வாழ்க்கைப்பரிசு

மே மாதம் காவிய முகாமில் நண்பர் ஈரோடு கிருஷ்ணன் கேட்டுக்கொண்டதன் முகமாக அங்கே வந்திருந்த பெண் வாசகர்களுடன் வாசிப்பு சார்ந்து இரவில் உரையாடினேன். அந்நிகழ்வு பற்றிய மனப்பதிவுகளை தனியாக எழுத வேண்டும். சற்று காலம் போகட்டும் என்று காத்திருக்கிறேன்.

அந்நிகழ்வில் என் மனதைத் தூண்டிய விஷயங்கள் இரண்டு. ஒன்று அங்கு வந்திருந்தவர்களில் பலரும் தாங்கள் எழுதவேண்டும் என்ற கனவோடு இருந்தார்கள். இரண்டாவது, வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வமிருக்கும் பெண்கள் எப்படி நேரப்பங்கீடு செய்யலாம், நாளை எப்படி வடிவமைக்கலாம் என்று கேட்டார்கள்.

இரண்டாவது கேள்வி சார்ந்த விவாதம் இது, சுருக்கமாக. இன்று ஜூலை 29. கடந்த இரண்டு வருடங்களாகவே தினந்தோரும் டைரி எழுதும் வழக்கம் கொண்டிருக்கிறேன். அதிக நேரம் இல்லை, காலை ஐந்து நிமிடம். இரவு ஐந்து நிமிடம். அந்த நாளை எப்படி செலவிட வேண்டும், எப்படி செலவிட்டோம் என்ற கணக்கு மட்டும். ஒவ்வொரு மணிநேரத்துக்கும் கூட சில பொழுதுகளில் கணக்கெழுதுவது வழக்கம். கூடவே என்னுடைய மனநிலை சார்ந்து, சூழல் சார்ந்து, அன்று நடந்த குறிப்பிடத்தகுந்த நிகழ்வுகள் சார்ந்து ஓரோர் வரிகள்.

ஆறு மாத இறுதியில் அதுவரையிலான நாட்களை திரும்பப் பார்ப்பது வழக்கம். இன்று அதைச் செய்தேன். இவ்வாறு ஒவ்வொரு நாளையும் கணக்கிடுவதும், மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நம் பயணத்தை நாமே திரும்பிப் பார்த்துக்கொண்டு மாற்றங்கள் வேண்டுமென்றால் செய்துகொள்வதும் இந்த விஷயத்தில் எனக்கு உதவி வரும் உத்திகள். நண்பர்கள் பரிசீலித்துப் பார்க்கலாம்.

இந்த பழக்கத்தைக் கைக்கொள்ள எனக்குக் கடினமாக இருக்கவில்லை. என்னுடைய அறிவியல் பின்புலம் ஒரு காரணமாக இருக்கலாம். ஆய்வுபொருளை எப்படி கவனிப்பது என்பதே அறிவியலின் முதல் பாடம். இங்கே நாமே நமக்கு ஆய்வுபொருள். நம்மை நாம் குறிப்பிட்டவகையில் வடிவமைக்க வேண்டுமென்றால் அது நம்முடைய சுய அவதானத்திலிருந்து தான் தொடங்க முடியும். ஆகவே ஆய்வுபொருளென பாவித்து மனவிலக்கத்துடன் ஒவ்வொரு நாளையும் குறிப்பேட்டில் குறிக்கத் தொடங்கினேன்.

இந்த அணுகுமுறை எனக்கு ஒரு வகையான மனவிடுதலையை அளித்தது. ஒவ்வொருவருக்கும் நம்முடைய ‘நான்’ தான் நம் பிரபஞ்சத்தின் மையம். அதை எட்டி நின்று பார்க்கும் போது எப்படியோ நம்மை நாம், பார்க்கும் அந்த ‘இன்னொருவரிடம்’ ஒப்புக்கொடுத்துவிடுகிறோம். அவர் நம்மை பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை பிறக்கிறது. இன்று இந்த நாளேடு அந்த ‘இன்னொருவரின்’ இடத்தை வகிக்கிறது. அதை எடுத்துப் பார்க்கும் போது என் உண்மை நிலைமையை அது எனக்கு தாட்சண்யமின்றி சட்டகமிட்டுக் காட்டுகிறது. என்னை மட்டுமல்ல, என் சூழலையும் புறவயமாக நோக்க வைக்கிறது.

ஒவ்வொரு நாளும் என்ன வாசிக்கிறேன், என்ன எழுதுகிறேன் என்று தொடங்கி உடற்பயிற்சி செய்தேனா, என்ன உண்டேன், எவ்வளவு நேரம் தூங்கினேன், எத்தனை லீட்டர் தண்ணீர் குடித்தேன் போன்ற தகவல்கள் வரை பட்டியலிடுவது வழக்கம். இந்த நாளேட்டின் பலனாகவே உணவு முறையில் மாற்றம் முதலிய பரிசோதனைகளும் தொடங்கப்பட்டுள்ளன. இனி வரும் நாட்களில் காந்திய பாணி குறிப்புகளும் தோன்ற வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

இப்படி நம் நடத்தையை பற்றி நாமே அனைத்தையும் பட்டியலிட்டு வைத்துக்கொள்வதை ஒருவித கிறுக்குத்தனம் என்று எண்ணிய காலம் உண்டு. ஆனால் இன்று இந்த குறிப்பேடு போல் என் ஆப்த சினேகிதம் இன்னொன்று இல்லை என்று சொல்வேன். ஏனென்றால் அது என்னை நான் இன்று இருப்பதுபோல் தெளிவாகக் காட்டுகிறது. அதன் வழியாகவே நாளை நான் எப்படியெல்லாம் இருக்கலாம் என்ற கனவையும் ஊட்டுகிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற நிதர்சனத்தையும் அதுவே சுட்டிக்காட்டுகிறது. அன்றாட வாழ்க்கையில் எதை மாற்றினால் இலக்கை அடையலாம் என்ற புரிதல் சுளுவாக அமைகிறது. இதன் பக்கங்களை புரட்டும் போதே அதிலிருந்தே புதிய பிம்பம் ஒன்று எழுந்து வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

இந்த குறிப்பேட்டில் பொதுவாக விரிவான உணர்ச்சிப்பூர்வமான ‘டைரிக்குறிப்புகள்’ எழுதுவதில்லை. அப்படி எழுதுவதைப் பற்றி விமர்சனம் ஏதும் இல்லை – இப்போது அது தேவையென்று தோன்றவில்லை, அவ்வளவுதான். அந்த நாளின் உணர்வுகளை ஒரு வரி எழுதினாலும், அதைப் பற்றி என்ன செய்யலாம் என்பதே அடுத்த வரியாக எழுதுவது வழக்கம்.

இத்தகைய pragmatism என்னுடைய இயல்பென்று உணர்ந்ததில்லை. ஆனால் அப்படிப்பார்த்தால் பிறவி இயல்பு என்று வெகு சில விஷயங்களைத் தான் கொண்டு வருகிறோம். அதன் பிறகு நாமே ‘இது நான் / இது நானல்ல’ என்று நம்மை வரையறுத்துக்கொண்டு அந்த வட்டத்துக்குள் நின்றுகொள்கிறோம். முதிர்ச்சி என்பது சூழலுக்கேற்ற ஒரு விதமான வளையும் தன்மை என்ற புரிதல் இன்று ஏற்பட்டுள்ளது. ஆளுமை என்பதே அந்த flexibility-ஐ நாம் நம்மில் வளர்த்தெடுப்பது தான்.

பெண்களுக்காக எழுதுவதால் இதையும் சொல்லலாம். குறிப்பேட்டில் என் மாதச்சுழலையும் பதிவு செய்து கொள்கிறேன். உணர்வுநிலை, சிந்தனைக்கூர்மை மட்டுமல்ல, எழுத்தில் படைப்பூக்கம் சார்ந்தும் அச்சுழலில் எங்கிருக்கிறோம் என்று அறிவது சில குறிப்பிட்ட வகைகளில் எனக்கு உதவுகின்றன.

கடந்த ஒன்றரை வருடமாக என்னுடைய அன்றாடத்தின் முக்கிய பகுதியாக குருஜி சௌந்தரிடம் வெள்ளிமலை முழுமையறிவு வகுப்புகளில் கற்ற யோக பயிற்சி அங்கம் வகிக்கிறது. காலைச்சூரியனின் ஒளிபட பசுமரங்கள் சூழ மொட்டைமாடியில் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த பயிற்சி அளவுக்கே அப்பொழுதில் இயற்கையோடு இருப்பதும் உதவுகிறது. பிரகிருதியின் பகுதியாக இவ்வுடலும் மனமும் எண்ணங்களும் பிரிந்து கரைகின்றன. பிறகு ஒவ்வொன்றும் மீண்டு, செயல்புரியும் கருவியாகத் தங்களை தொகுத்துக்கொள்கின்றன. அப்படி ஒவ்வொரு நாளும் எழுந்து செல்வது ஒளியாலும் காற்றாலும் அளாவித் தீட்டப்படும் ஒரு குளியல் போல உணர்கிறேன்.

இந்த ஆறு மாத காலமும் அன்றாடம் சார்ந்த பதட்டங்களும் சிக்கல்களும் இருந்தன. கோபதாபங்களை சந்திக்க நேர்ந்தது. என்றாலும் பெரும்பாலான நாட்கள் வாசித்திருக்கிறேன், எழுதியிருக்கிறேன் என்று காண மகிழ்ச்சியாக உள்ளது. எழுதிய நாட்களை எல்லாமே ‘ecstatic’ என்று குறிப்பிட்டிருக்கிறேன். பெரும்பாலான நாட்கள் மகிழ்ச்சிக்குறிய பச்சை, அல்லது நீலநிறத்தில் இருப்பதைக் காண்கிறேன். சோர்வை குறிக்கும் சிவப்பு நிற நாட்கள் இருந்தாலும் உடனேயே மீண்டுவிட்டிருப்பதையும் காண்கிறேன். கடந்த ஆண்டை விட என்னை உற்சாகப்படுத்தும் முன்னேற்றம் இது. ஆறுமாத காலம், பெரும்பாலான நாட்கள் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேன், பிடித்ததை செய்திருக்கிறேன் என்பதே கொண்டாட்டமான வெற்றி என்று தோன்றுகிறது இன்று. அனைத்துக்கும் மேலாக, என்னை நானே அணுகி அறிந்திருக்கிறேன். அந்த அறிதல் வழியாக வெகுதூரம் செல்லமுடியும் என்ற உறுதி பிறந்துள்ளது.

இவை எனக்கு உதவுகின்றன என்று மட்டும் சொல்கிறேன். இன்னொருவருக்கு இன்னொரு வாழ்க்கைமுறை உதவலாம். ஆனால் நம்முடைய நாளை கணக்கிட்டுக்கொள்ளாமல், நாம் எங்கிருக்கிறோம், நாம் எங்கு செல்ல வேண்டும் என்று வகுக்காமல், நமக்குறிய வாழ்க்கைமுறை என்ன, செயல்திட்டம் என்ன என்று அறிந்துகொள்ள முடியாது என்பதை மட்டும் இன்று உறுதியாக உணர்கிறேன். நம்மை நாமே அறிந்துகொள்ளும் வாசல்களை நாம் கண்டுகொள்வதில் பெரும் மகிழ்ச்சி உள்ளது. அந்த மகிழ்ச்சியே ஒரு பரிசு தான்.

நான் பயன்படுத்தும் குறிப்பேடு. இச்சுட்டியை அளித்தமைக்காக ஊதியம் ஏதும் பெறவில்லை.

Discover more from சுசித்ரா | Suchitra

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading