ஆருயிர்கெல்லாம்

2015-ஆம் ஆண்டு மார்கழி மாதம் திரு. சஞ்சய் சுப்ரமணியன் அவர்களுக்கு சென்னை சங்கீத வித்வத் சபையின் உயரிய விருதான சங்கீத கலாநிதி வழங்கப்பட்டது. அதை அடுத்து கர்நாடக சங்கீதம் பற்றி அளக்கும் இணையப்பகுதிகளில் சஞ்சய்-சஞ்சய் என்று ஒரு நாமசங்கீர்தனமே நடந்தது. ‘இந்த சீசன் வேர யாருமே பாடல போலருக்கு’ என்று நினைக்கும் அளவுக்கு இணையப்புளகாங்கிதம். நக்கலடித்துக்  கொண்டிருந்தவர்களும் ஒரு கச்சேரிக்கு போய் வந்து சப்லாங்கட்டையை தூக்கிவிட்டனர். ‘பைரவிய கிழிகிழின்னு கிழுச்சுட்டாறு’ என்றெல்லாம் அலசல்கள். (மறுபடியும் ஓட்டவைத்தார்களா? தெரியலை).

விடுமுறைக்கு இந்தியா வந்த நானும் ஒரு ‘கலாநிதி கச்சேரி’யாவது கேட்கவேண்டும் என்று பேராவலுடன் இருந்தேன். சென்னையில் தங்கிய ஒரு நாள் டிக்கெட் கிடைக்கவில்லை. மதுரையில் அவர் கச்சேரி நடப்பதற்கு முதல் நாள் கிளம்பவேண்டிய நிலை. கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆனால் ஊர் திரும்பியதும் நற்செய்தி. நான் வாழும் பாசலில் இருந்து ஒரு மணி நேரத் தொலைவில் அமைந்துள்ள ஜூரிக் நகரில் சஞ்சய் பாட உள்ளார் என்ற அறிவிப்பை முகனூலில் பார்த்தேன்.

28-ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை, காலை 11 மணிக்கு கச்சேரி. 10.30 மணிக்கு கச்சேரி நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டேன்.  சிறு மலை மேல் சிறிய பூங்கா. அதனுள் அமைந்த மிக அழகான ஒரு அருங்காட்சியகம். முகலாயர் காலத்து ஓவியங்களை காட்சிக்கு வைத்திருந்தனர். அருங்காட்சியகத்தின் அடித்தளத்தில் மேடையுடன் ஒரு கூடல் அறை, அங்கு கச்சேரி நடக்கவிருந்தது. இல்லை, இல்லை, ‘நடக்கலாம்’ என்ற நிலையில் இருந்தது.

நான் அங்கு சென்றபோது என் வயதை ஒத்த ஒரு சுவிஸ் அம்மையார் அங்கு நின்ற நாலைந்து பேர்களிடம் ஜெர்மனில் ஏதோ அறிவித்துக்கொண்டிருந்தார். அறிவிப்பு முடிந்ததும் ஒரே முணுமுணுப்பு. கொஞ்சம் தயங்கி ஆங்கிலத்தில் கேட்டென். “என்ன பிரச்சனை?” கைவிரல்களை பின்னி அவிழ்த்துத் தயங்கி சொன்னாள், “இன்று கச்சேரி நடுக்குமா என்று தெரியவில்லை. தொழில்நுட்பச் சிக்கல். மைக் வேலைபார்க்கவில்லை.”

ஐயோ!

என் பின்னால் ஒரு பாலக்காட்டு மாமி, “சின்ன ரூமும் தானே? அதெல்லாம் மைக் இல்லாம பாடிடுவார்.” என்று சஞ்சயின் பிரதிநிதிகணக்காக சொல்லிக்கொண்டிருந்தார்.

“நீங்கள் அமருங்கள். பத்து நிமிடத்தில் நிலைமை தெரிந்துவிடும்,” என்று என் தோளை மெதுவாக தொட்டு அந்த சுவிஸ் பெண்  விரைந்தார்.

ஒரு சராசரி வரவேர்ப்பரையின் அகலநீளங்கள். நூறு பேரை நெருக்கித் தாங்கும். தாழ்ந்த கூரை இருக்கும் இடத்தை மேலும் இருக்கியது. ஒரு பக்கம் மேடை. அதன் மேல் ஒரு கம்பளம். அரியக்குடியே அமர்ந்திருக்கக்கூடும், அத்துனை பழசு. மேடை மேல் ஒரு மிருதங்கம், மூன்று (அதுவரையில்) வேலைசெய்யாத ஒலிபெருக்கிகள், ஒரு பிரம்மாண்ட பூச்செடி. எங்கிருந்தோ வந்த மருதாணி வாசம்.

நேரம் போகப்போக அரங்கம் நிரம்பியது. ஒருவர் ஒலிபெருக்கியை திருகிக்கொண்டிருந்தார். கச்சேரி நடப்பதற்கான சாத்தியகூறுகள் அதிகரித்து வந்ததாக தெரிந்தது. சிறிய அரங்கம் என்பதால் ‘சேம்பர் கான்சர்ட்’ போலவே தோன்றியது. நான் நான்காவது வரிசையில் நட்டநடுவில் அமர்ந்திருந்தேன்; அதுவே மேடைக்கு மிக அருகாமையில் இருந்ததாக தோன்றியது.

அரங்கத்தில் பெரும்பாலானோர் சுவிஸ் நாட்டு மக்கள்; வெள்ளைக்காரர்கள். எனக்கு வலது பக்கம் ஒரு வெள்ளைக்கார மாமா-மாமி ஜோடி. எனக்கு இடதுபக்கம் வந்தமர்ந்து எல்லொரிடமும் புன்னைகையுடன் ‘க்ருட்சீ!’ என்று கூவினார் எண்பது வயதையொத்த ஒரு சுவிஸ் பாட்டி.

11.15க்கு ஒருவர் வந்து கச்சேரி ஆரம்பிக்கப்போவதாகவும், மைக் இப்போது வேலைசெய்ததாகவும் அறிவித்தார். பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்று தோற்றமளித்த திரு. சஞ்சய், திரு. நெய்வேலி வெங்கடேஷ் மற்றும் திரு. வரதராஜன் அவர்கள், வெண்முகிலில் எழுந்து, உஜாலாவுக்கு மாறி, வெண்கடலில் மூழ்கி மூன்று வெண்முத்துக்களாக வந்தமர்ந்தனர்.

image

திரு. சஞ்சய், தான் இதற்கு முன்னால் ஜூரிக்கில் இரண்டு முறை பாடியதாகவும், இரண்டு முறையும் மைக் இல்லாமல் பாடியதாகவும் சொன்னார். தொழில்நுட்ப விரும்பி சஞ்சய் முன் அன்று ஒரு ஸ்ருதி பெட்டியும் ‘அனலாக்’ மைக் மட்டுமே இருந்தது.

கச்சேரி கேட்பதிலும் தொழில்நுட்பத்தை நம்பி வளர்ந்த நான், என் கைப்பேசியில் ‘எவர்னோட்’டை திறந்து ’28-02-16, சஞ்சய் சுப்ரமணியன், ஜூரிக்’ என்று தட்டி ஆயத்தமானேன். பொதுவாக ஒரு கச்சேரியில் பாடும் பாடல்களை ராகம், தாளத்துடன் (தெரியவில்லை என்றால் உடனே இணையத்தில் தேடி கண்டுபிடித்து) குறிப்பு எடுத்துக்கொள்வது வழக்கம். அது அப்படியே ஈ-மெயிலில் பதிவேரிவிடும். வீடு திரும்பியதும் அந்த பாடலின் வரிகளை எடுத்து, தெரியாத பாடல்களை இயற்றியவரை தேடிப் பிடித்து, அவரை பற்றி படித்து, அவர் இயற்றிய மற்ற பாடல்களை கேட்டு, இப்படி என்னை போன்ற நவீன ரசிகனின் இசைகவனிப்பும் ரசனையும் கச்சேரியையும் தாண்டி நீள்கிறது.

நான் கைபேசியில் தட்டிக்கொண்டிருப்பதை கவனித்த சுவிஸ் பாட்டி, “கச்சேரியை பதிவு செய்ய போறியா?” என்றார். “ஐயோ, சத்தியமா இல்லை… சும்மா என்ன பாட்டு பாடறார்னு எழுதிக்கலாம்னு…” என்றேன். பாட்டி என்னை உற்று நோக்கினார். “ஓஹோ. சரி, ஆனா கச்சேரி நடக்கும் பொழுது அதில் வெளிச்சம் வரக்கூடாது.”

செல்பேசி வாங்கியதிலிருந்து முதல்முறை என நினைக்கிறேன். அது இல்லாமல் ஒரு முழு கச்சேரி கேட்டேன். பேப்பர்-பேனா என்ற சற்று பழைய டெக்னாலஜி தான் காபாத்தியது.

இதற்கு முன் நான் வாழ்ந்த பிட்ஸ்பர்க் நகரில் நடந்த கச்சேரிகளுக்கு பெரும்பான்மையாக இந்தியர்களே வருவர். அதனால் ஒரு சிறு ஐயம். இவ்வளவும் சுவிஸ் மக்கள். பெரும்பான்மையான இந்தியர்கள் பேசும் எந்த ஒரு மொழியையும் பேசாதவர்கள். இவர்களுக்கு இந்த இசை புரியுமா? ஒரு சிறு வெளிச்சம் வரவே பொறுக்கவில்லையே? இடையிடையே கைதட்டினால் கோபப்படுவார்களா? முக்கியமாக, இவர்களின் மாறுபட்ட ரசனை எனது கச்சேரி அனுபவத்தை குலைக்குமா?

நான் ஐயப்படும் நேரத்தில் அறிமுகங்கள், சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து கச்சேரி துடங்கியது.

தொடக்கம் அடதாள வர்ணம். ரீதிகௌளை. இரண்டாம் காலம்  அடுத்து வருபவைக்கு முன்னோட்டமாக அமைந்தது.

அடுத்து, பூர்விகல்யாணி ராகத்தின் வரைபடம் மட்டும். தொடர்ந்து, எதிர்பார்ப்புக்கு மாறாக மிக இனிமையாக வந்த பாடல், கண்ட சாபுவில் வள்ளலாரின் திருவருட்பா. “அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும், ஆருயிர்களுக்கெல்லாம் அன்பு செய்தல் வேண்டும்.”

“எப்பாரும் எப்பதமும்” என்ற தொடர் கச்சேரியில் ஒரு inflection point. அத்தொடரின் சங்கதிகள் அபாரமாக அமைந்தன.  அது வரை இல்லாத ஏதோ ஒரு சக்தி அவர் இசையில் புகுந்துக்கொண்டது. ஏதோ வகையில் இசைகேட்போரின் ஆற்றலும் இசை பாடிவாசிப்போரின் ஆற்றலும் ஒரே ஆற்றலின் அலயோட்டமாக தோன்றியது. ‘Feeding off audience energy’ என்றால் இது தான் போலும். மிகச்சிறிய அரை, நெருக்கி அமர்ந்தோம். ஆயிரம் கண்ணாடி துண்டுகள் பரப்பப்பட்ட அறையில் ஓரொளித்துண்டென அன்றைய இசை அமைந்தது.

பல்லவி பாடும் போதே பாட்டி நாற்காலியின் முனைக்கு வந்துவிட்டார். வைத்தக்கண் வாங்காமல் சஞ்சய்யை நோக்கிக்கொண்டிருந்தார். “..ஆருயிர்களுக்கெல்லாம் அன்பு செய்தல் வேண்டும்” என்று அவர் மறுபடியும் பல்லவி முடிக்கும்போது அவர்களின் கை சிலிர்த்தது.

பூர்விகல்யாணியின் இறுதியில் பெரும் கைதட்டல். ஜூரிக் ரசிகர்கள் கைதட்டத் தொடங்கினால் ஒரு முழு நிமிடம் தட்டாமல் விடமாட்டார்கள் போல. அரங்கமே அடுத்தடப்  பாடலுக்கு ஆயத்தமானோம்.

ராகம், கரஹரப்ரியா. அழகான ஆலாபனை. தொடர்ந்து பாபநாசம் சிவன் கிருதி – செந்தில் ஆண்டவன். மந்தகதி. நிதானமாகத்  தொடங்கினார். அதுவரை அவையில் இருந்த ஆழமைதி சற்று விலகி ஒரு இனிமையான சன்னம் நிலைகொண்டது. அமைதிக்கடல் அலையாடுவது போல.

பௌர்ணமி நாள் வர வர கடல் கொந்தளிப்பு அதிகரிப்பது போல, “வடிவேலன், வள்ளி தெய்வானை லோலன்” என்ற அற்புத காட்சியோடு நிரவல் வர, இசையும் தீவிரம் அடைந்தது. ஒருகட்டத்தில் வேலன், வள்ளி, தெய்வானையோடு நான்காவது சக்கரமாக நானும் தமிழ் நிலபரப்பெல்லாம் சுற்றிவந்த பிரமை. சாதுர்யமான நிரவல். முழித்துப்பார்த்தால் பாப் மார்லி பாடல் கேட்பது போல என் தலை முன்னும் பின்னும் நிரவலுக்கேர்ப்ப தானாக ஆடிக்கொண்டிருந்தது. “It was such a fun neraval!” என்ற சொல்லாட்சி சஞ்சயின் இசைக்கே பொருந்தும்!

ஸ்வரங்கள் பிரமிக்கும்படி இருந்தன. மேலோட்டமாக பார்த்தால் எளிமையாக காட்சியளித்து, கொஞ்சம் ஆராய்ந்தால் அற்புதமான கட்டமைப்பை திறந்து காட்டியது. இது வரை கேட்ட கரஹரப்ரியா ஒரு பாதையற்ற காடு எனவும், கால்பதித்த இடமெல்லாம் பாதை உருவாயிருந்தது எனவும், ஸ்வரங்கள் காட்டின் மேல் யாரோ விட்ட வானவேடிக்கைகளென, நடந்த பாதைகளை துல்லியமாக ஒருகணநோடிக்குக் காட்டியது எனவும் தோன்றியது. வெடித்து சிதறிய ஸ்வரங்களை தணிக்க பாடலின் கடைசி வரி “குகபெருமான் ராமதாஸன் அகம்வளர் சண்முக பெருமான்” மென்மழையென பொழிந்தது.

திரு. சஞ்சயின் இசை ஆற்றலும், மிகமுக்கியமாக அவ்வாற்றல் என்னும் குதிரையை ஆளும் அபார திறனும் வியக்கவைக்கின்றன.

பெரும் ஆரவாரம் அடங்கியதும் பத்து நிமிட இடைவேளை அறிவித்தார்கள்! அட 🙂 சென்னை கச்சேரிகளிலும் இப்படி ஒன்று இருந்தால் டிபன் சாப்பிட வசதியாக இருக்குமே!

இடைவேளை முடிந்து ஒரு சலசலப்பு. சட்டென்று “மாகேலரா விசாரமு” (அன்று பாடிய ஒரே தெலுகு கீர்த்தனை) பாடி, ராகம் தானம் பல்லவிக்குப் போனார்.

பிருந்தாவன சாரங்கா. சொல்லவேண்டுமா? மணத்தில் மயங்கி மலர்களை வட்டமிடும் வண்டுகளாக இசையில் விழுந்தோம். நந்தவனம், பன்னிறமலர்கள், இனம்புரியா நறுமணங்கள், சிற்றோடை, நீலவானம், பஞ்சுமேகம், பச்சிலை மரங்கள், குயில்பாட்டு, குழலோசை. ஒரு மயில் தோகை விரித்து மெல்ல நீலக்கழுத்தை அசைத்தது. பெண்மயில் நோக்கி அதன் கண்மணி ஆடியது.

மேல்ஸ்தாயி ரிஷபத்தை தொடும்போதெல்லாம் ஒரு சிலிர்ப்பு. படைப்பு நிலையை உணர்த்தியது அந்த ராகம். மலையெல்லாம் நீலகுறிஞ்சி பூத்தபோது சங்ககவிஞனுக்கு தோன்றிய உணர்வு இதுவாகத்தான் இருந்திருக்கவேண்டும். இந்த பிரபஞ்சம் உருவாகக் காரணமாக இருந்த ஆதி படைப்பு ஒன்று இருந்ததே? அந்த படைப்புத்தருணத்தில் இப்படி ஒரு இசை ஒலித்திருக்கவேண்டும்!

இது காதலின் இசை. காமத்தின் இசை. பேரின்பத்தின் இசை. ஒரு முடிவில்லா கனவின் இசை என்று தோன்றியது!

கனவு முடிந்தது. கண்ட திரிபுடையில் பல்லவி ஆரம்பித்தது. சட்டென்று பூமிநோக்கி ஓர் ஈர்ப்புவிசை இழுத்தது.

“உண்மை அறிந்தவர், உன்னை அணிவாரோ?
மாயையே! மாயையே!”

ராகம்-தானம் உருவாக்கிய கனவும் பல்லவியின் கருத்துக்கும் உள்ள முரண்பாடை உணர்ந்து ஸ்தம்பித்தேன். குறிஞ்சிப்பூ அரியது, அபூர்வமான நிறம் உடையது, மிக அழகானது, கொத்துக்கொத்தாக மலை முழுவதும் பூப்பது. அனால் அதற்க்கு மணம் கிடையாது. இப்படிப்பட்ட பூவை கூடலுக்குப் படிமமாக்கியவன் ஞானி, என்று எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு கட்டுரையில் சொல்கிறார். அதே ஞானக்கீற்றை இத்தருணத்தில் உணர்ந்தேன்.

பல்லவி பாடும்போது ஒன்று கவனித்தேன். என்னை சுற்றி அமர்ந்தவர்களின் அசைவுகள் பாடலுக்கேற்ப ஒன்றேபோல் இருந்தது. அவர் இந்தியராகட்டும், சுவிஸ் நாட்டுக்காரர் ஆகட்டும். என்னை பாதித்த இடங்கள் அவர்களையும் பாதித்தது. கூட்டத்தில் கர்நாடக சங்கீதம் தெரிந்தவர்கள் ‘பலே!’ ‘பேஷ்!’ என்று தக்க இடங்களில் உறைத்ததும் மற்றவர்களும் ஒரு ‘ஆஹா!’ சேர்த்துக்கொண்டார்கள். நான் கேட்கும் இசையையே இவர்களும் கேட்கிறார்கள் என்ற எளிய எண்ணம் தோன்றவே மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஆதி மனிதர்கள் சமூகமாக வாழ ஆரம்பித்த காலகட்டத்தில் இசை உருவாகியிருக்கும் என்றும், கூட்டாக அமர்ந்து இசை கேட்பது அவர்களை இணைத்திருக்கக்கூடம் என்றும் தோன்றியது.

தொடர்ந்து நெய்வேலி வெங்கடேஷ் அவர்களின் மிருதங்கம் தனி ஆவர்த்தனம். கச்சேரியின் அதே அலையில் தொடர்ந்தது. அதே வீரியம், அதே அற்புதக் கட்டுப்பாடு. அவர் வாசிப்பை கச்சேரி முழுவதும் மிகவும் ரசித்தேன்.

இறுதியாக, துரிதமாக, கமாஸ். கனம் கிருஷ்ணய்யரின் “என்னமோ வகையாய் வருகுது மானே.” படு ஜோர். எழுந்து ஆடாத குறை. தொடர்ந்து பவமான சுதுடு, வாழிய செந்தமிழ் என்று மங்களமாக கச்சேரி நிறைவடைந்தது.

“மெட்ராஸ்ல கூட இப்படி ஒரு கச்சேரி கேட்டுருக்க முடியாது,” என்ற தமிழ்ப்பேச்சுக்கள். ஒரு வகையில் உண்மை. இவ்வளவு திறந்த மனம்கொண்ட அவை மெட்ராசில் இல்லை என்றே நினைக்கிரேன். திரும்பி நடந்துசெல்லும்போது ‘ஆருயிர்க்கெல்லாம்’ என்ற சொல் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. இசை அருள் தான். அந்த அருள் எல்லா உயிர்களுக்கும் அருளப்பட்டதல்லவா?

கர்நாடக இசையில் நவீனத்துவம் பற்றி, புரட்சி பற்றி நிறைய பேசுகிறோம். பல புரட்சிகள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. சில புரட்சிகள் பொதுவெளியில். சில கச்சேரி அரங்கில். ஆனால் சில புரட்சிகளை அகப்புரட்சி என்றே சொல்ல வேண்டும். சஞ்சய் அவர்களின் புரட்சி மூன்றாம் வகை. ஓய்வில்லா பயிற்சி, தீவிரம்,
படைப்பாற்றலையும் குரலாற்றலையும் இசையாற்றலையும் அற்புதமாக ஆளும் கட்டுப்பாடு, தன் இசைக்கே உரித்தான அந்த கொண்டாட்டம், என்று அவர் இசையில் அவர் ஆளுமை வெளிப்படுகிறது. தமிழ் இசை என்று முழக்கம் கொட்டாமல், போஸ்டர் அடிக்காமல், தன் பாணியில் இசைக்கு எந்த குறையும் வைக்காமல் பல தமிழ் பாடல்களை அறிமுகம் செய்கிறார்.

ஜூரிக் கச்சேரி ஒரு வரலாற்று நிகழ்வை கண்ட திருப்தி அளிக்கிறது.