இஸ்லாம் உள்ளிட்ட பல இடைக்கால சமூகங்களில் பால் பந்தம் என்ற உறவுமுறை இருந்தது. அதாவது ஒரே தாயிடம் பால் குடித்து வளர்ந்த இருவர் தங்களை சகோதரர்களாகக் கருதிக்கொள்ளும் வழக்கம். இன்று குமரித்துறைவியின் தெலுங்கு மொழி மொழியாக்கம் குறித்து நண்பர் ராஜூ எழுதியுள்ள இக்கடிதத்தை வாசித்தபோது இவர் என் பால் சகோதரர் அல்லவா என்ற உணர்வெழுச்சி ஏற்பட்டது.
மொழியாக்கக்காரர்களின் சிறிய இன்பங்களில் ஒன்று தாங்கள் மொழிபெயர்த்த நூலைக்குறித்து அதே நூலை பிறமொழிகளில் மொழியாக்கம் செய்தவர்களுடன் உரையாடுதல். அவ்வின்பத்தின் பலபடி செறிவாக்கப்பட்ட அனுபவமாக ராஜுவின் இக்கடிதத்தை உணர்ந்தேன். அதற்குக்காரணம் குமரித்துறைவி என்ற நூலின் தனித்தன்மை.
குமரித்துறைவி நவீன இலக்கியம் தான். ஆனால் நவீன இலக்கியம் மட்டுமல்ல. நவீன இலக்கியத்தின் அடிநாதம் என்றே சொல்லத்தக்க அவநம்பிக்கைவாதம் அற்ற நூல் அது. சொல்லப்போனால் நம்பிக்கை/அவநம்பிக்கை என்ற இருமையை இந்நூல் கையாள்வதேயில்லை. மீனாட்சி நூலுக்குள் ‘தெய்வமாக’ வருவதைக்காட்டிலும் ‘மகளாகத்தான்’ வருகிறாள். சொந்த மகளைக்குறித்து நம்பிக்கையும் அவநம்பிக்கையும் கொள்வதென்பதே அபத்தமான கூற்றாகிவிடுகிறது, இல்லையா? இந்த உணர்வுதளத்தை அடிப்படையான ஒரு கோட்பாடு (axiom) போல் கொள்கிறது இந்நாவல்.
அப்படியென்றால் நவீன இலக்கியத்துக்குறிய விசாரணை இந்நாவலில் நிகழ்வதில்லையா? நிகழ்கிறது. புறம் சார்ந்து அல்ல, அகம் சார்ந்து நிகழ்கிறது. நாம் ஒவ்வொருநாளும் வாழ்க்கை நிகழ்வுகளில் சந்திக்கும் இப்பிரபஞ்சத்தின் அறியமுடியா கணக்குகளை — எப்போதாவது ‘தெய்வமே’ என்று உணரும் வல்லமைமிக்க அந்த மாயத்தை — எதிர்கொள்ளும்போது மனித உள்ளம் எப்படி எதிர்வினையாற்றுகிறது? இது புறபரிசீலனை அல்ல, சுயபரிசீலனை. அகவிசாரணை. இந்நாவல் அளிக்கும் இன்பம் மீனாட்சியின் தரிசனம் என்று வகுப்பதை விட நம் மனம் அந்த மாயத்தை எதிர்கொள்ளும் புள்ளியை நாமே அடையாளம் காண்பது தான் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த அம்சம் இதை ஓர் ஆன்மிக நூலாகவும் விளங்கச்செய்கிறது.
படைப்பெழுத்தில் இந்த மாயத்தின் அம்சம் உள்ளது. எழுதும்போது அதுவரை தோன்றாது ஒன்று ‘நிகழ்வதை’ அனுபவித்தவர்கள் அறிந்த விஷயம் இது. எங்கிருந்தோ ஒரு விரல் தோன்றி ஒரு பக்கத்தைத் திருப்பி ‘எடுத்துக்கொடுப்பது’ போன்ற அனுபவம். ஆனால் அதை நாம் நம் அகத்தில் நிகழ்வதாகத்தான் உணர்கிறோம். போலவே எழுதும்போது உள்ளத்தில் தடைகளும், தட்டுப்பாடுகளும் நிகழ்கின்றன. அவை எழுவதிலும் விலகுவதிலும் அதே அறியமுடியா மாயத்தன்மை உள்ளது. நம்முடைய நிறையென்றும் குறையென்றும் தான் நம் மனம் அதை கணக்கில் கொள்கிறது.
குமரித்துறைவி போன்ற ஒரு நூலை அடைந்த ஆசிரியர் அதன் வழியாக தான் என்ன அடைந்தார் என்பது குறித்து அதிகம் எழுதியதில்லை. அதை முற்றிலும் ‘மங்கல படைப்பு’ என்று மட்டுமே மீண்டும் மீண்டும் வகுக்கிறார். ஏன் மங்கலம்? அது திருமண நூல் என்பதனால் மட்டும் இல்லை என்று இப்போது தோன்றுகிறது. ஓர் அகம், தனக்கு நேரும் நிறையும் குறையும் தன்னுடையதல்ல என்ற அறிதலை சென்று சேறும் இடம் ஒரு கனிவு.
பிழை நிகழும். அப்பிழைக்கு பொறூப்பேற்க்கவும் வரலாம். ஆனால் பிழை தன்பிழையல்ல என்று எண்ணுமளவுக்கு அகம் கனிந்திருப்பதே விடுதலை.
ஆனால் நம்முடையதல்லாத நிறையும் குறையும் மிகப்பெரிய பரஸ்பர அன்பின்பால் மட்டுமே நம்மை வந்து சேர்பவை என்ற அறிதல் அதைவிடப் பெரிய கனிவு.
அம்மையாலே வேணும்னு நினைச்சாலும் அன்பை குறைச்சுக் கொள்ள முடியுமா மார்த்தாண்டா? அன்பு நாம் அவளுக்கு இட்ட அங்குசமும் சங்கிலியும் இல்லையோ?
இதை விட பெரிய மங்கலம் மனிதனுக்கு வாய்க்க வாய்ப்பில்லை.
இத்தகைய நூலை மொழியாக்கம் செய்ய நேர்ந்ததும், அகவிசாரணைக்கு ஒரு வாய்ப்பாக, ஆகவே மங்கலமாக எனக்கு விளங்கியது. குமரித்துறைவியை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய நான் நான்கு ஆண்டுகள் எடுத்துக்கொண்டேன். சற்று கடுமையான நாட்கள். அந்த காலகட்டம் முழுவதும் இந்நூல் உடனிருந்ததை இப்போது ஆச்சரியமல்லாமல் நோக்குகிறேன். வாழ்க்கையின் எல்லா துயரங்களையும் அற்புதங்களையும் நாமே நமக்கு உருவாக்கி விளையாடிக்கொள்ளும் விளையாட்டுதானோ என்று தோன்றுகிறது இன்று.
இதே உணர்வுநிலைகளை ராஜூ அவர்களின் கடிதத்தில் கண்டேன். அவருக்கு என் அன்பைத் தெரிவிப்பதைத் தவிர இத்தருணத்தில் வேறு சொற்கள் இல்லை. ஆம், சகோதரராகவவே உணர்கிறேன். ‘முக்கடலி முத்யம்’ – முக்கடலின் முத்து – என்ற தலைப்பில் அவர் மொழியாக்கத்தில் குமரித்துறைவி தெலுங்கில் வெளியாகவுள்ளது.
*
குமரித்துறைவி இன்று ஒரு கலாச்சார சொத்தாகவே மாறிவிட்டது. ஒவ்வொருவரும் தங்கள் வழியில் அதை சொந்தம் கொண்டாடுகிறார்கள். எனக்கும் அந்த பந்தம் உண்டு.
குமரித்துறைவியை வாசித்த நாள் முதல் அது மற்ற மூன்று தென்னிந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கனவு எனக்குள் இருந்துவந்துள்ளது. காரணங்களை கேட்டால் கிறுக்குத்தனமாக இருக்கலாம். மதுரையை மீட்ட விஜயநகர பேரரசுக்கு நன்றிகூறும் வகையில் மீனாட்சி கன்னடத்துக்குப் போக வேண்டும். தாய்வீடு திரும்புவதுபோல் மலையாளத்துக்குச் செல்ல வேண்டும். அங்கே வீடுகொண்டுள்ள கண்ணகியிடம் தன் கதையை அவள் சொல்ல வேண்டும். தெலுங்கு நிலத்துக்கும் போக வேண்டும். அவளை கைப்பிடித்துக்கொடுத்த அண்ணன் வாழும் நிலமில்லையா அது?
திருமலைராஜனுக்கு ரகசியமாக முத்துக்களை கொண்டுசென்று இரவில் அர்சித்து வழிபட்ட தரிகொண்ட வேங்கமாம்பா தெலுங்கு மொழியின் பக்திக் கவிஞர்களில் ஒருவர். அவருடைய பாடல்களே முத்துக்கள் என்று அழைக்கப்பட்டதாகக் கருதுபவர்களும் உண்டு. ‘முத்யால ஹாரதி‘ என்ற அவருடைய பாடல் புகழ்பெற்றது. இன்றும் திருப்பதியில் ஏகாந்த சேவையின் நிறைவில் ஒவ்வொரு நாளும் பாடப்படுகிறது. ‘
ஜெய மங்கலம் நித்ய சுப மங்கலம்’ என்று மங்கலம் பாடி முடியும் அப்பாடலை இத்தருணத்தில் எண்ணிக்கொள்கிறேன். முக்கடல் முத்து, அந்த அண்ணனின் மக்களைத்தான் சென்று சேர்கிறது இன்று.
*


You must be logged in to post a comment.