சுட்ட பழமும், சுடாத பழமும்

மதிப்புரை – எழுத்தாளர் ரம்யாவின் ‘குரத்தி’

2011-ல் எழுத்தாளர் வி.எஸ். நைபால் பெண் எழுத்துகளைப்பற்றிச் சொன்ன கருத்து சர்ச்சையானது நினைவிருக்கலாம். பெண்கள் எழுதுவது ‘sentimental feminine tosh’ என்று அவர் கருதுவதாகக் கூறினார். அதாவது, காதல், கருணை, பரிவு, பாசம் போன்ற மெல்லுணர்வுகளை உணர்ச்சிப்பிழம்பாக்கி இழுத்துக்கூறி எழுதுவதே பெண்களின் பாணி, என்று அவருடைய ஆங்கிலப்பதத்தை நாம் தமிழ்ப்படுத்தி வகுத்துக்கொள்ளலாம்.

இக்கருத்துக்காக வி.எஸ். நைபால் பலமாக விமர்சிக்கப்பட்டார். ஆனால் இலக்கிய அவைகளிலும் தனிப்பேச்சுகளிலும் உரையாடியபோது நம் பொதுவாசகர்கள் பலர் மத்தியில் பெண்களின் எழுத்தைப் பற்றி இதற்கிணையான ஒரு கருத்து நிலவுவதை நான் கவனித்திருக்கிறேன்.  “பெண்கள் பெண்களுக்கான விஷயங்களை எழுதிக்கொள்கிறார்கள்,” “அவர்களுக்கு அது தேவையாக உள்ளது ஆகவே எழுதிக்கொள்கிறார்கள்” என்ற ரீதியில் அந்நிலைப்பாடு வெளிப்படுத்துவதை கண்டிருக்கிறேன். அதாவது பெண்களின் எழுத்து பொது அறிவுச்சூழலுக்கு பெரிதாக எந்தப் பங்களிப்பையும் ஆற்றாத ஒரு சிறு குறுங்குழு முயற்சி என்று அவர்கள் கருதுவதாகப் புரிந்துகொண்டேன்.  இதற்கு ‘sentimental feminine tosh’ என்றே சொல்லிவிட்டுப் போகலாமே என்று தோன்றியதுண்டு.

கம்மென்று வெளிப்படும் இத்தகைய விமர்சனங்களுக்கு எதிராக பெண் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்து வழியாக இரண்டு வகையில் எதிர்வினையாற்றி வந்துள்ளதாகத் தோன்றுகிறது. ஒன்று, அத்தகைய விமர்சனங்களை காதுகொள்ளாமல், கொண்டாலும் எவ்வகையிலும் கருத்தில் கொள்ளாமல், தங்கள் விருப்பம் போல் அகம் சார்ந்த விஷயங்களை எழுதுகிறார்கள். அல்லது, பொது அறிவுச்சூழலுடன் உரையாடும் வகையில், வரலாறு, தத்துவம், அரசியல், வணிகம் என்று ‘புறம்’ சார்ந்த கதைக்களன்களையும் அவற்றுக்குறிய இலக்கிய வடிவங்களையும் கையாண்டு, ‘பெண்கள் அகத்திணையை மட்டும் எழுதுபவர்கள் அல்ல’ என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் எழுதுகிறார்கள். நியூ யார்க் நகரின் ஏப்ரல் மாதம் நடந்த லிவிங் தமிழ் மாநாட்டில் தமிழ் மற்றும் அயல்மொழி பெண் எழுத்தாளர்கள் பங்குகொண்ட அவைகளை கண்ட போது உருவான இம்மனப்பதிவை பற்றி முன்பும் பதிவுசெய்திருந்தேன்.

இவ்விரு பெரும்போக்குகளுக்கு மாறாக, அகத்தின் பேசுபொருட்களான காதல், காமம், கருணை, அருள், நன்மை போன்றவை வரலாறு, அரசியல், தத்துவம் சார்ந்த புறச்சூழல்களுடன் கொண்ட உறவென்ன, பண்பாட்டில் அவற்றின் உண்மையான மதிப்பீடும் அர்த்தப்பாடும் என்ன என்ற கேள்வி இதுவரை தமிழில் பெண் எழுத்தாளர்களால் தீவிரமாக விசாரிக்கப்படவில்லை என்றே நினைக்கிறேன். அத்தகைய ஒரு வாழ்க்கைநோக்கு பெண்களின் ‘தனிப்பட்ட’ விஷயம் அல்ல, அது நம் பண்பாட்டில் ஆழமாக வேர்கொண்ட ஒரு வாழ்க்கைநோக்கு, அல்லது பண்பாட்டையே நிர்மாணிக்கும் வல்லமை கொண்ட தரப்பு என்ற பதில் அவ்விமர்சனங்களுக்கு எதிராக கூறப்பட்டதில்லை.  அந்த வகையில், அத்திசையில் தன் தேடலை விரிக்கும் எழுத்தாளர் ரம்யாவின் முதல் நாவல் ‘குரத்தி’, ஒரு முன்னோடி.

பெண் எழுத்துக்களில் காதல் என்ற உணர்வு ஏன் பெரியதோர் இடத்தை வகிக்கிறது? அல்லது இப்படிக் கேட்கலாம்: பெண்களின் எழுத்தில் காதல் என்ற உணர்வு பெரியதோர் இடத்தை வகிப்பது ஏன் விமர்சிக்கப்படுகிறது? நைபால் போன்றவர்கள் ஏன் அதை feminine tosh என்கிறார்கள்?

காதல், ஆண்-பெண் உறவு சார்ந்த உலகியல் ரீதியான ஓர் எளிய மெல்லுணர்வாகப் பார்க்கப்படுவது ஒரு காரணம். பெண்கள் அவ்வுணர்வை அளவுக்கதிகமாக ரொமாண்டிசைஸ் செய்கிறார்கள் என்ற பார்வை, அல்லது விமர்சனம், மற்றொரு காரணம். காதல் உட்சிடுக்குகள் அற்ற உணர்வுநிலை என்ற நோக்கையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். காமம் – பசி போல, சாவு போல – மனிதனை வாட்டும் அடிப்படையான விசை என்றும், ஆகவே காமத்தின் சஞ்சலங்களையும் உக்கிரத்தையும் அதீதங்களையும் எழுதுவது இலக்கியநுட்பம் என்றும் கருதப்படுகிறது. மாறாக, காதலை அப்பட்டமாக (unironic), ஓர் அடிப்படை விழுமியம் போல, எழுதுவது அறியாமையின் விளைவாக நிகழ்த்தப்படும் ஒருவிதமான அசட்டுத்தனமாகவே பார்க்கப்படுகிறது. இனிப்பான ஆரஞ்சு பழத்தை நறுக்கி அப்படியே வாய்க்குள் பிழிந்துகொள்வதுபோல். இலக்கியத்தில் காதல் வடிகட்டப்பட்டே விளம்பப்படவேண்டும் என்று கருதப்படுகிறது. காலத்தின் தூரம் வழியாக,  மென் நகைச்சுவை வழியாக, முரண்நகை வழியாக, அல்லது முழுமைநோக்கு என்ற கித்தானின் பகுதியாக. காதல் என்ற உணர்வை, தன்னளவில், எந்த வடிகட்டலும் இல்லாமல், unironic-ஆக, sincere-ஆக எதிர்கொள்வதில் எங்கோ நமக்கு ஒரு சிக்கல் உள்ளதென்று தோன்றுகிறது.

ஆனால் இன்று யோசித்துப் பார்க்கும் போது, எனக்கு ஆதர்சமான, நான் திறந்த கண்களுடன் வழிபடக்கூடிய எல்லா பெண் எழுத்தாளர்களும் காதலை, அதன் மேன்மை நிலையை, ஒரு விதமான சமரசமற்ற நம்பிக்கையுடன் எழுதியவர்களே. ஐசக் தினெசன், மேரி கொரெல்லி, ஜார்ஜ் சாண்ட் முதல் மாதவிக்குட்டி வரை. அவர்கள் காதல் என்ற உணர்வை எப்படி வரையறுக்கிறார்கள், எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதில் அந்த சூட்சமம் உள்ளது. ரம்யாவின் ‘குரத்தி’ அந்தத் தொடர்ச்சியில் வைத்து மதிப்படத்தக்க ஒரு படைப்பு.

“நான் எனக்கான மகத்தான காதல் கதையை எழுதிக்கொள்ள வேண்டும்” என்ற கதைசொல்லும் தன்னிலையின் கூற்றைச் சுற்றி இக்கதைச் சுழல்கிறது. அந்த ‘மகத்தான காதல் கதை’ தான் இந்த நாவலின் அச்சு. எந்த முரண்பாடும் இல்லாமல், மிகமிக sincere-ஆக, காதலை தன் கதையின் மையத்தில் வைத்துத் தொடங்குகிறார் ஆசிரியர். இந்த நாவல் முன்வைக்கும் மதிப்பீட்டை ‘காதல்’ என்ற சொல்லால் வகுக்கலாம் என்றால் மிகையல்ல. அக்காதலின் தன்மை எத்தகையது என்பதையே நாவல் வெவ்வேறு வகையில் விசாரிக்கிறது. தொடக்கத்தில் கூறிய விமர்சன வரலாற்றின் பின்னணியில் வைத்துப்பார்க்கும் போது இந்த அம்சமே இந்நாவலின் தனித்த சிறப்பென்று கருதுகிறேன்.

*

அறியாக் காலமொன்றில் கழுகுமலை குகையில் வாழும் ஓர் ஔவையின் எண்ணங்களுடன் தொடங்குகிறது நாவல். முடிவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அவள் அதற்கு முன்னால் எழுதி முடிக்க வேண்டும் என்று நினைக்கும் அந்த மகத்தான காதல் கதையை எண்ணிக்கொள்கிறாள். மருந்துவாழ் மலைக்குத் தன் ஆசிரியரைக் காணச் செல்கிறாள்; தன்னுடன் எப்போதும் உடனிருக்கும் இன்னொருத்தி வருவதை உணர்கிறாள். ஆனால் ஆசிரியரோ மற்றவரோ எவரும் அங்கே இல்லை என்பதை நாம் உணர்கிறோம். அவர்கள் அவளுக்குள்ளோ வெளியிலோ எங்கோ எக்காலத்திலோ இருப்பவர்கள். சீமை எண்ணை, நீல நிற இங்க், பசுமை புரட்சி போன்ற விவரிப்புகளுடன் சமகாலத்தில் நடப்பதுபோல் சித்தரிக்கப்பட்டுள்ள இப்பகுதி, இக்கூறுமுறை வழியாக மாய யதார்த்தத்தை ஒத்த ஒரு காலாதீதத் தன்மையை உணர்த்த எத்தனிக்கிறது.

அந்த ஔவை ஆசிரியரின் சொல் கேட்டு தோவாளையில் உள்ள ஔவைக் கோயிலுக்குச் செல்லும் போது, அங்கே ஓர் இல்லத்தில் பெண்கள் ஔவை நோன்பு கடைப்பிடிப்பதை காண்கிறாள். அவர்கள் மூதாட்டியை கதை சொல்லச் சொல்கிறார்கள். வேறு கதை சொல்ல முடியாது என்பதுபோல் காதல் கதை சொல்கிறேன் என்கிறாள் மூதாட்டி. காலமும் வெளியும் மயங்கி அக்கதைக்குள் புகுகிறது நாவல்.

கடந்த காலமொன்றில் நூறு வயது மூதாட்டியான ஔவை தோவாளையில் ஒரு நாவல் மரத்தடியில் தோன்றுகிறாள். அங்கே இளம் வேலனை எதிர்கொள்கிறான். மாடு மேய்க்க வரும்போதெல்லாம் அவன் அவளுக்கு நாவல் பழம் பரித்துக் கொடுக்க, அவள் அவனுக்கு இலக்கணமும் பாட்டும் கற்பிக்கிறாள். வேலனுக்கு தாய் உண்டு. காதலி வள்ளியும் உண்டு. ஆனால் ஓர் இருப்புக்கொள்ளாமையால் உந்தப்பட்டு மீண்டும் மீண்டும் ஔவையிடம் வருகிறான். அவனை அவ்வை துறவியாக்கிவிடுவாள் என்று தாயும் வரப்போகும் தாரமும் அஞ்சுகிறார்கள். ஒரு நாள் வேலன் ஒரு கதை சொல் என்று கேட்க, தன்னுடைய வாழ்க்கைக்கதையை ஔவை அவனுக்குச் சொல்வதாக நாவல் தொடங்குகிறது.

*

நாவலின் பெரும் பகுதி ஔவையின் தன்னிலை கூற்றாக விரிகிறது. அவளுடைய நூறாண்டு உள்ளத்தின் வெவ்வேறு சரடுகள், கேள்விகளாக, சமனடையாத சமன்பாடுகளாக எஞ்சியிருப்பதை அவள் கூற்று வழியாக அறிய வருகிறோம். இளம் பெண்ணாக கணவனை இழந்து இல்லம் துறந்து, இன்று கழுகுமலை என்று அழைக்கப்படும் திருநெற்சுரம் சமணப்பள்ளியில் குணசாகரப் படாரர் என்ற ஆசிரியரிடம் மாணாக்கியாக சென்று சேரும் பயணத்தை ஔவை விவரிக்கிறாள். அங்கே தங்கியிருந்த பல குரத்தியரில் ஒருத்தியாக வாழ்ந்து, தவமியற்றி, கல்வி கற்கிறாள்.

இப்பகுதி முழுவதும் இளம் குரத்தி அந்தப் பள்ளியில் எதிர்கொண்ட அகமோதல்களையும் ஆன்மீகக் குழப்பங்களையும் ஔவை விவரிக்கிறாள். தன்னுடைய காதல் கணவனின் முகத்தை மறந்துவிட்டதாக வேலனிடம் ஔவை கூறும்போது அவன் அதிர்ச்சியடைகிறான். ஆனால் இளம் குரத்திக்கு அந்த மறதி நிகழும் பாதை கடினமாகவே இருந்ததாகக் கூறுகிறாள் ஔவை. ஒப்புநோக்கக் காமம் அவளுக்கு அத்தனைப்பெரிய விஷயமாக இல்லை. ஆனால் காதலை கடக்க மேலும் பிரயத்தனப்படுகிறாள்.

தன்னுடைய இறந்த கணவன் மீதான காதல் என்பதைத் தாண்டி, வாழ்க்கையில் ‘அருள்’ என்றும் ‘தயாளம்’ என்றும் அவள் உணர்பவை சார்ந்த பிடிப்பையும் பற்றையும் அவளால் எளிதில் கைவிட முடியவில்லை. ஆசிரியரின் வழிகாட்டலின் வழியாக காவிய படிப்புக்குள் செல்கிறாள். அந்தக் கல்வி அவளை ஆட்கொள்கிறது. கீழக்குயில்குடி சமணப்பள்ளியின் ஆசிரியையான மிழலூர்க்குரத்தியிடம் காவிய பாடம் கேட்கிறாள். செய்யுளும் பாட்டும் பிறகு காவியங்களும் சுயமாக எழுதும் புலமையை அடைகிறாள்.

ஆனால் தன்னில் வெளிப்படும் வெவ்வேறு வாழ்கைகளை வாழ்ந்தறிந்து பார்க்க விரும்பும் இலக்கியத் தேடலையும், சமண நெறி போதிக்கும் முழுமையான பற்றின்மையையும் அவளால் சமன் படுத்த முடியாமல் ஆகிறது. தன்னுடைய காவிய உள்ளத்துக்கும், பள்ளியில் உடன்வாழும் பட்டினிப்படாரரின் மாணாக்கி என்ற குரத்தியின் தூய தர்க்க நோக்குக்கும் இடையிலும் ஓர் அகழியை உணர்கிறாள். அனைத்துக்கும் மேலாக, பற்றின்மை பழகுவதில் ஒரு சுயநலம் உள்ளதென்றும், அருள் என்ற விழுமியமே பிரபஞ்சத்தில் நிலைகொள்கிறது என்றும் உணர்கிறாள்.

குழந்தை இறந்துவிட்ட துயறத்தில் பள்ளிக்கு வந்து சேறும் இளைஞனை பின் தொடர்ந்து வரும் அவனுடைய இளம் மனைவி அவனை போதித்துத் தன்னிடம் திரும்ப அளிக்கச்சொல்லி மன்றாடுகிறாள். இளைஞன் துறவு பூண்டு வல்லக்கடவு குரவன் என்ற பெயருடன் பள்ளியில் சேறும் போது அவர்கள் மீது காழி உமிழ்ந்து மண்ணை வாரித் தூற்றுகிறாள். இச்சம்பவங்களாக் நிலைகுலையும் குரத்தி தன்னுடைய மனச்சஞ்சலங்களைப் பற்றி குணசாகரப் படாரரிடம் பேசுகிறாள். “இந்த ஆன்மாவை மட்டும் கடைத்தேற்றி நான் அடையப்போவது முழுமையென்று கருதவில்லை,” என்கிறாள். தீர்த்தங்காரர்களும் படாரர்களும் முனிவர்களும் பற்றறுத்துத் தவமிருந்து அடையும் ‘அதை’, “அருளன்றி அன்பன்றி வேறென்ன?” என்று வாதிடுகிறாள்.

“இப்பாதையை உதறுவதன் வழியாக நான் இப்பிறவிச்சுழலை கடக்கவில்லையெனினும் பரவாயில்லை,” என்று தன்னுடைய ஆசிரியரிடமிருந்து விடைபெறுகிறாள். செய்யுள்கட்டும், எழுத்தாணியும், கின்னாரமும்,  கைத்தடியுமாக பள்ளிநீங்கும் குரத்தி ஔவையாகிறாள். ஊருக்கு வெளியே வாழ்கிறாள். மக்களுடன் மக்களாகப் பழகுகிறாள். அறமும் கல்வியும் போதிக்கிறாள். அவ்வாறே அவளை வேலன் எதிர்கொள்கிறான். அப்போதும் தனக்கான ஒரு காதல் கதையை எழுதிவிட வேண்டும் என்ற உணர்வு அவளுக்குள் இருப்பதை அத்தருணத்தில் மீண்டும் நாம் அறிகிறோம்.

*

இந்த வாழ்க்கைச்சக்கரம் நிறைவுறும் இடத்தில் நாவல் நம்மை சில கேள்விகளை நோக்கிச் செலுத்துகிறது. முதன்மையாக, குரத்தி ஆழத்தில் உணர்ந்த, ஔவையால் கடக்க முடியாத, காதல் என்பது என்ன? இந்த நாவலில் பல காதல்கள் கடந்து செல்வதை வாசகர் உணரலாம். குரத்தியின் துறவுக்கு முந்தைய வாழ்க்கையில் அவளுக்கும் அவள் கணவனுக்கும் இடையிலான காதல் சிறுவயதிலிருந்தே இருந்துவந்த ஒன்று. தனக்குக் குச்சுகட்டிய ஆசை மாமனைக் கட்டி ஒரு மாதத்திலேயே அப்பெண் அவனை இழக்க நேர்கிறது. வேலனுக்கும் வள்ளிக்கும் இடையிலான காதல் அதற்கிணையான பிணைப்பும் தீவிரமும் கொண்டதே.

ஆனால் கதைக்குள் வேறு காதல்களும் உள்ளன. துறவு பூண்ட குரத்தி தன்னுடைய ஆசிரியர் குணசாகரப் படாரருடன் கொண்டுள்ள விலக்கமான உறவும் ஒரு வகையான காதலாகவே வெளிப்படுகிறது. குரத்தி அவரை நினைவுகூறும் பகுதிகள் அனைத்துமே உக்கிரமான உணர்ச்சிகரத்துடன் கூறப்படுகின்றன. தன்னை குணசாகரப் படாரரின் மாணவி என்று மட்டுமே குரத்தி அவ்விடங்களில் உணர்ந்து கூறுகிறாள். தன்னுடைய தவப் பயணத்தில் குரத்தி எதிர்கொள்ளும் சஞ்சலங்கள் அனைத்திலும் அந்த ஆசிரியரின் அருவ இருப்பையும், அவருடன் அவள் கொள்ளும் மௌன உரையாடல்களையும் நாம் அறிகிறோம். ஆசிரியரின் சமய நிறுவனம் சார்ந்த நோட்டமும் விமர்சனமும் அவளிடம் வெளிப்பட்டாலும் அந்த உறவை அது பங்கப்படுத்துவதில்லை. இறுதியில் குரத்தி பள்ளியிலிருந்து விலக முடிவுசெய்யும்போது, “போதிதுர்லப அனுப்ரேக்‌ஷா” என்று ‘விடுதலை அரிது’ என்ற பொருளில் படாரர் குரத்தியை நோக்கிக் கூறும் சொற்களையும் கூட, துயரமும், கனிவும், வாழ்த்தும் கலந்த ஒரு கூற்றாகவே நாம் உணர்கிறோம். இந்த உறவை, இரண்டு தலைமுறையினருக்கு இடையேயான, அல்லது இரண்டு தத்துவத் தரப்புகளுக்கு இடையேயான, அல்லது ஆணுக்கும் பெண்ணுக்குமான ஆன்மீக பயணத்தில் அவர்கள் சந்தித்துக் கொள்ளவே முடியாத மாயப்புள்ளியில் நிகழும் மோதலாக வாசிக்கும் இடமுள்ளது. ஆனால் நாவல் முழுவதும் இவ்வுறவு மோதலாக அல்லாமல், காதலாகவே வெளிப்படுகிறது. அவ்வாறே அந்த வட்டம் நிறைவும் பெறுகிறது.

குரத்திக்கும் அவளுடைய சக மாணவியான பட்டினிப்படாரரின் மாணாக்கிக்குமான உறவு ஒப்புநோக்க விரும்ப்பும் வெறுப்புமான ஒரு வகை மோதலும் உரசலும் கொண்டு வெளிப்பட்டாலும், அவ்வுறவும் ஆழமான காதலாகவே நிறைவுறுகிறது. ‘இணைகோடுகளின் காதல்’ என்று சொல்லத்தக்க பல சந்தர்ப்பங்கள் இந்நாவலில் இடம்பெறுகின்றன, அவற்றில் ஒன்று இது. பட்டினிப்படாரரின் மாணாக்கியின் தத்துவச்சார்பும் உளச்சீர்மையும் குரத்தியின் மனதைக் கவர்கிறது; சஞ்சலம் கொள்ளவும் செய்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் தன்னுடைய காவிய வாசிப்பு வழியாக அந்த மாணாக்கிக்கு அவள் யார் என்பதை குரத்தி காட்டிக்கொடுக்கிறாள். நீலகேசியின் நீலியை அவளுக்கு அறிமுகம் செய்கிறாள். அதற்கு இணை செய்வது போல் ஔவை பள்ளியை விட்டு நீங்கும் போது பட்டினிப்படாரரின் மாணாக்கி, தான் ஞானசபைகளில் வாதில் வென்ற சின்னமாக தன் கையில் வைத்திருக்கும் நாவல் மரத் தடியை ஔவையிடம் கொடுக்கிறாள். அதன் ஞானச்செறுக்கு அவளுடைய புதிய வாழ்க்கைக்குத் துணைவரும் என்று கூறுகிறாள். இவ்விரு சந்தர்ப்பங்களுமே நாவலின் மிக உணர்ச்சிகரமான பகுதிகள். நம் பண்பாட்டில் தூய கற்பனை, தூய அறிவு இவ்விரு தரப்புகளும் எப்போதும் உள்ளன. இணையவே முடியாமல் பிளவுண்ட ஓர் ஆன்மாவைப்போல். விடுதலை இவற்றுக்கிடையே எந்த வழியில் சாத்தியப்படும் என்ற சஞ்சலமும் ஏக்கமும் பெண்களுக்கு என்றென்றும் உள்ள ஒன்று. அவற்றுக்கிடையே பொதிந்துள்ள தீராக்காதலை இவ்வுறவு உணர்ச்சிகரமாக சித்தரிக்கிறது.

இவ்வுறவுகளைப் போலவே குரத்திக்கும் அவளுடைய பாட்டிக்குமான உறவு, குரத்திக்கும் அவளை திருநெற்சுரத்துக்கு அழைத்துவரும் மூதன்னையான பத்திரைக்குமான உறவும், குரத்திக்கும் பரத்தையாக வாழ்ந்து துறவியான கனகந்தி படாரருக்குமான உறவுகளும் உணர்ச்சிகரமானவை. ஆனால் அடிப்படையில் இணைக்கோடுகளின் விலகலும் கொண்டவை. இந்தக் காதல்கள் வழியாக குரத்தி, தான் தன்னைச்சுற்றி இருப்பவரிடமிருந்து எவ்வளவு அகன்றுள்ளோம், எவ்வளவு தனித்துள்ளோம் என்று உணர்வதாக வாசித்தேன். அதே நேரம், இவ்வனுபவங்கள் அவளை பிரபஞ்சத்துடன், அதன் அருள் என்றும் தயாளம் என்றும் அவள் உணர்பவையுடன் மேலும் ஆழமாக பிணைக்கவே வழிவகுக்கிறது. “தன்னுடைய  முற்றுத்தனிமையை ஏற்றபடி உலகத்துடன் வாழ்வது எப்படி” என்ற கேள்விக்கான விடையாக குரத்தி கதாபாத்திரத்தின் கதைவளர்ச்சியை இந்த நாவலில் வாசிக்கலாம்.

*

முதல் நாவல்களில் பல bildungsroman என்ற வயதடைதல் வகைமையைச் சார்ந்தவை. செவ்வியல் வடிவில் bildungsroman ஓர் இளைஞன் தன்னுடைய இளமைக்காலத்தைக் கடந்து சமூகத்தில் தன் அடையாளத்தைக் கண்டுகொள்வதன் கதை. அவன் தன்னை கலைஞனாகவோ, எழுத்தாளனாகவோ தொகுத்துக்கொள்வதுடன் பல கதைகள் முடிவுறும். James Joyce-ன் The portrait of the artist as a young man போன்ற நாவல்கள் உதாரணம்.

ஆனால் பெண் எழுத்தாளர்கள் எழுதும் bildungsroman வேறு வடிவங்கள் கொண்டவை. முதன்மையாக அவை இளமையின் கதை என்று அமைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அமெரிக்க எழுத்தாளர் Kate Chopin எழுதிய The Awakening ஒரு வகையான வயதடைதல் கதை. ஆனால் கதை தொடங்கும் போது கதாநாயகிக்கு மணமாகி குழந்தைகளும் இருக்கின்றன. அதன் பிறகே அவளுடைய வயதடைதல் தொடங்குகிறது.

அந்த வகையில் ‘குரத்தி’ நாவலை ஒரு வயதடைதல் நாவலாகவும் மதிப்பிடலாம். ஆனால் ‘சமூகத்தில் தன் இடம் அறிந்து ஒத்து வாழ்வது எப்படி’ என்பதல்ல அதன் முதன்மைக் கேள்வி. மாறாக, ‘தன்னுடைய முற்றுத்தனிமையை ஏற்றபடி உலகத்துடன் வாழ்வது எப்படி’ என்பதே நாவல் முன்வைக்கும் கேள்வியாக உள்ளது. இளைஞன் சமூகத்தில் தன் இடத்தைத் தேறி, வாழ்க்கைப்பணியும் மனைவியும் குடும்பமும் அமையும்போது ஆண்மகன் ஆகிறான். அதாவது அவனுடைய வயதடையல் சமூகத்தின் உருப்பினன், அல்லது ‘புள்ளி’ ஆவதில் நிறைவடைகிறது. ஆனால் பெண்ணின் வயதடைதல் என்பது நம் மரபு கூறுவது போல் (உண்மையிலேயே வயதடைந்து) அவ்வையாவது தானோ என்னவோ என்று இந்த நாவல் சிந்திக்க வைத்தது. அதாவது சமூகத்தின் உருப்பினர் ஆவதல்ல, சமூகத்திலிருந்து அன்னியமாகி தனக்கான ஞானவழியை கண்டடைவது. பெண் தனக்காக அகத்தனிமையுடன் வாழப்பழகி, அதன் பிறகு உலகத்தில் இணைவது தான் அவளுடைய வயதடைதல் கதையா?

ஔவை தான் சந்திக்கும் கிட்டத்தட்ட எல்லா தரப்பினரையும் நிராகரித்தே உலகை நோக்கிப் புறப்படுகிறாள். சம்சாரம், தவம், தர்க்கம், இலக்கியம், சமய நிறுவனம் என்று ஒற்றைப்பாதைகள் அனைத்தையும் கடந்தே வெளியேறி தனக்கான மார்க்கத்தைக் கண்டடைகிறாள். இங்கே ஔவைகளின் நிரையே இருப்பதாக வரலாறு கூறுகிறது; நாவலும் உணர்த்துகிறது. ஆனால் ஒவ்வொரு ஔவையும் தன்னுடைய பாதையை இத்தகைய தொடர்ச்சியான மறுப்புகள் வழியாக தானே தேர்வு செய்ய வேண்டியுள்ளது.  அந்த வகையில் ஔவைகளின் வாழ்க்கை எல்லா நிறுவனங்களுக்கும் வெளியில், முற்றிலும் தனித்துவமான, ஓர் வெளியாளின் வாழ்க்கை என்று வகுக்கலாம்.

இத்தருணத்தில் நாவலில் குரத்தியின் தந்தை அவள் வீட்டை விட்டு வெளியேறும் சமயம் உரைக்கும் சொற்கள் நம் நினைவுக்கு வருகின்றன. “நீ எடுத்த முடிவை நீதான் நியாயப்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்கிறார் அவர். இறுதியில் படாரர் கூறும், “போதிதுர்லப அனுப்ரேக்‌ஷா” என்ற கூற்றும் தந்தை சொல்லின் மற்றொரு வடிவம் என்றே தோன்றுகிறது.

குரத்தி இரண்டு முறை கடந்துபோகிறாள். இரு தந்தையரை. லௌகீகம், ஆன்மீகம், இரு மரபுகளும் வகுத்த அனைத்தையும். பாட்டி கொடுத்த கின்னாரம், ஆசிரியர் அருளிய எழுத்தாணி, அணுக்கத்தோழி அளித்த ஞானத்தின் கைத்தடி என்று நாவலில்  ஔவை வெளியேறும் போது அவள் கையில் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு மரபின் பிரதிநிதியாக விளங்குகின்றன. ஆனால் அவற்றைக் கொண்டு ஔவை தனக்கேயான, முற்றிலும் தனித்துவமான கற்பனை ஒன்றை சமைக்கிறாள்.

*

ஔவை தான் எடுத்த முடிவை எப்படி நியாயப்படுத்திக்கொள்கிறாள்? ‘குரத்தி’ நாவலில் ஒரு பதில் உள்ளது. “பிறவிச்சுழலை கடக்கவில்லையெனினும் பரவாயில்லை,” என்ற சொற்களுடன் ஔவையாகும் குரத்தி, வேலனுக்கு ஆசிரியை ஆகிறாள். இந்த நாவலில் வாசிக்கக்கிடைக்கும் பல காதல் கதைகளில் ஔவைக்கும் வேலனுக்குமான காதல் கதையே ஆகச்சிறந்தது. தன்னுடைய கதையின் வழியாக பிறவிகள் தோறும் வீடுபேறுக்காக தவமிருக்கும் உயிர்களின் தவிப்பை அவ்விளைஞனுக்குக் கடத்துகிறாள். மேலும் தான் உணர்ந்த அருள், தயாளம் ஆகியவற்றை அவனுடன் மிச்சமின்றி பகிருந்துகொள்கிறாள். பற்றும் நிலையாமைக்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருக்கும் வேலனுடைய உள்ளத்தில் அந்த விதை விழுகிறது. அதன் பலத்திலேயே கூட இறுதியில் வள்ளியை மணமுடிக்க சம்மதிக்கிறான் என்று தோன்றுகிறது.

ஆனால் கதையில் நிகழக்கூடிய சுழற்சிகளை நாவல் நமக்கு முன்கூட்டியே அறிவிப்பதுபோல் சமிக்ஞைகள் கொண்டுள்ளது. இல்லற வாழ்க்கைக்குள் நுழையும் வேலன் சம்சாரத்தின் அடிகளை வாங்கி வல்லக்கடவு குரவனைப்போல் துறவு பூணக்கூடும். அதாவது சம்சாரம் என்ற பற்றே அவனுக்கு ஞானவாயிலாக அமையக்கூடும். அவனுடைய மனைவி வள்ளி ஔவைகளையும் குரத்திகளையும் தூற்றக்கூடும்; ஒருவேளை பின்னாளில், வேறொரு பிறவியில், அவளே அந்த நிரையில் வந்து இணையவும் கூடும். வல்லக்கடவு குரவன் படாரராகக்கூடும். அந்தப் படாரரின் மாணாக்கியான ஔவை தோவாளைக்குச் சென்று ஔவையின் ஆலையத்தில் வணங்கி இன்னும் நிறைவடையாத தன்னுடைய காதல் கதையை, வயதடைதலின் கதையை எதிர்கால வள்ளிகளுக்கும், குரத்திகளுக்கும் சொல்லக்கூடும். இப்படியே சுழல்கிறது, இங்கே பிரவாகித்திருக்கும் அளவற்ற அருள், அளவற்ற தயாளம்.

வேலனின் மாடு அடையும் துயரமும், அந்தத் துயருக்காக அவன் அடையும் பரிதவிப்பும் இந்த நாவலில் அந்த அருளையும் தயாளத்தையும் நாடகப்படுத்தும் சிறந்த காட்சிகளில் ஒன்று. ஔவை குரத்தியாக வாழ்ந்த போது மலைகளிலும், நட்சத்திரங்களிலும், பறவைக்கூட்டங்களிலும் உணர்ந்த அதே அருளும் பரிவும் வேலனின் வெளிப்படுவதை நாம் உணர்கிறோம். இப்பிரபஞ்சமே அவ்வருளை நிகழ்த்தும் மேடை நாடகமல்லவா என்ற எண்ணம் இந்நாவல் முடியும் தருணத்தில் ஏற்பட்டது. ஒருவேளை அதுவே ஔவை எழுத நினைத்த மகத்தான காதல் கதையாக இருக்கக்கூடும்.

அருள், தயாளம், காதல் என்ற சொற்களால் சுட்டப்படும் இவ்வுணர்வை நாவல், முற்றிலும் நவீன முறையில் பண்பாட்டில் பொறுத்தி, அதை மறுவாசிப்புக்கு உட்படுத்துவதாகக் கருதுகிறேன்.  சமண நெறியில் பெண்களுக்கு வீடுபேறு சாத்தியமில்லை என்ற கருத்து உள்ளது. பெண்கள் தவமிருந்து மறுபிறவி எடுத்து ஆண் உடல் புகுந்தே வீடுபேறடையலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் ‘குரத்தி’ நாவல் முன்வைப்பது அளவற்ற அருளால் விளையாடப்படும் ஒரு சுழற்சி. காதல் லீலை. வீடுபேறடையமுடியாத படாரரின் மாணாக்கி ஔவையாகி உலகு புகுகிறாள். ஔவையின் கருணையால் அவளுடைய மாணாக்கன் உலகியல் துறந்து படாரராகிறார். சுட்ட பழமும், சுடாத பழமும் இணையும் மாயப்புள்ளி இது. ஆணும் பெண்ணும்,  ஆசிரியரும் மாணாக்கரும், துறவியலும் உலகியலும், தவமும் அருளும் வெவ்வேரல்ல, ஒரே நாடகத்தின் பகுதிகளே என்று காட்சிப்படுத்தும் ‘குரத்தி’ நம் பண்பாட்டிடம் ஒரு திட்டவட்டமான பதிலைக் கூறுகிறது. அந்த வகையில் ‘குரத்தி’ தமிழுக்கு மிக முக்கியமான வருகை என்று நினைக்கிறேன்.

*

எழுத்தாளர் ரம்யா

இந்த நாவலின் சாதனை என்பது சமணக் குரத்தியரின் கதையை ஔவை மரபுடன் பொறுத்தியது; ஔவை – வேலனின் புராணக்கதையை குரத்தியருக்கும் படாரர்களுக்கும் நடுவே இருந்த விரிசலை நிறப்பும் வகையில் இணைத்தது. இவை மரபில் தொன்றுதொட்டு இருந்துவந்துள்ள விரிசலும் இணைவுபுள்ளியும் ஆகும். ஆனால் கண்டுகொள்ளப்பட்டதில்லை. அந்தப் புள்ளியில் விரலை வைத்து இந்நாவலை பின்னியது ரம்யாவின் சாதனை.

இந்த நாவலின் அழகியல் குறைப்பாடு என்று சொல்லவேண்டுமென்றால், நாவலின் பெரும்பகுதி குரத்தியின் தன்னிலைக் கூற்றாக வெளிப்படுகிறது என்பது. ஔவை வேலனிடம் தன் கடந்தகாலத்தைக் கூறும் போது அந்தக் குரலில் ஓர் ஒற்றைப்படைத்தன்மை நிலைகொள்கிறது. பழைய நாவல்களில் கடிதங்கள் வழியாக தன்னிலைக் கூற்றை நிகழ்த்தும் உத்திக்கும் நிகரானது இது. அதன் சாதக-பாதகங்கள் அனைத்தையும் இப்பகுதிகள் கொண்டுள்ளன. சில இடங்களில் இது குரத்தியின் குரலா ஆசிரியரின் குரலா என்ற குழப்பம் உருவாகிறது.

ஆனால் அந்த ஒற்றைப்படைத்தன்மையே இப்பகுதிகளின் பலமாகவும் வெளிப்படுவதாக உணர்கிறேன். குரத்தியின் குரலில் வெளிப்படும் தீவிரமான உணர்ச்சிகரமே இந்நாவலை பெரும்பகுதிக்கு எடுத்துக் கொண்டு செல்கிறது. பாடகிகளுக்கு, நாட்டியமங்கையருக்கு உள்ளது போல் பெண் எழுத்தாளர்களுக்கும் அவர்களுடைய ஆளுமை சார்ந்த ‘ஆரா’ (aura) கலைப்படைப்பில் வெளிப்பட இடமுள்ளது என்ற தரப்பை நான் நம்புகிறேன். இந்த நாவலின் கூற்றுமுறையை சில வாசகர்கள் ‘கற்பிக்கும் தொனியுடன்’ (didactic) இருப்பதாகவும் மதிப்பிடக் கூடும். அது மரபில் உள்ள ஔவைக்கே இருந்த பண்பு என்பதே அந்த விமர்சனத்துக்கான பதிலாக இருக்கும். அந்த ஔவையின் குரலோடு தன் குரலை ரம்யா இணைத்து மிகச்சரியாக சுருதி பிடிக்கும் இடங்களிலெல்லாம் நாவல் பறந்தெழுகிறது.

இப்படைப்பை நிகழ்த்தியுள்ள பிரியத்துக்குறிய எழுத்தாளர் ரம்யாவுக்கு என் வாழ்த்துக்களும் அன்பும்.

*

குரத்தி (நாவல்)

விஷ்ணுபுரம் பதிப்பகம்

₹220