போகட்டும்

வாழ்க்கையின் ரகசியங்களில் ஒன்றை சொல்கிறோம் என்ற எந்தத் தன்னுணர்வும் இல்லாமல் அதைச் சொன்னார் டீச்சர். “போகட்டுமே, இப்போது என்ன?”

எந்த அழுத்தமும் இல்லாமல் போகும் போக்கில் தான் அதைச் சொன்னார். எதிரே அமர்ந்த என்னிடம் அக்கருத்தை புகுட்டவேண்டுமென்றோ வலியுறுத்த வேண்டுமென்ற மெனக்கெடல் கூடத் தெரியவில்லை. ஆனால் அதைச் சொல்லிவிட்டு அவர் குழந்தைபோல் சிரித்த சிரிப்பு தான் அது வாழ்க்கையின் அரிய ரகசியங்களில் ஒன்று என்று எனக்கு உணர்த்தியது.

ஒருவேளை அது இசைக்கலைஞர்களுக்கே உரிய கள்ளமின்மையாக இருக்கலாம் என்று டீச்சரின் முகத்தைப் பார்த்தபோது எண்ணம் வந்தது. குழந்தையின் தோற்றம் தான். கன்னத்தில் சதை, கண்களில் ஒளி, கழுத்தில் தன்னம்பிக்கையின் நிமிர்வு, தோளில் விரிவு. கரங்களில் எப்போதும் அப்பால் இருக்கும் ஒன்றை எட்டித் தொட்டுவிடவேண்டும் என்ற விறுவிறுப்பு. சற்றே பூசினாற்போன்ற உருவும் அதற்கு மேல் பாப்-கட்டின் துள்ளலும் உருள் அசைவுகளும் குழந்தை என்ற உணர்வை மேலும் செறிவுபடுத்துகிறது. ஆனால் டீச்சருக்கு இருக்கும், ஐம்பது, அறுபது வயது. விரிந்த முகத்தில் தென்படும் ஓரிரு கோடுகளிலிருந்து ஊகிக்கும் வயது இது. ஒருவேளை மேலேயும் இருக்கலாம்.

டீச்சர் சமீபத்தில் தன்னுடைய சுவாசத்தில் ஏற்பட்டுள்ள வயது சார்ந்த பலவீனங்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். “வேகமான ‘தான்’களை இப்போது சுலபமாகப் பாடமுடிவதில்லை,” என்றார். மால்கௌன்ஸில் அதிவேக அகார ‘தான்’களை அவர் பாடிக்காட்டியபோது எனக்கு வேறுபாடு தெரியவில்லை. ஆனால் டீச்சர், “முன்பெல்லாம் ஐந்து நிமிடங்கள் கூட தொடர்ந்து சிரமமில்லாமல் பாடமுடியும். இப்போது உள்ளே மூச்சு நெருடுவது தெரிகிறது,” என்றார்.

“அப்படியென்றால் என்ன செய்கிறீர்கள்?” என்றேன்.

“சாதகம் தான், வேறென்ன?” என்றார். “காலை மூன்று, இரவு கூடுதலாக இரண்டு மணி நேரம். இதைத்தவிர வகுப்புகள். மற்ற எதையும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. சலோகா, க்யா ஃபரக் பட்தா ஹே?”

மற்றதெல்லாம் போனால் போகட்டுமே, இப்போது என்ன?

டீச்சர் சொன்னார், “சங்கீதம் பாட சுவாசம் தான் மூலதனம். சுவாசத்தை நீட்டித்துத் தளர்வாக்கி நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லையென்றால் பாடுவது சிரமமாகிவிடும் அல்லவா? ஆகவே எல்லாமே இந்த சுவாசத்தைப் பேணும் பொறுட்டுச் செய்வது தான். உணவு, நடை, உடற்பயிற்சி, பழக்கங்கள்… சுவாசத்துக்கு சேவகம் செய்ய உறுதிபூண்டுவிட்டால் போதும், அதுவே நம்மை ஆரோக்கியமாக வைக்கும் என்று படே குருஜி சொல்வார்.

“அவர் ஒரு முறை என்ன சொன்னார் தெரியுமா? நிர்மலா, நான் இல்லாமல் ஆனாலும் என்றுமே உன்னுடைய குரு உன்னுடன் இருப்பார் என்றார். ஆம், குரு இருக்கிறார். ஒவ்வொரு சுவாசத்திலும் இருக்கிறார். சுவாசம் தான் குரு. சுவாசம் தடையில்லாமல் வெளிப்பட்டால் போதும். அடியடியாக, தடையில்லாமல், சீராக… மற்ற எவ்வளவோ விஷயங்கள் வரலாம் போகலாம். ஆனால் விஷயங்களை மனதில் எடுத்துக்கொண்டால் உள்ளே கனமாகிவிடும் பார்த்தாயா? கனமானால் சுவாசம் வேகமிழக்கும். ஆகவே எதுவுமே உண்மையில் முக்கியமில்லை. போகட்டும்… எதையும் எண்ணவேண்டாம்… எதையும் மனதாக்கிக்கொள்ள வேண்டாம். சுவாசம் இருந்தால் போதும் சங்கீதத்துக்கு.”

விரிந்த சிரிப்புடன் கண்கள் ஒளிர டீச்சர் சொன்னவை தனக்குத்தானே என்பது போல் எனக்குத் தோன்றியது. அவர் என்னை நோக்கிப் பேசினாலும் என்னிடம் பேசவில்லை. அவர் பேசப்பேச ஒரு குளிர்ந்த உருண்ட பாறையில் சிற்றருவி வழுக்கிச்செல்லும் உருவகம் மனதில் தோன்றியது. தீராது ஒழுகிச்செல்லும் அருவியாலேயே சீராகி உருண்டு வழவழப்பான மெருகு கொண்டுவிட்ட பாறை.

நிர்மலா டீச்சர் ‘கயால்’ என்ற கற்பனைக்கு முதலிடம் கொடுக்கும் ஹிந்துஸ்தானி இசை வடிவத்தின் விற்பன்னர். வட கர்ணாடகத்தின் தார்வாட்-ஹூப்ளி பகுதியைச் சேர்ந்தவர். கன்னடத்தைத் தவிர கொங்கணி, மராட்டி ஆகிய மொழிகளை பேசி வளர்ந்தார். இந்திய அறிவியல் கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று மருந்து தயாரிப்புத் துறையில் பல ஆண்டுகள் பணிபுரிந்தார்.

கல்லூரி நாட்கள் முதல் தொடர்ச்சியாக ஹிந்துஸ்தானி இசை கற்று வந்தவர், பணி ஓய்வுக்குப் பிறகு முழுநேரம் சங்கீத சாதனையில் ஈடுபடத் தொடங்கினார். தான் அமைத்த இசைப்பள்ளியின் வழியாக மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். அவருடைய மாணவிகளில் ஒருத்தி நான். கடந்த ஒரு வருடமாக ஹிந்துஸ்தானி கயால் இசை கற்று வருகிறேன்.

நிர்மலா டீச்சர் பண்டித் விநாயக் தோர்வி அவர்களின் மாணவி. அவரை நாங்கள் படே குருஜி என்போம். அவரும் தார்வாட் பகுதியைச் சேர்ந்தவர். குருராவ் தேஷ்பாண்டே, பீம்சேன் ஜோஷி, கங்குபாய் ஹங்கல், பஸவராஜ் ராஜ்குரு உள்ளிட்ட ஆசிரியர்களின் மாணவர்.

பீம்சேன் ஜோஷி தனக்காக குருவைத் தேடித் தன் பதின்ம வயதில் வட இந்தியா முழுவதும் வெவ்வேறு ஆசிரியர்களை நாடிப், பிரிந்து, அலைந்த கதைகளை வாசித்திருக்கிறேன். பாடே குருஜி தன் பதின்ம வயதில் குருராவ் தேஷ்பாண்டேயின் மறைவுக்குப் பின் தான் எத்தனை அனாதையாக உணர்ந்தார் என்றும், தன் குருவிடன் முன்பு இசை கற்ற பீம்சென் ஜோஷியைத் தற்செயலாக சந்தித்தபோது ‘நீ அனாதை இல்லை, உனக்கு நான் இருக்கிறேன்’ என்று அவர் தன்னைத் தழுவி ஏற்றுக்கொண்டார் என்றும் கூறியிருக்கிறார். நிர்மலா டீச்சர் தான் ஆய்வு மாணவியாக இருந்த நாட்களில், பகலில் ஆசிரியர் இல்லத்திலும், இரவில் ஆய்வகத்திலும் மாறி மாறி வாழ்ந்து கற்ற தருணங்களைப் பற்றி என்னிடம் பகிர்ந்திருக்கிறார்

இசையைப் பொறுத்தவரை எனக்கு அத்தகைய சோதனைகள் எதுவும் அமையவில்லை. அத்தகைய தாகமும் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இருந்தாலும் புலிபிடித்த குட்டி போல் குரு எனக்கு அமைந்தார். நாங்கள் தங்கியிருக்கும் ஆய்வக வளாகத்தில் உள்ள மாணவர்களுக்கு சங்கீதம் பயிற்றுவிக்க வரும் நிர்மலா டீச்சருடன் அறிமுக ஏற்பட்டது. அவர் எனக்கு ஹிந்துஸ்தானி கற்பிக்க ஒப்புக்கொண்டார். அப்போது கலைஞராக அவருடைய இடம், அவருடைய பாடாந்தரத்தின் சிறப்பு பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது. இல்லம் தேடி வந்து பயிற்றுவிக்கும் நல்லாசிரியர் அவ்வாறே அமைந்தார்.

அப்படியும் மிகுந்த உத்வேகத்துடன் இசை கற்றதாக நான் கூற மாட்டேன். எழுத்து, வாசிப்பு, உடற்பயிற்சி, வேலை, குடும்பம் என்ற நேரம் போக, ஓர் இளைப்பாரலாகவே ஆரம்பத்தில் இசையை கருதினேன். ஆகவே வகுப்புகளைத்தவிர விரிவான சாதனைக்கு நேரம் ஒதுக்கவில்லை. டீச்சருக்கு இது புலப்படாமல் இல்லை. கூர்மையாக, ஆனால் அன்பாக, என்னுடைய அக்கரையின்மையை சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தார்.

ஆனால் எத்தனை விட்டேத்தியாகக் கற்றாலும் இந்த ஓராண்டில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை அவதானிக்கிறேன். முதல் விஷயம், அவர் அளித்த பயிற்சிகளால் என் குரல் அடைந்த மாற்றம். கர்ணாடக சங்கீதத்தை E, F, F# போன்ற தாழ்ந்த கட்டை சுருதிகளில் பாடிக்கொண்டிருந்த நான் இப்போது தடையில்லாமல் A சுருதியில் ஆயாசமில்லாமல் பாடிக்கொண்டிருக்கிறேன். மேலும், கயால் சங்கீதம் இயல்பாக கற்பனைக்கு இடம்கொடுக்கும் இசைப்பாணி. பயிற்சி, சாதகம் என்று நேரம் ஒதுக்கிப் பாடவேண்டாம் என்று நானே முடிவு செய்தாலும், என்னை அறியாமல் பாடிக்கொண்டே இருப்பதை உணர்கிறேன். மனதை வெளிப்படச்செய்கிறது அது. இப்போதெல்லாம் வீட்டு வேலைகளை செய்யும் போதும் ஃபோனில் தான்புராவை இசைக்கவிட்டு பாடுக்கொண்டே இருக்கிறேன். மனம் விட்டு, உடல் விட்டு எங்கோ. என்னையே அறியாமல், மிக மிக இயல்பாக, இசை என்ற மாயத்துக்குள் கொண்டுவரப் பட்டுவிட்டதாக இன்று உணர்கிறேன். இதை ஒருவகையான அருள் என்று தான் உணர முடிகிறது.

இசை இன்று முக்கியமாக உள்ளதா? ஆம் என்றே சொல்ல வேண்டும். தொடர்ச்சியாக இசைக்குள் இருப்பது, முதன்மையாக, எனக்குள் மிக ஆதாரமான, ஆனால் மிக அந்தரங்கமான பகுதியை நிறைவுறச்செய்கிறது. மனம் என்ற தோட்டத்தில் மிகச்சிறிய, மிக அழகிய வெண்ணிற மலர்கள் எங்கோ உள்ளன. தனிமையில் அரும்புபவை. மிதமான, ஆனால் பிரத்யேகமான மணமுள்ளவை. சாதாரணமாகக் கண்ணுக்குத் தென்படாதவை. அவற்றை தொட்டு மலரவைக்கிறது இசை. நான் என்று நான் சொல்லும் நானுக்குள் எவ்வளவு நான் என்று வியந்து கைக்கூப்பி நிறைந்த உள்ளத்துடன் நன்றி நன்றி என்று உணரும் தருணம்.

இசை கேட்பது ஒருவகை இன்பம். ஆனால் ஏன் பாட வேண்டும்? அதிலும் எழுத்து போன்ற முழு ஆற்றலையும் கோறும் பயிற்சியில் இருக்கும் ஒருவருக்கு இசை ஒரு கவனச்சிதறலாக அமைந்துவிடாதா? இவற்றையெல்லாம் உள்ளூர விவாதிப்பதுண்டு. ஆனால் இசைப் பாடுவது உடல்ரீதியாகவும் உணர்வுரீதியாகவும் அழகியல்ரீதியாகவும் என்னை மேம்படுத்துவதாகவே உணர்கிறேன். சுவாசத்தை பயிற்றுவிப்பதால் உடல் மேம்படுகிறது. உணர்வுகளுக்கு வடிவத்தையும், வடிகாலையும் ஒரே சமயம் அளிக்கிறது. சில சமயம் குரலில் மனதைக் கண்டு இதுதானா? என்று ஆச்சரியம் கொள்கிறேன். சில சமயம் மனதின் முனையில் நிற்பது குரலில் வராததை எண்ணி சோர்வுறுகிறேன். ஒவ்வொரு முறையும் சொற்கள் சொற்கள் என்றுதான் தேடுகிறது உள்ளம். இசை இக்கலத்துக்குத் தேவையாகிறது. ஆனால் இசையால் மட்டும் நிறையக்கூடிய கலன் அல்ல இது.

இந்நாட்களில் மீண்டும் என் பதின்வயதின் ஆதர்ச நாயகனான ரபீந்திரநாத் தாகூரை வாசித்துக்கொண்டிருக்கிறேன். மேலும் அணுகி, மேலும் புரிதலுடன். அவர் இயற்றி இசையமைத்த பாடல்களை தீராவெறியுடன் கேட்கிறேன். பாடிக்கொண்டிருக்கிறேன். ‘ரபி’யின் உள்ளம் இசையால் ஆனது. ஆனால் இசையால் மட்டும் ஆனதல்ல. அந்த நுன்முடிச்சைச் சென்று இதோ தொட்டுவிடமுடியும் என்பதுபோல் பரபரக்கிறது உள்ளம்.

பத்மா நதியின் கண்கொள்ளா விரிவுக்கு மேல் கவிந்து நிற்கும் வானம். கரகரவென எகிரி முட்டித் திரண்டு நிற்கும் மேகம். கறுத்துக் காத்து கனத்து நிற்கும் சியாமன். தலைக்கு மேல் உறைந்து நிற்கும் காலம். இடி, மின்னல், வெட்டு. எதை ஏந்திக் கடத்திவிடப்போகிறது தனித்து நிற்கும் இவ்வுயிர். வெடிப்புக்கு ஒரு கணம் முன். எத்தனைப்பெரிய எடை. மழையாக வெடித்து வருகிறது. இசையே, இசையே, எத்தனை கனமான மூலத்திலிருந்து வருகிறாய் நீ? எப்படி எடையற்று அனைத்தையும் உள்ளிழுத்தும் கடந்தும் ஒழுகுகிறாய்? போகட்டும், போகட்டும், போகட்டும் என்று உன் விசையை ஏற்று உன்னை போகவிட்டுப் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர இந்த அபலை, இந்த பாதையற்ற கதியற்றவளுக்கு என்ன வழி?

இசையின் வேகத்தை உடலில் உணரும்தோறும் சொற்களே உள்ளத்தில் முட்டுகின்றன. சொற்கள் வண்ணங்களாகின்றன. காட்சிகளாகின்றன. அல்லது காட்சிகளும் வண்ணங்களும் தான் சொற்களாகின்றனவா? அவை மீண்டும் இசையாகின்றன. சில சமயம் அவ்வனுபவமே நுண்ணிய ஸ்பரிசமாகவும் சருமம் அறிகிறது. மழைக்கு முந்தைய காற்றில் இலை நலுங்குவதுபோல். குளத்துநீர் அலைகொள்வதுபோல்.

சுவாசம் அளைகிறது. உள்ளே, வெளியே, உள்ளே, வெளியே… தோல்வாத்தியம் போல் அதிர்கிறது உடல். உள்ளமும் தோலால் ஆனது. அதன் குரல் சொல். ஆனால் இன்னும் உருக்கொள்ளாதது.

நிர்மலா டீச்சரிடம் கேட்டேன். “ஆம், பாடத்தொடங்கும்போது அப்படித்தான் இருக்கும். போகட்டுமே? அடுத்தக்கட்டத்தில் ஒவ்வொரு ‘ஸ்வர்’-ஆக நிலைத்து பயிற்சி எடுக்கும் நிலை வரும். அது வேறு வகையான அனுபவம். மெல்ல உள்ளே அமைதியாகும்,” என்றார். அந்த அமைதியின் அனுபவ நினைவு கூடினாற்போல் ஒரு தூரத்துப் புன்னகை விரிந்தது அவர் முகத்தில்.

ஆனால் இன்று அப்படி ஓர் அமைதியை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. அலைகொண்டு புரளும் உள்ளத்துக்கு இசை ஒரு வண்ணமும் வடிவமும் கொடுக்கிறது. அதன் விசை தாங்கமுடியாமல் ஆகும்போது மேலும் வடிவமும், மேலும் வேர்கொண்ட நிலைவையும் அடைய சொற்களை நாடுகிறேன். சொற்கள் கட்டுப்படியாகாதபோது மீண்டும் மயில் போல் பறக்க எத்தனிக்கிறேன். இந்த நிலைகொள்ளாமையைத் தாண்டிச் சிந்திக்க முடியவில்லை. என் மனம் அமைதியை நாடவில்லை. பொழிவையே நாடுகிறது. அருவி போல், மழை போல் மேலும் மேலும் என பெரிய விசையை கேட்கிறது. மேலும் மகத்தான ஒரு பாடலைத்தான் கற்பனை செய்கிறது. அந்தப் பொழிவை ‘போகட்டும்’ என்று கடந்து செல்ல விடுவது ஒன்றே இன்று வழியென்று தென்படுகிறது.

இன்று குரு பூர்ணிமை. குருநாதர்களை எண்ணி நன்றி செலுத்தும் நாள். இன்று ஜெயமோகனை எண்ணிக்கொண்டேன். தாகூரை எண்ணிக்கொண்டேன். நித்யாவை, நடராஜ குருவை, யோக ஆசிரியர் குருஜி சௌந்தரை எண்ணிக்கொண்டேன். வியாசனை, காளிதாசனை, தியாகைய்யரை, ஐசக் தினெசனை… நெருங்கியும் கடந்திருந்தும் நம்மை உருவாக்கிய குருநாதர்கள். நம்மைக் கடந்து சென்றுகொண்டிருக்கும் காலத்தின் உருவடிவங்களாக அவர்கள் தோன்றுகிறார்கள். காலத்தின் சுவாசம் அவர்கள் வழியாக நம் நெஞ்சையும் நிறைத்துவிட்டுச் செல்கிறது. ஒருவேளை அதன் கேளா இசையும் நம்மைத் தீண்டிச் செல்கிறதோ?

போகட்டும், அப்பாடலும் ஒரு நாள் கேட்க வாய்க்கட்டும்.

*

Discover more from சுசித்ரா | Suchitra

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading