சைதன்யா சென்னை மானசா பதிப்பகம் வழியாக தமிழ் இலக்கிய நூல்களின் மொழியாக்கங்களை பதிப்பிக்கிறார். இவ்விரு செயல்பாடுகளும் நவீன தமிழ் இலக்கியம் சார்ந்த அழகியல் வரையரையை அடிக்கோடிட்டுத் தங்கள் பணிகளை நிகழ்த்துகின்றன. இதைத் தவிர எப்போதும் போல மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் அளவில் – அல்லது பதிப்பகங்களுடன் இணைந்து – தாங்கள் விரும்பும் நூல்களை மொழியாக்கம் செய்து பிரசுரிக்கிறார்கள். இப்போக்குகளில் கலை சார்ந்த, அழகியல் சார்ந்த தேர்வு உள்ளது என்பதே தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் செயல்பாடுகளிலிருந்து முக்கியமான வேறுபடுத்தும் அம்சம்.

ஆனால் இதுபோன்ற செயல்பாடுகளிலும் மொழியாக்கத்தை ஒரு வகையான assembly line manufacturing என்ற ரீதியில் கையாளும் போக்கு தென்படுவது வருத்தத்துக்குறிய விஷயம். அரசியல்ரீதியாகவோ, கலைரீதியாகவோ தமிழ் நூல்களை உலகசந்தைக்குள் ‘கொண்டு சென்று சேர்க்கும்’ அவசரம் இன்று தென்படுகிறது. அங்கிருந்து தான் கூகிள் டிரன்ஸ்லேட், செயற்கை நுண்ணறிவு போன்ற இயந்திரங்களை பயன்படுத்திச் செயலாற்றும் போக்கை இயல்பாக்கம் செய்யும் இம்மாதிரியான கருத்துகள் விளைகின்றன. 

மோசமான, அவசரமான மொழியாக்கங்கள், அவற்றை இயற்கையாக விளைவித்தாலும் சரி, செயற்கையாக விளைவித்தாலும் சரி, அரசியல் பிரச்சாரத்துக்கு செய்தாலும் சரி, அழகியல் பிரச்சாரத்துக்கு செய்தாலும் சரி, காலப்போக்கில் தீங்கைத்தான் விளைவிக்கும் என்று நினைக்கிறேன். மேலும், அப்பட்டமான அரசியல் பிரச்சார நோக்கம் கொண்ட முயற்சிகள் தரம் பற்றி கவலைகொள்ளாமல் இருப்பதோ குறுக்குவழிகளை பயன்படுத்துவதோ ஒரு விஷயம். ஆனால் அழகியலை முன்னிலைப்படுத்தும் தரப்பினரே செயற்கை நுண்ணறிவு கொண்டு மொழியாக்கம் செய்வதை இயல்பாக்குவதை புரிந்துகொள்ளமுடியவில்லை. மேலும், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டுள்ள செய்தியை நூல்களில் தெளிவாக தெரிவிக்காமல் பிரசுரிப்போம் என்றால் அது அறமற்றச் செயலும் கூட. 

கலைரீதியாக உச்சத்தில் இருக்கும நம் நூல்களை உலகத்தின் முன் அறிமுகம் செய்யவேண்டும் என்ற கனவை தனிப்பட்டமுறையில் ஆதரிக்கவே செய்கிறேன். என் மொழியாக்கச் செயல்பாடுகளும் அதன் பகுதி என்று தான் கருதுகிறேன். சொல்லப்போனால் அந்த அலையை தொடங்கி வைத்ததில் என்னுடைய குறிப்பிடத்தக்க பங்களிப்பும் உண்டு. ஆனால் மொழியாக்கம் ஒரு கலைச்செயல்பாடு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எந்த இலட்சியத்தின பொறுட்டும் நூல்களை உற்பத்தி செய்து சந்தையில் இறக்கும் நம் அவரசம் அவற்றின் கலைப்பெறுமதியை குலைக்கும் வகையில் அமையக்கூடாது. அது நாம் எந்த இலக்கிய அழகியல் இலட்சியத்துக்காக செயல்படுகிறோமோ அதே இலட்சியத்தை விட்டுக்கொடுப்பதாகத்தான் அமையும். இந்த நிலைப்பாடை தெளிவாக முன்வைக்க விரும்புகிறேன். அதுவே இக்கட்டுரையின் முதன்மையான நோக்கம்.

ஏன், செயற்கை நுண்ணறிவு கொடுக்கும் வரிகளில் சரியான வரியை தேர்ந்தெடுத்து அடுக்கவதில் படைப்பூக்கம் இல்லையா என்ற கேள்வி எழலாம். அது உண்மையான படைப்பூக்கம் அல்ல, ஒருவகையான அடுக்கிவிளையாடும் விளையாட்டு என்பதே என் பதில். இப்பாணியை கையாள்வதில் அடிப்படையிலேயே சில பிரச்சனைகள் உள்ளன. முதல் விஷயம், ஏ.ஐ. உருவாக்கும் வரிகள் அது பல்வேறு வகையான நூல்களிலிருந்து பொறுக்கி அடுக்கிய வரிகளிலிருந்து அடுக்கித் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் ஒரு வடிவம். நிகழ்தகவின் படி ஒரு சொல்லுக்கு அடுத்து என்ன சொல் வரும், ஒரு வரிக்குப் பின்னால் என்ன வரி வரும என்று அது கணக்கிட்டு வைத்திருக்கும். அதன் அடிப்படையில் நம் மூல சொற்றொடர்களுக்கேற்ப அது ஒரு சொற்றொடரை உருவாக்கித் தருகிறது.

ஆனால் அந்த மொழியே ஒரு சராசரி மொழி. செய்தித்தாள் மொழி, ஆய்வேடு மொழி, பாடநூல் மொழி, மஞ்சள் பத்திரிக்கை மொழி என்று அது அனைத்தையும் சராசரிப்படுத்தி ஒரு மொழியை உருவாக்கி வைத்துள்ளது. அதன் வரிகள் அம்மொழியிலேயே அமைந்திருக்கும். சரி, ‘புனைவு மொழியில் எழுதிக்கொடு’ என்று நாம் கேட்டால், நிகழ்தகவின் படி ஏ.ஐ. உருவாக்கும் புனைவு மொழி இன்றைய சமகால புனைவு மொழியின் ஒரு மோசமான சராசரி வடிவமாகவே உள்ளதைக் காணலாம். இலக்கியத்தின் முதல் தகுதியே பிறிதொன்றிலாத்தன்மை என்னும் போது இந்த சராசரித்தனத்தை நோக்கி நாம் செல்வது வீழ்ச்சிக்கே வழிவகுக்கும். ‘வரிக்கு வரி, சொல்லுக்கு சொல் மொழியாக்கம் செய்து கொடு’ என்றெல்லாம் கேட்கலாம். ஆனால் அவ்வாறு உருவாகும் பிரதியை செப்பனிடுவது ஒன்றும் படைப்பூக்கம் கொண்ட செயல் அல்ல. அது ஓர் இயந்திரத்தனமான மொழி. அத நம் மனதை நிறைக்கும். மூலத்தை மட்டும் வாசிக்கையில் இயல்பாக நம் மனதில் வந்தமரும் இணைமொழி சொற்றொடர்கள் வராமலாகும். அவை மட்டுமே படைப்பூக்கம் கொண்டவை. இந்த மொழிக்குவை அவற்றை வராமலேயே தடுத்துவிடும். மேலும் அந்த செயற்கை மொழியிலேயே புழங்கும் தோறும் நம்முடைய அக மொழியும் மாற்றம் கொள்ளக்கூடும். நம்மிடம் இயல்பாக வெளிப்பட்டிருக்கக்கூடிய படைப்பூக்கத்தையும் மழுங்கடிக்கும் செயல் இது.

மொழிபெயர்ப்புகள் ஒரு மொழிக்குள் வருவது ஏன் முக்கியமானவை? அவை அந்த மொழியின் நடையை – ஆகவே சிந்தனைத் தடத்தை – மாற்றியமைக்கக்கூடும் என்பதால். மானுடம் அவ்வாறு தான் ஒருவரை ஒருவர் தூண்டி முன்செல்கிறது. பாரதியும் புதுமைப்பித்தனும் நிகழ்த்திய மொழியாக்கங்கள் தமிழ் நவீன நடையை, சிந்தனையை உருவாக்கிய வரலாறை நாம் அறிவோம்.

பொதுவாக மொழியாக்கங்கள் அந்த மொழிக்காரர்களால் அவர்களுடைய மொழி கற்பனையும் செழுமையும் அடைவதற்க்காக நிகழ்த்தப்படுபவை. வேற்றூர் விதைகளை வாங்கி வந்து நம் நிலத்தில் விதைப்பது போல.

ஆனால் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யும் நம்மைப் போன்றவர்களின் பணி வேறொன்று. நாம் ஆங்கில மொழியையும், ஆங்கில சிந்தனையையும் செழிவுறச் செய்யும் பணியில் இருக்கிறோம். நம்முடைய விதைகளை ஆங்கிலத்தில் நடுகிறோம். நம்மிடம் உலகுக்குக் கொடுக்கத் தனித்தன்மையான சில விஷயங்கள் உண்டு என்ற நம்பிக்கையில் நாம் இச்செயல்களை செய்கிறோம்.

அப்படியென்றால் நாம் நமக்கான ஆங்கிலத்தை மொழியாக்கம் வழியாக படைப்பூக்கத்துடன் உருவாக்குவதன் வழியாக அல்லவா அந்த செல்வாக்கைச் செலுத்த முடியும்? மாறாக ஏற்கனவே உள்ள ஆங்கிலமொழியின் சராசரி வடிவங்களின் மேலும் ஒரு சராசரியை உருவாக்கி அங்கே வைப்பதில் என்ன பலன்?

ஆம், சிலர் படிக்கலாம். ஆம், மொழியாக்கமே இல்லை என்றில்லாமல் இருப்பதற்கு ஒரு மொழியாக்கம் இருப்பது நல்ல விஷயம் தான். ஓர் எழுத்தாளர் தோராயமாக என்ன எழுதுகிறார் என்று அறிய இக்கருவிகள் உதவுகின்றன, உண்மை. சில சுமாரான மொழிபெயர்ப்பாளர்களை விட ஏ.ஐ. தெளிவாகவே மொழிபெயர்க்கிறது, சரி. இந்த அளவில் ஏ.ஐ. உதவலாம்.

ஆனால் இந்த வேறுபாட்டை நாம் அறிந்திருக்க வேண்டும். பயன்படுத்தும்போதும் தெளிவாக பயன்படுத்தவேண்டும். இயற்கையோ, செயற்கையோ, மொழி படைப்பூக்கத்துடனும் ஒருமையுடனும் இல்லாத பட்சத்தில் மொழியாக்கங்கள் பிரசுரிக்கப்பட்டு ‘தமிழின் முகம்’ என்று வெளியிடப்படக்கூடாது. ஏ.ஐ. உதவியுடன் உருவாக்கப்பட்டதென்றால் அம்மொழியாக்கத்தை தனிச்சுற்று அன்றி வெளியிடாமல் இருப்பதே சிறந்தது. தனிச்சுற்றிலும் ‘இது ஏ.ஐ. வழியாக செய்யப்பட்ட மொழியாக்கம், இன்னார் செப்பனிட்டார்’ என்ற வரி இருப்பது அவசியம்.

ஏனென்றால் ஒரு பத்தி மொழியாக்கம் வழியாக ஒரு அயல் இலக்கியவாதியை நாம் மதிப்பிடுவது போல் தானே மற்ற மொழி வாசகர்களும் மதிப்பிடுவார்கள்? அவர் மொழி ஏ.ஐ. வழியாக வடிக்கட்டி அளிக்கப்பட்டுள்ளதை வாசகர் அறிவது தான் நியாயம் என்று நினைக்கிறேன். ஆனால் ஏ.ஐ. மொழியாக்கங்களை பிரசுரித்து முன்னிலைப்படுத்துவோம் என்றால், அது பாதகமாகவே முடியும்.

இன்று புனைவெழுத்தில் ஏ.ஐ. பயன்பாடு குறித்து சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். சமீபத்தில் காமன்வெல்த் சிறுகதை போட்டியில் வெற்றிபெற்ற டிரினிடாட் நாட்டு எழுத்தாளரின் சிறுகதை ஏ.ஐ. உதவியோடு எழுதப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அக்கதையை பிரசுரித்த கிரண்டா இதழும் பரிசு தேர்வுக்குழுவும் தங்கள் தேர்வில் பின்வாங்காத நிலைப்பாடை எடுக்க, இலக்கியவாதிகள் பலர் அதைக் கண்டித்தனர். ‘இன்று ஏ.ஐ. குறூக்கீடு இல்லாமல் எழுதப்படும் ஆங்கிலக் கதைகளும் இந்த இலட்சணத்தில் தான் உள்ளன’ என்ற விமர்சனமும் எழுந்தது.

இந்தப் பின்னணியில் நாம் தமிழிலிருந்து பிரசுரிக்கும் மொழியாக்கங்கள் ஏ.ஐ. கொண்டு செய்யப்பட்டவை என்ற சந்தேகம் எழுந்தால் அது முதன்மையாக நம்முடைய நம்பகத்தன்மையை பாதிக்கும். நம்மைத் தரம் தாழ்ந்தவர்களாக, தன்னம்பிக்கையற்றவர்களாக உலகின் முன் கொண்டு நிறுத்தும்.

இத்தனைக்கும் நம்மிடம் எந்தக் குறையும் இல்லை. நிறைகள் மட்டுமே நம்முடையவை. புதுமைப்பித்தனைப்போல், அசோகமித்திரனைப்போல், கி. ராஜநாராயணனைப்போல், ஜெயமோகனைப்போன்ற மேதைகளை உலகின் முன் உரிய முறையில் அறிமுகம் செய்யும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. அவர்களுடைய தனித்துவத்தை ஆங்கிலத்தில் உருவாக்குவதே நம்முன் உள்ள சவால். சமகால ஆங்கில புனைவு மொழியில் அஸ்திவாரம் கொண்டிருந்தாலும் அதன் எழுச்சிகள் அனைத்தும் புதுமையான, தனித்துவமான மொழியில் அமையவேண்டியது அவசியம். நம்முடைய கதைகளைக் கூற நமக்கான ஆங்கிலத்தை நாமே உருவாக்கிக் கொள்வதே நாம் செய்ய வேண்டியது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சராசரி ஆங்கிலம் நமக்கு இப்பணியில் எவ்வகையிலும் உதவாது. ஏ.ஐ. என்ற சராசரிகளின் சராசரி கண்டிப்பாகக் கைக்கொடுக்காது.

இன்று சில தமிழ் நூல்களின் (இயற்கை) மொழியாக்கங்கள், அமெரிக்காவைச் சேர்ந்த எடிட்டர்களால் செப்பனிடப்பட்டு வெளியிடப்படுவதையும் காண முடிகிறது. இத்தகைய நூல்களில் அமெரிக்க எடிட்டரின் குறுக்கீட்டால் பல இடங்களில் சராசரித்தனமாக, தட்டையாக வாசிக்கக்கிடைக்கிறது. புனைவில் கலை என்பது அதன் தாளத்திலும், அழுத்தங்களிலும், ஏற்ற-இறக்கங்களை அது கையாளும் முறையிலும், frills என்று சொல்லக்கூடிய ஜரிகைகளிலும் கமகங்களிலும் உள்ளது. ஆம், கிட்டத்தட்ட இசைப்போலத்தான். இயற்றப்பட்ட ஒரு பாடலை பாடுவது போல் தான் மொழிபெயர்ப்பும். தட்டையாகவும் பாடலாம். அதன் உட்சிக்கல்களையும் நுட்பங்களையும் பிசகில்லாமல் பாதுகாத்தும் பாடலாம். இரண்டாவதே மேலும் படைப்பூக்கமான வெளிப்பாடாக இருக்கும். எல்லா சராசரித்தனங்களும் புனைவுக்கும் கவிதைக்கும் எதிரானது. நூலைச் செப்பனிடுபவர் இந்த அம்சத்தை கவனத்தில் கொள்ளும் திறனுள்ளவராக இருப்பது அவசியம்.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் சமீபத்தில் அமெரிக்காவின் வெளியீடு கண்ட Stories of the True, The Abyss, மற்றும் அடுத்த மாதம் வெளியாகவுள்ள White Elephant ஆகிய நூல்களுக்கு மொழியளவில் பதிப்பாளர் தரப்பிலிருந்து குறுக்கீடே இருக்கவில்லை. நாவல்களின் தகவல்களை ஃஎப்.எஸ்.ஜி பதிப்பகத்தின் எடிட்டர்கள் சரிபார்த்ததாக ப்ரியம்வதா சொன்னார். ஆனால் மொழியளவில் எந்த குறுக்கீடும் இல்லை. இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

சமீபத்தில் அஜிதன் எழுதிய அல் கிசா நாவலை அவரே மொழியாக்கம் செய்தார். அதன் மொழியை தொகுத்து செப்பனிடச்சொல்லி என்னை கேட்டார். அந்த மொழியாக்கத்தில் நாவலின் மூலமொழி மட்டுமல்லாமல் அவருக்கே உரிய ஓர் அகமொழியும் ஆங்கிலத்தில் வெளிப்படுகிறது. அது சற்று அன்னியமாக இருந்தாலும் தொகுக்கும்போது அந்த விசித்திரமான பகுதிகளை பாதுகாக்கவேண்டும் என்று கவனம் கொள்கிறேன். அது அந்த எழுத்தாளரின், மொழிபெயர்ப்பாளரின் படைப்பூக்கம் வெளிப்படும் கைரேகை. அந்த நாவலின் மொழியுடன் அந்த விசித்திரம் சரளமாக இயைபு கொள்ளும் விதத்திலேயே வெற்றி உள்ளது. இதன் அடிப்படையிலேயே புனைவுகளை – அசலோ, மொழியாக்கமோ – தொகுக்க வேண்டும் என்பது என் புரிதல். 

இந்தியாவில் வெளியாகும் என்னுடைய மொழியாக்க நூல்களை பொறுத்தவரை அடிப்படையான பிழைகளைத் தாண்டி தொகுப்பாளரின் குறுக்கீட்டை நான் அனுமதிப்பதில்லை. ஏனென்றால் இவ்விஷயங்கள் சார்ந்த நுண்ணுணர்வு கொண்ட ஒரு தொகுப்பாளர் இதுவரை அமையவில்லை. ஆனால் மானசா பதிப்பகத்திற்க்காக பாரததேவியின் ‘நிலாக்கள் தூரதூரமாக’ நாவலின் மொழிபெயர்ப்பை வாசித்துத் தொகுத்தபோது அதன் மொழிபெயர்ப்பாளர் மற்றும் பதிப்பாளர் சைதன்யாவுடன் விவாதித்தேன். ஏனென்றால் இவ்விஷயம் சார்ந்த நுண்ணுணர்வு கொண்டவர் அவர்.

இந்த விவாதத்தை ஒட்டி மேலும் ஒரு கருத்தை வெளிப்படுத்துவதும் இத்தருணத்தில் அவசியம் என்று நினைக்கிறேன். ஜெகதீஷ் குமார் தொகுத்து வெளியிட்ட இரண்டு சிறுகதைத் தொகுதிகள் நியூயார்க் வாழும் தமிழ் மாநாட்டில் திரு பதிப்பகம் வெளியீடாக வந்தது. Born with the Southern Wind, The Sound of the Eastern Waves. அந்நூல்களின் உருவாக்கத்தைப் பற்றி ஜெகதீஷ் குமார் தன்னுடைய நேர்காணலில் கூறுகிறார். பெரும்பாலும் அமெரிக்காவைச் சேர்ந்த வாசகர்கள், முதல் முறை ஒரு கதையை இந்தத் தொகுப்புக்காக மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் இளைஞர்கள், இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட அமெரிக்காவின் இரண்டாம் தலைமுறை வம்சாவளியினர். Hill House Editing என்ற அமெரிக்க நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட இந்நூல்கள் வழக்கத்துக்கு மாறாக அட்டையிலும் அத்தகவலை ஏந்தியுள்ளது. அமெரிக்க தொகுப்பாளர் தொகுத்த நூல் என்பது சிறப்பக்குறிய விஷயம் என்று பதிப்பு நிறுவனம் எண்ணியிருக்கலாம்.

இந்நூல்களை அமெரிக்காவிலிருந்து திரும்பும் விமான பயணத்திலேயே வாசித்து முடித்தேன். என்னுடைய மதிப்பீடு எதிர்மறையாகவே இருந்தது. ஆனால் அக்கருத்துக்களை பொதுவில் வைக்கவில்லை. முதல் காரணம் அது எதிர்மறைத்தன்மையை பரப்பும் வகையில் இருக்கும் என்பதால். இது நண்பர்கள் மிகுந்த ஊக்கத்தோடு திரண்டு நிறைவேற்றிய செயல். நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளர்களை அறிமுகம் செய்யும் வகையில் தலா ஓரிரு கதைகள் வாசிக்கக் கிடைக்கச்செய்தது சிறப்புக்குறிய விஷயம். அழகியல் நோக்கோடு நல்ல கதைகளை தேர்வு செய்திருந்தார்கள். குறுகிய காலத்தில் பதிப்பையும் கொண்டுவந்திருந்தார்கள். பலருக்கு இதுவே முதல் பிரசுரம். இந்த ஊக்கம் தொடர வேண்டும் என்ற விரும்புகிறேன். இந்நேர்நிலை அம்சங்களை கணக்கில் கொண்டு எதிர்மறையான கருத்துகளைக் கூற வேண்டாம் என்று நினைத்தேன்.

ஆனால் இந்த விவாதத்தின் பின்னணியில் இக்கருத்துகளை வெளிப்படுத்தாமல் இருப்பது மேலும் எதிர்மறையானது என்று தோன்றுகிறது. ஜெகதீஷ் குமார் மொழியாக்கத்தைப் பற்றி படைப்பூக்கமற்ற, எதிர்மறைத்தன்மை கொண்ட எண்ணத்தையே தன் நேர்காணலில் வெளிப்படுத்தியிருக்கிறார். எவருமே இயந்திரத்தின் துணை இல்லாமல் மொழிபெயர்ப்பதில்லை என்கிறார். அவர் வழிகாட்டலில் புதிய மொழிபெயர்ப்பாளர்கள் களத்துக்கு வரும் வேளையில் அதன் மாற்றுத்தரப்பை உரைக்கவேண்டிய பொறுப்பு நமக்கு ஏற்படுகிறது. அதன் பகுதியாகவே இவ்விமர்சனத்தை முன்வைக்கிறேன்.

அழகியல் ரீதியாக செயல்புரிபவர்களே அருகியிருக்கும் வேளையில் நாமே ஒருவரை ஒருவர் விமர்சித்துச் ‘சண்டைப்போட்டுக்கொள்வது’ சரியா என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் நண்பரின் குரல் கேட்கிறது. ஆனால் அழகியல் என்ற பேச்சு வந்தாலே தரம், நுண்மை ஆகியவற்றை நாம் வரையறுக்கத்தான் வேண்டும் என்பதே அதற்கான பதில். அதைத் தனித்துநின்றே செய்ய வேண்டும். அப்படித்தான் முன்னோடிகள் இருந்திருக்கிறார்கள். இவ்விஷயத்தில் கூட்டு, அணி, தரப்பு போன்ற பாத்தியதைகளை அவர்கள் பொருட்படுத்தியதில்லை. அதே வேளையில, நட்புடனும், நண்பர்களின் செயலூக்கத்துக்கான மதிப்புடனும்  இக்கருத்துகளை முன்வைக்கிறேன். சுருக்கமாக.

Born with the Southern Wind, The Sound of the Eastern Waves, இரண்டு நூல்களும் ஏ.ஐ. உதவியுடன் மொழிபெயர்க்கப்பட்டவையா என்று ஏ.ஐ. பயன்பாட்டை ஆதரிக்கும் தொகுப்பாசிரியர் தான் கூற வேண்டும். நூல்களில் அதைப்பற்றிய தகவல் இல்லை. ஆனால் எப்படியிருந்தாலும் பெரும்பாலன கதைகளின் மொழி மிகத் தட்டையாக இருந்ததைக் காண முடிந்தது. சு. வேணுகோபாலும் சந்திரா தங்கராஜும் சயந்தனும் பாவண்ணனும் கிட்டத்தட்ட ஒரே மொழியில் எழுதுவதைப் போன்ற சாயலை இத்தொகுப்பு அளிக்கிறது. புனைவின் தனித்துவத்துக்கு எதிரான சராசரித்தன்மை மொழியளவில் இந்நூலின் பலவீனம்.

இந்த சராசரித்தன்மை எப்படி வருகிறது? ஒவ்வொரு கதையும் ஒருவர் மொழியாக்கம் செய்ய மேலும் பலரால் தொகுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டதாக தொகுப்பாசிரியர் கூறுகிறார். மேலும் அமெரிக்க தொகுப்பாளர் பெரும்பாலான கதைகளை ஒரு சராசரி அமெரிக்க மொழிக்கு (register) கொண்டுவந்துள்ளார்.  மொழிபெயர்ப்பாளரின் கைரேகையென்று வெகு சில கதைகளிலேயே தென்படுகிறது (மேகனா, சுவேதா போன்றவர்களை குறிப்பிட வேண்டும்). ஆகக் கதைகளின் தேர்வு சிறப்பாக இருந்தாலும், ஒவ்வொரு எழுத்தாளரின் தனியுலகமும் தோராயமாக வாசகருக்கு அறிமுகமானாலும், மொழியில் தனித்துவம் இல்லாத அம்சமும் மொழிசார் கவனமின்மையும் இத்தொகுப்புகளை வெகுவாக கீழே இறக்குகின்றன.

கதை மொழியாக்கங்களில் ஏ.ஐ. பயன்படுத்தப்படவில்லை என்றாலும் நூலின் முன்னுரைகளில் ஏ.ஐ. பயன்பாடு தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. இக்கட்டுரைகளை விமானத்தில் முதன்முறை வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வை மறக்கமாட்டேன். நவீன தமிழிலக்கியத்தின் தனித்தன்மையை கொண்டாடும் நிகழ்வில் வெளியிடப்பட்ட நூல்கள். அந்நூல்களின் முன்னுரை ஏ.ஐ. பயன்பாட்டுடன் எழுதப்பட்டுள்ளதென்றால் அது நம்மைப்பற்றி என்ன செய்தியை அறிவிக்கிறது! நிகழ்வில் நாம் என்ன உடையில் தோன்ற வேண்டும், எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று பாடங்கள் படிப்பிக்கப்பட்டன. நம்முடைய மொழி நம்முடயதாக இருக்கவேண்டியது அதை விட முதன்மையாக அடிப்படை அல்லவா? ஏன், அந்நூல்களை தொகுத்து சொந்தமாக ஒரு கட்டுரை எழுத நம்மிடமா ஆட்களுக்குப் பஞ்சம்?

விருப்பமுள்ளோர் அக்கட்டுரைகளை வாசித்துப்பார்க்கலாம். ஒன்றுமே சொல்லாமல் ஆடம்பரமான மொழியடுக்குகளை உருவாக்கும் ஏ.ஐ. தன் மொழியில் நம்முடைய எழுத்தாளர்களை பற்றிக்கூறும் காலி மதிப்பீடுகளை படித்துப்பார்க்கலாம். இங்கே நிறுத்திக்கொள்கிறேன். அத்தருணத்தில் அடைந்த ஏமாற்றத்தை மட்டும் இப்போது பதிவுசெய்கிறேன்.

இந்த ஏமாற்றம் ஒரு நூல் என்ற அளவில் நின்றுவிட்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் இன்று ஜெகதீஷ் குமாரின் நேர்காணலை வாசிக்கும் போது அவர் தன்னுடைய மொழிபெயர்ப்பு சார்ந்த இலக்கியச் செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகைய படைப்பூக்கமற்ற அஸ்திவாரத்திமேல் தான் கட்டுகிறார் என்று தெரிய வருகிறது. மேலும் ஏ.ஐ.யின் பயன்பாட்டை சர்வசாதாரணமான ஒன்றாகவும், அதை ஒர் இலக்கியப்போக்கு என்பது போலும் பாவித்து கருத்து வழங்குகிறார். ‘எல்லாரும் தான செய்யறாங்க,’ என்கிறார்.

இது அவருடைய கருத்து மட்டும் தான் என்று திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன். இக்கருத்தின் மேல் நின்று அவர் உருவாக்கிய நூல்கள் நல்ல தரத்துக்கு வராதவை என்ற நேர்மையான வாசக அபிப்பிராயத்தை பதிவு செய்கிறேன. ஏ.ஐ. பயன்பாடு சார்ந்து இத்தகைய கருத்துகளை நடைமுறைப்படுத்த நினைக்கும் தரப்புகளை கண்டிக்கிறேன். இவ்விஷயங்களைப்பற்றி தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு நூல்களை மொழியாக்கம் செய்பவர்கள், தொகுப்பாளர்கள், பதிப்பாளர்கள் என்று அனைவரையும் சிந்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். முக்கியமாக, எழுத்தாளர்கள் இவ்விஷயத்தைப் பற்றி யோசிக்க வேண்டும், தங்கள் கருத்துக்களை பதிவுசெய்யவேண்டும் என்று கோறுகிறேன். நம்முடைய கதைகள் சராசரி மொழியில், ஏ.ஐ. மொழியில் உலகென்கும் கொண்டுசெல்லப்படுவது நமக்கு நல்லதல்ல.

வாழும் தமிழ் விழாவின் மிகப்பெரிய பங்களிப்பு என்பது அது இரண்டாம் தலைமுறை அமெரிக்கவாழ் இளவல்கள்மீது செலுத்திய தாக்கம் தான். அவர்களில் பலர் தமிழிலிருந்து வெளிவரப்போகும் நாளைய இலக்கியவாதிகள். எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், விமர்சகர்கள், கலைஞர்கள். நாம் அழகியல் சார்ந்த தரம் பேணுபவர்கள் என்றவகையில் இந்த விஷயத்தில் நாம் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்கத்தான் வேண்:டும். ஏனென்றால் அவர்கள் நம்மை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.

*

காலச்சதுக்கம் – 1

காலச்சதுக்கம் – 2

Featured image credit: The New Yorker

Discover more from சுசித்ரா | Suchitra

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading